புதன், மார்ச் 19, 2008

இரண்டு கடிதங்கள்- சிறுகதை

தமிழ்மகன்

"என்ன அண்ணாச்சி படிப்புல மூழ்கிட்டாப்ல இருக்கு. பரீட்சையா எழுதப் போறீரோ?''

அண்ணாச்சி படித்துக் கொண்டிருந்த பக்கத்தின் முனையை ராக்கெட் செய்வது மாதிரி மடித்துவிட்டு "எல்லா உன்னாலதான். நேத்தே சப்ளை பண்றேன்னு சொல்லிப்புட்டு இன்னமும் ரெடி பண்ணித்தராம இருக்கே. எந்தா நேரம் உம்மூஞ்சை பாத்துக்கிட்டு ஒக்காந்திருக்கறது? ஏதாவது பேப்பர் வாங்கியாந்து படிக்கலாம்னு போனா ஒருத்தன் ரோட்டோரத்தில பழைய பொஸ்தகமா போட்டு ஒக்காந்திருந்தான். பத்து ரூபானு ஒண்ணு புடிச்சாந்தே''

"என்ன பொஸ்தகம் அது?''

இப்படிக் கேட்டதும்தான் படிக்கும் புத்தகத்தின் பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் ஏற்பட்டு, புத்தகத்தை அப்படியே கவுத்துப் போட்டு

''ம்... பாற்கடலாமில்ல?... லா.ச.ரா.. என்று புத்தகத்தை எழுதியவரின் பெயரையும் சேர்த்தே படித்தார். எழுதினவம்பேரா இருக்கும். சீக்கிரம் கட்டுய்யா.. பத்து லென்த் ஆறங்குலம் பைப்பு, இம்ப்ளேர் நெட்டு 15, ஸிக்ஸ்டீன் எம்.எம். போல்டு- நெட்டு...''

"அண்ணாச்சி எத்தனை வாட்டி சொல்லுவே.. எல்லாம் பை நிமிட்ல ரெடியாய்டும். நீ அப்பிடி படிச்சுகிட்டே இரு.. டீ சொல்றேன்''

"ஆமா... செந்நீரா ஆறு டீ யாச்சு'' அலுத்தபடி புத்தகத்தில் ஊன்ற ஆரம்பித்தார். கதை என்னமோ அவரை ஆர்வமாகத்தான் ஈர்த்தது. ஒரு பக்கம் படிப்பதற்குள் டீயும் மசால் வடையும் வரவே, அதைச் சாப்பிட்டுவிட்டு எண்ணெய் கையை எங்கே துடைப்பது என்று உத்தேசிப்பதற்குள் "அண்ணாச்சி ரெடி'' என்றான் கடைக்காரப் பையன். வண்டிக்காரனைப் பிடித்து பூக்கடையில் இருந்து தம் முகப்பேர் கடைக்கு பேரம் பேசி சாமான் "செட்'டையெல்லாம் ஏற்றிவிட்டு, இவரும் ஒரு பஸ்ûஸப் பிடித்து அவனுக்கு முன்னால் முகப்பேர் போய் முன்கூட்டியே செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்ய ஓடிக் கொண்டிருந்தபோதுதான் புத்தகத்தைக் கடையிலேயே வைத்து விட்டு வந்துவிட்டதை உணர்ந்தார். அவருக்கு ஒரு நடை ஓடிப் போய் புத்தகத்தை எடுத்துவந்து விடலாமா என்ற எண்ணமும் அட அடுத்த வாரம் வரும்போது எடுத்துக்கலாம் என்ற எண்ணமும் குழப்பிக் கொண்டிருக்கையில் பஸ் வந்து விட்டது.

கடைக்குப் போன கையோடு "ஏந் தம்பி என்னோட பொஸ்தகத்தை அங்கயே வெச்சுட்டு வந்துட்டேன். எடுத்து வெய்யி. அடுத்தவாரம் வர்றப்ப வாங்கிக்கிறேன்'' என்றார்.

"அண்ணாச்சி புக் எதுவும் இங்க இல்லையே... நான்கூட நீங்க படிச்சுட்டா நான் கொஞ்சம் படிக்கலாமே நினைச்சேன். கோட்டைவுட்டீங்களா? எவன் அடிச்சுட்டுப் போயிட்டான்னு தெர்லயே''

"நல்லா இருந்ததே கதைனு பார்த்தேன். முடிக்கிற நேரத்தில... அந்த பொஸ்தகம் பேரு ஞாபகம் இருக்கா உனக்கு?''

"ம்ம்.. ஞாபகம் இல்லையே அண்ணாச்சி''

"எழுதின ஆளு பேரு?''

"நீதானே வெச்சிருந்தே. நா கையாலும் தொடலையே.. பேர் மாதிரி இல்லையே. ஏதோ இன்சில் மாதிரியில்ல படிச்ச... ரா'னு முடிஞ்சது மாதிரி ஞாபகம்.''

"ஆமாமாம்.. கண்டுபிடிச்சுடலாம்விடு.. பொஸ்தக கடைல கேட்டுப் பாக்றேன்... எல்லாம் ஒழுங்கா வந்து எரக்கிட்டுப் போய்ட்டான்.. லெதர் வாஸர் வாங்காம வந்துட்டேன். சரி அடுத்த வாரம் வர்றேன்.''

அண்ணாச்சிக்கு கதையைப் படித்துக் கொண்டிருக்கும்போதுகூட அதை அப்படி நேசித்துப் படிக்கவில்லை. இனி அது நம்மிடம் இல்லை என்றதும் கூட்டுக் குடும்பத்தில் மாட்டிக் கொண்டு ஒரு பெண் படும் வேதனையை நினைத்து கொஞ்சம் வருந்தவும் செய்தார். "இன்னும் சாந்தி முகூர்த்தம்கூட முடியலையே... சும்மா தெரிஞ்சோ தெரியாமலோ இப்படியும் அப்படியும் இடிச்சுக்கிட்டதுதான் புருஷங்கிட்ட அவ கண்ட சுகம். ஆபிஸ் விஷயமா புருஷன் வெளியூர் போய்ட்றான். தலைதீபாவளிக்குக் கூட வீட்ல இருக்க முடியல அவனால. மாமியார்காரி என்னடான்னா கிணத்துத் தண்ணிய சமுத்திரமா அடிச்சுக்கிட்டுப் போய்டப் போகுதுங்கிறா. ஐயருவூட்டுக் கதை.' கடைசியில் அந்தக் கதை என்னாச்சு என்ற முடிவை யாராவது சொல்லிவிட்டால்கூட போதும் என்று இருந்தது. அவருக்கிருந்த நட்பு வட்டாரத்தில் இதைப் பற்றி பேசவும் முடியாது. எல்லாம் இரும்பு வியாபாரி, சிமெண்ட் வியாபாரி.

மறுநாள் திருமங்கலம் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருக்கும்போது `என்.சி.பி.எச். புத்தகத் திருவிழா' என்று புத்தகக் கடையைப் பார்த்தார். ரொம்ப நாளாக அது அங்கு இருந்த தடயம் அவருக்குப் பதிவாகியிருந்தாலும் ஆச்சர்யமாகப் பார்த்தார். புல்லட்டை நிறுத்திவிட்டு உள்ளே போய் பார்த்தார். அவர் படித்த புத்தகத்தின் அங்க அடையாளங்களோடு ஒரு புத்தகமும் அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அதே மாதிரி சாயலில் நிறைய புத்தகங்கள் இருந்தன. அதை எதையும் வாங்கிவிட்டு புரியுமோ, புரியாதோ என்று பயந்தார்.

"என்ன ஸôர் வேணும்?'' என்றார் கடைச் சிப்பந்தி.

"எனக்கு ஒரு புக் வேணும். அதுதான் இங்க இருக்கான்னு பாக்கேன்''

"என்ன புக்கு பேர் சொல்லுங்க''

"அதைத்தானே மறந்துட்டு முழிக்கேன்''

"தமிழ் புக்குதானே?''

"நா வேறென்னத்த கண்டேன்?''

"எழுதினவர் யார்னு...?''

"ஏதோ.. ரா'னு முடிஞ்சாப்ல ஞாவகம் அவர் பேரு''

"ஓ... அவர்தா?.. இருக்கு.. இருக்கு'' என்று அவர் இரண்டு அடுக்குத் தள்ளி ஒரு புத்தகத்தை எடுத்துவந்தார்.

"சேகுவேரா கடிதங்கள்... இதில்லையே தம்பி. அந்த புக்கும் லெட்டர் மாதிரிதான் எளுதியிருந்தது... ஆனா''

"கடிதம்னா இதுதான். ரா'ல முடியுதுன்னா இது தவிர கி.ரா. கடிதங்கள்னு ஒரு புக் இருக்கு பாக்றீங்களா?''

"இல்ல வேணாம். இதையே பில் போடுங்க. கேட்டதுக்கு ஆசையா கொண்டாந்து காம்பிச்சீங்க..''

"சேகுவேரா பத்தி நிறைய பப்ளீஷர் போட்டிருக்காங்க. அதனால நீங்க இவரோட வேற ஏதாவது புக்கை பார்த்திருப்பீங்க. இதுவும் பிரமாதமான புக். நெஞ்சை உருக்கிடும்.''

"அதேதான். நெஞ்சை உருக்கிறாப்லதான் இருந்துச்சு அதுவும். அதான் தேடி வந்தேன். சரி குடுங்க. இதுவும் அவர் எழுதினதா இருந்தா சந்தோஷம்தான்''
பில் போட்டு புத்தகத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார். வெளியே வந்ததும் செüந்திரபாண்டி புல்லட்டில் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்து முகத்தை மூடிக் கொண்டார். "தலைவரு புக்கெல்லாம் வாங்கி படிக்கிறார்ப்பா' என்று பரிகாசம் செய்வான்.

இரவு சாப்பிட்டு முடித்து வெத்தலை பாக்கும் சார்மினார் சிகரெட்டுமாக மாடிக்கு வந்து புத்தகத்தைப் பிரித்தார். படிக்கப் படிக்க இது வேறு ஏதோ சங்கதி என்று புரிந்தது. இது ஏதோ வெளிநாட்டில் நடந்த போர்கள், புரட்சிகள் என்று போனது. பொண்டாட்டி புள்ளை குட்டியைப் பார்க்காம காட்டிலும் மேட்டிலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தன் தம் குழந்தைகளுக்குக் கடிதம் எழுதறாப்லலாம் இருந்தது. குளிர்ல காட்டிலும் மழையிலும் துப்பாக்கியைத் தூக்கிகிட்டுப் போறானுங்க. யார்கிட்ட சண்டைக்குப் போறாங்க. சண்டை போட்டுட்டு என்ன பண்ணப் போறாங்க ஒண்ணும் புரியல. ஆனா லட்சிய வெறி. குதிரை கறி சாப்பிட்டது பத்தியெல்லாம் எழுதியிருந்தான். விவசாயிங்களுக்கு அதுதான் எல்லாம். அதை அடிச்சு சாப்பிடணும்னா முடியுமா? சில பேர் சாப்பிட மாட்றாங்க. அந்த ரா வேற இந்த ரா வேற. அவரு மோர்ஞ்சாதம். இது குதிரைக் கறி. அது வேற லெட்டரு... இது வேற லெட்டரு.
சிமெணட் தட்டுப் பாடுபற்றியும் டி.எம்.டி. கம்பிகளின் விலையேற்றம் குறித்தும் தினமானி நாளிதழ் அவ்வப்போது கட்டுரை வெளியிடுவதால் அண்ணாச்சி அந்த நாளிதழை வாங்க ஆரம்பித்திருந்தார். அதில் இந்தக் கட்டிடம் சம்பந்தமான சமாசாரங்கள் தவிர வேறு சில துறைகளையும் தொட்டுச் சென்றனர். அதைப் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு எழுத்தாளர் தம் பேட்டியில் சு.ரா., கு.ப.ரா., லா.ச.ரா., கி.ரா. போன்ற எழுத்தாளர்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார். தாம் படித்த பொஸ்தகத்தின் எழுத்தாளர் இரண்டு எழுத்துக்களுக்கு மேல் உள்ளவராக நன்றாக ஞாபகம் இருந்ததால், சு.ரா., கி.ரா இருவரையும் நீக்கிவிட்டு கு.ப.ரா., லா.ச.ரா. இருவர் மீதும் கவனத்தைக் குவித்தார். கடையில் வேறு யாரும் இல்லை. துணிச்சலாக தினமானிக்கு போன் போட்டார்.

போனை எடுத்தவரிடம் "கு.ப.ரா., லா.ச.ரா. போன் நம்பர் கிடைக்குமா ஸôர்'' என்றார்.

மறுமுனையில் ரிஸீவரை சரியாக மூடாமலேயே "கழுத்தறுப்புங்க'' என்பது கேட்டது. "எதுக்கு ஸôர் அவங்க நம்பரு?''

"அவங்ககிட்ட ஒரு டவுட் கேக்கணும்''

"அவங்க ரெண்டு பேருமே செத்துப் போய்ட்டாங்க ஸôர்''

கடையில் அடிபம்பு வாஸர் இருக்கா என்று கேட்டு ஒரு பெண்மணி வந்து நின்றாள். "இருங்கம்மா... தர்றேன்... இல்ல ஸôர் இங்க. இந்த ரெண்டு பேர்ல ஐயர் வூட்டு கதை எளுதர்து யாரு ஸôர். அதான் என் டவுட்டு.''

"ரெண்டு பேருமே ஐயர் கதை எழுதறவங்கதான்'' சொன்ன வேகத்தில் ரிஸீவரை வைத்துவிட்டார்கள்.

அண்ணாச்சியும் ரிஸிவரை வைத்துவிட்டு "சொல்லுமா'' என்றார் பெண்மணியிடம்.

"ஐயர் கதை எழுதறவர்னு சொன்னீங்களே என்னது? சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் எல்லாமே ஐயர் கதை எழுதியிருக்கா. என்ன விஷயம்? சொல்லுங்களேன், தெரிஞ்சா சொல்றேன்''

அண்ணாச்சி தயங்கி அந்தப் பெண்ணைப் பார்த்தார். ஐயமாரு வூட்டுப் பொண்ணு போலதான் இருந்தது.

"ஒரு பொண்ணு தம் புருஷனுக்கு லெட்டர் எழுதறா. அது ஒரு கூட்டுக் குடும்பம். புருஷனும் பொஞ்சாதியும் இப்பத்தான் கல்யாணமானவங்க. இன்னும் சரியா பேசக்கூட இல்ல. புரிஞ்சுதுங்களா... தீபாவளி... தல தீபாவளி. ஆனா புருஷன் வேலை விஷயமா வெளியூர் போயிட்றான். இப்பிடி போகுது கதை.''

"பாற்கடல்னா அது?''

"ஆமாம்மா... அதேதான். பாதிக் கதை படிச்சேன். கடைசில என்னாச்சுனு தெரிஞ்சுக்கலாம்னு''

"அதுவா? அதான் தலைப்பிலயே சொல்லிட்டாரே.. பாற்கடல்னு. குடும்பம்னா அதில ஆலகால விஷமும் இருக்கும், அமிர்தமும் இருக்கும்னு முடிச்சுட்டார்.''

"ஐய்யய்யோ.. அப்பிடியா?'' அதிர்ந்தார் அண்ணாச்சி.

கடைப்பையன் வந்து அடிபம்பு வாஷரை எடுத்துக் கொடுத்து காசை வாங்கி கல்லாவில் போட்டான். அந்தப் பெண்மணி சற்றே அகன்றதும் "பஸ்ல ஜன்னலோரத்தில எப்பவும் ஒரு பொஸ்தகம் படிச்சுக்கிட்டு போவும் இந்த அக்கா. அவங்க வூட்டுக்காரு துபாய்ல வேலை செய்றாரு'' என்றான் பையன்.

"அடக் கொடுமையே இந்தப் பொண்ணோட நிஜக் கதைதான் போலருக்கு'' என்று கதைமுடிவு தெரிந்த திருப்தியில் சேகுவேரா கடிதங்களைத் தொடையில் தட்டி படிக்க ஆரம்பித்தார் அண்ணாச்சி.

புதன், மார்ச் 12, 2008

சிறுகதை: அமரர் சுஜாதா


தமிழ்மகன்


இறந்து போனவரிடமிருந்து இன்று எனக்கொரு இ மெயில் வந்திருந்தது. அதுவும் எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து. முதல்கட்டமாக பேரதிர்ச்சிக்கு ஆட்பட்டேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதிர்ச்சியும் பயமும் அடைவது மட்டும்தான் இதைப் பற்றி ஆராய்வதற்கான முதல்படியாக இருந்தது. பேசாமல் சற்று நேரம் அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன். அப்படி செயலிழந்து இருப்பது ஏன் என்று எனக்குத் தெரிந்தது. மூளையின் செயல்பாடுகள்பற்றி "தலைமைச் செயலகம்' என்ற தலைப்பில் சுஜாதா எழுதியிருந்த புத்தகத்தில்தான் அதைப் பற்றியும் படித்திருந்தேன். மூளைக்குச் செய்திகளைக் கடத்தும் ஆக்ஸôன்கள், நியூரான்கள் பற்றியது அது. செய்திகளை எடுத்துச் செல்லும் ஆக்ஸôன்கள் அறுந்துவிடுவதால்தான் அதிர்ச்சி எற்படும் நேரங்களில் நாம் ஒன்றும் புரியாமல் திகைத்துப் போய் நிற்கிறோம் என்று அவர் எழுதியிருந்தார். அறுந்த தொடர்பு இணைகிறவரை அமைதியாக இருப்போம் என்று காத்திருந்தேன்.

நிதானமாக சுதாரிப்பு ஏற்படுவதை உணர்ந்தேன்.

இறந்து போனவர்கள் மெயில் அனுப்பும் வசதி எதையும் பில்கேட்ஸ் ஏற்படுத்தித் தந்ததாகக் கேள்விப்படவில்லை. பிறகு வேறு என்ன சாத்தியக் கூறுகள் இருக்க முடியும் என்று யோசித்தேன்.
எதையும் விஞ்ஞானபூர்வமாக அணுகிய மனிதரிடமிருந்து இப்படி ஒரு அமானுஷ்ய நிகழ்வா என்ற கிளைச் சிந்தனை வேறு.
போன ஆண்டு கடிதங்கள் எல்லாம் இந்த ஆண்டு கையில் கிடைப்பது மாதிரி எங்கெல்லாமோ சுற்றிவிட்டு இந்த ஈ மெயில் இப்போதுதான் கம்ப்யூட்டருக்குக் கிடைத்ததா? என்ன அபத்தம். அப்படி வாய்ப்பே இல்லை.

வாசகர்களுக்கு நான் ஒரு விஷயத்தை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்கிறேன். நான் எழுதிய சிறுகதை ஒன்றை என்னுடைய தோழிக்கு நேற்று மின்னஞ்சல் செய்தேன். அதுதான் விஷயம். தோழியின் பெயரும் சுஜாதா. ஏதோ பெயர் குழப்பத்தில் எழுத்தாளர் சுஜாதாவுக்கு என்கதையை அனுப்பிவிட்டேன். தோழி மறுபடி போன் செய்து கதை எனக்கு வரவில்லையே மீண்டும் அனுப்ப முடியுமா என்று கேட்க, ஈமெயிலை மறுபடி திறந்த போதுதான் இந்த அதிர்ச்சி. என் கதையைப் படித்துவிட்டு சுஜாதா எழுதியிருந்த பதில் ஈமெயில். இதோ அதுதான் இது:

கதை வித்தியாசமாக இருந்தது. இறந்தவர்கள் பற்றி யோசிப்பது மனிதனின் இயல்பான தேடல் குறித்தது. இறந்தவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதுதான் எல்லா எழுத்துக்கும் ஆதார ஸ்ருதி. எல்லோரும் இறக்கப் போகிறவர்கள்தானே எதற்காக சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் என்ற அடிப்படையில் சிலர் எழுதுகிறார்கள். இறவா புகழை அடைய வேண்டும் என்பதற்காகச் சிலர் எழுதுகிறார்கள். சாகிறவரை அடுத்தவர்களுக்கு தொந்தரவு தராமல் நிம்மதியாக வாழ்ந்துவிட்டுச் சாகவேண்டும் என்பதற்காகச் சிலர் எழுதுகிறார்கள். சாவு என்ற ஒன்று இல்லையென்றால் எழுத்துக்கே அவசியமிருக்காதோ என்று தோன்றுகிறது. சாவைப் பற்றி வந்த உருப்படியான கதை. ஆனால் ஆறுமாதங்கள் உருண்டோடின போன்ற பதங்களுக்கு வேறு வாக்கியங்களை உருவாக்கலாம்.
-சுஜாதா
மேற்படி கடிதத்தில் சுஜாதாவின் வார்த்தைப் பிரயோகம் இருப்பது உண்மைதான். ஆனால் தமிழ் எழுத்தாளர்களில் நிறையபேர் அவரைப் போல எழுதுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியாராவது என்னைக் கிண்டல் செய்யும்நோக்கோடு எழுதியிருந்தால்... ஆனால் அவர்களுக்கு சுஜாதாவின் மின்னஞ்சலின் ரகசிய குறியீட்டு எண் தெரிந்திருக்க வேண்டுமே? அவருடைய உதவியாளர் யாருக்காவது பாஸ்வேர்டை சொல்லி வைத்திருந்திருப்பாரோ?

அவருடன் நெருங்கிப் பழகியிருந்த சிலரிடம் கேட்டேன். ûஸபர் கிரைம் பற்றி ஆரம்பத்திலேயே எச்சரித்தவர் அவர்தான். பாஸ்வேர்டை எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த கவனம் பற்றிச் சொன்னார்கள். அதுவுமில்லாமல் பாஸ்வேர்ட் யாருக்காவது தெரிந்துபோக வாய்ப்பிருப்பதால் அதை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பவர் அவர் என்றும் சொன்னார்கள்.

என்னுடைய கம்ப்யூட்டரை சர்வீஸ் செய்வதற்கு வரும் ஆசாமியைத் தொடர்பு கொண்டு நடந்த கதையை எல்லாம் சொல்லி விளக்கம் கேட்டேன்.

"அவருடைய பாஸ்வேர்ட் தெரிந்திருந்தாதான் ஸôர் அனுப்ப முடியும். இல்லாட்டி சான்úஸ இல்லை'' என்று ஒரே வரியில் வைத்துவிட்டார்.
சரி என்று நானும் விட்டுவிட்டேன். அந்தத் தருணத்தில்தான் அவருடைய கணேஷும் வஸந்தும் மூளைக்குள் புகுந்து ஒரு ஜிவ்வு ஜிவ்வினார்கள்.
மறுபடி சுஜாதாவுக்கே இன்னொரு ஈ மெயில் அனுப்புவது என்று தீர்மானித்தேன்.

என்ன இருந்தாலும் தமிழகத்தின் மிகப் பெரிய எழுத்தாளரான அமரர் சுஜாதாவின் பெயரில் இப்படி விளையாடுவது நியாயமே இல்லை. இது அவருக்குச் செய்யும் அவமானம். இந்த விளையாட்டைத் தொடராதீர்கள்.
-தமிழ்மகன்


ஈ மெயில் அனுப்பிவிட்டு சிலவினாடிகளில் இன்னொரு பதில் ஈ மெயில் சுஜாதாவிடமிருந்து.



இறந்த ஒருவரை வைத்து இப்படியெல்லாம் விளையாடக் கூடாது என்ற உங்கள் அபிப்ராயம் சரிதான். ஆனால் இறந்த ஒருவர்தான் உங்களிடம் இப்படியெல்லாம் விளையாடுகிறார் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். நம்ப வைப்பதற்கு என்னிடம் ராஜ இலச்சினையோ, முதுகு மச்சமோ இல்லை. பேசாமல் இறந்த ஒருவரால் எப்படி ஈ மெயில் அனுப்ப முடியும் என்று யோசியுங்கள். கண்டுபிடிக்கிறீர்களா பார்க்கலாம். உங்களுக்கு 24 மணி நேரம் கெடு.
சுஜாதா
வாசகர்களே தலையைச் சுற்றுகிறதா இல்லையா? இந்த ஒரு நாளில் நான் என்ன செய்ய முடியும்? இன்னும் சிலரிடம் சொல்வதைத் தவிர. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். சுஜாதா எழுதிய கடைசி வாக்கியம்வரை உற்சாகமும் துள்ளலும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் இறந்த பின்னுமா? அவர் எழுதிய காலமானவர் கதை ஞாபகம் வந்தது. ஏதாவது காலக் குழப்பம் ஏற்பட்டு தேதி மாறிப் போய் எல்லாமே நடந்து கொண்டிருக்கிறதா?
மனிதர் கருட புராணம் எல்லாம் படித்தவர். அந்த மாதிரி சூட்சுமம் ஏதாவது கைவரப் பெற்றுவிட்டாரா?

விஞ்ஞானமும் வேதாந்தமும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்று சேர்வதாகவும் எழுதியிருக்கிறார். ஆனால் இருக்கிறவர்களையெல்லாம் விட்டுவிட்டு என்னை எதற்கு இந்தப் பரீட்சைக்குத் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. இதையெல்லாம் தாங்கும் சக்தியோ, போராடிக் கண்டுபிடிக்கும் திராணியோ இல்லாதவன் நான்.

வாலி, மணிரத்னம், ஷங்கர், கமல்ஹாசன், அப்துல்கலாம், மதன், ராவ் என்று அவருக்கு நிறைய நெருக்கமான ஆட்கள் இருக்கிறார்கள். அந்த மாதிரியாருக்காவது இப்படி ஒரு ஈ மெயில் வந்திருந்தால் அது நாடுதழுவிய செய்தியாகவோ உலகு தழுவிய செய்தியாகவோ இருந்திருக்கும்.
வேதாந்தம், அமானுஷ்யம், சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம் போன்ற வஸந்த் பாணி விஷயங்களையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு கணேஷ்போல இந்த விஷயத்தைக் கையாள்வோம் என்று முடிவு செய்து கொண்டேன். எனக்கு சுஜாதா எழுதிய "கொலையுதிர் காலம்' நாவல்தான் இப்படி முடிவெடுக்க உதவியது. விஞ்ஞானம்... விஞ்ஞானம்... எனக்குத் தெரிந்து விஞ்ஞான நோக்கோடு விஷயத்தை எதிர் கொள்பவர் கோவர்தன்தான். பெங்களூருவில் இருக்கிறார். இன்னும் 6 மணி நேரமே இருக்கும் அவகாசத்தில் அவருடைய ஆலோசனையை நாடினேன்.

மனிதர் எப்போதும் போல் மும்பை செல்வதற்காக ஏர் போர்ட்டில் காத்திருந்தார். விஷயத்தை உள்வாங்கிக் கொண்டார்.

"அது எழுத்தாளர் சுஜாதாவின் ஈ மெயில்தானா என்று தீர்மானியுங்கள். நான் என் வேலையை முடித்துவிட்டு உங்களைத் தொடர்பு கொள்கிறேன்'' } ரத்தின சுருக்கமாக இவ்வளவுதான் சொன்னார்.

அவர் சொன்ன முக்கியமான சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள சுஜாதாவின் நண்பர்கள் சிலரை அணுகினேன். அட்சரம் பிசகினாலும் தவறாகிவிடும் என்பதால் எழுத்து எழுத்தாகக் குறித்துக் கொண்டேன். முகவரி சரியாகத்தான் இருந்தது. அது சாட்சாத் சுஜாதாவின் ஈமெயிலே தான். அவசரப்பட்டு இரண்டொரு தரம் கோவர்தனுக்கு போன் செய்த போதும் முக்கியமான கூட்டத்தில் இருப்பதாகவே செய்தி வந்தது. தவிப்பு தாளவில்லை எனக்கு. இரண்டு நாளாக இதே வேலையாக இருக்கிறேன். யாருமே இதை ஒரு முக்கியமான விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லையே என்று இந்த பொறுப்பற்ற உலகத்தின் மீதே கோபமாக இருந்தது.

சரியாக மாலை அவரே தொடர்பு கொண்டார்.

"ஈ மெயில் சரிதானா?''

"மிகச் சரியாக இருக்கிறது''

"வேறுயாருக்காவது அவருடைய ஈ மெயில் பாஸ்வேர்டு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறதா?''

"அதையும் விசாரித்துவிட்டேன். அந்த விஷயத்தில் படு ரகசியம் காத்திருக்கிறார்.''

"அப்படியானால் ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கிறது. ஆட்டோ இன்டலஜன்ஸ் புரோகிராமிங்.''

"சில ஈ மெயில் பார்த்திருப்பீர்கள். கடனட்டைக்கான தொகை ரூ... கிடைத்தது. நன்றி... அல்லது எங்கள் வலைதளத்தில் உங்களைப் பதிவு செய்ததற்கு நன்றி என்று தயார் நிலை வாக்கியங்களோடு சில கடிதங்கள் வருவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படியானது.''

"ஆனால் நான் எழுதிய கதையைப் படித்துவிட்டு விமர்சித்திருக்கிறாரே?''

"ஆயிரக் கணக்கான கதைகளைப் படித்ததன் மூலம் எல்லாவற்றையும் ஒரு பார்முலாவுக்குள் அவரால் கொண்டு வரமுடிந்திருந்தால் கம்ப்யூட்டரேகூட உங்கள் கதையைக் கணிக்க முடியும். அதாவது அந்த மாதிரி புரோக்ராம் செய்ய முடியும்.''

"ரொம்ப நன்றி கோ...''

ஓட்டமாய் ஓடி சுஜாதாவுக்கு அடுத்த மெயிலைத் தட்டினேன்.
"கண்டுபிடித்துவிட்டேன் ஐயா. இதுதானே விஷயம்?' என்று.
அடுத்த நிமிடம். "வெரிகுட்' என்றொரு மெயில் ஒன்று அவரிடமிருந்து வந்தது. அடுத்த விநாடி கம்ப்யூட்டர் பட்டென்று அணைந்துவிட்டது. என்னடா இது எல்லாம் கூடி வருகிற நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே என்று பதறிப் போய் மீண்டும் கம்ப்யூட்டரை ஏற்றினேன்.

வேகமாக ஈ மெயிலை திறந்தேன்.
... சுஜாதா... அட அவர் அனுப்பிய ஈ மெயிலே இல்லையே... அனுப்பிய மெயில் பட்டியலிலும் இல்லை. பெற்றுக் கொண்ட பட்டியலிலும் இல்லை.
இதுவும் அவர் வேலைதானா?




நன்றி: தினமணிகதிர் 9.3.2008


tamilmagan2000@gmail.com

LinkWithin

Blog Widget by LinkWithin