தமிழ்மகன்
"இத்தனை நிர்மலமான வானத்தின் கீழ்தான் முட்டாள்களும் முசுடர்களும் இருக்கிறார்களா?' என்ற ஆச்சர்யத்தோடு தொடங்குகிறது இந் நாவல். அந்த முதல்வரியேகூட படிப்பதற்கான மனநிலையைத் தந்துவிடும் பலருக்கு.
வெண்ணிற இரவுகளை வாசிப்பது என்பது வெண்ணிற இரவுகளில் வசிப்பது என்று பொருள். வாசிப்பது, வசிப்பது என்பது ஏதோ வார்த்தை ஜோடனை என்று நினைப்பவர்களுக்கு அதற்கான தாகத்தோடு இன்னும் அந்தக் குறுநாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். உண்மையில் ஒரு நாவலைப் படிப்பதற்கான மனநிலையும் தாகமும்கூட தேவையாகத்தான் இருக்கிறது. நான் முதன் முதலில் யாருடைய சிபாரிசும் இல்லாமல் வெண்ணிற இரவுகளைப் படித்தேன். அதைப் பற்றிச் சிலாகித்துத்துச் சொல்ல ஒருத்தரும் இல்லை எனக்கு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படிக்க ஆரம்பித்தபோதும் என்னை அது ஈர்த்துக் கொண்டது. இருப்பினும் மொத்தமாக இது என்ன மாதிரியான கதை என்ற ஆர்வம் மட்டும்தான் அது.
சுமார் 20... 25 ஆண்டுகளுக்கு முன்பு புத்தகத்தை வாங்கியதாக ஞாபகம். 5 ரூபாய் விலையுள்ள அந்த அழகிய புத்தகத்தை என்.சி.பி.ஹெச். நண்பர் ஒருவரின் அறிமுகம் காரணமாக 20 சதவீதம் விலைக் கழிவுடன் வாங்க முடிந்ததில் அத்தனைத் திருப்தி. அப்போது ரஷ்ய எழுத்தாளர்களில் டால்ஸ்டாயும் கார்க்கியும் மட்டுமே அறிமுகமாகியிருந்தார்கள். "புத்துயிர்ப்பு'ம் "தாயு'ம் படித்திருந்தேன். கதாபாத்திரங்களின் பெயர்களையும் ஊர்ப் பெயர்களையும் மனதில் நிறுத்துவது சிரமமாக இருந்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபட ஆரம்பித்திருந்தது. கத்யூஸô, மாஸ்லவா, நெஹ்லூதவ், குருஷேவ், ப்ரஷ்னெவ், ஆந்த்ரபோவ் என்று அந்தப் பெயர்கள் மீது ஒருவித தூரத்துச் சொந்தங்கள் போல ஒரு பாசம் வந்திருந்தது எனக்கு. தூரம் என்றால் பீட்டர்ஸ்பெர்க் தூரம்.
தொகுப்பில் வெண்ணிற இரவுகள் தவிர வேறு சில கதைகளும் இருந்தாலும் வெண்ணிற இரவுகளைத்தான் முதலில் படித்தேன். படித்துப் பார்த்த போது ஏற்கெனவே படித்திருந்த ரஷ்யக் கதைகளுக்கான அடையாளங்களோடு ஒரு தீவிரமான காதல் கதையாக மனதில் பதிவானது. செகாவ், துர்கேனிவ், நிகோலய் கோகல், ஷோலகவ், ஐத்மாத்தவ், வஷிலியேவிச், போன்ற பலருடைய கதைகளையும் படிக்க ஆரம்பித்து மாஸ்கோ நகரில் சுற்றித் திரிகிற மாதிரி பழகியிருந்தது மனசு.
இத்தகைய தருணத்தில் மீண்டும் ஒரு முறை வெண்ணிற இரவுகளைப் படித்தேன். அப்போது பலரும் என்னிடம் இந்த நாவலைப் படித்திருக்கிறீர்களா என்று விசாரிப்பு வகையிலான சிபாரிசு செய்திருந்தார்கள். இந்த முறை சற்று நிதானமாகப் படித்தேன். முதல்முறை மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறார் என்று மட்டுமே பார்த்தேன். இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? பிரிந்தார்களா என்பது மட்டுமே கதையென்று முடிவு செய்து படித்úது ஞாபகம் இருந்தது. இந்த முறை வரிகளில் கவனம். நம் கதாநாயகன் எப்படி தன்னைப் பற்றி வெளிப்படுத்துகிறான், நாஸ்தென்கா எப்படி தன் கதையைச் சொல்கிறாள் என்பதை கவனமாகப் பார்த்தேன். இப்படியெல்லாம் உணர்வுச் சிக்கல்கள் இருக்குமா என்ற வியப்பு. மனிதர்கள் இப்படியெல்லாம் ஏங்குவார்களா என்று ஆச்சர்யம். இரவு வெண்மையாக இருக்குமா என்ற சந்தேகம். பரிச்சயம் இல்லாத ஆணிடம் ஒரு பெண் நள்ளிரவில் சந்தித்து தன் சொந்தப் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வாளா என்ற தர்க்க நியாயம்... இப்படியெல்லாம் சின்னச் சின்னத் தயக்கங்களும் நானும் தஸ்தயேவஸ்கி படித்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதும் பழக்கமாகியிருந்தது எனக்கு.
புதுவசந்தம் என்றொரு சினிமா வந்தது. டைரக்டர் விக்ரமன் இயக்கியது. அதில் ஒரு பெண் தன் காதலனுக்காகக் காத்திருக்கிறாள். அவன் வருவானா, எங்கிருக்கிறான் என்ற குழப்பங்கள். அவன் வரும் வரை அவளுக்கு அடைக்கலம் தந்து பாதுகாக்கிறார்கள் நான்கு நண்பர்கள். காதலன் வருகிறான். காதலனோடு செல்வதா? நண்பர்களோடு இருப்பதா என்று முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ""அட அப்படியே வெண்ணிற இரவுகள் கதைப்பா இது'' படம் பார்த்துவிட்டு வந்து நான் பெருமையாக நண்பர்களிடம் சொன்னேன். ரஷ்யக் கதையை தமிழ்நாட்டில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சினிமாவோடு ஒப்பிட்டுப் பேச முடிந்தபோது பெருமிதமாக இருந்தது. அன்று இரவு மீண்டும் ஒரு முறை வேகமாகப் புரட்டினேன். சொன்னது சரிதானா என்று சரிபார்த்துக் கொள்கிற தற்காப்புக்காக.
அதன் பிறகு இரண்டு பையன் ஒரு பெண்ணைக் காதலிக்கிற மாதிரியோ, இரண்டு பெண்கள் ஒரு பையனைக் காதலிக்கிற மாதிரியோ வந்த சினிமாக்களில் இந்தச் சாயல் தெரிவதை கவனித்தேன். இறுதியாக இயற்கை படம் வந்தபோது வெண்ணிற இரவுகளின் சாராம்சத்தை எடுத்துக் கொண்டு மிகச் சிறப்பாக சினிமா ஆக்கியிருக்கிறார்கள் என்று வியந்து அந்தப் படத்தை பல முறை பார்த்தேன். நட்பையும் காதலையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் எத்தனைக் கதைகள். இதன் அடிப்படையில் எத்தனை நாவல்கள்? எல்லாமே வெண்ணஇற இரவுகளை நினைவுபடுத்தும் சந்தர்ப்பங்களாகவே இருந்தன.
இப்போதெல்லாம் வெண்ணிற இரவுகளை மிகநிதானமாகப் படிக்கிறேன். சில நாட்களில் வெண்ணிற இரவுகளின் ஒரு இரவை (ஒரு அத்தியாயம்) மட்டும் படித்துவிட்டு மூடிவிடுகிறேன். படித்த நேரத்தைவிட அதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன். ஏதோ ஒரு விஷயம் என்னை அந்த நாவலோடு பின்னிப் பிணைத்திருப்பதை அதைப் படிக்கிற அல்லது நினைக்கிற ஒவ்வொரு முறையும் கவனிக்கிறேன். இதயம்விட்டு இதயம் பாய்ந்து நம்மையும் அந்தக் கதாநாயகனாக்கிவிடுகிற பலம் அந்த நாவலுக்கு இருக்கிறது. 160 ஆண்டுகளாக ஒரு நாவல், அதைப் படிக்கிறவர்கள் எல்லோருக்குமான சொந்த அனுபவமாகத் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதன் வெற்றி என்ன? எத்தனையோ சினிமாக்களாக, வேறு வேறு கதைகளாக இது மாறிக் கொண்டே இருந்தாலும் தனித்துவமான மூலநதியாக பிரவகித்துக் கொண்டிருக்கிறது வெண்ணிற இரவுகள், காரணமென்ன?
இத்தனை ஆற்றல் மிகுந்த வார்த்தைகளை நம்மால் பிரயோகிக்க முடியுமா, இப்படியொரு உணர்வை நாம் சினிமா ஆக்கிவிடமுடியுமா என்ற முயற்சிகள்தான் இத்தனை கதைகளும் சினிமாக்களும் என்று தோன்றுகிறது எனக்கு.
தம்மிடம் பேசும் பழகும் பெண்கள் அனைவரையுமே நாஸ்தென்காவாக நினைத்துப் பாதுகாக்கிற குணம் கொண்டவர்களே வெண்ணிற இரவுகளை வாசிக்க உகந்தவர்களோ என்று நான் சில சமயம் நினைப்பதுண்டு. எனக்கான சில நாஸ்தென்காக்கள் நினைவுக்கு வருகிறார்கள். என்னைப் போல தஸ்தயேவஸ்கிக்கு உலகம் முழுக்கப் பல வாசகர்கள் இருப்பார்கள் என்பது உறுதி.
பலமுறை படித்திருந்தாலும் இப்போது வாசிக்கும்போது இரண்டு வரிகளுக்கு நடுவே புதைந்திருக்கும் உணர்வுகளை அசைபோட ஆரம்பித்திருக்கிறது மனம். முதல் முறை படித்ததற்கும் இப்போது படிப்பதற்கும் நடுவே இருபது ஆண்டுகள். இன்னொரு பத்து ஆண்டுகள் கழித்து என்ன கண்ணா மூச்சி காட்டுமோ? என்று எதிர்பார்ப்பும் பயமும் இருக்கிறது எனக்கு.
.
நூல் : வெண்ணிற இரவுகள்
பதிப்பு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சிட்கோ
அம்பத்தூர் எஸ்டேட்,
சென்னை