சனி, நவம்பர் 24, 2007
விளையாட்டான விஷயமல்ல...!
காரை எடுத்துக் கொண்டு சீறிப் பாயலாம். சாலையில் எதிர் வருகிறவர்களை எல்லாம் ஏற்றிக் கொல்லலாம். சாலை ஓரங்களில் செல்பவர்களையும் காரை ஏற்றிக் கொல்லலாம். எவ்வளவு பேரை கொன்று குவிக்கிறீர்களோ அவ்வளவு வெகுமதி உண்டு. பிடிக்க வரும் போலீசாரையும் போலீஸ் ஜீப்புகளையும் துவம்சம் செய்தால் கூடுதல் மதிப்பு.... இது குழந்தைகளுக்கான ஒரு விடியோ விளையாட்டு. என்ன கொடுமை சார் இது? என்று தலையில் அடித்துக் கொள்பவர்கள். அடுத்த விளையாட்டைப் பாருங்கள்.
சாதாரண ரோட் சைட் ரெüடியாக இருந்து படிப்படியாகக் கொலை, கற்பழிப்பு, ஆட்கடத்தல், என படிநிலைகளைக் கடந்து "அவுட் சைடர்', "பைட்டர்', "அண்டர் பாஸ்', "பாஸ்' "டான்' என உயர்ந்து மாஃபியாவின் "பிக் டான்' பதவியைப் பிடிப்பது எப்படி என்பதுதான் இந்த விளையாட்டு. இன்னொரு டானை ஒழித்துக் கட்டுவது எப்படி.. அரசியல் தலைவர்களை அடித்து நொறுக்குவது எப்படி... இதையெல்லாம் "இன்டராக்டீவ்' முறையில் கற்பிக்கும் இந்த விளையாட்டுக்குப் பெயர் "காட்ஃபாதர்'.மார்லன் பிராண்டோ நடித்த "காட்பாதரை' தழுவிய விளையாட்டு இது.
"என் குழந்தை கம்ப்யூட்டர் கேம் விளையாடுகிறான்' என்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பது இந்த விளையாட்டுகளுக்காகத்தான்.
"இயற்கை', "ஈ' படங்களை இயக்கியவரும் இப் படங்களுக்கு முன்னால் "தேள்' என்ற 3டி படத்தை உருவாக்கியவருமான இயக்குநர் ஜனநாதனிடம் இது குறித்துக் கேட்டோம்.
""விடியோ கேம் ஆரம்பிப்பதற்கு முன்னரே இப்படியான கொடூர விளையாட்டுகள் சரித்திரத்தில் ஏராளம் இருந்திருக்கின்றன. கொடுங்கோல் அரசர்கள் மனிதர்களையும் சிங்கத்தையும் மோதவிட்டு ரசித்ததாகப் படிக்கிறோம்.
இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் ஆட்சியின் பாடத்திட்டத்தில் உதாரணத்துக்கு இப்படி ஒரு கணக்கு... உன் துப்பாக்கியில் ஆறு தோட்டாக்கள் இருக்கின்றன. நான்கு யூதர்களை சுட்டு வீழ்த்திவிட்டாய். இப்போது உன்னிடம் எத்தனை குண்டுகள் பாக்கியிருக்கும்? இது ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்குக் கணக்குப் பாடம்.
குழந்தைகள் மனதில் வன்முறையை- வெறியை வளர்க்க வேண்டுமென்றே விளையாட்டுகள் ஆரம்பித்தன. அது எல்லாமே இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டன. ஹாலிவுட் திரைப்படங்கள் அந்த வன்முறையைக் கையிலெடுத்துக் கொண்டன. எங்கோ அமேசான் காட்டில் கிடக்கும் முதலையை ஹெலிகாப்டர், துப்பாக்கிகள் போன்ற தொழில்நுட்பங்களோடு சென்று கொன்றுவிட்டு வருவதைத் திரைப்படங்களாக எடுப்பார்கள். பாம்புகளை வேட்டை ஆடுவதைப் படமாக்குவார்கள். இயற்கையை நேசிக்க விடாத, காட்டை அழிக்கிற படங்கள் தொடர்ச்சியாக வெளிவர ஆரம்பித்தன. ஹிட்லர் செய்த வேலையை ஹாலிவுட் படங்கள் செய்ய ஆரம்பித்தன. இதன் தொடர்ச்சியாக இந்தப் படங்களின் பெயர்களிலேயே விடியோ கேம்கள் உருவாக ஆரம்பித்தன. திரைப்படங்களுக்கு இருந்த சென்சார்கூட இந்த கேம்களுக்குக் கிடையாது. குழந்தைகள் பார்க்கக் கூடாத காட்சிகள் என்று திரைப்படங்களில் வெட்டுவார்கள். ஆனால் இவற்றில் காட்டப்படும் வன்முறைக்கு எல்லையே கிடையாது. தலை துண்டித்துக் கிடக்கும் காட்சிகள், வெட்டப்பட்டு வீசி எறியப்படும் கால்கள்- கைகள், ரத்தம் தெறிக்கும் காட்சிகள் விடியோவில் தாராளம். என்ன படத்தில் ஹீரோ செய்வதை இங்கே குழந்தைகள் தாங்களே செய்கின்றன.
பல நேரங்களில் ஹாலிவுட் படங்களைவிட அதைச் சார்ந்து தயாரிக்கப்பட்ட விடியோ கேம் சி.டி.கள் அதிக லாபம் ஈட்டுகின்றன. அவற்றுக்கு உலகமெங்கும் அவ்வளவு வரவேற்பு இருக்கிறது. உதாரணத்துக்கு "ஹாரிபாட்டர்' பட சி.டி.க்கும் புத்தகத்துக்கும் கடை திறப்பதற்கு முன்னரே கடை வாசலில் காத்திருந்த கூட்டத்தைப் பார்த்தோமே... படத்தைவிட அதிக லாபம் சம்பாதித்த சி.டிகளுக்கு இது ஓர் உதாரணம். இது போல நூற்றுக்கணக்கான சி.டி.கள் நிழல் உலகில் நடமாடுகின்றன. அந்த சி.டி.யில் காட்டப்படும் தாதாக்களைப் போல இந்த சி.டி. வியாபாரத்திலும் பைரேட்டட் தாதாக்கள் இருக்கிறார்கள். விளையாட்டு, விபரீதமாகிக் கொண்டிருப்பது உண்மைதான்'' என்கிறார் ஜனநாதன்.
யோகா கிளாஸ், தியான வகுப்புகள் என்று அமைதியை தேடிப் போய்க் கொண்டிருக்கும் பெற்றோர்கள் கவனிக்க...!
தமிழ்மகன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)