திங்கள், அக்டோபர் 25, 2010

அமில தேவதைகள்


அத்தியாயம்-3


அறிவியல் குறுந்தொடர்

மகேஸ்வரி சொன்னதைத்தான் அங்கும் சொன்னார்கள். அபார்ஷன் பண்ணிக் கொள்வதற்காக வந்தாள். ஆனால் திடுதிப்பென்று சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டாள்.

கைனகாலஜி துறையின் தலைமை மருத்துவர் என அறிமுகப்படுத்தப்பட்ட கிழவி அனாவசியத்துக்கு எரிச்சலுற்றாள்.

"சரியான போதை கேஸ்.. இப்ப நாங்க மாட்டிக்கிட்டு முழிக்கிறோம். ஹாஸ்பிடல் பேரைக் கெடுத்துட்டா.''

""போதை கேஸ்னு எப்படி சொல்றீங்க?''

"அவ ரூம்ல சிரிஞ் ஒண்ணு கிடந்தது.. அதையெல்லாம் பத்திரப்படுத்தி எடுத்து வெச்சு வர்றவங்களுக்கெல்லாம் நிரூபிச்சிக்கிட்டு இருக்க முடியுமா?''

"சரி கடைசியா ஆஷாவைப் பார்த்தது யாருன்னு சொல்லமுடியுமா?''

"நான்தான் பார்த்தேன்.. ரூம்ல போய் இருக்கச் சொன்னேன்.''

ஹாஸ்பிடலில் இருந்து இன்ஸ்பெக்டரை அனுப்புவதில்தான் அவளுடைய கவனம் முழுவதும் இருந்தது.தங்கள் மருத்துவமனை சந்தேகத்திற்கான இடமாக மாறுவது அவளை சிரமப்படுத்திக் கொண்டிருந்தது. துல்லியமும் சுத்தமுமாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக அவளுடைய நடவடிக்கைகள் இருந்தன. தேவையே இல்லாமல் தன் மேஜையை டிஸ்யூ பேப்பர் மூலமாக நான்காவது முறையாக சுத்தப்படுத்தினாள்.

"சிரிஞ் இருந்ததை யார் பார்த்தது?''

"நீங்க வீணா இங்க டயம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க''

"பரவாயில்ல'' என்றார் பெருந்தன்மையாக.

"நான் சொன்னது, எங்க டயத்தை.''

கருப்பசாமி "இவ்வளவு நேரம் எங்களுக்கு ஒத்துழைப்பு தராததற்கு ரொம்ப நன்றி'' என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு விருட்டென்று வெளியே வந்தார்.

"ஆஷா இதுவரைக்கும் வந்திருக்கிறாள். இங்கிருந்து புறப்பட்டுச் சென்றதும் காணாமல் போயிருக்கிறாள். சுமார் இருபது கி.மீட்டர் தூரம் வந்து ரகசியமாக அபார்ஷன் செய்து கொள்ள நினைத்தவள், திடீரென்று என்ன தீர்மானத்துக்கு வந்திருப்பாள்? வேறு யாராவது வந்து அழைத்துப் போயிருப்பார்களா? சுரேஷ்...? நிர்ப்பந்தித்திருப்பார்களா? சுரேஷைத் தவிர வேறுயாரையும் சந்தேகப்படுவதற்குத் தோன்றவில்லை.... அல்லது தெரியவில்லை.

சுரேஷ் தேறுகிற வரை காத்திருக்காமல் வீணாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோமா? ராமசாமி சந்தேகித்ததுதான் சரியா?

லிஃப்ட் பட்டனை அழுத்திவிட்டுக் காத்திருந்தார். கதவு திறக்கும் நேரத்தில் ஒரு வெள்ளுடை பணியாள் ட்ராலி ஒன்றைத் தள்ளிக் கொண்டு அவசரமாக நுழைந்தான்.

கதவு மூடிக் கொண்டது.

"சார், உங்ககிட்ட ஒரு தகவல் சொல்லணும்... அந்த சிரிஞ்சை எடுத்தது நான்தான்'' மீண்டும் கதவு திறப்பதற்குள் சொல்லி முடித்துவிட வேண்டும் என்ற தவிப்பு தெரிந்தது அவனிடம்.

கருப்பசாமிக்குத் திகைப்பாகவும் மிகை ஆர்வமாகவும் இருந்தது. பயமுறுத்தாமல் தகவல் பெற வேண்டும் என்ற நிதானத்தோடு, "அது இப்ப உன்கிட்ட இருக்கா?'' என்றார்.

"இல்ல சார்.. அப்பவே குப்பைக் கூடைல போட்டுட்டேன்.''

"...''

"ஆனா.. கொஞ்ச நேரத்திலேயே அதைத் தேடிக்கிட்டு ஒருத்தர் வந்தாரு..''

"அதைத் தேடிக்கிட்டா?''

"ஆர் அண்ட் டி'ல வேல பார்க்கிற டாக்டர் சந்திரசேகர்.''

"ரிஸர்ச் டாக்டரா?'' மேற்கொண்டு ஆச்சர்யப்படுவதற்குள் லிப்ட் தரைத்தளத்துக்கு வந்துவிட்டது. "அவ்வளவுதான் சார் தெரியும். நான் வர்றேன் சார்'' என்று ஏதும் நடவாததுபோல முகத்தை வைத்துக் கொண்டு நகர்ந்தான்.

ரிஸர்ச் அண்டு டெவலப்மெண்ட் பிரிவில் வேலை பார்க்கும் ஒரு டாக்டர் ஆஷா பயன்படுத்திய சிரிஞ்சைத் தேட வேண்டிய அவசியம் என்ன? அது முக்கிய தடயமா? ஆஷா காணாமல் போனது இங்கிருந்து புறப்பட்டபோதா? அல்லது இங்கிருந்தபோதா?

லிஃப்டுக்குப் பக்கத்தில் இருந்த பித்தளைப் பலகையைப் பார்த்தார். தாம் போய் வந்த மாடியிலேயேதான் ஆர் அண்டு டி பிரிவு செயல்படுவது தெரிந்தது.

மறுபடி லிஃப்டைப் பிடித்து மேலே விரைந்தார்.

"சார்... சார்.. பேஷண்டெல்லாம் இந்தப் பக்கம் வரக் கூடாது'' ப்யூன் ஒருவன் தடுப்பதற்காக அவசரப்பட்டான்.

"நான் பேஷண்ட் இல்லை. போலீஸ்.. டாக்டர் சந்திரசேகரைப் பார்க்க வேண்டும்.''

பியூன், முதல் கட்டமாக எப்படி அனுமதி மறுப்பது என்று யோசித்துவிட்டு, காரணம் போதாமல் ""கொஞ்ச நேரம் இருங்க. கேட்டுட்டு வந்து சொல்றேன்'' என தயங்கியபடி போனான்.

சில நிமிடங்களில் திரும்பி வந்து ஒரு விண்ணப்பப் படிவத்தை நீட்டி, " இதை ஃபில் அப் பண்ணுங்க சார்" என்றான்.

வந்திருப்பவரின் பெயர், பார்க்க விரும்பும் நபரின் பெயர், பார்க்க விரும்பும் காரணம், பணியாற்றும் மருத்துவமனை, நோயாளி பற்றிய குறிப்பு, நோய் சம்பந்தமான விவரம் என்று விண்ணப்பம் கருப்பசாமிக்குப் பொருத்தமில்லாமல் இருந்தது.

பெயரை குறிப்பிட்டுவிட்டு, அருகிலேயே இன்ஸ்பெக்டர் என்று இடுக்கி இடுக்கி எழுதினார். பிறகு, பார்க்க விரும்பும் நபர் என்ற இடத்தில்.. ‘டாக்டர் சந்திரசேகர். நோயாளி பற்றிய குறிப்பு என்ற இடத்தில்... ‘ஆஷா காணாமல் போனது சம்பந்தமாக என்று எழுதினார்.

வாங்கிச் சென்ற ப்யூன் பந்து போல திரும்பி வந்து எரிச்சலாக சொன்னான்.. ""ஏன் சார் உயிர் எடுக்கிறீங்க.. ஆஷான்னா யாருனு தெரியாதுனு கத்தறார் சார். அவரு பெரிய டாக்டர் சார்.. தேவையில்லாம தொந்தரவு பண்ணா கோச்சுப்பாரு''

கருப்பசாமி நிதானமிழந்தார்.

"நீ டிஸ்டர்ப் பண்ணாத்தானே கோச்சுப்பாரு.. விடு நானே பண்ணிக்கிறேன்.'' ப்யூனை ஓரமாகத் தள்ளிவிட்டு உயரமான கண்ணாடிக் கதவை உதைத்துத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தார். உள்ளே சென்றவர் அதிர்ந்தார். எப்பேர்ப்பட்டவர்களையும் அந்த இடம் பணியச் செய்துவிடும்போல இருந்தது. பளிங்கு சுத்தமும் குபீரென்ற அமைதியும் அவரது ஆவேசத்தை சட்டென தணித்துவிட்டது. ஒரு அரை வட்டம் போல இடம். அதில் மூன்று கதவுகள் இருந்தன.

சந்திரசேகர் என்று குறிப்பிட்டிருந்த அறைக்கதவை நோக்கி நடந்தார். வெளியே தள்ளிவிட்டு வந்த ப்யூன் மீண்டும் உள்ளே நுழைந்து இன்ஸ்பெக்டரின் கையை முரட்டுத்தனமாகப் பிடித்துக்கொண்டு "சொன்னா கேளுங்க சார்.. இதுக்குள்ள யாரும் வரக் கூடாதுனு சொல்லியிருக்காரு சார்'' முகத்தில் மிரட்டலும் குரலில் கெஞ்சலுமாக கருப்பசாமியைப் பிடித்து இழுத்தான்.

கருப்பசாமி அவனை இழுத்தபடியே சந்திரசேகர் என்ற எழுத்திட்ட அறையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.

சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க செக்கச் சிவந்த டாக்டர் ஒருவர் "வாட் நான்ஸென்ஸ்'' என்றார்.

"ஆஷாவோட கொலை சம்பந்தமா உங்ககிட்ட கொஞ்சம் விசாரிக்கணும்'' கருப்பசாமி தீர்மானமாக கொலை என்றே சொன்னார்.

"ஆஷான்னா யாருன்னு தெரியாதுன்னு சொல்லி அனுப்பிச்சேனே.. உங்களுக்கின்னா மூளை கெட்டுப் போச்சா? நான் கமிஷனர் கிட்ட பேசறேன்..''

"ஆஷா உங்களுக்குத் தெரியலைன்னா பரவாயில்லை.. அவ ரூம்ல இருந்த சிரிஞ்சை ரொம்ப பத்திரமா எடுத்து வெச்சிருக்கீங்க.. அது ஏன்னு தெரிஞ்சுக்கணும்''

சந்திரசேகர் வினாடியில் மெல்லிய இழை திடுக்கிட்டதை கருப்பசாமி கவனித்தார். விரலைச் சுண்டி, ப்யூனை வெளியே போகச் சொல்லி சமிக்ஞை செய்தார்.

"சொல்லுங்க.. அந்த சிரிஞ்சை வெச்சு என்ன பண்ண போறீங்க'' அலட்சியமாகக் கேட்டார்.

"என்ன சிரிஞ்? எனக்கு ஒண்ணுமே புரியலை''

"நீங்களே உண்மையச் சொல்லிட்டா நல்லது.'' கருப்பசாமி தோராயமாகத் தன் விசாரணையை ஆரம்பித்தாலும் இடியாப்பச் சிக்கலில் கிடைத்த ஏதோ ஒரு நுனியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

சந்திரசேகர் கண்ணை மூடிப் பெருமூச்சு விட்டுக் கொண்டார். இண்டர்காமை அழுத்தி, "வேகமாக வா'' என்றார்.

சில வினாடிகளில்..

அதே அறையின் ஒரு சுவர் சட்டென்று விரிய, உடம்பெல்லாம் பச்சைப் பசேலென்ற அங்கி அணிந்திருந்த இருவர் வெளிப்பட்டு கருப்பசாமியைக் கேள்விக்குறியுடன் பார்த்தனர்.

சந்திரசேகர், "ஆஷா மர்டர் விஷயமா வந்திருக்காரு... இவரையும் பயன்படுத்திக்கிறதைத் தவிர வேறு வழியில்லை'' என அபிப்ராயம் தெரிவிப்பது போல சொன்னார்.

இரண்டு பசுமைக்காரர்களும் தீர்மானமாக கருப்பசாமியை நெருங்க, ஏதோ வில்லங்கமாக நடக்கப் போவதை உணர்ந்து வேகமாக எழுந்தார்.

சந்திரசேகர் "ரொம்ப அலட்டிக்காதீங்க.. அப்புறம் கஷ்டமாகிடும்.'' ஊசி போட்டுக் கொள்ள அடம்பிடிக்கும் குழந்தைக்கு அறிவுரை போல சொன்னார்.

கருப்பசாமி திரும்பிப் பார்க்க... சந்திரசேகர் கைகளில் துப்பாக்கியோடு தீட்சண்யமாக நின்று கொண்டிருந்தார்.

( தொடரும்)


செவ்வாய், அக்டோபர் 19, 2010

அமில தேவதைகள்



அறிவியல் குறுந்தொடர்கதை

அத்தியாயம்-2

கருப்பசாமியின் காவல்துறை அனுபவத்தில் இத்தனை விஞ்ஞான பூர்வமான பணியை எதிர் கொண்டதே இல்லை. இன்னமும் வீச்சரிவாள், அம்மிக்கல், பிளேடு இவற்றால் நடத்தப் பெறும் கொலைகளைத்தான் கேள்விப்பட்டிருந்தார்.

தடய அறிவியல் துறையில் இருந்து அவருக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அறிக்கையைக் கொண்டு எங்கிருந்து விசாரணையைத் துவங்குவதென்றே குழப்பமாக இருந்தது.

தலையைத் துண்டிப்பதற்கு சக்தி வாய்ந்த லேசர் ஒளிக்கற்றை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரத்தம் ஒரு சொட்டுகூட வெளியேறியிருக்க வாய்ப்பே இல்லை. கைரேகை தடயங்கள் இல்லை. கல்யாணம் ஆகாத ஆஷா கர்ப்பமாக இருந்தாள் என்ற செய்தி கொஞ்சம் கூடுதல் தகவலாக இருந்தது.

ஆஷாவின் தோழி ஈஸ்வரி சொன்ன ரகசியங்களைக் கொண்டு சுரேஷைத் தேடுவதில் கவனம் செலுத்தினார். சுரேஷின் மீது தொண்ணூற்று ஐந்து சதவீத சந்தேகத்தைத் திருப்பினார்.

காதலித்தவன் இத்தனை கொடூரமாகக் கொலை செய்ததற்குக் காரணம் இருக்க வேண்டும். ரேடியேஷன் லேஸர் டெக்னாலஜி என்ற படிப்பெல்லாம் படித்தவன் என்று ஈஸ்வரி எந்தவித முன் திட்டமிடலும் இல்லாமல் சொன்னது அவருடைய சந்தேகத்தின் சதவீதத்தை உயர்த்தியது.

தொலைபேசி காலிங் பெல் போல அடித்தது.

முறுமுனையில் சப் இன்ஸ்பெக்டர் ராமசாமி. "சுரேஷைப் பிடிச்சுட்டோம்'' என்றார்.

"நல்லது. ரொம்ப பயமுறுத்தாம இங்க கூட்டிட்டு வந்துடுங்க'' தொலைபேசியை நிதானமாக வைத்துவிட்டு அந்த வினாடி முதலே சுரேஷுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்.

"வீட்ல திட்டுவாங்க'' என்று காதலில் பின்வாங்கியவன் இவ்வளவு விஞ்ஞான பூர்வமாகக் கொலை செய்வதற்குத் தயாராவானா? தன் வெளிநாட்டு வேலைக்குப் பாதகமாக அமைந்துவிடுவாள் என்று ஆள் வைத்துத் தீர்த்துக் கட்டியிருப்பானா? தலையை மட்டும் துண்டித்துவிட்டால் அடையாளம் தெரியாது என்று நினைத்துவிட்டானா?

மறுபடி போன்.

ராமசாமிதான் பேசினார்.

"சாரி சார். வர்ற வழியில... எதிர்பார்க்கவேயில்ல சார்... ஓடற ஜீப்ல இருந்து கீழ குதிச்சுட்டான்.''

"என்ன பேசறீங்க ராமசாமி? தப்பிச்சுட்டானா?''

"இல்ல சார்... எதிர்ல வந்த கார்ல மோதி...''

"உயிர் இருக்கா?''

"இருக்குது சார்.'' தன்னையும் அறியாமல் மகிழ்ச்சியாகத் தெரிவித்தார் ராமசாமி.

"எந்த இடம்?''

"ராயப்பேட்டை.''

"ஹாஸ்பித்திரி இருக்கிற இடம்தான்... உடனே சேர்த்துட்டு கூடவே இருந்து பார்த்துக்கங்க.. நான் உடனே புறப்பட்டு வர்றேன்.''

கருப்பசாமி ஹாஸ்பிடலை அடைந்தபோது தலை, கை, கால் என்று சர்வ பாகங்களும் பாதிக்கப்பட்டு வாயில் ஆக்ஸிஜன் திணிக்கப்பட்டு ரத்தம், குளுகோஸ் ஏற்றங்கள் சகிதம் இருந்தான்.

"ஒரு வாரத்துக்குப் பேச முடியாது'' டாக்டர் தெளிவாகச் சொல்லிவிட்டார். இருந்த ஒரே தடயம் இப்படி ஒரு வாரத்துக்குப் பயனில்லாமல் போனது ஏமாற்றமாக இருந்தது.

ராமசாமியை அழைத்து "பிடிச்சபோது ஏதாவது சொன்னானா?'' என்றார்.

"இல்லை சார்... ஆஷா கொலை விஷயமா உங்களை விசாரிக்க வேண்டியிருக்குனு சொன்னோம். ‘நா கொல்லல சார்... காட் பிராமிஸ் சார்' என்று தலையில் கைய வெச்சு அழுதான்... ஸ்டேஷன்ல வந்து சொல்லுனு ஜீப்ல ஏத்திக்கிட்டு வந்தேன்... வீசா கூட வந்துடுச்சி சார்.னு புலம்பிக்கிட்டே இருந்தான். திடீர்னு எகிறி குதிச்சுட்டான்... ஐயர் வூட்டுப் பையன்.. அதான் யோசனையா இருக்குது''

"என்ன யோசனை?''

"ஐயர் பையன் கொல்லுவானான்னுதான்..''

"இதுக்குக்கூடவா ஜாதி?''

ராமசாமி பலமாக விவாதிக்க விருப்பமில்லாமல், ஸேம் சைட் கோல் அடித்தார்: "இந்தக் காலத்தில யாரை நம்ப முடியுது சார்?''

"நமக்குக் கிடைச்ச ஒரே ஆதாரம் இவன். இவன்தான் கொன்னானான்னு முடிவு பண்றதுக்கு இதுவரைக்கும் ஒரு ஆதாரமும் இல்லை.... விசாரிக்கணும்னா இன்னும் ஒரு வாரம் காத்திருக்கணும்.'' சூழ்நிலையை அடுக்கிக் கொண்டே போனார் கருப்பசாமி.

"ஒருவிதத்தில பார்த்தா அமெரிக்காவுக்குப் போகணுங்கிறதுக்காக கருவைக் கலைக்கச் சொல்லியிருக்கான். அதுவே ஒரு கொலைதான சார்... ஆஷா பிடிவாதம் பிடிக்கவே கருவைச் சுமக்கறவளையும் சேர்த்தே கொன்னுட்டான்... பிஸிக்ஸ் படிக்கிறவன். லேசர் சம்பந்தமான படிப்பு. இதுவே எவிடென்ஸ்...''

"எலை சாயற பக்கம் குலை சாயற மாதிரி சாயக் கூடாதுய்யா... அவசரப்பட்டு முடிவுக்கு வந்துட்டா அப்புறம் அதிலயேதான் போவே... மொதலல எத்தனை பாஸிபிலிட்டி இருக்குனு பாரு. அப்புறம் முடிவுக்கு வா...''

"ஜஜூ.வி.ல கூட தலைகள் ஜாக்கிரதை.. தலைநகர் பயங்கரம்னு மாபியாவோட லிங்க் பண்ணி எழுதியிருந்தாங்க சார்... ‘நக்கீரன்ல ஆயிரம் தலை வாங்கும் அக்கரகார தலைக்காரன்னு எழுதியிருக்காங்க...''

"எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிடுங்க.. ஏதாவது க்ளு கிடைக்கும்.''

"சரி சார்.''

கருப்பசாமி வேலையில் கடும் சிரத்தை உள்ளவர். காக்கி சட்டை வேலையில் சேர்ந்த பின்பும் உடற்பயிற்சி செய்து வரும் மிகச் சில காவல்துறை அதிகாரிகளில் ஒருவர். நிறத்தைப் பார்த்துதான் பெயர் வைத்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். கைக்கெட்டும் தூரத்தில் குற்றவாளிகள் கிடைத்துவிட வேண்டும் என்ற சோம்பேறித்தனம் இல்லாதவர். சுரேஷின் மீது ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை சற்றே தள்ளி வைத்துவிட்டு, கவனத்தை வேறுபக்கம் திருப்பினார்.

இருந்தாலும் யாரைச் சந்தேகிப்பது என்று பெரிய வெற்றிடமாக இருந்தது.

ராமசாமியிடம் சொன்ன வேலை டேபிளின் மீது குவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் புலன் விசாரிக்கும் இதழ்கள் இத்தனை இருக்கிறதா என்று ஆச்சர்யமாக இருந்தது. ஆஷாவின் தலையில்லாத உடலைப் போட்டு எல்லா பேப்பர்களிலும் பரபரப்பாகச் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

சொல்லி வைத்தாற்போல எல்லா செய்தித்தாள்களிலும் புதுப் புதுக் கோணங்கள் இருந்தன. ஆஷாவின் கொலை செய்தி தவிர கடந்த வாரங்களில் வெளியான வேறு சில செய்திகளில் இருந்த ஒற்றுமை அவரை வியப்பில் ஆழ்த்தியது.

கமிஷனர் அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டு பி.ஆர்..வுக்கு லைன் கேட்டார்.

"கடந்த வியாழக்கிழமை பிரஸ் மீட்ல இந்த ஒரு மாசத்தில மட்டும் பதினாறு இளம் பெண்கள் காணாமல் போனதாக வந்திருக்கிறதே மணி?''} விசாரித்தார்.

"ஆமா சார்.''

"அந்தப் பதினாறு பேரோட டீடெய்ல்ஸ் வேணும். போட்டோ, அட்ரஸ்...''

"ஒரு மணி நேரத்தில குடுத்தனுப்பறேன் சார்.''

"தேங்க்ஸ் மணி.''

நூல்கண்டில் சிக்கு ஏற்பட்டால் ஏதாவது முனையைப் பிடித்து இழுத்து முடிச்சை அவிழ்க்கிற வேலைதான் இது. சமயத்தில் மேலும் சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் இழுத்துப் பார்த்தார்.

வெள்ளைத்தாளில் ஆஷோவோடு பதினேழு என்று எழுதி வைத்தார்.

மாலை. சுரேஷ் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்றதும் அங்கு காவலுக்குப் போட்டிருந்த போலீஸ்காரன், அந்த மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் அவரைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினான்.

"சப் இன்ஸ்பெக்டர் எங்கே?''

"சுரேஷோட பேரன்ட்ஸைப் பார்க்கப் போனாரு''

"வந்ததும் என்னைக் கான்டாக்ட் பண்ணச் சொல்லு''

தலைமை மருத்துவரைப் பார்க்கக் கிளம்பினார்.

"என் பேர் மகேஸ்வரி'' என்ற அறிமுகத்தோடு ""ஆஷா இறந்து போனதா சொல்ற அதே நாள் இங்க வந்தா''அதிரடியாக ஈர்த்தார் அந்தப் பெண் மருத்துவர்.

"அப்படியா?'' சற்றும் எதிர்பார்க்காத தகவலால் ஆர்வமானார் கருப்பசாமி.

"அபார்ஷன் பண்றதுக்காக'' தொடர்ந்தார்.

"சரி.''

"நா அபார்ஷன் கேஸையெல்லாம் ஒத்துக்கறதில்லை. வேற நர்ஸிங் ஹோமுக்கு அனுப்பி வெச்சேன்.''

"எந்த நர்ஸிங் ஹோம்?''

"மந்தாகினி மெடிக்கல் ரிஸர்ச் பவுண்டேஷன்''

"பாலவாக்கம் பக்கத்தில..?''

"அதேதான்..''

"அங்க யார்கிட்ட அபார்ஷன்..''

"யார்கிட்டயும் பண்ணலைனுதான் போஸ்ட்மார்ட்டம் சொல்லுதே...''

"அதில்ல.. அவ யாரைப் போய் பார்த்தான்னு தெரிஞ்சுக்க முடியுமா?''

"அங்க போயிருக்கா... ஆனா அபார்ஷன் பண்ணிக்காம திரும்பிட்டா.''

"வேற ஏதாவது தெரியுமா?''

"அவ எந்த காலேஜ்ல படிச்சாங்கிறதுகூட பேப்பர்ல பாத்துதான் தெரியும்''

கருப்பசாமி சிரித்தார். "தகவலுக்கு நன்றி.''

வெளியே வந்து ஜீப்பில் அமர்ந்தார். "பாலவாக்கம் போப்பா'' என்றார் டிரைவரை நோக்கி.

(தொடரும்)

திங்கள், அக்டோபர் 18, 2010

அமில தேவதைகள்






அறிவியல் குறுந்தொடர்

அத்தியாயம்-1

இரண்டுபுறமும் மரங்கள் நிறைந்த நீண்ட சாலை. மந்தாகினி பாலிகிளினிக் செல்வதற்கான பிரத்யேகப் பாதை அது. சாயங்காலம் ஆறுமணிக்கே அமானுஷ்யம் நிலவியது. சருகுகள் இங்குமங்கும் நகர்ந்து சரசரத்துக் கொண்டிருந்தது.

ஆஷா இடது தோளில் தொங்கிக் கொண்டிருந்த தோல் பையை வலதுக்கு மாற்றிக் கொண்டு நடந்தாள். தனிமை உணர்வைத் தவிர்க்கும் பொருட்டு ஏதாவது பாட்டுப்பாட நினைத்தாள். எந்தப் பாடலையும் பாடுவதற்கு அசுவாரஸ்யப்பட்டு மேலும் வேகமாக நடக்க முடிவெடுத்தாள்.

தூரத்தில் கண்ணாடிச் சுவர்களால் அலங்கரிக்கப்பட்ட மருத்துவமனை கண்களுக்குத் தெரிய ஆரம்பித்ததும் சற்றே தெம்பு பிறந்தது அவளுக்கு.

சே, இனி இந்த மாதிரி இடத்திற்கெல்லாம் தனியாக வரக்கூடாது என யோசித்தவள், தான் சிந்தித்த சொற்றொடரில் தனியாக என்ற வார்த்தையை அழித்தாள்.

கண்ணாடிக் கதவைத் திறந்தபோது காத்திருந்த மாதிரி ஹாஸ்பிடல் வாசனை உடம்பைத் தழுவிக் கொண்டது.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரவேற்பறை தோரணையில் இங்கும் அங்கும் ஒரு ஆணும் பெண்ணும் ஆழ்ந்த சிரிப்புடன் வரவேற்க காத்திருந்தார்கள். ஆஷா அவர்களை நிராகரித்து, லிஃப்டுக்குப் பக்கத்தில் இருந்த எந்த மாடியில் என்ன பிரிவு இயங்குகிறது என்ற பித்தளை பலகையைப் பார்வையிட்டாள்.

நான்காவது மாடியில் என்றிருந்த இடத்தின் அருகே கைனகாலஜி ஆர் அண்டி செக்க்ஷன் என்ற பதங்கள் இடம் பெற்றிருந்தன.

நான்காவது மாடிக்கு விரைந்தாள். அங்கு அம்புக்குறி காட்டிய திசையில் நடந்து இருபக்கமும் தனித்தனி படுக்கை அறைகளாகப் பகுக்கப்பட்டிருந்த இடங்களைக் கடந்தாள்.

பாதை இரண்டாகப் பிரிந்த இடத்தில் ஆய்வகம் என்ற பித்தளை பொறிப்பு.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும்தான் அதற்குள் ஏகப்பட்ட வெண் சட்டை மருத்துவர் மற்றும் இதர பணியாளர்கள் இருப்பது தெரிய வந்தது. இத்தனை பேர் இருக்கும் இடத்தில் இத்தனை அமைதி நிலவுவது இயற்கைக்கு விரோதம் போலவும் தவறு போலவும் இருந்தது.

"யெஸ்?'' விளித்த பழுத்த வெள்ளுடை மூதாட்டியை அணுகினாள். அவள் பார்வை வழி தவறி வந்தவளை எதிர்கொள்வது போல இருந்தது.

"ஆஷா... அபாயின்ட்மென்ட் வாங்கியிருந்தேன்... நேத்து.. போன்ல'' மிகுதியான பெயர்ச்சொற்களை அடுக்கியே வாக்கியத்தை முடித்தாள். மூதாட்டிக்கும் அதுவே போதுமானதாக இருந்தது.

கொஞ்சம் ரோபோ தன்மையோடு எதிரில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நோக்கிவிட்டு ""தி. நகரிலிருந்து?'' என்றாள். அந்த அம்மா உதடு பிரிக்காமல் பேசுவது ஆச்சர்யமாக இருந்தது.

உடனே அடையாளம் கண்டுகொண்டதற்காக ஆஷா நன்றியைப் புன்னகையாகத் தெரிவித்தாள்.

"24 வயசா?''

"...''

"படிக்கிறியா?''

"ஆமா?''

"ஏன்? தி.நகர்ல எந்த ஹாஸ்பிடலும் கிடைக்கலையா?''

"யாருக்கும் தெரிஞ்சிடக் கூடாதுன்னுதான்''

"கூட யாரும் வரலையா?''

"இல்லை.''

"மகேஸ்வரி சொன்னாளேன்னுதான் உன்னை அட்மிட் பண்றேன். ரூம் நெம்பர் 4 -பி ல போய் இரு. அப்புறம் கூப்பிட்டு அனுப்புறேன்.''

"சரி மேடம்'.'

ஆஷா குற்ற உணர்வுடன் விடைபெற்று 4-பி இலக்கமிட்ட அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்து, கதவு மூடிக் கொள்வதற்கு முன், வசமிழந்து அழுதாள். யாரும் வருவதற்குள் அழுது முடித்துவிட வேண்டும் என்ற அவசரமும் தொற்றிக் கொண்டது.

வீட்டுக்குத் தெரிந்தால் அவமானம் தாங்காமல் அனைவரும் செத்துப் போய்விடுவார்கள் என்பது பயத்தை ஏற்படுத்தியது. இரண்டு நாள் தங்கியிருந்து கலைத்துக் கொண்டு ஒரு தடயமும் இல்லாமல் ஹாஸ்டலுக்குப் போய்விடவேண்டும். ஹாஸ்டல் வார்டனிடம் அவசரமாகப் பெற்றோரைப் பார்த்துவிட்டு வரவேண்டியிருப்பதாக அனுமதி வாங்கியாயிற்று. யாருக்கும் தெரியாமல் மீண்டும் மிக இயல்பாக கல்லூரிக்குப் போகலாம். எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும். கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டாள்.

இவ்வளவையும் செய்துவிட்டு சுரேஷ் ""ஸ்டேட்ஸ்ல ஆஃபர் வந்திருக்கு. இந்த நேரத்தில் உன்னைக் கட்டிக்கப் போறேன்னு சொன்னா ஆத்துல யாரும் சம்மதிக்க மாட்டா'' என்று காரணம் சொன்னான். அபார்ஷனுக்கு ஆகும் செலவை அடுத்த மாசம் தருவதாகக் கடன் சொல்கிறான்.

கோழைத்தனமான செயலை எவ்வளவு துணிச்சலாகச் செய்கிறான், ராஸ்கல்.

இனி யாரிடமும் ஏமாறக்கூடாது என்று உறுதிப்படுத்திக் கொண்டாள். வாஷ்பேஸினில் முகத்தைக் கழுவிக் கொண்டு கொஞ்சம் தன்னைப் புதுசு பண்ணுகிற முயற்சியில் இறங்கினாள்.

சல்வார் கம்மீஸ் கழற்றிவிட்டு தயாராகக் கொண்டு வந்திருந்த நைட்டிக்கு மாறிய... அவன் கொடுத்த ப்ரா... திருட்டு நாய்... அவசரமாக ப்ராவைக் கழற்றி எறிய முற்பட்ட நேரத்தில் டொக்... டொக்.

"ஒன் செகண்ட்'.'

லேசாக கதவைத் திறந்து முகத்தை மட்டும் காட்டி, "நைட்டிதான போடணும்?'' என்றாள்.

பச்சை நிறத்துணியால் வாய்ப் பகுதியை மூடியிருந்த இரண்டு வெள்ளை அங்கி மனிதர்கள், "பரவாயில்லை. நாங்க உங்களுக்கு வேறு ஆடை கொடுப்போம், நீங்கள் எந்த ஆடையிலும் வரலாம்'' என்றது வடிகட்டி வந்தது.

"நான் நைட்டிக்கு மாறிட்டேனே?''

"எதுவாக இருந்தாலும் பரவாயில்லை'' கண்களில் குறும்பு தெரிந்தது. ஏன் பெண் நர்ஸ் யாரும் இல்லையா?

"சரியா போட்டுக்கிட்டு வந்திர்றேன்...''

"வந்துக்கிட்டே போட்டுக்கலாம்.. வாங்க.''

கிண்டலடிக்கிறார்களா, அவசரமாக அழைக்கிறார்களா.. யூகிக்க முடியாமல் அவர்கள் பேசுவதை வேடிக்கையாகத் தாம் எடுத்துக் கொண்டதாக மிரட்சியோடு சிரித்தாள்.

கண் இமைக்கும் நேரத்தில் சரேல் என இருவரும் உள்ளே நுழைந்தனர். பக்கத்தில் இருந்த ஏதோ துணியால் உடம்பைப் போர்த்திக்கொண்டு, "வாட் நான்சென்ஸ்.. நான் மகேஸ்வரி மேடம் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணுவேன்''- கத்தினாள்.

அதற்குள் ஒருவன் பாக்கெட்டில் மருந்து நிரம்பிய சிரிஞ்சை எடுத்து அவளது உடம்பில் அகப்பட்ட இடத்தில் குத்தினான்.

மற்றொருவன் வாயை அமுக்கி, மெல்ல அவளை ஸ்ட்ரெச்சரில் கிடத்த... அவளது நைட்டி முழுவதுமாக நழுவித் தரையில் விழுந்தது.

துரிதமாக அவள் கொண்டு வந்திருந்த பையை சுருட்டி அவளுக்கு அருகே ஒரு பக்கத்தில் போட்டான். ஒரு வெள்ளைத் துணியால் அவளை முழுதும் போர்த்தி தூக்கிக் கொண்டு வெளியேறும்போது ஆஷா முற்றிலும் மயங்கி கடைசி வார்த்தையாக "ராஸ்கல்ஸ்' என்று முணகினாள்.

சுமார் எட்டு மணி வாக்கில் 4-பி அறையைப் பார்த்துவிட்டு வந்த ஹாஸ்பிடல் பணியாள், " அந்த ரூம்ல யாருமே இல்ல மேடம்'' என்றான்.

பெரிய டாக்டர் எரிச்சலுற்று, "நல்லா பார்த்துட்டு வா.. பாத்ரூம்ல இருப்பா'' விரட்டினாள்.

"அரைமணி நேரம் தேடறேன் மேடம்.. அங்க யாருமே இல்ல. பாத்ரூம் திறந்துதான் கிடக்குது..''

"மனசு மாறி கிளம்பிப் போய்ட்டாளா?''

"தெரியல மேடம்''

"ரூம்ல அவ கொண்டு வந்த பை இருந்ததா?''

"இல்லையே.''

"ஒழியட்டும்'' சலித்துக்கொண்டு "இந்த மாதிரி லூஸ்ங்களுக்கெல்லாம் மகேஸ்வரி எதுக்கு சப்போர்ட் பண்றா...'' கர்சீப்பால் விசிறிக் கொண்டாள்.

"அந்த ரூம்ல இந்த சிரிஞ் கெடந்தது மேடம்'' சிப்பந்தி நீட்டிய ஊசியை ஏறெடுத்தும் பார்க்காமல், "சரியான போதை கேஸா இருப்பா.. எக்கேடாவது கெட்டுத் தொலையட்டும்.. அதை அந்த பேஸ்கட்ல போட்டுட்டுப் போய் ஒரு காபி கொண்டுவா... கையை அலம்பிடு.'' அவன் கிளம்புவதற்குள் கடைசி வரியை உரக்கச் சொல்லி ஞாபகப்படுத்தினாள்.


(தொடரும்)

நன்றி: உயிரோசை


திங்கள், அக்டோபர் 11, 2010

வெட்டுப் புலியின் வீச்சுக்கள்

எழுத்தாளர் எம்.ஏ.சுசீலா அவர்களின் பார்வையில்...


வெட்டுப் புலியின் வீச்சுக்கள்




நாவலாசிரியர் தமிழ்மகன்,மற்றும்
இசை விமரிசகரும்,குடும்பநண்பருமான
சிவகுமார் ஆகியோருடன் நான்.
.
எரிவாயு அடுப்புக்களும்,லைட்டர்களும் அறிமுகமாகியிராத ‘40,’50 கால கட்டங்களிலும், அவை அறிமுகமாகிப் பரவலான பயன்பாட்டிற்கு வந்திராத ‘60களிலும் வெட்டுப்புலித் தீப்பெட்டி என்பது தமிழ்மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது ;
குறிப்பிட்ட அந்தக் கால கட்டத்தில் தங்கள் பாலிய மற்றும் பதின் பருவங்களைக் கடந்து வந்திருக்கும் தலைமுறையைச் சேர்ந்த பலரின் நினைவுச் சேமிப்பிலும் இதன் சுவடுகளைக் காண முடியும்
.
அப்போதெல்லாம் வீட்டு மளிகைச் சாமான் பட்டியல்கள் தயாரிக்கப்படுகையில் ,வெட்டுப்புலித் தீப்பெட்டி என்ற அடைமொழியுடனேயே தீப்பெட்டி குறிப்பிடப்பட்டு வந்தது என்பதும் கூட ஞாபக அடுக்குகளில் தங்கியிருக்ககிறது.

மிகமிக யதார்த்தமாகக் கையாளப்பட்டுவந்த இவ்வாறானதொரு புழங்கு பொருளின் முகப்புப் படத்தில் ஒளிந்து கிடக்கும் சுவாரசியமான கதை போன்றதொரு நிகழ்வைத் தேடிக் கொண்டு தனது மிக நீண்ட
காலப்பயணத்தைத் தொடங்குகிறது
தினமணி உதவி ஆசிரியர் தமிழ்மகனின் ’வெட்டுப்புலி’நாவல்.
''புனைவின் சொற்கள் கொண்டு பல படைப்பின் வெற்றிடங்களை மூட முடிகிற படைப்பின் அதிபதியாக நான் தினமும் திரிந்தேன்''
என்று இந்தப் பயணம் பற்றி ஓரிடத்தில் குறிப்பிடுகிறது நாவல்.

நாயின் துணையோடு வயலுக்குப் போன சின்னா ரெட்டி என்பவர் , தன் கதிர் அரிவாளால் சிறுத்தையை வீழ்த்துகிறார்.
நாட்டுப் புறக் கதைகளுக்குப் பல மாற்று வடிவங்களைக் காண முடிவதைப் போலவே அடிப்படையான இந்த ஒரு மூலக் கதை வடிவத்துக்கும் பற்பல சுவையான மாற்று வடிவங்கள் இருப்பதை இந்தக் கதையின் பின்னணியைத் தேடிப்போகும் குழு கண்டடைகிறது.
’’சின்னாரெட்டி சிறுத்தையை வெட்டிய கதையை ஜெகநாதபுரத்தில் ஒருவிதமாகச் சொன்னார்கள்.ரங்காவரத்தில் வேறுவிதமாகச் சொன்னார்கள்.சில உறவுமுறைகளே கூட மாறிப்போயிருந்தன’’
’'கொசப்பேட்டை அண்ணாமலை நாயக்கரும்,ரங்காவரம் ஜானகிராம ரெட்டியும் வெவ்வேறு காலத்தையும்,சம்பவத்தையும் பிய்த்துப் போட்டார்கள்..சில வெற்றிடங்களை இட்டு நிரப்பி தையலடிக்கிறேன்’’
என்கிறது கதை சொல்லும் பாத்திரம்.

குறிப்பிட்ட இந்தக் கதை , நாவலில் ஒரு முகாந்திரம் மட்டும்தான். தீப்பெட்டியும்,அதன் பின்னணி குறித்த விதம் விதமான கதைகளும் நாவலின் இணைப்புக் கண்ணிகளாகக் கூடவே பயணித்தாலும் அவற்றோடு இழை பின்னிக் கொடுக்கப்படும் திராவிட இயக்க அரசியலும், திரைப்பட வரலாற்றுக் குறிப்புக்களுமே வெட்டுப்புலி நாவலில் தனிப்பட்ட கவனத்தைக் கவரும் செய்திகளாக அமைந்திருக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்த வரை சினிமாவும் அரசியலும் பின்னிப் பிணைந்த இரட்டைப் பிறப்புக்களானதைச் சுட்டிக் காட்டும் தமிழ்மகன், ஒவ்வொரு பத்தாண்டும் ஏற்பட்டு வரும் சூழல் மாற்றங்களை அடையாளப்படுத்துவதற்கும் அவற்றையே சுட்டுக் குறிகளாகப் (indicators)பயன்படுத்திக் கொள்கிறார்.

''ஸ்ரீதரும் பாலசந்தரும் திரையுலகத் திருப்பு முனையாக மாறிய நேரத்தில் அண்ணா அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப்பிடித்துவிட்டார்''
‘’தமிழ் சினிமா அறுபது பாடல்களில் இருந்து மெல்ல வடிந்து ஆறு பாடல்களில் வந்து நின்றது ''
என்று '60 கால கட்டத்தையும்

''ஆர்மோனியப் பேட்டியின் இடத்தை கீ போர்டு ஆக்கிரமித்தது. ரோஜா இதழ்கள் ராஜாவை வீழ்த்தியது''
ரோஜா இதழ்கள் ராஜாவை வீழ்த்தியது'' என்று '90 காலகட்டத்தையும் திரையுலகத்தில் நிகழும் மாற்றங்களின் அடிப்படையில் குறிப்பிட்டுக் கொண்டு போகும் நாவல்,

''கண்ணீர்த் துளிகளும்,பச்சைத் தமிழனும் மாற்று மேடைகளில் அர்ச்சிக்கப்பட்டனர்''
’’காந்தியைக் கொன்றவர்களின் வாரிசுகள் ராவணேஸ்வரத்தைக் கொளுத்திய மிச்சத் தீயெடுத்து அதே வால்கள் மூலம் அயோத்தியைப் பற்ற வைத்தனர்’’
என்று அரசியல் அரங்கின் சூழல் மாற்றத்தை வைத்தும் காலத்தைக் கோடிட்டுக் கொண்டு போகிறது.

பூண்டி நீர்த்தேக்கக் கட்டுமானத்தின்போது தாங்கள் குழி வெட்டுவது தங்கள் கிராமத்துக்குத்தான் என்பது தெரிந்தே
அதற்கு மண்வெட்டிப் போடும் மாற்றுத் தொழிலைத் தேடிக் கொண்ட அப்பாவிகிராமத்து ஜனங்கள்,
திரைப்படத் தயாரிப்பை லகுவாகப் பணம் பண்ண ஏற்ற மாற்றுத் தொழிலாக்கிக்கொள்ள எண்ணியபடி சீநிவாசா சினிடோனைத் தேடிக் கொண்டு போகும் நில உடைமைக்காரர் ஆறுமுக முதலி,
குடிசைத் தொழிலாக இருந்த தீப்பெட்டித் தொழில் இயந்திரமயமாக்கப்பட்டதன் அடையாளமாக நிற்கும் பிம்மாண்டமான தொழிற்கூடம்
எனக் கால மாற்றங்களைத் தொழில்துறை மாற்றங்களை வைத்தும் குறிப்பிட்டுக் கொண்டு போகிறது நாவல்.

குறிப்பான கதைக் களம் '30 களுக்குப் பின்புதான் என்றபோதும் காலச் சக்கரத்தில் அதற்குப் பின்பாகவும் சில கட்டங்களில் பயணிப்பதால் 1910 , 2010 இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நெடியதொரு காலப் பின்னணி கொண்டிருக்கும் நாவல்,
தசரதரெட்டி,ஆறுமுக முதலி ஆகிய இரு குடும்பங்களின் மூன்று நான்கு தலைமுறை வரலாறுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருந்தாலும்
அது வாசகர்களின் முன் வைப்பது வெறுமே அந்தந்தக் குடும்பங்களின் வரலாறுகளை மட்டுமல்ல;
வட தமிழகத்தின் நிலவியல்,தொழில் முறை,பண்பாட்டு,அரசியல் மாற்றங்களைத் தமக்குள் பொதிந்து வைத்திருக்கும் அலுப்புத் தட்டாத ஆவணங்களாகவே அவற்றை ஆக்கியிருப்பதையே தமிழ்மகனின் வெற்றி எனக் கூறலாம்.

புற மாறுதல்கள் மட்டுமே மாற்றத்தின் அளவுகோலாகிவிடுவதில்லை.
மனித மனப் போக்குகளிலும் காலம் தன் சுவடுகளைப் பதித்தபடி மாற்றங்களுக்கான மனப் போக்குகளை,சமரசங்களுக்கான விதைகளைத் தூவி விட்டுப் போகிறது.
திராவிட அரசியலில் தனித் திராவிட நாடு கோரிக்கை கைவிடப்படுகிறது.
கறாரான கடவுள் மறுப்புக்கொள்கை, ஒன்றே குலமாக,ஒருவனே தேவனாகப் பரிணமிக்கிறது.
அவசர நிலைக்கொடுமைகளும் கூடக் காலத்தின் கட்டாயத்தால் மறக்கப்பட்டு நிலையான ஆட்சி தர நேருவின் மகளுக்கு அழைப்பு வைக்கப்படுகிறது.
’நாம் இருவர் படத்தில் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்ற சுதந்திரப் பாடலை முழங்க வைத்த செட்டியார் அடுத்த நான்கு ஆண்டுகளில் பராசக்தி வழி திராவிடக் குரலை ஒலிக்கச் செய்கிறார்.

பொதுத் தளத்தில் மட்டுமன்றி நாவல் பாத்திரங்களிடத்திலும் கூட வித்தியாசமான திருப்பங்களும், மாற்றங்களும் சம்பவிக்கின்றன.
சிறுத்தை வெட்டிய தீரராக முன்னிறுத்தப்பட்ட சின்னாரெட்டி, சிறியதொரு வண்டுக்கடிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் இறந்து போகிறார்.
திரைப்படம் எடுக்க ஆசைப்பட்டுக் கொட்டகை மட்டுமே நடத்திவந்த ஆறுமுக முதலியாரின் மகன் சிவகுரு , சினிமாக் களத்தில் அகலக் கால் வைத்து அழிவைச் சந்தித்தவனாய்த் திரைப்படக் கொட்டகைக்கு முன்பாகவே பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
பார்ப்பன எதிர்ப்புத் தளத்தில் , திராவிட சித்தாந்தத்தில் தீவிரமாக இயங்கிய கணேச முதலியாரின் இரண்டாம் மகன் தியாகராஜன், பாண்டிச்சேரி அன்னையின் தீவிர பக்தனாகிறான்.

தமிழ்மகன் ஒரு தேர்ந்த பத்திரிகைக்காரர் என்பதற்கான அழுத்தமான அடையாளங்கள் பலவற்றை நாவலில் பார்க்க முடிகிறது.
(நாவலுக்குரிய பல மூலப் பொருள்களைத் தினமணியின் சேமிப்புக் கருவூலத்திலிருந்து தேடி அடையும் அரிய வாய்ப்பு அவருக்கு வாய்த்திருப்பதை வைத்து மட்டும் இதைச் சொல்லவில்லை.)
நடுநிலையான ஒரு பத்திரிகையாளருக்குரிய சமநிலை நோக்கு , எந்த ஒரு தகவல் அல்லது கருத்துநிலையின் இரண்டு பக்கங்களையும் பாரபட்சமின்றி முன்வைப்பது மட்டுமே.
தமிழ்மகனின் பேனாவும் கூட அதைத்தான் செய்திருக்கிறது.
திராவிட அரசியலின் நெடி கதை முழுக்க அடித்தபோதும் அதன் மறுபுறத்தில் மறைந்திருக்கும் கசப்பான உண்மைகளையும் பதிவு செய்து கொண்டே போகிறது தமிழ்மகனின் எழுதுகோல்.
பார்ப்பன எதிர்ப்பு வாதம் புரிபவர்களாகவே நாவலில் பல பாத்திரங்கள் வந்தாலும் அந்த வாதத்தின் சில வலுவற்ற பக்கங்களையும் முன் வைக்கத்
தவறவில்லை தமிழ்மகன்.

’அண்ணா,பெரியார்,ராஜாஜி,காந்தி,கூவம்,கங்கை,புளிய மரம்,வேலிக் காத்தான் எல்லாமும் இயற்கையின் பொருள் பொதிந்த தேவை. ..,ஒன்று இல்லாமல் இன்னொன்று இல்லை,எதையும் புறக்கணிக்கத் தேவையில்லை அல்லது ஆதரிக்கத் தேவையில்லை..எல்லாமே இயற்கையின் உற்பத்தி...தோன்றுவதெல்லாம் தோன்றியது போல மறையும் என்ற தெளிவுக்கு வந்து சேரும் தியாகராசன் பாத்திரத்திடம் திராவிடன்,ஆரியன் என்ற பேதம் மறைகிறது.
‘வித்தியாசம் இல்லாத எல்லாரும் நாமாக எண்ணுகிற புதிய உலகம் அவனுக்குக் கிடைத்து விட்டது’என்கிறார் ஆசிரியர்.
வாசகருக்கும் அவ்வாறானதொரு பார்வையைத் தருவதே அவரது நோக்கம் என்பதை நாவலின் சாரமான இந்த வரிகள் உணர்த்துகின்றன..

புலி வெட்டியவனின் கதையோடு தொடங்கும் கதையை , வெட்டப்பட்ட புலித் தலைவர் பற்றிய வரலாற்றுச் செய்தியோடு முடித்து இன்றைய நிகழ்வையும் நாவலின் நீரோட்டத்தில் இணைத்து விட்டிருக்கிறார் தமிழ்மகன்.

நாவல் களத்தில் அதிகம் சொல்லப்படாத பின்புலத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டதன் வழி,
காலகட்ட நாவல் (period novel)வரிசையில் காலம் கடந்து நிற்கும் தகுதியைப் பெற்று விடுகிறது தமிழ்மகனின் வெட்டுப்புலி.
நூல்விவரம்;
வெட்டுப்புலி,
தமிழ்மகன்,
உயிர்மை வெளியீடு-திச,2009,
விலை;ரூ.220.00
பக்;374






நன்றி;கட்டுரையை வெளியிட்ட வடக்குவாசல்செப்.2010 இதழுக்கு

LinkWithin

Blog Widget by LinkWithin