"நிசப்தத்தை யார் உடைப்பது என்று எல்லோருமே எதிர்பார்த்திருந்தது மாதிரி இருந்தது. வேட்டியை முழங்கால் வரை தூக்கிவிட்டு, மரத்தடி சிமெண்ட் திண்டு மீது குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த மாரிமுத்து நாயகர் "க்கும்'' என்று கனைத்துக் கொண்டார். அதாவது நான் ஆரம்பிக்கிறேன் என்று அதற்கு அர்த்தம்.
"ஜீப் எதுக்குப்பா வந்துட்டுப் போச்சு?'' என்று கேட்டார்.
இதற்கான பதில் அங்கிருந்த சோமசுந்தரம், கருப்புசாமி, திருமலை, சண்முகாசாரி எல்லோருக்குமே தெரிந்ததுதான். கேள்வியைக் கேட்ட மாரிமுத்து நாயகருக்கும் தெரியும்தான். இருந்தாலும் கேட்டார். விஷயத்தை ஆரம்பிக்க வேண்டுமே?
"ஆபிஸரும், பி.டி.ஓ.வும் வந்தாங்க'' என சொக்கலிங்கம் ஆரம்பித்ததும் ""பி.டி.ஓ.வும் ஆபிஸர்தான்டா'' திருமலை ஓவெனச் சிரித்தான்.
"குழா பேண்ட் போட்டுக்குனு ஜீப்ல வந்தா உடனே ஆபிஸர்னு சொல்றதா?'' திருமலையின் சிரிப்பில் ஆத்திரமுற்றவராகப் பேச ஆரம்பித்தார் சண்முகாசாரி. ""ஒரு ஏக்கர் நெலம் குடுத்தா ஆஸ்பித்திரி கட்டி தர்றேங்கிறானுங்க. அவசர அங்கலாப்புன்னா நமக்கு வைத்தியம் பாத்துக்க முடியல. நம்ம புத்தூரார் பையன பாம்பு கடிச்சப்ப ஊசி போடறதுக்கு ஒரு டாக்டர் இருந்திருந்தா காப்பாத்தியிருக்கலாம்.. ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை இப்படி யாராவது ஒருத்தர் அநியாயமா மண்டைய போட்றாங்க..''
"ராமாயணத்தை எடுத்துக் கிட்டார்பா. இப்ப நெலத்துக்கு ஒரு வழி சொல்லிங்கப்பான்னா..'' திருமலை விஷயத்துக்கு இழுத்தான்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் மாரிமுத்து நாயகருக்குச் "சேர்ந்தாப்ல ஒரு ஏக்கர் நெலம்னா... காவாக்கரை மேடு. கணக்கன் மேடு ஓடை, கோயில் கம்பத்தம்' போன்ற ஊர் பொதுச் சொத்துக்களாக உள்ள இடங்களைப் பற்றிய கணக்கு ஓடிக் கொண்டிருந்தது.
நான்கு பிரசவ வார்டும், மருந்து கொடுக்கிற இடமும் கொண்ட டவுனில் இருப்பது மாதிரியான ஒரு மருத்துவமனையை மனத்திரையில் கட்டி முடித்துவிட்டு மேலே சொன்ன இடங்களில் ஒவ்வொன்றாக அதைப் பொருத்திப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் மனதில் இருந்த கட்டடத்துக்கு அம்சமான இடம் கோவில் கம்பத்தம்தான்.
"இதில பேசறதுக்கு என்னடா இருக்குது? கோயில் நிலம்தான் சரி'' என்றார்.
மாரிமுத்து நாயகர் துணிச்சல்காரர். அவரால் மட்டும்தான் இப்படித் தேங்காய் உடைத்தது மாதிரி சொல்ல முடியும் என்று அங்கிருப்பவர்களுக்குத் தெரியும்.
ஆஸ்பத்திரி கட்டறதுக்குக் கோயில் நிலம்தான் சரியான இடம் என்பதைச் சொல்வதற்கு என்ன துணிச்சல் தேவை என்று நினைக்கலாம். கோயில் நிலத்தில் பரம்பரை பரம்பரையாக விவசாயம் பார்த்துக் கொண்டு வருபவர் காளி நாயகர். கோயிலுக்குச் சேர வேண்டிய வாரத் தொகையாக வருஷத்துக்கு ஆறுமூட்டை நெல்லை கோயிலுக்கு அளந்துவிட்டுத் தம் சொந்த நிலம் போலவே ஆண்டு வருபவர் அவர். அது கோயில் சொத்து என்ற விவரம்கூட அவருக்கு ஞாபகம் இருப்பதில்லை. கோயிலுக்குத் தானமாக நெல் அளப்பது போலத்தான் அவரது நடவடிக்கை இருக்கும்.
அப்படி ஒருவரின் ஆதிக்கத்தில் இருக்கும் நிலத்தை டப்பென்று காட்டிக் கொடுப்பதுதான் துணிச்சலுக்கான சமாசாரம்.
அவரிடமிருந்து நிலத்தை மீட்பதற்கு இது சரியான சந்தர்ப்பம் என்ற எண்ணம் ஏறத்தாழ எல்லார் மனதிலும் ஒரே நேரத்தில் உதித்தது.
காளி நாயகர், ஆத்திரப்படுவார், ஊரே இரண்டுபடப் போகிறது என்றுதான் அவரிடம் கோவில் நிலம் கேட்டுப் போனவர்கள் எதிர்பார்த்தார்கள்.
"மோர் இருந்தா குடும்மா வந்திருக்கவங்களுக்கு'' என மகளிடம் கூறிய இயல்போடு, ""ஆஸ்பித்திரி கட்டறதுக்கு அதுதான்டா சரியான இடம்'' என்றும் உறுதியாகச் சொன்னார்.
அவர் இவ்வளவு சுலபமாக உடம்பட்டது அசாதாரணமாகத் தோன்றவே, ""ஊர் ஜனங்க எல்லாருக்கும் பயன்பாடா இருக்கட்டுமேன்னுதான் இப்படி யோசிச்சோம்''} சொக்கலிங்கம் வலிந்து விளக்கம் தந்தார்.
"நீ குடுத்த ஐடியாத்தானா இது? சரியான எடத்தத்தான் ராசா சொல்லியிருக்கே'' என்று சொக்கலிங்கம் பக்கம் திரும்பினார் காளி நாயகர். சொக்கலிங்கம் பயந்து போய், ""நான் சொல்லல. மாரிமுத்து நாயகர்தான்'' என பதறினார்.
"அட என்னய்யா... யாரோ சொன்னாங்க. நல்ல இடம்... அதுதான் பொருத்தமா இருக்கும் இல்லையா?'' என்றார்.
வந்திருந்வர்கள், ""ஆமா அதுக்காகத்தான்'' என ஆமோதித்து ""நீங்க இதில சங்கடப்படக் கூடாது'' என்றனர்.
வந்திருந்தவர்கள் இப்படித் தர்மசங்கடப்படுவதை ரசிப்பவர் மாதிரி, ""பின்ன... ஜனங்களுக்குப் பயன்பாடா இருக்கறதுக்குதத்ôனே ஆஸ்பித்திரி. தொல்லை குடுக்கறதுக்கா?'' சொக்கலிங்கத்தைப் பார்த்து சம்மதம் கேட்பதுபோல தலையாட்டிவிட்டுச் சிரித்தார் காளி நாயகர்.
"ஆனாப்பா ஒரு விஷயம்'' என்று மீண்டும் காளி நாயகரே ஆரம்பித்தார். ""ஊர்க்காரங்க வீடுகட்ட இடமில்லாம ஏரியில குடிசைபோட்டு இருக்கானுங்க. மழைக்காலத்தில இதனால எவ்வளவு அவஸ்தைப் படறாங்கன்னு தெரியுமா''
"தெரியும் நாயக்ரே. அதுக்கு என்ன பண்ண முடியும், சொல்லுங்க?'' என்றார் வந்திருந்தவர்களில் ஒருவர்.
"நமக்குக் கொஞ்சம் ஓய்வு இருக்கிற சமயம்னா அது இந்தச் சம்பா காருதான். மனசு வெச்சா இந்த நேரத்தில அவங்களுக்கும் நல்லது செய்யலாம். ஊர்கூடி இழுத்தா தேர் நகரும்.''
"எப்படி?'' நிஜமாகவே ஆர்வமாகக் கேட்டார் சொக்கலிங்கம்.
"ஏரிய ஒரு பக்கம் மேடாக்கி அந்த இடத்தில ஆஸýபித்திரியக் கட்டிட்டு... எங்கப் பாட்டன் காலத்தில தூர்வாரினதோட சரி. அது இப்பவே மேடாத்தான் இருக்கு. அதனால அங்க ஆஸýபித்திரியக் கட்டிட்டு கோவில் நெலத்தில அங்க குடிசைபோட்டுக்கிட்டு அவஸ்தைபட்றவனுக்கு வீடுகட்ட இடம் கொடுத்தா என்ன?... உங்க இஷ்டம்தான். அரசாங்கத்துக்கிட்ட சொல்றதுக்கு முன்னாடி நாம ஒரு முடிவா இருக்கணும். என்ன சொல்றீங்க... கோவில் நிலம் ஊரோட இருக்கு ஏரியில வீடு கட்டிக்கிட்டு இவனுங்க ஏன் தனியா இருக்கணும்? அதுதான் என் யோசனை''
இதில் ஏதோ போர்த் தந்திரம் இருப்பதாக உணர்ந்த சொக்கலிங்கம், ""பெரிய வூட்டுக்காரங்க எல்லாரையும் கலந்து பேசித்தான் முடிவெடுக்கணும்'' என்று பாதுகாப்பாக ஒரு வார்த்தைப் போட்டார்.
பெரிய வீட்டுக்காரர்கள் என்று ஊரில் ஐந்து பேர் இருந்தார்கள். அய்யாவூடு. தென்னந்தோப்பு ரெட்டியார் வீடு, குதிரை நாயகர் வீடு, ஆசாரி வீடு ஆகிய ஐந்து குடும்பத்தின் வம்சா வழியினர்தான் ஊரின் பூர்வ குடிகள். இந்த ஐந்து வீட்டுப் பிரதிநிதிகள் ஒரு மனதாக ஏற்றுக் கொண்ட விஷயம் பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்பட்டுவிடும்.
ஊருக்குப் பள்ளிக்கூடம் கட்ட, நீர்த் தேக்கத் தொட்டி கட்ட, காட்டுக் கோவிலைப் புதுப்பிக்க என்று ஐந்து வீட்டுக்காரர்களும் சம்மதம் தெரிவித்து, நிறைவேறிய திட்டங்கள் நிறைய உண்டு.
சம்பா பட்டம் ஐந்து மாதப் பயிர்ப் பருவம். விவசாயிகள் தினமும், ஏர்பிடிப்பதும், களையெடுப்பதுமாகச் சொல்லி வைத்ததுமாதிரி தினம் ஒரு வேலையில் தங்களை மூழ்கடித்துக் கொள்வது, சம்பாச் சாகுபடியின்போது சற்றே குறையும். பெரிய வேப்பமரத்தடியில் அமர்ந்து ஆடுபுலி ஆட்டம் ஆடுகிறவர்களையும் கோவில் வாசலில் அமர்ந்து அரசியல் நிலைமைகளை அசை போட்டுக் கொண்டிருப்பவர்களையும் அந்த நேரத்தில்தான் அதிகம் பார்க்க முடியும். பொது விவகாரங்கள் பேசப்படுவதும் வீண் சண்டைகள் உருவாவதும்கூட அப்போதுதான்.
இந்தச் சம்பா பருவ நேரத்திலேயே ஆஸ்பத்திரி விவகாரத்தையும் ஏரிக்கரையில் குடிசை போட்டு இருப்பவர்களின் வீட்டு நிலப் பிரச்சினையையும் முடித்துவிடுவது என்று ஐந்து வீட்டுப் பிரதிநிதிகள் முதல் சமீபத்தில் வந்து குடியேறிய முத்து நாடார் வரை ஆர்வப்பட்டார்கள்.
"ஏரியில் குடிசைப் போட்டு இருக்கவனுக்கு மட்டும்தான் கோவில் நெலத்துல எடம் தரப் போறாங்களா? ஊர்க்காரனுங்ககூடத்தான் வீடு போதாம எடம் தேடிக்கிட்டு இருக்கான். அவங்களுக்கும் எடம் ஒதுக்குவாங்களா?''டீக்கடையில் அமர்ந்திருந்தபோது திருமலைதான் இப்படி ஒரு சந்தேகத்தைக் கிளப்பிவிட்டான்.
"வீட்டுக்கு எடம் இல்லாதவன் எல்லாருக்கும்தான். மனை குடுக்கணுனா ஏரியில குடிசை போட்டிருக்கணும்னு சட்டமா?'' என்று மாரிமுத்து நாயகரும் சூடாக இருந்த டீயை ஊதி ஆற்றிக் கொண்டே பதில் அளித்தார்.
மாரிமுத்து நாயகரே சொல்லிவிட்டார் என்று ஊர்க்காரர்கள் சிலர் தங்களுக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்று விண்ணப்பிக்க ஆரம்பித்தனர். ஆளாளுக்கு வெள்ளை பேப்பரில் மனு எழுதிக் கொண்டு வந்தனர்.
"எனக்குக் குடியிருக்க வீட்டுமனை இல்லாததால் எனக்கும் மனை ஒதுக்க ஆவண செய்ய வேண்டுகிறேன்' என்று ஆறுமுக ஆசிரியர் யாரோ ஒருவருக்கு எழுதித் தந்ததையே அனைவரும் வரிவரியாகக் காப்பியடித்து எழுதி வந்தனர். வந்த மனுவைப் பார்த்தால் ஏறத்தாழ இன்னொரு ஊர் தயாராகிவிடும் போல இருந்தது.
இது சம்பந்தமாக மீண்டும் கோயில் பிரகாரத்தில் கூடினர்.
"ஊர்க்காரன்ல இவனு எடம் தந்து அவனுக்கு எடம் தரலன்னா பிரச்சினை வராது?'' காளி நாயகர் கேட்டார்.
"யார் யாருக்கு வேணும்னு சொல்லட்டும். ஒரு வீட்டு மனைக்கு இன்ன விலைன்னு நிர்ணயிப்போம். கோவில் செலவுக்கு ஆகும். வாங்கறவங்க வாங்கிக்கட்டும்'' புதிதாக விலையைப் பற்றி பேச ஆரம்பித்தார் சொக்கலிங்கம்.
"என்னப்பா இது... ஏரிக்கரையில இருக்கிற கொட்டாயை விட்டுட்டு வர்றவனும் அதே விலை குடுக்கணுமா?'' காளி நாயகர் கேட்டார்.
"நம்ம நோக்கம் ஆஸ்பித்திரிக்கு எடம் வேணும்''ஞாபகப்படுத்தினார் மாரிமுத்து நாயகர்.
"ஏரிக்கரைல கட்றதா, கோவில் நெலத்தில கட்றதான்னு முடிவு பண்ணுங்கன்னு சொல்றேன். அவ்வளவுதான்'' காளி நாயகர் தெளிவுபடுத்தினார்.
"ஏரியில நாங்க எப்படியாவது சாவறம். நீங்க கோவில் நெலத்துல ஆஸ்பித்திரி கட்டுங்கப்பா''துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு விருட்டென்று வெளியேறினான் படவேட்டான்.
"ஏரித் தண்ணில வெள்ளத்தில தவிக்கிறவனுக்கு வீடுகட்றதுக்கு இடம் கொடுங்கப்பா... ஆஸ்பித்திரியாவது மண்ணாங்கட்டியாவது'' என்றார் சோமசுந்தரம்.
"என்னய்யா இது அநியாயம். ஆஸ்பித்திரி கட்றம்னு ஆரம்பிச்சு இப்ப வீட்டு மனைனு விவகாரம் பண்றீங்க?'' மாரிமுத்து நாயகர் சொன்னது யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை.
"சரிப்பா. நீங்க பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டுச் சொல்லுங்க. எனக்கு ஒடம்பு முடியல. கிளம்பறேன். கோவில் நெலத்தை எப்ப வேணும்னு கேட்டாலும் கொடுக்கறதுக்கு நா ரெடி'' கைத்தாங்கலாக கருப்புசாமியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினார் காளி நாயகர்.
வீட்டு வாசலில் காலைக் கழுவியபடி, ""பயலுகளுக்குச் சும்மா இருக்கிற நேரத்தில இப்படியெல்லாம் சமூக அக்கறை வந்துடும். பிரச்சினையைத் திருப்பி விட்டாச்சு. அடுத்த சம்பா வரைக்கும் வரமாட்டானுங்க''என்று தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டே கயிற்றுக் கட்டிலை நோக்கி நடந்தார் காளி நாயகர்.
தினமணிகதிர் - 1997