வியாழன், நவம்பர் 13, 2014

இடுக்கண் களைதல்



தளபதி திரைப்படம் ரிலீஸ். 10 ரூபாய் டிக்கெட் 40 ரூபாய் வரைக்கும் ப்ளாக்கில் போனது. தியேட்டர் வாசலில் பேனர்களை மட்டும் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய அன்று இரவுதான் அண்ணாமலை காரில் வீட்டுக்கு வந்தான்.
அவன் வந்த காரில் மொத்தம் ஐந்து பெண்கள் இருந்தனர். கார் கண்ணாடிகளை ஊடுருவிக்கொண்டு அவர்களைப் பார்ப்பதற்குக் கூச்சமாக இருந்தது. அவர்கள் அனைவரும் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதே என்னை சங்கடப்படுத்திக்கொண்டிருந்தது. அண்ணாமலை வந்த காரில்தான் கொத்தாக அத்தனைப் பெண்கள் இருந்தார்கள். அண்ணாமலையிடம் பேசிக்கொண்டே என்னையும் மீறி காரைப் பார்ப்பதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. காருக்கு ஒரு மெல்லிய விளக்கு எரிந்தது. அந்த வெளிச்சம் என் ஆர்வத்தை அதிகப்படுத்துவதாக இருந்தது.
டீக்கடையை மூடுகிற நேரம். ‘‘நாயர் ஏழு டீ’’ என்று ஒருவித கட்டளைத் தொனியோடு சொன்னேன். என்னைப் பார்க்க காரில் விருந்தினர் வந்திருக்கிற கர்வம் என்று அதைச் சொல்லமுடியாது. காரில் வந்திருக்கிறவர்கள் எதிரில் என்னை அசிங்கப்படுத்திவிடாதே என்ற அறிவுறுத்தல். நாயரும் பெருந்தன்மையாக டீ போடுவதற்கு முனைந்தார். அவர் கண்களில் காசை இப்போதே கொடுப்பாயா, இல்லை கடன் சொல்லிவிட்டுப் போவாயா? என்ற சந்தேக மின்னலை கவனிக்க முடிந்தது. அவருடைய சந்தேகம் வலுவடையும்முன் நான் வேறு பக்கமாகத் திரும்பிப் பேச ஆரம்பித்தேன்.
தெரு அடங்கும் இரவு. வீட்டு விளக்குகள் அணைக்கப்பட்டு தெருவிளக்கு வெளிச்சத்தில் பெருச்சாளிகள் பவனி வரும் நேரம். பதினோரு மணிக்கு மேல் இருக்கும். தூங்க ஆரம்பித்தபின்புதான் கதவைத் தட்டி எழுப்பினான் அண்ணாமலை. கல்லூரி முடிந்த பிறகு ஐந்தாறு வருஷங்களுக்குப் பிறகு திடுதிப்பென்று இப்படி வந்து நிற்கிறான். அர்த்த ராத்திரியில் வந்ததால், என்னவோ ஏதோ என்று பதறிப் போய் லுங்கியை இறுக்கி, சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே வந்தேன். பயப்படும்படியாக ஒன்றும் இல்லை போல அவன் எனக்கு முன்னால் நடந்து தெருவைக் கடந்து ஓரம் கட்டி நிறுத்தப்பட்ட காரில் இருந்து சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டான். அவன் ஒரு வாடகைக் காரில் வந்திருப்பது தெரிந்தது. வாழ்க்கையில் என்னைக் காரில் தேடி வந்த முதல் நண்பன் இவனாகத்தான் இருக்கும். அது வாடகைக்காராக இருந்தாலும் நண்பன் வந்த கார் என்பதால் அதை அருகில் சென்று பார்த்தபோதுதான் கார் முழுக்கப் பெண்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன்.
சற்றே விலகி டீக்கடை பக்கமாக வந்து, ‘‘வீட்டை எப்படியோ கண்டுபிடிச்சுட்டியே..?’’ என்றேன்.
‘‘குத்து மதிப்பாத்தான் வந்தேன்’’
‘‘யாருப்பா இந்தப் பொண்ணுங்கல்லாம்?’’ இதுதான் நான் முதலில் கேட்க நினைத்த கேள்வி.
அவன் சொன்ன சிறிய பதில் ஏகப்பட்ட விளக்கங்களைத் தருவதாக இருந்தது.
‘‘கேர்ள்ஸ்’’.
அந்த வார்த்தைக்கு அகராதியில் இல்லாத வெவ்வேறு அர்த்தங்களை உணரத் தொடங்குவதற்கு நான் கார் கண்ணாடிகளுக்குள் ஊடுருவிப் பார்க்க வேண்டியிருந்தது.
‘‘மலேசியாவுக்கு அனுப்பி வெக்கிறேம்பா.. ஒன்னொன்னும் அரை லட்சம்’’
படுவேகமாக நான் எல்லாவற்றையும் புரிந்துகொண்டேன். மூளை அத்தனை விழிப்படைந்து விட்டது. குற்றம், தவறு, கைது, புரோக்கர், அபாயம், ஆபத்து என்ற கோர்வையற்ற வார்த்தைகள் அலைமோதின. ஒவ்வொன்றும் வார்த்தைகளாக இல்லாமல் வாக்கியங்களாகவும் சம்பவங்களாகவும் தோன்றி மறைந்தன. என்னுடைய தூக்கம் சுத்தமாக விலகிவிட்டது.
‘‘அண்ணாமலை இதெல்லாம் என்னடா?’’
‘‘தப்பா எதுவும் செய்யல செல்வா.. பாவப்பட்ட பொண்ணுங்க.. ஏதோ கல் உடைக்கிற காட்டானைக் கட்டிக்கிட்டு மாரடிக்க இஷ்டமில்லாம அதுகளாவே வருதுங்க. எல்லாம் ஆந்(த்)ரா. ஒவ்வொரு குடும்பத்துக்கும் பத்தாயிரம் குடுத்து கூட்டியாந்திருக்கேன். அவங்களுக்கு எவ்ளோ சந்தோசம் தெரியுமா? தெய்வத்தப் பாக்குறா மாதிரிதான் என்னைப் பாக்கறாங்க..’’
மேற்கொண்டு விவரம் தெரிந்து கொள்கிற ஆர்வமா, விருந்தோம்பலா என்று தெரியவில்லை. அந்த நேரத்தில்தான் ‘‘நாயர் ஒரு ஏழு டீ’’ என்றேன்.
கல்லூரியில் உடன் படித்தவன். வசதியான வீட்டுப் பையன். ரைஸ் மில், எண்ணெய் மில் இருந்தது. பையனைப் பார்க்க ஹாஸ்டலுக்கு வரும் அண்ணாமலையின் அப்பாவைப் பார்க்கும்போது கல்லூரிக்கே முதலாளிபோல தோன்றும். திருவல்லிக்கேணி மெஸ்ஸில் மதிய சாப்பாட்டுக்காக அவனுக்கு மாதக் கூப்பன் வாங்கித் தந்துவிட்டுச் செல்வார் அவனுடைய அப்பா. முப்பது நாட்களுக்கு அறுபது டோக்கன் வாங்கித் தந்தாலும் அது பதினைந்தே நாட்களில் தீர்ந்துவிடும். நண்பர்களை அழைக்காமல் சாப்பிடப் போக மாட்டான். எத்தனை நாள் அவனுடன் சாப்பிட்டிருப்பேன்? இடையில் என்ன நடந்ததோ.. எதற்காக இப்படி ஒரு தொழிலோ?
சப்தத்தோடு தயாராகிக் கொண்டிருந்தது டீ. ‘‘பொண்ணுங்களுக்கு டூரிஸ்ட் விசா எல்லாம் ரெடி.. நம்ம வேலை ஏர்போர்ட்ல் போய் அனுப்பி வைக்க வேண்டியதுதான். ஏர்போர்ட்ல வெச்சே அஞ்சு லட்சம் கைக்கு வந்துடும்’’
‘இதெல்லாம் பாவச் செயல்’ என்று அறிவுரை சொல்லும் மனோ நிலைக்கு வந்தபோது அண்ணாமலை அதற்கு வாய்ப்பு தராமல் ஒரு உதவி கேட்டான்.
‘‘என்னோட பார்ட்னர் இப்ப ஹைதராபாத்ல இருக்கார்ப்பா. காலையிலதான் வர்றாரு. இப்ப என்னான்னா இவங்களை எல்லாம் பாதுகாப்பா ஒரு ஹோட்டல்ல தங்க வைக்கணும். உன் கிட்ட ஒரு பத்தாயிரம் இருக்குமா?’’
என்னிடம் யாரும் அத்தனைப் பெரிய தொகையைக் கடனாகக் கேட்டதில்லை. அந்தத் தொகை எனக்கு அச்சமூட்டுவதாக இருந்தது. நாயர் காதில் விழுந்தால் நிச்சயம் சிரிப்பார். ஏன்.. மொத்தமாக அவ்வளவு பணத்தை நான் கற்பனை செய்ததில்லை. விலாசம் மாறிவந்த விண்ணப்பத்தை எண்ணி, உண்மையில் நான் இப்படியான யோசனையில் இருந்தேன். மவுனமாக இருந்த இந்த நேரத்தை தயங்குவதாக அண்ணாமலை நினைத்திருக்கக்கூடும்.
‘‘நாளைக்கு இருபதாயிரமா திருப்பித் தந்திட்றேன்பா’’
இந்தப் பரிவர்த்தனையை மட்டும் நிறைவேற்ற முடிந்தால் என்னுடைய எல்லா பிரச்னைகளும் சரியாகிவிடும்.
இரண்டு குழந்தைகளுக்கும் இந்த மாதத்துக்கான ஸ்கூல் ஃபீஸ், இரண்டு மாத வாடகை பாக்கி, பால், மளிகைக்கடை, மார்வாடி கடையில் மூழ்கிக் கொண்டிருக்கும் கம்மல் எல்லாவற்றுக்கும் சேர்த்து இருபதாயிரம் இருந்தால் போதும். என்னிடம் சுத்தமாக காசு இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால் வேலை போய்விட்டது.
முட்டாள்தனமாக அதை இப்படி வெளிப்படுத்தினேன். ‘‘என்னிடம் அவ்வளவு இருக்காதே?’’
‘‘எவ்வளவு இருக்கிறதோ அவ்ளோ குடு, போதும்’’
‘‘சாரே.. டீ’’
ஆளுக்கு இரண்டிரண்டு டீ கப்புகளை எடுத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தோம். மாருதி ஆம்னி. நாங்கள் காரை நெருங்கியதும் கதவு விலகி, எதிர் எதிராக போட்டிருந்த இருக்கைகளின் இருபுறமும் பெண்கள் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. நான் எதற்காகவோ அவர்களைத் தவறான கண்களால் பார்க்கவில்லை என்பதை வெளிப்படுத்தப் போராடினேன். கதவு ஓரத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண் எங்கள் கையில் இருந்த டம்ளர்களை வாங்கி மற்ற பெண்களுக்குக் கொடுத்தாள். இரண்டு பெண்கள் சுடிதார் அணிந்திருந்தார்கள். வயது பதினேழு, பதினெட்டுக்குள் இருக்கலாம். இன்னும் மூன்று பெண்கள் சேலை கட்டியிருந்தார்கள். அவர்கள் இருபதைக் கடந்தவர்களாகத் தென்பட்டார்கள். மலிவான சரிகை வைத்த வெங்காயச் சருகுச் சேலை. சிவப்புச் சேலையில் இருந்தவள் அநியாயத்துக்கு அழகாக இருந்தாள். சேலை வழியாக ஜாக்கெட் தெரிந்தது. மறுபடி டீக்கடைக்குப் போய் இன்னும் இருந்த மூன்று டீயை நான் இரண்டும் அண்ணாமலை ஒன்றுமாக எடுத்து வந்தோம்.
கார் ஓட்டுநர் ஒன்றும் இன்னும் ஒரு பெண்ணும் ஆளுக்கொரு கோப்பையை எடுத்துக் கொள்ள, ‘அட எட்டு டீ சொல்லியிருக்க வேண்டும்’... ‘‘நான் இப்பத்தான் சாப்பிட்டேன்’’ என்றேன் அவசரமாக. அண்ணாமலை டீயை உறிஞ்சினான். காரைவிட்டு விலகி வந்து, ‘‘கையில எவ்வளோ இருக்கோ குடு’’ என்றான்.
வீட்டில் ஒரே ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு இருந்தது. காலில் விழாத குறையாகக் கொஞ்சிக் கூத்தாடி ஆறுமுகத்திடம் கைமாற்றாக வாங்கிவந்தது. நாளை முதலில் கழுத்தை நெறிக்கும் ஒரு செலவுக்கு அதை உடைக்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். தளபதி அலுவலகத்தில் நாளை வேலைக்கு வரச்சொல்லி இருந்தார்கள். அடுத்தடுத்த மாதத்தில் நிலைமையைச் சரியாக்கிவிடலாம்.
‘‘குழந்தைக்கு ஃபீஸ் கட்றதுக்காக ஒரு ஐநூறு ரூபாய் வெச்சிருக்கேன்’’
அண்ணாமலை விடவில்லை. ‘‘நாளைக்கு பதினோரு மணிக்கெல்லாம் பணம் கைக்கு வந்துடும். இதுகளை ஃப்ளைட் ஏத்தியாச்சுன்னா பிரச்னை முடிஞ்சிடும். ஐநூறு குடு.. ஆயிரமா வாங்கிக்க.. ரெண்டாயிரமாகூட வாங்கிக்க. ஏதாவது கல்யாண மண்டபம் மாதிரி ஒரு இடம் கிடைச்சா நைட் பொழுதைத் தள்ளிடலாம்.. அதுக்காகத்தான்.. பெரிய சங்கடமா போச்சு.. என்ன சொல்றது செல்வா.. வீட்டுல அப்படி ஒரு ப்ராப்ளம்.. நிதானமா நாளைக்கு வந்து சொல்றேன்.. உன் வீட்ல தங்கறதுக்கு இடம் இருக்குமா?’’
அதைப் பற்றி யோசிக்காமாலேயே மறுப்பு தெரிவித்து அசைந்தது தலை. வற்புறுத்துவானோ என்ற அழுத்தத்தை வெளிக்காட்டாமல் பதறினேன்.
‘‘சரி அந்த ஐநூறு ரூபாயைக் குடு’’
‘‘ஃபீஸு..’’
‘‘நான் அஞ்சு பொண்ணுகள வெச்சுக்கிட்டு அல்லாடிக்கிட்டு இருக்கேன்.. இந்த வண்டிக்காரனுக்கு எவ்ளோ தரணும்னு தெரியல. இப்படி சொன்னா எப்படிப்பா?..’’
‘‘வேற யாரையும் தெரியாதா?’’
‘‘இந்த ராத்திரியில இன்னும் எங்க போய் தேடச் சொல்றே? சாயங்காலம் ஆறுமணிக்கு சென்ட்ரல்ல ரயிலவிட்டு இறங்குச்சிங்க. இன்னும் பச்சைத் தண்ணிகூட கண்ணுல காட்டல... இதோ நீ இப்பத்தான் வாங்கிக்குடுத்திருக்க.. வேற எவனுக்காவது தெரிஞ்சா அசிங்கமா நினைப்பானுங்க. எங்கயாவது வாங்கிக்குடு.. ராத்திரில பொண்ணுகள வெச்சுக்குட்டு சுத்திக்கிட்டு இருக்கறது டேன்ஞ்சர்பா. ரெண்டு மடங்கா தர்றேன்னு சொல்லு’’
அதற்கு மேல் தாமதிக்காமல் நாயரிடம் காலையில் தருவதாகச் சொல்லிவிட்டு அவனுடைய முகபாவனையையோ, பதிலையோ எதிர்பாராமல் வீட்டுக்கு ஓடினேன். தட்டுத்தடுமாறி விளக்கைப் போட்டபோது அருணா கண்ணைத் திறக்க முயற்சிசெய்து உடனே மூடிக்கொண்டாள்.
‘‘எதுக்கு ராத்திரில லைட்டைப் போட்டுக்கிட்டு நிக்கிறீங்க?’’ டி.வி., கட்டில், பீரோ எல்லாம் அடங்கிய ஓர் அறை வீடு அது. 170 ரூபாய் வாடகை.
‘‘அந்த ஐநூறு ரூபாயைத் தர்ரீயா.. காலைல ஆயிரம் ரூபாயா திருப்பித் தந்துடுவாரு.’’
‘‘யாரு?’’ கண்ணைத் திறந்தாள். அதில் சடுதியில் அவநம்பிக்கையும் எரிச்சலும் வெளிப்பட்டது.
‘‘என் கூட படிச்சவரு. அஞ்சாறு வருஷம் கழிச்சு தேடி வந்திருக்காரு.. ஒரு அவசரம். காலைல திருப்பித் தந்துடுவாரு.’’
அருணா தலைமுடியைச் சுழற்றிக் கொண்டை போட்டபடி, ‘‘யாருங்க அது? ஆகாஷுக்காவது பீஸைக் கட்டிடலாம்னு பாத்தா.. இரண்டு பசங்களும் பத்து நாளா ஸ்கூல் போகல. ஞாபகம் வெச்சுக்கங்க’’ என்றாள்.
அருணாவுக்கு வெளியில் ஐந்து பெண்களோடு அவன் காத்திருப்பதைத் தவிர வேறு என்னென்னவோ சொல்லிப் பார்த்துவிட்டேன். அவள் மனது கரைவதாகத் தெரியவில்லை. பணத்தை வாங்கிச் சென்று, நம்பிக் கழுத்தறுத்தவர்களை மட்டும்தான் அவளுக்குத் தெரியும்.
கடைசியாக ‘நம்மிடம் இருக்கும் ஐநூறு ரூபாயையும் கொடுத்துவிட்டு நாளைக்கு நடுத்தெருவில் நிற்க முடியாது’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள். யாரிடமாவது காசைக் கொடுத்துவிட்டால் அதைத் திருப்பி வாங்குவதற்கு உங்களுக்குத் தெரியாது என்பது அவளுடைய தீர்மானம்.
தலையைத் தொங்கப் போட்டபடி வெளியே வந்தேன். எவ்வளவு மோசமான காரியமாக இருந்தாலும் கஷ்டமான நேரத்தில் உதவ முடியாமல் போய்விட்டதே என்ற குற்ற உணர்வு பாடாய்ப்படுத்தியது. வெளியே தெரு வெறிச்சோடி கிடந்தது. டீக்கடை மூடப்பட்டுவிட்டது. கார் இருந்த இடத்தில் ஒரு நாய் மட்டும் சுருண்டு படுத்திருந்தது. பெண்களுக்கான மணம் மட்டுமே அங்கே மிச்சம் இருந்தது.
தெருவின் இரு முனைகளையும் தீர பார்த்தேன். கார் எதுவும் நிற்கவில்லை. கோபித்துக்கொண்டு போய்விட்டானா, வேறு எங்காவது காத்திருக்கிறானா, கார் டிரைவருக்கு விஷயம் தெரிந்துபோய் இறங்கச் சொல்லிவிட்டானா... ஹைதரபாத் பார்ட்னர் வேறு இடத்தில் பணத்துக்கு ஏற்பாடு செய்து தந்தானா.. பணம் தரமுடியாததற்கு, அவனாகப் போய்விட்டதில் ஒரு திருப்திதான். வீட்டுக்கு வந்து படுத்துவிட்டேன். வெகுநேரத்துக்குத் தூக்கமே வரவில்லை.
காலையில் பையனுக்கு மட்டும் பீஸ் கட்டி பிரின்ஸிபாலைப் பார்த்து இனிமேல் இப்படி ஆகாது என்று உறுதி சொல்ல வேண்டியிருந்தது. இதுவரைக்கும் ஏழெட்டு முறை மன்னிப்பு கேட்டாகிவிட்டது. மீதி எழுபத்தைந்து ரூபாயில் அரிசியும் பருப்பு, எண்ணெய், கடுகு, தக்காளி, வெங்காயம் என முப்பதே ரூபாயில் மளிகை சாமான் வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தேன். ‘தளபதி’ ஆபீஸுக்குப் போனேன்.
வேலைபார்த்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் தானாகவே ஈடுபாடு கொப்பளித்தது. மூன்று மணிக்குத்தான் சாப்பாட்டு ஞாபகமே வந்தது.
சாப்பிட எதிரில் தள்ளு வண்டி கடையைக் காட்டினார்கள். அதுவரைக்கும் ஓய்வே இல்லை.
வேலையில் சேர்ந்த அன்றைக்கே நிலைமையைச் சொல்லி ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கேட்டிருந்தேன். அது கிடைக்குமா எனத் தெரிந்துகொண்டு சாப்பிடப் போகலாம் என்று காத்திருந்ததில் இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. சாப்பிட்டுவிட்டு மரத்தடியில் உட்கார்ந்து சிகரெட் பற்ற வைத்தேன். பேப்பர் வெயிட்டாக ஒரு செங்கல் வைக்கப்பட்ட மாலை பேப்பர் ஒன்று கிடந்தது. இரண்டாம் பக்கத்தைப் புரட்டியபோது, நான் எதிர்பார்த்த ஒன்று நிகழ்ந்திருந்தது. அண்ணாமலையும் அந்த ஐந்து பெண்களும் வரிசையாக நிற்கும் போட்டோ. இரவு திடீரென்று காணாமல் போனதுமே நினைத்தேன். அப்படியெல்லாம் விபரீதமாக நினைக்கக் கூடாது என்பதால், ‘கோபித்துக்கொண்டு போய்விட்டானா, வேறு எங்காவது காத்திருக்கிறானா, கார் டிரைவருக்கு விஷயம் தெரிந்துபோய் இறங்கச் சொல்லிவிட்டானா... ஹைதரபாத் பார்ட்னர் வேறு இடத்தில் பணத்துக்கு ஏற்பாடு செய்து தந்தானா..’ என்பதோடு நிறுத்திக்கொண்டேன்.
கொஞ்சம் இருந்திருந்தால் நானும் அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பேன். நல்லவேளை. ஒருவேளை தகுந்த நேரத்தில் உதவ முடிந்திருந்தால் நண்பனைக் காப்பாற்றியிருக்கலாம் என்று மிக மெல்லிய உணர்வு ஒன்று எழுந்தது. சிறைக்குச் சென்று பார்ப்பதோ, அவனைச் சிறையில் இருந்து மீட்பதோ பற்றிய எண்ணங்கள் எனக்கு எழவில்லை. அவன் எனக்குத் தெரிந்தவன் என்பது வெளியில் தெரிவதே எனக்கு ஆபத்தாக முடியும்.
அட்வான்ஸ் தொகையைக் கொடுத்தார்கள். நண்பன் உத்தரவாதம் கொடுத்திருந்தான். ஒரு நண்பன் உதவிய நாளில் இன்னொரு நண்பனுக்கு உதவ முடியாமல் போய்விட்டது வருத்தமாகத்தான் இருந்தது. இரவு அவன் வந்திருந்த அந்த ஐந்து நிமிடத்தில் நான் உள்வாங்கிக் கொண்டது குறைவுதான். எதற்காக இப்படியானான்? அவனுடைய வீட்டோடு அவனுக்கு இப்போது தொடர்பு இருக்கிறதா? கல்யாணமானதா? அவனை வெளியேகொண்டு வருவதற்கு உதவலாமா? உதவப் போய் தொல்லை வந்து சேர்ந்துவிடுமா? அவன் செய்தது சட்டப்படிச் சரியா? சட்டம் என்பது சரியா?
பேருந்தில் திரும்பும்போது கேள்விகளின் அலைமோதலாக இருந்தது மனது.
இறுதிச் சமாதானத்தில் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் நான் வீட்டுக்குப் போனேன்.
ஆயிரம் ரூபாயை விதம்விதமாகப் பிரித்தாள் அருணா. பெண்ணுக்கு ஃபீஸ். வீட்டு வாடகை பாக்கிக்குக் கொஞ்சம். மளிகைக்கடை பாக்கி, அப்புறம் இந்த மாதச் செலவுக்கு. மறக்காமல் எனக்கு வேலை கிடைத்துவிட்டதைப் பரவலாக அக்கம் பக்கத்தில் சொல்லிவிடுவாள். அது ஒருவிதத்தில் நல்லது. அப்போதுதான் நம்பிக்கையாகப் பேசுவார்கள்.
‘‘உங்க ஃப்ரெண்ட் இன்னிக்கி வந்திருந்தார்னா ஹெல்ப் பண்ணியிருக்கலாம்’’ என்றாள். நேற்று இரவு கண்டிப்புடன் பேசியவளுக்கு, கையில் ஆயிரம் ரூபாய் இருக்கும் நேரத்தில் சற்றே ஈகை சுரந்திருக்க வேண்டும். நான் ஒன்றும் சொல்லாமல் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தேன்.
‘‘அப்புறம் என்ன சொல்லி அனுப்பிச்சீங்க?’’ மீண்டும் கேட்டாள். பொய் சொல்வதா, உண்மை சொல்வதா என்று முடிவெடுக்க முடியாமல் வேறு சேனலுக்கு மாறினேன். தகுந்த நேரத்தில் நண்பனுக்கு உதவிசெய்யாமல் இப்போது கேட்கிறாயே என்ற கோபத்தில் இருப்பதாக அவள் நினைத்திருப்பாள். திரும்பிப் படுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கும் முயற்சியில் இறங்கினாள்.
சாரி செல்வா,
இந்தக் கடிதம் உன் கையில் கிடைக்குமா என்று தெரியவில்லை. உன் முகவரியை ஞாபகத்தில் இருக்கும் உன் முகவரியை எழுதியிருக்கிறேன். திடீர் என்று போலீஸ் வந்துவிட்டது. அந்த நேரத்தில் நீ வந்துவிடுவாயோ என்று பயந்தேன். நல்லவேளை.
&அண்ணாமலை
இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு வந்த ஓர் அஞ்சல் அட்டையில் அவன் இவ்வளவுதான் எழுதியிருந்தான்.
‘வீட்ல ஒரு ப்ராப்ளம்’ என்றானே என்னவாக இருக்கும்? என்ற யோசனையும் ஸ்ரீபெரும்புதூரில் அந்தக் கொடூரச் சம்பவத்துக்குப் பிறகு மறந்தே போய்விட்டது.
இன்று மன்மோகன் சிங்கையும் ப.சிதம்பரத்தையும் கிண்டல் செய்து ஒரு கார்ட்டூன் வெளியாகியிருந்தது. ரூபாய் மதிப்பு மிகவும் சரிந்துவிட்ட இந்த நாளில் அந்தச் சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்தபோது பொருளாதார வியப்பு அதிகமாகத்தான் இருந்தது. என்ன ஆனான் அண்ணாமலை என்று இப்போது ஒரு தரம் நினைத்துப் பார்த்தேன்.






ஞாயிறு, செப்டம்பர் 14, 2014

அரேபிய இரவுகளும் பகல்களும்

எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்ற "
அரேபிய இரவுகளும் பகல்களும்" புத்தகம் பற்றிய கலந்துரையாடல் 

ஒரு புத்தகம் குறித்து இரண்டு மணிநேரம் ஒருவர் தொடர்ந்து பேச முடியும் என்பதும் அதை மக்கள் அத்தனை தீவிரமாகக் கேட்பார்கள் என்பதும் ஆச்சர்யம்தான்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணாநகர் வெஸ் எக்ஸ்டென்ஷனில் உள்ள பொக்கிஷம் புத்தக அங்காடியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் உரை ஓர் மகத்தான வாசிப்பு அனுபவத்துக்கு நம்மைத் தயார்படுத்தியது.
நோபல் பரிசு பெற்ற நாகிப் மாஃபஸ் எழுதிய  “அரேபிய இரவுகளும் பகல்களும்” புத்தக கலந்துரையாடல் நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். 
நிகழ்வின் போது நூலைப் பற்றி திரு.எஸ்.ரா அவர்கள் கூறிய சில தகவல்கள் உங்களுக்காக “1001 அரேபிய இரவுகள் என்ற அராபிய இதிகாச நூல். 1001 இரவுகளைப் பற்றிச் சொல்கிறது. அராபிய மன்னன் ஒருவன் பக்கத்து தேசத்தை ஆளும் தன் அண்ணன் ஷாக்கியரைக் காண்பதற்காகப் புறப்பட்டுச் செல்கிறான். பாதி தூரம் சென்றதும் தன் அண்ணனுக்கு வாங்கிவைத்த பரிசுப் பொருளை மறந்துவிட்டது நினைவுக்கு வருகிறது. மீண்டும் அரண்மனைக்குத் திரும்பி வருகிறான். மன்னன் சென்ற சிறிது நேரத்தில் அவனுடைய மனைவி இன்னொருவனுடன் படுக்கையில் இருப்பதைப் பார்க்கிறான். அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போகிறது.
அந்தச் சோகத்தோடு அண்ணனைப் பார்க்க வருகிறான். தம்பியின் முகம் வாடி இருப்பதற்கான காரணத்தைக் கேட்கிறான். தம்பிக்கு நேர்ந்த அவமானத்தை அறிகிறான். எல்லா பெண்களும் அப்படி இருப்பார்கள் என்று நினைக்காதே என்று அறிவுரை கூறுகிறான்.
நாம் இருவரும் இப்போது வேட்டைக்குச் செல்வதாக உன் மனைவியிடம் கூறிவிட்டு வா. சிறிது நேரம் கழித்துவந்து பார்ப்போம் என்கிறான் தம்பி.
அதன்படியே இருவரும் வேட்டைக்குச் செல்வதாக நாடகம் ஆடுகிறார்கள். சிறிது நேரம் கழித்து திரும்பி வருகிறார்கள். அண்ணனின் மனைவியும் முறை தவறுகிறாள். அண்ணனுக்கு ஆத்திரம் தாளவில்லை. மனைவியைச் சிரச்சேதம் செய்கிறான். 
அன்று முதல் தினம் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து மறுநாள் அவளை சிரச்சேதம் செய்வதை வழக்கமாக்கிக்கொள்கிறான்.

இப்படியாக அந்த நாட்டில் உள்ளக் கன்னிப் பெண்கள் எல்லோரையும் சிரச்சேதம் செய்கிறான் ஷாக்கியர். மன்னர்  ஷாக்கியரின் அமைச்சரின் மகள் மன்னரை மணக்க முடிவு செய்கிறாள். மன்னரோடு இரவு அந்தப்புரத்தில் இருக்கும்போது அவருக்கு ஒரு கதையைச் சொல்கிறாள், கதையின் முடிவில் புதிராக ஒரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்கிறாள். அந்தக் கதையின் முடிவைத் தெரிந்துகொள்வதற்காக அடுத்த நாள் இரவுக்கு மன்னர் அவளை விட்டு வைக்கிறார். அடுத்த நாள் கதையிலும் அப்படியே ஒரு முடிச்சு போடுகிறாள். இப்படியாக-1000 இரவுகளை நகர்த்துகிறாள். அதனால் பெண்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்படுகிறது.
தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவும் பெண்களின் உயிரைக் காப்பாற்றவும் அவள் தினம் கதைகளை புனைகிறாள். தினம் ஒரு சுவாரஸ்யமான கதையை உருவாக்குகிறாள். 1001-வது இரவில் மன்னன் மனம் மாறி அவளை மனைவியாக ஏற்றுக்கொள்வதோடு, இனி யாரையும் கொல்லமாட்டேன் என்றும் உறுதி கூறுகிறான்.
இதுதான் 1001 அராபிய இரவின் கதை.
நாகிம் மாஃபஸ் எழுதிய அராபிய இரவுகளும் பகல்களும் கதை. 1001 இரவுக்குப் பிந்தைய கதைகளைச் சொல்கிறார். மன்னர் மனம் மாறி மனைவியை ஏற்றுக்கொள்ள நினைக்கும்போது மனைவி மன்னரை ஏற்க மறுக்கிறாள்.
மன்னரின் ரத்த வாடையை நான் விரும்பவில்லை என்கிறாள். இந்த நாவலில் அராபிய பகல்கள் இடம்பெறுகின்றன" என விவரமாக நாவலின் வாசிப்பு அனுபவத்தை நிறைவாக பகிர்ந்துகொண்டார்.
பெர்ஷிய கதையான 1001 இரவுகள் நமக்கு முற்றிலும் புதிதானவை அல்ல. அலிபாபாவும் 40 திருடர்களும் கதை நமக்கு நன்கு பரிச்சையமான கதைதான். 1001 கதையில் இதுவும் ஒன்று. தினத்தந்தியில் நாம் படித்துவரும் சிந்துபாத் கதையும் அதில் ஒன்றுதான். பாக்தாத் பேரழகி கதை... அதுவும் தான். 
அந்த 1001 கதையின் முடிவின் தொடர்ச்சியாக இந்த நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அரேபிய இரவுகள் பற்றியும் அதை சார்ந்த மற்ற கதைகள் பற்றியும் அதிக தரவுகளும்,கதைகளும் இங்கே கிடைக்கின்றன.ஆனால் அரேபிய இரவில் கதை சொல்லும் பெண்ணின் பகல் பொழுது எப்படியாக இருந்தது என்பதை விவரிக்கிறது இந்த நூல்.” என்று பல அறிய விஷயங்களை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

நூலின் மொழிப்பெயர்ப்பாளர் சா.தேவதாஸ் திடீர் விஜயம் செய்து எல்லோரையும் அச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

உலக தலை சிறந்த புத்தகங்கள்,உலக திரைப்படங்கள் என புத்தகத்தை தாண்டியும் பல செய்திகளை கூறினார்.
மேலும் சா.தேவதாஸ் மொழிப்பெயர்ப்பின் போது தான் சந்தித்த சவால்களை பற்றி பேசினார்.

நிகழ்ச்சியின் நிரைவாக எஸ்.ராமகிருஷ்ணனிடம் வாசகர்கள் அவருடைய எழுத்துகள் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டன.இனிமையான நிகழ்வு, எழுத்து அனுபவம் அண்ணா நகர்வாசிகளுக்கு வாய்க்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

வெள்ளி, ஜூன் 20, 2014

டாட்டா வாண்டுமாமா

பெரியவர்கள், சிறுவர்களுக்கான மன நிலையோடு சிந்திப்பது சவாலானது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, குழந்தைகளுக்காகவே எழுதியவர் வாண்டுமாமா. ஏறத்தாழ 90 ஆண்டுகள், ஒருவர் தன் குழந்தை மனதைத் தக்கவைத்துக்கொள்வது சாதாரணம் அல்ல. அந்தக் குழந்தை மனநிலையுடனேயே இயங்கி கடந்த வாரம், வயோதிகம் காரணமாக தன் மூச்சை நிறுத்திக்கொண்டார் 'வாண்டுமாமா’ என்பதே அடையாளமாகிப்போன திரு.கிருஷ்ணமூர்த்தி. தமிழில் சிறுவர் இலக்கியத்தின் மூலவர்!
குழந்தைகளை மாய உலகில் சஞ்சரிக்க வைப்பது ஓர் அரிய கலை. கொஞ்சம் தப்பினால் அது மூடநம்பிக்கையின் மூட்டையாகிவிடும். இவரின் 'மந்திரச் சிலை’, 'மந்திரக் குளம்’, 'மாய மோதிரம்’ உள்ளிட்ட பல கதைகள் நம்மை விசித்திர உலகுக்கு அழைத்துச் செல்பவை. ஆலீஸின் அதிசய உலகத்துக்கு நிகரான சாத்தியங்கள் அவற்றில் உண்டு. பல நூறு ஹாரிபாட்டர்களைப் படைத்தவர் வாண்டுமாமா. குழந்தைகளுக்குப் புரியும்படியான எளிய மொழியில், சுமார் 160 புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். அதில் சரிபாதி குழந்தைகளுக்கான மருத்துவ, விஞ்ஞானப் புத்தகங்கள். கௌசிகன், சாந்தா மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி எனப் பல பெயர்களில் எழுதியுள்ளார்.
'பூந்தளிர்’ இதழின் ஆசிரியராக இருந்த நேரத்தில், நான் அதே நிறுவனத்தின் இன்னோர் இதழுக்குப் பொறுப்பு ஏற்று இருந்தேன். சில ஆண்டுகள், அவருக்கு அருகே பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. குழந்தைகளுக்கான போட்டிகளுக்குப் பரிசு வழங்கு வதில், வாண்டுமாமாவுக்கும், அந்தப் பத்திரிகையின் நிர்வாகிக்கும் நடந்த வாக்குவாதம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
பரிசுத்தொகையாக 5,000, 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது நிர்வாகியின் எண்ணம். வாண்டுமாமா, '50, 100 ரூபாய் போதும்’ என்றார். 'குழந்தைகளின் மனதில் போட்டியை வளர்ப்பதுதான் நோக்கமே தவிர, பேராசையை வளர்ப்பது அல்ல. பெரிய பரிசுத் தொகையை அறிவித்தால், அது பெற்றோர்கள் கலந்துகொள்ளும் போட்டியாக மாறிவிடும்’ என உறுதியாகக் கூறிவிட்டார். இது நுணுக்கமான ஓர் உளவியல் அணுகுமுறை.
அப்போது (1991) அவருக்கு தொண்டையில் கேன்சர் ஏற்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அவர் பேசுவதைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்தது. அதனால், யாரும் அவரிடம் விளக்கம் கேட்பதற்கான சந்தர்ப்பமே தராமல், அந்த இதழுக்கான எல்லா வேலைகளையும் முடித்துவிடுவார். 'பூந்தளிர்’ இதழுக்கான அனைத்து பக்கங்களையும் அவரே எழுதுவார்; திருத்துவார். பேசுவதற்கான சந்தர்ப்பமே தராமல், அவர் பணியாற்றியது ஆச்சர்யமாக இருந்தது.
புதுக்கோட்டைக்கு அருகில் அரிமழம் கிராமத்தில் பிறந்த இவர், திருச்சியில் இருந்து வெளிவந்த 'சிவாஜி’ என்ற இதழில் தன் பத்திரிகைப் பணியைத் தொடங்கினார். பிறகு 'காதல்’, 'ஆனந்த விகடன்’, 'கல்கி’, 'கோகுலம்’, 'தினமணி’ என, இவர் பயணித்த இதழ்கள் ஏராளம். வறுமையின் துரத்தலும் கூடவே இருந்தது. அதனால்தான் அவருடைய வாழ்க்கை சரித்திரத்துக்கு அவர் 'எதிர்நீச்சல்’ என்று பெயரிட்டிருந்தார்.
சிறுவர்களுக்காக எழுதுபவர்களை சிறுவர்கள்தான் அங்கீகரிக்கவேண்டிய சூழல். அதனால் அவருக்குப் பெரிய அங்கீகாரங்கள் கிடைக்காமல் போயின.
அவர் இன்னொருவரின் வாழ்க்கை நூலையும் எழுதியிருக்கிறார். தனக் குச் சிலை வைப்பதையோ, தன்னைப் பற்றி புத்தகம் எழுதுவதையோ கடுமையாக எதிர்த்து வந்தவர் மூதறிஞர் ராஜாஜி. 'கல்கி’யில் பணியாற்றியபோது ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை மிக மிக ரகசியமாக எழுதி, ராஜாஜியிடம் அதைக் காட்டி அவருடைய அனுமதியைப் பெற்று நூலாக வெளியிட்டார். அப்போது ராஜாஜி அடித்த கமென்ட்: 'நான் சொல்வது எதையும் கேட்காதவர்கள்... என் வாழ்க்கையை மட்டும் படிப்பார்களா? உங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும்.’
'எதிர்நீச்சல்’ நூலில் இறுதியாக அவர் இப்படி முடிக்கிறார்:
'நான் நிறைய எழுதியிருப்பதாகப் பிறர் கூறினாலும் இன்னும் எழுத வேண்டியவை நிறைய இருக்கின்றன என்ற குறை எனக்கு உண்டு. அதற்கான வாய்ப்பையும் வயதையும் எனக்கு ஆண்டவன் அளித்தால், இந்த என் குறையை ஓரளவுக்குப் போக்கிக்கொள்வேன்’ என்று முடித்திருக்கிறார் வாண்டுமாமா.
'புத்தகங்களே...
குழந்தைகளைக்
கிழித்துவிடாதீர்கள்!’
- என்று ஒருமுறை கவிஞர் அப்துல் ரகுமான் எழுதினார். சில புத்தகங்களிடம் இருந்து சிறுவர்களைக் காப்பாற்றத்தான் வேண்டியிருக்கிறது. இந்த நிதர்சனம் உணர்ந்தே தன் இறுதி நாட்கள் வரை சிறுவர்களுக்காக எழுதிக்கொண்டே இருந்தார் அவர். உயிர் பிரியும் தருணம் வரை எழுதிக்கொண்டே இருப்பது ஓர் எழுத்தாளனுக்கு வரம். அந்த சாகாவரம், இவருக்கு இருந்தது. மழலை மனம் மாறாதவர் உள்ளங்களில் வாண்டுமாமா என்றும் வாழ்வார்!

வெள்ளி, மார்ச் 28, 2014

போய் வாருங்கள் சர்தார்ஜி!


தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருக்கிறார் குஷ்வந்த் சிங்!

இந்திய கிரிக்கெட் அணியில் பட்டோடி சொதப்பிக்கொண்டிருந்த காலம். அப்போது குஷ்வந்த் சிங் எழுதிய ஒரு பத்தி இது:
பம்பாய் மைதானத்தில் கிரிக்கெட் அணிகள் மோதிக்கொண்டிருந்தன. கிரிக்கெட் அணித் தலைவர் பட்டோடியின் மனைவி நடிகை சர்மிளா தாகூர், தன் கணவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போன் செய்தார்.
''அடடே... இப்போதுதான் பட்டோடி பேட் செய்யப் போனார். அவர் வந்ததும் பேசச் சொல்கிறேன்'' என்றார் உதவியாளர்.
சர்மிளா பொறுமையாகச் சொன்னார்: ''ம்... பரவாயில்லை.. லைனிலேயே இருக்கிறேன்... அவர் சீக்கிரமே வந்துவிடுவார்.'
- இதுதான் குஷ்வந்த் சிங்.
அதே நேரத்தில் அவருடைய 'ட்ரெய்ன் டு பாகிஸ்தான்’, 'ஐ ஷெல் நாட் ஹியர் த நைட்டிங்கேல்’ போன்ற நூல்கள் சீரியஸாக உலக நடப்புகளைப் பேசின. அவர் பிறந்த பஞ்சாப் பகுதி, இப்போது பாகிஸ்தானில் உள்ளது. அவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். இளம் வயதில் இருந்தே அவருக்குப் பத்திரிகைதான் கனவு. 'யோஜனா’ என்ற பத்திரிகையைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்த குஷ்வந்த் சிங், பிறகு இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, நேஷனல் ஹெரால்ட், இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பல பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். பல ஆங்கில பத்திரிகைகளில் பத்தி எழுத்தாளராக அவர் பங்காற்றியிருக்கிறார்.
1974-ல் பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 1984-ல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் நடந்த ராணுவத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை அவர் திருப்பித் தந்தார். அரசியல் காட்சிகள் மாறின. மீண்டும் 2007-ல் அவருக்கு பத்ம விபூஷண் விருது கொடுத்து அந்தக் குறையை அரசு போக்கிக்கொண்டது.
அவருடைய சுயசரிதை நூலான 'உண்மை, அன்பு மற்றும் கொஞ்சம் வன்மம்’ என்ற நூல், பத்திரிகைத் துறைக்கு வர நினைப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு சிறந்த கையேடு.
அவருடைய சர்தார்ஜி ஜோக்குகளைப் படித்துவிட்டு சொந்த இனத்தையே கேலிசெய்தவர் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. ஆனால், 'சீக்கியர்களின் சரித்திரம்’ என்ற சீக்கியர்களின் பெருமையைச் சொல்லும் சிறந்த நூலையும் அவர்தான் எழுதினார். சகிப்புத்தன்மையற்ற இந்திய அரசியல் தலைவர்கள் பற்றி அவர் ஒரு பத்தி எழுதினார். 90-களின் மத்தியில் அது வெளியானது. 'பால் தாக்கரேவுக்கு கிரிக்கெட் பிடிக்காது. இந்திய அணிகள் விளையாட இருக்கும் கிரிக்கெட் மைதானத்தைக் கொத்தி நாசப்படுத்தினார். மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு கலாசாரக் காவலர். சமந்தா ஃபாக்ஸ் நடனத்தையும் உஷா உதூப் பாடல்களையும் ஆபாசமாக இருப்பதாகத் தடைசெய்தார். உயர் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட கென்டகி சிக்கன் கடைகளை அனுமதிக்க முடியாது என்று கடைகளை அடித்து நொறுக்கினார், கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் நஞ்சுண்டசாமி. காங்கிரஸ் தலைவர் ஹெச்.கே.எல்.பகத் என்னை தூர்தர்ஷனிலும் ரேடியோவிலும் பேசுவதற்கு தடை போட்டிருக்கிறார்’ என வரிசையாகப் பட்டியலிட்டவர், தமிழகத்தின் நிலவரத்தையும் விட்டுவைக்கவில்லை.
'தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பத்திரிகைகளில் அவரைப் பற்றி வெளியாகிற விமர்சனங்கள் பிடிக்காது. அப்படி யாராவது எழுதினால், அந்தப் பத்திரிகை அடித்து நொறுக்கப்படும்’ என்று எழுதியிருக்கிறார்.
இந்திய அரசியல் போக்கு குறித்த துணிச்சலான விமர்சனங்களை முன்வைத்த கோபக்காரர் அவர். அதே நேரத்தில் வாழ்க்கையைப் படுகொண்டாட்டமாக வாழத் தெரிந்தவர். அவருடைய பெண் ரசிகர்களைப் பற்றி அவரே பலமுறை சிரிக்கச் சிரிக்க விவரித்திருக்கிறார்.
விருந்து ஒன்றில் போதையில் இரவெல்லாம் ஒரு பெண்ணை வர்ணித்துத் தள்ளிவிட்டு, விருந்தின் முடிவில் அந்தப் பெண்ணையே 'யார் நீ?’ என்று கேட்டு வாங்கிக்கட்டிக்கொண்ட சம்பவத்தையும் அவர் மறைக்கவில்லை. அவருடைய அரசியல் மற்றும் களியாட்ட பத்திகள் சில நேரங்களில் நம்முடைய கவிஞர் கண்ணதாசனை நினைவுப்படுத்தும். 1980 முதல் 86 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார்.
'கறார் பாதி... கிண்டல் பாதி கலந்து செய்த கலவை நான்’ என எழுத்துலகில் வாழ்ந்து காட்டியவர் குஷ்வந்த் சிங்.
'எ கம்பெனி ஆஃப் அ உமன்’, 'டெல்லி’ போன்ற நாவல்களும், பல நூறு சிறுகதைகளும் எழுதியவர். 95 வயதில் அவர் எழுதிய நாவலின் தலைப்பு, 'தி சன்செட் கிளப்’. 99-வது வயதில் அவர் தன் கிண்டல்களை மூட்டைகட்டிவிட்டு தன் டெல்லி இல்லத்தில் மரணத்தைத் தழுவினார். போய் வாருங்கள் சர்தார்ஜி!
- தமிழ்மகன்

சனி, ஜனவரி 04, 2014

வெட்டுப்புலி அல்ல – வெட்டும் புலி.

வெட்டுப்புலி (நாவல்) - தமிழ்மகன்

 விமர்சனம்: எழுத்தாளர் இமையம்

சின்னா ரெட்டி என்பவர் தனியாளாக சிறுத்தையை வெட்டி வீழ்த்தியதையும், அச்சம்பவம் எப்படி ஒரு தீப்பெட்டியின் அட்டைப்படமாக மாறியது என்பதையும் அறிந்து கொள்வதற்காக தமிழ்ச் செல்வனும், அவனுடைய நண்பர்கள் பிரபாஷும், பிரானான்டசும் போகிறார்கள். சின்னா ரெட்டி தமிழ்ச்செல்வனின் தாத்தாவினுடைய பெரியப்பா, சிறுத்தையை வெட்டிய கதையை ஆராயப்போனவர்களுக்கு தமிழ்ச்சமூகத்தின் ஒரு நூற்றாண்டுகால வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் பல்வேறு மனிதர்களால். அதுவும் நினைவோட்டமாக.
சிறுத்தையை வெட்டிய சின்னா ரெட்டி, அவருடைய குடும்பம், உடன் பிறந்தவர்கள், அவர்களுடைய வாரிசுகள், அவர்களுக்கடுத்த வாரிசுகள் என்று வளர்ந்து நான்காவது தலைமுறையைச் சார்ந்த தமிழ்ச்செல்வனின் வழியாக-அவனுடைய பயணத்தின் வழியே நாவல் வளர்கிறது. நான்கு தலைமுறையை சார்ந்த மனிதர்கள் நாவலுக்குள் வருகிறார்கள். தமிழ்ச்செல்வன் தன் பயணத்தை தொடங்குகிறான். அது ஒருமாதகாலம்தான். ஆனால் நாவல் 1910-2009 வரையிலான கால மாற்றங்களையும், அடையாள மாற்றங்களையும் விவரிக்கிறது.
நாவலின் பாத்திரங்களாக சின்னா ரெட்டி, தசரத ரெட்டி, பொன்னுசாமி ரெட்டி, லட்சுமண ரெட்டி, ஆறுமுக முதலி, முத்தம்மா, மங்கம்மா, நாகம்மா, கண்ணம்மா, விசாலாட்சி, நடேசன், புனிதா, குணவதி, தியாகராசன், சிவகுரு, ஹேமலதா, கிருஷ்ணபிரியா, நடராஜன், கணேசன், ஜேம்ஸ் என்று பலர் இருந்தாலும் இவர்கள் நாவலின் முக்கியமான பாத்திரங்கள் அல்ல. தமிழ்ச்சமூகத்தின் ஒரு நூற்றாண்டுகால வாழ்வை அறிந்துகொள்வதற்கு இவர்கள் வழிகாட்டிகளாக, கருவிகளாக மட்டுமே இருக்கிறார்கள்.
நாவலின் முக்கிய பாத்திரங்களாக இருப்பது சமூகத்தில் நடந்த அரசியல் நிகழ்ச்சிகள், பொருளாதார வளர்ச்சிகள், சினிமா, தொழில் வளர்ச்சிகள்தான். வறுமை, சாதிய கொடுமைகள், உழைப்பு, சுரண்டல்கள், கிராமங்கள் நகரமாவது, பிரிட்டிஷ் அரசு வெளியேறுவது, இந்தியா சுதந்திரமடைவது, பிரிட்டிஸ் ஆட்சியாளர்களை வெளியேற்ற முனைகிற அதே அளவுக்கு அவர்களுடைய பழக்க வழக்கங்களை, மொழியை தங்களுடையதாக மாற்றிக்கொள்ள துடிக்கிற துடிப்பு முக்கியமானது. கிராமங்கள் நீர்த்தேக்கங்களாக மாறுவது, பம்புசெட் வருவது, மின்சாரம் வருவது, தார்சாலை, சினிமா, பத்திரிகை, வருதல், காண்டராக்டர்கள் எம்.எல். ஆவது. புதுபுது ஊழல்கள்,சிகரட் குடித்தல், டீகுடித்தல், ரயில், பஸ், லாரி வருதல், பிரமாண்டமான கட்டிடங்கள், ஜவுளிக்கடைகள், ஊசிபோடுவது, உணவு பழக்கவழக்கம் மாறுதல், விவசாயத் தொழில் மாறுதல், உடையில் மாற்றம் என்று கலாச்சார பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் நாவலின் மையம். அரசியலில் ஜஸ்டீஸ் பார்ட்டி, நீதிக்கட்சி, காங்கிரஸ், திராவிடர் கழகம், தி.மு.., .தி.மு.., நீதிக்கட்சிக்கு பிறகு காங்கிரஸ் கட்சி, தி.மு.., அதற்கடுத்து .தி.மு.., ஆட்சிக்கு வருவது, ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று முதல் அமைச்சராவது, சினிமாத்துறையில் பாலசந்தர் வருவது, பாரதிராஜா, இளையராஜா வருவது, ரஜனிகாந்த் வருவது, தொலைக்காட்சி பெட்டி வருவது, சன் டி,வி, வருவது, ஈழத்தமிழ் பிரச்சினை என்று நாவலில் பல பாத்திரங்கள் இருக்கின்றன. உண்மையில் நாவலின் முக்கியமான பாத்திரங்கள் இவைதான். இவற்றையும் இவை தமிழ்ச்சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களையும் அறிவதற்கு சின்னா ரெட்டியின் வாரிசுகள் பயன்படுகிறார்கள்.
நாவலின் இணை பாத்திரங்களாக, நேரு, இந்திரா காந்தி, ராஜாஜி, கக்கன், சத்தியமூர்த்தி, பெரியார், அண்ணா, கலைஞர், நாகம்மை, மணியம்மை, வீரமணி, எம்.ஜி.ஆர்., பிரபாகரன், காமராஜர் ஜி.டி.நாயுடு, ஆதித்தனார் என்று பல பாத்திரங்கள் இருக்கின்றனர்.
திராவிடர் கழகத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி, தி.மு.கழகத்தின் வளர்ச்சி, சினிமா நாயகர்களின் அபரிமிதமான வளர்ச்சி, தமிழகத்தில் அரசியல் ரீதியாக நடந்த மாற்றங்கள், இந்திரா காந்தியின் மறைவு, எம்.ஜி.ஆரின் மறைவு, பிரபாகாரனின் மறைவுகளுக்குப் பிறகு தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், விளைவுகள் அனைத்தும் சம்பவங்களாக விவரிக்கப்படாமல் நாவலில் மையமான கதாபாத்திரங்களாக விவரிக்கப்பட்டுள்ளன. 1910 முதல் 2010 வரையில் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கிறது. இதனால் வெட்டப்புலி நாவலை வரலாற்று நாவல் என்றும், ஒரு நூற்றாண்டு கால அரசியல் நாவல் என்றும், சமூக ஆவணம் என்றும் கூறலாம்.
ஒரு நூற்றாண்டு கால சமூக மாற்றத்தையும், அரசியல் ஏற்றத்தாழ்வுகளையும், மாற்றங்களையும் எந்த ஒளிவு மறைவுமின்றி தைரியமாகவும், பகிரங்கமாகவும் எழுதியுள்ளார் தமிழ்மகன். இதுவரை எந்த ஒரு தமிழ் எழுத்தாளனுக்கும் இல்லாத தைரியம். தெளிவான சமூக, அரசியல்பார்வை நாவலாசிரியருக்கு இருக்கிறது. கலைஞர் குறித்த, எம்.ஜி.ஆர் குறித்த எதிர்தரப்பு வசைப்பாடல்கள் அப்பட்டமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கலாச்சார பண்பாட்டு துறையில் ஏற்படும் மாற்றங்களை புறக்கணித்துவிட்டு, அரசியல் நடவடிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு எழுதப்படுவதுதான் இலக்கியப்படைப்புகளா? மறைமுகமாக, குறியீட்டுத்தன்மையில் எழுதப்படுவதுதான் இலச்கியமா, கற்பனையில், மூளையை கசக்கி இல்லாத ஒன்றை உருவாக்கிக் காட்டுவதுதான் இலக்கியம். மற்றதெல்லாம் குப்பை. பிரச்சாரம் இலக்கியம் என்று கூறுவதை ஏற்க மறுக்கிறது வெட்டுப்புலி நாவல். இது பிரச்சார நாவலோ குப்பையோ அல்ல. யூகத்தின், கற்பனையின் அடிப்படையில் எழுதப்படுவதைவிட உண்மையின் அடித்தளத்தில் எழுதப்படுவதுதான் நிஜமான இலக்கியம். ஒரு கலைபடைப்பின் வெற்றி, உன்னதம் மேன்மை என்பது அப்படைப்பின் உண்மை தன்மையில் இருக்கிறது வெட்டுப்புலி. இலக்கிய படைப்பு கதை சொல்வதுதான் என்றாலும், கதை சொல்வது மட்டுமே முக்கியமல்ல என்பதை வெட்டுப்புலி நிரூபித்துகாட்டியிருக்கிறது. தமிழ் புனைகதையாசிரியர்கள் யாரும் செய்யாத, செய்ய தயங்கியதை மிகுந்த துணிச்சலோடு எழுதியிருக்கிறார். தமிழில் அரசியல் நாவல் இல்லை என்ற குறையைப் போக்கியிருக்கிறார். வெட்டுப்புலி எழுத்தாளர்களுக்கும் விமர்சர்களுக்கும் சவாலை ஏற்படுத்தி தந்திருக்கிறது. சவாலை ஏற்க ஆட்கள் இல்லையென்றாலும். அரசியல் மேடைகளில் மட்டுமே உச்சரிக்கப்படுகிற வரலாற்று நாயகர்கள் பலர் புனைவிலக்கியத்திற்குள் வந்திருக்கிறார்கள். கதா பாத்திரங்களாக.
தமிழ்ச்சமூகம் எவ்வாறு சினிமா சார்ந்த சமூகமாக மாறியது என்பதை அதன் வரலாற்று பின்னணியோடு விவரிக்கிறது நாவல். சிவகுருவின் வாழ்க்கையோடு சினிமா உலகம் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. தேர்தல் சமயத்தில் ரஜினிகாந்தின் அறிக்கைக்காக மொத்த தமிழ்ச்சமூகமும் காத்திருக்கிறது. தமிழ்ச்சமூகம் சினிமா சார்ந்த சமூகமாக மாறிவிட்டது என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் இருக்க முடியாது. தமிழக அரசியலையும், சினிமாவையும் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு மாற்றியது எது? ரஜினிகாந்த்க்கு உடல் நிலை சரியில்லை. மருத்துவமனைக்கு போகிறார், சிங்கப்பூரில் இருக்கும்போது தொலைபேசியில் தொடர்புகொள்கிறார். ஜெயலலிதா. தமிழகமெங்கும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. பழனியில் ஒரே நாளில் ஆயிரம் பேர் மொட்டைப் போட்டு அங்க பிரதட்சணம் செய்தார்கள். ஒரு மாதகாலம் வரை குழந்தைகள் பள்ளிக்கு போவததற்காக வருத்தப்படாத பெற்றோர்கள்தான் இவர்கள். ரஜினிகாந்த் பெரியாரோடு இருந்தாரா, அண்ணா, கலைஞரோடு இருந்தாரா, சுதந்திர போராட்ட தியாகியா? தமிழர்கள் தமிழர்களாக இல்லாமல் போனது குறித்து அக்கறையுடன் விவாதிக்கிறது நாவல். சினிமா எப்படி பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறியது? சினிமா எந்தெந்த வகைகளில் தமிழ் சமூகத்தின் அறிய கலைகளை அழித்தொழித்தது, சினிமாவை எப்படி தொலைக்காட்சி ஒழித்தது என்பதை இயல்பான போக்கில் நாவல் பேசுகிறது. உண்மையை பேசுகிறது. மக்களின் வாழ்வை பேசுகிறது.
சின்னா ரெட்டியின் வாரிசுகள் பெரியாரின் தொண்டர்களாக, அண்ணாவின், கலைஞரின் தொண்டர்களாக இருக்கிறார்கள். பெரியாருக்கு உடல் நிலை மோசமாகும்போது லட்சுமண ரெட்டி துடித்துப்போகிறார். பெரியாரின் கொள்கைகளை, தி.மு..வின் கொள்கைகளை சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் இம்மி பிசாமல் பின்பற்றுகிறார்கள். தாழ்த்தப்பட்ட பெண்ணை காதலிப்பது, கட்சி கல்யாணம் செய்வது என்று அடுக்கடுக்காக சம்பவங்கள் வருகின்றன. சத்தியமூர்த்திக்கு, ராஜாஜிக்கு கருப்புக்கொடி காட்டுகிறார்கள். மனைவியுடன், குடும்பத்தாருடன், ஊரார்களுடன் ஓயாமல் மோதிக்கொண்டிருக்கிறார்கள். சிறைச்செல்கிறார்கள்., இத்தனைக்கும் இவர்கள் திராவிடர் கழகத்திலோ, தி.மு..விலோ எந்த பதவியிலுக்கும் இல்லாதவர்கள். குடும்ப அளவில், ஊர் அளவில் மட்டுமே கட்சி கொள்கையை நடைமுறைப்படுத்துகிறார்கள். கட்சிதான் அவர்களுக்கு உயிர். அடைந்தால் திராவிட நாடு அடையாவிட்டால் சுடுகாடுபோன்ற கோசங்கள்தான் அவர்களுக்கு மூச்சு காற்று.
பெரியாரின் தொண்டர்களாக, அண்ணாவின், கலைஞரின் தொண்டர்களாக இருக்கிறார்கள். தி.மு..தோற்கும் ஒவ்வொரு முறையும் அம்மனிதர்கள் படும் துரயம் விவரிக்க முடியாதது. அப்படியான மனிதர்கள் ஒவ்வொரு கிராமத்தில் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். பெரியார், அண்ணா, கலைஞர் என்ற பெயர்களை மந்திரம்போல உச்சாடனம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
நேருவின் மரணம் இந்திரா காந்தியை பிரதமராக்கியது. இந்திரா காந்தியின் மரணம் ராஜீவ்காந்தியை பிரதமராக்கியது. ராஜுவின் மரணம் சோனியா காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்கியது. ஜெயலலிதாவை தமிழக முதல் அமைச்சராக்கியது. பிரபாகரனின் மரணம் தமிழ் ஈழத்தை வெற்று கனவாக்கியது. கொலைகளும், மரணங்களும் இந்தியாவை, தமிழகத்தை அரசியல் ரீதியாகவும், பிற துறைகளிலும் எவ்விதமான மாற்றங்களை நிகழ்த்தியது. அதனால் ஏற்பட்ட சாதக பாதகமான அம்சங்களைப் பற்றிப் பாரபட்சமின்றி வெட்டுப்புலி பதிவு செய்திருக்கிறது.
நாவலின் ஒரு பகுதி சின்னா ரெட்டியின் குடும்பம் சார்ந்த நான்கு தலைமுறைகளின் வாழ்வை சொல்கிறது. மற்றொரு பகுதி பிராமணியத்தையும், பிராமணர்களையும் எதிர்க்கும் பெரியாரின் தொண்டர்களைப் பற்றி விவரிக்கிறது. மூன்றாவது பகுதி தமிழக அரசியலில் நிகழ்ந்த மாற்றங்கள். நான்காவது பகுதி தமிழக சினிமாவும் அதன் நாயகர்களின் வளர்ச்சியும் விரிக்கப்படுகிறது. இந்த நான்கு பகுதியும் மாறி மாறி விவரிக்கப்படுகிறது. நாவலில் மூன்று தலைமுறைவரை உறுதியாக இருக்கிற சின்னாரெட்டியின் குடும்ப உறுப்பினர்கள் நான்காவது தலைமுறையில் லேசாக மாறத் தொடங்குகிறார்கள். நாவலில் பெரும் பகுதி பிராமணியத்திற்கு எதிராக பேசுவதுமாதிரி நாவல் தோற்றம் தந்தாலும் நாவலின் இறுதி பகுதியில் கிருஷ்ண பிரியா, பிரபாஷின் சகோதரர், தியான மடம் வைத்திருக்கும் அய்யர் ஆகிய மூவரின் மூலம் பிராமணிய கொள்கைகள் பேசப்படுகிறது. நியாயங்கள், தர்க்கங்கள் சரி. நாவலாசிரியர் நடுநிலைக்கு இது சான்று. ஆனால் பிராமணியத்தின் தர்க்கங்களையும், நியாயங்களையும் நாவலாசிரியர் ஏற்றுக்கொள்கிறாரா என்ற கேள்வி வருகிறது.
லட்சுமண ரெட்டியோடு சிரித்து பேசிய குற்றத்திற்காக இரவோடு இரவாக குணவதியும், அவளுடைய சாதியாட்களும் துரத்தியடிக்கப்படுகின்றனர். அதன் பிறகு பறையர்கள் குறித்த பதிவுகள் நாவலில் எங்குமே இடம்பெறவில்லை. தி.., தி.மு.. என்று உயிரையே விட்ட தியாகராசன் கடைசியில் அய்யரோடு சேர்ந்து கொண்டு தியானத்தில் ஈடுபடுவது, சினிமா எடுக்கபோய் பிச்சை எடுத்து சாகும் சிவகுரு இவர்கள் மூவரும் வாசகர்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறவர்கள். குணவதி, தியாகராசன், சிவகுரு போன்றவர்களுக்கு ஏற்பட்ட துயரம் அவர்களால் அவர்களுக்கு ஏற்பட்டதல்ல. சமூகத்தால் ஏற்பட்டது.
தமிழ்மகனிடம் சமூகம் குறித்த நம்பிக்கையும் அக்கறையும் இருக்கிறது. அவரிடம் அரற்றலோ, ஆவேசமோ, தன்னிரக்கமோ இல்லை. அவரிடம் இருக்கும் இலக்கிய-சமூகவிய்ல பார்வைதான் நூறு வருட வாழ்க்கையை எழுத்தாக மாற்றியிருக்கறிது. வெட்டுப்புலி நாவல் சரளமாக எழுதப்பட்டிருக்கிறது. அதுவும் புதுவிதமான முறையில். பிசிறு என்பது அபூர்வமாகவே இருக்கிறது. மூன்றாவது முறையாக முதலமைச்சராகியிருக்கும் ஜெயலலிதா குறித்து ஜெயலலிதா இருக்கிறாரேஎன்ற ஒருவார்த்தையைத் தவிர வேறு குறிப்பு இல்லாதது ஆச்சரியமளிக்கிறது. இடதுசாரி இயக்கங்கள், அவற்றின் செயல்பாடுகள், எட்டு, பத்து எம்.எல்.. சீட்டுக்காக அவர்கள் ஒவ்வொரு தேர்தலின்போதும் தி.மு..., .தி.மு..., என்று கட்சி மாறுவது என்பது குறித்த எந்தப் பதிவும் நாவலில் இல்லை. பல இடங்களில் காலம் குறித்த தகவல்களில் குழப்பம் இருக்கிறது. ஆனாலும் இந்நாவல் பல நாவல்கள் உருவாக ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கும். வெட்டுப்புலி அல்லவெட்டும் புலி.

-----------


(நன்றி: அம்ருதா மாத இதழ்)
வெட்டுப்புலிநாவல்
தமிழ்மகன்
உயிர்மை பதிப்பகம்,
டிசம்பர் 2009

சென்னை

LinkWithin

Blog Widget by LinkWithin