வியாழன், நவம்பர் 20, 2008

பிரபஞ்சக் கைகுட்டை

"வான் விஞ்ஞானத்தில் தொடர்ந்து மூன்றாவது தலைமுறையாக ஆய்வு செய்து வரும் குடும்பத்தின் பிரதிநிதி என்பதற்காகவே உங்கள் பெயரை நோபல் பரிசுக்குழுவுக்குச் சிபாரிசு செய்யலாம்'' என்று விக்டர் பால் சொன்னான்.



கிண்டல் செய்கிறானா? புகழ்ந்தானா? என்று சுதாரிப்பதற்குள் சுற்றியிருந்தவர்கள் பெருமிதமாகப் புகழ்ந்து கையில் இருந்த கோப்பைகளை உயர்த்தி "ரகுநாத்தின் ஆய்வு வெற்றி பெற'' என்று சியர்ஸ் சொல்லிக் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
விக்டர் பால் மரபியல் விஞ்ஞானத்தில் செயற்கை டி.என்.ஏ.வை இயற்கை டி.என்.ஏ.விடமிருந்து வேறுபடுத்தும் கூறுகளில் முக்கியமான ஆய்வுகள் செய்தவன். அதைக் கொஞ்சம் தீவிரப்படுத்தினால் ஒருவேளை இயற்கையாகவே செயற்கை மனிதனைத் தயாரிக்க முடியும். கொஞ்சம் மிச்சமிருக்கும் அந்த ஆராச்சியின் எல்லையை எட்டப் போகும் திமிர் விக்டரிடம் இருப்பதாக விஞ்ஞானிகள் பரவலாக அபிப்ராயப்பட்டார்கள்.


ரகுநாத்தின் ஆராய்ச்சி என்ன என்பதற்கு முன்னால் ரகுநாத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லது. அவருக்கு 54 வயது. திருமணம் பற்றியெல்லாம் தம் வாழ்வின் பெரும்பகுதி வரை கவனமற்று இருந்தார். நாற்பத்தி சொச்சம் வயதில் பிடிவாதமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அநியாயத்துக்கு ஒல்லி. விஞ்ஞானக் கூட்டங்களில் ஐன்ஸ்டைன் மாதிரி யாராவது வேகமாக அவரை நோக்கிப் புகைவிட்டால் ஒடிந்து போகச் சாத்தியம் உண்டு. ஆனால் ஒல்லிக்கும் அவரது வைராக்கியத்துக்கும் முடிச்சுப் போட முடியாது. சாப்பிடுகிற இரண்டு துண்டு ரொட்டி அந்த வைராக்கியத்துக்கே செலவாகிவிடும்.

தான் பணிபுரியும் இந்திய வானியல் துறையில் அவர் செய்து கொண்டிருக்கும் ஆய்வு, அவர் தனிப்பட்ட முறையில் செய்து கொண்டிருக்கும் ஆய்வின் துணையம்சம்தான். ஆராய்ச்சியின் பெரும் பகுதியை மிகவும் ரகசியமாக வைத்திருப்பதற்குக் காரணமே அது பூரணமான பின்பே அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே.

ரகுநாத்தின் தாத்தா காலத்தில் இருந்தே வான் விஞ்ஞானத்தைத்தான் குறிக்கோள் போல பயின்றார்கள்.

ரகுநாத் ஐந்து வயதாக இருக்கும்போது நட்சத்திரங்களைக் காட்டி நிறைய தகவல்களைச் சொல்லியிருக்கிறார். நிலாவில் ஆயா வடை சுடும் கதையைக் கேட்க வேண்டிய வயதில் "உனக்கு ஆண்ட்ரமீடா பத்தி சொல்றேன் கேளுடா'' என பேரனுக்குப் புரியவில்லை என்றாலும் ஆவேசமாகச் சொல்ல ஆரம்பித்துவிடுவார் ரகுநாத்தின் தாத்தா.

ரகுநாத்தின் அப்பா கிருஷ்ணகுமார் ஆன்ட்டிகிராவிட்டியில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகள் செய்து ஆனால் சாதனை செய்ய முடியாமல் போனவர். வேற்றுக் கிரகம் அவருடைய லட்சியம். பிக் பாங் தியரியில் நிறையவாதங்கள் செய்து விஞ்ஞானக் கழகங்களிடம் அதிருப்தி சம்பாதித்தவர்.

"படித்து டாக்டராகப் போகிறாயா? வக்கீல் ஆகப் போகிறாயா?'' என்று குழந்தைகளிடம் கேட்கப்படுகிற சம்பிரதாயமான கேள்விக்கு, "அஸ்ட்ரோ பிஸிகிஸ்ட்'' என்று பதில் சொன்ன போது ரகுநாத்துக்கு வயது எட்டு.

ரகுநாத்தின் கனவுகள் ரகசியமானவே. ஆன்டிகிராவிட்டிக்கான கண்டுபிடிப்புகளோடு, பிளாக் ஹோல் சித்தாந்த்தையும் இணைத்துவிட்டால் மனிதன் ஒளி வேகத்தில் பிரயாணிக்க முடியும் எத்தனை ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்தையும் சுலபத்தில் அடைந்துவிட முடியும் என்பது அவருடைய ஆராய்ச்சியின் அடிப்படை.

பதினெட்டாம் நூற்றாண்டின் பெர்பெச்சுவல் மோட்டார்ஸ் சித்தாந்தத்தோடு இவருடைய ஆய்வை ஒப்பிட்டு சில அறிவியல் சஞ்சிகைகள் கேலி செய்தபோதும் தன் ஆராய்ச்சியின் சில சிக்கலான கட்டங்களை அவர் தாண்டிவிட்டது பலருக்குத் தெரியாது.


உடல் திராணிக்கான இரண்டு மாத்திரைகளைக் கொண்டு வந்து வைத்துவிட்டு ரகுநாத்தின் மனைவி "ராஜிக்கு ரெண்டு நாளாக உடம்பு சரியில்லை. ராமநாதன்கிட்ட கூட்டிட்டுப் போனால், உங்கள் பையன் கெமிக்கல்ஸ்லதான் உயிர் வாழ்றான். கொஞ்சம்கூட சத்தே இல்லை' என்கிறார்'' என வருத்தப்பட்டாள்.

"சிந்தடிக்கை ஆர்கனிக்கா மாத்தறதா சொல்றானே அவனைத்தான் கேட்கணும்'' என்று விக்டர் பாலைச் சமயம் பார்த்துப் பழி தீர்த்துவிட்டது மாதிரி பதில் சொன்னார் ரகுநாத்.

குழப்பமாக அங்கிருந்து புறப்பட்டு, "அறிவியல்லயே பேசறீங்க'' என்றாள்.

அவள் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ளும் அவகாசம் இல்லாமல் தன் குச்சி போன்ற கைகளினால் கணிப்பொறியின் தட்டச்சுக்கு நோகாமல் ஏதோ தட்ட ஆரம்பித்தார். "ரிச்சர்ட் ஃபெய்ன் மென் இருந்திருக்கணும் இப்ப. அவன்தான் லாயக்கு'' என்றார்.

அவர் சொன்னதைக் கேட்க அவள் அங்கே இல்லை.

உதகையில் இப்படி ஒரு ஆய்வுக்கூடம் இருப்பது பலருக்கு} மன்னிக்க} யாருக்கும் தெரியாது. அது ரகுநாத் குடும்பத்தாரின் தனிப்பட்ட சொத்து. தலைமுறை தலைமுறையாக தோற்று வருவதாகக் கொண்டாலும் மெல்லிய வெற்றியின் சேகரிப்புக் கூடமாக அதைப் பராமரித்து வந்தார் ரகுநாத்.

"சும்மாதானே இருக்கே? செத்த வாயேன்'' மாதிரிதான் பத்ரியை அங்கு அழைத்து வந்திருந்தார் ரகுநாத். வந்த இரண்டு நாள்களா ரகுநாத் பெரிய ஜெனரேட்டர் மாதிரியான வஸ்துவுடன் கம்ப்யூட்டர் இணைப்புகள் கொடுப்பதும் திடீரென்று ஞாபகம் வந்தவராகப் பேப்பரில் எதையோ கிறுக்குவதுமாக இருந்தார். இந்த இரண்டு நாள்களில் ஒரு பாக்கெட் பிஸ்கெட்டைக் கூட அவர் முழுதாகச் சாப்பிடவில்லை. அந்த வீட்டில் இருந்த ஒரே ஒரு வேலைக்காரன் மணியடித்ததும் வந்து. பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து வைப்பது தண்ணீர் கொண்டு வந்து வைப்பது மாதிரியான காரியங்களை உடம்பு நோகாமல் முடித்துவிட்டுப் போனான்.

பத்ரி அவனை அழைத்து, "உனக்கும் பிஸ்கட்தானா?'' என்றான்.

"நானே தனியா சமைச்சுக்கிறேங்க'' "நல்லவேளையா' என்பதை மறைபொருளாக உணர்த்தினான்.

பத்ரி, முந்தைய சந்தர்ப்பங்களில் அங்கே கொண்டு வரப்பட்டிருந்த பத்திரிகைகளை ஒரு அட்சரம் விடாமல் படித்து வெறுப்பாகிப் போய், "என் மாமா பையனுக்குத் திங்கக் கிழம கல்யாணம். போயிட்டு இன்னொரு சமயம் வர்றேனே'' என்று நழுவப் பார்த்தான்.

ரகுநாத் பதறாமல், "இதோ முடிந்துவிட்டது'' என்று அருகில் வந்து அமர்ந்தான்.

"இன்னும் சில நிமிடங்களில் நான் விண்வெளியில் பிரயாணிக்கப் போகிறேன். நான் இந்த அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டதும் நான் சொல்லிவிட்டுப் போகிற சில பொத்தான்களை இந்தக் கீ போர்டில் அழுத்தினால் போதும்'' என்று பெரிய அளவு குளிர்பதனப் பெட்டி போல இருந்த அறையைக் காட்டினார்.

பத்ரி அதிர்ச்சியில் உறைந்துபோய், இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என மனதுக்குள் பின் வாங்கினான்."கல்யாணம் முடிஞ்சு..'' என்று ஏதோ ஆரம்பித்து, "நல்லா யோசிச்சு முடிவு செய் ரகு'' என்றான்.

"பத்ரி, நான் டைமிங் எல்லாம் செட் பண்ணிட்டேன். உடனே நான் சொல்வதைப் புரிந்து கொள்ள தயாராகு'' ரகு ஒருவித தீர்மானத்தோடு சொன்னார்.

ரகு நோய்வாய்பட்ட கிழட்டு வில்லன் மாதிரி தோன்றினான் பத்ரிக்கு.

"இதோ இருக்கே இந்த அறைதான் ஆன்ட்டி கிராவிட்டி சேம்பர். அதுக்குள்ள நான் போனதும், இந்த கீ போர்ட்ல ஏ எழுத்தை அழுத்து. அறைக் கதவெல்லாம் சுத்தமா மூடியாச்சு. பயணத்துக்குத் தயாரா... ஆம்... இல்லைனு மானிட்டர்ல வாசகம் தெரியும். அப்போ நீ ஒய் என்ற எழுத்தை அழுத்தினா போதும். இதே மாதிரி அடிக்கடி ஆம், இல்லை வரும்போதெல்லாம் நீ ஒய் எழுத்தை அழுத்தினா போதும். அதற்கான புரோகிராம் எல்லாம் நான் பண்ணி வெச்சிருக்கேன். கொஞ்ச நேரத்தில நான் திரும்பி வந்துடுவேன். பயப்பட்றதுக்கு ஒண்ணுமேயில்லை...''

"ரகு, நல்லா யோசிச்சுக்க. வேணும்னா அந்த வேலைக்காரனை அனுப்பி சோதனை பண்ணு. நீயெதுக்கு?''

"சொன்னா நம்ப மாட்டே. அவன் போன வாரம் போய்ட்டு வந்தவன்தான். "எல்லா நட்சத்திரத்தையும் பாத்துட்டேன் சார். சூப்பர் சார். இன்னொரு ரவுண்டு போய்ட்டு வந்துடட்டுமா'ன்னு கேட்கிறான். அவனுக்கு அவ்வலவு ஆசை இருக்கும்போது எனக்கு எவ்வளவு ஆசையிருக்கும்? என் மேல அக்கறையிருந்தா நீ வேணா போய்ட்டு வா''

பத்ரி எச்சில் விழுங்கினான்.

"பயப்படாதே. அவனுக்கு ஒய் அழுத்தறதுக்குத் தெரிஞ்சிருந்தா உன் உபகாரம் எதிர்பார்த்திருக்க மாட்டேன். சரி பேச நேரமில்லை. நான் போய்ட்டு வரேன். தயார்தானே?'' என்றார் ரகுநாத்.

"எந்தப் பக்கமா போவே?'' எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தான் பத்ரி.

"உன் ஒருவனுக்காவது கொஞ்சம் இதைத் தெரிந்து கொள்வதில் விருப்பமிருப்பதில் சந்தோஷம்.''

"எல்லா பொருளுக்கும் எதிர் பொருள் இருப்பதாகக் கருதிக் கொண்டு பெüதீகத்தில் சில யூகங்களை விவரிப்பதைக் கேள்விப்பட்டிருப்பாய். அதாவது "பொருள் அற்ற பொருள்' கணிதத்தில் சொல்ல வேண்டுமானால் தலைகீழி. ஈர்ப்பு சக்தியின் தலைகீழியே உருவாக்க முடிந்துவிட்டால் எந்தப் பொருளையும் எடையற்றதாக்கிவிட முடியும் கூடவே நாம் ஒளிவேகத்தில் பிரயாணிக்கிற வசதியும் கை கூடினால் பிரபஞ்சம் கைக்குட்டை அளவுதான்.

ஒளிவேகத்தில் பிரயாணிக்கக் கூடுதல் சக்திக்காக ஒரு பிளாக் ஹோலை காந்த அலை வரைபடத்தின் மூலம் கண்டுபிடித்தேன். பிளாக் ஹோல் என்பது நட்சத்தின் ஒரு நிலை.. தெரியுமில்லையா பத்ரி?''

பத்ரிக்கு அப்போது அவன் பெயரே மறந்து போயிருந்தது.

ரகுநாத் கவலைப்படாமல், "ஒளி உமிழ் திறனை இழந்தபின் நட்சத்திரங்கள் இந்த நிலையை அடைகின்றன. அப்போது அதன் ஆகர்ஷணம் பல கோடி மடங்கு அதிகரித்துவிடும். தன் சுற்றுப்பட்டில் உள்ள நட்சத்திரங்களைக்கூட அவை ஈர்த்துத் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்கின்றன. அத்தனையும் மிக அடர்த்தியான கோளமாக இருக்கும். அடர்த்தியென்றால் அப்படியொரு அடர்த்தி. ஒரு மயிரிழையளவு பிளாக் ஹோல் துகளை உன் மீது வைத்தால் நீ நசுங்கிப் போய்விடுவாய். அத்தனை அடர்த்தியாக இருக்கும். டாப்ளரின் இரண்டாம் அலைகள் பற்றிய விதியோ, ஹாப்பிளின் நட்சத்திரங்கள் பற்றிய கருதுகோள்களையோ நீ அறிந்திருந்தால் என் ஆராய்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்.
பரவாயில்லை அதெல்லாம் எதற்கு? ஒரு பிளாக் ஹோலைக் கண்டுபிடித்தேன். நான் கண்ட பிளாக் ஹோலின் விசேஷம் என்னவென்றால் அந்த பிளாக் ஹோலில் ஒரு மெகா துவாரம் இருப்பதுதான். எ பிளாக் ஹோல் வித் ஹோல் ஹா..ஹா.. அந்தத் துவாரத்தை நோக்கிப் பிரயாணிக்க முடிந்தால்?

நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. விருட்டென்று பாய்ந்து அந்த வேகத்தில் இந்தப் பிரபஞ்சத்தை வலம் வந்துவிடலாம்... சரி நேரமாகிவிட்டது. ஜெனரேட்டர் தயார் என்று சமிக்ஞை செய்கிறது பார்.''

ரகுநாத் அந்த அறையை நோக்கி நகர்ந்தார்.

பத்ரி தொடர்ந்து ஒய் என்ற எழுத்தை அழுத்திக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு ரகுநாத் அந்தக் குளிர்ப்பதன அறையில் இருந்து வெளியே வந்தார். அவர் முகத்தில் பிரமாதமான மகிழ்ச்சி ரேகைகள்.

தன் உதவியாளனிடம், "பத்ரியைச் சமாளிக்கிறதுக்குள்ள போதும் போதும் என்று ஆகிவிட்டது. உண்மையில் அவன் உட்கார்ந்து இருந்ததுதான் ஆன்ட்டிகிராவிட்டி சேம்பர். அவனைத்தான் இப்ப விண்வெளிக்கு அனுப்பியிருக்கேன். பத்ரி என்றாவது ஒரு நாள் திரும்பி வருவான். அன்றுதான் என் ஆராய்ச்சியின் மகிமை தெரியும். விக்டர்பால் அப்போது முகத்தை எங்கே வைத்துக் கொள்கிறான் பார்ப்போம்'' என்றார்.

பத்ரி இருந்த அறையை உதவியாளன் எட்டிப் பார்த்தான். அது யாருமற்று மெüனமாக இருந்தது. சொல்லப்போனால் அது அவனுக்கு அதிர்ச்சியாகக் கூட இல்லை.

உதவியாளன் தன் அறைக்குப் போய் சாக் பீஸ் எடுத்து ஏற்கெனவே இருந்த ஐந்து கோடுகளுக்குப் பக்கத்தில் ஆறாவதாக ஒரு கோடு போட்டான்.


தினமணி கதிர்- 1997

LinkWithin

Blog Widget by LinkWithin