வெள்ளி, மே 08, 2009

மணமகள்

மணமகள்



பூரணிக்கு மட்டும் ஒரு மேஜை விசிறி வைத்திருந்தார்கள். மேலே இன்னொரு பேன் சுழன்று கொண்டிருக்க இது தனி. வாழ்க்கையில் இதற்கு முன்னரோ, இதன் பின்னரோ அவளுக்குக் வாய்க்க முடியாத ஒரு அந்தஸ்து அது. சாயங்காலம் ஐந்து மணி வரைகூட தனக்கு இப்படியொரு மரியாதை கிடைக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. தயார் நிலையில் இருந்த தாழம்பு ஜடையைத் தலையில் பொருத்தி கைக்கு ஒரு டஜன் கண்ணாடி வளையலை மாட்டி, மஞ்சளும் குங்குமமாக நலங்கு வைத்து முடித்ததும் தானும் மணப்பெண்போல மாறிவிட்டதை பூரணி உணர்ந்தாள். மணமகள் அறையில் டி.வி. பெட்டி அளவுக்கு மாட்டியிருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் தன்னை முதன்முதலாகப் பார்த்தபோது தானும் மின் விசிறிக்குத் தகுதியானவள்தான் என்று நம்பினாள்.

எங்கிருந்துதான் தன்னைச் சுற்றி இத்தனைப் பெண்கள் வந்து சேர்ந்தார்கள் என்பதும் அவளுக்கு வியப்பாகத்தான் இருந்தது. எப்போதும் ஏறிட்டும் பார்க்காத விஜயாகூட தனக்கு பவுடர் போட்டு மை வைத்துவிட்டதை நினைத்துப் பார்க்கும்போது இது வாழ்விலே ஒரு நாள் என்றுதான் தோன்றியது. எல்லோரும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறார்கள். வலிந்து வந்து கிண்டல் செய்கிறார்கள். வியர்த்திருந்தால் துடைத்துவிடுகிறார்கள். "ஜாக்கெட் கலர் இன்னும் கொஞ்சம் டார்க்காக இருந்திருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்' என்கிறார்கள்.

நேற்றுவரை தலைக்கு எண்ணெய் இல்லாமல், முகமெல்லாம் எண்ணெய் வழிய தையல் பிரிந்த ஜாக்கெட் போட்டிருந்தபோது அவளை யாரும் பொருட்படுத்தாமல் இருந்ததை எல்லோருக்குமேவா நினைவில்லாமல் போயிருக்கும்? "வழக்கமாக நாங்கள் அப்படித்தான் தமாஷ் செய்து கொள்வோம்' என்பது போல நடந்து கொண்டார்கள்.


உபயோகிக்காமல் கிடந்த நெல் மண்டியை ஒரு அவசரத்துக்காகக் கல்யாண மண்டபமாக மாற்றியிருந்தார்கள் போலும். அவசரத்துக்கு இந்த மண்டபம்தான் கிடைத்தது என்று பேசிக் கொண்டார்கள். நிதானமாக ஏற்பாடு செய்திருந்தாலும் இதைத்தான் தீர்மானித்திருப்பார்கள். கல்யாண பந்தலும் வாசல் பக்கம் கட்டியிருந்த தோரணங்களும் இது கல்யாண மண்டபம் எனக் காட்டினாலும் நெல் சுணை இன்னும் மிச்சமிருந்தது. மண்டபத்தின் ஒரு மூலையில் கோணிகளும் உமியும் குவிக்கப்பட்டிருந்தது. விசிறிக்காற்றில் இது இன்னும் அதிகமாகவே உறைத்தது. வேறுப் பக்கம் திருப்பி வைத்தாலோ கொசுத் தொல்லை. கேலிப் பேச்சுகள், வலிந்து காட்டிய மகிழ்ச்சிகள், உற்சாகங்கள் எல்லாம் ஓய்ந்து எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.


பூரணிக்குச் சுதந்திரமாக யோசிப்பதற்குக் கொஞ்சம் நேரம் கிடைத்தது.


அப்பாவுக்கு ரொம்ப முடியாமல் போய், கடந்த இரண்டு மாதமாகவே யார், யாரோ பெண் கேட்டு வந்து போனார்கள். நான்கு மணிக்கு பெண் பார்க்க வருகிறார்கள் என்று மூன்று மணிக்கு வந்து சொல்லுவார்கள். பக்கத்து சோடா கலர் அண்ணாச்சியிடம் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, உள்ளே போய் அந்தப் பிரத்யேக புடவையைச் சுற்றிக் கொண்டு காபி போட்டு வைத்துவிடுவாள். சாயங்கால நேரத்தில் வருகிறவர்களுக்கு காபியோடு கடையில் இருந்து கொண்டு வந்த பஜ்ஜியும் வைப்பாள். காலையில் வந்தால் காபியும் மசால் வடையும். காலையில் இட்லியும் மசால் வடையும்தான் கடையில் போடுவது வழக்கம். அம்மா உயிரோடு இருந்தபோதிலிருந்தே அப்படித்தான்.


யாராவது பெண் பார்க்க வந்தால் எப்படா கிளம்புவார்கள் என்ற தவிப்புதான் எல்லாவற்றையும்விட அதிகமாக இருக்கும். சாயங்கால நேரத்தில் அண்ணாச்சி கடைக்கு சரக்கு எடுக்க ஆள்கள் வந்துவிடுவார்கள். பெண் பார்க்க வருகிற நேரத்தில் அவரோட சம்சாரம் லோகாவும் பூரணிக்கு ஒத்தாசைக்கு வந்துவிடுவதால் அவர் பாடு பெண்டு நிமிர்ந்து போகும். "வந்தமா பார்த்தமா போனமானு இல்லாம இங்கயே தங்கப் போறது மாதிரி' பேசிக் கொண்டிருக்கும்போது பூரணிக்குக் கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருக்கும். இரண்டு வருஷத்துக்கு முன்னால், பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் பாட்டி ஊரில் இருந்து யாரையாவது வந்து தங்க வைத்து கொஞ்சம் முன்னேற்பாடெல்லாம் நடக்கும்.


பூரணிக்கே பெண் பார்க்கும் சடங்கு ஓரளவுக்குத் தெரிந்துவிட்டதாலும் அடிக்கடி யாரையாவது கூப்பிட்டுக் கொண்டிருக்க முடியாததாலும் பஜ்ஜிக்கு மாவு கரைக்கிற மாதிரி, துணி துவைக்கிற மாதிரி அதையும் வேலையோடு வேலையாகச் செய்து முடித்துவிடுவாள்.

விடிந்தால் கல்யாணம். இந்த நேரத்தில் இப்படி ஒரு திண்டாட்டம். தாம் கழுத்தை நீட்டப் போவது யாருக்கு என்று அவளுக்குத் தெரிவிக்கப்படவேயில்லை. மணமகன் யாரென்று கேட்பது அதிகப்பிரசங்கித்தனமாக இருக்குமோ எனச் சில நாளும் அட அதுகூடத் தெரியாமத்தான் கழுத்த நீட்டப் போறீயா என்று கேலி பேசுவார்கள் என்று சிலநாளும் தவித்துக் கொண்டிருந்தாள். தெரிந்துதான் என்னப் பண்ணப் போகிறோம் என்ற கேள்விக்கு அவளிடம் விடையில்லைதான்.


ராமாபுரம் செல்லமுத்து முதலிதான் மாடுபிடிக்கிற கையோடு போகிற இடங்களில் மாப்பிள்ளைக்கும் சொல்லி வைத்திருந்தார். இதே மாதிரி மெயின் ரோட்டில் சாப்பாட்டுக் கடை வைத்திருக்கிற நான்கைந்து பேரை சமீபத்தில் கூட்டி வந்திருந்தார். இட்லிக்கு மாவு ஊறப்போட வேண்டிய அவசரத்திலோ, எண்ணெய் கடாயை அணைக்காமல் வந்துவிட்ட தவிப்பிலோ எந்த மாப்பிள்ளை முகமும் சரியாக ஞாபகம் இல்லை.


"எலாவூரான் மாப்பிள்ளையே படிஞ்சு போச்சும்மா... உனக்கு சம்மதம்தான?' என்று ஒப்புதல் கேட்கிற தொனியில் விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அப்பாவுக்குக் கைகால் விழுந்த பிறகு அவர் எது சொன்னாலும் அவரவர் வசதிக்கு அவர் சொல்வதை அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அவர் "ஊஹும்' என்று தலையசைத்தாலும் "அவனே "ஊம் சொல்லிட்டான் அப்புறம் என்னம்மா' என்று சொல்லிவிடுவார்கள். இதற்கப்புறம் இன்னொரு தரம் மாப்பிள்ளை வீட்டார் வந்து போவார்கள் என்று பூரணியும் மாப்பிள்ளையை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள். கல்யாணத்துக்கு முன்னர் மாப்பிள்ளை யாரென்று தெரிந்து கொள்வது தமக்கான உரிமை என்றுகூட இரவில் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பாள். ஆனால் பெரியவர்கள் அப்படி நரகத்திலா தள்ளிவிடுவார்கள் என்ற சமாதானமும் கூடவே தோன்றும்.


"கல்யாணத்தன்னைக்கே நிஸ்தாம்பலம் வெச்சுக்கலாம்' என்று முடிவாகிவிட்டதாக அப்புறம்தான் தெரிந்தது.

அதன் பிறகு யார் மாப்பிள்ளை என்று எப்படி விசாரிப்பது என்று தெரியவில்லை. திருமணம் முடிவானதும் சொந்த பந்தங்கள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டு வந்தனர். அதில் யாரிடம் மணமகனைப் பற்றி விசாரிப்பது என்று தெரியவில்லை. விசாலாட்சி கிழவியும் சுசீலா அத்தையும் மாமாவும் போய் வந்தார்கள். மூன்று பேராகப் போகக் கூடாது என்பதால் செல்லமுத்து முதலியும் அவருடைய அக்காவும்கூட போனார்கள். ஆனால் யாருமே மாப்பிள்ளையைப் பற்றி விவரிக்கவில்லை. போய் வந்ததும் விசாலாட்சி கிழவி, "எம்மாடி... உன்னாட்டம் ஒண்ரையணா கடை இல்லடி அது... அண்டா, குண்டா, அடுக்குச் சட்டினு டெய்லி நீ தேச்சுப் போட வேண்டியது ஒரு வண்டி சாமான் இருக்கு' என்றது.


கிழவி சொன்ன இந்த அடையாளத்தை வைத்துப் பார்க்கும்போது முதலில் வந்து ஆவணி மாசம் அமாவாசைக் கழிச்சு வந்தவங்களாத்தான் இருக்கும் என்று தோன்றியது. ஆள் கொஞ்சம் கருப்புதான். முன் வழுக்கையும் இருந்தது.


வெள்ளை வேட்டியும் சட்டையும் போட்டிருந்தது ஞாபகம் இருந்தது. "பேச்செல்லாம் கொஞ்சம் தூக்குதலாகத்தான் இருந்தது. நல்ல உழைப்பாளியாட்டம் இருந்தது. கண்ணு ரொம்ப சிவந்து இருந்தது. குடிப்பாரா இருக்கலாம். பொழுதன்னைக்கும் வேலையா இருக்கிற மனுஷன் ராத்திரி ரவ குடிச்சாத்தானே தூக்கம் வரும்?'


இப்படித்தான் மனசில் தன் கணவனை உருவாக்கி வைத்திருந்தாள் பூரணி. லோகாதான் குழப்புகிறாள். "ஏண்டி ஒரு தடவை கடைக்கு வந்து பார்த்துட்டுப் போனாரே அவர்தான் மாப்பிள்ளை' என்கிறாள்.


"எலாவூர்ல இருந்து வந்து பொண்ணு பார்த்துட்டுப் போனது அவர்தான்டீ' என்று அடித்துச் சொல்கிறாள்.


ஒரு நாள் மத்தியானம் கடையில் உட்கார்ந்து கரும்பு மென்று கொண்டிருந்தபோது வந்தார் அவர். அவர்கள் அப்பாவும் அம்மாவும் வந்தபோது அவருக்கு ஏதோ வேலை என்று வரமுடியவில்லை. பெண் எப்படி என்று பேச்சுக் கொடுப்பதற்காக வந்திருந்தார். வந்தவர், கடை வாசலில் நின்றபடி "பனங்கிழங்கா அது? என்னவிலை எனக்கு ரெண்டு குடுமா?' என்று ஆரம்பித்தார். "இது விக்கிறதுக்கு இல்லண்ணே.. சும்மா நான் சாப்பிட்றதுக்கு வெச்சிருக்கேன்... இது பனங்கிழங்கில்லண்ணே, கரும்பு...' என்றபடி வாயில் மென்று கொண்டிருந்த கரும்புச் சக்கையை எடுத்து ஆதாரத்தோடு காண்பித்தாள்.


முகத்தருகே நீட்டப்பட்ட கரும்புச் சக்கையைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விட்டான்.

அவர் சிவப்பா ஒடிசலா பேண்ட் போட்டுக்கிட்டு இருந்தார். எலக்ட்ரிக் வேலை செய்வதாக சொல்லியிருந்தார்கள்.

"இது ரெண்டுல யாரா இருந்தாலும் பரவாயில்லை' என மனதைத் தயார் படுத்தியிருந்தாள். செல்லமுத்து முதலி நேத்து வந்து புதுதாகக் குழப்பிவிட்டுப் போய்விட்டார்.


"உனக்கென்னம்மா நல்ல நாத்தனார் கிடைச்சுட்டா. பொண்ணு பாக்கும்போதே உங்கிட்ட சினேகிதமாயிடுச்சே அந்தப் பொண்ணு' என்றார்.


பூரணிக்கு மேலும் சிக்கலான குறிப்பாக இருந்தது இது. ஏனென்றால் அவள் யோசித்து வைத்திருந்த அந்த இரண்டு பேரும் இல்லாத இன்னொருத்தரைத்தான் அவர் சொல்கிறார். அப்படி அண்ணனும் தங்கையுமாக வந்தது இந்த இருவருமற்ற வேறொருவர் என்பதாக நினைவு. செல்லமுத்து முதலி யாரையோ யாருடனோ மாற்றி அண்ணன் தங்கையாகச் சொல்கிறார். அன்று வந்தவர் வேட்டியும் ரோஸ் கலர் சட்டையும் போட்டிருந்தார். ஓயாமல் இருமிக் கொண்டிருந்தார். வந்த வேகத்தில் பத்து பீடி பிடித்தார். திண்ணைப் பக்கம் சளியாகத் துப்பி வைத்திருந்தார். தான் மணக்கப் போவது அவராக இருக்கக் கூடாது என்று நினைத்தாள். யாராவது ஒரு போட்டோ கொண்டு வந்து காட்டினால் நன்றாக இருக்குமே என்ற தவிப்பு இருந்தது. ஆனால் பத்திரிகை அடித்து, கூரை புடவை எடுத்து, பத்து பாத்திரமெல்லாம் வாங்கியான பின்பு யார் மாப்பிள்ளையாக இருந்து என்ன செய்ய முடியும் என்று ஒரு அசூசையும் இருந்தது மனதுக்குள்.


கடைசி கடைசியாக அவளுக்குத் தோன்றியதெல்லாம் தாம் யோசித்த இந்த மூவரில் ஒருத்தர்தானா? இது இல்லாத வேறு ஒருத்தரா என்பதைத் தெரிந்து கொள்கிற சிந்தனையாக மாறிவிட்டது. எப்போது தூங்கினாள் என்று நினைவில்லை. எழுப்பி குளித்துவிட்டு வரச் சொன்னார்கள். மேளச் சத்தம் கேட்டது. கூடத்தில் பார்த்தபோது அப்பாவை யாரோ குளிப்பாட்டி புது வேட்டியும் சட்டையும் மாட்டி உட்கார வைத்திருப்பது தெரிந்தது. அப்பாவையும் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக ரோட்டு மேல் இருக்கிற கடையை மாப்பிள்ளைக்குக் கிரயம் செய்து கொடுப்பதாகப் பேச்சு. குறை காலத்தை அவரை முகம் சுளிக்காமல் பார்த்துக் கொண்டால் போதும். அம்மா செத்த பிறகு எல்லாமே அவர்தான். ஒத்த ஆள், ஒரு பொட்டை புள்ளையை ஆளாக்கிறது அவ்வளவு சுலபமா? அவர் அங்கிருந்து தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. யாரோ தலையைச் சீவி நேற்றைய ஜடையை மீண்டும் மாட்டினார்கள். கையில் வரிசைத் தட்டைக் கொடுத்து மணமேடைக்கு அழைத்துச் சென்றார்கள். பந்தலில் மணமகன் அமர்ந்திருப்பது உத்தேசமாகத் தெரிந்தது.


யாரோ "பொண்ணுக்கு வெக்கத்தப் பாரு' என்றார்கள். பூரணிக்கு ஒருவித பயம்தான் இருந்தது.

மணப் பலகையில் அமர்ந்து ஓரக்கண்ணால் தன் அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்தாள்.

திண்ணை.காம், தினமணி கதிர்.

LinkWithin

Blog Widget by LinkWithin