இந்த மாத அம்ருதா இதழில்...‘வெட்டுப்புலி’ நாவல் குறித்து
ராஜ்ஜா
பள்ளிப் பருவத்திலே தபால் தலைகள் சேகரித்து வைத்துக் கொண்டு ஏதோ உலகமே என் மேசை கவயத்துக்குள் அடங்கிவிட்டதைப் போன்ற ஒரு பிரம்மை இருந்தது. அதே போல வத்திப்பெட்டி படங்கள். இரட்டைக்கிளி, புறா, சிங்கம், புலி, ஒட்டகம், காண்டா மிருகம், குள்ள வாத்து, ஓடும் ரயில், பஸ், சைக்கிள், கார், விமானம் என்று பல படங்கள் கட்டு கட்டாக, வங்கியி;ல் வைக்கப்பட்டிருக்கும்; பணத்தைப்போல கவயத்துக்குள் வைத்து அழகு பார்த்த காலம் அது. எல்லாம் கோலிகுண்டு விளையாடி ஜெயித்தவைதான்.
இந்த வத்திப்பெட்டி படங்கள் எல்லாவற்றையும் தூக்கி ஓரங்கட்டுவதைப்போல வெட்டுப்புலி படம் இருக்கும். அவ்வளவு அழகு. அவ்வளவு நேர்த்தி. அத்தோடு நம்மைப் போன்ற மானுடன் ஒருவன் கொடூரமான சிறுத்தை ஒன்றை தன்னந்தனியாக (ஒரே ஒரு வளர்ப்பு நாய் துணையோடு என்றும் சொல்லலாம்) பனங்காய் சீவும் அரிவாளால் வெட்டிச் சாய்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான் என்பதை நினைக்கும்போது உடம்பு புல்லரிக்கும். வீரத் தமிழன் அவன்.
வீரத் தமிழச்சி ஒருத்தி ஒரு புலியை முறத்தால் அடித்து விரட்டியது பற்றி தெரிந்து கொள்ள உயர்நிலைப் பள்ளிக்குச் சென்ற பிறகுதான் முடிந்தது. ஆக இந்த வெட்டுப்புலி வீரனின் பராக்கிரமங்களைப் பற்றி நானும் என் சகாக்களும் பள்ளிப் பருவத்திலேயே வியந்து பாராட்டியிருக்கிறோம். எங்களின் பாராட்டுதல்கள் வெட்டுப்புலி படத்திற்கு மதிப்பையும் அதற்குரிய அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கின்றன.
கோலி குண்டு விளையாட்டில் வத்திப்பெட்டி படங்களை வைத்து விளையாடும்போது, மற்ற பத்து படங்களுக்கு ஒரு வெட்டுப்புலி படம் சமம் என்று டமாரம் அடித்து சொல்லிவிட்டோம். எவனிடம் அதிக வெட்டுப்புலி படங்கள் இருக்கின்றனவோ அவன் ஒரு சின்ன ஜமீன்தாராகவே கருதப்பட்டான். ம்…அந்தப் பருவம் மீண்டும் கனவிலாவது வருமா?! இருந்தும் பழைய நினைப்பில் மிதந்து செல்வதில் கிடைக்கும் சந்தோ~ம் வேறு எதில் கிடைக்கும்?
இந்த மாதிரியான எழுதி சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சி தமிழ் மகனின் ஐந்தாவது நாவலான ‘வெட்டுப்புலி’ கொடுக்கிறது. இந்த நாவலில் எழுதப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் ஏதோ நம் வாழ்வில் நடந்தது போலவே இருப்பதுதான் காரணம்.
“குருவிக்காரனும் நாமும் சமமாயிடணும்னு இல்லடி. பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத்தான்;டி சட்டம் போடச் சொல்றாங்க,” (ப.92) என்று வெட்டுப்புலி நாவலில் வரும் பல கதாபாத்திரங்களில் ஒருவரான தசரத ரெட்டி சொல்கிறார். நான் சிறுவனாய் இருந்த காலத்தில் என் அப்பா என் அம்மாவிடம் மேற்சொல்லப்பட்ட கருத்தை சொல்லியிருக்கிறார். பின்பு நான் படித்து வளர்ந்து அரசு கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக வேலையில் அமர்ந்த பிறகு இந்த நாவலின் இன்னொரு கதாபாத்திரமான ஆறுமுக முதலி தனக்கு புரியாத வி~யமாக சொல்கிறாரே “பார்ப்பான்கள் எல்லா வேலையிலும் சேர்ந்துவிட்டதாகவும், நூறு பேர் டாக்டருக்கு படித்தால் அதில் பார்ப்பான் அற்றவர்கள் இரண்டு பேர்தான் டாக்டர் படிக்;கிறார்கள் என்கிறார்களே இவர்களை யார் படிக்க வேண்டாம் என்றது? பார்ப்பான் எல்லாம் அரசு உத்யோகத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் வக்கீலாகவும் நீதிபதியாகவும் டாக்டராகவும் மாறிவிட்டார்கள் என்ற வயிற்றெரிச்சல் எதற்கு?” (ப.121) இதேபோல என் அப்பாவும் சொல்லியிருக்கிறார்.
பெரியார் கட்சி ஆரம்பித்தபின் பாவம் இந்த பார்ப்பனர்கள், வெறும் வாயை மென்று கொண்டிருந்தவனுக்கு அவுல் கிடைத்ததைப்போல, யார் யார் வாயிலோ மாட்டிக் கொண்டு எப்படி எல்லாம் மென்று துப்பப்பட்டிருக்கிறார்கள் என்பதை மிகத் துள்ளியமாக தீட்டியிருக்கிறார் தமிழ்மகன்.
நாவலின் இறுதியில் பிரபா~pன் அப்பா தமிழ்ச்செல்வனிடம் சொல்கிறாரே “ஜெயலலிதா பிராமின்தானேனு சொல்லலாம். அந்தம்மாவே ‘நான் ஒரு பிராமின்’னு சொல்லிக்கலாம். பெருமையா. ஆனா சங்கராச்சாரிய அரெஸ்ட் பண்ண முடியுதே…கலைஞரால முடியுமா? எதுக்குச் சொல்றேன்னா கம்யூனலா யோசிக்கிறது போய் இப்ப சுயநலமா யோசிக்கிறாங்க…இல்லையா?” (ப.367). இந்த காலகட்டத்தில் என் அப்பா உயிரோடு இல்லை. இருந்திருந்தால் இதே வார்த்தைகளை செல்லியிருப்பார்.
நான் கோடிட்டுக் காட்டியதையெல்லாம் படித்துவிட்டு தமிழ்மகனின் வெட்டுப்புலி ஏதோ ஒரு ஜாதியை வைத்து எழுதப்பட்டது என எண்ண வேண்டாம். எல்லா ஜாதிக்காரர்களும் இங்கு கதாபாத்திரங்கள்தான். அவரவர்களுக்குத் தகுந்தாற்போல வாங்கிக் கட்டிக் கொள்கின்றனர். கதாபாத்திரங்களுக்கு பஞ்சமே இல்லை. லியோ டால்ஸ்டாயின் நாவலான போரும் அமைதியும் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
பார்ப்பனர்கள் தலித் மக்களை எவ்வளவு கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்! மற்ற ஜாதிக்காரர்களும் இவர்களின் மனதினை எப்படி எல்லாம் புண்படுத்தியிருக்கிறார்கள். “ஒர்த்தனுக்கு தம் மேலயே மரியாதை இல்லாம போய்டுமா? ஜெகநாதபுரத்திலயும் இப்படித்தான் இருப்பாங்களா? இத்தனை நாளா எட்டாம போச்சே? அது சரி. பெரி வேப்ப மரத்தில காக்கா கூடு கட்டுது. நாய் குட்டி போடுது…காட்டு கலாக்கா காய்க்குது… அந்த மாரி லிஸ்ட்லதான் நாம இவனுங்களையும் பாக்குறோம். யாரு இதெல்லாத்தையும் நெனப்பு வெச்சி கவனிக்கிறாங்க? பறையனுக்கும் சீக்கு வரும். சக்கிலியனுக்கும் நம்மள மாரியே புள்ள பொறக்கும்னு அத்தனை நாளா யோசிக்கல. அவன் ஏதோ குடிசை போடத் தெரிஞ்ச மிருகமாட்டம் நினைக்கிறாங்க எல்லாரும். இயற்கையே அப்படித்தானா? பறையனுங்கன்னா பன்னிங்க மெரியாவா? இன்னாங்கடா இது அநியாயம்?” (ப.179) என்று கேட்பதிலாகட்டும், “வன்னியன் எவனுக்கும் சுயபுத்தி கெடையாது. சொல்புத்தி மட்டும்தான். ~த்திரியன்தான? அவன வெட்டுடான்னா வெட்டுவான். ஒரு தொழில் தெரியுமா அவனுக்கு சொந்தமா? ஆசாரிக்கு ஒரு தொழில் இருக்குது…செட்டியாருக்கு ஒரு தொழில். நாடானுங்க கடை வெக்கிறானுங்க…பாப்பானுங்க ஒடம்பு நோகாத வேலை எதுவோ அதை செய்வானுங்க…வெள்ளாளனுக்கு வௌசாயம்…நம்மளவனுக்கு கூலி வேலை செய்யறது புடிக்கும். எவனாவது ஆணையிட்டா அத செஞ்சு முடிப்பான்…ஒண்ணு, ரெண்டு இதல தப்பியிருக்கலாம்…சேரி ஆளுக்கு அடுத்த படியா உருப்படாம இருக்கிற கூட்டம் இதுதான்” (ப.365) என்று சொல்வதிலாகட்டும், தமிழ்மகன் என்ன புதிதாகச் சொல்லிவிட்டார் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இதெல்லாம் காலம் காலமாக மக்கள் மக்களைப் பற்றி சொன்னதுதானே என்றும் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் இவையெல்லாம் நம் தமிழ் நாட்டின் சரித்திரத்தை கோர்வையாக எழுத்து மூலம் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன என்று எண்ணும்போது, அதை இந்த நாவலின் மூலம் பதிவு செய்த தமிழ்மகனின் தில்லுக்கு மூன்று முறை ‘ஜே‘ போடலாம்.
சில நாவலாசிரியர்கள் சரித்திரக் கதை எழுதுவார்கள். சில நாவலாசிரியர்கள் சமூகக்கதை எழுதுவார்கள். சில நாவலாசிரியர்கள் விஞ்ஞானக் கதை எழுதுவார்கள். தமிழ்மகன் போன்ற ஒரு சிலரால்தான் சரித்திரத்தோடு சமூகத்தையும் விஞ்ஞானத்தையும் கைகோர்க்க வைத்து “ரிங் ஆப் ரிங் ஆப் ரோசஸ்” என்று பாட்டுப்பாடி ஆடவைக்கவும் முடியும்.
கதை என்னவோ மிகச் சிறிய கதைதான். சென்னா ரெட்டி என்பவர் சிறுத்தை ஒன்றை அரிவாளால் தாக்கியே கொல்கிறார். கூட இருந்தது அவரது நாய் மட்டும்தான். இதை வைத்துக் கொண்டு 375 பக்கத்திற்கு ஒரு தமிழ் நாவல் வந்திருக்கிறது. எங்கேயும் தொய்வில்லாமல் போகிறது என்பதால்;…ஒரு நூற்றாண்டு செய்திகள் வாசகனுக்கு கிடைக்கிறது என்பதால்…இந்த கதாபாத்திரம் எங்க அப்பா, இந்த கதாபாத்திரம் எங்க தாத்தா, இதோ இது நான் தான் என்று சொல்லி புலகாங்கிதம் அடையவைக்கிறது என்பதால்…நம்முள் ஒரு எழுத்தாளன் இருந்து ‘அட! இதை நாமே எழுதியிருக்கலாமே’ என்று சொல்ல வைக்கிறது என்பதால்…தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’ தமிழின் சிறந்த நாவல்கள் வரிசையிலே சேர்க்கப்படவேண்டிய ஒன்று என்று சொல்லி பெருமைப்பட முடிகிறது.
இந்த நாவலுக்கு அடித்தளமாக அமைவது வெட்டுப்புலி தீப்பெட்டியின் கதைதான் என்றாலும் ஒரு நூற்றாண்டு தமிழக அரசியலையும், அரசியலோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும் சேர்த்து உன்னதமான படைப்பிலக்கியமாக உருவாக்கப் பட்டுள்ளது மனதுக்கு நிறைவைத் தருகிறது. கதை நடக்கும் காலகட்டம் 1910-லிருந்து 2010-வரையாக இருந்தாலும், முப்பதுகளில் இருந்துதான் கதை கலைகட்ட ஆரம்பிக்கிறது. ஆக கடந்த முக்கால் நூற்றாண்டின் இந்திய வரலாற்றுப் பெட்டகம் இது.
தமிழன்தான் எப்படியெல்லாம் பிரிந்துபோய் கிடக்கிறான் இந்த பாழாய்ப்போன சுயநலமிக்க அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு! நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தீப்பெட்டியின் மீது அச்சடிக்கப்பட்ட ஒரே தமிழனின் படம் வெட்டுப்புலி தாத்தாதான் என்று நினைக்கும் போது எவ்வளவு பெருமை கொள்ள முடிகிறது. உலகிலேயே எந்த தமிழனுக்கு இவ்வளவு பெருமை இருந்தது? வேறு யாருடைய படத்தை இப்படி கோடிக்கணக்கில் அச்சடித்திருக்க முடியும்? தமிழனின் வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகளும், முதலமைச்சரின் இருக்கையையே தங்களது லட்சியக் கனவாக கண்டு கொண்டிருக்கும் ‘கூத்தாடிகளும்’, தமிழனின் வாழ்வையே நாசப்படுத்தி, கொளுத்தி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் நாவல் சொல்கிறது. தொடரும்; இந்த பேராபத்துக்களில் இருந்து தமிழனையும் தமிழையும் காப்பாற்ற மீண்டும் ஒரு வெட்டுப்புலி தாத்தா, ‘இந்தியன்’ பட தாத்தா போல, ஜென்மம் எடுத்து வர வேண்டும் என்பதையே நாவல் சொல்லாமல் சொல்கிறது.
வரலாற்று உண்மைகள் அவரவர் ஆர்வங்களுக்கும் யூகங்களுக்கும் ஏற்றவாறே நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு “சிதம்பரம் புள்ளை வெள்ளக்காரனை எதிர்த்து கப்பல் வுட்றேன்னாரு. அவரைத் தூக்கி ஜெயில்ல போட்டானுங்க. வாஞ்சிநாதன்னு ஒருத்தன் வெள்ளக்கார துரையைச் சுட்டுட்;டு அவனும் சுட்டுகிட்டு செத்தான். இதோ பகத்சிங்னு ஒருத்தன். தூக்குல கொண்டு போய் போட்டாங்க. காந்தி வந்துருக்காரு. பாவம்…கோட்டு போட்டுக்கிட்டிருந்தவர கோவணாண்டி ஆக்கிட்டாங்க,” (ப.23) என்று புலம்பித் தள்ளுகிறது ஒரு கதாபாத்திரம். இன்னொரு கதாபாத்திரமோ “வெள்ளைக்காரன் வேணாம்னும் சொல்றானுங்க. அவனைப்போலவே கிறாப் வெட்டிகிறானுங்க. அவன் பேசற பாi~யெ கத்துக்கிறானுங்க. அவன் சாப்பிடறத சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. அவனை மட்டும் எங்க ஊரைவிட்டு போடாங்கிறானுங்க” (ப.61) என்று திட்டித் தீர்க்கிறது.
ஒரு காலத்தில், அதாவது பள்ளிப்பருவத்தில் “எம்.ஜி.ஆர். வாழ்க…சிவாஜி ஒழிக” என்று சகாக்களோடு தெருவில் சப்தம் போட்டுக் கொண்டு போனதுண்டு. கல்லூரி நாட்களிலே திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து தனிக்கட்சி துவங்கியபோது சகமாணவர்களோடு “மலையாளத்தான் ஒழிக…தமிழன் வாழ்க” என்று கூச்சலிட்டுக் கொண்டு போனதும் உண்டு. இரண்டு சமயங்களிலும் என் அப்பாவிடம் நான் உதை வாங்கியதுண்டு. முதலில் உதை…அப்புறம்தான் பேச்சு வார்த்தை. இது அப்பா நீதி. “ஏண்டா நாயே! அவனவன் வயித்துக்கு கூத்தடறான். அரசியல் பண்றான். எங்கேயாவது ஓரமா நின்னுகினு வேடிக்கை பார்ப்பியா…அதெவுட்டுட்டு வாழ்க ஒழிக கோ~மா போடற? படிச்சி மேல வர்ற வேலைய பாரு…போ…போ” என்று என் அப்பா சொன்னதை இன்றும் என் இரு கன்னங்களும் முதுகும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதேதான் நாவலிலும் நடக்கிறது. என்னைப் போன்று பலருக்கும் பூசை கிடைத்திருக்கும். தமிழ்மகனையும் சேர்த்துத்தான். நமக்கு நடப்பதைத்தானே நாம் திறம்பட பதிவு செய்ய முடியும்.
தமிழ்மகனிடம் எனக்கு அதிகம் பிடித்ததே அவர் கதை சொல்லும் திறனும் அவரது மொழிநடையும்தான். சில ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய ‘எட்டாயிரம் தலைமுறை’ என்ற சிறுகதையைப் படித்துவிட்டு, அற்புதமானதொரு தமிழ்ச் சிறுகதை என்று வியந்து அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து நான் தொடர்ந்து எழுதி வரும் ‘காண்டெம்பரரி வைப்ஸ்’ (ஊழவெநஅpழசயசல ஏiடிநள – ழுஉவ-னுநஉ. 2009) என்ற இலக்கிய பத்திரிகையில் வெளியிட்டேன். உலகத்து தலை சிறந்த கதைகளில் அதுவும் ஒன்று என்பதை வாசகர்கள் எனக்கு அனுப்பியிருந்த பல ஈமெயில் கடிதங்கள் சொல்லின.
வித்தியாசமான படைப்புலகம்…அதி வித்தியாசமான மொழிநடை. இதுவே தமிழ்மகனிஸம். கல்லூரி நாட்களிலே இர்விங் வாலேஸ் (ஐசறiபெ றுயடடயஉந) எழுதிய நாவல்களை ஒன்று விடாமல் படித்திருக்கிறேன். படுக்கையறைக் காட்சிகளை தேவைக்கேற்ப அமைப்பதிலே வல்லவர் அவர். ‘வெட்டுப்புலி’யிலும் இரண்டு முறை தேவை ஏற்பட்டிருக்கிறது. ஒரு மூன்று பக்கங்களுக்கு (ப.125-127) ஒரு காட்சி -- ருசிகரமானதொரு காட்சி வருணிக்கப்படுகிறது. எந்த வித விரசமும் இல்லாமல் வார்த்தை ஜாலங்களாலேயே கிரங்கடித்திருக்கிறார். ஒரு செக்ஸ் காட்சியை இவ்வளவு துள்ளியமாக, நாசூக்காக வேறு எந்த தமிழ் எழுத்தாளராவது சொல்லியிருக்கிறாரா என்பது சந்தேகத்திற்குரியதே.
ஊர்வம்பு எழுதினாலும், சினிமா கொட்டகை பற்றி எழுதினாலும், குதிரை சவாரி பற்றி எழுதினாலும், புதுச்சேரி அரவிந்த ஆசிரம அன்னையைப் பற்றி எழுதினாலும் தமிழ்மகனின் நடை தனி நடைதான்.
நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம் ‘எண்டர் தி டிராகன்’ படம் பார்த்துவிட்டு தமிழ் சினிமாவில் வரும் சண்டைகளை கேலிப் பொருளாகப் பார்க்க ஆரம்பிக்கிறது. பென்ஹர், சாம்சன் அண்ட் டிலைலா, டென் கமாண்ட்மென்ட்ஸ், காட் பாதர் போன்ற ஆங்கிலப் படங்கள் அவனுடைய ரசனைக்கு மெருகூட்டி எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜனி, கமல் போன்றவர்கள் அவனுக்குள் ஏற்படுத்தியிருந்த பிரமைகளை வேகமாக விலக்குகின்றன. இதேபோல் நமக்குள் அரசியலும், சினிமாவும் ஏற்படுத்தியிருந்த பல பிரமைகளை தமிழ்மகனின் வெட்டுப்புலி உடைத்தெறிகின்றது. “மாறிக்னே இருக்குதுபா ஒலகம்…ஒவ்வொரு பத்து வரு~த்துக்கு ஒருதரம் பாக்கறதுதான் பளிச்சுனு தெரியுது…செகண்டுக்கு செகண்டு மாறிக்னு இருக்குது தெரியுமா? ஜெர்மன் தாடிக்காரன் அதான் சொல்றான்…மாற்றம்தான் நிலையானதுனு” (ப.335) என்று நறுக்குத் தெறித்தாற்போல ஒரு கதாபாத்திரம் சொல்வது எவ்வளவு உண்மை என்பதை ‘ஏக் தம்மில்’ படிக்கக்கூடிய இந்த நாவலில் காணலாம்.
ராஜ்ஜா
னு-88, புவேன்கரே வீதி,
உழந்தை கீரைப்பாளையம்
புதுச்சேரி – 605 004
செல்: 9443617124