சனி, செப்டம்பர் 13, 2008

காலபிம்பம்

இம்மாத உயிர் எழுத்து இதழில் வெளியான என் சிறுகதை


கொஞ்ச காலமாகத்தான் இப்படியெல்லாம். நான் காலமில்லாதவனாக மாறிவிட்டதாக ஒரு உணர்வு. காலமில்லாதவனுக்கு கொஞ்ச காலம் ஏது?

பைக்கில் சென்று கொண்டிருக்கும் போதுதான் முதன்முதலில் இத்தகைய உணர்வு ஏற்பட்டதாக ஞாபகம்.ரெட்ஹில்ஸிலிருந்து காரனோடைக்குப் போகும் வழியில் இப்படி ஏற்பட்டது. காரனோடையிலிருந்து ரெட்ஹில்ஸ் போகிறோமா, அல்லது ரெட்ஹில்ஸிலிருந்து காரனோடைக்குப் போய்க் கொண்டிருக்கிறோமா என்ற குழப்பம். சுமார் 35 ஆண்டுகளாகப் போய் வந்து கொண்டிருக்கிற ஒரு சாலையில் எனக்கு இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டது அசாதாரணமாகப்பட்டது.

வீட்டுக்கு வந்ததும் ஜானகிராமனைச் சந்தித்துச் சொன்னேன். ""ஞாயிற்றுக் கிழமை அடிச்சது தெளியலையா'' என்று அவன் அடித்தக் கிண்டலுக்கு நானும் சேர்ந்து சிரித்துவிட்டு மறந்துவிட்டேன்.

அடுத்து அதே அனுபவம். ஆனால் இந்த முறை திசைக் குழப்பத்தோடு நான் போய்க் கொண்டிருப்பது இன்றிலா, நேற்றிலா என்ற குழப்பம். எதிரில் வரும் லாரி, பஸ், சைக்கிள் காரன் எல்லோரையும் மலைத்துப் போய் பார்க்கிறேன். இவர்கள் எல்லாம் நேற்று மனிதர்களா, நாளை மனிதர்களா என்று அலை பாய்ந்தது மனம்.

இந்த முறை ஜானகிராமனிடம் சொல்வதற்குப் பயமாக இருந்தது. மனைவியிடம் சொன்னேன். "இந்த மாதிரி புக்கையெல்லாம் படிச்சா இப்படித்தான் உளறுவீங்க'' என்று "கேஸ் ஹிஸ்ட்ரி ஆஃப் சிக்மண்ட் பிராய்டை'க் காண்பித்தாள். அதில் லெஸ்பியன் பற்றியும் ஹோமோ செக்ஸ் பற்றியும்தான் நிறைய அலசியிருந்தார். அதற்கும் நேற்று மனிதர்களுக்கும் சம்பந்தமிருப்பதாகத் தெரியவில்லை.

சைக்யாட்ரிட்ரிஸ்ட் மீதிருந்த அவநம்பிக்கை காரணமாக மாற்று மார்க்கங்கள் குறித்தே யோசிக்க ஆரம்பித்தேன். "பெரிய பாளையம் பக்கத்தில் ஒரு மூனீஸ்வரன் கோவில் இருக்கிறது. தாயத்து மந்தரித்துக் கட்டினால் நான்கு வாரத்தில் எப்பேர் பட்ட பேயும் தலைதெறிக்க ஓடிடும்' என்றான் கருணாகரன். இந்த மாதிரி அதீத குழப்பங்களுக்கு யாரை அணுகுவது என்பதற்கே வழி தெரியாத நிலையை முதன் முறையாக உணர்ந்தேன். இத்தகைய மனப் பிம்பங்கள் இப்போதுதான் உலகத்தில் முதன் முறையாக ஏற்படுகிறதா? இல்லை எல்லா விஷயத்திலும் பின் தங்கியிருப்பதுபோல இந்தப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் இந்தியாவில் இன்னும் எட்டப்படவேயில்லையா? நான்தான் பலிகடாவா?

"அதெல்லாம் ஒன்றும் இல்லை. சரியாகத் தூக்கமில்லையென்றால் இப்படி ஆவது சகஜம்தான்'' என்று தேற்றினாள் அலுவலகத் தோழி. இதிலே சற்றே நியாயம் இருப்பதாக ஏற்று ஒரு வாரம் நகர்ந்தது.

இந்த முறை மேலும் வித்தியாசமான கால ஊர்வலம். என்னுடைய பொது மேலாளர் எங்களின் போட்டியாளர்கள் மேற் கொண்டுவரும் புதிய உத்திகள் பற்றியும் அதை எதிர் கொள்வது சம்பந்தமாகவும் பேச அழைத்திருந்தார்.
நீரேற்று மோட்டர் வகைகளில் சப் மெர்ஸிபள் மோட்டர்களுக்குத்தான் அதிக மவுசு ஏற்பட்டிருப்பதையும் விரைவில் அரை குதிரைத் திறன் மோட்டர்களும் உருவாக்குவது நல்லது என்றும் கூறிக் கொண்டிருந்தேன்.

"எப்படி சொல்கிறாய்?'' என்றார்.

"சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லார் வீட்டிலேயும் ஒரு ஆறு அங்குல போர் போட்டு நீர் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. சென்னையின் இட நெருக்கடி அப்படி.... அதனால்'' இப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதுதான் அந்த நிலைமை ஏற்பட்டது. என் பொது மேலாளர் எனக்கு ஐந்து வயது சிறுவனாகவும் 90 வயது கிழவராகவும் கணப் பொழுதில் மாறி மாறித் தோன்றினார்.

அவருடைய முன் வழுக்கையும் தொப்பையும் ப்ரெஞ்ச் பேட் தாடியும் ரேமண்ட் சூட்டும் சட்டென மறைந்து அரை நிஜார் போட்டு பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனாக அவரைப் பார்த்தேன். தொண்டு கிழமாக அப்பல்லோ ஹாஸ்பிடல் ஸ்ட்ரெச்சரில் இருப்பதாக இன்னொரு தரிசனம். இதென்ன விபரீதம் என்று தோன்றியது. அலுவலக ரிஸப்னனிஸ்ட் ஜட்டி அணிந்த குழந்தையாகவும் ஐம்பது வயது பெண்ணாகவும் 75 வயது மூதாட்டியாகவும் ஏடாகூடமாகத் தோன்றி மறைந்த போது எனக்கு ஏற்பட்டிருக்கும் அடுத்த சங்கடத்தைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

இது தூக்கக் குறைவினால் அல்ல.

நிலை கொள்ளாமல் தவித்தது மனசு. அஞ்சுவதா, மகிழ்வதா என்று தெரியவில்லை. யாரிடம் சொன்னாலும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். நாள்போக்கில் நானாகவே யாரிடமும் இதைப் பற்றிச் சொல்ல வேண்டாம் என்று தவிர்த்துவிட்டேன். சாலையில் நடக்கும் போது கரண்ட் பில் கட்டும்போது டி.வி. பார்க்கும்போது என்று எந்த சமயம் என்று இல்லாமல் நான் கால ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தேன்.

ஒரு நப்பாசைதான்... மேடவாக்கம் மனநோய் மருத்துவமனைக்குச் சென்று அவுட் பேஷண்ட் க்யூவில் நின்று டாக்டரைச் சந்தித்தேன். குடியை நிறுத்த, பதட்டம் குறைய, தூக்கமில்லாமல் தவிப்பதைத் தவிர்க்க என.. பைத்தியம் என்று ஓரங்கட்டுவதற்கு முந்தைய நிறைய பிரிவுகள் இருக்கத்தான் செய்தன.
டாக்டர் பொதுவாக ""என்ன செய்கிறது'' என்றார்.

"காலம் குழப்பமா இருக்கு.. உதாரணத்துக்கு''

"ஏம்பா டீ சொன்னனே'' என்றார் கதவுப்பக்கம் பார்த்து. "சொல்லுங்க''

அந்த அவகாசத்தில் வார்த்தைகளை இன்னும் கொஞ்சம் சரி செய்து "எனக்குக் கொஞ்ச நாளா விநோத பிரச்சினை சார். மூன்று காலங்களும் ஒரே நேரத்தில தெரியுது''

"மூன்று காலம்னா?''

"உதாரணத்துக்கு நீங்கள் குழந்தையில் இரண்டாவது படிக்கிற சிறுவனாக எப்படி இருந்தீர்கள் என்று தோன்றுகிறது. கொஞ்ச நேரத்தில் ரிடையர்ட் ஆகி பார்க்கில் வாக்கிங் போய்விட்டு ஓர் ஓரமாக உட்கார்ந்திருக்கிற முதியவராகத் தெரிகிறீர்கள். இதோ எதிரில் இப்போதிருக்கிறமாதிரியும் தெரிகிறீர்கள். குழந்தையின் புன்னகையும் முதியவரின் முகச் சுருக்கமும் ஒரே...''
எந்தவித சலனமும் காட்டாமல் ஏதோ எழுதினார். அதே நிலையில் "எவ்ளோ நாளா?'' என்று தெரிந்து கொண்டு "மூணாவது கவுண்டர்ல காட்டுங்க'' என்று ரசீது கொடுத்தார்.

"நீங்கள் சரியாக உள்வாங்கிக் கொண்டீர்களா? என்னை நிமிர்ந்துகூட பார்க்காமல் சீட்டு கொடுக்கறீர்களே?''

"இங்கு வருகிறவர்கள் எல்லாருக்கும் நமக்கு மட்டும் ஏதோ விபரீதமாக நடப்பதாக நினைக்கிறார்கள். நான் உங்களை மாதிரி ஒரு நாளைக்கு நூறு பேரை பார்க்கிறேன்''

"நிஜமாக என்னை மாதிரி நூறு பேர் இருக்கிறார்களா?... அது போதும் எனக்கு. எனக்கு மட்டும்தான் இப்படி இருக்கிறதென்று நினைத்து பயந்துவிட்டேன்.''

என்ன நினைத்தாரோ ""என்ன நடக்குது உங்களுக்கு முழுசாகச் சொல்லுங்கள்'' என்றார்.

"போன வாரம் கிருஷ்ண ஜெயந்தி. வீட்ல கட்டில்ல படுத்துகிட்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தேன். "கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்'னு ரேடியோவில பாட்டு. திடீரென்று கண்ணன் இறந்தக் காட்சி ஞாபகம் வந்தது. பாரதப் போரும் பகவத்கீதையும் உலகுக்குத் தெரிவித்த மகா உண்மைகளின் அசை போடலோடு கண்ணன் ஒரு வனத்தில் படுத்திருக்கிறார். கால்மேல் கால் போட்டு படுத்தபடி காலாட்டிக் கொண்டிருக்கிறார். அவருடைய கால் கட்டை விரலைப் பார்த்து வேடன் ஒருவன் பாம்பென்று நினைத்து அம்பெய்துகிறான். கண்ணன் எதிர்பார்த்திருந்த தனக்கான முடிவை ரசித்து புன்னகையுடன் கண்ணை மூடுகிறான். கண்ணன் இறந்து விட்டான் என்ற செய்தி அறிந்து மதுராவே கொந்தளிக்கிறது. கொன்ற வேடனை கொலை வெறியோடு துரத்துகிறது.....''

"கற்பனை உலகில் சஞ்சரிக்கிற இந்த மனநோய் நீங்கள் நினைக்கிற மாதிரி ரொம்ப புதுசானது இல்லை. டான் க்விக் ஸôட் படித்திருக்கிறீர்களா?''

"அவன் கதைக்கும் எனக்கும் முக்கிய வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறேன். நான் எந்த விஷயத்திலும் மூன்று காலங்களோடு ஊடாடுகிறேன்''

"ஈ.எஸ்.பி. சம்பந்தமாக ஏதாவது புத்தகம் படித்தீர்களா?''

"இல்லையே... எனக்கு அதில் நம்பிக்கையும் இல்லை''

"எல்லாவற்றையும் முன்கூட்டியே கணித்துவிடுவதாக ஏதாவது சம்பவம் நடந்திருக்கிறதா?''

"அதையெல்லாம் நான் கவனிக்கவில்லை. அது சோதிடம் பார்ப்பதுபோல ஆகிவிடும்.''

"எதிர்காலத்தை முன்கூட்டியே திறந்து பார்த்துவிடுவதில் மனிதனுக்கு ஒரு ஆசைதான். அது மாதிரி உங்களுக்கு ஏதாவது இருக்கலாம். நீங்கள் மூன்றாவது கவுண்டருக்குப் போய் மாத்திரை வாங்கிச் செல்லுங்கள். தேவைப்பட்டால் அடுத்த மாதம் வாருங்கள்''

டாக்டருக்கு அதற்கு மேல் பொறுமையில்லை. மூன்றாவது கவுண்டருக்குச் செல்லாமலேயே வெளியே வந்தேன். பெசன்ட் நகரில் ஆன்மீக ஞானி அஷ்வகோஷ் வந்திருப்பதாக அங்கு செல்லும் பஸ் ஒன்றிலேயே சின்னதாக போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். அவர் யாரென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்தப் போஸ்டரில் என்னைக் கவரும் அம்சம் ஒன்று இருந்தது. அவர் முக்காலமும் உணர்ந்தவர் என்று போட்டிருந்தது.
மாலை ஆறுமணிக்குத்தான் அவருடைய பிரசங்கம் என்றார்கள். நான் அவரைத் தனிமையில் சந்திக்க வேண்டும் என்றேன். "நீங்கள் "ஈஷா யோக சம்பூர்ணா' முடித்தவரா?'' என்றார்கள். அவர்கள் கேட்பது பற்றி எனக்கு ஒன்றும் புரியவில்லை.

""வருகிற வழியில் பரங்கி மலையைப் பார்த்தேன். கண நேரத்தில் அது அங்கு தோன்றாத காலத்தையும் தோன்றி பின் இல்லாமல் போன காலத்தையும் பார்த்தேன். எனக்கு பயமாகவும் பரவசமாகவும் இருக்கிறது. அதை ஞானியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்''

ஆழ்ந்து பார்த்தார் வெள்ளுடை தரித்து நரைத்த தாடியும் தாழ்ந்து நோக்கும் பார்வையும் கொண்ட அந்த ஆஸ்ரமவாசி. "இங்கே அமர்ந்திருங்கள். சுவாமிகள் பார்க்க விரும்பினால் அழைக்கிறேன்'' என்றார்.
நான் அமர்ந்திருந்தேன்.

இருபது நிமிடங்கள் கழித்து உள்ளே அழைக்கப்பட்டேன். சற்றே இருளும் குளுமையுமான அறை. எங்கிருந்து கசிகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாத நீலநிற ஒளிக்கிரணம் வியாபித்திருந்தது.

"ஆங்கிலத்தில் பேசுவீர்களா?''
தலையசைத்து, "என்னையும் கடந்து நான் இயங்குகிறேன். நான் என்பது இந்த உடலுக்கு வெளியிலும் செயல்படுவதாக உணர்கிறேன். அதாவது நான் இந்த அறைக்கு வெளியிலும் பிரக்ஞை கொள்கிறேன்.''

"அறைக்கு வெளியில் நடக்கும் சம்பவம் உங்களுக்குத் தெரிகிறதா?''

"இடத்தைப் போலவே காலமும் எனக்கு ஒரு பொருட்டாக இல்லை. மனித இனம் தோன்றிவிட்டதா?, ராஜராஜசோழன் காலமா? என்பதெல்லாம் ஒரு பொருட்டாக இல்லாத மனநிலை ஏற்படுகிறது. பொதுவாக வெளியே என்ன நடக்கிறதோ அது மனப்புயல் பிம்பமாக சுழல்கிறது. வெளியே யாரோ சிலர் உங்களைப் பார்க்க வருகிறார்கள். சோனியா காந்தி காங்கிரஸ் உயர் மட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். குடகுமலையில் ஒரு ஆதிவாசி தேனெடுத்துக் கொண்டிருக்கிறான். கங்கையில் மீன்கள் துள்ளுகின்றன. சாதிக் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. அலுவலகத்தில் யாரையோ யாரோ புறம் பேசுகிறார்கள். நியூஜெர்ஸியில் ஒரு சாலை விபத்து. எங்கோ எதற்கோ சதி திட்டம் தீட்டுகிறார்கள். ராக்கெட் விடுகிறார்கள். இன விடுதலைக்காகப் போராடுகிறார்கள். தங்கள் மொழியே சிறந்தது என்கிறார்கள். வரதட்சணை, சினிமா ரசிகன், இண்டெர்நெட்...டிசம்பர்}6, செப்டம்பர்}11 எல்லாமே அந்தச் சுழலில் துகள்கள் போல சிக்கிச் சுழல்கின்றன.''

ஞானி சிரித்தார். "ஒன்றின் ஒரு கோடி மாயத்தோற்றங்கள்'' என்றார்.

"ஒரு கணத்தில் ஒரு யுகம்... ஒரு யுகத்தில் ஒரு கணம்'' என்றேன். அவர் என்னைப் புரிந்து கொள்வது தெரிந்தது.

நெருங்கி வந்து தோளில் வாஞ்சையுடன் தொட்டார்.

"இணையத்தில் எல்லாம் இருக்கிறது, பரமாத்மா போல. நாம் அதன் பலகோடியில் ஒரு துகளைத் துய்க்கும் ஜீவாத்மாக்கள்...''

ஞானி மீண்டும் சிரித்தார்... "உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, அப்படித்தானே?''

"ஆமாம்''

"உங்களைப் போன்ற ஒருவரைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். என்னுடன் அமெரிக்கா வருகிறீர்களா ஆஸ்ரம வேலைகளுக்கு?'' என்றார்.

"நானா?''

"முக்காலம் உணர்தல் என்பதே அறியாமைதான்... நான்கு காலம் உணர்ந்தவர் நீங்கள்... நான்காவது காலமான இடைதூரம் பிடிபட்டிருக்கிறது உங்களுக்கு..''
நான் ஆச்சர்யமாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் புன்னகையுடன் வெளியே சென்றார். தியான அமைதியா, மயான அமைதியா என்று புரிபடவில்லை.

LinkWithin

Blog Widget by LinkWithin