சனி, டிசம்பர் 31, 2011

சொல்வனத்தில் வெட்டுப்புலிக்கான இரண்டாவது விமர்சனம்

சொல்வனம் இதழில் இது வெட்டுப்புலிக்கான இரண்டாவது விமர்சனம். அருணகிரி எழுதியிருக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் முத்தாய்ப்பாக இடம்பெற்ற விமர்சனம் என்றும் நினைக்கிறேன். ஒவ்வொரு பத்தாண்டின் ஆரம்பத்திலும் அந்தப் பத்தாண்டை ஒருகழுகுப் பார்வையில் வேகமாக ஓட்டிப் பார்ப்பது துருத்திக் கொண்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.
நூலுக்கு முன்னுரை தருவது நூலின் இயல்பைப் புரிந்தகொண்டு படிக்க ஒரு லகு தன்மையைத் தரும். அதையேதான் நான் பத்து பகுதிகளாகப் பிரித்துதருவதற்கு முயன்றேன். கதை சொல்வதில் ஒரு உத்தியாக அதைச் செய்தேன்.
மற்றபடி நாவலைபல்வேறு தளங்களில் வைத்து அலசி ஆராய்ந்திருக்கிறார் அருணகிரி.
இந்த நாவல் குறித்து எழுத்தாளர் பிரபஞ்சன் பேசும்போது திராவிட அரசியல், தமிழ்சினிமா, வெட்டுப்புலி தீப்பெட்டியின் வரலாறு என்று மூன்றும் இந்த நாவலில் பின்னிப் பிணைந்திருக்கிறது. தவிர நான்காவதாக காலம் என்ற நான்காவது அம்சமும் இந்த நாவலில் இருக்கிறது.. அது பிரமிப்பானது என்று கூறினார்.
அருணகிரியும் அதையே இன்னொருவிதமாக சொல்லியிருக்கிறார்.
அருணகிரி அவர்களின் வரிகளை அப்படியே கீழே தருகிறேன்.


லஷ்மண ரெட்டி வெள்ளைக்காரன் குதிரையில் திருட்டுத்தனமாய் ஏறி சவாரி விடுவதன் பரவச விவரிப்பில் கதை தொடங்குகிறது. அருமையான தொடக்கம். வரலாற்றின் சம்பவங்களால் அடித்துச்செல்லப்படும் அவரது வாழ்க்கை கதையின் முடிவில் ஈஸி சேரில் கொண்டு வந்து அவரைப் போடுகிறது. பெரியார் பக்தராய்த்தொடங்கும் லட்சமண ரெட்டி பிற்காலத்தில் ”தான் மட்டுமேயான ஒரு இயக்கமாக மாறிப்போகிறார். ஒருகாலத்தில் ஊரையே எதிர்க்கத்துணிந்தவர், பேரனுக்கு ”ராஜேஷ் என்று பெயர் வைத்தது நாராசமாய் இருந்தாலும்” ஒன்றும் சொல்ல சொல்லாமல் அமைதியாய் இருந்து விடுகிறார். அந்த அபத்தமான இடத்தில் நின்று கொண்டு காலம் அமைதியாய்ப் புன்னகைக்கிறது. அந்தப்புன்னகையை நமக்கு அடையாளம் காட்டும் கணத்தில் படைப்பூக்கத்தின் சாராம்சமான ஓர் இடத்தை”வெட்டுப்புலி” தொட்டு விடுகிறது. வெற்றிகரமான ஒரு புனைவிற்கு வேறு என்ன வேண்டும்?


சொல்வனத்தில்...
வெட்டுப்புலி
அருணகிரி | இதழ் 62 |
வெட்டுப்புலி கடந்த எண்பதாண்டு தமிழக வரலாற்றை வரலாற்று சம்பவங்களின் வழியாகப்பேச முனைந்திருக்கிறது. அரசியல் அளவில் இது திராவிட இயக்கங்களின் வளர்ச்சியின் வரலாறும் ஆகும். கடந்த நூற்றாண்டு தமிழக சமூக அரசியல் நூல் பந்தில் வெட்டுப்புலி சின்னா ரெட்டி எங்கோ இருக்கும் ஒரு முனைதான். ஆனால் அதை உருவத்தொடங்கியதில் ஒரு முக்கால் நூற்றாண்டும் வெளியே வந்து விழுகிறது.

பிராமணரல்லாத சாதிகளில் செல்வ வளமும் நிலம் உடை ஆதிக்கமும் கொண்ட சாதிகளை எடுத்துக்கொண்டு அந்தக் குடும்பங்களில் நிகழும் சம்பவங்களின் வழியாகக் கதையை நகர்த்திக்கொண்டு போகிறது. மூன்று சாதிகள் இவ்வாறு பேசப்படுகின்றன:

- வெட்டுப்புலி இளைஞனான சின்னா ரெட்டியின் உறவான தசரத ரெட்டியின் மகன் லஷ்மண ரெட்டி.

லஷ்மண ரெட்டி காலப்போக்கில், குறிப்பாக தனது ஆதர்சமான ஈவேராவின் மறைவுக்குப்பின், பார்வையாளராகவும் அனுதாபியுமாக மட்டுமே ஆகி விட்டவர். லஷ்மண ரெட்டி ஈவேரா தவிர வேறு யாரும் ஆதர்சம் இல்லை. அவரது சிந்தனைப்போக்கு அவரைத்தாண்டி அவர் மகன் நடராஜனின் வாழ்க்கையில் படர்ந்து விளையாடுகிறது.

- சினிமா எடுக்க ஆசைப்படும் ஆறுமுக முதலி. இது திராவிட சினிமா களம் எனலாம். இங்கும் ஆறுமுக முதலியைத்தாண்டி அவரது மகன் சிவகுருவையே சினிமா மோகம் கடுமையாய் புரட்டிப்போடுகிறது. சினிமா மோகம் அவன் வாழ்க்கையைத்தடம் புரள வைக்கிறது.

ஆறுமுக முதலியின் அண்ணா கணேச முதலி கடும் பிராமண வெறுப்பாளர். சென்னையில் மாம்பலத்தில் கிரயம் பிரித்து எதுத்துக்கொண்ட பெரிய சொந்த வீட்டில் வசதியாய் வாழ்ந்தாலும் எல்லாவற்றிலும் பிராமண சதியைக் காண்பவர். இவர் திராவிட இயக்கத்தின் மைய நீரோட்டமானதொரு தளம். கணேச முதலி மகன் நடேசன் பெரியார் பக்தனாகவும் தியாகராசன் அண்ணா பக்தனாகவும் ஆகிறார்கள்.

- மணி நாயுடு - இது திராவிட காண்ட்ராக்ட் வியாபார களம் எனலாம். வரதராஜுலு நாயுடுவின் ஜமீன் பரம்பரையில் வந்த இவர் திராவிட அரசியலில் எல்லா இடங்களிலும் பெருகும் லஞ்சத்தின் அங்கமாகிப்போனவர். ஊரில் கைதேர்ந்த திருடனான படவேட்டான் திருடிக்கொண்டு வந்த தங்க முருகன் சிலையை வைத்து தொடர்கிறது இந்த ஜமீன் பரம்பரையின் ஏறுமுகம்.

பரம்பரைச் செல்வமும் சமூக செல்வாக்கும் நிறைந்த இந்த மூன்று குடும்பங்களையும் திராவிட இயக்கத்தளத்தில் பிணைக்கும் ஒரே அம்சம் அவர்களது பிராமண வெறுப்பு. அந்த வெறுப்பு ரெட்டி குடும்பத்தில் 1930-களின் உரையாடல் ஒன்றின் வழியாக கதையில் வெளியாகும் இடம் திராவிட இயக்க விதைக்குள் இருந்த ஜீவனை நமக்கு அடையாளம் காட்டுகிறது. ”குருவிகாரன், பள்ளி, பறையன், செட்டி, கம்மான் எல்லாம் சமம்னு சட்டமே வரப்போவுதாம்” என்று சொல்லக்கேட்கும் தசரதரெட்டியின் மனைவி மங்கம்மா அதிர்ச்சியில் “மேலும் முன்னேறணும்னு நினைப்பானா குருவிக்காரனும் நாமும் சமம்னு சொல்வானா?” என்று கேட்க, தசரத ரெட்டி ”குருவிக்காரனும் நாமும் சமமாயிடணும்னு இல்லடி, பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத்தாண்டி சட்டம் போடச்சொல்றாங்க” என்கிறார்.

சூத்திரர்கள் கோவிலுக்குள் எந்த அளவுக்கு போக முடியுமோ அது வரை தாழ்த்தப்பட்ட அரிஜன மக்கள் போகலாம் என்று காந்தியடிகள் கூறியபோது ஈவேரா ஆவேசமாய் இவ்வாறு அறிவிக்கிறார்: ”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது”.

தசரத ரெட்டி மங்கம்மாவுக்கு சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் ஈவேரா மொழியில் ஆவேசமாய் வெளிவரப்போகும் பிற்கால வார்த்தைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.முழுவதும் படிக்க...

திங்கள், டிசம்பர் 26, 2011

ஆண்பால் பெண்பால் புத்தக வெளியீட்டு விழா..
திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் தலைவர் கு.கருணாநிதி பொறியியல் படித்த ஓர் இலக்கிய இளைஞர்.
படைப்பிலக்கியங்களைத் தேடிப் பிடித்துப் படிக்கும் நல்ல படிப்பாளி. நவீன பிசிராந்தையார் நட்பு போல கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக செல் போனில் மட்டுமே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். வெட்டுப்புலி நாவலின் தீவிரமான வாசகர் அவர். ஆண்பால் பெண்பால் வெளியீட்டுவிழா மேடையில்தான் அவரை முதன் முதலாக நேரில் பார்த்தேன். அவரை நூலை பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்ற வேண்டும் என்று கேட்டு போனில்தான் அழைப்பு விடுத்தேன். மிகச் சரியாக விழாவுக்கு வந்துவிட்டார். விழாவைப் பற்றி அவருடைய வலைதளத்தில் எழுதியது இது:


ஒரு நாள் மாலை பவாவுடன் மிகத் தீவிரமாக, அப்போது நான் அந்த நேரத்தில் படித்துக் கொண்டிருந்த வெட்டுப் புலி என்ற நாவலைப் பற்றி மிகவும் பாராட்டிக் கொண்டிருந்தேன். பவா என்னிடம் பேசிக் கொண்டே, அவரது கைப்பேசியில் யாரையோ அழைத்து, இதோ பேசுங்கள்! என்று என்னிடம் கொடுத்தார். யாரிடம்? என்று கேட்டதற்கு, இப்போது நீங்கள் பாராட்டிக் கொண்டிருந்தீர்களே, வெட்டுப் புலி நாவல், அதை எழுதியவர் என்று சொன்னார்.
அப்படித்தான் எழுத்தாளர் தமிழ்மகன் எனக்கு அறிமுகமானார். ஓரு எழுத்தாளராக ஏற்கனவே அவர் நிறைய எழுதியிருந்தாலும் கூட நான் படித்தது அவரது புகழ்பெற்ற நாவலான வெட்டுப் புலிதான். உங்களில் கூட யாரேனும் அந்த பழைய தீப்பெட்டியினை பார்த்திருக்கலாம். அதன் அட்டையில் ஒரு புசி ஒரு மனிதனை தாக்க பாய்ந்து கொண்டிருக்கும். அம்மனிதனோ, தன்னிடம் இருக்கும் ஒரு கதிர் அரிவாளை வைத்து அந்தப் புலியை தாக்க முயலுவான். அவன் காலடியில் ஒரு நாய் அமர்ந்து அந்தக் காட்சியினை பார்த்துக் கொண்டிருக்கும். வெட்டுப் புலி தீப்பெட்டி என்று என் பள்ளி நாட்களில் மிகவும் புகழ் பெற்ற தீப்பெட்டி அது.
எனது பள்ளி நாட்களில் தீப்பெட்டிகளின் அட்டைகளை சேகரித்து வைப்பது எனக்கு ஒரு பொழுதுபோக்கு. இப்போது போல வேக்ஸ் தீப்பெட்டியெல்லாம் அன்று கிடையாது. மேலும், தீக்குச்சி தயாரிப்பதற்கான மருந்து மிகவும் தட்டுப்பாடான காலம் என்பதாலும், ஒரு ப்ராண்டிற்கு இவ்வளவுதான் மருந்து சப்ளை என்பதாலும், பல நூறு தீப்பெட்டிகள் எனக்கு கிடைத்தன. அதுவும், குறிப்பாக பழனி, ஶ்ரீவில்லிப்புத்தூர், சாத்தூர் போன்ற ஊர்களுக்கு செல்லும்போது என் கற்பனைக்கு எட்டாத தீப்பெட்டி அட்டையெல்லாம் எனக்கு கிடைத்தது.
சார்லி சாப்லின், மவுண்ட் எவரெஸ்ட், முகமது அலி, சிவாஜி கணேசன் நடித்திராத அவரின் பல வேடங்களின் வரைபடங்கள் என சேகரிக்க சேகரிக்க அற்புத பொக்கிஷமாக சேர்ந்து கொண்டே போனது. வெட்டுப் புலி மிகச் சுலபமாக கிடைக்கக் கூடிய ஒன்று என்பதால் என் சேகரிப்பில் வெட்டுப் புலி இல்லை.
ஆனால், அந்த வெட்டுப் புலியின் படத்துக்கு பின் இருக்கும் கதையை பற்றி என் இளம் வயதில் எங்கோ பேசியிருப்பது எனக்கு லேசாக நினைவிருக்கிறது. அந்த நாய்தான் கடைசியில் அவனை புலியிடம் இருந்து காப்பாற்றியது என்று டீ வாங்கி வர செல்லும் போது சோமு கடையில் சொன்னார்கள். என் நினைவிலிருந்து மறைந்து போயிருந்த வெட்டுப் புலி இத்தனை நாட்கள் கழித்து இந்த வெட்டுப்புலி நாவல் மூலம் மீண்டு வந்தது.
அதன் கதையை நான் சொல்லப் போவதில்லை. அது நிச்சயம் படித்து பார்க்க வேண்டிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு நாவல். ஆனால், கலைஞர், எம்.ஜி.ஆர் இருவரது ஆட்சியையும் பார்த்த, கமல், ரஜினியின் ஆரம்பக் காலப் படங்களைப் பார்த்து வளர்ந்த என்னைப் போன்ற நாற்பதுகளில் இருப்பவர்கள் நிச்சயம் அந்த புத்தகத்தை மிகவும் ரசிப்பார்கள்.

எனது மனங்கவர்ந்த வெட்டுப் புலியின் நாவலாசிரியர் தமிழ்மகன் என்னை சில வாரங்களுக்கு முன் அழைத்து அவரின் அடுத்த புத்தகமான ஆண்பால் பெண்பால் நாவலை வெளியிட அழைத்தார். ஒப்புக் கொண்டு சென்று விழாவினில் கலந்து கொண்டேன்.
அவ்விழாவில் நான் பேசியதைப் பற்றி தமிழ்மகன் அவர்கள் அவரின் வலைப் பக்கத்தில் http://www.tamilmagan.in/2011_12_05_archive.html குறிப்பிட்டுள்ளார்.

ஆண்பால் பெண்பால் புத்தக வெளியீட்டு விழா..

வெள்ளி, டிசம்பர் 23, 2011

ஆண்பால் ..பெண்பால் பற்றி கேபிள் சங்கர்

வெட்டுப்புலி என்கிற சூப்பர்ஹிட் நாவலை எழுதிய தமிழ்மகனின் புதிய நாவல். வெளியீட்டன்று போக முடியவில்லை. அதனால் அடுத்த நாளே புத்தகத்தை வாங்கி விட்டேன். சென்ற நாவலைப் போன்றே வித்யாசமான நாவல். கதை கருவிலும், சொல்லப்பட்ட விதத்திலும்.பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும், ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சமர்ப்பித்திருக்கிறார் ஆசிரியர் தமிழ்மகன்.ஆண்பால் ..பெண்பால் பற்றி கேபிள் சங்கர்

வியாழன், டிசம்பர் 22, 2011

வாழ்த்து

2011-ம் ஆண்டு எழுத்தாளர்களையும் இளம் எழுத்தாளர்களையும் ஒரு சேர அங்கீகரித்திருக்கிறது.
கௌரவிக்கப்பட வேண்டிய பலரும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பூமணி - விஷ்ணுபுரம் விருது
சு.வெங்கடேசன் - சாகித்ய அகாதமி விருது
தேவதச்சன்- விளக்கு விருது
வண்ணநிலவன், வண்ணதாசன்- சாரல் விருது
சு.வேணுகோபால் - பாஷா பரிஷத் விருது
ஜெயமோகன் - முகம் விருது
அனைவருக்கும் அன்புடன் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

ஆண்பால் பெண்பால் - யுவகிருஷ்ணா விமர்சனம்
தமிழ்நாட்டில் தமிழர்களை விட அதிகமாக வசிக்கும் இனம் ஒன்று உண்டு. இவர்களை ‘எம்.ஜி.ஆர் பைத்தியங்கள்’ என்றும் சொல்லலாம். ‘எம்.ஜி.ஆர் ரசிகர்கள்’ என்றும் சொல்லிக் கொள்ளலாம். ‘பைத்தியம்’ என்பதே சரியென்று ‘ஆண்பால், பெண்பாலை’ வாசிக்கும்போது தோன்றுகிறது. நானும் கூட அந்தப் பைத்தியங்களில் ஒருவன்தான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

‘பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்... ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும்’ தமிழ்மகனால் சமர்ப்பிக்கப்பட்ட இந்நூல், எவ்வகையில் அந்த சமர்ப்பணத்தை நியாயப்படுத்துகிறது என்பது, இறுதி அத்தியாயம் வரை நீளும் சஸ்பென்ஸ்.

‘யாரோ எழுதிய இந்த நாவலில் மிகுந்திருக்கும் அதிகப்படியான குழப்பங்கள் குறித்து என்னுடைய விளக்கம்’ என்று நாவல் தொடங்குவதற்கு முன்பாகவே பதினாறு பக்க படா நீளமான விளக்கம் ஒன்றினை தருகிறார் தமிழ்மகன். உண்மையில் இந்த விளக்கம்தான் குழப்புகிறதே தவிர, நாவல் தெளிவான நீரோடையாகவே பாய்ச்சல் கொள்கிறது. இந்த நாவலை எழுதியது நானல்ல என்று வாக்குமூலம் கொடுக்கிறார் நாவலாசிரியர். அதற்கேற்ப நாவலின் முதல் பாகம் ‘பிரியா சொல்வதாக பிரமிளா எழுதியது’ என்றும், இரண்டாம் பாகம் ‘அருண் சொல்வதாக ரகு எழுதியது’ என்றும் இருக்கிறது. நாவலை எழுதியவர் தமிழ்மகனல்ல என்றால் யாருக்கு ராயல்டி தருவது என்று முன்னுரைக்கு வந்து குழம்புகிறார் மனுஷ்யபுத்திரன். இவ்வாறாக கதை தொடங்குவதற்கு முன்பாக நடக்கும் புதிர் விளையாட்டே சுவாரஸ்யத்துக்கு சுழி போடுகிறது.

இந்நாவலில் சொல்லப்படும் முதலிரவு, பர்ஃபெக்டான முதலிரவு. இதுவரை ‘அந்த’ அனுபவம் இல்லாத இருவர் தனித்து இரவைக் கழிப்பதில் எதிர்கொள்ளும் சங்கடங்கள். அங்கே நடக்கும் சிறு சிறு அசைவுகளையும் கூட ஆண்மனம் எதிர்கொள்வதற்கும், பெண்மனம் எதிர்கொள்வதற்குமான வேறுபாடுகள் என்று நுட்பமான சித்தரிப்புகளில் கவர்கிறார் தமிழ்மகன்.

‘நாம் எதை அடைய விரும்புகிறோமோ, அதுவாகவே மாறிப்போய் விடுகிறோம்’ என்று காந்தியோ, காப்மேயரோ அல்லது யாரோ சொல்லியிருக்கிறார்கள். ‘நாம் எதை அதிகமாக வெறுக்கிறோமோ, ஒருகாலத்தில் அதை நேசிக்க ஆரம்பித்துவிடுவோம்’ என்று இந்த கதையைப் படித்தால் உணர்ந்துக் கொள்ள முடிகிறது. நாயகி ப்ரியாவுக்கு எம்.ஜி.ஆர் என்றால் உயிர். நாயகனுக்கும் சரி. நாவலாசிரியருக்கும் சரி, அவர் வேப்பங்காய். ஆனால் பாருங்கள். ப்ரியா பைத்தியம் பிடித்து எம்.ஜி.ஆர் தமிழர் என்று நிரூபிக்க எங்கெல்லாம் பயணிக்கிறாளோ, என்னவெல்லாம் செய்கிறாளோ.. அத்தனையையும் நாவலாசிரியர் செய்திருக்கிறார். இவரே கும்பகோணத்துக்கு போயிருப்பார். எம்.ஜி.ஆர் படித்த பள்ளி, பிரசாதம் வாங்கிச் சாப்பிட்ட கோயில் என்று எல்லாவற்றுக்கும் சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள் பற்றிய குறிப்புகளை ஆவணக் காப்பக அலுவலகங்களுக்கு சென்று தேடியிருக்கிறார். ஆனால் பிரியாவுக்கு மட்டும் மனநிலை சரியில்லை என்று காதுகுத்துகிறார். எனக்கென்னவோ ப்ரியாவை விட பெரிய எம்.ஜி.ஆர் பைத்தியமாக தமிழ்மகனைதான் நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு இளம்பெண்ணுக்கு வெண்குஷ்டம் வருகிறது. இதையடுத்து இயல்பாக தோன்றும் தாழ்வு மனப்பான்மை. மனச்சிதைவு. அதன் வாயிலாக அப்பெண்ணுக்கு தோன்றும் மாயத்தோற்றங்கள். திருமணக் குழப்பங்கள், இறுதியில் விவாகரத்து, மனநோய் காப்பகம் என்று போகிறது கதை.

இந்தக் கதைக்கு ரோஷோமான் பாணியில் கதை சொல்லும் வடிவத்தை அமைத்திருக்கிறார் ஆசிரியர். முதல் பாகம் முழுக்க சொல்லப்படும் அதே கதைதான், இரண்டாம் பாகத்திலும். அதே காட்சிகள், கிட்டத்தட்ட வசனங்களும் கூட அதே. விருமாண்டி மாதிரியேதான். விருமாண்டியிலாவது கேமிரா கோணங்களில் வித்தியாசம் காட்டமுடியும். இது அச்சில் இருக்கும் நாவல். இங்கேதான் தமிழ்மகனின் சாமர்த்தியம் மிளிருகிறது. ஒரே கதையை திரும்பப் படிக்கும் அலுப்பு சற்றுக்கூட ஏற்பட்டுவிடாத வகையில் மொழியை லகான் பிடித்து கட்டுப்படுத்துகிறார்.

இரண்டு பாகங்களுக்கும் தலா இருபது அத்தியாயங்கள். இருவருக்கும் மனப்பிளவு மனநோயின் காரணமாக என்றே முப்பத்தி ஒன்பதாவது அத்தியாயம் வரைக்கும் நினைத்துக் கொண்டிருக்க, ஒரே ஒரு பத்தியில் போகிறபோக்கில் கொளுத்திப்போடும் ஒரு மேட்டரில் கதையின் ஆதாரத்தன்மையே யூ டர்ன் அடிக்கிறது. மிக முக்கியமான இந்த சஸ்பென்ஸை கூட வெளியீட்டுவிழாவில் ஒரு பெண்கவிஞர் சூறைத்தேங்காய் உடைப்பது மாதிரி போட்டு உடைத்துவிட்டார். மனம் பிறழ்ந்த பெண் மனம், பெருந்தன்மையான ஆண் மனம் என்று ஆணாதிக்கப் பார்வையில் கதை எழுதிவிட்டாரே தமிழ்மகன் என்று ஆரம்பத்தில் ஏற்பட்ட கோபம் முழுக்க இறுதியில் கரைந்து, உருகிப் போய்விடுகிறது.

பெண்கள் எம்.ஜி.ஆரை ரசிப்பது உடல்சார்ந்த ஈர்ப்பின் காரணமாகதான் என்று பொதுவான ஒரு அபிப்ராயம் உண்டு. ஒரு ஆண் எம்.ஜி.ஆரை எப்படிப் பார்க்கிறானோ, அதே மாதிரி இயல்பான ரசனைதான் பெண்ணுடையதும் என்பதை பிரச்சாரநெடி இல்லாமல் சொல்லியிருப்பது சிறப்பு. அதே மாதிரி காமம் என்கிற ஒற்றை விஷயத்தை அணுகுவதில் ஆண், பெண் இருவருக்குமான 360 டிகிரி கோணத்தையும் இண்டு, இடுக்கு விடாமல் அலசித் துவைத்திருப்பது, நாவலாசிரியரின் நீண்டகால அனுபவத்தை(?) வெளிப்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் கதையில் தமிழ்மகனே ஒரு பாத்திரமாக வருகிறார். நாயகன் இவரை போற்றுகிறார் (செக்ஸ் பத்தி நல்லா எழுதறாரு). நாயகி இவரை வெறுக்கிறார் (அந்தாளுக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது).

முதல் பாகத்தில் ஒருவரும், இரண்டாம் பாகத்தில் அடுத்தவருமாக இரண்டே பேர் இருநூற்றி ஐம்பது பக்கத்துக்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தால் போர் அடிக்காதா? அதிலும் வசனங்கள் மிகவும் குறைவு. போர் அடிக்கவேயில்லை என்று நான் வேண்டுமானால் கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறேன். சரியான மொழிநுட்பத்தை கைகொண்டால் எவ்வளவு வறட்சியான விஷயங்களையும் எப்படி வெகுசுவாரஸ்யமாக்க முடியும் என்பதை இந்த நாவல் மூலம் அறிந்துகொள்ளலாம்.

‘ஆண்பால், பெண்பால்’ ஒரு குடும்பக் கதை. அதில் அரசியல் இருக்கிறது. வரலாறு இருக்கிறது. ஒரு நாவல் இலக்கியமாக கதை மட்டும் போதாது, நல்ல களத்தையும் அடையாளம் காணவேண்டும் என்று பாடமெடுத்திருக்கிறது இந்நாவல். தமிழ்மகனின் முந்தைய சூப்பர் ஹிட் ‘வெட்டுப்புலி‘’’’க்கு முற்றிலும் மாறுபட்ட கதை என்றாலும், அது பாய்ந்தது எட்டு அடி, இது பாய்ந்திருப்பது முப்பத்தி இரண்டு அடி.

நூல் : ஆண்பால் பெண்பால்
ஆசிரியர் : தமிழ்மகன்
விலை : ரூ.200
பக்கங்கள் : 256
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18.
தொலைபேசி : 91-44-24993448. இணையத்தளம் : www.uyirmmai@gmail.com

ஆண்பால் பெண்பால் - யுவகிருஷ்ணா விமர்சனம்

திங்கள், டிசம்பர் 05, 2011

ஆறு கோணங்களில் ஆண்பால் பெண்பால்


ஆண்பால் பெண்பால் நாவல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. வெளியீட்டு விழாவின் போதே அறுபத்தைந்து எழுபது பிரதிகள் வரை விற்றுவிட்டதாக மனுஷ்யபுத்திரன் மறுநாள் காலை சொன்னதில் இருந்து விழாவின் வெற்றியை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது.
இருபத்தோராம் நூற்றாண்டில் மைக் இல்லாமல் ஒரு புத்தக வெளியீட்டுவிழா நடைபெற்றது என்ற விதத்தில் இந்த விழா மறக்க முடியாத விழாவாக மாறிவிட்டது.
புக் பாயிண்ட் அரங்கத்துக்கான மைக் வைத்திருக்கும் அந்த மர்ம நபர் கூட்டம் ஆரம்பிக்கும்போது தலைமறைவாகிவிட, செல்போன், ஈ மெயில் போன்ற எந்த தொழில்நுட்பத்துக்கும் அகப்படாமல் போகவே, உரத்தகுரலில் பேசி எல்லோரும் அரங்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்.
வரவேற்புரை நிகழ்த்திய கவிஞர் மனுஷ்யபுத்திரன் முகம் தெரியாத அந்த மைக் ஆசாமி மீதும் புக் பாயிண்ட் நிர்வாகத்தின் மீதும் மிகுந்த கோபமடைந்தார்.
வெட்டுப்புலி நாவல் வெளியான ஆண்டிலேயே மறுபதிப்புக்கு போனது வலைப்பூக்களினால்தான் என்று பாராட்டினார்.
தலைமைதாங்கி நடத்திய எழுத்தாளர் சா.கந்தசாமி, நாம் மைக் பற்றி பேசுவதற்கா வந்தோம், நாவல் பற்றி பேசுவோம் என்று ஆரம்பித்து விழாவின் இறுக்கத்தைத் தளர்த்தினார். பத்திரிகையாளர்கள் கதைகளின் அருமைபற்றித் தெரியாதவர்களாக இருப்பதில் ஆரம்பித்து பத்திரிகையில் இருப்பவர்களின் எழுத்தில் தனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்ததை தமிழ்மகன் தகர்த்திருக்கிறார் என்றார்.
பாரதி, புதுமைப்பித்தன், டி.எஸ்.சொக்கலிங்கம், சி.சு செல்லப்பா, கு. அழகிரிசாமி, கல்கி, பிரபஞ்சன், வண்ணநிலவன், விந்தன், ஜி.முருகன் போன்ற பலரும் பத்திரிகையாளர்கள்தான். கடந்த நூறாண்டு பத்திரிகை வரலாற்றில் இரண்டு டஜன் பேர்கூட தேறவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்திருக்கலாம்.
நாவலின் கதை என்ன என்பதைச் சொல்லாமல் நாவலின் எளிமை, உத்தி என அவர் அரை மணிநேரம் வரை பேசியது ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
வெறும் 500 சொற்களை வைத்தே இத்தனை அழுத்தமான அடர்த்தியான நாவலை படைத்திருப்பதற்காகப் பாராட்டினார்.
ஞாநி முன்னுரையை மட்டுமே படித்ததாகச் சொன்னார். இந்த நாவலை நான் எழுதவில்லை என்று அழுத்தம் திருத்தமாக ஆதாரபூர்வமாக நான் விவாதித்திருப்பதை ஞாநி சிலாகித்தார். அந்த முன்னுரையும் சேர்த்து நாவலின் ஒரு பகுதியாக இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
நூலை வெளியிட்ட திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் தலைவர்கு.கருணாநிதியின் பேச்சு மிகமிக எதார்த்தமாக இருந்தது. சிறுவயதில் எம்.ஜி.ஆருக்கு மாலை போட்ட அனுபவத்தைச் சொன்னார். எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருந்த நேரம். பெரிய கூட்டம் அவருக்கு மாலை போட காத்திருக்கிறது. அவருக்கு மாலை போடும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். இவரை எடுத்துக் கொஞ்சியபடி, உன் பெயர் என்ன என்று கேட்கிறார். இவர் கருணாநிதி என்கிறார். எம்.ஜி.ஆர் முகத்தில் சிறிய அதிர்ச்சி... அல்லது வியப்பு.ஒரு முத்தம் தந்து கீழே இறக்கிவிடுகிறார். எம்.ஜி.ஆரின் கரங்கள் என் மீது பட்ட காரணத்தினாலேயே மக்கள் அவரை எப்படிக் கொண்டாடினார்கள் என்று சொன்னார். அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவர் வாயில் சர்க்கரை போட்ட பாட்டியை நினைவுகூர்ந்தார்.
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. முன்னரே தெரிந்திருந்தால் இதை நாவலில் சேர்த்திருப்பேன். நாவலுக்கு இந்த மாதிரி விஷயங்கள்தான் எனக்குத் தேவையாக இருந்தது. நாவலில் நான் எந்த மாதிரி விஷயங்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறேன் என்பதை உணர்ந்து அவர் பேசியது ஆச்சர்யமாக இருந்தது.
நூலை பெற்றுக் கொண்ட இயக்குநர் ஜனநாதன், விழாவுக்கு வருவாரா என்பதே சந்தேகமாக இருந்தது. அன்று காலையில்தான் அவருடைய பால்ய சினேகிதர் இறந்து போய்விட்டதாகவும் நெடுநாளாக அவனைப் பார்க்காமல் இருந்துவிட்டேன். பலமுறை அவன் போன் செய்திருந்தும் சந்திக்க முடியாமல் போய்விட்டது. மிகுந்த வருத்தமாக இருக்கிறது என்று மத்தியானம் என்னிடம் தெரிவித்தார். அவரை வற்புறுத்தி அழைப்பதற்கு சங்கடமாக இருந்தது. அந்த மனநிலையிலும் அவர் வந்திருந்தது என்னை நிலைகுலைய வைத்தது.
எந்த விஷயமும் மைக் மூலமாக வெளி உலகுக்குச் சென்றடைவதில்லை. இங்கு இந்தக் கூட்டத்தைக் கேட்டவர்கள் அடுத்து இருப்பவர்களுக்குச் சொல்வதன் மூலமே வெளி உலகுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. இந்த நல்ல நாவல் அப்படித்தான் வெளியே பிரபலமாகும் என்றார்.கரு.பழனியப்பன் பேச்சு அரங்கத்தைக் கட்டிப் போட்டது என்றுதான் சொல்லவேண்டும். அவர்தான் எம்.ஜி.ஆரைப் பற்றி இந்த நாவலில் இடம் பெற்ற அத்தனை விவகாரத்தையும் தீவிரமாக எடுத்து வைத்தவர். அவர் சொன்ன டிராகுலா உதாரணம் ரசிக்கும்படி இருந்தது.
நாவலில் மொத்தம் ஐந்தே காட்சிகள்தான் என்று அவர் சினிமா போல விவரித்தார். அதையே ஆண் ஒரு முறை சொல்லி முடிக்கிறான். பிறகு பெண் ஒரு முறை சொல்லி முடிக்கிறாள்... ஆனால் எப்படி சுவாரஸ்யமாக சொல்ல முடிந்தது இவரால்? எனக் கேட்டு என்னைத் திரும்பிப் பார்த்தார். மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்காது என்பதை என் நாவல் மூலமாகவே நிரூபிக்க நினைத்தார். அதற்காகத்தான் இந்த நாவலுக்கு அப்படியொரு முன்னுரையையே நான் எழுத வேண்டியதாக இருந்தது. எம்.ஜி.ஆரை நாவலின் ஒரு பாத்திரமாக அமைத்திருப்பதின் வெற்றியை அவர் பெரிதும் பாராட்டினார். நிறைய தெரிந்தவர்களாக இருப்பவர்கள் சொந்த வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்களா என்பதை நாவலில் வரும் ரகு கதாபாத்திரத்தோடும் எழுத்தாளர் சுஜாதாவோடும் ஒப்பிட்டது அவருடைய நுண்ணிய வாசிப்பை வெளிப்படுத்துவதாக இருந்தது.
ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலியல்ரீதியான சிக்கலைப் பற்றி பேச ஆரம்பித்தார் கவிதா முரளிதரன். கோர்வையாக அவருடைய கருத்துகளை எழுதியே எடுத்துவந்திருந்தார். கதையின் க்ளைமாக்ஸில் இருந்து நாவலை அவர் விமர்சிக்க ஆரம்பித்தார். நாவலின் க்ளைமாக்ûஸ சொல்லிவிடுவதால் இந்த நாவலின் சுவாரஸ்யம் குறைந்துவிடாது என்று அவர் நம்பிக்கையாக கூறியது எனக்குப் பிடித்திருந்தார். கணவன் அருண், மனைவி பிரியா இருவருக்குமான பிரச்சினை என்பது நாவலின் கடைசி அத்தியாயத்தில் அடியோடு மாறிப்போய்விடுவதாக அவர் சொன்னது அவருடைய கவனமான வாசிப்பைக் காட்டியது.
நாவலில் சொல்லப்பட்ட உளவியல் சிக்கல்களை அவற்றின் பெயர்களோடு சொன்னார் பெரியார்தாசன். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் இருக்கும் உளவியல் நோய்க்கூறு எத்தகையது என்று அவர் விவரித்தார். மிக நீண்ட உரை. அழமானது. நாவலில் நான் ஒரு பத்தியில் மிகக் கடுமையான வாக்கிய அமைப்பை எழுதியிருந்தேன். அதைக் குறிப்பு எதுவும் இல்லாமல் அப்படியே சொன்னார். இத்தனைக்கும் நாவலை அவருக்கு விழா நாளுக்கு முதல்நாள் இரவு பத்து மணிக்குத்தான் கொண்டுபோய் சேர்த்தேன். இரவே நாவலை படித்து முடித்துவிட்டு கதாபாத்திரங்களை அக்குவேறு ஆணிவேராக ஆய்ந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது.
ஏறத்தாழ எல்லாருமே வெட்டுப் புலி நாவல் பற்றி ஒருவரியாவது பேசினார்கள். எல்லா புகழும் மனுஷ்யபுத்திரனுக்கே.
அந்த நாவலின் கரு என்ன என்பதை நான்கு வரியில் சொன்னேன். உடனே எழுதித்தாருங்கள் என்று அவர் என்னை ஊக்குவித்தார். வெட்டுப்புலியை எழுதியது அப்படித்தான். ஆண்பால் பெண்பால் பற்றி இரண்டுவரிதான் சொன்னேன். இதோ இப்படியொரு விழா நடத்தி பெருமைபடுத்திவிட்டார்.
என் மீது அவர் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டேன்.
விழாவில் பேசிய எல்லோரும் ஒருவர் சொன்னது போல இன்றி இன்னொருவிதமான கோணத்தில் அலசியிருந்தனர். அரசியல்ரீதியாக, பாலியல்ரீதியாக, உளவியல்ரீதியாக, பெண்ணிய நோக்கில், இலக்கிய நோக்கில், சினிமா பார்வையில் என விதவிதமாக இருந்தது.
ஆண்பால் பெண்பால் பற்றிய என்னுடைய கோணம் என்னுடைய நாவலாக வந்திருக்கிறது என்று என் ஏற்புரையில் சொன்னேன்.

LinkWithin

Blog Widget by LinkWithin