ஞாயிறு, ஜூலை 27, 2008

பாதிப்பு

தமிழ்மகன்

என்னைப் போலவே அப்பாவுக்கும் தூக்கம் பிடிபடவில்லை என்று தெரிந்தது. அடிக்கடி இருமிக் கொண்டிருந்தார்.
ஊரிலிருந்து வந்த தம்பியின் மாமனார்விடும் குறட்டைச் சத்தம் யாரைத்தான் தூங்கவிட்டது?
வந்ததும் வராததுமாக அப்பாவிடம் என்னைப் பற்றித்தான் அதிகம் விசாரித்தார் அவர்.
"என்னங்க இன்னும் கததான் எழுதிகிட்டு இருக்கானா? வயசுபாட்டுக்கு ஆகுது. இன்னும் பொறுப்பு வரலைன்னா எப்படி?''
"..............''
"கல்யாணத்தப்ப பெரியவனுக்கு வேலை கிடைச்சதும் நிதானமா பண்ணப் போறேன்னு சொன்னீங்க. பையன் போற போக்கப் பாத்தா வேலைக்குப் போற உத்தேசமே இல்லை போலத் தோணுதே?''
"..............''
"செலவுக்கு என்ன பண்றான்..?''
"நான்தான் கொடுப்பேன்... சின்னவனும் கொடுப்பான்.''
"நல்லாருக்கா.. எவ்வளவு நாளைக்கு இப்படிக் குடுக்க முடியும்?''
அப்பாவுக்கு மேற்கொண்டு இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கப் பிடிக்கவில்லை. அதுவும் நானும் அங்கே இருக்கிறேன் என்று தெரிந்தும் இப்படியெல்லாம் பேசுவது அவருக்கு எரிச்சலாகக் கூட இருந்திருக்கும். கேள்வி கேட்கிறவர் என் மனசு புண்படுமே என்று யோசித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அடுத்தவர் விஷயத்தில் எந்த அளவுக்குத் தலையிடலாம் என்ற இங்கிதமாவது இருந்திருக்க வேண்டும்.
அப்பா பேச்சைத் திருப்புகிற உத்தேசமாக ""அவன் விதி.. ஊர்ல எல்லோரும் செüக்கியமா?'' என்றார்.
நான் சுவற்றுத் தடுப்புக்கு மறுபக்கத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். எனக்கு உறைக்க வேண்டும் என்றுதான் தம்பியின் மாமனார் அப்படிப் பேசினார் என்பது புரிந்தது. "இத கேட்க நீ யார்யா?'' என்று சட்டையைப் பிடிக்கிற கோபம் வந்தது. அப்பா எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். எங்கிருந்து ஆதரவுக் குரல் கொடுப்பது... கூட சேர்ந்து திட்டாமல் இருக்கிறவரை சந்தோஷம்.
சங்கரின் கல்யாணத்துக்குப் பிறகு எனக்கு இப்படி ஒரு நெருக்கடி.
ஆயிரம் பேர் துக்கம் விசாரித்தார்கள்.
உரிமையுள்ளவர்கள், "தம்பிக்குக் கல்யாணத்தைப் பண்ணிட்டு இப்படி வெட்டியா ஊர் சுத்திட்டு வர்றியே வெக்கமா இல்ல உனக்கு?' என்றார்கள்.
அக்கறை உள்ளவர்கள், "முதல்ல ஒரு வேலை தேடிக்கோ. சைட்ல கதை எழுது' என்றார்கள்.
சிலர் கணக்குப் பிள்ளை மாதிரி கேட்டார்கள்.
"ஒரு கதைக்கு எவ்வளோ குடுப்பான்?''
சொன்னேன்.
"வீட்ல சும்மா தானே இருக்கே? அப்போ மாசத்துக்கு அம்பது அறுவது கதை எழுதித் தள்ள வேண்டியதுதானே? உன் தம்பியவிட உனக்கு வருமானம் அதிகமாயிடும். எந்தப் பய உன்ன கேள்வி கேட்பான்?''
நான் பாப்கார்ன் மிஷின் இல்லை. மாதத்துக்கு அம்பது கதையை என்னால் பொரிக்க முடியாது.கதையைப் பிரசவிப்பதும் அதை பத்திரிகை ஆபிஸýக்கு அனுப்பி வைப்பதும், போன வேகத்தில் திரும்பிவருவதும்... திரும்பி வராமலும் போவதும்... வந்தாலும் பணம் அனுப்ப தாமதமாவதும் வந்த செக்கில் இனிஷியலை மாற்றிப் போட்டுவிடுவதும் அதை மாற்ற அலைந்து திரிவதும்... யாருக்கும் புரிய வாய்ப்பில்லை. சிறுபத்திரிகையில் எழுதுவது தனி கண்ணீர் கதை. நாம் பார்த்து அவர்களுக்கு ஏதாவது சகாயம் செய்தால்தான் பத்திரிகையே வெளிவரும்.
கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லி முடியவில்லை. அரவானி ஆனவன் வீட்டில் தங்க முடியாமல் தவிக்கிற தவிப்பு புரிந்தது எனக்கு.
கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி, கதை எழுதுகிறேன் பேர்வழி என்று ஒற்றைக் காலில் நின்ற போது அப்பா ஒன்றும் சொல்லவில்லை. எழுதிய கதைகளைப் புத்தகமாகப் போட ஆர்வம் காட்டினார். பெரிய எழுத்தாளனாய் ஆவேன் என்று ஆசைப்பட்டார். "கரித்துண்டு படிச்சிருக்கியா?.. மு.வ. எந்த பத்திரிகையிலும் எழுத மாட்டார். ஸ்ட்ரெய்ட்டா புக்கா போட்டுடுவாரு.. நாரண. துரைக்கண்ணன் மாதிரி யார் எழுதுற இந்தக் காலத்தில?... தமிழ்ல ஞானபீடம் வாங்கின ஒரே ஆளு அகிலன்தான்...'' என்று எனக்குப் பிடிக்குமே என என்னிடம் அவரறிந்த இலக்கியம் பேசினார். இதோ இதோ என்று எட்டு வருடம்.. நான் எழுத்தாளன் என்பது தபால்காரனையும் சேர்த்து இருபது பேருக்குத் தெரிந்தால் அதிகம்.
சங்கர் எனக்கு முன்னால் படித்ததும், வேலைக்குச் சேர்ந்தது கல்யாணம் பண்ணிக் கொண்டதும்கூட அப்பாவைக் கவலை அடையச் செய்யவில்லை. புதிய உறவினர்கள் கேட்கிற கேள்வியில் அப்பா என் எதிர்காலம் குறித்துப் பயந்து போனார்.
தம்பிக்குத் திருமணம் ஆனதிலிருந்துதான் சிக்கல் அதிகரித்தது. அம்மா இறந்தபோது வீட்டுக்கு ஒரு சமையல்காரியின் அவசியம் இருந்தது. அப்பா ஏனோ ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்காய் என் கல்யாணப் பேச்சை எடுத்தார்.
வினோவை அப்போது நான் காதலித்துக் கொண்டிருந்தேன். வருவாய் இல்லாமல் கல்யாணம் செய்து கொள்ள யோசனையாக இருந்தது. வேலை இல்லை என்று எவ்வளவு நாளைக்குத் தள்ளிப் போடமுடியும்? சங்கர் நல்ல வேலையில் இருந்தான்.
சங்கரின் திருமணம் நடந்தது. கீதா ஆரம்பத்தில் மிகவும் பணிவாக இருந்தாள். நான் எழுதிய கதைகளைக் கேட்டு வாங்கிப் படித்தாள். எப்படிக் கதை எழுத வேம்டும் என்று எழுத்தாள ஆசையோடு கேட்டாள். (வெள்ளை பேப்பரில் எழுத வேண்டுமா கோடு போட்ட பேப்பரில் எழுத வேண்டுமா?)
சீக்கிரத்திலேயே அநியாயத்துக்கு வித்தியாசம் காட்டினாள்.
எனது கதைகளை, பேப்பர்களை, சஞ்சிகைகளை மூட்டையாகக் கட்டி பரண்மேல் போட்டுவிட்டாள். ஏதாவது வேலையாக நான் அறைக்குள் நுழைந்தபோது கட்டிலில் படுத்தவாறே என்ன வேண்டும் என்றாள். இதையெல்லாம் சங்கரும் கண்டு காணாமல் இருப்பது தெரிந்தது.
பிறகு ஒரு வழியாக அவள் என்னிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். அவளின் இன்ப வாழ்வுக்கு நானொரு நந்தி. என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. முன் வாசலில் அப்பா பொழுதெல்லாம் தந்தி பேப்பரைப் படித்துக் கொண்டிருப்பார். உண்பதற்கும் உறங்குவதற்கும் வீட்டுக்குள் செல்வோம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே சாப்பிட்டு முடித்ததும் எங்கே போவது என்று யோசிக்க வேண்டியிருந்தது. சங்கரை நான் அட்டையாக உறிஞ்சுவதாகப் புரளி நிலவியது.
சமயத்தில் எழுதுவதை எல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு ஏதாவது செக்யூரிட்டி வேலைக்காவது முயற்சி பண்ணலாமா என்று தோன்றும்.
"இந்த மாசம் இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் உன் கதையைப் பத்திதான் ரொம்ப நேரம் பேசினாங்க. கடைசியில வேற ஒருத்தருக்குப் பரிசு கொடுத்துட்டாங்க. விடாம எழுது. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு'' எக்மோர் பாலத்தில் ஏறிக் கொண்டிருந்தபோது எதிரில் வந்தவர் உசுப்பேத்திவிட்டுப் போய்விட்டார். இப்படித்தான் யாராவது சொல்லி சொல்லி என்னை எழுத்தாளனாகவே தக்க வைக்கிறார்கள்.
படிக்கப் போனால்.. வேலைக்குப் போனால்.. காதலித்தால்.. அதில் தோற்றால்.. கல்யாணம் செய்தால்.. குழந்தை பிறந்தால்.. பிறக்கவில்லை என்றால்.. எல்லா விஷயங்களிலும் கதைகள் இருக்கின்றன. எழுதலாம். அது யாரையாவது பாதிக்கிறதா என்பது தெரிந்தால் எழுதுகிற ஆர்வம் பூர்த்தியாகிறது. முன்பெல்லாம் அப்பா என் கதை பற்றி ஏதாவது சொல்லுவார். என் எதிர் காலம் அவரை அச்சுறுத்திவிட்டது. இப்படி உற்சாகப்படுத்துவது என்னை நரகத்தில் தள்ளிவிடுவதாக அச்சம். கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டுவிட்டார். பையனின் வாழ்க்கை இப்படி ஆனதற்கு தானே ஒரு காரணம் என்று குற்ற உணர்ச்சி ஆட்கொண்டுவிட்டது. பாராட்டுவது குறைந்து போய்... நிறுத்தியேவிட்டார். எப்போது முதல் அறிவுரைகளை ஆரம்பிப்பார் என்று தெரியவில்லை.
அப்பா திரும்பிப் படுத்து இருமினார். அவர் கொஞ்சம் தண்ணீர் குடித்தால் இருமல் தணியும். தண்ணீர் வேண்டுமானால் சமையல் அறைக்குச் செல்ல வேண்டும். படுக்கையறையையே பாதி தடுத்து சமையலுக்கு விட்டிருந்தார்கள். லைட்டைப் போட்டதும் கட்டிலில் இருப்போர் வாரி சுருட்டிக் கொண்டு தூங்குவார்கள்(!). படுக்க வரும்போதே ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து வைத்துக் கொள்ள வேண்டும்.. மறந்து போகிறது.
எனக்கு இன்று தூக்கமே வராது போல் தெரிந்தது. வினோ பாவம். எனக்காகவே, காத்திருந்து காத்திருந்து, "நான்தான் வேலைக்குப் போறேனே' என்றுகூட சொல்லிப் பார்த்தாள்.
கடிகாரம் கரக் என்ற முன்னறிவிப்புக்குப் பின் பனிரெண்டு மணியடித்தது. அதற்காகத்தான் காத்திருந்தது மாதிரி எழுந்து போய் சிறுநீர் கழித்துவிட்டு வந்து படுத்தேன்.

எனக்கு
யாருமில்லை
நான்கூட..

நகுலன் கவிதை ஞாபகத்துக்கு வந்தது.
அப்பாவின் இருமல் இம்முறை வெகுநேரம் நீடித்தது. மார்பைப் பிடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டார்.
"தண்ணி கொண்டுவரட்டுமாப்பா?''
"வேணாம்...'' கூடவே கையசைத்தார்.
என்னிடம் ஏதோ பேச விரும்புகிறவராக உற்று நோக்கினார். நான் அவரைப் பார்த்தபடி அருகில் அமர்ந்தேன்.
"போனமாசம் நிஜம் பத்திரிகையிலே ஒரு கதை எழுதியிருந்தியே''
"சில அடிப்படைகள்..''
ஆமாம் என்ற தலையசைப்பு. மெல்ல தோளைத் தட்டி, "ரொம்ப நல்லா இருந்ததுடா'' என்றார்.

tamilmagan2000@mail.com

4 கருத்துகள்:

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) சொன்னது…

very nice...

thala adichi norukku thala...

ஆயில்யன் சொன்னது…

//போனமாசம் நிஜம் பத்திரிகையிலே ஒரு கதை எழுதியிருந்தியே''
"சில அடிப்படைகள்..''
ஆமாம் என்ற தலையசைப்பு. மெல்ல தோளைத் தட்டி, "ரொம்ப நல்லா இருந்ததுடா'' என்றார்//

அருமை!

சின்னச் சின்ன பாராட்டுக்களில் தான் எழுத்தால் ஆள்பவனின் ஜீவன் இன்னும் இருக்கு!

Natty சொன்னது…

சூப்பர் தல...

Nilofer Anbarasu சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு....ஆனா சிறுகதையா இருக்க வாய்ப்பில்லை என்றே உள் மனதில் தோன்றுகிறது

LinkWithin

Blog Widget by LinkWithin