எழுத்தாளர் மதுமிதா இரவு குறித்து தமிழ் படைப்பாளிகள் முப்பத்தி ஏழு பேரிடம் சுவையன் அனுபவங்களைத் தொகுத்திருக்கிறார். அதில் இடம்பெற்றுள்ள எனது கட்டுரை இது.
இரவு எனக்கு மிகவும் சொந்தமானதாக இருக்கும் பெரும்பாலும். அதில் நானே ராஜா. தூக்கத்தை எந்த அளவுக்கு மிச்சம் பிடிக்கிறேனோ அதற்கான விகிதத்தில் யோசிக்கவும் எழுதவும் படிக்கவும் தீர்மானிக்கவும் யாருக்கும் கட்டுப்படாமலும் சுதந்திரமாகவும் இருக்கலாம். பகல் என் கையில் இல்லை. பல நேரத்தில் அது மற்றவர் ஏவலுக்கு நான் அடிபணியும் தருணங்களாக இருக்கும்.இரவு பெரும்பான்மையினருக்குப் பொதுவானதாக இருக்கிறது. ஏனென்றால் பெரும்பான்மையினர் இரவில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இரவு ஒரு சமத்துவன்.
இரவில் தூங்குகிற எல்லோரும் பகலில் உழைக்கிறார்கள் என்று கணக்கிட முடிவதில்லை. இரவில் தூங்குகிற சிலர் பகலிலும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் உழைக்காமல் சும்மா இருக்கிறார்கள். சிலர் உழைப்பைச் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் கல்லுடைக்கிறார்கள். சிலர் கம்ப்யூட்டருக்கான ஆணை எழுதுகிறார்கள். இரவு ஏற்படுத்தித் தந்திருந்த உறக்க ஒற்றுமை பகலில் இல்லை. பகல் பகட்டானது. பகல் மனிதர்களுக்கு "பகல் வேஷத்தை' தந்துவிடுகிறது. இருட்டுக்கு வேஷமில்லை. வண்ணங்கள் இல்லை. சாம்பல் நிறத்தின் பல்வேறு ஷேடுகள்தான் இருட்டில் தெரிகிறது. மனிதர்களின் பல்வேறு குணாதிசியங்கள் போல இந்த இருட்டின் சாயங்கள் இருக்கின்றன.
பூமிப் பந்தின் ஓர் அரைக்கோளம் எப்போதும் இரவாக இருக்கிறது. இருள் என்பது குறைந்த வெளிச்சம் என்பான் பாரதி. ஒளி என்பது குறைந்த இருள் என்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. நிழல்கள் என்பவை என்ன? பகல் நேர இரவுத் துண்டுகள் தானே?
இரவு ஓயாமல் பகலைத் துரத்துகிறது. என்னதான் சூரியன் தன் ஒளிக்கரணத்தால் பூமியை கிச்சு கிச்சு மூட்டினாலும் வெளிச்சம் இருக்கும் இடங்களில் எல்லாம் நிழல் நிச்சயப்பட்டுவிடுகிறது. சூரியனுக்கு ஆயுள்காலம் உண்டு. இருளுக்கு இல்லை. இருள் நிரந்தரம். பகல் நிச்சயமற்றது. பிரபஞ்சமே இரவுதான். பிரபஞ்சத்தில் புள்ளிகளாக இருக்கின்றன வெளிச்சங்கள். இரவின் முன்னால் வெளிச்சம் பலவீனமானது. இரவு இயற்கை. ஒளி செயற்கை. ஒளியால் விளைந்த உயிர்கள், வனங்கள், ஆறுகள், அருவிகள் மட்டும் எப்படி இயற்கையாகிவிடும்? இயற்கையாவும் செயற்கையின் சேட்டைகள்..
இரவில் குறைகள் தெரிவதில்லை. இரவில் கறைகள் தெரிவதில்லை. இரவு களங்கமற்றது. ஒரு கவிஞனை இரவு எழுத வைக்கிறது. திருடனை திருட வைக்கிறது. வேசிகளுக்கு வேலை கிடைக்கிறது. அரசியல்வாதிகள் சதியாலோசனை மண்டபத்தில் சங்கமமாகிறார்கள். மாலை மங்கியதும் கலைகள் கண் விழிக்கின்றன. இரவு படைப்பாளிகளுக்கான பொழுது. பொழுது விடிந்ததும் யாரும் கலைநிகழ்ச்சி நடத்துவதில்லை எந்த தேசத்திலும்.
இரவை மிகைப்படுத்திப் புகழ்வதாக நினைக்க வேண்டாம். இரவு மிகையின் வடிவமல்ல. குறைவின் வடிவம். எல்லா வண்ணங்களும் இழந்த நிலைதான் இருள். காலி கோப்பை. வெற்றிடம். அதுதான் அதன் பலம்.
இரவைப் பற்றி எழுதவதென்றால் சந்தோஷமாக இருக்கிறது. தஸ்தயேவஸ்கியின் வெண்ணிற இரவுகள், அண்ணாவின் ஓர் இரவு, என்னுடைய முதலிரவு, பம்பு செட்டு காவலுக்குப் போன இரவுகள். கோழிப் பண்ணியில் கோழிகளுக்கு பாதுகாப்பாக இருந்த இரவுகள், பஸ் இல்லாமல் பத்து மைல் தனிமையில் நடந்துபோன இரவுகள், பத்திரிகையில் இதழ் பொறுப்புகளை முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய இரவுகள், "லைட்டை நிறுத்திட்டுப் போடான்னா, ஃபேனை நிறுத்திட்டுப் போறீயே... என்னடா யோசனை உனக்கு எப்பப்பார்த்தாலும்... போடா போய் தூங்கு' என்று இரவில் அனுப்பி வைத்த அப்பா நிரந்தரமாய் உறங்கிப் போன இரவு. இரவைப் பற்றி யோசிக்க நிறைய இருக்கின்றது.
சென்னை அண்ணா சாலை தினமணி அலுவகத்தில் இருந்து ஒருநாள் இரவு வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். ஸ்கூட்டர் என் களைப்புக்கு ஏற்ற நிதானத்துடன் போய்க் கொண்டிருந்தது.அதன் சராசரி வேகம் அவ்வளவுதான். அண்ணா நகர் ரவுண்டானா அருகே சிறுவன் ஒருவன் பதறியபடி ஓடி வந்து கை நீட்டினான். நிறுத்தினேன்.
"அண்ணா திருமங்கலத்தில் இறங்கிக்கட்டுமா?'
அவ்வளவு சிறிய தம்பி எனக்கு எந்தவிதத்திலும் பொருத்தமாகவே இல்லை. பத்து வயதுக்குள்தான் இருக்கும். மெல்லிய மாநிற உடம்பு. அரை டவுசர், அரைக் கை பனியன். நான் சம்மதிப்பதற்குள் ஏறிக் கொண்டான்.
கடிகாரத்தின் சின்ன முள் 12 க்கு பக்கத்தில் இருந்தது. புது நாள் பிறந்துவிட்டதா அல்லது நாள் தன் கடைசி மணித்துளியை எண்ணிக் கொண்டிருக்கிறதா என்பது அவ்வளவு முக்கியமாகத் தெரியவில்லை. நான் பெரிய முள்ளின் இருப்பிடத்தைப் பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை.
""எங்க தம்பி இந்த நேரத்தில''
அவன் ஓர் உருக்கமான கதையைச் சொன்னான். ""அண்ணா, எங்கம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல. அம்மா செங்கல்பட்டு ஆஸ்பித்திரில உயிருக்கு போராடிக்கிட்டு இருக்காங்கண்ணா... எங்கப்பா இங்க வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டாரு. அவங்கள பாத்து செலவுக்குக் காசு வாங்கிட்டுப் போகத்தான் வந்தேன். சித்தி என்னை அடிச்சி விரட்டிட்டாங்க. அம்மாவுக்கு மருந்து வாங்கணும். தங்கச்சி பாப்பா காலையில இருந்தே பால் குடிக்கல. ஆஸ்பித்திரி ஆயாகிட்ட பாத்துக்க சொல்லி குடுத்துட்டு வந்தேன். எட்டு மணிக்குள்ள வந்துடச் சொல்லுச்சி... இப்ப என்ன சார் மணி?''
இப்போது பெரிய முள்ளையும் பார்த்தேன். 12.35.
காலை எட்டு மணிக்குப் போய்ச் சேருவதுகூட அவனால் முடியாது. இனிமேல் செங்கல்பட்டுக்கு பஸ் இருக்காது.
""லாரிகாரர்களை கேட்டால் ஏற்றிச் செல்வார்கள். போய் இறங்கிக் கொள். இந்தா செலவுக்கு வைத்துக் கொள்'' என்று இருந்த இருபது ரூபாயைக் கொடுத்தேன்.
"திருமங்கலம் சந்திப்பில் லாரிக்காரர்கள் டீ குடிக்க நிறுத்துவார்கள். பையன் சாமர்த்தியமாகப் போய் சேர்ந்துவிடுவான். குழந்தை காணாமல் போகாமல் இருக்க வேண்டும். அவனுடைய தாய்க்கு யாராவது தக்க சமயத்தில் மருந்து வாங்கித் தந்து காப்பாற்றி இருக்க வேண்டும்....' நான் பிரார்த்தனை செய்வதற்கு எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாதது தடையாக இருக்கவில்லை.
ஒரு பிஞ்சுக் குழந்தைக்கு இத்தனை பொறுப்பா, எல்லாம் சீராகி நல்லபடியாக வாழ்க்கை ஆரம்பிக்குமா?
களைப்போடு சமூக சோகமும் சேர்ந்து கொண்டால் தூக்கம் வருவது கஷ்டம்தான். விடியும் தருவாயில்தான் தூக்கம் வந்தது.
பிறிதொரு நாள். அதே அண்ணா நகர் ரவுண்டானா அருகில் அந்தச் சிறுவனின் குரல். எனக்கு அருகில் நின்றிருந்த பக்கத்து பைக் ஆசாமியிடம் ""அண்ணா திருமங்கலத்தில் இறங்கிக்கட்டுமா?'' என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
எனக்கு தீவிரமாகிவிட்டது யோசனை. அந்தப் பையன் சொல்கிற கதை உண்மையாக இருக்க வேண்டுமா? அந்தப் பையன் பொய் சொல்லி சம்பாதிப்பது உண்மையாக இருக்க வேண்டுமா? பையன் சொல்வது உண்மையாக இருந்தால் அந்தச் சிறுவனுக்கு இப்படியொரு சோகம் இருப்பது நியாயமா? அவன் பொய் சொல்லியிருந்தால் சந்தோஷம்தானே?
-தலைவெடிக்கும் வேதாளத்தின் கேள்வி ஒன்றும் இல்லை இது.
ஆனால் உறுத்தியது. வீடுக்கு வந்து சேர்ந்தேன். அம்மா மீது காலைத் தூக்கிப் போட்டபடி தூங்கிக் கொண்டிருந்த என் பையனின் வயதுதான் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு. என் பையன் இந்த நள்ளிரவில் யாரையோ ஏய்த்துப் பிழைக்க வேண்டியிருந்தால்? அந்த நிலைமை நம் பையனுக்கு இல்லாமல் இருப்பதற்கு யாருக்கு நன்றி சொல்வது? அந்தச் சிறுவன் அந்த நிலைமையில் இருந்து மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? இதயம் விம்முவது எனக்கு நன்றாகத் தெரிந்தது.
இரவுகள் வழக்கத்துக்கு மாறான சம்பவங்களைக் கொண்டவை. விடிந்ததும் அந்த உலகம் உறங்கிவிடுகிறது. இரவு உலகம் இரவு 10 மணிக்கு மேல் தொடங்குகிறது. குடியும் கூத்தும் கேளிக்கையும் அதிக ஆடம்பரங்களும் அதில் இருக்கும்.
ஒளியே கடவுள். சூரியன் இல்லையென்றால் உயிர் இல்லை. பசுமை இல்லை. சூரியக் கிரணங்கள் காட்டும் வண்ண ஜாலங்களைப் பாருங்கள். இதையெல்லாம் பார்க்காமல் ஒருவன் உலகத்தில் கவிஞனாக உலா வரமுடியுமா என்றெல்லாம் கேட்கிறார் பாரதியார்.
அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞான ஒளியை அடைய வேண்டும் என்று கிட்டத்தட்ட எல்லா ஆன்மீகவாதிகளும் சொல்லிவிட்டார்கள்.
அருட்பெரும் ஜோதி தனிப் பெருங் கருணை என்கிறார் வள்ளலார். இரவில் தீபமில்லாத இடத்தில் இருக்கக் கூடாது. ஏனெனில் அஃது பிராண நஷ்டம் பண்ணும் என்றும் கூறியிருக்கிறார்.
இறைவன் ஜோதி வடிவானவன்.
அப்படியானால் இருள் பேய்வடிவானதா? இறைவன் ஏன் இருள் வடிவானவனாக இல்லை? இருள்வடிவானவனாக இருந்திருந்தால் இன்னும் பலம் பொருந்தியவனாக விஸ்வரூப பலம் பொருந்தி நாட்டில் நடக்கும் அக்கரமங்களை அகற்ற முடிந்திருக்குமோ?
சிறுவயதில் கடவுளைப் பார்க்க ஆசை எழுந்த காலத்திலேயே பேயையும் சற்று தூரத்தில் இருந்து பார்த்துவிட வேண்டும் என்று ஆசைபட்டதுண்டு. இளம்பிராய இரவுகள் பயம் நிறைந்தவை.
இளம் வயதில் எங்கள் வீடு ஓட்டேரியில் இருந்தது. அங்கே சென்னையின் மிகப் பெரிய சுடுகாடு உண்டு. அந்தச் சுடுகாட்டையொட்டி மேகலா என்றொரு திரையரங்கம் உண்டு. வரிசையாக எம்.ஜி.ஆர் படங்கள் அங்கே வெற்றி விழா கொண்டாடும். படத்தில் நடித்த எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா, அண்ணா, கலைஞர் என்று படத்தின் வெற்றிவிழாவுக்கு நிறைய பிரபலங்கள் வருவார்கள். எம்.ஜி.ஆர். அரசியலுக்கு முழுநேரமாகப் போய்விட்டபின்பு, அதற்கு சற்று தள்ளி அபிராமி, பால அபிராமி என்று இன்னொரு பகட்டான திரையரங்கம் உருவாகிவிட்டதால் மேகலாவுக்கு மெல்ல மெல்ல மவுசு குறைந்து வந்தது. பகட்டான திரை அரங்கமாக இருந்தாலும் அங்கு ஏழைகளுக்கும் ஒரு ருபாய் டிக்கெட் இருந்ததும் ஒரு காரணம்.
இந்த நேரத்திலே அபிராமி தியேட்டரில் பேய் உலவுவதாக ஒரு செய்தி பரபரப்பாக உலவியது. இரண்டாவது ஆட்டத்துக்கு அந்தத் தியேட்டருக்குப் போக வேண்டாம் என்றும் நாங்கள் குடியிருந்த வீட்டில் வேண்டுகோள் ஒன்று இருந்தது.
அபிராமி தியேட்டரில் யாரோ ஒருத்தன் படம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் ஒண்ணுக்கு அடிக்க டாய்லெட் பக்கம் வந்தான். அப்போது மணி 12. டாய்லெட்டில் வேறுயாருமே இல்லை. திடீரென்று பக்கத்தில் ஒரு குரல் "நெருப்புப் பெட்டி இருக்கா?' என்று கேட்டிருக்கிறது. திரும்பினால் கரடி போல ரோமம் கொண்ட ஒரு கை மட்டும் கண்ணில் பட்டிருக்கிறது. பதறி அடித்து வெளியே ஓடி வந்தான் அவன். ரிக்ஷா பிடித்துவீட்டுக்குப் போய்விட அதில் ஏறினான். உடல் தடதடவென்று நடுங்கிக் கொண்டிருந்தது.
"என்னங்க இப்படி நடுங்குறீங்க?'' என்று ரிக்ஷாகாரன் கேட்டான்.
நடந்த விஷயத்தை விவரித்தான் நடுங்கிக் கொண்டிருந்தவன். "அந்தக் கை இப்படி இருந்ததா பாருங்க?' என்று ரிக்ஷாகாரன் தன் கையை பின் புறம் நீட்டியிருக்கிறான். அதே கரடி ரோமக் கை. அவ்வளவுதான் வண்டியில் இருந்தவன் அதே இடத்தில் ரத்த வாந்தி எடுத்து இறந்து போய்விட்டான். அவன் இறந்த இடம் சுடுகாட்டுக்கு நேர் எதிரே. -இதுதான் அந்தக் கதை. எந்தப் பேப்பரிலும் பதிவு செய்யப்படாத மக்களின் வாய் வார்த்தை கதை இது. இதை மேகலா தியேட்டர்காரன்தான் தன் வருமானம் போய்விட்டதே என்பதற்காக கதை கட்டி விட்டிருக்கிறான் என்று இன்னொரு பகுத்தறிவு கோஷ்டியும் உண்டு.
பேய்கள் இருந்ததாகச் சொல்லப்பட்ட அபிராமி தியேட்டர் இப்போது அபிராமி மால் ஆகி, பேய்கள், ஏழைகள் எல்லாம் கிட்டே நெருங்க முடியாத இடமாகிவிட்டது.
சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலின் விலை. நூற்றி ஐம்பது.
www.sandhyapublications.com
email: sandhyapublications@yahoo.com
phone: 044- 24896979