செவ்வாய், ஜூலை 07, 2009

சென்ட்ரல் ஸ்டேஷன் ஷெர்லாக் ஹோம்ஸ்!


கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பலாத்காரம், பயங்கரம், திருடன், போலீஸ், ரத்த வெள்ளம், கள்ளக் காதல், பலான பார்ட்டி, அஜால் குஜால் உள்ளிட்ட வார்த்தைகளையே உள்ளடக்கிய செய்திகளைப் படிப்பதும் அதே போன்ற வாக்கியங்களுடன் செய்திகளை எழுதுவதுமாக மூன்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தேன். போலீஸ் செய்தி என்ற கிரைம் டிடெக்டிவ் வார இதழின் பொறுப்பாசிரியர் பணி.

என் சுபாவத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாத வேலை. 89ஆம் ஆண்டில் சுமார் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பத்திரிகை வேலை கிடைப்பதென்பது நினைத்துப் பார்க்க முடியாதது. நண்பர் கவிதா பாரதி மேற்படி வார்த்தைகளின் சுமை தாங்க முடியாமல் அவருக்குப் பதிலாக, என்னை அங்கே பணயம் வைத்துவிட்டார்.

காலையில் அலுவலகம் சென்றதும் அன்று வெளியான செய்திகளில் ரத்தத்தின் சூடு ஆறாத, குரோதம் கொப்பளிக்கிற, துரோகம் நிறைந்த செய்திகளைக் குறித்துக் கொண்டு அதை நிருபர்களிடம் தெரிவித்து பின்னணித் தகவல்களைத் திரட்டச் சொல்கிற வேலை எனக்கு. செய்தித் தாளைத் திறந்ததுமே பளீர் பளீரென்று அத்தகைய செய்திகள்தான் கண்களை ஈர்க்கும். பக்கத்தில் இருக்கும் லா.ச.ரா.வுக்கு சாகித்ய அகாதமி விருது என்ற செய்தி உள்மனத்தின் அதீத பிரயத்தனத்துக்குப் பிறகுதான் மெல்ல பலகீனமாக ஒளிரும். அப்படிப் பழகிப் போயிருந்தது.

ஒருநாள் அலுவலகம் சென்றதும் ஒரு ரகசிய போன். "ஒரு குற்றவாளியை போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பிலேயே அடித்துக் கொன்றுவிட்டார்கள். பிணத்தை இன்று இரவு வேறு இடத்துக்கு மாற்ற இருக்கிறார்கள். இரவு சரியாக பனிரெண்டு மணிக்கு நீங்கள் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய வாசலில் இருந்து பார்த்தீர்கள் என்றால் தெரியும். அங்கே எடைமிஷின் அருகே நில்லுங்கள் நேரில் வந்து தகவல் சொல்கிறேன்.''

"நீங்கள்?''




டொக்.

அடுத்த நிமிஷம் அலுவலகம் சுறுசுறுப்பாகிவிட்டது. அடுத்தவார அட்டைச் செய்திக்கு ஒரு பிரத்யேகச் செய்தி கிடைத்துவிட்டது என்று பரபரப்பாகிவிட்டோம்.

கிளம்பும்போது தனியாக உங்களை அங்கே வரவழைத்துத் தீர்த்துக் கட்டுவதற்கு யாரேனும் முடிவு செய்திருக்கலாம் என்று பீதியைக் கிளப்பிவிட்டார் ஒரு நிருபர். எவனோ சும்மா உளறிக் கொட்டியிருக்கிறான் இதைப் போய் பெரிதாக எடுத்துக் கொண்டு போகிறீர்களே.. வேலையைப் பாருங்கள் என்றார் இன்னொருவர். ஆனாலும் உண்மையாக இருந்து செய்தியை விட்டுவிட வேண்டியதாக ஆகிவிட்டால்?

போய்ப் பார்த்துவிடுவது என்பதற்கு அதிக வாக்குவிழுந்ததால் ஜனநாயகப்படி கிளம்ப வேண்டியதாகிவிட்டது. இப்போது ஆனந்தவிகடன் தலைமை வடிவமைப்பாளராக இருக்கும் பாண்டியன், வண்ணத்திரையின் பொறுப்பாசிரியராக இருக்கும் நெல்லை பாரதி ஆகியோரும் அங்கு அந்த நேரத்தில் பணியாற்றி வந்தனர். அவர்களும் எனக்குத் துணையாக வந்தனர். இரவு 11.30க்கு ஆட்டோ பிடித்துப் போய் இறங்கினோம். பாதுகாப்புக்காக இரண்டு இரண்டு பேராகப் போனோம்.

எடை மிஷின் அருகே நான் நின்றேன். என்னை யாராவது தாக்க முற்பட்டால் காப்பாற்றும் தூரத்தில் மற்றவர் அமர்ந்திருந்தனர். நான் அங்கிருந்து மாடியில் இருக்கும் சென்ட்ரல் ஸ்டேஷன் காவல் நிலையத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். யாராவது மாடியில் இருந்து இறங்கினால் ஏறினால் எல்லாமே சந்தேகத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது. மணி பன்னிரண்டு ஆனது. மறுநாளுக்கான கால்மணியும் அரைமணியும் நகர்ந்து கொண்டிருந்தது. எதிர்பார்த்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. யாரும் வந்து சந்திக்கவும் இல்லை. விடிய, விடிய அமர்ந்து பார்த்துவிட்டு டீ குடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். அதற்கு மேல் அங்கு நின்றிருந்தால் சந்தேக கேஸில் எங்களை அந்த ஸ்டேஷனுக்குள் அழைத்துச் சென்று இருப்பார்கள். அப்படி ஒரு பிணம் இருந்திருந்தால் எங்கள் கண்களுக்குச் சிக்கியிருக்கும்.

யாரோ ஏமாற்றிவிட்டார்கள் என்றும் நாம் வருவதைத் தெரிந்து அவர்கள் நேரத்தை மாற்றிக் கொண்டார்கள் என்றும் பேசி ஓய்ந்துபோனோம்.

அங்கிருந்து வேறு பத்திரிகைக்குப் போய், வெகு ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று ஒருநாள் அங்கு வேலை பார்த்த ஒரு நிருபரின் விளையாட்டு இது என்று தோன்றியது. இப்படியான சுவாரஸ்யமான சில செய்திகளைக் கற்பனையாக உருவாக்கி நிஜம் போலவே தந்தவர் அவர். எனக்கு அந்த ஞானோதயம் வந்து அவரை எப்படியாவது கேட்டு உண்மையைத் தெரிந்து கொள்ள ஆவல் கொண்டேன். தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசரம் தீவிரமாகத் தொற்றிக் கொண்டது. இருபது வருடம் ஓடிப் போன பின்பு நான் யூகித்தது சரியா என்று தெரிந்து கொள்ளும் பரபரப்பு. விசாரணையின் நுனியில் அவர் இறந்து போய்விட்டதாக அறிந்தேன்.

அடடா எப்படி இறந்துபோனார் என்று அடுத்து ஆரம்பமானது இன்னொரு விசாரணை.

2 கருத்துகள்:

கே.பாலமுருகன் சொன்னது…

வணக்கம் தமிழ்மகன் நண்பரே. பதிவு அருமையாக உள்ளது. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "உறுபசி" நாவலில் சம்பத் இப்படியான ஒரு பத்திரிக்கையில் வேலைக் கிடைத்து, அதன் செய்திகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி, "இந்தப் பத்திரிக்கையில் வேலை செய்தால் நான் யாரையாவது கொன்றுவிடுவேன் போல" என்று சொல்லுவதாக எழுதியிருப்ப்பார்.

கொலை, கொள்ள, குரூர கொலை செய்திகளையே பார்த்து, படித்து, தயாரித்து அதிலேயே ஊறி போவது நம் மனநிலையை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதையும் சம்பத்தின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

அந்த உணர்வே உங்களின் பதிவிலும் ஏற்படுகின்றன. வாழ்த்துகள்.

கே.பாலமுருகன்
மலேசியா

தமிழ்மகன் சொன்னது…

அன்பு நண்பர் பாலமுருகனுக்கு,
வணக்கம்.
காந்தமுள் பகுதியில்
அனுபவங்களை அசைபோடுவது சுகமாகத்தான் இருக்கிறது. இவ்வளவு சீக்கிரமே அசை போட வேண்டாமே என்று நினைத்திருந்தேன். இருந்தாலும் நிறைய பேர் அப்படி எழுதுவதால் நானும் என் பங்குக்கு ஆரம்பித்துவிட்டேன். சிலர் பாராட்டவும் செய்கிறார்கள். ஆகவே மகிழ்ச்சிதான். ஓய்வின்றி எழுதிக் கொண்டிருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.

LinkWithin

Blog Widget by LinkWithin