செவ்வாய், மார்ச் 01, 2011

ஒரு கலால் ஆணையரின் கடைசி நிமிடங்கள்!





எஸ்.வி.ராமகிருஷ்ணனை நான் நேரில் பார்த்ததில்லை. இனியும் அது முடியாது.

அது அந்தக் காலம், வைசிராயின் கடைசி நிமிடங்கள் என்ற அவருடைய நூல்கள் மூலமாக அவரை அறிந்திருந்தேன். கல்லூரியில் இயற்பியலை படித்திருந்தாலும் அனுபவரீதியான சரித்திரத் தகவல்களின் மீது எனக்கு இருந்த ஆர்வத்தின் மூலமாக இந்த நூல்கள் எனக்குப் பிடித்திருந்தன. வெட்டுப்புலி நாவல் எழுதிய போது அதில் சுதந்திரத்துக்கு முந்தைய இருபது, முப்பது ஆண்டுகள் குறித்து அதில் சில தகவல்களைப் பெற்றேன். இப்போது ஞாபகம் இருப்பது நாற்பதுகளின் மையம் வரை சென்னை லயோலா கல்லூரிக்கு அருகே எலக்ட்ரிக் ரயில்கள் நிற்பதில்லை என்ற தகவல்.

மற்றபடி தினமணியில் ஏதாவது சரித்திரப் பிழைகள் வந்தால் அதை தொலைபேசியில் தெரிவிப்பார். உரிய நபரிடம் அதை தெரிவிப்பதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேசுவார். செல்போன் சுவிட்ச் ஆஃப் என்பதாலோ யாரும் போனை எடுக்கவில்லை யென்றாலோ விட்டுவிடமாட்டார்.

மறுமுறையும் தொடர்பு கொண்டு, ""நான் நேற்று மாலை 3.38க்கு போன் செய்தேன். நீங்கள் எடுக்கவில்லை. ஒருவேளை வண்டியில் சென்று கொண்டிருந்திருக்கலாம்'' என்பார். அதில் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கே உரிய புள்ளிவிவரத் துல்லியம் இருக்கும்.

வெட்டுப்புலியை இவருக்கு அனுப்பி வைத்தேன். அதன் ஒவ்வொரு பத்தாண்டுகள் படித்து முடித்ததும் எனக்குப் பேசினார். உங்கள் வயசு என்ன என்று ஆர்வமாகக் கேட்டார். 45 என்றேன்.

"இந்த வயசுக்கு இந்த நாவல் சவாலான வேலைதான். உங்களுக்கு வரலாற்றை கற்பனையில் பார்க்கும் பார்வை இருக்கிறது'' என்றார்.

இரண்டு முக்கியமான பிழைகளை நாவலில் சொன்னார். அடுத்த பதிப்பில் திருத்திவிடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தேன்.

"நாற்பதுகளில் சென்னையில் நிறைய பேர் குழாய் பேண்ட் அணிந்திருந்தார்கள் என்று ஒருபதம் வருகிறது. எனக்குத் தெரிந்து அப்போதெல்லாம் பேண்ட் என்ற பிரயோகம் இல்லை. ட்ரவுசர் என்று சொல்லுவார்கள். பேண்ட் என்பது அமெரிக்கப்பதம். ட்ரவுசர் இங்கிலாந்து பிரயோகம்'' என்றார்.

இரண்டாவது பிழை அதே நாற்பதுகளில்.. "ஆறுமுக முதலியாருக்கு மோரீஸ் மைனர் கார் வாங்க வேண்டும் என்று ஆசையிருந்தது என்று எழுதியிருக்கிறீர்கள். அப்போது மோரிஸ் என்ற மாடல் இருந்தது. அதில் மைனர் மாடல் வந்தது 50 களில்தான் வந்தது'' என்றார்.

"உங்கள் நாவலுக்கு நூறுவயது மதிப்பிடலாம். அதாவது நூறுவருஷம் நிற்கும்'' என்று பாராட்டினார்.

அவரைப் பற்றி எனக்கு இந்த அளவுக்குத்தான் அறிமுகம். அது என்னை நானே பாராட்டிக் கொள்வது போல அமைந்து போனதற்கு நான் பொறுப்பு இல்லை. அவர் என்னிடம் பேசியது அவ்வளவுதான். இதில் அவர் என் நாவலில் சொன்ன குறைகளையும்தான் சொல்லியிருக்கிறேன்.

எஸ்.வி. ராமகிருஷ்ணன் கோவை தாராபுரத்தில் 1936 ல் பிறந்து, ஐ.சி.எஸ். படித்து (இன்றைய ஐ.ஏ.எஸ்.) கலால் துறையில் ஆணையராக இந்தியாவின் பல இடங்களில் பணியாற்றியவர். இப்போது ஐதராபாதில் இருக்கிறார் என்பது உயிர்மையில் வெளியான அவருடைய புத்தகத்தில் உள்ள தகவல்கள்.

அவர் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி (2011) காலை கேன்சர் காரணமாக உயிரிழந்தார்.

அவர் இறப்பதற்கு முன்னால் அவரிடம் உதவி ஆணையராகப் பணியாற்றிய சுந்தரம் என்பவர் (அவசரத்தில் அவருடைய பெயரை குறித்து வைக்கத் தவறிவிட்டேன். ஞாபகத்தில் இந்த பெயர்தான் இருக்கிறது.) எனக்கு போன் செய்தார். "ஐதராபாதில் உங்கள் நண்பர் எஸ்.வி. ராமகிருஷ்ணனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. நீங்கள் எழுதிய புத்தகம் பற்றி ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதனால் உங்களுக்கு அவருடைய உடல்நிலை பற்றி தெரிவிக்கிறேன்'' என்றார்.

நான் உடனே எஸ்.வி.ஆரின் செல்போனுக்குப் பேசினேன். அது ஆஃப் செய்திருந்தது. அவருடைய வீட்டு எண்ணுக்குப் பேசினேன். அதை யாரும் எடுக்கவில்லை. அதோடுவிட்டுவிட்டேன். என்னுடைய முயற்சி அவ்வளவுதான். ஆனால் அவர் அத்தனை சுலபமாக விட்டுவிடக் கூடியவர் அல்ல.

தமிழ் ஸ்டுடியோ டாட் காமில்

LinkWithin

Blog Widget by LinkWithin