தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருக்கிறார் குஷ்வந்த் சிங்!
இந்திய கிரிக்கெட் அணியில் பட்டோடி சொதப்பிக்கொண்டிருந்த காலம். அப்போது குஷ்வந்த் சிங் எழுதிய ஒரு பத்தி இது:
பம்பாய் மைதானத்தில் கிரிக்கெட் அணிகள் மோதிக்கொண்டிருந்தன. கிரிக்கெட் அணித் தலைவர் பட்டோடியின் மனைவி நடிகை சர்மிளா தாகூர், தன் கணவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போன் செய்தார்.
''அடடே... இப்போதுதான் பட்டோடி பேட் செய்யப் போனார். அவர் வந்ததும் பேசச் சொல்கிறேன்'' என்றார் உதவியாளர்.
சர்மிளா பொறுமையாகச் சொன்னார்: ''ம்... பரவாயில்லை.. லைனிலேயே இருக்கிறேன்... அவர் சீக்கிரமே வந்துவிடுவார்.'
- இதுதான் குஷ்வந்த் சிங்.
அதே நேரத்தில் அவருடைய 'ட்ரெய்ன் டு பாகிஸ்தான்’, 'ஐ ஷெல் நாட் ஹியர் த நைட்டிங்கேல்’ போன்ற நூல்கள் சீரியஸாக உலக நடப்புகளைப் பேசின. அவர் பிறந்த பஞ்சாப் பகுதி, இப்போது பாகிஸ்தானில் உள்ளது. அவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். இளம் வயதில் இருந்தே அவருக்குப் பத்திரிகைதான் கனவு. 'யோஜனா’ என்ற பத்திரிகையைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்த குஷ்வந்த் சிங், பிறகு இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, நேஷனல் ஹெரால்ட், இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பல பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். பல ஆங்கில பத்திரிகைகளில் பத்தி எழுத்தாளராக அவர் பங்காற்றியிருக்கிறார்.
1974-ல் பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 1984-ல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் நடந்த ராணுவத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை அவர் திருப்பித் தந்தார். அரசியல் காட்சிகள் மாறின. மீண்டும் 2007-ல் அவருக்கு பத்ம விபூஷண் விருது கொடுத்து அந்தக் குறையை அரசு போக்கிக்கொண்டது.
அவருடைய சுயசரிதை நூலான 'உண்மை, அன்பு மற்றும் கொஞ்சம் வன்மம்’ என்ற நூல், பத்திரிகைத் துறைக்கு வர நினைப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு சிறந்த கையேடு.
அவருடைய சர்தார்ஜி ஜோக்குகளைப் படித்துவிட்டு சொந்த இனத்தையே கேலிசெய்தவர் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. ஆனால், 'சீக்கியர்களின் சரித்திரம்’ என்ற சீக்கியர்களின் பெருமையைச் சொல்லும் சிறந்த நூலையும் அவர்தான் எழுதினார். சகிப்புத்தன்மையற்ற இந்திய அரசியல் தலைவர்கள் பற்றி அவர் ஒரு பத்தி எழுதினார். 90-களின் மத்தியில் அது வெளியானது. 'பால் தாக்கரேவுக்கு கிரிக்கெட் பிடிக்காது. இந்திய அணிகள் விளையாட இருக்கும் கிரிக்கெட் மைதானத்தைக் கொத்தி நாசப்படுத்தினார். மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு கலாசாரக் காவலர். சமந்தா ஃபாக்ஸ் நடனத்தையும் உஷா உதூப் பாடல்களையும் ஆபாசமாக இருப்பதாகத் தடைசெய்தார். உயர் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட கென்டகி சிக்கன் கடைகளை அனுமதிக்க முடியாது என்று கடைகளை அடித்து நொறுக்கினார், கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் நஞ்சுண்டசாமி. காங்கிரஸ் தலைவர் ஹெச்.கே.எல்.பகத் என்னை தூர்தர்ஷனிலும் ரேடியோவிலும் பேசுவதற்கு தடை போட்டிருக்கிறார்’ என வரிசையாகப் பட்டியலிட்டவர், தமிழகத்தின் நிலவரத்தையும் விட்டுவைக்கவில்லை.
'தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பத்திரிகைகளில் அவரைப் பற்றி வெளியாகிற விமர்சனங்கள் பிடிக்காது. அப்படி யாராவது எழுதினால், அந்தப் பத்திரிகை அடித்து நொறுக்கப்படும்’ என்று எழுதியிருக்கிறார்.
இந்திய அரசியல் போக்கு குறித்த துணிச்சலான விமர்சனங்களை முன்வைத்த கோபக்காரர் அவர். அதே நேரத்தில் வாழ்க்கையைப் படுகொண்டாட்டமாக வாழத் தெரிந்தவர். அவருடைய பெண் ரசிகர்களைப் பற்றி அவரே பலமுறை சிரிக்கச் சிரிக்க விவரித்திருக்கிறார்.
விருந்து ஒன்றில் போதையில் இரவெல்லாம் ஒரு பெண்ணை வர்ணித்துத் தள்ளிவிட்டு, விருந்தின் முடிவில் அந்தப் பெண்ணையே 'யார் நீ?’ என்று கேட்டு வாங்கிக்கட்டிக்கொண்ட சம்பவத்தையும் அவர் மறைக்கவில்லை. அவருடைய அரசியல் மற்றும் களியாட்ட பத்திகள் சில நேரங்களில் நம்முடைய கவிஞர் கண்ணதாசனை நினைவுப்படுத்தும். 1980 முதல் 86 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார்.
'கறார் பாதி... கிண்டல் பாதி கலந்து செய்த கலவை நான்’ என எழுத்துலகில் வாழ்ந்து காட்டியவர் குஷ்வந்த் சிங்.
'எ கம்பெனி ஆஃப் அ உமன்’, 'டெல்லி’ போன்ற நாவல்களும், பல நூறு சிறுகதைகளும் எழுதியவர். 95 வயதில் அவர் எழுதிய நாவலின் தலைப்பு, 'தி சன்செட் கிளப்’. 99-வது வயதில் அவர் தன் கிண்டல்களை மூட்டைகட்டிவிட்டு தன் டெல்லி இல்லத்தில் மரணத்தைத் தழுவினார். போய் வாருங்கள் சர்தார்ஜி!
- தமிழ்மகன்