வியாழன், செப்டம்பர் 21, 2006

பெரியாரின் ரஷ்யப் பயண டைரிக் குறிப்பு!

சென்ற இதழ் தொடர்ச்சி

பெரியாரின் ரஷ்யப் பயண டைரிக் குறிப்பு!

"சிந்தனையாளர்' வே.ஆனைமுத்து

"திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்றும் பெரியாருடைய கருத்துகள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாது என்றும் பெரியார் ஒரு பிற்போக்குவாதி என்றும் கூற ஆரம்பித்திருக்கிறார்களே?

பெரியாருடைய தத்துவம் என்பது தமிழர்களை - திராவிடர்களை எல்லா ஆழிவுகளிலிருந்தும் மீட்க வேண்டும் என்பதுதான். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று இல்லை, அணுக்குப் பெண் அடிமையில்லை, அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை வேண்டும், படிப்பு - வேலை வாய்ப்பும் - பதவியும் எல்லா வகுப்பினருக்கும் விகிதாசாரப்படி கிடைக்க வேண்டும்... போன்றவைதான் பெரியாரின் கொள்கைகள். இது எதுவுமே இன்னும் சீராகாத நிலையில் அவருடைய தத்துவங்கள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாது, இத்தகைய கொள்கைகளால் வீழ்ந்தோம் என்பது பொருத்தமற்றது. பெரியாருடைய கொள்கைகள் என்னவென்று தெரியாதவர்கள்தான் அவருடைய கொள்கைகள் தேவையில்லை என்று சொல்கிறார்கள். ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.1970-ல் இந்திராகாந்தி அம்மையாரின் அமைச்சரவையில் மாகாண மந்திரியாக இருந்தவர் டாக்டர். சந்திரசேகர். மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாடு சம்பந்தமான அராய்ச்சியாளர் அவர். வேலூரைச் சேர்ந்த அவர் பெரியாருக்கு நெருக்கமானவர். அவர், பெரியாரைச் சந்தித்து, ""மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பிள்ளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யலாம்?'' என்றார்.""பெண்களுக்கு சொத்தில் சம அந்தஸ்து இருக்கிறது என்று அறிவித்து விடுங்கள், சரியாகிவிடும்'' என்றார். கேட்டவருக்கும் புரியவில்லை.""உன் மனைவிக்கும் வேலை, உன் மகளுக்கும் வேலை. அவர்களுக்கு சொத்தில் சம பங்கு என்ற நிலை வந்தால் பெண்களை யாரும் குறைச்சு மதிப்பிட மாட்டார்கள். ஆண் வாரிசுதான் வேண்டும் என்ற கருத்தும் போய்விடும்'' என்றார் பெரியார். ஆச்சர்யப்பட்டுப் போனார் அந்த அறிஞர்.""உலகத்தில் வேறு யாரும் சொல்லாத ஈங்களின் ஒரிஜினல் ஆலோசனை ஆது'' என்று கூறினார். அவரைப் பிற்போக்குவாதி என்பதும், அவருடைய கருத்துகளினால்தான் வீழ்ச்சியடைந்தோம் என்பதும் நேர்மையான குற்றச்சாட்டாகத் தெரியவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நாங்களும் ஒரு காரணம். பெரியாரின் சிந்தனைகள், கருத்துகள் என்ன என்பதை - அவருடைய வரலாற்றை - முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. சமுதாயம், தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முழுமையாகக் கொண்டு வரவில்லை. நான் கொண்டுவந்த "பெரியார் சிந்தனைகள்' தொகுதி என்பது ஒரு பகுதி... கொஞ்சம்தான். முழுமையாக வெளிவரவில்லை. இப்போது அவருடைய கருத்துக்களை விமர்சனம் பண்ணுகிறார்கள். அவருடைய எதோ ஒரு வாக்கியத்தைப் பிடித்துக்கொண்டு விமர்சனம் செய்கிறார்கள். "பறைச்சி எல்லாம் ஜாக்கெட் போட்டுகிட்டாப்பா' அப்படீனு பெரியார் பேசியதாக ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு பேசுகிறார்கள். நடந்தது என்ன தெரியுமா? அப்போது காமராஜரை ஆதரித்துப் பெரியார் பேசுகிறார். "காமராஜர் ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியிருக்கிறார்கள். ரவிக்கை போடக்கூடாத நிலையில் ருந்த அந்த சமுதாயப் பெண்கள் ரவிக்கை போட ஆரம்பித்திருக்கிறார்கள். இது காமராஜர் ஆட்சியின் சாதனை' என்றுதான் பெரியார் பேசினார். அந்தக் கூட்டத்தில் நான் இருந்ததால் சொல்கிறேன்.1950 வரை நாடார்கள் தீண்டப்படாதவர்கள். அவர்கள் வீட்டில் யாரும் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். 1920ம் செங்கல்பட்டு மாநாட்டில் நாடார்களை அழைத்து சோறாக்கச் சொன்னவர் பெரியார். அவர் எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானவராக இருக்க முடியும். ஆகவே, பெரியார் சொன்னதின் மையக்கருத்தைத் தெரிந்து கொள்ளாமல் பேசும் விமர்சனங்கள் பிழையானவை.

அதிபர் ஸ்டாலினை சந்திப்பதற்காக பெரியார் ரஷ்யா சென்றிருந்தார். அந்த நாளில் அவர் எழுதிய டைரி குறிப்புகள் உங்களிடம் இருப்பதாக ஒரு தகவல் அறிந்தோம்... அது பற்றி?

பெரியார் ரஷ்யாவுக்குப் புறப்பட்டது 1931-ம் ஆண்டு நவம்பர் மாதம். 1932-ம் அண்டு பிப்ரவரியில் இருந்து மே மாதம் வரை ரஷ்யாவில் தங்கியிருந்தார். 90 நாட்கள். அதில் எனக்குக் கிடைத்தது முப்பது நாள் டைரி மட்டுமே. அதில் எந்தெந்த ஊருக்குப் போனேன். யார், யாரையெல்லாம் சந்தித்தேன் என்று எழுதியிருக்கிறார். இவர் அங்கு சென்றிருந்த நாளில் மாதா கோவிலை புல்டோசர் வைத்த இடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு கோவிலையும் இடித்துத் தள்ள வேண்டாம் என்று முடிவெடுத்து அப்புறம் இடிப்பதை நிறுத்திவிட்டார்களாம். அதை குடோனாகவோ, லைப்ரரியாவோ, பள்ளிக்கூடமாகவோ வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்களாம். அதையெல்லாம் பெரியார் எங்களிடம் சொன்னார். ஆனால் கோவில்களுக்கு சொத்து இருக்கக் கூடாது என்று பறிமுதல் செய்து விட்டார்கள்.சில கோவில்களை அப்படியே விட்டுவிட்டார்கள். அங்கு நரைத்த தலையர்கள் மட்டும் போய்க்கொண்டிருந்தார்கள் என்று படித்திருக்கிறேன்.

அப்போது மாதா கோவிலை இடித்தவர்கள், பிறகு லெனின் சிலையையும், ஸ்டாலின் சிலையையும் இடித்தார்களே...

அதன் பிறகு வந்த தலைவர்கள் கொள்கையைத்தக்க வைப்பதைவிட, பதவிகளை தக்கவைப்பதை முதன்மையாகக் கொண்டார்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவில் மதப்பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்டார்கள். அதையும் ரஷ்யாவில் அனுமதித்தார்கள். மதம் உள்ளே நுழைந்ததும் அது சோவியத் அரசாங்கத்தையே மாய்க்க காரணமாகிவிட்டது. இப்போது அங்கிருந்து வருகிறவர்கள் நாங்கள் அங்கே மிகவும் கஷ்டப்படுகிறோம் என்கிறார்கள். விபசாரம் நடக்கிறது, கொலை நடக்கிறது, சூதாட்டம் நடக்கிறது...

பெரியாருடன் பழகியதில் மறக்க முடியாத சம்பவம் என்று எதைச் சொல்லுவீர்கள்?

பெரியார் நூல்களை தொகுக்கும் பணியில் இருந்தபோது, "இரங்கல் செய்திகள்' என்று ஒரு பகுதியைத் தொகுத்தேன். இரங்கல் செய்திகள் என்றால் தலைவர்கள் மறைவுக்கு அவர் விடுத்த அறிக்கைகள். காந்தி, ஸ்டாலின், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் மறைவுக்கு அவர் விடுத்த அறிக்கையைப் படித்துக் கொண்டு வந்தபோது, திடீர் என்று, ""நாகம்மாள் செய்தி இதில் இல்லையா?''னு கேட்டார். "கவனக் குறைவாக விட்டுவிட்டோமே' என்று வருத்தப்பட்டு, அன்று இரவே அதை தேடி எடுத்து எழுதிக் கொண்டு வந்து படித்துக் காட்டினேன். நான் படித்துக்காட்டியது 73 ஜூலை மாதம், இவர் நாகம்மைக்கு இரங்கல் கடிதம் எழுதியது 33 மே மாதம். 40 வருஷ இடைவெளி. என்ன ஆச்சர்யம்!நான் முதல் பாராவைப் படிக்கிறேன். இவர் இரண்டாவது பாராவை அப்படியே சொல்கிறார். "'நாகம்மையார் மறைவு எனக்கு துணை போயிற்றென்று சொல்வேனா? ஓர் அமைச்சு போயிற் றென்று சொல்வேனா? அதரவு போயிற்றென்று சொல்வேனா? அடிமை போயிற்றென்று சொல்வேனா? எல்லாம் போயிற்றென்று சொல்வேனா?'' என்று சொல்லிக் கொண்டே அழுதார். எனக்கும் அழுகை வந்துவிட்டது. இந்தச் சம்பவத்தை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது.

"பெரியார்' என்ற பெயரிலேயே திரைப்படம் தயாராகிறதே...?

அந்தப் படம் பற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஞான ராஜசேகரன் என்னுடன் கலந்து பேசினார். அவர் வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் சிலவற்றைக் கேட்டார். 2005ல் திருவனந்தபுரத்தில் அவர் பதவியில் இருந்தார். அப்போது நான் அங்கு வைக்கம் போராட்டம்பற்றி ஆய்வுக்காகச் சென்றிருந்தேன். அப்போதும் சந்தித்தார்.

-தமிழ்மகன்
படங்கள்: பாலா

LinkWithin

Blog Widget by LinkWithin