சனி, மார்ச் 13, 2010
கும்பகோணம்
புதுச்சேரி மார்க்கமாக கும்பகோணம் வரை காரில் பயணம் செய்துவிட்டுவந்தேன். எனக்கு துணையாக என் மகன் மாக்ஸிம். ஈஸிஆர் சாலையில் பயணம் செய்வது மிகவும் ஆசையான பயணமாக இருந்தது. இப்போது அப்படியில்லை. இடப் பக்கம் கடற்கரையைப் பார்க்கிற வாய்ப்பே கிடைக்கவில்லை. பண்ணை இல்லங்கள், ஹோட்டல்கள், தீம் பார்க்குகள், பாஸ்ட் ஃபுட் உணவகங்கள் எல்லாமாக சேர்ந்து கடற்கரைச் சாலையில் பயணம் செய்கிற அனுபவத்தை மாற்றி விட்டன. நாள்கள் போனால் அண்ணா சாலையில் பயணம் செய்கிற களைப்பையே இதுவும் ஏற்படுத்திவிடும் என்று தோன்றுகிறது. புதுவையில் பாரதிதாசன் பல்கலைக் கழக வாசலில் வந்து காத்திருந்து தம் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் நண்பர் பாரதிவசந்தன். அவருடைய இல்லத்தில் மதிய உணவு. அவருடைய இரண்டு வயது மகளுக்கு தமிழ்மகள் என்று என் நினைவாகப் பெயரிட்டதாகச் சொன்னார். சந்தோஷமாக இருந்தது. பேராசிரியர் ராஜ்ஜா கல்லூரி விழாவில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை. சட்டசபைக்கு அருகே இருக்கும் நிரந்தரப்புத்தகச் சந்தையில் சேத்தன் பகத்தின் இரண்டு நகரங்கள் வாங்கினேன். மூன்று ஆண்டுகளில் 161 பதிப்புகள் ஆகியிருப்பதாகப் போட்டிருந்தார்கள். தென்னிந்தியப் பெண்ணைக் காதலித்து மணக்கும் வட இந்திய பையனின் கதை. கேட் தேர்வில் பாஸாகி, எஐம்மில் படிக்கும் மாணவர்களின் பின்னணி போன்றவை நாவலை நவீனப்படுத்துகின்றன. மற்றறபடி விறுவிறுப்பான நடையில் அமைந்த வணிகரீதியான கதை. தன் புத்தகங்களின் விலை எப்போதும் 100 ரூபாய்க்கு மேல் மிகாதவாரு பார்த்துக் கொள்வேன் என்று அவர் கூறியிருந்தது இந்த நாளிதழில் பிரசுரமாகியிருந்தது. அவருடைய அத்தனை நூல்களும் 95 ரூபாய் விலையில் இருப்பதை கவனித்தேன்.இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டு எழுத முடியுமா என்று தெரியவில்லை.
பிரெஞ்ச் இன்ஸ்டிட்டியூட்டில் கண்ணன் அவர்களைச் சந்தித்தேன்.வெட்டுப்புலி நாவலை மிகவும் பெருமையாக கூறினார். இன்னும் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கலாம் என்பது அவருடைய அபிப்ராயம். வெட்டுப் புலி தீப்பெட்டியின் பழைய லேபிளையே பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருக்கும் என்று ம் சொன்னார்.
தமிழில் இந்த ஆண்டு வந்த பல நூல்களைப் பற்றி பேச்சு திரும்பியது. இருட்டத் தொடங்கியதும் கும்பகோணம் போய்ச் சேர வேண்டிய ஞாபகம் வந்தது. நானும் மாக்ஸிமும் விடைபெற்றுக் கொண்டோம்.
(தொடரும்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)