"அப்பா பேப்பர் கேட்டார்'' என்றாள் லட்சுமிபதியின் மகளான மகேஸ்வரி.
"படிச்சிட்டு முரளிக்கிட்ட குடுத்தனுப்பறேன்'' என்று சொல்லிவிட்டு தினகரனின் நான்காவது பக்கத்திலிருந்து ஐந்தாவது பக்கத்தைத் திருப்பினார் மோகன்தாஸ்.
தினகரனின் ஆரம்பநாள் முதல் விடாப்பிடியாகப் படித்துவருபவர் மோகன்தாஸ். எக்காரணம் கொண்டும் வேறு பத்திரிகை வாங்கியதில்லை. எம்.ஜி.ஆர். இறந்த செய்தியை எல்லாப் பத்திரிகையிலும் போட்டாலும் தினகரன் பார்த்த பின்பே நம்பினார்.
பத்தாவது ப்ளஸ் டூ போன்ற தேர்வு முடிவுகளும் அப்படியே. கலைஞர் பேச்சென்றால் பரீட்சைக்குப் படிப்பது போல படிப்பார். தினமும் இலவசத்தில் லட்சுமிபதியும்} ஜனதா ஆதரவாளராக இருந்தும்கூட படிப்பார். என்.ஜி.வோ}வைப் பற்றிச் செய்தி வந்தால் மட்டும் கணேசன் வாங்கிச் சென்று படிப்பார். மற்றபடி மதிய நேரத்தில் பெண்கள் டி.வி. நிகழ்ச்சிகள் பற்றி அலசிவிட்டு சமையல் குறிப்பு படிப்பார்கள்.
மோகன்தாஸ் வீட்டில் சாமிபடங்களைவிட அண்ணா, பெரியார் என்று தலைவர்கள் படங்கள் அதிகம். மனைவிக்கு தெய்வ வழிபாடென்றால் இவருக்குத் தலைவர் வழிபாடு.
"எப்பிடினா ஒழி'' என்று சட்டென்று எழுந்து வேட்டியை உதறிக் கட்டிக் கொண்டு சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டார் மோகன்தாஸ்.
"நான் ஒழிஞ்சாத்தான் உங்களுக்கு நிம்மதி. ஒழிஞ்சி போறேன். நாளும் கிழமையுமா சாபம் குடுத்திட்டீங்களே.. எனக்கு வோணும்'' நிமிடத்தில் கண்ணீர் கொப்பளித்தது.
"எல்லாம் பாப்பானுங்க பண்ண வேலை. தமிழனை அழிச்சதே அவனுங்கதான்'' முணகிக் கொண்டே வெளியே போனார் மோகன்தாஸ்.
லட்சுமி மூக்கை சிந்திக் கொண்டு கத்திரிக்காயைப் போட்டு சாம்பாரும் மோரும் மட்டும் செய்து வைத்துவிட்டு யாருடனும் பேசாமல் கோபமாய்ப் படுத்துக் கிடந்தாள்.
பதினோரு மணி சுமாருக்கு பழனிச்சாமியின் மனைவி நாகபூஷணம் உள்ளே வந்து. ""என்னாங்க வெளியே தலை காட்ல இன்னிக்கி?'' என்றாள்.
லட்சுமி படுத்துக் கொண்டே "ஒண்ணுல்லங்க'' கண்களைத் துடைத்துக் கொண்ட போதே சுவாரஸ்யம் ஏதோ இருக்கிறதுபோல மேற்கொண்டு அக்கறையாக விசாரிக்க ஆரம்பித்தாள்.
கேட்பதற்கு இப்படியாராவது வரமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்த லட்சுமி தன் கணவர் நல்ல நாளும் போதுமாக இப்படிச் சாபம் கொடுத்த கதையைச் சொன்னாள்.
"அட, நீங்க ஏன் இதையெல்லாம் பெரிசு பண்ணிக்கிறீங்க? சினிமாவுக்கு வர்றீங்களா போவலாம்?'' என்றாள்.
"யார் யார் போறீங்க?''
"நானும் ராஜேஷ் அம்மாவும். நீங்களும் வாங்களேன். வூட்லயே இருந்தா இன்னும் கஷ்டமாத்தான் இருக்கும்''
"நா வர்ல. போயிட்டு வாங்க''
அதற்குள் மாலதி வந்து "மகாலட்சுமில புதுப்படம் போட்ருக்கான்...பிரபுது'' என்றாள்.
லட்சும் "இன்னா படம்?'' என்றாள்.
"கலியுகம்''
"காத்தால படமா?''
"டயமாய்டுச்சிங்க. சீக்ரம்''
"நா சும்மா கேட்டேன். நீங்க போய்ட்டு வாங்க'' தன் வருத்தத்தைச் சட்டென விட்டுவிடமுடியாத தயக்கம் இருந்தது.
"அட கிளம்புங்க, டயமாச்சின்றேன்...'' மாலதி மறுபடி உசுப்ப, எழுந்து உட்கார்ந்து ""டிக்கெட் கெடைக்காதுங்க.. இப்பவே பதினொன்னு ஆய்ட்ச்சி'' என்றாள் லட்சுமி.
"வாங்கில்லாம் வாங்க''
மறுநிமிடத்தில் மூவரும் தயார். போகும்போது கீதாவின் அம்மா எதிர்ப்பட, ""சினிமாவுக்கு வர்றீங்களா?'' என்றனர் போகிற போக்கில். நிச்சயம் வரமாட்டார்கள் என்ற தைரியம். இவர்களைவிட கீதா அம்மா வயதில் மூத்தவர். வசந்தியின் அம்மாவுக்கும் நாகபூஷணத்துக்கும் முறைவாசல் விஷயத்தில் சண்டை என்பதால் வசந்தி அம்மாவைக் கூப்பிடவே இல்லை. அதே போலத்தான் ராஜேஷ் அம்மாவுக்கும் மகேஷ் அம்மாவுக்கும்.
அவர்கள் தனி செட்டாகப் போவார்கள்; அநேகமாக நாளைக்கு.
(தொடரும்)