செவ்வாய், மார்ச் 17, 2009

கிளாமிடான்

ஆழி பதிப்பகம் - அமரர் சுஜாதா அறக்கட்டளை நடத்திய போட்டியில்

ரூ.20 ஆயிரம் பரிசு பெற்ற சிறுகதை


யோசனையின் ஊடே ஜன்னலோர மரக்கிளை லேசாக ஆடுவதைக் கவனித்தார் பேராசிரியர் எழிலரசு. காற்று அடிக்காமலேயே மரக்கிளை ஆடுவது வினோதமாக இருந்தது. ஊன்றி பார்த்தபோது மரக்கிளை நகர்ந்தது மாதிரியும் தெரிந்தது. ஜன்னல் ஓரக் கிளையாக இருந்ததால் இன்னும் சற்று நெருங்கிப் பார்த்தார். நகர்ந்தது கிளையில்லை. கிளையின் மீதிருந்த ஓர் உருவம். மனிதன்.. பச்சோந்தி போல மரத்தின் நிறத்துக்கே மாறிப்போயிருந்தான். பேராசிரியருக்கு அதிர்ச்சியாக இருந்தது. "யாரப்பா அது?'' என்றார்.
கிளையில் இருந்தவன் தன்னை யாரோ கவனித்துவிட்டார்கள் என்ற அச்சத்தில் மீண்டும் மரத்தின் நடுக்கிளைக்குப் போய் மறைந்து கொண்டான்.
"களவுக்காரனோ, கலகக்காரனோ.. யாராக இருந்தாலும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டியிருக்கும்... மரியாதையாக இறங்கி வா''
முகத்தை மட்டும் வெளியே காட்டி மிரள மிரள விழித்தான் மரத்தில் இருந்தவன்.
"ஓ.. நீ அந்தக் கிராமத்தான்தானே?... தப்பி வந்தவன் அல்லவா?'' என்றபடி திரைக்காவலருக்குத் தகவல் தர எத்தனித்தார்.
திரைப் பொத்தானை அழுத்துவதற்குள் மரக்கிளையில் ஒரே தாவாகத் தாவி வந்து அவர் முன் வந்து நின்றான் அவன். கிராமத்தான் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் இப்போதுதான் நேரில் பார்த்தார் எழிலரசு. நகரத்தானைவிட பெரிதும் மாறுபட்டிருந்தான்.
"நான் தப்பி வந்தவன் அல்ல. தெரியாமல் வந்துவிட்டவன். திரும்பி கிராமத்துக்குப் போக உதவுங்கள்'' என்றான். அவனுடைய உச்சரிப்பும்கூட வேடிக்கையாக இருந்தது.
நகரத்து ஆடையோ, நகரத்தின் நிறமோகூட இல்லாமல் இருந்தான். சொல்லப்போனால் சேற்றின் நிறத்தில் ஒரு கால் சட்டையும் மேல் சட்டையும் இருந்தது. தைக்கப்பட்டபோது அது வேறு ஏதோ நிறத்தில் இருந்திருக்க வேண்டும். சேற்றின் நிறம் அதற்கு அவர்களின் வேலை தந்த பரிசு. ஒரு வரலாற்றுப் பேராசிரியருக்கான அக்கறை விழித்துக் கொண்டது அவருக்கு. பார்த்ததுமே அவன் மீது பரிதாபம் பொங்கியது.
"மூன்று நாள்கள் ஆயிற்றே.. சாப்பிட்டாயா?'' என்றார் பரிவோடு.
"இல்லை. எனக்கு பசிப்பதில்லை...'' மேற்கொண்டு ஏதோ சொல்ல தயாரானவன் மாதிரி இருந்தாலும் எதுவும் சொல்லவில்லை.
எதற்கும் இருக்கட்டும் என்று குடுவை நீரை அவன் பக்கம் திருப்பினார். அவன் அதைக் குடித்தான் எனக் கூறுவதைவிட வாய்வழியாக உடலின் மேல் ஊற்றிக் கொண்டான் என்பதுதான் சரியாக இருக்கும். படுக்கையில் தூங்குமாறு சொன்னபோதும் தரையில்தான் படுக்கும் பழக்கம் என்றான். விவசாயியாக இருப்பதால் உள்ள தரம்குறைந்த வாழ்க்கையையும் அவன் புரிந்து கொண்டவனாகத் தெரியவில்லை. என்னை கிராமத்துக்கு அனுப்பி வைத்துவிடுங்கள் என்றான் லூப் வாக்கியம் போல. அதைத் தவிர வேறு நோக்கம் அவனுக்கு இல்லை. நகரத்துக்கும் கிராமத்துக்கும் இருக்கிற வித்தியாசம் "பரங்கி' திரைப்படத்துக்கும் "பரட்டை' திரைப்படத்துக்குமான வித்தியாசம் போல இருப்பதாகச் சொன்னான். நகரத்தில் அந்த இரண்டு படமும் திரையிடப்படவில்லை. பிரமிக்க வைக்கும் வித்தியாசங்களோடு கூடிய இரண்டு கிராம திரைப்படங்களை அவன் ஒப்பிட்டுச் சொல்வதாகத் தோன்றியது.
"என்ன நடக்கிறது அங்கே?... விவரிக்க முடியுமா?'' என்றார் எழிலரசு.
"எங்கே?'' கேள்வியின் ஆதாரமே புரியாமல் கேட்டான்.
"இல்லையப்பா இங்கே நாங்கள் வசதியாக வாழ்கிறோம். ஆரோக்கிய உணவு உண்கிறோம். சுகமாக இருக்கிறோம். நீங்கள் இது எதுவும் இல்லாமல் வாழ்வதாகத் தோன்றுகிறது. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? உங்களை எப்படி நடத்துகிறார்கள்?'' என்று விளக்கிச் சொன்னார்.
"நீங்கள் சொன்ன வாக்கியத்தில் எனக்கு சில சொற்கள் புரியவில்லை... வசதி, ஆரோக்கிய, சுகமாக.. இதெல்லாம் என்ன?''
அங்கு எப்படி நடத்துகிறார்கள் என்பது குறித்து அவனை எதையும் விவரிக்க வேண்டியதில்லை என்ற முடிவோடு வேறு விஷயங்களை எளிமையாகவும் ஒவ்வொன்றாகவும் கேட்க ஆரம்பித்தார். "நீ தினமும் என்ன வேலை செய்கிறாய்?''
"நெல் சாகுபடி பிரிவில்...'' சற்றே வெறுமையாகப் பார்த்துவிட்டு "நெல் சாகுபடி.. நெல் சாகுபடி'' என இருதரம் தனக்காகச் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.
"நெல் சாகுபடி சரி.... தினமும் வயலுக்குப் போய் என்ன செய்வாய்?''
ஆழ்ந்த யோசனையில் மூழ்கிப் போனான். நெல் சாகுபடி என்பதைத் தவிர வேறு விளக்கங்களை அவனிடம் யாரும் விசாரித்திருக்க மாட்டார்கள் போலும். பிறகு "பயிர் செய்கிறோம்'' என்றான். திடீர் நினைவு ஏற்பட்டவனாக "நாங்கள் வயலுக்குப் போக மாட்டோம். வயலில்தான் நாங்கள் வசிக்கிறோம்''
"சரி. இங்கு எப்படி வந்தாய்?''
"ம்.. வந்து.. விளைபொருள் வண்டியில் மூட்டைகளை அடுக்கிவிட்டு.. வண்டியிலேயே தூங்கிவிட்டேன்... வண்டியை ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். நான் இறங்கிப் பார்த்தேன். கிராமம் காணாமல் போயிருந்தது. இது நகரம் என்று புரிந்தது. நான் தெரியாமல் வந்துவிட்டேன். தப்பி வந்தவன் அல்ல.'' வெளிச்சத்தில் அவனை உற்று நோக்கினார். அவனின் உடலின் நிறமும்கூட தண்ணீரில் ஊறி பிசுபிசுப்புப் படர்ந்து இருந்தது.
"நெல் மூட்டையை வண்டியில் ஏற்றுவதும் உங்கள் வேலைதானா?''
"ஆமாம். உழவு செய்வது.. நாற்று நடுவது.. களையெடுப்பது.. கதிர் அறுப்பது எல்லாமே நெல் சாகுபடியாளரின் வேலைகள்தான்.''
"காய்கறிகள்...?''
"நான் தப்பி வந்தவன் இல்லை. என்னை கிராமத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்..''
"அதற்காகத்தான் கேட்கிறேன்''
"காய்கறிகள் தோட்டப் பயிர் பிரிவில். தென்னை சாகுபடி, வாழை சாகுபடி, நீர் பாசனப் பிரிவு எல்லாம் தனித்தனியாக இருக்கிறது'' .. என்னிடம் இருக்கும் அத்தனைத் தகவலையும் சொல்லிவிட்டேன், இதற்கு மேல் கேட்காதீர்கள் என்பதாக இருந்தது அவன் பேச்சு.
உ.நா. சபையின் மனித மேம்பாட்டு அமைப்பு போன்றவை கிராமங்களில் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தது. நகர உ.நா.சபையில் இதை முறையிட்டால் என்ன என்று ஆவேசம் கொண்டார். அவனைப் படுத்துக் கொள்ளச் சொன்னார். மிக சோர்வாக இருந்தபோதும்கூட அவன் நின்று கொண்டுதான் இருந்தான். அமரவும் மறுத்தான். படுப்பது, உட்காருவது போன்றவை அவனுக்கு ஆடம்பரமான விஷயமாகவும் உயர் அதிகாரிகள் சம்பந்தபட்டதாகவும் இருந்தது. கிராமத்தில் எல்லோருமே இப்படித்தானா இல்லை அதிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.

உயிரி தொழில்நுட்பப் பேராசிரியர் அமர்நாத் அவனை எல்லா பக்கமும் சோதித்தார். அடையாள மச்சத்தைத் தேடுவது மாதிரி அங்குலம் விடாமல் தேடினார். அந்த இடத்தைப் பரிசோதிக்கும்போதும் அவன் தேவைப்படும் அளவுக்குக் கூச்சம் காட்டவில்லை. அறுத்துவிடுவார்களோ என்ற தயக்கம் கலந்த பயம்தான் அதில் இருந்தது.
தொலைவிசாரணைத் திரையில் என்னவோ நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். "எது எது நேரடி ஒளிபரப்போ எவையெல்லாம் ஒத்திகை பார்த்து உருவாக்கப்பட்டவையோ?' மக்களை இளித்தவாயர்களாக நினைக்கிறார்கள்'' என எழிலரசுவின் சலிப்பு தொடர்ந்தது.

"எல்லாவற்றையும் மீறி நேற்று ஒரு கிராமத்தான் நகரத்துக்கு வந்துவிட்டான். நீங்கள் எல்லாம் என்ன செய்கிறீர்கள்?'' குடியரசுத் தலைவர் மிகுந்த ஆவேசத்தோடு கேட்டார்.
"கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் வழிகள் இரண்டுதான். அவை வாரத்துக்கு ஒரு முறைதான் திறக்கப்படும். அப்போது கண்காணிப்பு வாயிலில் தீவிரமான பரிசோதனை உண்டு. விளைபொருள்களைத் தவிர மனிதர்கள் யாரேனும் அந்த வழியாக வெளியேறினால் அவர்கள் கருகி இறந்து போய்விடுவார்கள். சக்தி வாய்ந்த மின்காணிகள் பொருத்தப்பட்டுள்ளன. யாரும் தப்பித்திருக்க வாய்ப்பே இல்லை''
"அப்படியானால் கிராமத்தில் ஒருவன் மூன்று நாள்களாக அடையாள அட்டை பதிக்காமல் இருக்கிறான். அவன் எங்கே போய் தொலைந்தான் என்று கிராமவாசிகளுக்கும் தெரியவில்லை. அவனுடைய பிரேதமும்கூட கிடைக்கவில்லை.''
"கிராம காவலர்கள்...?''
"அவர்களிடமும் விசாரித்துவிட்டேன். சல்லடைபோட்டுத் தேடிவிட்டார்கள். காணாமல் போனவன் "கிராமத்தான் நெ.சா. லட்சத்து பதிமூன்று' துரிதமாகத் தேடுங்கள்''
"நாளைக்குள் நெல் சாகுபடிக்கு அவனை அனுப்பி வைக்கிறேன்.''

அந்த ஒளிபரப்பைப் பார்த்துவிட்டு கிராமத்தான் அதிர்ச்சியோடு தன் பழைய பல்லவியை ஆரம்பித்தான். "தப்பி வந்தவன் அல்ல, தெரியாமல் வந்தவன்''
கிராமவாசிகள் கிராமங்களிலேயேதான் இருக்க வேண்டும் என்றும் நகரவாசிகள் நகரத்திலேயே இருக்க வேண்டும் என்றும் சட்டம் கொண்டுவரப்பட்டபோதுகூட அதற்கு அமோக வரவேற்பு இருந்தது.
பிறகு நடந்தது அப்படி லகுவாக இல்லை. கிராமத்து மக்கள் நிலத்திலும் நீரிலும் வெயிலிலும் கிடந்து உழலுவதும் நகரத்தில் நிழலிலும் நல்ல ஆரோக்கியமான சூழலில் வாழ்வதும் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
"நகரத்தில் வேறு உணவும் கிராமத்தில் வேறு உணவும் இருப்பதாகச் சில சதிகாரர்கள் சொல்லுவதை நம்பாதீர்கள்'' என்று குடியரசுத் தலைவர் ஆண்டுதோறும் விழிப்புணர்வு நாள் கூட்டத்தில் முழங்குவார். அதனாலேயே சிலருக்கு அதில் சந்தேகம் வலுத்தது. ஆனால் யாரும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. எல்லோருக்கும் சந்தேகமும் எந்தச் சந்தேகமும் இல்லையே என்ற பாவனையும் பழகிப் போயிருந்தது.
அமர்நாத், கிராமத்தான் முதுகில் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டி, "இங்கே பார்த்தீர்களா?'' என்றார். அவர் சுட்டிய இடத்தில் அவன் உடலில் திட்டுத் திட்டாய் தோலின் நிறத்தில் மாற்றமிருந்தது. கொஞ்சம் சமூக அக்கறையும் அரசு அதிருப்தியும் கொண்ட சொற்ப நபர்களில் அவரும் ஒருவர் என்பதால் அவரிடம் விசயத்தை விளக்க அழைத்திருந்தார் எழிலரசு.
"சூரிய ஒளியில் நின்றால் எப்படி இருக்கிறது உனக்கு?'' என்றார் அவனிடம் உறுதிப்படுத்திக் கொள்ளும்விதமாக.
"நாள் முழுக்க எனக்குச் சூரிய ஒளி தேவைப்படுகிறது. வேறு உணவுகூட இரண்டாம்பட்சம்தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களுக்கு இப்படி இருக்கிறது. இதற்காக எங்களுக்குத் தினமும் ஊசி போடுவார்கள்.. நாங்கள் இனிமேல் சூரிய ஒளிமூலமாகவே வாழ முடியும் என்கிறார்கள். எங்களுக்குத் தனியாக ஆகாரம்கூட தேவையில்லை என்று கூறுகிறார்கள்.'' வகுப்பில் எழுப்பிக் கேள்வி கேட்கப்பட்ட மாணவன் போல சொன்னான்.
"இதனால் உனக்குக் கடினமாக இல்லையா?'' என்றார்.
அவனுக்கு அதில் சொல்வதற்குக் கருத்து எதுவும் இன்றி வார்த்தையைக் கிரகிக்க முடியாமல் பார்த்தான். தரையில் சரிந்து படுத்துக் கொண்டான். மிகவும் களைத்திருந்தான்.
எழிலரசு பக்கம் திரும்பி, "கிளாமிடாமோனாஸ் பற்றிப் படித்திருப்பீர்கள். நகரும் தன்மையும் சூரிய ஒளியால் ஸ்டார்ச் தயாரிக்கவும் முடியக் கூடிய ஒரு செல் உயிரினம் அது. அது தாவரமா, விலங்கினமா என்பதை அறுதியிட்டு வரையறுக்க முடியாததைப் போல ஆறறிவு மனிதனையும் மாற்றியிருக்கிறார்கள்.''
"அடக் கொடுமையே... மனிதர்களைப் பச்சையம் மூலம் ஸ்டார்ச் தயாரிக்கும்படி செய்திருக்கிறார்கள். குளோரோ ப்ளாஸ்ட் தன்மையை விலங்குகளுக்கு ஏற்படுத்தும் விபரீத முயற்சி. கிராமத்து மனிதர்களுக்கு சாப்பாடுகூட இல்லாமல் சூரிய சக்தி மூலமாகவே இயங்கும் ஆர்கனிக் இயந்திரமாக்கும் அநியாயம்.''
"ஐய்யய்யோ அது எப்படி சாத்தியம்?''
"சாத்தியம்தான். கடந்த நாற்பது ஆண்டுகளாக எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ள ஆராய்ச்சியே அதுதான். விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் ஒரே மாதிதரிதான் செல் அமைப்பு. இரண்டுக்குமே நியுக்கிளியஸ், ûஸட்டோப்ளாஸம், டி.என்.ஏ., ஆர்.ஏ. மைட்டோ காண்ட்ரியா, கோல்கி எல்லாம் இருக்கிறது. பொது தோற்றத்தில் விலங்கு சமாசாரம் கொஞ்சம் வட்டமாக இருக்கும். தாவர செல் செவ்வகமாக இருக்கும். தோற்றத்தைப் பொருத்து இரண்டுக்கும் ஒரு சதவீத வித்தியாசம்தான். தாவர செல்லின் முக்கிய வித்தியாசம் அதில் உள்ள குளோரோ ப்ளாஸம். அந்த வித்தியாசத்தை உடைப்பதற்குத்தான் இவ்வளவு ஆராய்ச்சிகள்.''
"அநியாயம்''
"அதைத்தான் நானும் சொல்கிறேன்''
"இதனால் என்ன நடக்கும்?''
"ஒன்று சொல்லட்டுமா? ஐநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் ஒரு "ஒரு செல்" விலங்கும் ஒரு "ஒரு செல்' தாவரமும் தோன்றின. முதலில் தோன்றிய அந்த "ஒரு செல்' தாவரத்தை அப்போது தோன்றிய "ஒரு செல்' விலங்கு ஸ்வாகா செய்தது.. ஹேஸ்யம்தான். ஆனால் அதில் தர்க்கரீதியான வாய்ப்பு இருக்கிறது. எப்போதும் தாவரங்கள் விலங்குகளின் நலனுக்கானவை''
"இதனால் அரசுக்கு என்ன நன்மை?''
"புரியவில்லை? கார்களைச் சூரிய சக்தியில் இயக்குங்கள் என்றால் இவர்கள் மனிதர்களையே சூரிய சக்தியால் இயக்கி லாபமடைய பார்க்கிறார்கள்''
"அது புரிகிறது.. அதற்காகப் பொன் முட்டை வாத்துக்களை இப்படி அறுத்துவிட்டால்.. இன விருத்தியைத் தொடர்வது எப்படி?''
"பதியன் போடுவார்களோ என்னவோ... எந்த அளவுக்குப் போயிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கொஞ்ச நாள்களாகவே தாவர செல், விலங்கு செல் வித்தியாசத்தைப் பகுத்தாயும் ஆராய்ச்சிக்குத்தான் என்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.என்.ஏ.வில்தான் அவர்களின் முழு கவனமும். எனக்கு எங்கோ உறைத்தது. ஆனால் இத்தனை மோசமாகப் போவார்கள் என்று யோசிக்கவில்லை. உ.நா. சபையும் இதற்கு உடந்தையாக இருக்குமா?''
"ஆமாம். பொல்லாத உலக நாடு சபை... '' என்றார் எழிலரசு. எப்போதும் போல அரசு முயற்சிகளின் மீது தன் வெறுப்பை வெளிக்காட்டினார்.
"காலப் போக்கில் தாவரத்தன்மை அதிகமாகிவிட்ட காரணத்தால்தான் சாகுபடி விளைபொருள்களோடு கலப்படமாகி மின்காணிக்குத் தப்பி நகரத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறான்''அமர்நாத் அவருக்கே தெளிவுபடுத்திக் கொள்வது போல பேசினார்.
"அப்படியானால் இவன் மூளை, நரம்பு மண்டலம், இருதயம்.. ரத்தமெல்லாம்...?''
"இயற்கை இப்படித்தான் தன்னை தகவமைத்துக் கொள்கிறது. மியூட்டேஷன் என்று வைத்துக் கொள்ளுங்களேன். தவளை நீரிலும் நிலத்திலும் வசிப்பதில்லையா? ஆம்பிபியன் போல. ஆல்டர்நேட் எனர்ஜி போல. இரண்டிலும் இயங்கக் கூடியவனாக மாற்றியிருக்கிறார்கள்.''
இவர்கள் அரசு கவனிப்பில் இல்லாதோர் பட்டியலில் இருந்ததால் அவர்களால் இவ்வளவு பேச முடிந்தது. இல்லையென்றால் இன்னேரம் நகரக் காவல் அதிகாரி வந்திருப்பார்.
நெ.சா. மனிதன் கண் இமைப்பது அசாதாரணமாக இருந்தது. வந்ததிலிருந்து இமைக்கவேயில்லையோ என்று நினைத்தார். இவனை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தவர், பிறகு இவர்களை என்று திருத்திக் கொண்டார். கிராமத்துக்குப் போகும் மரபு மருந்துகளில் "குளோரோ ப்ளாஸின்' அளவைக் குறைப்பதன் மூலம் இந்தக் கொடுமைக்கு விடிவு காணமுடியும் என்று தோன்றியது. மனித உடம்பில் ஒளிச்சேர்க்கை விகிதம் அதிகரிக்க, அதிகரிக்க இது சிரமம் என்றும் புரிந்தது. உலக கிராமம் முழுவதிலும் இப்படித்தானா? இங்குமட்டுமா? அல்லது தமிழ்க்குடியரசில் மட்டுமா?
நிலைகுலைந்து கிடந்த கிராமத்து நெ.சா. மனிதனை கவலையோடு பார்த்துவிட்டுப் புறப்பட்டார் அமர்நாத். "இப்போது என்ன பெயரில் இருக்கிறீர்கள்?'' என்றார் கதவுப்பிடியை அழுத்தியபடி.
"ஏன் கேட்கிறீர்கள்? ...எழிலரசு. பெயர் என்பது பதினாறு இலக்க எண் என்று ஆகிப் போனபின்பு இது நம் மனத்திருப்திக்காகத்தானே? பாஸ்வேர்ட் மாற்றும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பெயரையும் மாற்றிக் கொள்வேன். ஆனால் எங்கள் வீட்டில் யாருக்கும் பெயர் விருப்பம் இல்லை..''
"எனக்கும்கூடத்தான்... சொல்லப் போனால் நீங்கள் ஒருவர்தான் என்னை அமர்நாத் என்று ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்... சரி வருகிறேன்''

காலை தேநீரோடு அவனை எழுப்ப முனைந்தார் எழிலரசு. அவன் இரவு கிடந்த வாக்கிலேயே படுத்துக் கொண்டிருந்தான் இன்னமும். அவனுக்கும் ஒரு பெயர் சூட்டலாம் என்ற ஆவல் எழுந்தது எழிலரசுவுக்கு. மெல்லத் தொட்டு உலுக்கிப் பார்த்தார். அவன் சில்லென்று நிலைக்குத்திப் போய் இருந்தான். நாடித்துடிப்பு சுத்தமாக இல்லை. தோல் மரத்துப் போய்... சரியாகச் சொல்வதானால் மரப்பட்டையாய்ப் போயிருந்தது.
அசைவற்றுக் கிடந்தான். இறந்துவிட்டான்... அப்படி அவர் முடிவு செய்த தருணத்தில் அவன் கண் பாவைகள் சற்றே அசைந்ததைக் கவனித்தார். திடுக்கிட்டுப் போனார். பிணம் பார்க்கிறது என்ற அச்சம் எழுந்து அடங்கியது.
"உயிர்.... இருக்கிறது' நிதானமாக முணகினார்.
நேரம் கடத்தாமல் அவனை வேகமாக உலுக்கினார். அவனுடைய கரங்கள் மரத்தின் கிளைபோல ஆடியது. வேகமாக அவனைப் பற்றி இழுத்தபோது தரையில் பதிந்திருந்த அவன் முதுகுக்குக் கீழ் சல்லி வேர்கள் தென்பட்டன

4 கருத்துகள்:

RAGUNATHAN சொன்னது…

அற்புதமான சிறுகதை....சுஜாதா இருந்திருந்தால் அக மகிழ்ச்சி அடைந்திருப்பார். மேலும் இது போன்ற சிறுகதைகளை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்.

ரகுநாதன்
கோவை

பெயரில்லா சொன்னது…

WOW excellent creativity.
Hope its your own ;)
ANSA - KL, Malaysia.

நிலாரசிகன் சொன்னது…

நல்லா இருக்கு கதையின் கரு. ஆனால் முடிவில் ஒரு twist எதிர்பார்த்தேன் :)

சென்ஷி சொன்னது…

அருமையான கதை. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

LinkWithin

Blog Widget by LinkWithin