திங்கள், ஆகஸ்ட் 24, 2009

அப்பா தந்த அதிர்ச்சி!!



இளம்பிராயத்தைக் கிராமத்தில் கழித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இப்படிச் சொல்வது கொஞ்சம் பழமையான உதாரணமாக இருக்கலாம். ஆனாலும் அந்தச் சொர்க்க வாழ்க்கையை விவரிப்பதற்கு வேறு வார்த்தையில்லை.
பிரேம் சந்த் சிறுகதைகள் என்ற இந்த சாகித்ய அகாதமி வெளியீட்டில் 8 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அவருடைய மிகச் சிறந்த கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது. அவருடைய பிரபலமான சிறுகதைகள் பட்டியலில் இதில் உள்ள மூன்று கதைகளைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


உத்திரபிரதேச மாநிலத்தில் கிராமம் ஒன்றில் பிறந்த இவர் இந்தியிலும் உருதிலும் சேர்த்து சுமார் 300 சிறுகதைகள் எழுதி இருக்கிறார்.இந்த 8 கதைகளில் அடிநாதமாக ஓர் ஒற்றுமையைப் பார்க்க முடிகிறது. முக்கியமாக எல்லாக் கதையிலும் கிராமம் இருக்கிறது. அதில் ஒரு சிறுவன் இருக்கிறான்.
உண்மையும், இரக்க குணமும், விளையாட்டு குணமும் கொண்ட அவர்களில் பிரேம் சந்த் ஒளிந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அந்தச் சிறுவர்கள் மூலமாக அவர் தன் கடந்து போன ஞாபகங்களை மறு பிரதி எடுப்பது நன்றாகத் தெரிகிறது. அதை தெரிந்து கொள்வது சுலபமாக இருக்கிறது.. ஏனென்றால் முழு கற்பனாவாதக் கதைக்கும் பழம் நினைவுகளைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்வதற்கும் தெளிவான வித்தியாசம் இருக்கிறது.


பிரேம்சந்த் கிட்டிப்புள் மீது பைத்தியமாக இருந்திருக்க வேண்டும். இந்த எல்லா கதைகளிலும் ஒரு எசிறுவன் கிட்டிப்புள் விளையாடுகிறான். போதாததற்குக் கிட்டிப்புள் என்றே ஒரு சிறுகதையும் இதில் இருக்கிறது.சிறுவயதில் மிகப் பிரமாதமாகக் கிட்டிப்புள் ஆடுகிறான் இவரைவிட வயதில் மூத்த இவருடைய கிட்டிப்புள் தோழன். அந்த விளையாட்டில் புள்ளை அடிப்பதில்தான் சுவாரஸ்யம். எதிரில் நின்று அதைப் பிடிப்பதில் அத்தனை ஈர்ப்பு இருக்காது. பிடிப்பது அத்தனை எளிதானதும் இல்லை. ஆனால் பிரேம் சந்துக்கு கிட்டிப்புள் அடிக்கிற வாய்ப்பு கிடைக்கவில்லை. எதிராளி தோற்பதாக இல்லை. இத்தகைய சூழ்நிலையில் பிரேம் சந்த் தன்னை வீட்டில் திட்டுவார்கள் கிளம்புறேன்.. என்று நழுவப் பார்க்கிறார். எதிராளி விடுவதாக இல்லை. வேறு வழியில்லாமல் அழ ஆரம்பிக்கிறார்.விளையாட்டில் போட்டி போட முடியாமல் அழுவது கேவலமான விஷயம்தான். ஆனால் பிரேம் சந்த்துக்கு வேறு வழி தெரியவில்லை. அழுது காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்.


அப்பாவின் வேலை நிமித்தம் ஊரை விட்டுச் சென்று விடும் அவர், பின்னாளில் பெரும் பதவியோடு அந்த ஊருக்கு வருகிறார். அன்று தன்னை விளையாட்டில்அழ வைத்த அந்தத் தோழனை அழைத்து இப்போது கிட்டிப்புள் ஆட ச் சொல்கிறார். காலம் அவனை வயதால் மூத்தவனாகவே வைத்திருக்கிறதே தவிர வறுமையால் இறக்கி வைத்திருக்கிறது. ஐயா அப்போது ஏதோ தெரியாமல் செய்துவிட்டேன் என்கிறான் அவன். யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று தவிர்க்கிறான். கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று ஊருக்கு வெளியே வெட்ட வெளியில் ஆட்டம் தொடங்குகிறது. புள், கிட்டியில் பட்டாலும் "இல்லை அது ஏதோ கல்லில் பட்டு சப்தம் கேட்கிறது' என்பது போல அவனாகவே தோற்றுப் போகிறான். அவன் வேண்டுமென்றே தோற்றது தெரிந்ததும் பிரேம் சந்த் மிகவும் வருந்துகிறார். அவன் தோற்றதன் மூலம் தன்னை வெற்றி கொண்டு விட்டான் என்று முடிகிறது கதை.


கிட்டிப்புள் மீது அவருக்கு இருந்த ஆர்வம் எல்லா கதைகளிலும் தெரிகிறது. அண்ணாச்சி என்ற அவருடைய புகழ் பெற்ற கதை இதில் இடம் பெற்றிருக்கிறது. அண்ணன், தம்பி இருவரும் ஒரு அறை எடுத்துத் தங்கிப் படிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அண்ணன் தினமும் தம்பிக்கு அறிவுரை சொன்னபடியே இருக்கிறான். படிப்பது அத்தனை சுலபமான விஷயமில்லை. வரலாற்றில் ஒரே மாதிரி பெயர்கள் பல இருக்கும். பல அரசர்களுக்குப் பெயர்கள் கிடைக்கவில்லையோ என்னவோ ஹென்றி ஓன்று, ஹென்றி இரண்டு என்றெல்லாம் பெயர் வைத்திருப்பார்கள் .. கணக்கு அத்தனை சுலபமானதல்ல... எந்த நாடு எங்கே இருக்கிறது என்பதை மனப்பாடம் செய்வது கஷ்டமானது ... இப்படியெல்லாம் சொல்கிறான். ஆனால் அந்த ஆண்டு அண்ணன் பெயில் ஆகிறான். தம்பி பாஸ்.ஒரு தடவை பாஸ் ஆகிவிடுவது சுலபம். இதை வைத்துக் கொண்டு மனப்பால் குடிக்காதே.. எப்போது பார்த்தாலும் கிட்டிப்புள் ஆடுவதை நிறுத்து என்று அறிவுரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.அடுத்த ஆண்டும் அண்ணன் தேர்ச்சி பெற முடியவில்லை. விளையாட்டுத் தம்பி பாஸ் ஆகிறான். இப்போதும் அண்ணன் அறிவுரை சொல்கிறான். நான் அறிவுரை சொல்வது உனக்கு கஷ்டமாக இருக்கும் ஆனால் அப்பா நமக்காக பணம் அனுப்பிப் படிக்கவைக்கிறார். நாம் பொறுப்பில்லாமல் இருப்பது சரியா என்கிறான். அண்ணன் தொனி மாறுகிறது. அண்ணன் மீண்டும் பின் தங்குகிறான். இறுதியில் பள்ளிப் படிப்பை விட அனுபவப் படிப்புதான் முக்கியம் என்கிறான் அண்ணன். மிக அருமையான உரையாடல் மூலம் நகர்த்தப்பட்டிருக்கும் இந்தக் கதையின் முரண் முடிச்சு.. வாழ்க்கையில் முன்னெச்சரிக்கை என நாம் நினைப்பது கவிழ்த்து விடுவதும் அலட்சியமாக இருந்தவன் முன்னேறிச் செல்வதும் மட்டுமல்ல. சறுக்கல்கள் மூலமாக அறிவுரையின் தொனியில் ஏற்படும் மாற்றமும்தான்.


வீட்டு நாய்கள் எஜமானர்கள் முன்னால் எடுத்துக் கொள்ளும் உரிமையும் தைரியமும் அவர்களை விட்டுப் பிரிந்து விட்டபோது பலவீனமாகிவிடுவதை, ஒரு விசுவாசமான ஊழியனின் மனப்பாங்குக்கு ஒப்பிடுகிற கஜாகி சிறுகதை மனதைத் தொடுகிறது.


ராம லீலா சிறுகதை... அந்தக் காலத்திலும் ஊழலுக்கான அம்சங்கள் இருந்ததைச் சொல்லும் ஒரு ஆவணம். ஊரே பல் இளிக்கும் கணிகையிடம் தன் தந்தை கம்பீரமாக நடந்து கொள்வார் என்று எதிர் பார்க்கும் சிறுவனின் தலையில் இடி விழும் அந்தக் காட்சி சிறுவனுக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சி வேதனையானது. போலீஸ் வேலை பார்க்கும் சிறுவனின் தந்தை எந்த விஷயத்தையும் மிடுக்குடன் எதிர் கொள்பவர். ஆனால் அந்தக் கணிகை, திருவிழாவில் அவரை வருடிச் செல்லும் போது அசட்டுத்தனமாக சிரிப்பது அந்தச் சிறுவனுக்குப் பேரதிர்ச்சியாக இருக்கிறது. வறிய பிச்சைக்காரர்களுக்குக் காசு தருவதற்கு கண்டிப்பு காட்டும் அவர், அந்தப் பெண்ணுக்குப் பளிச்சென்று 100 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டுகிறார்... இதில் உள்ள எல்லா கதைகளும் சிறுவர்களின் பார்வையில் இருந்து எழுதப்பட்டிருப்பது வியப்பான ஒற்றுமை. கதையின் எளிமையும், அது தரும் மன அதிர்வுகளும் எதிர்ப்பார்க்க முடியாத இரண்டு துருவங்களாக இருக்கின்றன.


பிரேம்சந்த்தின் சிறந்த கதைகள்,

முதல் தொகுதி சாகத்திய அகாதமி வெளியீடு

தமிழில் : என். ஸ்ரீதரன்,சி.ஐ.டி. வளாகம்,

தரமணி,

சென்னை-

விலை: 50

ஒரு தூக்கு மேடை குறிப்பு



கலைஞரைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தார் அந்தப் பெரியவர். பார்வைக் கணிப்பிலேயே 80 வயதை மதிப்பிட முடிந்தது. முரசொலி அலுவலகத்தில் அன்று கலைஞரைப் பார்க்க நிறைய பேர் வந்திருந்தார்கள். பெரியவரால் கலைஞரைப் பார்க்க முடியவில்லை. கலைஞர் கார் கிளம்பும்போது எப்படியும் அவர் தம்மைக் கவனித்துவிடுவார் என்ற அவருடைய நம்பிக்கையும் வீணாகிவிட்டது. மற்றவர்கள் போல காரின் கதவுப் பக்கம் ஓடித் தங்கள் முகத்தைத் தெரியப்படுத்திக் கொள்ளும் சாகஸம் எதுவும் அவரிடம் இல்லை. கார் கிளம்பியதும் சோர்ந்து நின்றுவிட்டார்.

அவரை அணுகி பேச்சுக் கொடுத்தேன். "பரவால்ல பட்ட கஷ்டத்துக்கு இப்ப வசதியா இருக்குது.. அது போதும். பாவம் இந்த வயசிலயும் ஓயாத வேலை இதுக்குது அதுக்கு'' என்றார். இதுக்கு, அதுக்கு என்று அவர் சொல்வது கலைஞரை என்பது தெரிந்ததும் ஒருவித அச்சம் வியாபித்து, என் அறைக்கு அழைத்துச் சென்றேன்.

அவர் பெயர் பாஸ்கர். எம்.ஆர்.ராதா நாடக கம்பெனியில் வேலை பார்த்தவர்.
"திருச்சில அண்ணாவோட வேலைக்காரி நாடகம் நடக்கும்போதுதான்.. இதோட தூக்குமேடை நாடகமும் நடந்தது. அண்ணா நாடகத்துக்கு ‘அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி'ன்னு விளம்பரம் பண்ணியிருந்தாங்க.. நாங்க ‘கருணாநிதியின் தூக்குமேடை'னு போட்டிருந்தோம். அன்னைக்கு காலீல எனக்கு ஒரு யோசனை.. அனாவுக்கு அனாவா போட்டதுமாதிரி நாம க'னாவுக்கு க'னா போட்டு "கலைஞர் கருணாநிதி'னு போட்டா என்னனு ராதாண்ணகிட்ட கேட்டேன். அண்ணன் சரிடான்னுட்டாரு.. நான்தான் மொத மொதல்ல சாக்பீஸ்ல இவரை கலைஞர் கருணாநிதினு எழுதினேன்.. ராதா அண்ணனும் இவரை மேடைக்கு வரவழைச்சு கலைஞர்னு சொன்னாரு. என்னை நல்லா தெரியும்.. அதான் ஒருவாட்டி பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்.''

உண்மையா, உயர்வு நவிற்சியா என்ற சந்தேகம் வரவில்லை. ஏனென்றால் அவர் பேசும் தொனி உண்மைக்கு நெருக்கமானதாக இருந்தது. ஒல்லியாக இளம்பிராயத்தில் ஓடியாடி உழைத்தவராகத் தோன்றினார். சுறுசுறுப்பின் மிச்சம் அவருடைய நடுக்கம் நிறைந்த வேகத்தில் வெளிப்பட்டது.
"என்னைப் பார்த்துட்டா வுடவே வுடாது.. எம் மேல அவ்ளோ பிரியம்.. ''
வீட்டில் இவர் சொல்வதை நம்புபவர்களாக இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. கலைஞரின் நண்பர் என்பதை நிரூபிக்க வேண்டியிருந்திருக்கலாம். முதுமையின் அலைபாயலில் தொலைந்த நட்பைப் புதுப்பிக்க நினைத்திருக்கலாம். ஞாபகம் வைத்திருக்கிறாரா என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்கிற ஆசையாக இருந்திருக்கலாம். ஏதோ உதவி தேவைப்பட்டிருக்கலாம். என்னவாக இருந்தாலும் அவரையும் கலைஞரையும் சந்திக்க வைக்க ஆசைப்பட்டேன். என்னுடைய யூகங்களில் எது சரியானது என்பதைத் தெரிந்து கொள்கிற ஆர்வம்.

இன்னொரு முறை வாருங்கள் எப்படியாவது சந்திக்க வைக்கிறேன் என்று சொல்லி அனுப்பினேன். அவர் இன்னொரு முறை வந்த போது கலைஞர் முரசொலிக்கு வரவில்லை. இன்னொரு முறை போன் செய்துவிட்டு வாருங்கள் என்றேன்.

அதன் பிறகு அவர் அங்கு வரவில்லை. எங்கள் குங்குமம் பிரிவை மயிலாப்பூர் தினகரனுக்கு மாற்றிவிட்டார்கள். எனக்கு வேறு அலுவலக முகவரியும் வேறு தொலைபேசி எண்ணும் அமைந்தது. அவர் என்னைத் தேடியிருப்பாரா... கலைஞரைச் சந்தித்தாரா? வீட்டில் நம்பாமலேயே போய்விட்டார்களா? கலைஞரைச் சந்திக்க வருகிற எத்தனையோ தொண்டர் குவியல்களில் இந்த மாதிரி ஆதாயம் கோராத பல கொடி மரத்து வேர்கள் உண்டு. அவர்களின் எல்லா கதைகளையும் கேட்க நேரம் இருப்பதில்லை.

எல்லோருக்கும் வேறு இடங்களில் வேறு கதைகள் காத்துக் கொண்டே இருக்கின்றன.

வியாழன், ஆகஸ்ட் 20, 2009

டைரக்டர் ஷங்கருக்கு நண்பராகாதவர் பற்றிய குறிப்பு


நண்பர்கள் தினத்தன்று சுமார் 40 எஸ்.எம்.எஸ்.கள். என்னுடைய நண்பர் கோவர்தனை நினைத்துக் கொண்டேன். அவர் அந்த நாளில் என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை.
நாள்கள்- நிகழ்வுகள் சார்ந்து அவர் பேசுவதும் இல்லை. ஒரு நாள் பஸ்ஸில் தாம்பரத்தில் இருந்து படப்பைக்குப் பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும்போது போன திங்கள் கிழமை ஏன் கூட்டத்துக்கு வரவில்லை என்று கேட்டேன். அவர் ""ஓ சாரி.. எனக்கு கல்யாணம் நடைபெற்றதால் வரமுடியவில்லை'' என்றார். அதிர்ச்சி ஒரு நண்பர் இப்படியும்கூட செய்வாரா என. ஆனால் அந்த அதிர்ச்சியை அவர் அடுத்த வினாடியே போக்கிவிட்டார், இன்னொரு அதிர்ச்சியின் மூலமாக. "இன்னும் அண்ணனுக்குக்கூட சொல்லலை'' என்றார். அவருடைய அண்ணன் எங்கள் இருக்கைக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்தார். அதாவது நாங்கள் அவருடைய அண்ணன் தலைக்கு மேலே இருந்த கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு இதைப் பேசிக் கொண்டிருந்தோம். எதையும் ஏற்றுக் கொள்ளும்விதமாகச் சொல்லுவதில் வல்லவர். முற்போக்கான சிந்தனைகள் உள்ளவர்.
இத்தகைய லெளகீக சமாசாரங்களுக்கு அவர் அதற்கு மேல் முக்கியத்துவம் தராதவராக இருந்தார். ஒரே ஒரு பையன் உண்டு. எட்டு வயசு. ஒரு தடவை போன் செய்த போது, அவருடைய மனைவி போனை எடுத்தார். "பையனை தூக்கிக் கொண்டு கடைக்குப் போயிருக்கிறார்'' என்றார்.
"தூக்கிக் கொண்டா? வந்ததும் பேசச் சொல்லுங்கள்.''
போன் வந்தது. "பையனுக்கு இன்னைக்கு லீவா?'' என்றேன்.
"இதுக்குள்ள ஸ்கூலா? இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்''
"ஏற்கெனவே படித்துக் கொண்டுதானே இருக்கிறான்? இதுக்குள்ள ஸ்கூலா என்கிறீர்கள்?''
"இந்த மாதிரி விஷயங்கள்தான் மறந்து போகிறது... இவன் இன்னொரு பையன்... போன வருஷம் பிறந்தான்''
இப்படியாக அவர், வீடு மாறினாலோ, போனை மாற்றினாலோ, கார் வாங்கினாலோ, வேலை மாறினாலோ என்னிடம் அதைப்பற்றி ஒரு உடனடி பரிமாற்றமாகப் பகிர்ந்து கொண்டதே இல்லை. அவர் இருப்பது பெங்களூருவில். பார்ப்பதும் பேசுவதும்கூட அரிது.
இதையெல்லாம் புறந்தள்ளி கடந்த இருபத்தைந்தாண்டுகளாக முதல் வரிசை நண்பர் பட்டியலில் அவருக்கு நானும் எனக்கு அவரும் இருப்பது விந்தையாகத்தான் இருக்கும். இடுக்கண் களைவதில் உடுக்கை இழந்தவன் கைபோலத்தான் அவர் செயல்பட்டிருக்கிறார். மிக முக்கியமாக முடிவெடுக்க வேண்டிய ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ரசனையில் இருந்த ஒற்றுமை எங்களை இணைத்ததாக நினைக்கிறேன். குமுதத்துக்காக எழுதிய டைரக்டர் ஷங்கர் வாழ்க்கைத் தொடரான சங்கர் முதல் ஷங்கர் வரை நூலை அவருக்கு டெடிகேட் செய்திருந்தேன்.
இவரைப் போல
இருக்க முடியவில்லையே என்று
என்னை என்றென்றும் ஏங்க வைக்கும்
நண்பர். இரா. கோவர்தன்
அவர்களுக்கு...
என்று எழுதியிருந்தேன்.
"யார் இவர்'' என்று ஷங்கர் கேட்டார்.
என்னைவிட அவருக்குத்தான் அவர் நன்கு தெரிந்திருக்க வேண்டும். "நீங்கள் சென்ட்ரல் பாலிடெக்னிக்கில் படித்த அதே 80- 84 ஆண்டில்தான் அவரும் அங்கு படித்தார்'' என்றேன்.
"எப்படி இருப்பார் எனக்கு நினைவு வரவில்லையே'' என்றார். விளக்கிச் சொல்ல முனைந்தேன். அவருக்கு நினைவு வரவில்லை. "அதன் பிறகு நீங்கள் ஹால்டா டைப்ரைட்டிங் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்தீர்களே.. அங்கேதான் அவர் எலக்ரானிக் பிரிவு தலைவராக இருந்தார்'' என்றேன். "அடடா அப்படியா?'' என்றார். அப்போதும் அவருக்கு நினைவு வரவில்லை.
பாலிடெக்னிக்கில் படித்தது, ஹால்டாவில் வேலை பார்த்தது எல்லாவற்றையும் அவர் அந்தத் தொடரில் சொல்லியிருந்தார்.
கோவர்தனுக்கும் ஷங்கரை நினைவு வரவில்லை. இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஒரே கல்லூரியில் படித்ததையும் வேலை பார்த்ததையும் அவர்களுக்குக் கண்டுபிடித்துச் சொன்னேன். ஆனால் பலனில்லை இருவருக்குமே ஞாபகம் வரவில்லை. இப்போது ஒருமுறை சந்தித்துக் கொள்கிற விருப்பமும் இருவரிடத்திலும் இல்லை.
"பிராமின்கள் நல்லவர்கள் போலவும் நான் பிராமின்ஸ் பலரும் கெட்டவர்கள் போலவும் அவருடைய படத்தில் காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். அதை அவர் தெரிந்துதான் செய்கிறாரா'' என்று கேட்டார் கோவர்தன்.
ஆங்கிலத்தில் "இப்படியிருந்திருந்தால்களும் ஆனால்களும்..' (ifs and buts) என ஒரு பிரயோகம் உண்டு. யூகமாக சில யோசனைகளை முன் வைப்பதற்காக இதைச் சொல்லுவார்கள். ஷங்கரும் இவரும் கல்லூரி நாள்களிலேயே நண்பர்களாக ஆகியிருந்தால் ஷங்கர் இப்படி ஒரு கேள்விக்கு ஆளாகியிருக்க மாட்டார் என்று நிச்சயமாகத் தோன்றுகிறது.
ஆனால்?

திங்கள், ஆகஸ்ட் 17, 2009

என் நூல் வெளியீடு

திரைக்கு பின்னே என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகள் புத்தகமாக வெளியாகிறது. உயிர்மை வெளியீடு. வெளியீடு விழா அழைப்பு.

உயிர்மை பதிப்பகம் மதுரையில் ஆகஸ்ட் 30, 2009 ஞாயிறு காலை 9.30 மணிக்கு உயிரோசை இணைய இதழின் ஓராண்டு நிறைவு விழாவினையும் மாபெரும் புத்த்க வெளியீட்டு விழாவினையும் நடத்தவிருக்கிறது. தமிழின் முண்ணனி எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்த நிகழ்வில் வெளியிடப்படும் நூல்கள் அனைத்தும் கடந்த ஓராண்டில் உயிரோசையில் எழுதப்பட்ட தொடர்களின் தேர்ந்தெடுக்கபட்ட ஆக்கங்களின் நூல்வடிவமாகும். ஒரு இணைய இதழ் ஓராண்டின் நிறைவில் தான் வெளியிட்ட ஆக்கங்களிலிருந்து பத்து நூல்களை வெளியிடுவது இதுவரை இணைய தளவரலாற்றில் நிகழ்ந்திராத ஒரு சாதனை. முற்றிலும் மாறுபட்ட துறைகளையும் பார்வைகளையும் சார்ந்து இந்த நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இது உயிரோசையில் கடந்த ஓராண்டில் வெளிவந்த ஆக்கங்களில் சிறிய பகுதி மட்டுமே. தொடர்ந்து பல நூல்கள் இந்த வரிசையில் வெளிவர உள்ளன.
இத நிகழ்வில் உயிரோசையின் வாசகர்களை பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் மதுரை புத்தக கண்காட்சி வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 6 வரை மதுரையில் நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 30, 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் புத்தக கண்காட்சியில் உயிர்மை அரங்கில் மாலை வேலைகளில் சாருநிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன், எம்.யுவன், சுகுமாரன் உள்ளிட்ட எழுத்தாளர்களை சந்தித்து உரையாடலாம்.
புத்தக கண்காட்சி நடைபெறும் நாட்களில் உயிர்மை-உயிரோசை வாசகர்கள் எல்லா நாட்களிலும் என்னை மதுரையில் சந்திக்கலாம்.
எனது தொடர்பு எண்: 9444366704
நிகழ்ச்சி நிரல்
மதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா
உயிரோசை ஓராண்டு நிறைவு விழா

நாள்: 30.8.20009, ஞாயிறு காலை 9.30 மணி
இடம்: ஹோட்டல் சுப்ரீம்

110. மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,
மதுரை-625001
முதல் அமர்வு

நூல் வெளியீட்டு விழா

தலைமை: கே.வைத்தியநாதன்ஆசிரியர், தினமணி
1. கடலில் ஒரு துளி ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி
கருத்துரை: தமிழவன்
2. கிராமத்து தெருக்களின் வழியேஆசிரியர்: ந.முருகேசபாண்டியன்
கருத்துரை: சுந்தர் காளி
3. இடம்-காலம்-சொல்ஆசிரியர்: இந்திரஜித்
கருத்துரை: சமயவேல்
4. வேறு வேறு உலகங்கள்ஆசிரியர்:அ.ராமசாமி
கருத்துரை: சுரேஷ்குமார இந்திரஜித்
5. செல்லுலாயிட் சித்திரங்கள்ஆசிரியர்: தமிழ்மகன்
கருத்துரை: நடிகர் சண்முகராஜா
6. தெய்வங்கள் எழுகஆசிரியர்: வாஸந்தி
கருத்துரை: மனோஜ்
7. இன்னும் மிச்சமிருக்கும் இருள்ஆசிரியர்: மாயா
கருத்துரை: அ.ராமசாமி
8. தமிழுணர்வின் வரைபடம்ஆசிரியர்: தமிழவன்
கருத்துரை. ந.முருகேச பாண்டியன்
9. இன்றிரவு நிலவின் கீழ்நூறு நவீன ஹைக்கூ கவிஞர்கள்தமிழில்: ஆர். அபிலாஷ்
கருத்துரை: யுவன் சந்திர சேகர்
10. சினிமாவின் மூன்று முகங்கள்ஆசிரியர்: சுதேசமித்திரன்
கருத்துரை: சுகுமாரன்
இரண்டாம் அமர்வு
உயிரோசை ஓராண்டு நிறைவு விழா
இணைய எழுத்துக்கள் இன்றும் நாளையும்
உயிரோசையை முன் வைத்து



சிறப்புரைகள்
சாருநிவேதிதா
எஸ்.ராமகிருஷ்ணன்

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2009

சாருலதாவின் உலகம்!


நாம் யாரும் தனிமைச் சிறையில் அகப்பட்டுக் கிடக்கவில்லை. திசை மாறிச் சென்று ஏதோ தீவில் தரைதட்டி தனிமையில் வாழ நேரவில்லை. ஆனால் தனிமை வாட்டுவதாக வருந்தாத மனிதர்கள் உலகில் எத்தனை பேர்? சரியாகச் சொல்லப் போனால் இந்த 600 கோடி பேருமே ஏதாவது ஒரு தருணத்தில் தனிமையால் வாடியதாகப் புலம்பியிருக்கிறார்கள். தனிமை என்பது என்ன? உலகில் இருக்கும் 600 கோடி பேரில் நம்மைப் புரிந்து கொண்ட ஒருத்தரும் அமையாமல் தவிப்பதுதான். அப்படி இருக்கமுடியுமா என்று யோசிக்கலாம். ஆனால் அப்படி அமைந்துவிடும் நினைத்துப் பார்க்க முடியாத தருணங்களால் ஆனதுதாக இருக்கிறது வாழ்க்கை.

தேர்ந்த இணை என்பது உடலின் தனித்து இயங்கும் இன்னொரு பகுதியாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் இணையை வாழ்நாளெல்லாம் தேடித் தேடிச் சோர்ந்து போகிறார்கள். எல்லா அம்சங்களிலும் ஒத்துப் போகிற ஒரு இணை, ஒரு சகா, அந்த மறு பாதியை அடைய முடியாமலேயே போராடித் தோற்றுக் கொண்டிருப்பதாகப்படுகிறது. மனிதன் எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து காதல் காவியம் படைத்தபடி இருக்கிறான். அணையாத தீபமாக மனித இனத்தின் கடைசி கட்டம் வரை இந்த நெருப்பு சுடர்விட்டபடி இருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் முழுமையான அந்த இணை, காலம் தோறும் கண்ணா மூச்சி காட்டிக் கொண்டே இருக்கிறது. தனிமை கொடியது. அதுவும் இளம் பருவத்தில் தனிமையில் வாடுவது வற்றிய ஓடையில் இருந்தபடி மழைக்காக ஏங்கும் மீனின் நிலைமைக்குச் சமம்.

சென்ற நூற்றாண்டின் முதல் ஆண்டில் ரவீந்தரநாத் தாகூர் எழுதிய சிறிய நாவல் சிதைந்த கூடு.

இளம் மணப் பெண் சாருலதா. அவளுடைய கணவன் பூபதி பத்திரிகை நடத்துவதில் பித்து பிடித்தவனாக இருக்கிறான். யாராவது அவனுடைய எழுத்துகளைப் பாராட்டி அவன் தொடர்ந்து பத்திரிகையாளனாக இருக்கும்படியாகச் செய்து கொண்டே இருக்கிறார்கள். மனைவியின் தனிமையை அவன் உணர்ந்தானில்லை. யாரோ சுட்டிக் காட்டும்போதுதான் அதை அவன் நினைத்துப் பார்க்கிறான். உடனே தன் உறவினன் ஒருவனை அவனுடைய மனைவி சகிதம் தன் வீட்டில் வந்து தங்கியிருக்க ஏற்பாடு செய்கிறான். ஆனால் வந்து தங்கும் உமாபதியும் அவன் மனைவி மந்தாகினியும் பவுதீக ஆதாரமாக இருக்கிறார்களே தவிர மனோரீதியான பரிவாக தோன்றவில்லை.

காலப் போக்கில் உமாபதி பத்திரிகை சந்தா போன்ற விஷயங்களில் ஊழல் செய்து பூபதிக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துபவனாக இருக்கிறான். மந்தாகினி சாருலதாவுக்கு ஏற்படுத்தும் மனோரீதியான நஷ்டம்தான் கதையின் உயிர்.

பூபதிக்கு அமல் என்ற தம்பி இருக்கிறான். சாருலதாவும் அமலும் போட்டி போட்டுக் கொண்டு கட்டுரைகள் எழுதுகிறார்கள். அதை ஒருவரிடம் ஒருவர் பகிர்ந்து கொள்ளும் வெட்கம் ததும்பும் தருணங்கள் சுவையானவை. வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் தோட்டத்தில் அமர்ந்து அந்தத் தோட்டத்தை எப்படி புதிதாக வடிவமைக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். எங்கே குளம் வெட்ட வேண்டும்.. எங்கே படகு நிறுத்த வேண்டும். எங்கே என்னென்ன மரங்கள் நட வேண்டும் என்றெல்லாம் திட்டமிடுகிறார்கள். சிறிய சப்போட்டா மரத்தின் நிழலில் அமர்ந்து அவர்கள் உலவும் கற்பனை உலகம் அவர்களுக்கு மட்டுமே ஆனது.

ஆனால் மந்தாகினி வந்த பின்பு இருவர் மட்டுமே இருந்த அந்த உலகில் மூன்றாவது நபரின் இடையூறு ஏற்படுகிறது. அமல், மந்தாகினியிடமும் பேசுகிறான். அது சாருலதாவுக்குப் பிடிக்கவே இல்லை. பொஸஸிவ்னஸ் அவர்களுக்குள் மெல்லிய இடைவெளியை ஏற்படுத்துகிறது. அதனால் ஏற்படும் வரிசல் அவளை விபரீத கற்பனைகளுக்கு இட்டுச் செல்கிறது. மந்தாகினியும் அமலும் தவறாகப் பழகுகிறார்களோ என்றும் எண்ணுகிறாள். அளவுக்கு மீறிய அன்பின் குரூரம் அது. அவளுடைய மன உலகம் அமலனிடமிருந்து மெல்ல நழுவுகிறது. அண்ணன், தன்னையும் சாருலதாவையும் சேர்த்துச் சந்தேகிப்போரோ என்று வருந்துகிறான் அமலன். அண்ணனை எதிர் கொள்ள முடியாமல் குற்ற உணர்வுடன் தயங்கி விலகுகிறான். பூபதி, சாருலதா, அமலன், மந்தாகினி என்ற நால்வரும் ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமலேயே நான்குவிதமான கருத்துகள் உருவாகி நால்வரையும் அலைக்கழிக்கிறது.

அதிகம் பாதிக்கப்படுவது சாருலதா. அவளுக்குக் கணவன், மந்தாகினி, அமல் எல்லோர் மீது ம் வெறுப்பு கவ்வுகிறது. உமாபதியின் ஊழல் காரணமாக அவனும் மந்தாகினியும் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார்கள். அமல் கல்யாணம் நிச்சயமாகி, இங்கிலாந்துக்குப் படிக்கப் போய்விடுகிறான். பத்திரிகை தொழில் நசிந்த நிலையில் பூபதி மைசூரில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியனாகக் கிளம்புகிறான்.

நாவலின் கடைசி காட்சி..

மைசூருக்கு நீ வேண்டாம் அங்கு உனக்கு தனிமையாக இருக்கும் என்கிறான் பூபதி. சாருலதா எங்கே இருந்தால் தனிமை என்று வாசகர்களே குழம்பும் விசித்திர கட்டம்.

நானும் வருகிறேன் என்கிறாள் சாருலதா. ஏற்கெனவே தனிமைகள் தந்த வடு அப்படிச் சொல்ல வைக்கிறது.

கொஞ்சம் யோசித்து பூபதி சரி நீயும் வா என்கிறான்.

அவளுக்குத் தனிமையை எங்கு அனுபவித்தால் என்ன என்ற கண நேர யோசனை.

நான் இங்கேயே இருந்துவிடுகிறேன் என்கிறாள்.

கதை முடிந்துவிடுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தாகூர் இந்த நாவலை எழுதியிருக்கிறார். சாருலதாவின் தனிமையும் மனப் போராட்டங்களும் மைத்துனனான இனிமையான கனவு நாள்களும் மிக எளிமையாக விவரித்திருக்கிறார். எழுத்தாளர் திலகவதி ஐ.பி.எஸ்.ஸின் மொழியாக்கம் இருபதாம் நூற்றாண்டின் செல்வந்தர் குடும்பத்துப் பெண்ணின் சூழலை வடித்துக் காட்டுவதாக இருக்கிறது.

சத்யஜித் ரே இக் கதையில் சில மாற்றங்களுடன் சாருலதா என்ற பெயரில் படமாக எடுத்தார். இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதி இந்தியப் பெண்களின் புரிந்து கொள்ளப்படாத பக்கங்களை இந்த நாவல் படம் பிடித்தது. அதை ரே திரைப்படமாக அலங்கரித்தார்.

சிதைந்த கூடு
ரவீந்திரநாத் தாகூர்
தமிழில் : திலகவதி
விலை 60

அம்ருதா பதிப்பகம்,
5, ஐந்தாவது தெரு,
எஸ்.எஸ்.அவின்யூ,
சக்தி நகர், போரூர்,
சென்னை
போன்- 2252 2277

வியாழன், ஆகஸ்ட் 13, 2009

அண்டை நாட்டில்... அடிக்கிறார்கள்

அமெரிக்காவில் இந்தியர்கள் சிலரைத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியது நினைவிருக்கலாம். இந்திய அரசாங்கம் உடனடியாக கண்டனம் தெரிவித்தது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களை அடித்த அடியில் இந்திய அரசு, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அனுப்பி விசாரித்திருக்கிறது. வளைகுடா நாடுகளில் கொத்தடிமையாக இந்தியர்கள் பலர் நடத்தப்படுவதாக செய்திகள் வருகின்றன. மீட்புக்குழு அனுப்பி வைக்கப்படுகிறது.

"இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருப்பது இதிலிருந்து வேறுபட்டது. ஏனென்றால் அவர்கள் இந்தியர்கள் இல்லை, இது அண்டை நாட்டில் வசிக்கும் இரண்டு இனத்தவரின் பிரச்சினை' என்று சுலபமாகக் கை கழுவிவிட முடிகிறது. அவர்கள் அண்டை நாட்டவர்கள் என்பது முதல் இந்திய பிரதமர் நேருவுக்கும் அதன் பின்னர் வந்த இந்திரா காந்திக்கும் தெரியாமல் போய்விட்டது . அவர்கள் இதைப் புரிந்து கொள்ளாமல் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தினம் நூறு மார்வாடியையோ, தினம் நூறு பஞ்சாபியரையோ வெளிநாட்டில் கொன்று கொண்டிருந்தால் இந்தியா இப்படி வெளிநாட்டுப் பிரச்சினை என்று இருந்துவிடக் கூடாது என்பதுதான் தமிழர்களின் கோரிக்கையாகவும் வருத்தமாகவும் இருக்கும்.

ஏனென்றால் ஒருமைப்பாடு குறித்து தமிழர்களுக்கு இயல்பாகவே நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. "யாவரும் கேளிர்' பாடிய காலத்திலிருந்தே இதற்கு உதாரணங்கள் சொல்ல முடியும். இப்போதும் திருவள்ளுவருக்கு சிலை வைக்க பெங்களூருவில் எதிர்ப்பு.18 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு பலத்த பாதுகாப்போடு சிலை திறக்கப்பட்டிருக்கிறது. இங்கே சர்வக்ஞர் சிலை மகிழ்ச்சியாக திறக்கப்பட இருக்கிறது.

ஆக, இப்போது சொல்ல வருகிற விஷயம் அண்டை நாட்டினர் பற்றியல்ல, இந்தியர்களைப் பற்றியதுதான். அதாவது வெளிநாட்டில் இந்தியர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது பற்றி.

பிரான்ஸில் நாகரத்தினம் கிருஷ்ணா சென்னை வந்திருந்தார். அமுதசுரபி மாத இதழின் சார்பில் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு.

ஏன் பல நாடுகளிலும் வேலை பார்க்கப் போயிருக்கும் இந்தியர்களை வெளிநாட்டினர் உருட்டுக் கட்டையால் அடிக்கிறார்கள் என்று அவருடைய ஒரு பதிலில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

இந்தியர்கள் பொதுவாக சகிப்புத் தன்மை மிக்கவர்களாக இருக்கிறார்கள். பொறுமையாக இருக்கிறார்கள். நன்றாக உழைக்கிறார்கள்.. அதுதான் வெளிநாட்டினரின் ஆத்திரத்துக்குக் காரணம்.

முதலாவது இங்கிருந்து செல்கிறவர்கள் உழைத்துச் சம்பாத்து ஊருக்குள் செல்வச் செழிப்போடு வாழ ஆசைப்படுகிறார்கள். அதனால், கிடைத்த வெளிநாட்டு வேலையைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். எட்டு மணி நேரத்தைக் கடந்து.. சிலர் 12 மணி நேரம்கூட வஞ்சனை இல்லாமல் வேலை செய்கிறார்கள்.

இரண்டாவது, விடுமுறை நாள்களில் வரச் சொன்னாலும் வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சுற்றுலா மாதங்கள். பலர் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் அல்லது உலகம் சுற்றுகிறார்கள். நம்மவர்களில் பலர் அவர்களின் சுற்றுலா மாதங்களில் பணியாற்றுவதால் நிறைய சம்பளம் ஈட்ட முடிகிற மகிழ்ச்சி. விடுப்பு எடுப்பதில்லை.

எனது பள்ளி நாள்களில் பட்டை அடித்து, தலை மொழுகி வாரி, சுத்தமான கையெழுத்தில் வீட்டுப் பாடங்கள் முடித்து, நல்ல மதிப்பெண்ணும் வாங்கிவிடும் மாணவர்கள் சிலர் இருப்பார்கள். இது போதாதென்று விடுமுறை நாளில் வாத்தியார் வீட்டுக்கும் போய் அவருக்கு உறுதுணையாக இருப்பார்கள். வகுப்பில் சுமாரான பையன்களின் எண்ணிக்கைதான் எப்போதும் பெரும்பான்மையாக இருக்கும். அவர்களுக்கு வாத்தியார் அடித்தால் அவர் மீது ஏற்படும் கோபத்தைவிட அந்தப் பட்டை போட்ட பையன் மீது கோபம் அதிகமாக இருக்கும். அவன்தான் நம்மை மாட்டிவிடுகிறவன் என்கிற சந்தேகமும் சேர்ந்து கொண்டால் ஆத்திரம் வலுக்கும். சென்னையில் ""டேய் டாபர் மாமா'' என்பார்கள்.

அதுதான் நடக்கிறது இப்போது வெளிநாடுகளில். உண்மையில் நாம் உழைக்கிறோம். அளவுக்கு அதிகமாக சிரத்தையுடன் இருக்கிறோம். அதுவே குற்றமாகிவிடுகிறது.

புதன், ஆகஸ்ட் 05, 2009

தமிழ்மகன்: மீன்மலர் வாசகனுடனான உரையாடல்

தமிழ்மகன்: மீன்மலர் வாசகனுடனான உரையாடல்

மீன்மலர் வாசகனுடனான உரையாடல்

ஐ.சிவகுமார்

வெகுசன இலக்கியங்களின் நுகர்வுப் பரப்பிலிருந்து தீவிரத் தன்மையுடைய இலக்கியங்களை நோக்கி நகரும் வாசகருக்கான படைப்புகள் தான் தமிழ்மகனுடையது. இவரது படைப்புகள் வாசகருக்கானதாக மட்டுமல்லாமல் தொடர்ச்சியான தேடலுடைய வாசக மனநிலையில் இருந்தும் எழுதப்பட்டுள்ளன என்பதை அவதானிக்க முடிகிறது. அதாவது வாசகர்களை ‘மந்தைகளாகக்’ கருதி ஏதோ ஒன்றை எழுதிக் குவிப்பதாகவோ அல்லது தானே ‘தூய படைப்பாளி’ எனும் வீம்புடனும் எழுதுவதாகவோ இவரது படைப்புகள் இல்லை. வாசகனோடு வாசகனாக உரையாடி நகர்கின்றன. இவரது கதைகள், சமீபத்தில் இவரது சிறுகதைகளை ‘மீன்மலர்’ எனும் தொகுப்பாக உயிர்மை வெளியிட்டுள்ளது.

தமிழ்மகனது கதைகளை வசதி கருதி சிக்கல் நிறைந்த சமூக யதார்த்தங்கள், கலைஞனின் மன உளைச்சல்கள், எதிர்கால உலகம் குறித்த அவதானிப்புகள் எனப் பொருண்மை அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தலாம். ஆனாலும் இவ்வாறான வகைப்படுத்தல்களை மிகச் சாதாரணமான தமிழ் மகனுடைய கதைகள் உடைத்தெறிந்து விடுகின்றன.

இத்தொகுப்பின் கடைசி கதையாக உள்ள ‘மொத்தத்தில் சுமாரான வாரம்’ எனும் கதையே மிக எளிமையாக, ஆகச் சிறந்த புனைவுகளை இவரால் உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாகிறது. ஒரே குடியிருப்பில் ஒண்டிக் குடித்தனங்கள் நடத்தும் மக்களின் பிரச்சினைகளையும், செயல்பாடுகளையும் பதிவு செய்துள்ளது. பின் நவீனத்துவம் அறிவுறுத்தும் பன்முகத்தன்மை குறித்தான கோட்பாடு ரீதியான அக்கறைகளைப் புறந்தள்ளி சமூகத்தின் யதார்த்தத்தை பதிவு செய்ததே இக்கதையின் வெற்றிக்குக் காரணம்.

சமூக யதார்த்தத்தை மட்டுமல்லாமல் மாய யதார்த்தத்தையும் ‘வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி’ கதையில் நம்பகத்தன்மை குறையாமல் கையாண்டிருக்கிறார். மனித மொழியைக் கையாளும் திறமை பெற்ற சிங்கக் கூட்டமொன்றிடம் விலங்கியல் ஆராய்ச்சியாளனான ஆல்பட் தவறுதலாக வந்து சேர்கிறான். அடிப்பட்டவனைக் காப்பாற்றி அவனுக்கு உணவும் கொடுத்து உரையாடுகின்றது சிங்கம். இருவருக்குமான உரையாடலில் சுயநலம் சார்ந்த மனிதனின் உள்மன வக்கிரங்களை மிக நேர்த்தியாக தமிழ்மகன் தோலுரித்துக் காட்டுகிறார். இவரது பெரும்பாலான கதைகள் ஆசிரியர் குறுக்கீடின்றி பாத்திரங்களின் உரையாடல்களினூடாகவே நகர்வது சிறப்பாகக் குறிப்பிட வேண்டியது. சிங்கங்களுக்கான மனித சமூகத்திடம் குரல் கொடுப்பேன் எனக் கூறும் ஆல்பட்டிடம் ‘பேசத் தெரிந்த எங்களைக் கூண்டிலடைத்து கொண்டுச் சென்று டி.வி, காமிரா முன் பேசச் செய்து கொடுமைப்படுத்துவார்கள்’ என சிங்கம் கூறும் வார்த்தையில் மனிதனின் உள்மன வக்கிரங்கள் மட்டுமின்றி ஊடகங்களின் ‘போலிச் சமூக அக்கறையும்’ தோலுரிக்கப்படுகிறது.

‘எதிர்மென் அரக்கன்’ கதையில் எதிர்காலத்தில் வாழும் ஆய்வாளன் ஜெயகாந்தனும் ஜெயமோகனும் இணைந்து எழுதிய கதையைத் தேட முயல்வதும் அதன் தாக்கமும் புனைவு முடிச்சும் படித்துப் பார்த்தால்தான் அனுபவிக்கக் கூடியன.

தமிழ்மகனது கதைகளை வைத்துக்கொண்டு இவர் இந்தக் கோட்பாட்டிற்கு சொந்தமானவர் என்று உரிமைக் கொண்டாடவோ பழிபோடவோ முடியாது. ஏனெனில் அவர் எல்லா அதிகாரங்களையும் நம்பப்படுகின்ற எல்லாவற்றையும் புனைவு முடிச்சின் வழியே உருப்பெறும் தர்க்கங்களால் சிதைக்கிறார். அதனால் தான் இவரால் சங்கராச்சாரியை மட்டுமல்ல, பெரியாரையும் சந்தேகப்பட முடிகிறது. தமிழ்மகன் ‘கடவுள் தொகை’ கதாபாத்திரம் போன்றே எவ்விதமான முன் முடிவுகளோ தீர்மானங்களோ அற்றவர். அதேசமயம் உலக நாடுகளின் நிம்மதியைக் குலைத்து தனது மேலாண்மையை செலுத்தும் அமெரிக்காவையும், கல்வியை இலாபம் கொழுக்கும் வணிகப் பண்டமாக மாற்றுபவர்களையும் எதிர்க்கும் தன்மையோடே இவரது கதைகள் உள்ளன.

தமிழ்மகன் ஆண் மையம் சார்ந்த தனது புனைவு வகைக் கொண்டு செல்வதை சுட்டிக் காட்டுவது அவசியம். ஏனெனில் இவரது கதைகளில் தனித்த ஆளுமை கொண்ட பெண் பாத்திரம் ஏதுமில்லை. பெண் சிங்கம் கூட கணவனின் கட்டளைக்கிணங்கி கறி சமைத்துக் கொண்டு வருவதாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆண் வாசகரால் நவீனத் தன்மையுடையவராக அடையாளம் காணப்படும் தமிழ்மகன் பெண் வாசகரால் பழமைவாதியான சுட்டப்பட வாய்ப்பிருக்கிறது. மொத்தத்தில் தமிழ்மகனின் சிறுகதைகள் வாசகனை வாசிப்பின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

மீன்மலர், தமிழ்மகன், வெளியீடு: உயிர்மை, சென்னை18
பக். 158, ரூ. 85

புத்தகம் பேசுது மார்ச் 2009



செவ்வாய், ஆகஸ்ட் 04, 2009

மண்ணுளிப் பாம்புகள்!




எங்களூரில் இருந்து சென்னை திரும்புவதற்காக பஸ்ஸýக்குக் காத்திருந்தேன். யூனியன் ஆபிஸ் பக்கம் போடப் பட்டிருந்த கடப்பா கல் திண்டில் இருவர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். முதல் பார்வையில் அவர்களை இரண்டாம் தடவை பார்க்க வேண்டியிருக்காது என்றுதான் தோன்றியது. ஆனால் என்னுடைய கணிப்பை ஒருவினாடியில் அடித்து நொறுக்கிவிட்டனர். காரணம், அவர்கள் பேச்சு.

"என்னால 80 லட்சம் ரூபா வரைக்கும் வாங்கித் தர முடியும்.. அதுக்கு மேல வம்பு பண்ணாதே'' என்று அ தில் ஒருவர் சொன்னார். என்னதான் இருந்தாலும், தூசி பறக்கும் ஒரு எதிர் வெயிலில் லுங்கியும் கட் பனியனும் போட்டுக் கொண்டு ஒருவர் அந்த வார்த்தையைப் பிரயோகிப்பது அதீதமாகப் பட்டது.

மற்றவர் பிடிவாதமாக ஒரு கோடி ரூபாய்க்குக் குறையாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.




எனக்கு ஆர்வம் தாளவில்லை. நான் ஒட்டுக் கேட்பதனால் அவர்கள் மேற் கொண்டு பேசாமல் நிறுத்திவிடுவார்களா என்ற தயக்கத்தில் அவர்கள் விஷயத்தில் அக்கறை அற்றவனாக நடித்துக் கொண்டிருந்தேன்.

அவர்கள் சர்வ சாதாரணமாக கோடிகளில் புரண்டு கொண்டிருந்தார்கள். அதிர்ச்சியின் பாதரச மட்டம் உயர்ந்து கொண்டே இருந்தது.

"இந்தா இந்த ஐநூரை வெச்சுக்கோ... நைட்டு நெப்போலியன் அடிச்சுட்டு வண்ணாந்தொறை, ஏரிக்கரை பக்கம் ஒரு ரவுண்டு வா'.. கிடைச்சா ஒரே அமுக்கு. நம்ம மல்லையன் ஒண்ணு புடிச்சுட்டானாமே நிஜமா?'

"அட அது தத்துனூன்டு.. 300 கிராம்கூட இல்ல..''

"மூணு கிலோ இருந்தாத்தான் அந்த விலை..'' அதாவது எண்பது லட்சத்தைச் சொல்கிறார்.




இப்போது என்னால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. அவர்கள் பேசிக் கொண்டிருப்பது மண்ணுளிப் பாம்பு வியாபாரம் பற்றி. அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் புரியாத சில விஷயங்களையும் இப்போது சேர்த்துவைத்துத் தைத்து விஷயத்தைச் சீராக்கிக் கொண்டேன்.


அவர்களின் வியாபார தலைமையகம் எங்கிருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது. பொதுவாக அவர்கள் வெளிநாட்டில் மண்ணுளிப் பாம்பை வாங்குகிறார்கள் என்றும் மருந்து தயாரிக்கிறார்கள் என்றும் சொல்லிக் கொண்டார்கள்.

இயல்பான ஆர்வத்தோடு அவர்களிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

அவர்கள் இருவருமே இதுவரை எந்த பாம்பையும் வியாபாரம் செய்யவில்லை. அண்ணா நகரில் ஏதோ ஒரு இடத்தில் மண்ணுளிப் பாம்பை வாங்கிக் கொள்ளும் ஒருவர் இருப்பதாகவும் அவர்தான் அதை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். என்ன மருந்து என்று தெரிந்திருக்கவில்லை. "கை தடிமன் இருந்தாத்தான் வாங்கிக்குவாங்களாம்'' என்று அவருடைய கையைக் காட்டினார். ஊரில் சிலர் மண்ணுளிப் பாம்பைப் பிடித்து அது மூன்று கிலோவுக்கு மேல் பெருகுவதற்காகத் தீனி போட்டு வளர்த்து வருவதாகச் சொன்னார்.

ஒரு பாம்பின் விலை ஒரு கோடிக்குப் போகிறதென்றால் அந்தப் பாம்பைக் கொண்டு சென்றவன் அதை வைத்து ஒரு கோடியே ஒரு லட்சமாவது சம்பாதிக்க வேண்டியிருக்கும். அது சாத்தியமா என்று கேட்டேன். அப்படி ஒரு மருந்து தயாரிக்க முடிந்தால் இந்திய அரசாங்கமே தயாரிக்குமே? மண்ணுளிப் பாம்பை இனவிருத்தி செய்வதைவிட்டுவிட்டு அதைக் கொன்று குவிக்க வேண்டியதில்லையே என்பதாக சில கேள்விகளைக் கேட்டேன்.

என்னுடைய அசுவாரஸ்யப்படுத்தும் பேச்சு அவர்களுக்குப் பிடிக்கவில்லை. "நாங்க சும்மா பேசிக்குனு இருந்தோம் சார்'' என்று போய்விட்டனர்.

சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளெல்லாம் உழைத்தாலும் சம்பாதிக்க முடியாத ஒரு தொகையை ஒரு மண்ணுளி பாம்பின் மூலம் அடைய முடியும் என்பது எப்பேர் பட்ட பேராசை? எத்தனை பேர் இதை நம்பி இரவும் பகலும் பாம்பைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். வதந்திக்கு மட்டும் எப்படி இப்படியொரு வலிமை? எத்தனைபேரின் நம்பிக்கை விரயமாகிறது.. எவ்வளவு பேராசை?

அந்தப் புரளியில் இருந்த பிரம்மாண்டம் ஒரு காரணம். சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் பிரம்மாண்டம். அங்குதான் இருக்கிறது சூட்சுமம்.

இந்தமாதிரி கற்பிதங்களை உருவாக்குகிறவன் அயோக்கியனென்றும் அதை நம்புகிறவன் முட்டாளென்றும் வெளிப்படையாகவே தெரிந்தது.

ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2009

கட்டில் தோழன்


முட்டையிட்ட பதினெட்டாவது நாள் புறா குஞ்சு பொறிக்கும். அவ்வளவு நீண்ட ஆயுள் எனக்கு இல்லை. நான் இறப்பதற்குள் அந்தப் புறா குஞ்சு பொறித்துவிடுமா? அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நான் வந்து சேர்ந்து இரண்டாவது முறையாக அது முட்டை இட்டு, வீணடித்துவிட்டது. கால் இடறி முட்டைகள் அனைத்தும் கீழே விழுந்து நொறுங்கிவிட்டன.
இந்த ஆஸ்பித்திரியில் சேர்க்கப்பட்ட யாரும் உயிர் பிழைத்துப் போனதாக சரித்திரமே இல்லை. எந்த ஆஸ்பித்திரியில் சேர்ந்தாலும் சாகாமல் தப்பித்து இருக்க முடியுமா என்ன? ஆனாலும் இந்த ஆஸ்பித்திரிக்கு ஒரு பிரத்யேக லட்சணம் உண்டு. அதைச் சொல்கிறேன். எல்லோரும் மரணமடைவதற்காகவே இங்கு வந்து சேருவதாகப் பட்டது. இத்தனைக்கும் பெரிய சிபாரிசு இருந்தால்தான் அங்கு சேர முடிந்தது. ஐஐடியில் படிக்க இடம் கிடைத்த மாதிரிதான் எனக்கு இங்கு இடம் கிடைத்தது. மனிதர்களுக்கு இருக்கும் உயிராசைதான் இந்த ஆஸ்பித்திரி நடப்பதற்கான ஆதாரம். ஒருநிமிடமாவது ஆயுளை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற கடைசி சொட்டு ஆசை இருக்கிறவரை இதற்கு பூர்ண ஆயுசுதான்.
சொத். இருந்த இன்னொரு முட்டையையும் உருட்டி உடைத்துவிட்டது அந்தப் புறா. அந்த இடம் புறாக்கள் முட்டையிடுவதற்காக உருவாக்கப்பட்டதல்ல, மழை நீர் வடிந்து செல்வதற்காக துத்தநாகத் தகட்டால் அடிக்கப்பட்ட "ப' வடிவ கால்வாய். மேலே இன்னொரு மாடி கட்டிவிட்டதால் இதன் வழியாக மழைநீர் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. நிர்வாகமும் அதைக் கழற்றுவதற்கான செலவைவிட அதை அப்படியே விட்டுவிடுவது லாபம் என்று நினைத்திருக்கலாம்.


புறாக்கள் ஓயாமல் சிறகுகளை கோதிவிட்டபடி இருந்தன. அந்தப்புரத்து ராணிகள் தலைகோதியபடியே இருப்பது போன்ற ஞாபகத்தை ஏற்படுத்தின. அது சப்ஜா வகைப் புறா. இந்தியாவில் அதற்கு அப்படித்தான் பெயர். இறக்கைப் பகுதியில் இரண்டு கோடுகள் இருக்கும். அவசரத்தில் ஒரு விரலின் விபூதி சரியாகப் பூசப்படாத சைவ நெற்றி போல.
நேற்று மூட்டையாகக் கட்டித் தூக்கிச் செல்லப்பட்டவரின் படுக்கையில் இன்று வேறு ஒரு ஆசாமியைக் கொண்டுவந்து கிடத்தினார்கள். உயரமானவர். திடகாத்திரமாகவும் சிவப்பாகவும் இருந்திருப்பார் என்று தோன்றியது. ஒரு யூகம்தான். இங்கு வருகிறவர்கள் ஒட்டி உலர்ந்து போய் மொட்டை அடிக்கப்பட்டு போன மாதம் பார்த்தவருக்கே அடையாளம் தெரியாமல் போய்விடுவதுண்டு. நிறைய பேரை அப்படிப் பார்த்த அனுபவத்தில் இங்கு வந்து சேருகிறவர்களின் கடந்த மாத உருவத்தை உருவகிக்கும் திறன் எனக்கு அதிகமாகிவிட்டது.
இப்போது வந்தவர் பெரிய நிறுவனத்தில் பெரிய அதிகாரியாக இருந்தவர் என்றார்கள். எப்பேர்பட்ட சிம்மமாசனத்தில் இருந்தாலும் நோய்படுக்கை ஒன்றுதான். அடடா எப்படியெல்லாம் சிந்திக்கிறேன். இருந்தாலும் அவர் சிட்டிகை போட்டால் எல்லோரும் அவர் எதிரில் குனிந்து ஏவல் செய்ய காத்திருந்தனர்.
"ஏன் ஜெனரல் வார்ட்ல போட்டிருக்கீங்க?'' என்று அவர் கேட்டபோது, வேறு அறை எதுவும் காலியாக இல்லை என்பதைச் சொல்ல பதறினர். உடன் வந்திருந்த நான்கு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
நான் "வேறு அறை எதுவும் காலி இருந்திருந்தால் சேர்த்திருப்பார்களே?'' என்றேன்.
அவரைப் போலவே ஒடுங்கிப் போய் படுத்திருந்த இன்னொரு மொட்டைத் தலையனான என்னைப் பார்த்து அவருக்குக் கோபப்படுவதா? சிரிப்பதா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்க வேண்டும். என்னைப் போல் சிரிப்பதற்கு அவருக்கு தைரியம் பத்தாது. அவர் கோபம்தான் பட்டார். அதையும் பார்வையால் மட்டும்தான் படமுடிந்தது.
"எந்த ஊர்?'' என்றார் கம்பீரமாக கேட்கும் தொனியில். ஏற்கெனவே பழகியவர்களாக இருந்தால் மேற்படி வாக்கியத்தின் இறுதியில் இருக்கும் "கேட்கும் தொனியில்' என்ற வார்த்தைகள் தேவைப்பட்டிருக்காது.
"சென்னைதான்'' என்றேன்.
அதை அவர் அலட்சியமாக ஏற்றார். தென் தமிழகத்தில் இருந்து வருகிற பலர் அப்படித்தான். சென்னைவாசிகள் அடாவடியாக ஆட்டோ கட்டணம் வசூலிப்பவர்கள் என்று எண்ணுகிறார்கள்.
என் பக்கத்துக் கட்டிலில் புதிதாகச் சேர்ந்தவரைப் பார்க்கப் புதிதாக ஒரு தம்பதி வந்திருந்தது. அவர்கள் பொருத்தமான ஜோடியாகத் தோன்றவில்லை. இந்த நேரத்தில் எனக்கு இப்படியொரு ஆராய்ச்சி தேவையா? என்னால் ஒருவிஷயத்திலேயே தொடர்ச்சியாகச் சிந்தனையைச் செலுத்த முடியவில்லை. மரண நிமிடங்கள் என்னை அப்படி அவசரப்படுத்துகிறதோ என்னவோ? இருக்கப் போகிற நாள்களில் நல்ல விஷயங்களாக நினைப்போம் என்று முடிவெடுத்தேன். நல்ல விஷயங்களைப் பட்டியலிட முயற்சி செய்தேன்.
எனக்கு வயிற்றில் புற்று இருப்பதாக முடிவானது. வயிறு வீக்கம் கணிசமாக இருந்தது. கதிர்வீச்சு தெரபி சிகிச்சைகள் முடிந்து இப்போது ஈமோதெரபியில் வந்து நிற்கிறது. கட்டிலில் படுத்துக் கொண்டு உலகத்தை வெறித்துக் கொண்டிருப்பதற்கு எதற்காக இவ்வளவு வைத்தியம், எதற்காக இத்தனை செலவு? வயிற்றுக்குள் ரப்பரை வைத்துத் திணித்தது போல இருக்கிறது. தேவையில்லாத எதையோ திணித்து வைத்திருப்பதுபோல இருக்கிறது வயிற்றுக்குள். சுமப்பது தலைவலியாக இருந்தது. கையைவிட்டு வயிற்றுக்குள் பிசைய முடிந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. ச்சே... நல்ல விஷயமாக நினைக்க வேண்டும்.
புறா முட்டையிட்டுக் குஞ்சு பொறிப்பதைப் பார்க்க வேண்டும் என்பது குறைந்தபட்ச ஆசையா? பேராசையா? அதுகூட வேண்டாம்.
பக்கத்துப் படுக்கையில் இருப்பவரைச் சிரிக்க வைப்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளலாம். முடியும் என்று தெரியவில்லை. அவருக்கு எரிச்சல் கொண்ட முகம். நன்றாக இருந்த நாளிலேயே சிரித்தவராகத் தெரியவில்லை.
அல்லது புதிதாக வேலைக்கு வந்திருக்கும் இளம் மருத்துவர் செங்கோட்டையைச் சேர்ந்தவராக இருப்பார் என்று யூகித்ததை உறுதிப்படுத்த முடிந்தால்கூட நல்ல விஷயமாகத்தான் இருக்கும்.
இப்படியொரு படுக்கையில் இருந்து கொண்டு வேறு நல்ல சிந்தனை கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. நல்ல உடம்புக்குள்தான் நல்ல சிந்தனை இருக்கும். நல்ல சிந்தனை என்றால் என்ன என்ற குழப்பம் தொற்றியது. யாருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது நல்ல சிந்தனைதான். பின்லேடன், மகாத்மா காந்தி எல்லோரும் நீடூழி வாழ்க. யாருக்கும் தீங்கு இல்லாமல் சிந்திப்பது எப்படி உடலும் உயிரும் பற்றி சிந்திக்கலாம் என்று ஆசையாக இருந்தது. நமக்கு ஏற்பட்டிருக்கிற இந்த உபாதையெல்லாம் உடலுக்குத்தான். உயிரை இந்த வலிகள் எதுவும் செய்வதில்லை. பால் பாயிண்ட் பேனா ரீபிள் போல. மேலே உள்ள கூடு உடைந்திருந்தாலும் நசுங்கியிருந்தாலும் ரிபீள் நன்றாக இருந்தால் எழுதும். உபயோகப்படுத்த முடியாமல் போனால் இந்த ரீபிளை வேறு பேனா கூட்டுக்கு மாற்றிக் கொள்ளலாம்.... அட.. இப்படியொரு உதாரணத்தை யாராவது சொல்லியிருப்பார்களா?
ஆனால் இது உயிர், உடலுக்குச் சிறந்த உதாரணமாகத் தெரியவில்லை. ரீபிள் தீர்ந்து போனால் வேறு ரீபிள் போடுவது மாதிரி இந்த உடம்புக்குப் புது உயிர் போட முடியுமா என்ன? எதையுமே சிந்திக்க வேண்டாம் என நினைத்தேன். மண்டைக்குள் ஒரு வெற்றிடம் இருப்பதாக நினைப்பது சந்தோஷமாக இருந்தது. யார் அடுத்துப் பிரதமரானால் நாட்டுக்கு நல்லது என வேறுபக்கம் திரும்பியது. நல்லது, நல்லவர் என்பதெல்லாம் என்ன என்ற குழப்பம் தொற்றி அசதி ஏற்பட்டது.




"ஹாட் வாட்டர்'' என்றார் பக்கத்துக் கட்டில் பெரியவர். ஆனால் அவருடன் வந்தவர்களோ, அவரைப் பார்க்க வந்த தம்பதியோ பக்கத்தில் இல்லை. என் ப்ளாஸ்க்கில் இருந்து கொஞ்சம் சுடுதண்ணீரை டம்ளரில் ஊற்றிக் கொடுத்தேன். அவருடைய தலையைச் சற்றே உயர்த்தி பருகச் செய்தேன். அவர் என்னை நல்லவன் என்று நினைத்திருக்கலாம். இந்தச் செயலுக்குப் பெயர் நற்செயல் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா? நல்லவன் என்று அவர் நம்மை நினைக்காமல் போயிருக்கக் கூடுமெனில் "யார் இவன்' என்று நினைத்திருக்கலாம். நல்லவன் என்பதும் யார் இவன் என்பதும் ஒன்றுதான்.
"உனக்கு எவ்வளவு நாளாக இருக்கிறது?'' என்றார்.
"ஒரு வருஷமாக'' என்றேன்.
"எனக்கு ரெண்டு வருஷம் ஓடிவிட்டது. ப்ராஸ்டேட்டில் கேன்ஸர். வலியும் இப்போதெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஓல்டு டிஸ்டம். இனி தாளாது. அலுவலகத்தில் என்னை "ஃபயர் பிராண்ட்' என்பார்கள். சிங்கம் போல இருந்தேன். நான் அப்படி இருக்கக் கூடாது என்பது காலத்தின் ஆசை போலும்.''... அவருடைய ஆங்கில உச்சரிப்பு தமிழ்போல இருந்தது. ஒவ்வொரு வார்த்தையையும் தேவைக்கு அதிகமாக இழுத்து உச்சரித்தார்.
நோய்வாய்பட்டு படுத்திருப்பதில் சிலருக்கு விருப்பம் இருக்கும் என்பார்கள். பெரும்பாலும் அத்தகையவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. சிங்கம் போல இருப்பவர்களுக்குத்தான் வருகிறது. என்னை முயல் என்று சொல்லலாம். அதாவது முயல்போல துறுதுறுவென இருந்தேன் என்பதைவிட, இவரைப் போன்ற சிங்கங்களுக்கு "ஒருவாய்' உணவாக இருந்தேன் என்பது பொருத்தமாக இருக்கும்.
"எல்லோர் முகத்திலும் சவக்களையாக இருக்கிறது. அப் கோர்ஸ் என் முகத்திலும்தான். தனி ரூம் கேட்டிருக்கேன்'' என்றார். என்ன நினைத்தாரோ கொஞ்ச நேரம் கழித்து ""உன் முகத்தில் அந்தச் சாயல் தெரியவில்லை'' என்றார்.
மரணத்தை எதிர் கொள்ளும் உறுதி தெரிந்தது. அவர் சொன்னதில் ஓல்டு சிஸ்டம் இனி தாங்காது என் ற வார்த்தை பிடித்திருந்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் எது தெரிந்திருக்கிறதோ இல்லையோ, இது தெரிந்திருக்கும். "வயசாகிவிட்டது. இனி தாக்குப் பிடிக்க முடியாது' அதை ஒத்துக் கொள்வதில் எவ்வளவு தயக்கம் பலருக்கும்.

ஆயா படுக்கையில் விழுந்தபோது தாத்தா பதறி அடித்துக் கொண்டு அவரை ஆஸ்பித்திரிக்குத் தூக்கிச் செல்லாதது இரக்கமற்ற தன்மையாக தோன்றியது. ""ஒண்ணும் வேண்டியதில்லை. அவ ஆனந்தமா இருக்கா'' என்று ஸ்ருதி பெட்டியை இயக்கியபடி ""ஹரே ராம கிருஷ்ணா... ஜெயராம கிருஷ்ணா'' என்று பாட ஆரம்பித்தார். ஆயாவின் முணகலைக் கேட்கவிடாமல் உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டிருந்தார். பட்டிக்காடு அது. ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டுமானால் டாக்ஸி வரவழைத்து பதினைந்து கிலோ மீட்டராவது பயணிக்க வேண்டும். அந்தத் தூரத்தில் 24 மணி நேர மருத்துவமனை ஒன்று உண்டு. பெரும்பாலும் கம்பவுண்டர் வைத்தியம்தான். யார் கையால் செத்தால் என்ன என்பது போல் அவனிடம் போய் கொண்டிருந்தார்கள் மக்கள். எப்போதெல்லாம் பாட்டி வலி பொறுக்கமுடியாமல் கத்துகிறாளோ அப்போதெல்லாம் தாத்தா ஸ்ருதி பெட்டியைப் பக்கத்தில் கொண்டு வந்து வைத்தபடி முகுந்தா, வைகுந்தா, முருகா, ஆனை முகத்தானே என்று ஒரு சாமிப்பாட்டு பாடினார். உடம்பு ஊதி, நீர் கோர்த்து முதுகுப் புண்ணால் துடித்தார் பாட்டி. ஐந்தாம் நாளில் அடங்கிவிட்டது. ""அவ்வளவுதான். எடுத்துடுங்கப்பா'' என்றார். திண்ணையில் போய் அமர்ந்து கொஞ்ச நேரம் கண்களில் நீர் வழிய உட்கார்ந்திருந்தார். அதில் ஆர்ப்பாட்டம், மிகை உணர்ச்சி எதுவும் இல்லை. அமைதியாக உட்கார்ந்திருந்தார். "பொழுதோட எடுத்துடுங்கடா'' என்றார் பலமுறை. சடங்குகள், சாங்கியங்கள் இருந்தன. பாட்டி விடைகொடுக்கும் தைரியமும் தன் மரணத்தை எதிர் நோக்கும் திராணியும் எனக்குப் புதிய அனுபவங்கள். சுற்றத்தார் எல்லோரும் அந்த அனுபவத்தைக் கிரகித்துக் கொள்ளாதது ஆச்சர்யமாக இருந்தது.
என்னை அழைத்து "பசியா இருக்குடா.. சாப்பிட ஏதாவது இருக்குமா பாரு... இல்லாட்டி நாடார் கடையில கடலை உருண்டை ரெண்டு வாங்கியாந்து குடு'' என்றார்.

"மிஸ்டர். நான் தனி ரூம் கேட்டு வாங்கிட்டேன். முதல் மாடி. நேரம் இருந்தா வா'' என்றார் பக்கத்துப் படுக்கைப் பெரியவர்.
"வருகிறேன்'' என்றேன்.
"இது ராக் பிக்யான் தானே?'' புறாவைக் காட்டிக் கேட்டார்.
"இதை பந்தயக்காரர்கள் சப்ஜா என்பார்கள்''
"சப்ஜா..? புறா ஒவ்வொர் முறையும் இரண்டு முட்டைப் போட்டதும் அடைகாக்க உட்கார்ந்துடும். ஒரு முட்டைக்கும் அடுத்த முட்டைக்கும் சுமார் இரண்டு நாள் இடைவெளி இருக்கும். முதல் முட்டை ஆண், இரண்டாவது முட்டை பொட்டை... பொட்டை எப்பவுமே இரண்டாவதுதான்... ஹா.. ஹா.. ஹா''
"பொட்டைதான் எப்பவும் புதுசு... ஆம்பளை எப்பவுமே பழசு'' என்றேன்.
"ஹா.. ஹா.. லாஜிக்''
அவரை சக்கரம் வைத்த படுக்கையில் வைத்து லிஃப்ட் பக்கம் நகர்த்திக் கொண்டு போனார்கள். படுத்தபடியே "வர்றேன்'' என்றார்.

தாத்தா மரணத்துக்குத் தயாரானது பலருக்கும் தெரியாது. பொங்கல் திருநாளில் சர்க்கரை பொங்கலும் கடலை பருப்பு வடையும் உற்சாகமாகச் சாப்பிட்டவர் அடுத்த சில நாளில் பேதியும் வாந்தியுமாகப் படுத்தார். என்ன உற்சாகம் அவருக்கு. "அவ்வளவுதான்டா... கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு. அப்பப்ப ஓடியாந்து சுத்தம் பண்ண வேண்டியதில்லே. ஒரு நாளைக்கு ஒரு தரம் போதும். மருந்து மாத்திரை, ஆஸ்பித்திரி எதுவும் வேண்டாம். என்னை இங்க அங்க தூக்கிட்டுத் திரியாதீங்க'' என்று தீர்மானமாக அறிவித்தார். கை காலெல்லாம் நீர் கோர்த்து முதுகுப் புண்ணோடு மிகவும் போராடினார். பாட்டியாவது ஐந்து நாளில் போய் சேர்ந்தார். இவர் இரண்டு மாதம் கிடந்து துடித்தார். பக்கத்தில் இருந்து பக்தி பாட்டு பாடுவதற்குக்கூட யாருமில்லை. உடம்பை நோக்கி சாரை, சாரையாக எறும்புகள் படையெடுத்தன. அவரைச் சுற்றி எறும்பு மருந்தை தூவி வைத்தனர். அப்போதும் எறும்புகள் சுற்றுவதைப் பார்த்து யாரோ அவர் உடம்புக்குக் கீழேயெல்லாம் எறும்பு மருந்தைத் தூவிவிட்டனர். தாத்தாவால் வலி பொறுக்க முடியவில்லை. தன்னை மீறி முணகினாரே தவிர, "ஆஸ்பத்திரியும் வேணாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்' என்பதை மட்டும் நினைவு தப்பிய பின்னும் சொல்லிக் கொண்டிருந்தார். கடுமையான உழைப்பாளி அவர். மரணத்தோடு மல்லு கட்டிக் கொண்டிருந்தபோது அதை நான் முழுமையாக உணர்ந்தேன்.

இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது என் படுக்கைக் கருகே இண்டர் காம் மணி அடித்தது. எடுத்தபோது "எஸ்.எம்.டி. பேசறேன். மேலே வர்றியா?'' என்று குரல்.
"எஸ்.எம்.டி.னா?''
"அட, உன் பக்கத்துக் கட்டில் தோழன், மிஸ்டர்.''
"ஓ. நீங்களா..? வர்றேன் சார்''
தனி அறை. "யாரும் கூட இருக்க வேணாம்னு அனுப்பிச்சிட்டேன். உட்கார். அந்தப் பேப்பரைத் தூக்கிக் கீழ கிடாசிட்டு உட்காரு மிஸ்டர்.''
"ஏன் யாரும் கூட இல்லை? தனி அறை எடுத்ததற்கு...''
"யாரும் இருக்கக் கூடாதுன்னுதான் தனி அறை கேட்டேன். அவங்களுக்கும் தொந்தரவு.. எனக்கும் தொந்தரவு. எண்பது கிலோ இருந்தேன். இப்ப நாப்பது கிலோ.. கண்ணு அவுட்... ரெட்டினா டேமேஜ். மூணு அடி தள்ளி நின்னா தெரியலை.''
"நல்லதா ஏதாவது பேசுவோம்...''
சிரித்தார். "என்னையே எடுத்துக்க... பாதி பேர் அவரை மாதிரி வருமான்னு சொல்லுவான். பாதி பேர் அயோக்கியன்னு ஏசுவான்... எனக்கு எல்லாம் ஒண்ணுதான். சரி... நல்லதா ஏதாவது பேசுமே. அதில என்ன கஷ்டம் இருக்கு?''
நல்லதாக ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தேன். ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவர் அப்படியே தூங்கிவிட்டார். கீழே போய்விடலாம் என்று எழுந்தபோது நாற்காலி அசைவில் கண்விழித்தார். "துரியோதனன் கதை மாதிரிதான். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் ஒரு நல்லதும் தெரியல எனக்கு. ஒரு இன்ஜக்ஷன் போடணும். போட்றியா?''
"நர்ஸ் யாராவது இருக்காங்களானு பார்க்கிறேன்.''
"அது என்ன மிஸ்டர் பிரமாதம்? எடு அதை நான் சொல்லித்தர்றேன். இவ்வளவு நாள் ஆஸ்பித்திரில இருந்து இதை கத்துக்கலைன்னா எப்படி?''
கட்டுப்பட்டேன். சரக்கென்று பாட்டிலில் இருந்து இன்ஜெக்ஷனால் மருந்து உறிஞ்சினார். "இடுப்புல போட்டுடு'. போட்டேன்.
மருந்து பாட்டிலையும் ஊசியையும் ஜன்னல் பக்கம் வீசி எறிந்தார். அது புறாக்கள் வசிக்கும் துத்தநாக தகட்டில் போய் விழுந்தது. படபடவென சிறகோசை கேட்டது. ""உனக்கு எல்லாமே நல்ல விஷயமா இருக்கா?'' என்றார்.
"தெரியலை. அதுக்கு இன்னும் நாளாகும்'' என்று சிரித்தேன்.
என்னுடைய பதில் அவருக்குப் பிடித்திருந்தது. "சரி. நீ போய் படு மிஸ்டர்''
"காலையில் பார்க்கலாம்'' என எழுந்தேன். நம்பிக்கையற்றுச் சிரித்தார். நான் அனிச்சையாக தூக்கியெறியப்பட்ட மருந்து பாட்டில் விழுந்த இடத்தைப் பார்த்தேன்.
"இன்னொரு மருந்து பாட்டிலும் இன்ஜெக்ஷனும் இருக்கு. உனக்குத் தேவைப்படும். எடுத்து வெச்சுக்க'' கண் சிமிட்டிச் சிரித்தார்.
"இந்த நேரத்தில இதை வாங்கித் தந்தவனும் இதை இன்ஜெக்ட் பண்ணவனும்தான் நல்லவன்''
நான் திகைத்தபடி நின்றிருந்தேன். மனிதர் கலக்கமின்றி இருந்தார்.
"சீக்கிரம் கீழே போயிடு மிஸ்டர்.'' அந்த ஹீனசுரத்தில் அதட்டலை உணர்ந்தேன். மருந்தை எடுத்துக் கொண்டேன். விழிகளை மூடித் திறந்து வழியனுப்பினார்.
நான் கீழே வந்தேன். ஜெனரல் வார்டில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தனர். ஒரே ஒரு பூஜ்ஜிய பல்புமட்டும் எரிந்தது. புறாக்கள் அடுத்து முட்டையிடுவதற்கான ஏற்பாட்டில் தீவிரமாக இருந்தன.

அம்ருதா ஆகஸ்ட் 2009

LinkWithin

Blog Widget by LinkWithin