திங்கள், அக்டோபர் 29, 2007

அக்கரை சந்தை:உலக மொழிகளில் தமிழ் நாவல்கள்!





பத்ரி

ஃப்ராங்பர்ட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்று திரும்பியிருக்கிறார் கிழக்குப் பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் பத்ரி.

உலகமெங்கும் உள்ள பல் மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் கூடும் இடமாக இருக்கிறது இக் கண்காட்சி. ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் இக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்களும் இடம்பெறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இக் கண்காட்சி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பத்ரி.


""இது புத்தகப் பதிப்பாளர்களுக்கான கண்காட்சி என்பதுதான் சரியாக இருக்கும். புதன் கிழமை ஆரம்பிக்கும் இச் சந்தை ஞாயிற்றுக்கிழமையோடு முடிகிறது. இதன் முதல் மூன்று நாட்கள் பதிப்பாளர், அச்சிடுவோர், விநியோகஸ்தர் ஆகியோருக்கானது. சனி, ஞாயிறு தினங்களில் பொது மக்களும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

புத்தக உரிமை, மொழி பெயர்ப்பு உரிமை, ஒப்பந்தங்கள் சம்பந்தமான வர்த்தக பரிவர்த்தனைகள்தான் இக் கண்காட்சியின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு "கெஸ்ட் ஆஃப் ஹானர்' என்று கெüரவிக்கப்படும். கடந்த ஆண்டு நான் முதல் முறையாகக் கலந்து கொண்ட போது இந்தியாவுக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்தது கூடுதல் மகிழ்ச்சி. இந்த ஆண்டு செடலோனியா (ஸ்பெயின்) நகருக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது.

ஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சுரா பதிப்பகத்தினர் கலந்து கொண்டு வருவதை அறிந்தேன். மற்ற தமிழ்பதிப்பகங்கள் எதுவும் இதில் ஆர்வம் காட்டாததற்குக் காரணம், இது புத்தக விற்பனைக்கான சந்தையாக இல்லாமல் பதிப்பாளர்களுக்கான ஒரு தளமாக இருக்கலாம். ஒரு முறை இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுத் திரும்புவதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் எந்த விதத்திலும் நம் புத்தகங்கள் விற்பனை அந்த அளவுக்கு நடைபெற வாய்ப்பில்லை. ஆனால் இதனால் வேறு மாதிரியான வர்த்தக விரிவாக்கங்களுக்கு முயற்சி செய்ய முடியும் என்பதுதான் என் கருத்து.

இப்போது நம் தமிழ்ப் புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை வெளியிடத் தொடங்கியிருக்கிறோம். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், பிரபஞ்சன், நீல.பத்மநாபன், யூமா வாசுகி போன்றோரது 20 நாவல்களை இப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறோம். இவற்றை அக் கண்காட்சியில் இடம் பெற்ற இங்கிலாந்து பதிப்பகத்தார் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். "இந்தியன் ரைட்டிங்ஸ்' என்ற பிரிவின் கீழ் எங்கள் பதிப்பகத்தில் இவற்றை வெளியிடுகிறோம். அதே போல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நம் எழுத்தாளர்களின் இந்த நாவல்களை மற்ற ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடவும் முயற்சி செய்கிறோம். இது இக் கண்காட்சியில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட திருப்பம். நாம் இங்கிருந்து போனில் பேசுவதன் மூலம் இதை நிறைவேற்ற முடியாது. நேரில் பேச வேண்டும்; நம் புத்தகங்களின் சாம்பிள்களைக் கொடுக்க வேண்டும். இப் பயணத்தின் மூலம் உலக நூல்களை, இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கான முயற்சிகளையும் செய்ய முடியும். முஷாரப்பின் "தி லைன் ஆஃப் ஃபயர்' நூலை வெளியிட்டது அத்தகைய முயற்சிதான்.

நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா பல முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை இந்திய மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. ஆயினும் இத்தகைய அமைப்புகளும் இதைச் செய்யாதது ஏன் என்று தெரியவில்லை'' என்ற வருத்தக் கேள்வியோடு சொன்னார் அவர்.

""தமிழ்நூல்களுக்கு நூலக ஆணை மட்டுமே பிரதான வரவாக இருக்கும் சூழ்நிலையில் இப்படியான முயற்சிகளில் இறங்குவது எப்படி?'' என்றோம்.

""நூலகங்களில் புத்தகம் வாங்குவது வருமானத்தின் ஒரு பகுதி மட்டுமே. பொது மக்கள்தான் எங்கள் நிலையான வாங்கும் சக்திகள். நாம் பதிப்பிக்கும் நூல்கள் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களும் சென்று சேருவதற்காக 30 மாவட்டங்களிலும் விற்பனைக் கூடங்கள் வைத்திருக்கிறோம். அதுமட்டுமன்றி நூல்விற்பனை நிலையங்கள் மட்டுமன்றி பல சிறிய கடைகளிலும் எங்கள் புத்தகங்களை விற்பதற்கு முயற்சி செய்கிறோம். ஆயிரம் பிரதிகள் விற்பதற்கே அல்லல் படும் நிலையிருந்தும் சோம வள்ளியப்பனின் "அள்ள அள்ள பணம்' என்ற நூலை இந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனை செய்திருக்கிறோம். பதிப்பு முறையிலும் விற்பனை விஷயத்திலும் கவனம் செலுத்தினால் புத்தக விற்பனை வெற்றிகரமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை'' என்கிறார் நம்பிக்கையுடன்.

தமிழ்மகன்.

2 கருத்துகள்:

selventhiran சொன்னது…

ஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சுரா பதிப்பகத்தினர் கலந்து கொண்டு வருவதை அறிந்தேன்.

selventhiran சொன்னது…

ஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சுரா பதிப்பகத்தினர் கலந்து கொண்டு வருவதை அறிந்தேன்.// அட சுவாரஸ்யமான செய்தியாக இருக்கிறதே... நன்றி

LinkWithin

Blog Widget by LinkWithin