வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)
தமிழ்மகன்
தமிழ் மொழிக்கு காலம் தோறும் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் அரிய பணியை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் செய்து வந்திருக்கிறார்கள். சங்கப் புலவர்கள், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்ற பக்தி இலக்கியகர்த்தாக்கள், பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா., கருணாநிதி, ஜெயகாந்தன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என பலரும் படைப்பிலக்கியங்கள் மூலம் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் படைப்புக்கும் பின்னணியில் ஏதோ நோக்கமும் கொள்கையும் இருந்தன. பக்தியை வளர்த்தார்கள், தேசியத்தை வளர்த்தார்கள், தமிழினத்தை வளர்த்தார்கள், மனித நேயத்தை வளர்த்தார்கள், கலையை வளர்த்தார்கள் போன்ற ஒன்றில் இவர்களில் பலர் பொருந்திவிடுகிறார்கள். ஏதோ ஒருவிதத்தில் தமிழைத் தக்க வைக்கிற வேலையைச் செய்தார்கள் என்பதும் பொருந்தும்.
ஓலைச் சுவடிகளையெல்லாம் திரட்டி தமிழருக்கு அறிமுகம் செய்த தமிழ்த் தாத்தா உ.வே.சா, பிறமொழி இலக்கியங்களைத் திரட்டித் தந்த க.நா.சு. போன்ற பலர் இந்த மொழியின் சுறுசுறுப்புக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
பல ஆங்கில எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்கள் இருக்கிறார்கள். ஆங்கில எழுத்தாளர்கள் பலரை, அவர்களை நேர்காணல் செய்து அவர்கள் வார்த்தைகளாலேயே அவர்களை அறிமுகம் செய்யும் ஓர் அரிய பணியைச் செய்திருக்கிறார் அ.முத்துலிங்கம். காலச்சுவடு வெளியீடான "வியத்தலும் இலமே' அந்த விதத்தில் தமிழில் புது முயற்சி. இதுவரை இத்தனை விஸ்தாரமாகச் செய்யப்படாத சாதனை.
இவர் நேர்காணல் செய்திருக்கும் பலர், நம்மில் பலருக்கு அவர்களின் ஒரு சில படைப்புகள் மூலமாகவோ, அல்லது பெயரளவிலோதான் அறிமுகமாகியிருப்பார்கள். ஆனால் முத்துலிங்கமோ அவர்களையெல்லாம் நேரில் சந்தித்து அவர்களின் இலக்கியக் கொள்கைகள், சிறுகதைக் கோட்பாடுகள், அவர்களுடைய படிப்பு ரசனை, அவர்களின் எழுத்து பாணி என்று இங்கு எழுதும் இளம் படைப்பாளிகளின் விருப்பத்தை உணர்ந்து கேள்வி கேட்டு விளக்கம் பெற்று எழுதியிருக்கிறார். இவ்வளவு பேரையும் நேரிலேயே சந்தித்திருக்கிறாரே எனப் பொறாமையாக இருக்கிறது.
"எத்தனை தடவை வேண்டுமானாலும் திருத்தி எழுத தயங்க மாட்டேன். நீங்கள் பார்ப்பது செதுக்கப்பட்ட சிலையின் இறுதி வடிவம்தான்' என்கிறார் டேவிட் செடாரீஸ். இவர் துப்பரவு பணியாளராக வேலை செய்தவர். எதற்காக பிரபலமான பின்னும் வேலை . செய்தீர்கள் என்ற கேள்விக்கு நான் இரவில்தான் எழுதுகிறேன். பகலில் செய்வதற்கு எனக்கு ஒன்றுமில்லை. அதனால் வேலைக்குப் போனேன் என்கிறார். அகில் சர்மாவோ "வாழ்வது ஒரு முறைதான். இப்போது எழுதவில்லை என்றால் வேறு எப்போது எழுதுவது' என்று பல லட்ச ரூபாய் சம்பாத்தியம் செய்யும் வேலையை உதறிவிட்டு இந்த நான்கு ஆண்டுகளில் ஒரே ஒரு சிறுகதையை மட்டும் எழுதியவர்.
""ஒரு எழுத்து ஒருமுறை எழுதிவிட்டால் எழுதியதுதான் திருத்தி எழுதுகிற பேச்சுக்கே இடமில்லை'' என்கிறார் டெவிட் பெஸ்மாஸ்கிஸ்.
இளம் எழுத்தாளர் நஸீகு அலி முதல் 80 களில் இருக்கும் ஆலீஸ் மன்றோ வரை பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பேட்டிக்கான நேரம் கொடுத்துவிட்டோம் என்ற நியாயத்தில் மனைவியின் பிரசவ நேரத்தையும் பொறுத்துக் கொண்டு இயல்பாக பேசிய கிறிஸ் ஃபிலார்டி. வெறுப்பும் சலிப்புமாகப் பேசும் ஃப்ராங்க் மக்கோர்ட் எல்லோரையும் தேடித் தேடி பேட்டி கண்டிருக்கிறார்.
ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தையாகப் போற்றப்படுகிற சினுவ ஆச்சிபிக்கு பெரிய அளவில் விருது கெüரவங்கள் கிடைக்கவில்லை ஆனால் அவரைப் பார்த்து மலைத்து எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களுக்கு மகத்தான கெüரவங்கள் கிடைத்திருக்கின்றன. அதைப் பற்றி நஸீகு அலியிடம் கேட்கிறார். முப்பது பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதும் 28 வயதில் அவர் எழுதிய "திங்ஸ் ஃபால் அபார்ட்' என்ற முதல் நாவல் 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று பிரமிக்கிறார் நஸீகு. சினுவா அச்சுபி மீது அப்படியொரு மரியாதை. அவர் படிப்பதற்காக நஸீகு ஒரு சிறுகதையை அனுப்பியிருந்தாராம். படிக்க நேரமில்லை என்பதை விளக்கி ஒரு நீண்ட கடிதம் அனுப்பியிருந்தாராம். பொக்கிஷம் போல அந்தக் கடிதத்தைப் பாதுகாத்து வருகிறாராம். அப்படி மதிக்கிறார்.
அதே போல் ஒரு எழுத்தாளரை மதிப்பதில் சிகரம் தொட்ட இன்னொரு எழுத்தாளர் டேவிட் செடாரிஸ். இவர் போற்றுவது டோபையாஸ் வுல்ஃப் அவர்களை. "நான் இன்னும் தற்கொலை செய்து கொள்ளாமல் இருப்பதற்குக் காரணமே நான் இறந்த பிறகு டோபையாஸ் எழுதும் கதையை படிக்க முடியாமல் போய்விடுமே என்பதால்தான்' என்கிறார் செடாரிஸ்.
ஆலிஸ்மன்றோவின் சிறுகதைகள் 40லிருந்து 70 பக்கங்கள் இருக்கும். இங்கே சிலர் அதை நாவல் என்றோ குறுநாவல் என்றோ சொல்கிறார்கள். (பிப்.11 - 2008 நியூ யார்க்கர் இணைய இதழிலும் அவருடைய "ஃப்ரீ ராடிகல்' என்ற சிறுகதை இடம் பெற்றிருக்கிறது.)
சிறுகதையின் வடிவம் குறித்த அவர்களின் பார்வை, தரிசனம் அனைத்தும் நம்முடைய கொள்கைகளுக்கும் விருப்பங்களுக்கும்கூட பொருந்தி வருவது ரசிக்கும்படியாக இருக்கிறது. அது மனித வாழ்வின் பரந்துவிரிந்த பொதுத் தன்மையையும் அடையாளப்படுத்துவதாக இருக்கிறது.
கலிபோர்னியாவின் பேர்க்லி பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருக்கும் ஜார்ஜ் எல் ஹார்ட் (hart) சொல்லும் தமிழ் சாதிய நடைமுறைகள் ஆச்சர்யமான புதிய சந்தேகங்களை விதைக்கின்றன. ஆர்யர்களின் வருகைக்குப் பின்னர்தான் சாதி முறை ஏற்பட்டதென்றால் அது அவர்களின் சமூகத்தில் இல்லையே என்கிறார். அவர்களின் வருகைக்கு முன்பே இந்திய சமூகத்தில் சாதி முறை இருந்தது என்பதும் ஆரியர்களின் வருகைக்குப் பிறகு அந்த வர்ண பேதங்கள் வளர்ந்தற்குக் காரணம் அந்த வாழ்வுமுறை ஏற்கெனவே இருந்ததன் காரணத்தால்தான் என்பது அவருடைய கூற்று. ரஷ்யன், லத்தீன், ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், ஜெர்மன், பிரெஞ்சு, கிரேக்கம் என பூமிப் பந்தின் பிரபல மொழிகள் பலவற்றை அறிந்தவராக இருக்கிறார் ஜார்ஜ் எல் ஹார்ட். அவருடைய கருத்துகளை நாம் அவ்வளவு எளிதில் புறக்கணிக்க முடியாததாகவும் உள்ளது. வேதங்களிலும் அர்த்த சாஸ்திரத்திலும் வர்ண பேதங்களுக்கான இலக்கணங்களும் சாதி ரீதியாக மனிதர்களை இழிவுபடுத்தியிருப்பதும் தெளிவாகிற அளவுக்கு பண்டைய தமிழ்நூல்களில் குறிப்படப்படவில்லை. தமிழ் சமூதாயத்தில் இப்படியொரு வாழ்வியல் முறை இருந்திருப்பின் அவை தமிழ்நூல்களில் வலியுறுத்தப்படாமல் ஆரிய நூல்களில் வலியுறுத்தப்பட்டிருப்பது ஏன் என்பதும் கேள்வி.
களவு ஒழுக்கம் குறித்து அகப் பாடல்களில் வருகிறது. ஆனால் கர்ப்பமான பெண்கள் சம்பந்தமாகவோ, கர்ப்பிணி பெண்ணின் பாடலாகவோ எதுவும் இடம்பெறவில்லையே என்ற முத்துலிங்கத்தின் கேள்வியே புதிய கோணத்தைத் தருகிறது. அதற்கு ஹார்ட் தரும் பதில் இது: "சங்க காலத்தில் இன்று போல அன்றும் பழமையான சம்பிரதாயங்களையே கடைப்பிடித்தனர். ... கவிகள் சமூகம் ஏற்காத ஒன்றையே வர்ணித்தனர், இப்போதைய தமிழ் சினிமா போல.'
அவருடைய பல்கலை கழகத்தில் தமிழ்த்துறை உருவாவதற்கு பாடுபட்டவர் ஹார்ட். 9 ஆண்டுகாலமாக அதன் தலைவராகவும் இருந்துவருகிறார்.
இதில் இரண்டொரு "ஒரு பால்' எழுத்தாளர்களைச் சந்தித்து செவ்வி கண்டிருக்கிறார் முத்துலிங்கம். அதில் ஒருவர் ஷ்யாம் செல்வதுரை. "சினமன் கார்டன்' என்ற அவருடைய பரபரப்பான நாவலில் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பித்திலும் பொருத்தமான திருக்குறளைக் கையாண்டிருக்கிறார். அவருக்குத் தமிழில் ஒருவார்த்தையும் தெரியாது என்பது வெளிநாட்டில் குடியேறிய தமிழர்களுக்கேயான வேதனை. காம இலக்கியம் படைக்கும் இலங்கையைப் பூர்வீகமாகமாகக் கொண்ட மேரி ஆன் மோகன்ராஜ் என்பரை பேட்டி கண்டிருக்கிறார். அவருக்கும் தமிழ் மறந்தே போய்விட்டது.
மார்க்ரெட் அட்வூட், பிரிஸ்கி, எலெய்ன் பெய்லின், டேவிட் ஓவன், வார்ரென் கரியோ போன்ற பலரது பேட்டிகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. மிகவும் எளிமையான கேள்விகள் மூலம் ஆச்சர்யமான விஷயங்களைக் கொண்டுவருவது முத்துலிங்கத்தின் பாணியாக இருக்கிறது. உங்கள் சிறுவயது ஞாபகங்கள் என்ன? இப்போது என்ன எழுதுகிறீர்கள்? போன்ற கேள்வியைக் கேட்கிறார். அதே போல் நம் புதுமைப்பித்தன், பாரதி, நம்முடைய பழமொழி போன்றவற்றை அவர்களிடம் நினைவூட்டுகிறார். பெருமையாக இருக்கிறது.
இந்தப் பேட்டிகளில் (சற்றே) விலகி நிற்பது மாரத்தான் ஓட்டப் பந்தய வீராங்கனை ஜெனிவீவ் கெல்லியின் பேட்டி. அந்தப் பெண்ணே ஒரு ஓடும் இலக்கியமாக இவருக்குத் தெரிந்திருக்கலாம். இந்த ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறாள். முத்துலிங்கத்தின் வீட்டுக்கு விருந்தினராக வந்து தங்குகிறார். அவளுடைய ஆங்கில உச்சரிப்பு தேனில் கலந்ததுபோல மிருதுவாக இருந்தது என்று வர்ணிக்கிறார் முத்துலிங்கம். கனடாவை இரண்டுநாளில் சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்பது அவருடைய திட்டம். உலகின் மூன்று மகா சமுத்திரத்தால் சூழப்பட்ட கனடாவை மூன்றுநாளில் சுற்றிப் பார்க்க நினைப்பது அவளுடைய அறியாமையா, பேராசையா என்று இவருக்கு விளங்கவில்லை என்று எழுதியிருக்கிறார்.
நம்மிடம் இருப்பது ஒரே ஒரு உடம்புதான். அதை பத்திரமாக பேண வேண்டும். 26 மைல் ஓட வேண்டுமானால் 30 மைலோ, 35 மைலோ ஓட வேண்டும் அப்போதுதான் மாரத்தானில் ஓடுவதற்குச் சுலமாக இருக்கும் என்பது ஜெனிவீவ் கருத்து.
வியப்பூட்டும் பெண். நிச்சயம் இந்த ஆண்டு மாரத்தானில் வெல்லப் போவது அவள்தான்.. அல்லது வெல்ல வேண்டியவள் அவள்தான்.
விடைபெறும்போது ஏர்போர்ட்டில் முத்துலிங்கத்துக்கு அவள் ஒரு முத்தம் கொடுத்துவிட்டுச் சென்றாள். ஏதோ முத்தம் கொடுப்பதற்கு நாளைமுதல் தடைவிதித்துவிட்டதுபோல் அந்த முத்தம் மிக நீண்டதாக இருந்தது என்கிறார் அ.மு. இப்படி பலவிதங்களில் நம்மை பொறாமைப்படுத்துகிறார். ஆரம்பத்தில் ஆங்கில பாணியில் சிந்திக்கும் ஒரு தமிழர் என அவரை நினைத்தேன். பிறகு அதை மாற்றிக் கொண்டேன்.
அவருக்கு முதன்முதலாக எழுதிய கடிதத்தில் "நீங்கள் பழந்தமிழ் ஆர்வம் கொண்ட ஓர் ஆங்கிலேயரைப் போல சிந்திக்கிறீர்கள்' என்று எழுதியிருந்தேன்.
"எதற்காக அப்படிச் சொல்கிறீர்கள், எனக்கு சிரிப்புதான் வருகிறது' என்று பதில் அனுப்பியிருந்தார்.
அவருடைய வெட்கமும் பொறாமையாகத்தான் இருக்கிறது.
வியத்தலும் இலமே
அ.முத்துலிங்கம்
காலச்சுவடு வெளியீடு.