என்னுடைய இரண்டு நண்பர்களைப் பற்றிச் சொல்வதற்காகத்தான் இந்தக் கதை. அதில் முதல் நண்பன் இந்த இகபர உலகத்தில் அவ்வளவு முக்கியமானவனாக நினைக்கத்தக்கவன் அல்ல. அவனைப் பற்றி இரண்டாவதாகச் சொல்கிறேன். இப்போது இரண்டாவது நண்பனைப் பற்றி...
அவன் மிகப் பெரிய சோதிடன். சோதிடனானது எனக்கு சமீபத்தில்தான் தெரியும். என்றாலும் அதை வைத்துத்தான் அவனை உங்களுக்கு அறிமுகப்படுத்த முடியும். சொன்னதும் உங்களுடைய நண்பரா என்று ஆச்சர்யப்படுவீர்கள். அவனைச் சந்திப்பதற்கு நேரம் வாங்கித் தரச் சொல்லி என்னை நச்சரிப்பீர்கள்.. கருணாமூர்த்தி. அவரா என்று நீங்கள் ஆச்சர்யமாகலாம். நான் ஒருமையில்தான் பதில் சொல்வேன். ஆம் அவனேதான்.
எந்தப் பிரச்சினையோடு போனாலும் அவனிடம் உடனடியாகத் தீர்வு இருந்தது. வயிற்றில் அடிக்கப்பட்டவர்கள், முதுகில் குத்தப்பட்டவர்கள், அதிர்ஷ்டம் கெட்டவர்கள், வாழ்ந்து கெட்டவர்கள், தீராத வியாதியாளர்கள், தீராத பகையாளிகள், கல்யாணம் தள்ளிப் போனவர்கள், குழந்தை தள்ளிப் போனவர்கள்.. என நெருக்கியடிக்கும் கூட்டம். பிரச்சினையைச் சொல்ல வருகிறவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போது இது போன்ற துக்கங்களை எல்லாம் ஏற்கெனவே பலமுறை எதிர் கொண்டவன் போல தீர்க்கமாக உள்வாங்கிய நோக்கில் தலையை ஒரு ஸ்பிரிங் ஆக்ஷன் போல மேலும் கீழும் அசைத்துக் கேட்டுக் கொண்டிருப்பான். எதிர்முனையில் பேரதிர்ச்சியான செய்திகளை மிகுந்த நடுக்கத்தோடு சொல்லும்போதும் கண்ணை மூடிய நிலையிலேயே மறக்காமல் ஒரு புன்முறுவலைத் தவழவிடுவான்.
முதன் முதலாக அவன் சோதிடனாகிவிட்டதாகத் தகவல் தெரிந்த போது நம்பவே முடியவில்லை. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பாக்கு இடித்துப் புகையிலை போட்டுக் கொண்டிருக்கும் உங்கள் பாட்டி மறுநாள் பல்கலைக் கழக துணை வேந்தராகிவிட்டதாகச் சொன்னால் என்ன அதிர்ச்சி ஏற்படுமோ, அது ஏற்பட்டது. அவனால் எப்படி சோதிடனாக முடியும் என்றேன். சோதிடராவதற்கும் குடும்பப் பாரம்பர்யம் இருக்க வேண்டும் என்பதாகவும் ஒரு எண்ணம் இருந்தது. இவனோ காரல் மார்க்ஸ் பாசறையில் இருந்தவன். பத்தாண்டு இடைவெளியில் எப்படி ஒரு தோழர், சோதிடராகிவிட மாறிவிட முடியும்?
அவன் சோதிடன் ஆனது எனக்கு முதலில் சிரிப்புமூட்டும் விஷயமாகத்தான் இருந்தது.
ஆரம்பத்தில் இத்தகவலை என்னிடம் சொன்னபோது நான் கேலியாக ஏதோ கமெண்ட் அடித்தேன். போன் நம்பர் வாங்கி அவனிடம் நேரடியாக அந்தக் கிண்டலைத் தெரிவிக்கலாம் என்று நினைத்துத் தொடர்பு கொண்டேன். "உன்கிட்ட வருகிறவர்களுக்கு நல்ல காலம் பிறக்கிறதோ இல்லையோ, உனக்குப் பிறந்தாயிற்று'' என்று சொன்னால் அவனும் ரசிக்கும்படியாக இருக்கும் என்று யோசித்து வைத்திருந்தேன். மறு முனையில் "நீங்கள் ஏற்கெனவே பதிவு செய்தவரா?' என்று கேட்டார்கள். "நான் அவருடைய நண்பர்' என்று சொன்னேன். "மாலை ஆறு மணிக்குப் பேசுங்கள்' என்று பெயரைக் குறித்துக் கொண்டார்கள். அப்போதே கிண்டலடிக்கும் எண்ணம் எல்லாம் குறைந்து போய்விட்டது. இயல்பாகப் பேசினால் மட்டும் கிண்டல் அடிக்கலாம் என்று யோசித்துக் கொண்டேன். மிகவும் ஆத்மார்த்தமாகப் பேசும் சந்தர்ப்பமாக அமைந்தால் "என்னடா இது கூத்து?' என்று சொல்லலாம் எனவும் சீரியஸôக பேசினால் "எப்படி இந்த ஞானம் வந்தது' என்று கேட்கலாம் எனவும் மனம் ஒத்திகை செய்ய ஆரம்பித்துவிட்டது.
அங்கு போகும் முன்னர் அந்த இடத்தை மஞ்சள், குங்குமம், தாயத்துகள், பெரிய சாமி படங்கள் என்றுதான் கற்பனை செய்து வைத்திருந்தேன். நான் யோசித்து வைத்திருந்த எதுபோலவும் இல்லாமல் இருந்தது அது. மஞ்சள், குங்குமம் பார்த்திராத நாகரீக முகத்துடன் ஒரு பெண் வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள். அவளைப் பார்ப்பதற்காக வந்தது போலவே இருந்தது அவளுடைய வியப்புகள் வெளிப்படுத்தின. அவள் என்னைப் பார்த்து ரொம்ப நாள் பழகியவள் போல் சிரித்தாள். என் நினைவுகளில் அவளைப் பற்றிய ஒரு தடயமும் இல்லை. எங்கே பார்த்திருக்கிறோம் என்று அவசர அவசரமாக நினைவோட்டிப் பார்த்தேன். தபால் கொடுக்க வந்தவர், தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம் விற்பனை செய்ய வந்தவன் எல்லோருக்கும் அதே மாதிரி சிரிக்கவே, கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.
அறை குளிரூட்டப்பட்டிருந்தது. அவளுக்கு எதிரே பிரபல மருத்துவமனைகளில் காத்திருப்பவர்கள் மாதிரி வரிசையாகக் கோர்க்கப்பட்டிருந்த நாற்காலிகளில் மக்கள் அமர்ந்திருந்தனர். சத்தம் போட்டு பேசவும் தயக்கம் இருந்தது. அப்படி யாரோ மெல்ல பேசினாலும் அதில் வல்லின மெய் எழுத்துகளை மட்டும் ஓரளவுக்குக் கேட்க முடிந்தது.
புதுப்பித்துக் கொள்ளாத மனிதன் எழுதப்படாமலேயே மங்கிப் போய்விட்ட காகிதத்துக்குச் சமம்.
-எமர்சன்
என்று ஒரு பொன்மொழி சட்டம் செய்யப்பட்டு மாட்டப்பட்டிருந்தது. எமர்சன் அப்படி சொல்லியிருப்பாரா என்று திடீரென்று சந்தேகித்தேன்.
அதற்குள் என்னை உள்ளை அழைத்தார்கள்.
வரிசையில் இருந்தவர்களையெல்லாம் விட்டுவிட்டு என்னை முதலில் அழைத்தான் என் நண்பன். எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறான் என்று நான் வியக்க, அதை நான் உணர்கிறேனா என்பதில் அவனும் கவனமாக இருந்தான். தலைக்கு மேல் ஒரடி உயர்ந்து இருக்கும் சாய்மானம் உள்ள நாற்காலியில் பிறைவட்டம் போல் அசைந்தபடி பேசினான். சாஃப்ட் வேர் கம்பெனி எம்.டி. போல இருந்தான். என்னைப் பார்த்து அவன் ஏதாவது கமெண்ட் அடித்தால் கேட்டுக் கொள்ளலாம் போல இருந்தேன். "தணிகாசலம் வரவில்லையா?' என்றான். தணிகாசலம் என்பது நான் இரண்டாவதாகச் சொல்லப் போகிற முதல் நண்பன்.
ஆள் மழமழவென வேறு தோல் போர்த்தியது மாதிரி இருந்தான். பட்டுச் சட்டை அணிந்து நெற்றியில் சந்தனம், விபூதி தீற்றியிருப்பான் என்ற என் எதிர்பார்ப்பும் வீணாகிப் போனது.
"என்ன சாப்பிட்றே?' என்று கேட்டபடி பொத்தானை அழுத்தினான். அழுத்திய விரலை எடுப்பதற்குள் கதவைத் திறந்து கொண்டு ஒருவன் வந்தான்.
டேபிள் வெயிட்டை சுழற்றிவிட்டபடி, "அந்தக் காலத்தை மறக்கவே முடியாதில்ல?' என்றான். மனிதன் வசதி வந்துவிட்டால், வசதியாக இல்லாமல் இருந்த காலத்தை "அந்தக் காலம்' என்று சொல்கிறான்.
நிறைய அமைச்சர்களோடு போட்டோ எடுத்து மாட்டி வைத்திருந்தான். சினிமா நட்சத்திரங்கள் சிலருடனும் போட்டோ இருந்தது.
எல்லாவற்றிலும் இவனுடன் போட்டோ எடுத்துக் கொள்ள அவர்கள் விரும்பியதுபோல ஒரு தோற்றம் இருந்தது. நண்பரின் முக பாவனை அப்படியானது.
சீரியஸôகவும் இயல்பாகவும் இருந்தது அவனுடைய பேச்சு. "காரல் மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ்னு நமக்கு எவ்வளவு கனவு.. இல்ல?'' சிரித்தான்.
அதெல்லாம் கனவாக- பழங்கதையாக மாறிவிட்டதா என உறுதியாகத் தெரியவில்லை. தெரிந்திருந்தாலும் அதற்காக அவசரப்பட்டுச் சிரிக்கிற அளவுக்கு தைரியம் இல்லை. எதிரில் இருப்பவர் சிரிப்பதற்காக பதிலுக்குச் சிரித்துவிடக்கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்தேன்.
"தணிகாசலம் மாறிட்டானா இல்லையா?'' மாறித்தான் இருப்பான் என்ற நம்பிக்கையோடு கேட்டான். கண்களில் "எல்லாம் அவ்வளவுதான்.. இதில் என்ன கேள்வி வேண்டியிருக்கிறது' என்ற கேலி இருந்தது. அவன் பழனிக்கு மொட்டைப் போடப் போயிருக்கிறான்... சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறான் என்று ஆதரவாக பதில் வரும் என்ற எதிர்பார்ப்பு அவன் கண்களில் இருந்தது. தணிகாசலம் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்பிய வேகத்திலேயே அதை நம்பவும் செய்தான்.
உடனடியாக அவனுடைய ஆர்வத்தைச் சாகடிக்கத் தோன்றவில்லை. ""அப்பிடியேதான் இருக்கான்'' ஏனோ அவன் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்துவிடக்கூடாது என்று ஒருவித அலட்சியம் தொனிக்குமாறு சொன்னேன். அவன் கண்ணை மூடி ஸ்பிரிங் போல தலையை மேலும் கீழும் ஆட்டி உள்வாங்கிக் கொண்டான்.
"லேட் மேரேஜ். பொண்டாட்டி ஸ்கூல் டீச்சரா வேல பாக்குது.. இவன் இன்னமும் ஜோல்னா பை. மங்களூர் பீடி.. பைல "அணு ஆயுத ஒப்பந்தம் தேவையா'னு ஒரு அறிக்கை..''
நண்பன் தன் நிலைமைக்குச் சற்றும் பொருந்தாத அந்த உலகுக்கு ஒரு கணம் போய்விட்டு வந்ததை அவன் முகக் குறிகள் மூலம் உணர்ந்தேன்.
""ஒரு மசால்வடை டீ குடிச்சுட்டு படுத்துத் தூங்கியிருக்கோம்ல?''
நானும் என்ன சொல்வதென்று தெரியாமல் ""அது ஒரு காலம்'' என்று கூறிவிட்டேன்.
"இரண்டு பேருக்குமே தணிகாசலம் பற்றிய பேச்சிலிருந்து வெளியே வருவதற்கு பிரயாசைப்பட்டோம். சிறிது நேரம் பேசாமல் இருந்து வேறு தலைப்புக்கு மாறுவதற்கு விரும்பினோம்.
அவன் சோதிடக் கலையைப் பற்றி பேச ஆரம்பித்தான்.
"நாம் பிறக்கும் நேரத்தில் இருக்கும் நட்சத்திர, கிரக நிலைக்கு ஏற்பத்தான் நம் வாழ்க்கை அமையும். அப்போதைய கிரகங்களின் ஆதிக்கம் நம் வாழ்க்கையை வடிவமைக்கிறது. இது முழுமையான விஞ்ஞானம். பெயரில் ஒரு உயிர் எழுத்தைச் சேர்த்துக் கொள்வது, கை ரேகை எல்லாமே பொய். ஆனால் கிரகங்களின் ஆட்சி மெய்யானது. எனக்கு சோதிடம் கற்பித்தவர் பெரிய மகான். பத்து பைசா காசு வாங்க மாட்டார். அவருக்கு எல்லோருடைய தலையெழுத்தும் டி.வி.யில் பார்க்கிற மாதிரி தெரியும். ஆனால் யாருக்கும் எதுவும் சொல்லமாட்டார். எல்லாம் விதியின் படி நடக்கும், மாற்ற முடியாது என்பார். அதற்கு பிராயசித்தமும் இல்லை என்பார். ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து பிழிந்துவிடுவதால், கோயிலில் தீபம் ஏற்றினால் விதி மாறிவிடுமா என்ன.. விதி வலியது என்பது அவருடைய தீர்மானம்.
ஒரு முறை அவரைப் பார்க்க வந்த ஒரு குடும்பத்தினர், வீட்டுக்குக் கிளம்ப காரில் எறியபோது.. இதில் இரண்டு பேர்தான் வீடு போய் சேருவார்கள் என்றார். காரில் ஆறு பேர் கிளம்பிப் போனார்கள். எனக்கு திக் என்று இருந்தது. தடுத்திருக்கலாமே என்றேன். சூரியனும் வியாழனும் சுற்றுவதைத் தடுக்க முடிந்தால் இதைத் தடுக்கலாம் என்றார். விழுப்புரம் பக்கத்தில் ஆக்ஸிடென்ட். இரண்டு பேர்தான் பிழைத்தார்கள்.'- இப்படியாகச் சொல்லிக் கொண்டு போனான்.
தணிகாசலமாக இருந்தால் இன்னேரம் எழுந்து ஒரு அறைவிட்டுவிட்டு பீடி கொளுத்திக் கொண்டு போயிருப்பான். ""பணக்காரனா பொறக்கறது அவன் தலைவிதி. ஏழையா பொறந்தது என் தலைவிதி. சமத்துவம் வந்துடணும்னு நினைக்காதே.. இதானே சொல்ல வர்றே.. ஏமாந்தா எடுத்து வாயில வெச்சுடுவியே?'' என்று கேட்டிருப்பான்.
நான் பேசாமல் இருந்தேன். "நீ என்ன ராசி?'' என்றான்.
"அட விடுப்பா'' என்று என் குரலில் பாசாங்கு அதிகமாக இருந்தது. ""சிம்ம ராசி..''
"நட்சத்திரம்?''
"அட.. பூரம்''
தலையை ஆட்டி கண்கள் சொருக தியானித்தான்... அதாவது இருந்தான்.
"பிறந்த நாள்.. நேரம் தெரியுமா?''
சொன்னேன். பிறந்த இடம் எது என்றான். சென்னையில் மயிலாப்பூர் என்பதையும் சொன்னேன்.
பெரிய சைஸ் கம்ப்யூட்டர் டிஜிட்டல் மானிட்டர் போல இருந்த திரையை ஒளிரச் செய்து அறை விளக்குகளை அணைத்தான்.
திரையில் அண்டசராசரமும் தெரிந்தது. கிரகங்கள், சூரியன், நட்சத்திரம்.. கொஞ்ச நேரம் பார்த்தால் நம்பிக்கை வந்துவிடும்போல இருந்தது. நீ பிறந்த போது கிரகங்களின் நிலை எப்படி இருந்தது என்பதை இப்போது இதில் என்னால் உருவாக்கிக் காட்ட முடியும் என்றான். இருபத்தேழு டிகிரி துல்லியத்தில் சொல்வது கம்ப்யூட்டரால் சாத்தியமாகியிருக்கிறது..
பேசியபடியே 1964 டிசம்பர் 24-ம் தேதி இரவு 10.53 மணிக்கு கிரகங்கள் எப்படியிருந்தன என்று காட்டினான். அதாவது நான் பிறந்த நேரத்தில்.
அறையின் குளிரும் இருட்டும் திரையில் தோன்றிய காட்சியும் சேர்ந்து சிலிர்க்க வைத்தது. ஏதோ ரகசியம் அவிழ்ந்து கொண்டது மாதிரி நெஞ்சு அடித்துக் கொண்டது.
""சரிப்பா லைட்டை போட்டுடு'' என்றேன் தைரியமாக.
அவன் இதற்கு மேல் நீ தாங்க மாட்டாய் என்பதாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு விளக்கை எரியவிட்டான்.
"தணிகாசலம் இதையெல்லாம் நம்ப மாட்டான்'' என சம்பந்தமில்லால் சொன்னேன்.
"இதில் இருக்கிற விஞ்ஞானத்த என்னவிட அவனாலதான் நல்லாத் தெரிஞ்சுக்க முடியும். அவன ஒருவாட்டி அழைச்சுட்டு வா..''
அவன் வரமாட்டான். கூப்பிட்டால் காறித்துப்புவான்.
"போன எலக்ஷனுக்கு கட்சிக்காரங்க வந்து எல்லாருக்கும் ஆயிரம் ரூபா கொடுத்தாங்க. குடுக்க வந்தவனை செருப்பைக் கழட்டி அடிச்சி அனுப்பிட்டான்.. டி.வி. குடுக்குறேன்.. செல் போன் தர்றேன் வந்தவனுங்களையும் சட்டைய பிடிக்காத குறை. அவ்வளவு ஏன்.. நம்ம முதலமைச்சர்ங்க மழை வெள்ளத்தால பாதிக்கப்பட்டவங்களுக்கு ரெண்டாயிரம் கொடுத்தபோதும் சண்டதான்... இத்தனைக்கும் அன்னைக்கு சாப்பாட்டுக்கே வழியில்ல.. என் கிட்டதான் அம்பது ரூபா கடன் வாங்கிக்கிட்டு போனான்...'' என்று தணிகாசலத்தைக் குறைத்து மதிப்பிடாதே என்பதாக இதைச் சொன்னேன்.
"சமஸ்கிருதத்தில் துவஜன் என்பார்கள். தாயின் வயிற்றில் பிறப்பது ஒரு ஜனனம். இரண்டாவது ஜனனம் நம் ஞானத்தால் உருவாவது. துவி என்றால் இரண்டு. (ஜெர்மனியில் ஜுவை என்றால் இரண்டு, டிரை என்றால் மூன்று. ஏங்கெல்ஸின் மூல நூல் ஒன்றில் படித்திருந்தேன். சமஸ்கிருதத்தில் துவி என்றால் இரண்டு.. த்ரி என்றால் மூன்று என்கிறார்கள். அட தணிகாவிடம் சொன்னால் ஹிட்லர் போற்றிய ஆர்யன்.. இங்குள்ள ஆரியன் என்று கட்டுரை எழுதுவான்.. ஞாபகமாக சொல்ல வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டேன்.) ஜன் என்றால் ஜனனம்.. முதல் ஜனனத்தின் கிரகப் பலன்கள் எப்படி இருந்தாலும் நம் இரண்டாவது ஜனனத்தினால் அதை மாற்றிவிட முடியும். என்னுடைய குருநாதர் பிறப்பின் பலனை மாற்றவே முடியாது என்றார். நான் மனிதர்களை மீண்டும் ஒரு நல்ல தருணத்தில் பிறக்க வைக்கிறேன்... நல்ல பலன்களை அடைய வைக்கிறேன். ஒரு செயற்கை நட்சத்திர மண்டலத்தை உருவாக்கி அவை நம்மீது பிரயோகிக்கும் ஆற்றலை மீண்டும் செலுத்துகிறேன்.'' நான் திகைத்துப் போய் பார்க்கிறேனா என்று அவன் கவனித்தான்.
"இந்த அறைக்குப் பின்னால் உள்ள தோட்டத்தில் பிரம்மாண்ட அரங்கில் அந்தச் செயற்கை மண்டலம் இருக்கிறது. தணிகாசலத்தையும் அழைத்துவா. இருவருக்குமே இரண்டாம் பிறப்பை அளிக்கிறேன். ஆட்சியை இழந்தவர்கள் வருகிறார்கள். மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார்கள். கூட்டணி அமைப்பதற்கு தருணம் கேட்கிறார்கள்.. எல்லாமே பலிக்கிறது... மூன்று படம் ஓடாமல் போன ஹீரோ என்னிடம் வந்த பின்பு மகத்தான வெற்றிப்படத்தைக் கொடுத்தார்... நான் சொல்வது ஏதோ அதிர்ஷ்டவசமாக நடப்பதாக நினைத்தாலும் தற்செயலாக நினைத்தாலும் காரண காரியங்களோடு நடப்பதாக நினைத்தாலும் அதனால் எனக்கு வருத்தமில்லை. நாம் மூவரும் எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரே அறையில் தங்கியிருந்து கஷ்டப்பட்டவர்கள் என்பதால் சொல்கிறேன்..'' வியாக்யான தொனியில் பேசிக் கொண்டு போனான்.
விவாதம் எதுவும் செய்யாமல் வெளியே வந்துவிட்டேன். இருக்கும் கொஞ்ச காலத்துக்கு மார்க்ஸியவாதியாகவே இருந்துவிட்டுப் போய்விடலாம் என்று தோன்றியது.
தணிகாசலத்திடம் என்னுடைய அனுபவத்தைச் சொல்வதற்கே பயமாக இருந்தது. கருணா ஒரு முனையில் என்றால் தணிகா மறுமுனையில் இருந்தான். என்னைப் போன்ற நடுவாந்திர ஆசாமிக்குத்தான் பிரச்சினையே. ஒரே பாசறையில் இருந்த மூவர், மூன்றுவிதமாக இருந்தோம். மறு ஜென்மம் எடுத்துவிட்டவன் கருணா மட்டும்தான்.
என்னைப் பார்ப்பதற்காக கம்பெனி வாசலில் வந்து காத்திருந்த தணிகாசலம், "என்ன தோழர் எப்படி போகுது வாழ்க்கை' என்றார். நான் கருணாவைப் பார்த்துவிட்டு வந்ததைப் பற்றி சொல்லலாம் என்ற முடிவுக்கு வந்தேன். குறுக்கும் நெடுக்குமாக அவனைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். எங்கிருந்து ஆரம்பித்தால் ஓரளவுக்காவது காது கொடுத்துக் கேட்பான் என்று ஒத்திகை பார்த்தேன். எங்கிருந்து ஆரம்பித்தாலும் தணிகாசலம் ஓவென சிரிப்பான் என்றே தோன்றியது.
வழக்கம் போல டீ சாப்பிட நின்றோம். கண்ணாடி டம்ளரை வாயருகே கொண்டு போனதும் ஏதோ திடுமென ஞாபகம் வந்தது மாதிரி பீடியைக் கொளுத்திக் கொண்டான். டீயை உறிஞ்சிய வேகத்தில் "பானுமதி இப்ப மூர்த்திகூட வாழப் போயிட்டாப்பா'' என்றான். பானுமதி அவனுடைய மனைவி. அதாவது ஓடிப் போய்விட்டாள்.
அதிர்ச்சியாக எப்ப, எதுக்கு என்று கேட்க நினைத்தேன். வெகு நாள்களாக இருவருக்கும் இருந்த மனக்கசப்பும் ஆறுதல் சொன்னாலும் விரும்ப மாட்டான் என்பதும் தெரியும். தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றிருந்தேன். "சேலம் போயிட்டு தோழர் ஆறுமுகத்தைப் பார்க்கப் போறேன்.. லிப்ரன் கமிஷன் அறிக்கையையும் வோரா அறிக்கையையும் வெச்சு ஒரு புத்தகம் போடலாம்னு திட்டம்...''
நான் புரிந்து கொண்டு நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். இவனை ஏன் என் முதல் நண்பன் என்று சொன்னேன் என்று எனக்கு அறுதியாகத் தெரியவில்லை. சோதிட நண்பனுக்கு முன்னால் பழக்கமானவன் என்பதாக இருக்கலாம். அதைத் தவிரவும் மனதிலும் எப்போதும் இவனுக்கு முதலிடம் இருந்தது.
முதல் நண்பனைப் பற்றிச் சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. ஒருவரியில் சொல்லிவிடலாம்.
மாற்றம் ஒன்றுதான் நிலையானது என்ற கருத்தில் இருந்து அவன் மாறவே மாட்டான்.