திங்கள், டிசம்பர் 14, 2009

மெகா ஆராய்ச்சி!




தமிழ் சானல் ஒன்றில் பல ஆண்டுகளாக ஒரு மெகா சீரியல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தக் கட்டுரையை இப்படி ஆரம்பிப்பதற்கு என்னுடைய அறியாமையே காரணம். இந்தியாவில் உள்ள அனைத்துச் சானல்களிலும் இப்படி பல ஆண்டுகளாக பல மெகா சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சீரியல்கள் அனைத்துமே முதலிலேயே கதை தீர்மானிக்கப்பட்டு ஒன் லைன் தயாரிக்கப்பட்டு வசனம் எழுதப்பட்டு படப்பிடிப்புக்கு போனவை அல்ல. இதன் பொது அம்சம் பிரதானமாக ஒரு பெண் பாத்திரம் இருக்க வேண்டும். செல்வி, அரசி, தங்கம், அபி.. இப்படி. இந்தக் கதைகளில் ஒரு விஷயத்தை மட்டும் அடிப்படையாக வைத்துக் கொள்வார்கள். நம் கதாநாயகிக்குத் துன்பத்துக்கு மேல் துன்பம் வந்து கொண்டே இருக்கும். காலை எழுந்து இரவு வரை துன்பம்தான். சுற்றியிருப்பவர்கள் பலரும் முதுகில் குத்துவார்கள். கருணையே வடிவான கதாநாயகி, பரவாயில்லை இருக்கட்டும் என்றபடி அடுத்தபடிக்கட்டில் கால் வைப்பாள். வாழ்க்கையில் உயர்ந்து லேடி பில்கேட்ஸ் நிலைக்கு வருவாள். அப்பாடா கதை இந்த வாரம் முடிந்துவிடும் என்று பார்த்தால், அந்த வாரம்தான் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலிடம் வகித்திருக்கும்.

"நல்லாத்தானே இருக்கு இன்னும் ரெண்டு வருஷம் போகட்டுமே?''} இது சானல் சஜஷன்.

விடுவார்களா, மீண்டும் கூடவே இருந்த அவளுடைய தம்பி கள்ள நோட்டு வழக்கில் அவளைச் சிக்க வைத்து அவளை ஆரம்பநிலைக்கே கொண்டு வந்துவிடுவான்.

மீண்டும் புதிய புதிய ஆள்கள் கதைக்குள் நுழைந்து அவளை ஏமாற்றுவார்கள், காட்டிக் கொடுப்பார்கள், கற்பழிக்க துரத்துவார்கள், கொலை செய்ய முயலுவார்கள்... அவ்வப்போது வருகிற பத்திரிகை செய்திகள், ஹாலிவுட் படக் காட்சிகள் எல்லாமே தமிழலங்காரம் செய்யப்பட்டு அதில் அரங்கேற்றப்படும். வீண் பழி சுமத்திய தம்பி, அவளுக்கு தம்பியே இல்லை என்பது தெரியவரும். இருபத்தைந்து வருஷங்களாக மனதுக்குள் பூட்டி வைத்திருந்த ஒரு ரகசியத்தை அப்போதுதான் அவன் ஆரம்பிப்பான்.

கதை எந்த நேரத்தில் எப்படி மாறும் என்று யாரும் அணுமானிக்க முடியாது... சுருக்கமாகச் சொன்னால் எல்லோரும் ஆசைப்படும் திருப்பங்களோடு வளரும்.

எனக்குப் பொய் சொன்னா பிடிக்காது என்று சொன்ன கேரக்டர் பொய்யாகச் சொல்லிக் கொண்டு போகும். கொலை செய்வதற்காக ஊருக்கு வந்தவன் தான் வந்த வேலையை மறந்துவிட்டு சமூக சேவை செய்து கொண்டிருப்பான். கதைக்கு எப்போது திருப்பம் தேவையோ அப்போது அவன் கொலை வாளினை எடுப்பான். இப்போது மட்டும் ஏன்டா எடுத்தாய் என்று கேள்வி கேட்க முடியாது. இருக்கவே இருக்கிறது "இந்தத் தருணத்துக்காகத்தான் காத்திருந்தேன்'' என்று ஒரு வரி வசனம்.

தொடரில் நடிப்பவர்கள் கதாபாத்திரங்களாக ஆண்டு கணக்கில் தொடர்ந்து கொண்டிருப்பதில் பல்வேறு சிக்கல்கள்.. உதாரணத்துக்கு ஒரு சீரியல் நாயகி, குண்டாக.. ஒல்லியாக என பல்வேறு மாற்றங்கள் பெற்றுவிட்டார். நடுவிலே இரண்டு முறை கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று அந்தக் குழந்தைகளும் இப்போது ஸ்கூலுக்குப் போக ஆரம்பித்துவிட்டன. கதைப்படி அக் கதையின் நாயகி கணவனைப் பிரிந்து வாழ்கிறார். அப்புறம் எப்படி கர்ப்ப காட்சிகளையெல்லாம் சமாளித்தார்கள் என்பது அந்தத் தொலைக் காட்சித் தொடரைவிட சுவாரஸ்யமானது.

தமிழில் வரும் தொடர்களில் பெண்களுக்கு மட்டும் விசேஷமான பிரச்சினைகள்.

சில லட்சிய வாதப் பெண்கள், அவர்களின் முன்னேற்றத்துக்கு ஒரு காரணமும் இல்லாமல் முட்டுக் கட்டையாக இருக்கும் ஆண்களோடு மல்லு கட்டுகிறார்கள். சில கதைகளில் குடும்பப் பகை காரணமாக ஒரு வம்சத்தையே அழிக்க வீறு கொண்டு எழுகிறாள் ஒரு பெண். அவள் போன் செய்தால் சர்வதேச மாபியா கும்பல் எல்லாம் தொடை நடுங்கி, சரி மேடம் என்று சலாம் போடுகிறது.
ஐந்து பெண்களின் தந்தை அந்தப் பெண்களை கல்யாணம் செய்து வைத்து ஒவ்வொரு பெண்ணாகக் கரையேற்றுகிறார். இரண்டாம் தாரத்துப் பெண்களும் முதல் தாரத்துப் பெண்களும் சமரசமாக பழகிக் கொள்ள முடியாமல் தத்தளிக்கிறார்கள். பெண்டாட்டியைத் தீர்த்துக் கட்டி விட்டு இன்ஸþரன்ஸ் பணத்தை அடைய நினைக்கிறான் கணவன். வாடகைத் தாய், தான் பெற்றுக் கொடுத்த குழந்தையைக் காண முடியாமல் துடிக்கிறாள். பிறந்தவீட்டினர் தம் கணவனை அகவுரவப் படுத்துவதைக் காணச் சகிக்காமல் பொறுமுகிறாள் ஒருத்தி.

நாகங்களைப் பிரியமாக வழிபடும் பெண்களை கழுகு அரக்கர்களிடமிருந்து காப்பாற்றும் நாகக் கன்னி. அது பாம்பாக இருந்தாலும் ஒரு பெண் பாம்பின் வைராக்கிய கதையைத்தான் சொல்ல வேண்டும்போல ஒரு தீவிரம் தெரிகிறது.

மேற்படி காட்சிகளெல்லாம் டி.வி.யைப் பார்க்கும் பெண்கள் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பை மிகச் சிறந்த உளவியல் மேதைகளாலும் ஆய்ந்துணர முடியாது. பெண்கள் இந்தத் தொடர்களை இமை கொட்டாமல் பார்க்கிறார்கள். மாமியார், மருமகள், மகள், தாய் என பாரபட்சம் இல்லாமல் எல்லோரும் பார்க்கிறார்கள். ஒவ்வொரு சீரியலில் ஒவ்வொருவரின் மேன்மைகள் சொல்லப்படுகின்றன. சில சீரியல்களில் இரண்டு மூன்று உறவுகளின் மேன்மைகள்.

காட்சிகளை அவர்கள் ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்களுக்கு மேல் இழுக்க வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் பார்த்த ஒரு காட்சி (சற்றே வேறுவிதமாக). ஒருவர் அமைதியாக பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார். வேவ்வேறு கோணங்களில் அவர் பேப்பர் படிப்பது காண்பிக்கப்படுகிறது. இன்னொருவருவர் வேகமாக வருகிறார். ஆனால் நிதானமாக பேசுகிறார்.

"விஷயம் தெரியுமா?'' என்கிறார்.

"சொன்னாத்தானே தெரியும்?''

"ஊருக்கே தெரிஞ்சிருக்கு. உங்களுக்குத் தெரியாதா?''

"அட அப்படி என்ன விஷயம்.. எனக்குத் தெரியாமா போச்சி?''

"தெரிஞ்சுக்கிட்டு தெரியாத மாதிரி நடிக்கிறீரோனு சந்தேகமா இருக்கு..''

"ரயில் கட்டணம் உயர்ந்துட்டதா பேப்பர்ல போட்டிருக்கானே அதச் சொல்றீங்களா?""

"அட உண்மையிலேயே உங்களுக்குத் தெரியாதா?''

"எதுவா இருந்தாலும் சொல்லுங்க?''

"நம்ம வனிதாவோட புருஷனுக்குக் கேன்சராமே?''

-இதைச் சொல்வதற்கு இவ்வளவு இழுத்தது ஏன் என்பது புரியாமல் தவிக்கிறோம். கேமிரா ஜூம் இன் ஜூம் அவுட் என்று பேப்பர் படித்துக் கொண்டிருந்தவரின் அதிர்ச்சியைக் காட்டுகிறது. பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர் மயங்கி விழுகிறார். இப்போது சமையல் அறையில் இருந்த அவருடைய சம்சாரம் வருகிறார். மயங்கிக் கிடக்கும் கணவரைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

"என்ன ஆச்சு?''

வந்தவர் "உங்களுக்காவது விஷயம் தெரியுமா'' என்கிறார்?

"என்ன விஷயம்?''

"அந்தவிஷயத்தைச் சொன்னதும் மயங்கி விழுந்துட்டாரு..''

"அப்படி என்ன விஷயம்?''

"அப்படினா உங்களுக்கும் தெரியாதா?''

"சத்தியமா தெரியாது..''

"உலகத்துக்கே தெரிஞ்ச விஷயம் உங்களுக்கு மட்டும் தெரியாம போனது ஆச்சர்யமாத்தான் இருக்கு... நம்ம வனிதவோட புருஷனுக்கு கேன்சராம்...''

"அடக் கொடுமையே'' என்று சம்சாரம் அலற.. அவருடைய மருமகள் வருகிறாள்..

"மாமிக்கும் மாமாவுக்கும் என்ன ஆச்சு?''

நம்ப மாட்டீர்கள்.. வந்தவர் மீண்டும் ஆரம்பிக்கிறார்... "உங்களுக்கும் விஷயம் தெரியாதா? ''

"நான் உள்ள வந்தேன். உங்க மாமா பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்தாரு... என்னங்க விஷயம் தெரியமானு கேட்டேன். தெரியாதுனு சொன்னார். நிஜமாவே தெரியாதானு கேட்டேன்.. அப்புறம் விஷயத்தைச் சொன்னேன்.. அதிர்ச்சியில மயக்கமாயிட்டாரு. அத பாத்துட்டு உங்க மாமியார் ஓடி வந்தாங்க...''

-மன்னிக்கவும் நான் அடைந்த எரிச்சலை இதற்கு மேல் விளக்குவதற்காகக் கூட முடியவில்லை.

இவ்வளவு இழுவையாக இழுத்துவிட்டு இறுதியில் இவ்வளவையும் அண்ணிக்காரி ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருப்பதாக முடிக்கிறார்கள். அது ஏன் என்பது மறுநாள் வரை நீடிக்க வேண்டிய சஸ்பென்ஸ்.



முத்தமிழில் இளைய தமிழான நாடகத் தமிழுக்கு இப்படி ஒரு சோதனை. மக்களின் வாசிப்பு தாகத்தையும் இந்தத் தொலைக் காட்சி மோகம் பாதிப்பதால் வேதனை இரட்டிப்பாகிறது. தவறான பொழு போக்கு, நல்ல வாய்ப்புகளையும் நேரங்களையும் சேர்த்துக் கொல்கிறது. நம் இலக்கிய மரபை கேலி செய்கிறது. படைப்புலகத்தைப் பாழாக்குகிறது என்கிற கவலைகூட ஒருபுறம் இருக்கட்டும். ஒருவரிடம் எப்படி தெளிவாகப் பேச வேண்டும் என்பதையும் மழுங்கடிக்கிறது அதுதான் உச் சகட்டம். டி.வி.யில் ஆயிரம் காட்டுவான், ரிமோட் கண்ட்ரோல் நம் கையில்தானே இருக்கிறது என்கிறீர்களா?

ஒரு புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் தாம் எழுதிக் குவிப்பதற்கு டி.வி.க்கு நன்றி சொல்லியிருந்தார்.

டி.வி.யைப் பார்த்து எப்படி எழுதிக் குவிக்க முடியும்?

"டி.வி. யைப் போட்டதும் தாள முடியாத வெறுப்பு ஏற்படும். உடனே என் அறைக்குச் சென்று எழுத ஆரம்பிப்பேன்.. நான் இவ்வளவு எழுதியதற்கு டி.வி. நிகழ்ச்சிகள்தான் காரணம்'' -இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதைத்தான் நம் திருவள்ளுவர் "கேட்டினும் உண்டோர் உறுதி' என்கிறார்.

LinkWithin

Blog Widget by LinkWithin