வெள்ளி, அக்டோபர் 12, 2007

பால்- சைவமா? அசைவமா?

குடியரசுத் தலைவராவதற்கு முன்பு டாக்டர் ராதாகிருஷ்ணன், மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது சைவ- அசைவ உணவு குறித்துப் பேச்சு எழுந்தது.

பாலும் அசைவம்தான் என்றார் காந்திஜி. பால் சாப்பிடுவது மாட்டின் இறைச்சியைச் சாப்பிடுவது போலத்தான் என்பது அவருடைய வாதம்.

""நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தாய்ப் பாலும் அசைவம்தான். அப்படிப் பார்த்தால் நாம் எல்லோருமே நர மாமிசம் சாப்பிடுபவர்கள்தான்'' என்றார் ராதாகிருஷ்ணன்.

சமயோசிதமான பதில் காந்திஜியை மிகவும் கவர்ந்து விட்டது.

சிஸ்டர்ஸ் ஃப்ரம் 'செவன் சிஸ்டர்ஸ்'!





இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் அருணாச்சல பிரதேசம், அஸ்ஸôம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மலை மாநிலங்கள் நமக்கு லாட்டரி சீட்டு வகையில்தான் பழக்கம். ஆனால் இன்று இந்த ஏழு மாநிலங்களிலிருந்தும் புறப்பட்டிருக்கும் இளைஞர்கள் இப்போது உலகமெங்கும் பணியாற்றுகிறார்கள். சென்னையிலும் இப்போதெல்லாம் தடுக்கி விழுந்தால் இந்த "ஏழு சகோதரி' பிரதேசத்தில் இருந்து வந்த சகோதர சகோதரிகளாக இருக்கிறார்கள். என்ன காரணம்?
பெங்களூரில் உள்ள ஒரு பிபிஓ நிறுவனத்தின் தலைவர் நாகராஜன், தங்கள் நிறுவனத்தில் கணிசமான அளவு வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுவதாகக் கூறுகிறார். ""அவர்களைத் தேர்வு செய்ததற்குக் காரணம் நிஜமாகவே அவர்கள் பேசும் நல்ல ஆங்கிலத்துக்காகத்தான். நல்ல தரமான ஆங்கிலம் அவர்களுக்குக் கால் சென்டர், பிபிஓ சென்டர், ஃபிரண்ட் ஆபிஸ் போன்ற வாடிக்கையாளர்களோடு தொடர்பு கொள்ள வேண்டிய துறையில் அவர்களுக்குப் பிரகாசமான வரவேற்பைத் தந்திருக்கிறது. இப்போது புதுதில்லி, பெங்களூர் நிறுவனங்களில் இவர்களின் எண்ணிக்கை குறிப்பிடும்படியாக இருக்கிறது. சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இன்னும் பெருக வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார் நாகராஜன்.

பெங்களூரில் இருக்கும் சன்னிஸ் நிறுவன அதிபர் அர்ஜுன் சஜ்ஜானி, ""ஆங்கிலம் ஒரு காரணம். கூடவே இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். வேலை செய்வதற்காக வெகு தூரத்தில் இருந்து வந்தவர்களாக இருப்பதால் இவர்கள் அடிக்கடி தங்கள் பாட்டிமார்களையும் உறவினர்களையும் நோய்வாய்ப்படுத்துவதோ, சாகடிப்பதோ இல்லை. ஒழுங்காக வேலைக்கு வந்துவிடுகிறார்கள்'' என்கிறார்.

வடகிழக்கு மாகாணத்தவர்களுக்கு எப்படி இந்தத் திடீர் மவுசு?

""வடகிழக்குப் பிராந்திய இளைஞர்களுக்கு அவர்களின் தாய்மொழியைவிட ஆங்கிலம் நன்றாகத் தெரிவதற்கு கிருஸ்துவ மிஷினரிகள்தான் காரணம்'' என்கிறார் தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையத்தின் நூலகரும் நாட்டுப்புறவியல் ஆய்வாளருமான ரெங்கையா முருகன். வடகிழக்கு மாநில பழங்குடியினர் பற்றிய மிக முக்கியமான கள ஆய்வை நிகழ்த்தியிருப்பவர் இவர்.

""கிருஸ்துவ அமைப்புகள் தொடர்பு மொழியாகப் பயன்படுத்துவது ஆங்கிலத்தைத்தான். பழங்குடியினருக்கு ஆங்கிலப் பயிற்சி அளிப்பதை முக்கிய செயல்பாடாக வைத்திருக்கிறார்கள். சென்ற தலைமுறையினர்தான் அங்கெல்லாம் அவர்களின் தாய் மொழியில் பேசுகிறார்கள். இளைய தலைமுறையின் பரிவர்த்தனை எல்லாம் ஆங்கிலத்தில்தான். அங்கு அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் வெளிமாநிலத்துக்குச் செல்கிறார்கள். அதே போல் அங்குள்ள இளைஞர்களுக்குத் தென்னிந்தியாவில் படிப்பதும் வேலைபார்ப்பதும் மிகப் பெரிய கனவாக இருக்கிறது. காரணம், இங்கே படித்த இளைஞர் என்றால் அவர்களுக்கு வரதட்சணையே பிரம்மாண்டமாக இருக்கும்.

பிறந்ததிலிருந்தே ஆங்கிலத்தில் பேசுவதாலும் மங்கோலிய முகத்தோற்றத்தாலும் அவர்களுக்கு ஒரு சர்வதேச அடையாளம் கிடைக்கிறது. கொஞ்சகாலம் கம்ப்யூட்டர் துறையில் பணியாற்றுகிறவர்கள் உடனே வெளிநாட்டுக்குத் தாவிவிடுகிறார்கள்'' என்கிறார் ரெங்கையா முருகன்.

சென்னையில் அஜுபா சொல்யூஷன் என்ற பிபிஓ நிறுவனத்தின் பைனான்ஸ் இயக்குநராக இருக்கும் ஷங்கர் நரசிம்மன், ""தில்லியோடு ஒப்பிடும்போது சென்னையில் வடகிழக்கு இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் கடந்த ஆண்டு மட்டும் எஸ்.ஐ.ஈ.டி., இந்துஸ்தான் கல்லூரிகளில் இருந்து இதுவரை 15 பேர் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்திருக்கின்றனர். இது அவர்களின் வருகையைக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இருப்பதாகத்தான் உணர்த்துகிறது'' என்கிறார்.

எங்கோ மலை முகட்டில் பிறந்தவர்களுக்கு ஆங்கிலம் என்ற மொழி இத்தனை பெரிய அங்கீகாரத்தைத் தந்திருப்பது ஆச்சர்யம்தான். கூடவே சிறிய வருத்தம். தங்கள் மொழி, கலாச்சார அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அது.

-தமிழ்மகன்

டேல் ஆஃப் தி வீக்

வயதான அந்தப் பாதிரியார் அவரது நாட்டின் பிரதமரையும் ஜனாதிபதியையும் தமது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இருவரும் அந்த முதியவரின் படுக்கை அறைக்கே வந்திருந்தனர். இருவரும் அவருக்கு இருபுறமும் அமர்ந்தனர். இருவரின் கைகளையும் பிடித்தபடி தமது இறுதி நிமிடங்களின் போது இருவரையும் கூடவே இருக்குமாறு கேட்டுக் கொண்டு மோட்டுவளையைப் பார்த்தவாறு இருந்தார்.

இருவரும் குழப்பமாக அமர்ந்திருந்தனர். எதற்காக இப்படியொரு வேண்டுகோள் என்று இருவருக்கும் புரியவில்லை. இறுதியாக செரிடியன் கேட்டார், ""எதற்காக பாதர் எங்கள் இருவரையும் தங்கள் கடைசி நிமிடங்களின்போது தங்களின் இருபுறமும் இருக்குமாறு வேண்டுகிறீர்கள்?'' என்றார்.

பாதிரியார் மரணத்தறுவாயில் மெல்ல முனகினார்.

""யேசு இரண்டு திருடர்களுக்கு மத்தியில்தான் தன் உயிரை விட்டார். அதே மாதிரி இறப்பதற்கு ஆசைப்பட்டேன்.''

LinkWithin

Blog Widget by LinkWithin