வியாழன், நவம்பர் 29, 2007

இம்போர்ட்டட் சரக்கு: 3,4,5



யுத்தம்


""அப்பா யுத்தங்கள் எப்படி ஆரம்பிக்கின்றன'' என்றான் ஆதம்.

""அதுவா? வந்து... இப்போ ரெண்டு நாடு இருக்கிறது. இரண்டுக்கும் இடையே முன் விரோதமே கிடையாது. திடீர்னு ஒரு நாட்டுக்கு இன்னொரு நாட்டைப் பிடிக்கணும்னு...''

""சின்னப் பையன் புரியாமக் கேட்டா இப்படியா சொல்றது?'' என்று சமையலறையிலிருந்து குரல் கொடுத்தார் அம்மா.

""சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா...'' என்றார் அப்பா.

""பேச்சுக்குச் சொல்ற லட்சணமா இது? என்ன உளர்றீங்க?'' என்றார் அம்மா.

""வாயை மூடு. நானா உளர்றேன்? அறிவுக் கெட்டவளே''

""யாருக்கு அறிவில்லைன்னு ஊருக்கே தெரியுமே! அன்னைக்கு நூறு ரூபாய் நோட்டை யார் கோட்டை விட்டது?''

""அதிகமா பேசினால் என்ன நடக்கும்னு தெரியாது''

தட்டு முட்டு சாமான்கள் பறந்தன. பையன் கத்தினான்: ""நிறுத்துங்க... நிறுத்துங்க... யுத்தம் எப்படி ஆரம்பமாகும்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு.''

இம்போர்ட்டட் சரக்கு

ரிச்சர்ட் அவனுடைய நண்பனிடம் குறைபட்டுக் கொண்டிருந்தான்: ""என் மனைவி கத்த ஆரம்பித்துவிட்டால் எங்கள் வீட்டில் எல்லோருமே "கப் சிப்'தான். என்னுடைய குழந்தைகள்... ஏன் எங்கள் நாய்கூட அமைதியாகிவிடும்.''

நண்பன் கேட்டான்: ""நீ கத்த ஆரம்பித்தால்?''

""அதே கதைதான். ஆனால் நான் எங்கள் வீட்டு ஜன்னல், கதவு ஆகியவற்றின் முன்னால் கத்துவேன். அவையும் பதிலுக்கு என்னிடம் கத்துவதில்லை.''


எதிரி!

மரணப்படுக்கையில் இருந்த வில்லியம் தன் மனைவியை அருகே அழைத்தான். கனிந்த குரலில் ""நான் இறந்த பிறகு நீ ஜானை திருமணம் செய்து கொள்'' என்றான்.

""ஐயோ அவர் உங்கள் எதிரி ஆயிற்றே?'' என்றாள் ரீட்டா.

""ஆமாம். இத்தனை ஆண்டுகள் நான் பட்ட அவஸ்தைகளை அவனும் படட்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன்'' என்றான் வில்லியம் தெளிவாக.

இம்போர்ட்டட் சரக்கு!: இதுவும் அப்படித்தான்!

மேரி சாவகாசமாக ஆம்லெட் போட்டுக் கொண்டிருந்தாள். சரேலென உள்ள நுழைந்தான் ஜிம். ""பெப்பர் போடு... பெப்பர் பெப்பர்'' என்றான் பதட்டமாக. மேரி பெப்பர் போட்டாள்.

""உப்பு... உப்பு போடு... சீக்கிரம்'' என்றான் மீண்டும் பதட்டமாக. அவள் உப்பைத் தூவிவிட்டுப் பார்த்தாள்.

""திருப்பிப் போடு... ஐயோ திருப்பிப் போடு'' என்றான் அவசரமாக. அவள் திருப்பிப் போடுவதற்குள் ""என்ன ஆச்சு உனக்கு. சீக்கிரமாகத் திருப்பிப் போடு'' என்றான்.

""எண்ணெய் ஊற்றவில்லையே... அடச்சே... மறந்துவிட்டாயா?'' என்றான் ஆவேசமாக.

மேரிக்கு அதற்கு மேல் தாளவில்லை. ""உங்களுக்கு என்ன ஆச்சு என்று புரியவில்லை. எதற்காக இப்படிப் பதட்டப்படுகிறீர்கள். ஒரு ஆம்லெட் போடுவதற்குக் கூட எனக்குத் தெரியாதா?'' என்றாள்.

""எனக்கு மட்டும் கார் ஓட்டுவதற்குத் தெரியாதா? நான் கார் ஓட்டும்போது இப்படித்தானே நீயும் கூப்பாடு போடுகிறாய்?'' என்றான் ஜிம்.

இம்போர்ட்டட் சரக்கு:1,2

கனவு!


அன்று வாலன்டைன்ஸ் டே. பரபரப்பாகக் கண் விழித்தாள் ஸ்டெல்லா. தன் காதல் கணவன் மார்ட்டினை உசுப்பி எழுப்பி, ""காதலர் தினத்துக்கு நீங்கள் எனக்கு வைர நெக்லஸ் பரிசளிப்பதாகக் கனவு கண்டேன். இந்தக் கனவுக்கு என்ன அர்த்தம்'' என்றாள் பரவசத்தோடு.

மார்ட்டின் ""சாயங்காலம் சொல்கிறேன்'' என்றான்.

மாலை வீடு திரும்பும்போது மார்ட்டினின் கையில் அழகிய சிறிய பார்சல். பூரித்துப் போனாள், ஸ்டெல்லா. ""காலையில் கேட்டாயே'' என்பதற்குள் அவசர, அவசரமாக வாங்கிப் பிரித்துப் பார்த்தாள்.

உள்ளே "கனவுகளும் அதற்கான பலன்களும்' என்ற புத்தகம் இருந்தது.



இம்போர்ட்டட் சரக்கு: கெட்ட செய்தி!

டாக்டரிடம் ஓடோடி வந்தான் சில்வெஸ்டர். ""சார், என் மெடிக்கல் ரிப்போர்ட் என்ன சொல்கிறது?''

""ஒரு கெட்ட செய்தியும் ஒரு ரொம்ப கெட்ட செய்தியும் இருக்கிறது'' என்றார் டாக்டர்.

""முதலில் கெட்ட செய்தியைச் சொல்லுங்கள்''

""இன்னும் நீங்கள் 24 மணிநேரம்தான் உயிர்வாழ்வீர்கள் என்கிறது மெடிக்கல் ரிப்போர்ட்''

""ஐயோ... அப்படியானால் ரொம்ப கெட்ட செய்தி என்ன?''

""இதைச் சொல்வதற்காக நான் உங்களை நேற்றிலிருந்து தேடிக் கொண்டிருக்கிறேன்'' என்றார் டாக்டர்.

அலசல்: இதுதான்டா படம்!

கடந்த வார தினசரிகளில் இப்படியான சில விளம்பரங்களைப் பார்த்திருக்கலாம்.

"மிரட்டும் திகில்', "எரிமலைகள்', "மீளமுடியாத மிரட்டல் உலகம்', "அமேசான் காட்டு அழகி', "ஹாரி பாட்டரும் ஃபீனிக்ஸ் கட்டளையும்...' இவை எல்லாம் தமிழ் சாயம் பூசப்பட்ட ஆங்கிலப் படங்களின் தலைப்புகள்.

ஒரிஜினல் ஆங்கிலப்படத்தின் தலைப்புகளுக்கும் இவற்றுக்கும் கிஞ்சித்தும் சம்பந்தமிருப்பதில்லை. உதாரணத்துக்கு "எரிமலைகள்' படத்தின் ஆங்கிலத் தலைப்பு ஊஹய்ற்ஹள்ற்ண்ஸ்ரீ ச்ர்ன்ழ். "அமேசான் காட்டு அழகி'க்கோ ஆங்கிலத் தலைப்பு அச்ழ்ண்ஸ்ரீஹய் ற்ட்ழ்ண்ப்ப்ள் என்று போட்டிருக்கிறார்கள். அமேசான் எங்கே இருக்கிறது, ஆப்ரிக்கா எங்கிருக்கிறது என்ற பூகோளக் குழப்பமெல்லாம் கூடவே கூடாது.



இராம. நாராயணன்


தலைப்புதான் இப்படி என்றால் படத்தில் இடம் பெறும் வசனங்கள் அதைவிட அதிர வைக்கின்றன. ஒரு சீனப் படத்தின் தமிழ் வடிவத்தில் ""இன்ன மாரீ... கண்டுக்காம போறீயே... சும்மா ஒரு தபா வந்துட்டுப் போப்பா'' என்று வசனம். கேரக்டர்களின் பெயர்களையும் தமிழ்ப்படுத்தி, அவர்களின் பேச்சையும் மெட்ராஸ் வட்டார வழக்குக்கு மாற்றி அமர்க்களம் பண்ணயிருந்தார்கள்.

""அசல் தமிழ்ப்படம் பார்க்கிற மாதிரி இருக்கில்ல?'' என்று சிலாகிப்பவர்களும் இருக்கிறார்கள். ""இவ்வளவு பிரம்மாண்டமான சண்டைக் காட்சியையெல்லாம் தமிழில் யாரும் எடுக்கப் போவதில்லை. நடிகர்கள்தான் நமக்குத் தெரியாத ஆசாமிகளாக இருக்கிறார்கள். அவர்கள் பேசுகிற தமிழாவது நம்ம ஸ்டைலில் இருப்பதால்தான் தமிழ்ப் படத்தைப் பார்த்து ரசிப்பதுபோல் இப்படங்களைப் பார்த்து ரசித்துப் பார்க்க முடிகிறது'' என்கிறார் சண்டைப் படங்களாகத் தேடிப் பார்க்கும் ரசிகர் ஒருவர்.

இவருடைய கருத்தை ஆமோதிப்பதுபோல இருக்கிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம. நாராயணனின் குரலும். ""இப்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் ஆங்கிலப் படங்களையும் தமிழ்ப்படங்கள் அளவுக்கு ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்ய முடிகிறது. ஆங்கிலப் படங்களை நேரடியாக மொழி மாற்றம் செய்தால் இந்த அளவுக்கு ரிலீஸ் செய்ய முடியாது. ஒரு சில பிரிண்டுகள் மட்டும் எடுத்து ஒவ்வொரு நகரத்திலும் ரிலீஸ் செய்வோம். இப்போது 50, 60 பிரிண்டுகள் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய முடிகிறது. சுமாரான தமிழ்ப் படத்தைவிட இவை அதிக அளவுக்கு லாபம் ஈட்டுகின்றன.







ஆங்கிலப் படத்தை ஆங்கிலத்திலேயே ரிலீஸ் செய்யும்போது அவை சென்னை, போன்ற பெரு நகரங்களில் மட்டும்தான் ரசிக்கப்படுகிறது. ஆனால் இவற்றையோ குக்கிராமங்களில்கூட ரசிக்கிறார்கள். அப்படி ரசிக்கப்படுவதற்குக் காரணம், மாடுலேஷன். அதைப் பலரும் ரசிக்கும் வண்ணம் கலோக்கியலாக செய்வது பலருக்கும் சுலபமாகப் புரிவதாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது. இங்கு சென்னையிலும் மும்பையிலும் இப்படி டப்பிங் செய்வதற்கான நிறுவனங்கள் செயல்படுகின்றன'' என்கிறார் அவர்.

மொழி மாற்றம் செய்யும் வசனகர்த்தாவாக இருக்கும் கவிஞர் பிறைசூடன், ""மொழி மாற்று படம் என்பது, அவர்களின் வசனத்தை நம் மொழியில் மாற்றுவதுதான். சிலர் ஆங்கில படத்தின் ஹீரோ "நான் ஒரு தடவை சொன்னா ஐநூறு தடவை சொன்ன மாதிரி' என்றெல்லாம் வசனம் எழுதுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அதில் எனக்கு உடன்பாடில்லை. நான் வசனம் எழுதும் படங்களுக்கு ஒரிஜினல் வசனத்தை வாங்கி அதை திரையில் அவர்களின் உதட்டசைவுக்கு ஏற்ப வசனங்களை தமிழில் எழுதுகிறேன்'' என்கிறார்.






நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படங்களின் இந்திய உரிமைகளை வாங்கி விநியோகித்தவரும் பிரபல பட அதிபருமான ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் கேட்ட போது,""நான் ஆங்கிலப் படங்களைத் தமிழில் டப்பிங் செய்வதில்லை. அது படத்தின் ஜீவனையே குலைத்துவிடும். நல்ல படத்துக்கு மொழி ஒரு தடையே இல்லை. பல நல்ல படங்கள் இங்கு பல நாட்கள் ஓடியுள்ளன. "பென்ஹெர்', "டென் கமான்மென்ட்ஸ்', "சாம்ஸன் அண்ட் டிலைலா', "எண்டர் தி ட்ராகன்', ஜாக்கிசான் படங்கள் போன்றவை ஆங்கிலத்திலேயே சக்கை போடு போட்டன. ஆங்கிலத்தில் "டைட்டானிக்' படம் ஏவிஎம். ராஜேஸ்வரி தியேட்டரில் 7 லட்ச ரூபாய் ஷேர் கலெக்ட் செய்தது. அது ரெக்கார்ட். இப்படி தமிழில் டப் செய்வதற்கு விருப்பமில்லாததாலேயே இப்போது ஆங்கிலப் படங்களை விநியோகிப்பதை நிறுத்திவிட்டேன்.

எம்.ஜி.ஆரோ, சிவாஜியோ பேசிய வசனத்தை சீனாவில் ஒருவன் சியாங்கோ பியாங்கோ என்று அவனுடைய மாடுலேஷனில் அடித்துவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் நம்மால் தாங்கிக் கொள்ள முடியுமா? தமிழிலும் தெலுங்கிலும் இந்தியிலும்தான் இப்படி மொழி மாற்றம் செய்கிறார்கள். மற்ற பிராந்தியங்களில் இப்படிச் செய்வதில்லை. இதனால் தரமான படங்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் குறைந்து கொண்டு வருகிறது'' என்றார் அவர்.

டப்பிங் படங்கள் "டப்'புக்காக எடுக்கும் படங்களாக இல்லாமல் இருந்தால் சரிதான்.

தமிழ்மகன்

சில்லுன்னு ஒரு 'வெயில்'!






பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் படவிழாவில் திரையிடப்பட்டிருக்கிறது "வெயில்' படம். "சில்' தேசத்தில் "சூடான' படத்தைத் திரையிட்டுவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் நாயகர்களில் ஒருவரான பசுபதியும் விழாவுக்குச் சென்றுவந்தவர்களில் ஒருவர். "தூள்'- "விருமாண்டி' படங்களில் முரட்டுத்தனமான வில்லன், "மஜா'- "மும்பை எக்ஸ்பிரஸ்' படங்களில் அப்பாவித்தனமான காமெடியன், "ஈ' படத்தில்

சமூகப் பொறுப்புள்ள தீவிரவாதி என்று

குறுகிய காலத்தில் பன்முகம் காட்டியவர் பசுபதி. "வெயில்' படத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் வாழ்நாள் முழுதும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்ட மனிதனாக மிகச் சிறப்பாகத் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்தச் சிரத்தைதான் அவரை கேன்ஸ் விழாவரை இட்டுச் சென்றது

என்றால் மிகையில்லை. ஒரு கத்திரி வெயில் பொழுதில் அவரைச் சந்தித்தோம்.

படவிழாவுக்குச் சென்று வந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்?

பிரான்ஸில் உள்ள ஒரு சின்ன நகரம்தான் கேன்ஸ். சினிமாவுக்கான விருது என்றால் ஆஸ்கர் விருதுதான் முக்கியமானது என்று மக்கள் நினைக்கிறார்கள். அது ஹாலிவுட்டில் தயாராகும் படங்களுக்கான விருது. ஆனால் கேன்ஸ் படவிழா உலகப் படங்களுக்கான கெüரவம். இது அறுபதாவது ஆண்டு விழா. நாம் சுதந்திரம் அடைந்த ஆண்டில் இருந்து அந்த படவிழாவும் ஆரம்பமானது. இரு நாடுகளுக்குமான 60-ம் ஆண்டு விழாவாக இந்தியப் படங்களின் திரையீடு கொண்டாடப்பட்டது. அறுபது ஆண்டுகளில் முதன் முதலாகத் திரையிடப்பட்ட தமிழ்ப் படம் என்ற பெருமை "வெயிலு'க்குக் கிடைத்தது.

இந்தியாவில் இருந்து மொத்தம் எத்தனை படங்கள் இந்த ஆண்டு கலந்து கொண்டன?

மொத்தம் 8 படங்கள் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருந்தன. ஒரு மலையாளப் படம், ஒரு வங்காளம், 3 இந்தி, ஒரு தமிழ், ஒரு ஆங்கில மொழிப்படம், இது தவிர இன்னொரு படமும் திரையிடப்பட்டது. எனக்குச் சரியாக நினைவில்லை. மணிரத்னத்தின் "குரு' படம் இந்தி மொழியில் திரையிடப்பட்டது. "வெயிலு'க்காக நான், ஷங்கர், டைரக்டர் வசந்தபாலன் ஆகியோர் கலந்து கொண்டோம். பிரகாஷ்ராஜ் அவருடைய படத்தின் புரமோஷன் பணிகளுக்காக வந்திருந்தார். "குரு'வுக்காக மணிரத்னம் வந்திருந்தார். மற்றும் பிஜு, ரித்து பர்னேஷ் போன்றவர்கள் வந்திருந்தனர்.




சர்வதேச படங்கள் நிறைய பார்த்திருப்பீர்கள். நம்முடைய படங்களை அவற்றோடு ஒப்பிட முடிகிறதா?

சர்வதேச படங்களோடு ஒப்பிடும்போது நம்முடைய படங்கள் சவால்விடும்படியாகத்தான் இருக்கின்றன. நான் சொல்வது தொழில்நுட்பத் துறையில். இந்தப் படவிழாவுக்கு வந்த 8 படங்களில் 7 படங்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியாற்றிய படங்கள்தான். படத்தின் கதைகளை நாம் கமர்ஷியலாக இருக்க வேண்டும் என்று பார்க்கிறோம். இது போன்ற படவிழாக்களுக்காகத் தயாரிக்கப்பட்டால் நாம் இன்னும் சிறப்பாகவே படங்களை உருவாக்க முடியும்.

வெயிலுக்குப் பிறகு படங்களைத் தேர்வு செய்வதில் அதீத கவனம் செலுத்துகிறீர்கள்... அடுத்து நடிக்கும் படத்தைப் பற்றி அறிவிப்பு வரவில்லையே?

"மும்பை எக்ஸ்பிரஸ்' படத்துக்குப் பிறகே நான் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்துவிட்டேன். "மஜா', "ஈ', "வெயில்' மூன்று படங்கள்தான் நடித்தேன்.

இனிமேல் தேர்வு செய்யப்படும் வேடங்கள் ஹீரோ, அல்லது ஹீரோவுக்கு நிகரான வேடமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

அப்படியில்லை. வெயிலுக்குப் பிறகு 16 பேர் கதாநாயக வேடத்துக்குக் கேட்டார்கள். நான் எதையுமே சம்மதிக்கவில்லை. நல்ல ரோல்தான் தேவை, கதாநாயக அந்தஸ்து இல்லை. என் கதாபாத்திரத்தைக் கேட்டு முதலில் நான் இன்ஸ்பயர் ஆனால்தான் மக்கள் இன்ஸ்பயர் ஆவார்கள். அதற்காகத்தான் காத்திருக்கிறேன்.

வேறு மொழிப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறீர்களா?

சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்தேன். ஆனால் தமிழ்தான் எனக்கு வசதியாக இருக்கிறது. வேறு மொழிகளில் எனக்காக மற்றவர்கள் குரல் கொடுப்பதும் எனக்குச் சரிபட்டு வரவில்லை.




தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து சினிமாவுக்கு வந்தது உங்களுடைய பலம். சினிமாவுக்கும் நாடகத்துக்கும் நீங்கள் உணரும் வித்தியாசம்?

நடிப்பு எல்லா இடத்திலும் ஒன்றுதான். சினிமாவில் மிஷினுக்கு முன்னால் நடிக்கிறோம். நாடகத்தில் மக்களுக்கு முன்னால் நடிக்கிறோம். சினிமாவில் டேக் வாங்கலாம். மக்களுக்கு முன்னால் ரெண்டாவது டேக் வாங்க முடியாது. மற்றபடி நடிப்புக்கு எடுத்துக் கொள்ளும் ஈடுபாடு என்னைப் பொறுத்தவரை இரண்டுக்கும் ஒன்றுதான்.

படவிழாவில் வெயிலுக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது?

அது ஒரு சுவாரஸ்யமான கதை. தமிழக அல்லது இந்திய சூழல் பற்றித் தெரியாத பன்னாட்டு திரைக்கலைஞர்களின் கூட்டம் அது. படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் படத்தால் ஈர்க்கப்பட்டுப் போனார்கள். படம் ஓடிக் கொண்டிருக்கும்போது பலர் கண்ணீரை கர்ச்சீப்பில் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

படம் முடிந்ததும் பலர் அப்படியே சிலையாக இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஒரு பெண்மணி கண்ணீரோடு வந்து கையைப்பிடித்துக் கொண்டு, "இப்படியெல்லாம் இருக்கிறதா உங்கள் நாட்டில்' என்று பரிதாபம் பொங்க கேட்டார். "எங்கள் நாடு கலவையான பிரச்சினைகள் கொண்ட நாடு. அதில் இப்படியான பிரச்சினைகளும் ஒன்று' என்று விளக்கினேன். பிரச்சினைகள் வேறாக இருக்கலாம். ஆனால் அவற்றை உள்வாங்கிக் கொள்ளும் மனதின் அலைவரிசை உலகம் முழுதும் ஒன்றுதானே?

-தமிழ்மகன்

LinkWithin

Blog Widget by LinkWithin