புதன், மே 12, 2010

கும்பகோணம்- கனவு இல்லமும் கணித மேதையும்



மாக்ஸிமுக்கு உடம்பு மிகவும் முடியாமல் இருந்தது. பசி எடுக்கிறது என்பான். சாப்பிட உட்கார்ந்ததும் வினோதமாக இரண்டு ஏப்பம் வரும். வயிறு நிறைய சாப்பிட்டு முடித்துவிட்டதுமாதிரி நெளிவான். எனக்கு மனது கஷ்டமாக இருந்தது. புரோட்டா இரண்டு துணுக்குகளைச் சிரமப்பட்டு சாப்பிட்டு முடித்தான். கூடவே ஓயாத இருமல் வேறு. சேத்தியாதோப்பில் சாப்பிட்டுவிட்டு அணைக்கரையைக் கடக்கும்போது சரியான ட்ராபிக் ஜாம்.
இரவு.. இருட்டின் அடர்த்தியும் அதிகமாக இருந்தது. முன்னால் போகிற வாகனம், வருகிற வாகனம் சரியாகத் தெரியவில்லை. எங்களுக்கு முன்னால் கருப்பு பின்னி துப்பட்டாவைப் போர்த்திக் கொண்டு நடுச்சாலையில் நிதானமாக சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார் ஒருவர். வந்த வேகத்தில் அத்தனை நெருக்கத்தில் அவரை கவனித்தேன். கரணம் தப்பினால்... மரணடைவதற்காகவே ஏற்பாடோடு வந்தவர் போல போய்க் கொண்டிருந்தார்.
ஒருவழியாக (பாண்டிச்சேரியில் இருந்து செல்வதற்கு அந்த ஒரு வழிதான் இருந்தது) கும்பகோணம் சென்று சேரும்போது இரவு பதினோரு மணி.
சேத்தியாத்தோப்பில் புரோட்டாவோடு மல்லு கட்டிக் கொண்டிருந்தபோதே கலை விமர்சகர் தேனுகாவோடு தொடர்பு கொண்டு ""அறை கிடைப்பதற்கு ஒன்றும் தொந்தரவு இருக்காதே'' என்று ஒரு கேள்வி கேட்டிருந்தேன்.
"மகம் என்பதால் நெரிசல் அதிகமாகத்தான் இருக்கிறது. நல்லவேளையாக நான் கும்பகோணம் டவுனில்தான் இருக்கிறேன். விசாரித்துவிட்டுச் சொல்கிறேன்'' என்றார்.
ராயர் ஹோட்டல்தான் கும்பகோணத்தில் சிறப்பானது. ஆனால் அங்கு இடம் கிடைக்கவில்லை. அதற்கு எதிரில் ஒரு ஹோட்டலில் இடம் கிடைத்திருப்பதாகச் சொன்னார். தங்கி, காலையில் எழுந்து கும்பேஸ்வரர் கோவில் குளத்தை பார்வையிட்டோம், ஜெயலலிதா ஞாபகம் வந்தார். சசிகலாவும் அவரும் மகாமகத்துக்குக் குளித்த இடத்தைக் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்த்தேன். நான்கு பக்கமும் மண்டபம் போல ஓர் அமைப்பு இருந்தது.
தேனுகா போன் செய்தார்.
உடனே அவருடைய வீட்டுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். அவருடைய வீடு பல ஆச்சர்யங்களுக்கு வழி வகுத்தது. செவ்வகம், முக்கோணம், அறுகோணம், சதுரம் போன்ற பல்வேறு வெட்டுத் தோற்றம் கொண்ட வீடு. வீட்டுக்கான வண்ணத்துக்கும் ஏதோ காரணங்கள். வீட்டுக்குப் பக்கவாட்டில் தனியாக ஒரு சுவர். இந்தச் சுவரை பாருங்கள் என்று காட்டினார். குறும்படம் திரையிட வசதியான ஒரு சுவர்.
ஆனால் அந்தச் சுவரை இரு சதுரமும் ஒரு செவ்வகமுமாகப் பிரிக்கலாம் என்றும் அந்தச் செவ்வகத்தை மேலும் ஒரு செவ்வகமும் சதுரமாகவும் பிரிக்கலாம் என்றும் சொன்னார். தொடர்ந்து அதைப் பிரித்துக் கொண்டே செல்ல முடியும் என்ற போது ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு கலை நுணுக்கங்கள் அந்த வீட்டில் இருந்தாலும் இப்படி கட்டுவதற்கு அனுமதித்த அவருடைய மனைவிக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். நான் சொன்னேன். வசதியான அறைகள், பெரிய ஹால், மேலே இரண்டு மாடிகள் இப்படித்தான் பெரும்பாலும் கனவு இருக்கும். வீட்டுக்கு வருகிறவர்கள் எத்தனை பேர் எப்படியெல்லாம் கருத்து சொல்லி அவரைக் குழப்பியிருப்பார்கள்? ரிடையர் ஆன பணத்தில் இப்படி ஒரு கனவு இல்லம் அமைக்க வேண்டும் என்பதுதான் தேனுகாவின் விருப்பம்.
மாக்ஸிம் தொடர்ந்து இருமிக் கொண்டிருப்பதைப் பார்த்து நெய்யில் மிளகை வதக்கிச் சுடச் சுட சாப்பிடச் சொன்னார் திருமதி தேனுகா. மாக்ஸிமுக்கு அதோடு இருமல் வரவேயில்லை.
நாங்கள் கணிதமேதை ராமானுஜம் வாழ்ந்த வீட்டைப் பார்க்கக் கிளம்பினோம். சாரங்கபாணி கோயிலுக்கு அருகே இருந்தது அந்த மகத்தான மேதையில் எளியவீடு. உள்ளே நுழைந்தபோது பெரும்பரவசம் ஏற்பட்டது. புதுவையில் பாரதி வாழ்ந்த வீட்டுக்குச் சென்ற போது ஏற்பட்ட அதே பரவசம். சிலிர்ப்பு. என்னதான் நாத்திகம் பேசினாலும் இதெல்லாம் மூளைக்குள் இருக்கும் மிகப் பாரம்பர்யமான உணர்வுதான்.
அவர் குறித்து வைத்திருந்த சில கணிதப் புதிர்களை அட்டையில் எழுதி மாட்டி வைத்திருந்தனர். ஒரு எண்ணை தொடர்ந்து வர்க்க மூலம் காண்பதாக ஒரு புதிர் எழுதியிருந்தார். அந்த வர்க்க மூலங்களில் இருக்கும் ஆச்சர்யமான ஒற்றுமையை சொல்லியிருந்தார். எண்கள் அவருக்கு வாழ்க்கையாகவும் பொழுது போக்காகவும் புதிராகவும் எல்லாமுமாக இருந்திருக்கிறது.
லண்டனில் கேம்பிரிட்ஜில் தாமஸ் ஹார்டியுடன் ராமானுஜம் பணியாற்றியது ஒரு பொற்காலம். ஆனால் லண்டன் பனி ராமானுஜத்துக்கு ஒத்துக் கொள்ளவேயில்லை. கடும் பாதிப்புக்கு ஆளாகி இரண்டு மூன்று முறை தற்கொலைக்கும் முயன்று காப்பாற்றப்பட்டார்.
1916 முதல் 19 வரை ஹார்டியுடன் அவர் பழிகியிருந்தார். அந்த நான்கு ஆண்டு பழக்கத்திலேயே ஹார்டிக்கு ராமானுஜம் மீது அதீத மரியாதை ஏற்பட்டிருந்தது. கேம்பிரிட்ஜில் பணியாற்றிய கணித மேதைகளை தரவரிசைபடுத்திய போது தாமஸ் ஹார்டி தனக்கு 25 மதிப்பெண்களும் ராமானுஜத்துக்கு 100 மதிப்பெண்களும் வழங்கியதிலிருந்து அவர் எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்பதை உணர முடியும்.
ராமானுஜத்துக்கு மிகவும் உடல்நிலை மோசமாகி லண்டனிருந்து இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப இருந்த நேரத்தில் அவரைப் பார்க்க வந்த ஹார்டி தன் கார் தாமதத்துக்குக் காரணம் என்று கூறி, அந்தக் காரின் எண்ணிலும் ஒரு சுவாரசியமும் இல்லை என்று நொந்து கொண்டார். "காரின் எண் 1729. இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்றார் ஹார்டி.''
உடல்நிலை மோசமாக இருந்தும் அல்சரில் துடித்துக் கொண்டிருந்த நிலையிலும் ராமானுஜம் சொன்னார்: "இது சுவாரசியமான எண்தான். பத்தின் மும்மடங்கையும் ஒன்பதின் மும்மடங்கையும் கூட்டினால் இந்த எண் வரும். அதே போல் பனிரெண்டின் மும்மடங்கையும் ஒன்றின் மும்மடங்கையும் கூட்டினாலும் இந்த எண் வரும்''.
ஹார்டிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
32 வயதில் இறந்துபோன அந்த மாமேதையின் வீட்டில் அவர் குளித்த கிணற்றடியில் நின்று கொண்டு இதையெல்லாம் நினைத்துப் பார்த்தபோது உடல் சிலிர்த்தது. அதிலென்ன தவறு இருக்கிறது? சிலிர்த்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டேன்.

(இன்னும் கொஞ்சம் இருக்கிறது)

LinkWithin

Blog Widget by LinkWithin