ஞாயிறு, மார்ச் 04, 2012

நிழலின் தனிமை


தேவிபாரதியின் நிழலின் தனிமை மிக அருமையான வாசிப்பு அனுபவத்தைத் தந்த நாவல்.
கதை என்ன என்று கேட்பவர்களுக்கு எளிமையான ஒரு பதில் உண்டு.
முப்பது ஆண்டுகளுக்கு முன் தன் சகோதரியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்படுத்திய ‘பெரிய மனுஷனை’ சந்திக்கிறான் அவளுடைய சகோதரன். அவன் வீட்டிலேயே வேலைபார்க்கும் வாய்ப்பு கிடைத்து அவனைத் தீர்த்துக்கட்டுவதற்கான சந்தர்ப்பங்களும் கிடைக்கின்றன.
அவனைக் கொல்வதற்காக தினம் தினம் அவன் எடுக்கும் பிரயத்தனங்கள் நாவலுக்குத் தரும் விறுவிறுப்பு அலாதியானது. அந்த விறுவிறுப்பைக் கடைசி பக்கம் வரைக்கும் கொண்டுவரும் அந்த மொழி நடை..
ஜான் பால்வின்னின் ‘கடல்’ நாவலும் மார்க்வெஸ்ஸின் ‘ஏற்கெனவே சொல்லப்பட்ட சாவின் சரித்திரமும்’ தஸ்தயேவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ போன்ற நாவல்களைப் படித்தபோது நான் அடைந்த பரவசம் இந்த நாவலின் சில இடங்களில் கிடைத்தது. காலத்தை முன்னும் பின்னும் ஓட்டிப்பார்த்து தவிப்பை விவரிக்கும் விதம் மனத்திரையில் திகில் பரப்புகிறது.
சகோதரியை துன்புறுத்தியவனின் மகளை பாலியில்ரீதியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நாவலின் நாயகன் ஒரு குற்றச்சங்கிலியைத் தொடங்கி வைக்கிறான். அது சகோதரிக்கு நேர்ந்த துன்பத்துக்குப் பிராயசித்தமாக இல்லாமல் குற்றத்துக்குப் பதிலாக இன்னொரு குற்றத்தை வைப்பதாக இருக்கிறது, ஆனால் பெரும்பான்மையினரின் பழி வாங்கல் அப்படித்தான் அமைந்து தொடர்கதையாக மாறிவிடுகிறது. ஆறப்போடப்பட்ட வன்மம், பழிவாங்கும் எண்ணத்தில் ஏற்படுத்தும் தடுமாற்றம்... காலம் நடத்தும் பாடம்.
பழைய துணி விற்பவன், அப்பாவிக் கணவன் என்ற சில பிரயோகங்கள் மனதில் ஏற்படுத்தும் சித்திரம் நீண்ட வர்ணனைகளைவிட வலிமையானவை.

2011&ல் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நாவல் இது.

LinkWithin

Blog Widget by LinkWithin