விஷுவல் டெலிஃபோன் சிணுங்கியது. பத்மனாபன் ரிமோட்டை அழுத்திவிட்டுக் காத்திருந்தான்.
திரையில் கிர்ணிப் பழ முகத்துடன் ரிச்சர்ட் ஸ்டோன்.
"காலை வணக்கம் பத்மனாபன்.. உனது புத்திசாலித்தனத்துக்கு ஒரு பரீட்சை வைக்கப் போகிறேன்'' என்றான்.
"காத்திருக்கிறேன்'' என்றான் பத்மனாபன்.
"இன்னும் ஒரு மாதத்துக்குள் தஞ்சாவூர் பெரிய கோவில் தரைமட்டம் ஆக வேண்டும்''
ஆடிப் போனான் பத்மனாபன். எதற்காக என்று கேட்கக் கூடாது. ஏன்? எதற்கு என்று கேள்வி கேட்காமல் இருப்பதற்குத்தான் பத்மநாபனுக்கு மாதந்தோறும் அவ்வளவு ரூபாய் சம்பளமாகத் தரப்பட்டு வருகிறது. எள்ளென்றால் எள்ளாக இருக்க வேண்டும். எண்ணெய்யாக மாறினாலும் தவறுதான்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்க உளவுத்துறையின் கைக்கூலியாக இருந்த அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் என்ன ஆணையிட்டாலும் "ஏன்?' என்று கேட்காமலேயே ஒரு சில விஷயங்களை பத்மனாபனால் யூகித்துவிட முடியும்.
ஆனால்.. தஞ்சைப் பெரிய கோயில்?
"முதல்முறையாகக் குழம்புகிறாய்'' என்றான் ஸ்டோன்.
"குழப்பமில்லை.. புரிந்து கொள்ள முடியவில்லை''
"தஞ்சைக் கோயிலைத் தரைமட்டம் ஆக்க வேண்டும் என்று கூறியது புரியவில்லை?''
"எதற்காக என்பது?''
"ஒப்பந்தத்தை மீறுகிறாய்''
"மன்னிக்க வேண்டும்''
"பரவாயில்லை, முடித்துவிடுவீர்கள் இல்லையா?''
"முடிக்கிறேன்''
"ஞாபகம் இருக்கட்டும்... ஒரு மாதத்தில்"'
"இந்த அவகாசம் போதும். இந்தியர்களைக் கோயில் விஷயங்களில் ஏமாற்றுவது சுலபம். உதாரணம் அயோத்தியா பிரச்சினை''
"நல்லது. முடித்துவிடு''
திரை இருண்டது.
குருக்கள் லேசாகச் செருமிக் கொண்டு பேசத் தொடங்கினார்.
"நீங்க சொல்றதெல்லாம் நிஜம்தான். இந்தக் கோயிலும் விருத்தியாகல, இங்கே வந்துட்டுப் போனவாளும் விருத்தியாகல. இதைக் கட்டின சோழர் காலத்திலேர்ந்து அப்படியேதான் இருக்கு. சோழர்கள் ஆட்சி இழந்ததே இதனாலதானோ என்னவோ? யார் கண்டா? எங்க பாட்டனார் காலத்தில் எம்.ஜி.ஆர்.னு ஒருத்தர் முதல்வரா இருந்தார். இங்க வந்துட்டுப் போனப்பறம்தான் சிக்ல படுத்தார். கருணாநிதினு ஒருத்தரும் அப்படித்தான். ராஜராஜன் விருது வாங்கிட்டு அப்படியே ஆட்சிய விட்டுப் போய்ட்டார். அத்தோட அந்த விருதும் போச்சு. அந்தக் கதையெல்லாம் எதுக்கு? போன வருஷத்திலே என்ன ஆச்சு? ஜெர்மன்ல இருந்து நாலு பேரு கோபுரத்தை ஆராய்ச்சி பண்றேன்னு வந்தா. உச்சிலேர்ந்து விழுந்து மண்டை நொறுங்கி செத்தா. பாபம் பிடிச்ச கோயில்னு நல்லா தெரியறது. நானும் நீங்களும் நினைச்சு என்ன பண்ண முடியும் சொல்லுங்கோ?''
"ரொம்ப நல்லா சொன்னீங்க. பாவம் பிடித்த கோயில்.. இதையே தலைப்பா வெச்சிடலாம்'' என்றார் பாரத் அப்சர்வர் பத்திரிகையின் தலைமை நிருபர்.
"பேஷா வையுங்கோ.. ஆனா என் பேர் வேண்டாம். ஒரு குருக்கள் சொன்னார்னு சொல்லுங்கோ போதும்.''
தலைமை நிருபருடன் வந்த புகைப்படக் கலைஞர் முழு கோபுரத்தை கேமிராவுக்குள் அடக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.
"இடித்துவிட்டு வேறு இடத்தில் வேண்டுமானால் கட்டிவிடலாம். மக்கள் ஆதரவு இல்லாமல் எந்தக் கலைப் பொக்கிஷத்தையும் நம்மால் பாதுகாக்க முடியாது. நம்மிடம் உள்ள விஞ்ஞானக் கருவிகள் மூலமாக அந்தக் கோயிலின் ஒரு தூணுக்குக்கூட பாதிப்பு ஏற்படுத்தாமல் பெயர்த்தெடுத்து வேறொரு இடத்தில் கோயிலை நிர்மாணிக்க முடியும்'' என்ற நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு சர்மாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசியவர்கள் மிகவும் சொற்பம்.
"ஒரு மூட நம்பிக்கையைக் காரணம் காட்டி வரலாற்றுச் சான்று ஒன்றைத் தரைமட்டம் ஆக்குறதை நாங்கள் எதிர்க்கிறோம்'' என்று பெரியார் கட்சி கண்டித்தது. வெகுசன பத்திரிகைகள் கிண்டலடித்தன.
"பெரியார் கட்சி ஆத்திகத்தில் அடியெடுத்து வைக்கிறது...''
சொல்லி வைத்தாற் போல எல்லாப் பத்திரிகைகளிலும் பெரிய கோவில் பற்றிக் கட்டுரைகள், விவாதங்கள்.
பொதுமக்கள் பிரதிநிதிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 12 பேர் கொண்ட குழுவில் கோவிலைத் தகர்க்கலாமா என்று கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது.
பெரிய சாதனைகள் பல செய்துவிட்டு வயதாக முடங்கப் படுத்துக்கிடக்கும் பெரியவர் மாதிரி இருந்தது அந்தக் கோவில். முடிவெடுத்த வினாடியில் வேண்டாம் என்று புறம் தள்ளிவிட முடியாத சங்கடம் இருக்கத்தான் செய்தது. பிரம்மாண்டமான கோயில், கட்டிடக் கலைக்குச் சவால்விடும் கோபுரம். கோயிலைச் சுற்றி அகன்ற மதில். அதன் மேல் நந்தி, சிவலிங்கம்... எதற்காக இத்தனை நுணுக்கமாக ஓர் அரசன் கோவில் கட்டினான்; அதற்கு ஏன் மக்கள் வரவேற்பில்லாமல் போனது? மாடுகளும், ஆடுகளும் காக்கைக் குருவிகளும் அணிலும் ஓணானும் வெüவாலும் குடியிருக்கவா இத்தனை பெரிய கோவில்?
ஆனாலும் என்ன குழுவில் வந்தவர்களில் கோவிலை இடக்க வேண்டாம் என்று சொன்னவர்கள் மூன்று பேர்தான்.
"கடவுள் என்று ஒன்று உண்டோ இல்லையோ... கட்டிடக் கலைக்காகவாவது இது பாதுகாக்கப்பட வேண்டும். தோஷம் உள்ள கோவில் என்பது வேடிக்கையாக இருக்கிறது'' என்றனர் அந்த மூவரும்.
"எவ்வளவோ உயிர்களையும் ராஜ்ஜியங்களையும் பலி வாங்கிய கோவிலை வேடிக்கையாக நினைக்கவில்லை'' என்றனர் மற்றவர்கள்.
"நாங்கள் வேடிக்கை என்றது பலியானவர்களை அல்ல; அது தோஷம் உள்ள கோயிலாக இருந்தால் நீங்கள் வேறொரு இடத்தில் உள்ள கோயிலுக்குப் போங்கள். சரித்திரக் கால மனித உழைப்பைப் பாழ்படுத்துவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.''
பிரதிநிதிகள் குழு இவ்வாறு விவாதித்துக் கொண்டிருந்தது.
விஞ்ஞானப் பத்திரிகை ஒன்று ஐ.ஐ.டி.யின் இயற்பியல் துறை தலைமைப் பேராசிரியரைப் பேட்டி கண்டு வெளியிட்டது.
"ராஜராஜ சோழன் கோயிலுக்குச் சென்று வந்த பலர் ஏதாவதொரு இழப்பைச் சந்திப்பதாகச் சொல்வது மூடநம்பிக்கையா? ஏதாவது விஞ்ஞானம் இருக்கிறதா?''
"இயற்பியல் எல்லா இயற்கை நிகழ்வுக்கும் காரணம் தேடுகிறது. ஆப்பிள் தலையில் விழுந்தாலும் பூமியில் விண்கள் வந்து விழுந்தாலும் பனி உருகினாலும் எல்லாவற்றையும் காரண காரியமாகப் பார்க்கிறது. பிரபஞ்சத்தின் எல்லாச் செயல்களுக்கும் விஞ்ஞானபூர்வமாக விளக்கம் இருந்தே தீர வேண்டும். அந்தக் கோவிலைப் பர்றி யோசிக்கும் போது, அங்கிருக்கும் காந்தவிசைச் செறிவு மனிதனைப் பாதிக்கக் கூடியதாக இருக்கலாம்.''
"கதிர்வீச்சும் காந்தவிசையும் மனிதனின் உடலைப் பாதிக்கலாம். பதவி இறக்கம் செய்யுமா?''
"ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பிறந்த நேரத்தை ஒட்டி ஜோடியாக் நட்சத்திர ஆளுமை இருப்பதைச் சொல்லவில்லையா? அது போல இருக்கலாம்.''
"அதாவது ராசி?''
"பழமைவாதிகள் ராசி என்கிறார்கள். நாங்கள் கதிர்வீச்சு என்கிறோம். இவ்வளவுதான் வித்தியாசம்''
"இன்னும் ஐந்து நாள்கள்தான் இருக்கின்றன பத்மனாபன்'' ரிச்சர்ட் ஸ்டோன் நினைவுபடுத்தலில் கிண்டல் அதிகம் தொனித்தது.
"முடித்துவிடுவேன்''
"வீராப்பு பேசாதே...''
"எங்கள் உதவி எது வேண்டுமானாலும் கேள். உடனடியாக அனுப்பி வைக்கிறேன்''
"எதுவும் வேண்டாம்''
"நம்புகிறேன்''
இந்தியா முழுவதுமே ராஜராஜ சோழன் கோவிலைச் சபிக்கும்படி ஆகிவிட்டது.
"பெரிய கோவிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த மத்திய அமைச்சர் மாரடைப்பால் மரணம்..'
மத்திய மந்திரி முன்னாள் நடிகர் என்பதால் கலவரம் அதிகமாக இருந்தது. ரசிகர்கள் கோவிலில் நுழைந்து இடித்துத் தகர்க்க ஆரம்பித்தனர். போலீஸ், ராணுவம் என்று கோவில் முழுக்கக் கண்ணீர் புகையாக இருந்த நேரத்தில்... கோவில் கோபுரம் தானாகவே சரிந்து விழ ஆரம்பித்தது.
"வெல்டன் பத்மனாபன். எப்படி இரண்டே நாளில்?...''
"மத்திய மந்திரிக்கு மாரடைப்பு வரவழைத்தேன். கோவிலில் நடந்த கலவரத்தில் உயர்ந்தபட்ச ஒலியலைகளைச் செலுத்திக் கோபுரத்தை வீழ்த்தினேன்''
"வெரிகுட். என்ன பரிசு வேண்டுமோ கேள்...''
"நிச்சயமாக?''
"நிச்சயம்''
"இப்போதாவது சொல்லுங்கள். எதற்காக இவ்வளவும்?''
"சொல்லிவிடுகிறேன். அந்தக் கோவில் இருக்கும் பிரதேசத்தின் கீழே நூறு மீட்டர் ஆழத்தில் ஒரு தனிமம் இருக்கிறது. மென்டலீஃப் தனிம அட்டவணையின் புதிய குழந்தை இது. ஜப்பானியர்களை வீழ்த்த நாங்கள் அதை முதலில் பெற்றாக வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவு அவசரப்பட்டுவிட்டோம்.''
"அந்தத் தனிமத்துக்கு என்ன சிறப்பம்சம்?''
"கதிர்வீச்சுத் தன்மை கொண்ட தனிமம் இது. யுரோனியம் மாதிரி. அந்தத் தனிமம் அந்தக் கோயிலுக்கு அடியில் செயற்கைக் கோள்கள் சத்தியம் செய்கின்றன''
பத்மனாபன் "இன்ட்ரஸ்டிங்'' என்றான்.
"அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஒரு க்ளூ கொடுக்கிறாயா?... ஏனென்றால் இது முழுக்க முழுக்க உன்னால் கிடைத்த வெற்றி...''
பத்மனாபன் சோழா என்று வைக்கலாமா என்று யோசித்தான்.... சோழநாடு சோறுடைத்து... என்று சம்பந்தமில்லாமல் ஞாபகம் வந்தது... சோறு.. "சோறியம்'' என்றேன்.
ஸ்டோன், "சோறியம்.. நைஸ் நேம்'' என்றான்.
(அசுரன் 1992)