வியாழன், ஏப்ரல் 28, 2011

எழுத்தாளர் ராமகிருஷ்ணனுக்கு தாகூர் இலக்கிய விருது
தகுதியான எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தாகூர் விருது கிடைத்திருப்பதற்கு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.

விருதுகுறித்த விவரம்:

மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய விருது (Tagore Literature Award) ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது,

91 ஆயிரம் ரொக்கப்பணமும் தாகூர் உருவச்சிலையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் எட்டு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள மிகச்சிறந்த இலக்கியவாதியின் ஒரு நூலிற்கு தாகூர் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது,

இதற்கானத் தேர்வுப் பணியை மேற்கொள்வது டெல்லியில் உள்ள சாகித்ய அகாதமி நிறுவனம், இந்த ஆண்டு இந்திய அளவில் எட்டு இலக்கியவாதிகள் இவ்விருதினைப் பெறுகிறார்கள்

2010ம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலுக்கு வழங்கப்படுகிறது.

யாமம் நாவல் சென்னையின் முந்நூறு ஆண்டுகாலச் சரித்திரத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல், இந்த நாவல் முன்னதாக தமிழின் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு கனடாவின் இயல்விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

பெருமைக்குரிய இந்திய விருதான தாகூர் இலக்கியவிருது தமிழுக்கு முதன்முறையாக வழங்கப்படுகிறது, அவ்வகையில் எஸ். ராமகிருஷணன் மிகுந்த பெருமையடைகிறார்.விருதுவழங்கும் நிகழ்ச்சி மும்பையில் மேமாதம் 5ம் தேதி மாலை மேற்கு தாதரில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திர் வளாகத்தில் நடைபெற்ற உள்ளது. இதில் இந்தியாவின் முக்கிய இலக்கியவாதிகள் மற்றும் கொரிய அரசின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

•••

திங்கள், ஏப்ரல் 11, 2011

காதுகள் : காதுள்ளவர்கள் கேட்கக் கடவது.

எம்.வி. வெங்கட்ராம்"என்ன வேலை செய்கிறீர்கள்?"

"எழுத்தாளரா இருக்கேன்.''

"அதுசரி சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க?''

ராஜாஜி ஒரு எழுத்தாளரிடம் நடத்திய உரையாடலின் ஒரு பகுதியாக இதைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். எழுத்தாளராக இருப்பது ஒரு வேலையல்ல. சொல்லப்போனால் எழுத்து எழுதுபவனைக் காப்பதைவிட அவனுடைய உயிரை வதைப்பதாகத்தான் இருக்கிறது. ஜெயகாந்தன் போன்ற வெகுசிலரே எழுத்தின் மூலமே போராடி வாழ்ந்து காட்டியவர்கள். எழுத்தாளனாக வாழலாம் என்று நினைத்த பலர் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களால் புறக்கணிக்கப்பட்டு மனத்தாக்குதலுக்கு ஆளானவர்கள்தான். குறிப்பாக தமிழில் இதற்கு தடுக்கி விழுந்தால் உதாரணங்கள் உண்டு.

புதுமைப்பித்தன் தொடங்கி ஜி.நாகராஜன், பிரமிள், நாரண. துரைக்கண்ணன், கோபி கிருஷ்ணன் என்று நிறையபேரைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எழுத்தை நம்பியே ஜீவிதம் நடத்தியவர்களில் மிக முக்கியமானவர் எம்.வி. வெங்கட்ராம். எழுத்து ஒரு மனிதனை எப்படி விழுங்கும் என்பதற்கு ஒரு சாதனை உதாரணம் அவர்.

படைப்பிலக்கியத்தின் மூலம் வாழ்க்கை நடத்த முடியாத நிலையில் அறிஞர்களின் வாழ்க்கைக் கதை, சுயமுன்னேற்ற நூல்கள் என எழுதி வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருந்தது. (இதை சமீபத்தில் அறம் என்ற சிறுகதையாகப் படைத்திருந்தார் ஜெயமோகன்.)

ஓயாத மன உளைச்சல். அவருக்குள்ளேயே வேறு குரல்கள் கேட்க ஆரம்பித்தன. காதுக்குள் எந்நேரமும் யார் யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். உறங்க முடியவில்லை. உட்கார முடியவில்லை. எதிலும் கவனம் கொடுக்க முடியவில்லை. குடும்பத்தைக் கவனிக்க முடியவில்லை. எதையுமே கவனிக்க முடியவில்லை என்பதுதான் சரி.

இந்த அனுவபத்தை அவர் காதுகள் என்ற நாவலாக்கினார். எழுத்தாளன் தன்னை வருத்தி அந்த அனுவபத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலமாகச் செய்யும் மாபெரும் தியாகம் அது. உன்னை யார் கேட்டார்கள் என்று வெளியிலிருந்து ஒரு நபர் சுலபமாகக் கேட்டுவிட முடியும். ஆனால் எழுத்தாளன் அப்படியொரு அனுபவத்தைத் தருவதற்காகத்தான் தவமிருக்கிறான். யாருடைய எதிர்பார்ப்பையும் பலனாக எதிர்பார்க்காமல் அதைச் செய்கிறான். அவனுக்காக எங்கோ, எப்போதோ கிடைக்கப் போகிற வாசகனுக்காக அதைச் செய்கிறான். இந்த தியாகத்துக்கு எம்.வி. வெங்கட்ராமின் காதுகள் நாவலுக்கு சாகித்திய அகாதமி கிடைத்தது.

காதுக்குள் எந்நேரமும் கேட்டுக் கொண்டிருக்கும் சப்தம் தரும் ஹிம்சையை வாசகனுக்கு இறக்கி வைப்பதில்தான் வெங்கட்ராமின் முழு ஆளுமையும் வெளிப்பட்டிருக்கிறது. நாவலில் பார்வதியும் பரமசிவனும் சண்டை போட்டுக் கொள்ளுவார்கள். பச்சை பச்சையான வார்த்தைகள்.. கெட்ட வார்த்தைகளில் ஒருவரை ஒருவர் சரமாறித் திட்டிக் கொள்வார்கள். பராசக்தி அந்த நாவலின் கதாநாயகன் மீது காம இச்சை கொண்டு புலம்புவாள். தன் காமத்துக்கு இணங்கும்படி ஏங்குவாள், மிரட்டுவாள், அழுவாள்...

திடீரென்று வேறுசில நபர்களும் குறுக்கிட்டுக் கத்துவார்கள். நாயகனால் சாப்பிட முடியாது, தூங்க முடியாது. சொந்தமாகத் தொழில் செய்ய பணம் ஈட்ட கிளம்புவான் வழியிலேயே காதுக்குள் இருக்கும் நபர்கள் விவகாரம் பண்ண ஆரம்பித்துவிடுவார்கள்.

நாயகனுக்கு நிறைய குழந்தைகள். மனைவி கர்ப்பமாக இருப்பாள். அவளுக்கு போஷாக்கான உணவு கொடுக்க முடியாது. குழந்தைகள் பசியிலும் பட்டினியிலும் துவளும். குடும்பத்தைக் காக்க வேண்டிய நாயகனுக்கு இப்படியொரு பிரச்சினை. குழந்தைகள், மனைவியின் நிலைமை புரியும். ஆனால் அதை மாற்றுவதற்கு எதுவுமே செய்ய முடியாது.

மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பார்கள். மனைவி பலவீனமாக இருப்பாள். குழந்தையோ மனைவியோ இறந்து போய்விடுகிற நிலை. சைக்கிள் எடுத்துக் கொண்டு போவார். குழந்தை இறந்துபோய்விடும். அந்தக் குழந்தையை அடக்கம் செய்ய மருத்துவமனையில் காசு கேட்பார்கள். காசு இருக்காது. நாவலின் பரிதாபத்தின் உச்சம் இது.

குழந்தையைத்தானே அடக்கம் செய்து கொள்வதாக வாங்கி வருவார். சைக்கிளில் கேரியரில் குழந்தையை வைக்க முடியாது. முன் பக்க ஹாண்டில் பாரில் ஒரு பையில் போட்டு மாட்டிக் கொண்டு வீடு வந்து சேருவார். சைக்கிள் ஹாண்டில் பாரில் காய் காறி வாங்கிவருவதுபோல இறந்து போன தன் குழந்தையைத் தூக்கி வரும் அந்தக் காட்சி அதிர்ச்சியானது.

வறுமையின் கையாலாகத்தனத்தின் வறட்சியான சித்திரம். அங்கே குழந்தை, பாசம், நாகரிகம், பழக்க வழக்கம், மரபு, சடங்கு போன்ற அத்தனைச் சொற்களும் பொருளிழந்து தொங்கும்.

வீட்டுக்கு வந்து சேருவார். வீட்டின் பின் புறத்தில் குழி தோண்டி புதைப்பார். அப்போது பக்கத்துவீட்டில் இருக்கும் ஒரு பெண் அதைப் பார்த்துவிடுவாள். எங்கள் வீட்டின் பக்கம் ஏன் புதைக்கிறாய் என்று கூப்பாடு போடுவாள். அவர் பால்மாறாமல் மீண்டும் தோண்டி எடுத்து தன் வீட்டுக்கு நெருக்கமாக இன்னொரு குழியைத் தோண்டி குழந்தையை மீண்டும் புதைப்பர். இந்தக் காட்சிகளின் போது நாம் பேசி வருகிற சமூக கோட்பாடுகள் அத்தனையும் மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறி எதிரில் வந்து நிற்கும்.

இறுதியில் அவர் காதுகளின் குரலில் இருந்து விடுபட்டு மீள்வதோடு கதை முடியும்.

இந்த நாவல் இப்போது என்னிடம் இல்லை. படித்த ஞாபகத்தில் இருந்துதான் எழுதியிருக்கிறேன். நாவலை மறுபடி புரட்டிப் பார்த்துவிட்டு எழுதுவதைவிட மனதில் வடுவாக பதிந்திருக்கும் காட்சியை எழுதுவது மேலும் உண்மையாக இருக்கும் என்றே நினைத்து இதை எழுதியிருக்கிறேன்.

பியூட்டிபுல் மைண்ட் என்றொரு உண்மைக் கதை நூல். ஒரு எகனாமிஸ்ட்டின் உண்மைக் கதை அது. அவருக்கும் காதுக்குள் குரல்கள் கேட்கும். பொருளாதார பெரிய மேதையான அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி மீண்டு வருவதுதான் கதை. அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. எம்.வி.வெங்கட்ராமின் வாழ்க்கையேப் போலவே மிக லேசான ஒற்றுமை அந்த உண்மை மனிதனின் கதையிலும் காணக்கிடைத்தது. பியூட்டிபுல் மைண்ட் சினிமாவாகவும் வந்து ஏராளமான ஆஸ்கர் பரிசுகளையும் வென்றது.

உலுக்கி எடுக்கும் உண்மைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் இது.

காதுகள்
எம்.வி. வெங்கட்ராம்
அன்னம் அகரம் பதிப்பகம்
பிளாட் 1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர்-613007.
தொ.பே.: 04362-279288


ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

இடம் மாறியது (2011-04-01)

பிரபஞ்சன் என் பிரியத்துக்குரிய எழுத்தாளர். அவருடைய கனடா பயணம் பற்றி எழுத்தாளர் அ.முத்துலிங்கம் எழுதியுள்ள அனுபவ குறிப்பு இது. படித்த போது இருவருமே என்னை நெகிழசெய்துவிட்டனர். அ.முத்துலிங்கத்துக்கு நன்றி.பிரபஞ்சன் எழுதிய ’வானம் வசப்படும்’ நாவலில் ஒர் இடம் வரும். ஏழைக் கவிராயர் ஒருத்தர் நீண்ட தூரம் பயணம் செய்து ஆனந்தரங்கம் பிள்ளையை பார்க்கப் போகிறார். கவிராயரின் மனைவி வீட்டில் சுகவீனமுற்றுக் கிடப்பதால் அவர் மனது சங்கடப்பட்டாலும் நம்பிக்கையுடன் பிள்ளை வர்களிடம் செல்கிறார். பிள்ளை வீட்டில் இல்லை, களத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். கவிராயர் களத்துக்கே போய்விடுகிறார். தான் வரும் வழியில் கவனம் செய்த பாடல் ஒன்றை பிள்ளையின் முன் பாடி அதற்கு பொருளையும் சொல்கிறார். கவிராயருக்கு யாசகம் கேட்டு பழக்கமில்லை. கூச்சத்துடன் நிலத்தை பார்த்தபடி நிற்கிறார்.
பிள்ளை உடனே பதில் சொல்லவில்லை. அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். பெரிய தட்டிலே பூ, பழம், வெற்றிலை, பாக்கு, பட்டு வஸ்திரத்துடன் பொற்காசுகளாக ஆயிரம் வராகன் பரிசளிக்கிறார். கவிராயர் முகம் பரவசமடைந்து கண்ணீர் துளிர்க்கிறது. அவரை பரிசுகளுடன் வண்டியில் ஏற்றி அனுப்பி வைக்கிறபோது பிள்ளை சொல்வார் ‘இப்போதைக்கு ஏழ்மையை இடம் மாற்றியாகிவிட்டது. கவலைப்படாதீரும்.’
பிரபஞ்சன் படைப்புகளில் நான் முதலில் படித்தது இந்த நாவலைத்தான். அது படித்து இன்றைக்கு 15 வருடம் ஆகியிருக்கும். அந்த நாவலில் எனக்குப் பிடித்த வசனம் இதுதான். இன்றுவரை ஞாபகத்தில் நிற்கிறது. ‘ஏழ்மையை இடம் மாற்றியாகிவிட்டது.’ உலகத்திலே ஏழ்மையை ஒழிக்க முடியாது. ஓர் இடத்தில் ஒழித்தால் இன்னொரு இடத்தில் முளைத்துவிடும். இடம் மாற்றத்தான் முடியும். John Steinbeck என்ற அமெரிக்க நாவலாசிரியர் எழுதிய The Grapes of Wrath நாவலிலும் இப்படி ஓர் இடம் வரும். இந்த உலகில் செல்வந்தர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் ஏழைகள் நிரந்தரமானவர்கள். அவர்களை ஒழிக்க முடியாது. இந்த இரண்டு நாவல்களிலும் காணப்பட்ட ஒற்றுமை என்னை வியப்படைய வைத்தது.
பிரபஞ்சனைப் பற்றி அந்தக்காலம் தொட்டு எனக்குள் பெரிய மதிப்பிருந்தது. ஆனால் புத்தக அட்டையில் காணப்படும் அவருடைய சதுரக் கண்ணாடி படத்தை பார்க்கும்போது ஓர் அச்சம். கடுமையானவராக இருப்பார் என்றே தோன்றியது. நான் அவரைச் சந்தித்தது கிடையாது. சமீபத்தில் உதயன் விழாவில் கலந்துகொள்வதற்காக ரொறொன்ரோ வந்திருந்தபோது அவரைச் சந்திக்க முடிந்தது. ஸ்டைலாக தொப்பி அணிந்து, கறுப்புத்தோல் அங்கி மாட்டி வந்த அவர் அப்படியே என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டார். இருபது வருடமாக பிரிந்திருந்த நண்பர்கள் சந்தித்ததுபோல அது இருந்தது. இரண்டு நிமிட நேரத்துக்கு பிறகு அவர் பேசப் பேச நானும் நண்பர்களும் நிறுத்தாமல் சிரித்தபடியே இருந்தோம். அவர் 15 நிமிடத்துக்கு ஒரு முறை வெளியேபோய் சிகரெட் பிடித்துவிட்டு வருவார். நாங்கள் கொஞ்சம் ஓய்வெடுப்போம். மறுபடியும் உள்ளே வந்து அவர் பேசத் தொடங்கியதும் சிரிக்கத் தொடங்குவோம்.
பேச்சு ’வானம் வசப்படும்’ நாவலைப்பற்றி திரும்பியது. அது சாகித்ய அகாதமி பரிசு பெற்ற சரித்திர நாவல். அதை எழுதுவதற்கு எப்படி தூண்டுதல் கிடைத்தது. சரித்திர நாவல் என்றால் வரலாறு படிப்பதில் நிறைய நேரம் போய்விடும். ஆராய்ச்சிக்குறிப்புகள் எழுதி வைக்கவேண்டும். எப்படி அந்த நாவலை எழுதி முடித்தார் எனக் கேட்டோம். அவர் ஆனந்தரங்கம்பிள்ளை நாட் குறிப்பை படித்திருக்கிறார். அப்போதே விதை விழுந்துவிட்டது. அந்த நாட்குறிப்பு வித்தியாசமானதாக இருக்கும். 18ம் நூற்றாண்டு பேச்சுத் தமிழுக்கு ஒரே உதாரணம் அந்த டைரிதான். பல இடங்களில் தமிழா அல்லது வேறு மொழியா என ஐயம் தோன்றிவிடும். அந்த டைரியை முழுக்கப் படித்து, புரிந்து அது சம்பந்தமான வரலாற்று நூல்களையும் ஆராய்ந்து முடித்த பின்னரே நாவல் சாத்தியமானது. பத்து வருடத்து உழைப்பு என்று கூறினார்.
அந்த நாவலில் பானு என்றொரு தாசி வருவாள். விருந்து ஒன்றில் அலாரிப்பு ஆடிய பின்னர் பதம் ஆடுவாள். ‘ஆறுதலாரடி? அந்த மாதொருபாகனைத் தவிர’ என்று தொடங்கும் அருமையான பாடல். இதை யார் எழுதினார்கள் என்று கேட்டதற்கு அவர் தானே அதை எழுதியதாகக் கூறினார். பல வருடங்களாக என் மனதில் கிடந்த சந்தேகத்தை அன்றுதான் என்னால் போக்க முடிந்தது.
பிரபஞ்சனிடம் எழுத்து துறைக்கு எப்படி வந்தீர்கள்? எந்த வயதில் எழுதத் தொடங்கினீர்கள்? என்று கேட்டேன். நண்பர் ஜேசுதாசன் வீட்டு இரவு விருந்துக்கு அவர் வந்திருந்தார். அதே விருந்துக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். பிரபஞ்சன் வெளியே சென்று சிகரெட் பிடித்துவிட்டு திரும்பினார். பெரிய கதை பிறக்கப் போகிறது என்று எல்லோருக்கும் தெரிந்தது. விருந்துக்கு வந்திருந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் எல்லோரும் அவரை சூழ்ந்துகொண்டார்கள்.
பிரபஞ்சனிடம் காணப்பட்ட முக்கியமான வித்தியாசம் அதுதான். அவர் ஓர் எழுத்தாளரைப் போலவே இல்லை. அந்த வீட்டு செல்ல நாய்களுடன் விளையாடினார். குழந்தைகளை இழுத்து வைத்து பேசினார். பெண்களுடன் சினிமா பற்றியும், புதுமுக நடிகைகள் பற்றியும் தொலைக்காட்சி தொடர்கள் பற்றியும் பேசினார். அவர்கள் எல்லோரும் ஒருவர் தவறாமல் அவர் பேச்சில் மயங்கியிருந்தது தெரிந்தது. என்னுடைய மனைவி அடுத்தநாள் காலை சொன்னார். ‘பிரபஞ்சன் பெரிய எழுத்தாளர். ஆனால் என்ன நல்ல மனுசன். அவருக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. சுவாரஸ்யமாக வேறு பேசுகிறார். பெரிய அறிவு ஜீவிபோல முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பயமுறுத்தவில்லை. எல்லோரையும் சக மனுசராகப் பார்க்கிறார்.’ என் மனைவி தன் மனதில் தொகுத்து வைத்திருந்த எழுத்தாளர் பிம்பத்தை பிரபஞ்சன் போட்டு உடைத்துவிட்டார். என் மனைவியிடமிருந்து ஒரு நற்சான்றிதழ் லேசாகப் பெறக்கூடியது அல்ல. நாற்பது வருட காலமாக நான் அதற்காகத்தான் முயன்று கொண்டிருக்கிறேன்.
சிகரெட்டை முடித்துவிட்டு பிரபஞ்சன் உள்ளே நுழைந்தார். அவருடைய மதுக் கோப்பையை யாரோ நிறைத்திருந்தார்கள். ‘எனக்கு பதினாறு வயதானபோது அப்பா ஒரு நல்ல நோட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுத்தார். அதன் பளபளப்பான ஒற்றைகளைக் கிழித்து காதல் கடிதங்கள் எழுதத் தொடங்கினேன். அப்படி காதல் கடிதங்கள் எழுதியே அரைவாசி நோட்டுப் புத்தகம் முடிந்து போனது. காரணம் நான் அப்பொழுதெல்லாம் ஒரு கொள்கை வைத்திருந்தேன். எந்தப் பெண்ணை பார்த்தாலும் ஒரு காதல் கடிதம் கொடுக்க வேண்டும் என்று. ஒரு பெண் பள்ளிக்கூடத்துக்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் கோயிலை ஒருதரம் சுற்றிவிட்டு வீட்டுக்கு போவாள். இவளை எப்படியோ தவறவிட்டு விட்டேன். இவளிடம் கடிதம் கொடுப்பதற்கு சரியான இடம் கோயில்தான் என்று தீர்மானித்தேன். நோட்டுப் புத்தகத்தில் பக்கங்களை கிழித்து ஆறு பக்க காதல் கடிதம் ஒன்றை எழுதினேன். ஐந்தே முக்கால் பக்கம் அவளை வர்ணித்தது. மீதியில் என் காதலைச் சொல்லியிருந்தேன்.
கோயிலில் அவள் சுற்றியபோது நானும் சுற்றினேன். முதல்நாள் கடிதம் கொடுப்பதற்கு போதிய தைரியம் வரவில்லை. இரண்டாவது நாள் அவள் பின்னாலேயே போய் பின்னுக்கு நின்றபடி கடிதத்தை நீட்டினேன். அவள் பெற்றுக்கொண்டாள். அதுவே பெரிய வெற்றி. வழக்கம்போல என்னுடைய முகத்தில் எறியவில்லை. துணிச்சலாக கடிதத்தை பெற்றுக் கொண்டவளுக்கு அதை ஒளித்து வைக்கும் சாமர்த்தியம் இல்லை. பிடிபட்டுப் போனாள். கடிதத்தை தூக்கிக்கொண்டு அவளுடைய அப்பா என் வீட்டுக்கு வேகமாக வந்ததை நான் பார்த்துவிட்டேன். நான் அதே வேகத்துடன் வீட்டைவிட்டு வெளியேறி முதல் வந்த பஸ்ஸை பிடித்து காசு தீருமட்டும் பயணம் செய்து கடைசி பஸ் நிறுத்தத்தில் இறங்கி நின்றேன். இருட்டிக்கொண்டு வந்தது, போக இடமில்லை. எப்படியோ சித்தப்பா தேடி அங்கே வந்து என்னை பிடித்து திரும்ப வீட்டுக்கு அழைத்துப் போனார்.
என்னை நிற்கவைத்து ஆறுபக்க கடிதத்தையும் அப்பா வாசித்து முடித்தார். இந்த பூலோகத்தில் நான் அனுபவித்த அவமானத்தில் அதனிலும் கீழான ஒன்று என் வாழ்கையில் பின்னர் நடக்கவில்லை. கடிதத்தை வாசித்து முடித்த பிறகு அப்பா என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தேன். அவர் சொன்னார், ‘இவ்வளவு நல்லாய் எழுதுறாயே. இதுவெல்லாம் உனக்கு தேவையா?’ அவ்வளவுதான். என்னை தண்டிக்கவில்லை, என் எழுத்து திறமையை பாராட்டினார். எனக்குள் ஏதோ படைப்பாற்றல் இருக்கிறது என்று என்னை உணரவைத்த தருணம் அதுதான்.
’உங்களுடையது காதல் திருமணம்தானா?’ இது அடுத்த கேள்வி. ‘எனக்கு வீட்டிலேதான் பெண் பார்த்தார்கள். சொந்தத்துக்குள்ளே. அப்பா இதுதான் பெண் என்றார். நான் சரி என்றேன். உடனேயே மணமுடித்து வைத்துவிட்டார்கள். எனக்கு வேலை இல்லை. நானா கல்யாணம் வேணும் என்று கேட்டேன். திருமணம் ஆன பின்பு அப்பா என் குடும்பத்தையும் சேர்த்து பார்த்துக்கொண்டார். நான் எழுத்து வேலையில் மும்முரமானேன்.’
கனடா வந்த பின்னர் அவருடைய மனைவியிடம் பேசினாரா என்று கேட்டேன். வந்த மறு நாளே தொலைபேசியில் அழைத்ததாகவும், மறுபடியும் அடுத்தநாள் காலை (சனிக்கிழமை) பேசப் போவதாகவும் சொன்னார். இரவு நடுநிசியாகிவிட்டது. விருந்தினர்கள் ஒவ்வொருவராக கிளம்பினார்கள். நானும் மனைவியும் விருந்துக்கு அழைத்த தம்பதியினரிடம் நன்றி கூறிவிட்டு புறப்பட்டோம். பிரபஞ்சனிடம் மூன்று நாட்கள்தான் பழகியிருந்தேன். ஆனால் நீண்ட வருடங்களாக அவரை தெரியும் என்பதுபோல ஓர் உணர்வு. அவரிடம் விடை பெற்றோம். இரண்டு கைகளையும் விடாமல் பற்றிக்கொண்டு விடை தந்தார்.
விருந்து நடந்தது வெள்ளிக்கிழமை இரவு. ஒரு நாள் கழித்து பிரபஞ்சனுக்கு ஒரு தொலைபேசி வந்தது. பிரபஞ்சனின் மனைவி பாண்டிச்சேரி ஆஸ்பத்திரியில் இறந்துவிட்டார். பிரபஞ்சன் அந்தச் செய்தியை யாருடனும் பகிர்ந்துகொள்ளவில்லை. அந்தச் செய்தியுடனே முழு இரவையும் கழித்தார். தன்னை ரொறொன்ரோவுக்கு அழைத்தவர்களை சங்கடப்படுத்தக் கூடாது என்று அவர் நினைத்திருக்கலாம். அது அவருடைய பெருந்தன்மை. திங்கள் காலை ரொறொன்ரோவிலிருந்து புறப்படும் விமானத்தை பிடிப்பதற்கு தயாராகிக்கொண்டிருந்தபோது அந்தச் செய்தியை அழைத்தவர்களுடன் பகிர்ந்துகொண்டார். இடிபோல வந்திறங்கிய மரணச் செய்தியை கேட்டு அவர் மனம் என்ன பாடு பட்டிருக்கும். விமானத்தில் பயணம் செய்த அந்த நீண்ட தூரத்தை எப்படி அவர் தனிமையில் கழித்திருப்பார்.
அந்த வெள்ளிக்கிழமை இரவு விருந்தில் பிரபஞ்சனை சுற்றியிருந்து நண்பர்கள் பேசிக்கொண்டிருந்த நேரம் அவர் மனைவி என்ன செய்திருப்பார். அவர் உடல் நலமாக இருந்தாரா அல்லது அப்போதே ஆஸ்பத்திரியில் அனுமதியாகிவிட்டாரா? தான் மனைவியிடம் சனிக்கிழமை காலை பேசப்போவதாக பிரபஞ்சன் சொன்னார். ஆனால் பேசினாரா என்பது தெரியவில்லை. நான் அவருக்கு என்ன ஆறுதல் கூறமுடியும். முதன்முதல் சந்தித்தபோது அவர் என்னை ஆரத் தழுவி கட்டிக்கொண்டதை நினைத்துக்கொண்டேன். அதையே அவருக்கு திருப்பி தருகிறேன்.
பிரபஞ்சனின் நாவலில் வரும் ஆனந்தரங்கம் பிள்ளை சொன்னதுபோல உலகத்தில் நிச்சயமானது ஏழ்மைதான். அதை ஒழிக்க முடியாது, இடம் மாற்றி வைக்கலாம். மரணமும் அப்படித்தான், நிச்சயமானது. ஆனால் ஒரே இடத்தில் தங்காது. இடம் மாறிக்கொண்டே இருக்கும்.

LinkWithin

Blog Widget by LinkWithin