ஞாயிறு, நவம்பர் 07, 2010

கடவுளோடு ஒரு கண்ணாமூச்சி! சுஜாதா நினைவாக


அமெரிக்காவில்
கிரெய்க் வெண்டர் புதிதாக- செயற்கையாக ஒரு செல்லை உருவாக்கியிருக்கிறார்.

-இந்தவரி அத்தனை சுவாரஸியமாக இருக்காது.
இதுநாள் வரை இறைவனின் படைப்பு என்றும் இயற்கையின் படைப்பு என்றும் சொல்லி வந்த உயிரை, மனிதர்கள் உருவாக்கிவிட்டார்கள்.

-இப்போது கொஞ்சம் சுவாரஸ்யம் ஏற்பட்டிருக்கும்.
உயிரை உருவாக்குவது என்றால் என்ன என்பதற்கு முன்னால் இதற்கு முன்னர் எப்படி உயிர் உருவானது என்பதைப் பார்க்கலாம்.

இதுவரை 99 சதவீத உண்மையாக நம்பிப் போற்றப்பட்டுவரும் உயிர் உருவானது பற்றிய யூகம் இதுதான்... சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் நீர், சில கார்பன் மூலக்கூறுகள் போன்றவையே -இப்போது செவ்வாய், வியாழன் போன்ற கிரகங்களில் இருப்பவை போல. இந்த மூலக்கூறுக்கள் மீது சக்தி வாய்ந்த மின்சாரம் பாய்ந்தபோது -அதாவது மின்னல் - அமினோ அமிலங்களாக மாறின. அமினோ அமிலங்கள் என்பவை புரதத்தின் அடிப்படை. அவை உயிராக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது ஏன் எனில் அவை தங்களைத் தாங்களே பிரதி எடுத்துக் கொள்கிறது. மேற்கொண்டு புரதம் தயாரித்துக் கொள்கிறது என்பதால்தான். இதை ரெப்ளிகேஷன் என்றும் ட்ரான்ஸ்லேஷன் என்றும் சொல்கிறார்கள்.
ஆரம்பத்தில் உருவான இந்த ஒரு செல் உயிரி, காலப் போக்கில் மீனாக, முயலாக ஆலமரமாக, மனிதனாக என்று பல்வேறு பிரிவாகப் பிரிந்தாலும் இதன் அடிப்படை ஒன்றுதான். அதனுடைய ஜீன்களில் இருப்பவை அடினைன், தயோமைன், சைட்டோசைன், குவானின் என்ற நான்கு வேதிப் பொருள்கள். இந்த நான்கும் "ஏடிஸிஜி' என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்றன.
மனிதனுக்கு இப்போது இந்த நான்கு வேதிப் பொருள்களும் தனித்தனி தனிமமாக கையில் கிடைக்கின்றன. நாமும் ஏன் ஒரு உயிரினத்தை உருவாக்கக் கூடாது என்ற ஆசை துளிர்க்கிறது. போன நூற்றாண்டிலேயே இந்த ஆசை துளிர்த்தாலும் இப்போதுதான் அதன் முதற்படியில் கால் வைத்திருக்கிறார்கள்.
ஏனென்றால் இந்த நான்கு அடிப்படைப் பொருள்களை நாம் நம் லெபாரட்ரியில் வைத்திருந்தாலும் அவற்றை வைத்து ஒரு உயிரை உருவாக்குவதில் சிக்கல் இருக்கிறது.
ஏடிஸிஜி என்ற நான்கு எழுத்துக்களில் இருந்துதான் இன்று உலகில் உள்ள அத்தனை ஜீவராஸிகளும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அது எப்படியென்றால் அந்த நான்கு எழுத்துகளில் இருந்து மூன்று மூன்று எழுத்துக்களாக வெவ்வேறு வரிசையில் இணைந்து வினோத வார்த்தைகளாக அடுக்கப்படுகின்றன. இப்படியாக கோடிக்கணக்கான வார்த்தைகள் இணைந்தால்தான் அவை ஒரு செல்லாக மாறுகின்றன. அவை எந்த வரிசையில் அடுக்கப்பட்டால் என்ன பாக்டீரியாவாக மாறுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் இத்தனை ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ஒரு பாக்டீரியாவைப் படிப்பதற்கே இத்தனை ஆண்டுகள் என்றால் கடற்பஞ்சுகள், மெல்லுடலிகள், கணுக்காலிகள், முதுகெலும்புள்ளவை, பாலூட்டிகள் என்று உயிரினத்தின் இந்த அடுக்குகளைப் புரிந்து கொள்ள இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

க்ரெய்க் வெண்டர் செய்திருப்பது முதல் செல்லை என்றாலும் இது ஒரு மகத்தான சாதனை. படைப்பது என்பது கடவுளுக்கு மட்டும் சொந்தமானது இல்லை (!) என்பதை உணர்த்துகிறது. அதனால்தான் வாடிகன் அலறுகிறது, கடவுளோடு விளையாடுவதை நிறுத்துங்கள் என்று. புதிய புதிய கிருமிகளைத்தான் மனிதன் உருவாக்குவான், நாம் தீர்மானிக்க முடியாத புதிய ஆபத்துகளை உருவாக்கிவிட்டுத் தத்தளிக்கப் போகிறோம் என்று குலைநடுங்குகிறார்கள்.
முதன் முதலாக கல்லை எடுத்து நிலத்தைக் கீறி நானே எனக்குத் தேவையான பயிரைச் செய்யப் போகிறேன் என்று சொன்ன ஆதி விவசாயிக்கு ஏற்பட்ட எதிர்ப்பைப் போலத்தான் இதுவும். மரத்தைவிட்டு சமவெளிக்கு வருவதற்கு அஞ்சி நின்ற குரங்குகளை இவர்களுக்கு ஒப்பிடலாம்.
மனிதன் பகுத்தறியும் விலங்காக இருப்பதால் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பின்போதும் புதிய சவால்களைச் சந்திக்கிறான். அதனோடு போராடுகிறான். இறுதியில் வெற்றியும் பெறுகிறான்.
ஏறத்தாழ 15 ஆண்டுகள் போராடி 40 மில்லியன் டாலர் செலவிட்டு இந்த ஒரு செல் பாக்டீரியாவைத்தானே உருவாக்க முடிந்திருக்கிறது என்று நினைக்க வேண்டாம். இது தன்னைத்தானே பிரதியெடுக்கவும் செயல்திட்ட ஆணைகளை நிறைவேற்றவும் செய்கிறது (புரதம் உருவாக்கவும் செய்கிறது). இனி அடுத்த கட்டங்களுக்குப் போவதற்கு சுலபம். ஜீன்களில் இருக்கும் தகவல் அடுக்குகளைப் படிக்க சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்குவதும் அச்செய்திகளை உள்ளிடுவதற்கு சாஃப்ட்வேர் எழுதுவதும் ஒரு பக்கம் வேகமாக நடைபெறும்.
600 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உலகம் தோன்றியது. ஆனால் உலகம் தோன்றி 200 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் முதல் ஒரு செல் உயிரினம் உருவானது. மனிதன் 15 ஆணடு ஆராய்ச்சியிலேயே அதை உருவாக்கியிருக்கிறான். அந்த விதத்தில் பிரம்மனைவிட பிரில்லியண்ட்!

கிரெய்க் வெண்டர் புதிதாக- செயற்கையாக ஒரு செல்லை இன்னும் பத்தாண்டுகளில் உருவாக்க இருக்கிறார் என்று சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜூனியர் விகடனில் வெளியான ஜினோம் என்ற விஞ்ஞானத் தொடரில் எழுதியிருந்தார். ஏறத்தாழ பத்தாண்டுகளில் அந்தச் சாதனை சாத்தியமாகியிருக்கிறது. சுஜாதாவை நினைத்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.தமிழ் நாட்டில் இப்படி முன்னரே இதைத் தெரிவித்த விஞ்ஞான பேராசிரியர்கள் யாரேனும் இருப்பார்களா என்று தெரியவில்லை. அதிலும் எழுத்தாளர்களில் யாராவது இருப்பார்களா என்று தெரியவில்லை. அவரால் முடிந்த விஞ்ஞான சேவையை அவர் செய்தார் என்பது இதனால் விளங்கும்.
மனிதனுக்கும் ஆமைக்கும் குரங்குக்கும் எறுமைக்கும் எல்லாவற்றுக்கும் இந்த ஜீன்கள் அடிப்படை. அந்த ஜீன் ஏணிகள் மனிதனுக்கு 23 ஜோடி குரோமசோம்களாக இருக்கின்றன. சிம்பன்ஜி குரங்குகளுக்கு 24 ஜோடி. எந்தெந்த உயிரினத்துக்கு எத்தனை ஜோடி குரோமசோம் என்பதில்தான் வித்தியாசம் இருக்கிறது. சொன்னால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவான ஒற்றுமைகள் போக .01 சதவீத வேற்றுமைதான் ஒருத்தரை அரிஸ்டாடிலாகவும் இன்னொருத்தரை அம்பானியாகவும் வேறுபடுத்துகிறது.
சில நோய்களை முளையிலேயே கிள்ளி எறியலாம் என்கிறது இந்த சிந்தடிக் பயோ டெக்னாலஜி. நோயில்லாத மனிதனை உருவாக்குவது சாத்தியம். அதே சமயத்தில் புதிதாக நோய்களை உருவாக்கி அதற்கு மருந்து செய்து லாபம் சம்பாதிப்பதும் நடக்க வாய்ப்பிருக்கிறது. லாபத்துக்காக- பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான் என்று மனிதன் பலமுறை நிரூபித்திருக்கிறான். இவ்வளவு நோய்களை அழிக்கத் தெரிந்தவன் பணம் எனும் கிருமியை அழிக்க மாட்டானா என்ன?

1 கருத்து:

BalHanuman சொன்னது…

மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

LinkWithin

Blog Widget by LinkWithin