திங்கள், ஜனவரி 28, 2008

நோவா

சிறுகதை

தமிழ்மகன்


"நண்பர்களே வணக்கம்.

உலகம் மாகாணக் கூட்டமென்பதால் அனைத்து மொழியினருக்குமான மாற்றுக் கருவியை எல்லோர் இருக்கையிலும் பொருத்துவதில் கூட்டம் சற்றே தாமதப்பட்டுப் போனது. சீன மொழியில் இருந்து உருது மொழிக்கும் ஜார்ஜிய மொழியில் இருந்து குஜராத்தி மொழிக்கும் மாற்றம் செய்வதில் சிற்சில இலக்கணக் குறைபாடுகள் இன்னமும் தவிர்க்கப்படவில்லை. உதாரணத்துக்கு சில இலக்கணப் போலிகளையும் (தசை} சதை, ல்ட்ர்ற்ர்- ச்ர்ற்ர்) சில ஆகு பெயர்களைப் (பிரான்ஸ் தங்கம் வென்றது) புரிந்து கொள்வதில் சில மின்புரி தவறுகள்... அடுத்த உலக மாகாணக் கூட்டத்துக்குள் இவற்றைச் சரி செய்துவிட முடியும் என்று நம்புகிறேன். சரி.. இப்போதைய கூட்டம் அது பற்றியதல்ல....'' சற்றே அமைதிக்குப் பிறகு அனைவருக்கும் ஏற்கெனவே அதைப் பற்றித் தெரியும் என்றாலும் ஒரு முன்னோட்டம் போல அதைப்பற்றி சொல்ல வேண்டிய தம் கடமையை நிறைவேற்றினார் சர்வ தலைவர்.

"....இன்றைய மாநாடு ஒருவர் பற்றி இன்னொருவர் கொள்ளும் அபிப்ராயம் பற்றியது. அதாவது ஒரு அபிப்ராயத்தை அவர் இல்லாத நேரத்தில் மற்றவர்களிடம் பரப்புவது சம்பந்தமானது. இது மனித சமுதாயத்தில் மிகக் கொடிய வன்மமாக இருந்திருக்கிறது. இப்போது இது புழக்கத்தில் இல்லையாயினும் அப்படியான குணம் நான்காம் உலகப் போருக்குக் காரணமாகிவிடக்கூடாது என்பதுதான் இம் மாநாட்டின் நோக்கம். இங்கு கூடியிருக்கும் மனித வள, மொழியியல், மனவியல் அறிஞர்கள் யாருக்காவது அதைப் புரிந்து கொள்ள முடிந்ததா? விளக்க முடியுமா? யென்சான் நீங்கள்..?''
ஜப்பானிய மொழியியல் அறிஞரான அவர்தான் இந்தக் கூட்டத்துக்கே (கூட்டம் என்பதுகூட பொருத்தம்தான். ஏறத்தாழ 170... மூன்றாம் உலகப் போருக்குப் பிறகு மீந்தவர்களுக்கான பிரதிநிதிகள் மட்டுமே அங்கு இருந்தனர்) காரணமானவர். கடந்த காலங்களில் நிறைய போர்களுக்கு இதுதான் காரணமாக இருந்தது என்று கண்டுபிடித்தவர் அவர்தான். ஆரம்ப விளக்கம் சிறப்பாக இருந்தால் அதைச் சார்ந்து மற்றவர்களும் தெளிவுபடுத்த முடியும் என்று அவர் நினைத்தார். நிதானமாகவும் தெளிவாகவும் பேச ஆரம்பித்தார் யென்சான்.

"ஒருவர் பற்றி இன்னொருவர் பெருமையான அபிப்ராயங்களைச் சொல்வதைப் புகழ்வது என்று சொல்கிறார்கள். அதற்காக ஒரு காலத்தில் பலரும் ஏங்கியதாகத் தெரிகிறது. ஒருவருக்கு எவ்வளவு புகழ் இருக்கிறது என்பது மிகவும் முக்கியமாக இருந்தது. வாய் மார்க்கமாகவோ, எழுத்து மூலமாகவோ ஒருவரை ஒருவர் இப்படி செய்து கொண்டார்கள். தாம் நிறையப் புகழப் பெற வேண்டும் என்ற பேராசைதான் வன்முறைக்குக் காரணமாகிவிட்டது''

"அந்தக் காலத்தில் அப்படி ஒரு ஆசை இருந்தது உண்மைதான். ஆனால் அதனால் போர்கள் எப்படி உருவாகும்? சகமனிதர்களை வெட்டிச் சாய்ப்பதும் கொல்வதும் எங்கே வந்தது?'' என்ற சந்தேகத்தையும் கூடவே அவருடைய விளக்கத்தையும் முன் வைத்தார் பிரெஞ்சு மனவியல் அறிஞர் வார்னே பிரான்கோ. "ஒருவரை பற்றி ஒருவர் நல்ல அபிப்ராயங்கள் சொல்வது இப்போதும் சில சமயங்களில் கடைபிடிக்கப்படுகிறது. சென்ற மே மாதத்தில் நாமும் அப்படி செய்தோம்...''

"நாமா?'' என்றார் தலைவர் சற்றே திகைப்புடன்.

"ஆமாம். செவ்வாய் கிரகத்தில் வளிமண்டலம் உருவாக்குவதில் நம் விஞ்ஞானிகள் நிறைவுகட்டத்தை அடைந்த போது இதே உலக மாகாணப் பிரதிநிதிகள் சேர்ந்து உணர்ச்சிவசப்பட்டதை நான் கண்ணுற்றேன். இப்போது இங்கு இருக்கும் காப்ரியேல், அந்த விஞ்ஞானிகளை "மறுபுவிகண்ட மாண்பர்கள்' என்று விளித்தார். ஆனால் அது புகழ் வார்த்தைதான். சென்ற நூற்றாண்டின் பழக்க தோஷமாக இருக்க வாய்ப்பிருக்கிறது''

கேப்ரியலுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. "அப்படியா சொல்கிறீர்கள்?... அது ஊக்க வார்த்தை வகைப்பட்டதுதானே?''

"நிச்சயமாக இல்லை. அவர்கள் வேலையை அவர்கள் செய்தார்கள். அதிகபட்சமாக அவர்களைப் பார்த்து நிறைவாகச் செய்தீர்கள் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். என்னுடைய ஆய்வில் கடந்த காலங்களில் வெளியூருக்குச் சுற்றுலா போய்விட்டு வந்த அரசியல் தலைவர்களையெல்லாம் தமிழகத்தில் "மலேயா கண்ட மாவீரனே' என்று பாராட்டி வரவேற்று இருக்கிறார்கள். இதைப் போல் நம் தலைவர் வெளிநாடு போய் வரும்போது பாராட்ட வேண்டும் என்ற ஆசையில் "உலக நாடுகளின் ஒளிவிளக்கே' என்று மிகைப்படுத்திப் புகழ்ந்தார்கள். இதனால் இந்தக் குழுவினருக்கும் எதிர்க் குழுவினருக்கும் ஆவேசமும் கோபமும் வன்மமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.''

பிரான்கோவின் வாதத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து "அந்தக் காலத்தில் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்று வரும் முறை இருந்தது. அதை பொருண்மை ஆற்றல் முறையினால் ராக்கெட் இல்லாமலேயே சென்றுவரும் முறையைக் கண்டுபிடித்ததால் சற்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். மறுபுவிகண்ட மாண்பர்கள்' என்ற வாக்கியத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்'' என்றார் கேபிரியல்.

"இது குறித்து மாற்றுக் கருத்து இருப்பவர்கள் சிற்றுண்டி இடைவேளைக்குப் பிறகு பகிர்ந்து கொள்ளலாம்'' தலைவர் திரையில் இருந்து மறைந்தார்.

எல்லோரும் அரங்கத்தின் வெளியே நீண்ட காரிடாரில் நடைபோட்டபடி ஏறத்தாழ ஒரு முடிவுக்கு வந்துவிட்டவர்கள்போல நடைபழகிக் கொண்டிருந்தார்கள். உலகம் என்பது அந்த 45 மாடிக் கட்டிடடத்துக்குள் சுருங்கிவிட்டது சகலருக்கும் வருத்தமூட்டுவதாக இருந்து சமீபகாலங்களில் அதற்காக வருத்தப்படும் பழக்கத்தில் இருந்து மீண்டுவிட்டார்கள். காடுகள், மலைகள், அருவிகள், மலர்கள், எல்லாமே திரையில் பார்த்து ரசிக்கும் சமாசாரங்கள்தான். "டூன்மேன்' அமைப்பினர் கிராபிக்ஸ் இயற்கை காட்சிகள் உருவாக்கி செயற்கை பறவைகளையும் விலங்குகளையும் உருவாக்கியிருப்பதால் போருக்கு அடுத்த ஐந்தாம் தலைமுறைக்குச் செயற்கை ரசிப்பு மட்டுமே தெரிந்தது, சொல்லப் போனால் மிகவும் பிடித்தும் போனது. சரியாகச் சொன்னால் இந்த "நோவா கப்ப'லில் மனிதர்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டிருந்தனர்.

"என்ன புரதச் சட்டினியும் வைட்டமின் ஆப்பமும்தானா?'' என்று நெருங்கிவந்த ஆப்ரிக்க மரபியல் அறிஞரான முப்பட்டோவைப் பார்த்து ஏதோ நினைவில் இருந்து விடுபட்டவராகச் சிரித்தார் இந்திய ஆன்மிக இயலாளர் குப்தா.

"ஆழ்ந்த யோசனையில் இருக்கிறீர்கள் போலிருக்கிறதே?'' என்ற முப்பட்டோவின் கையில் கார்போ கூழும் சிட்ரிக் தொக்கும் இருந்தது.
""இது இந்தியர்களின் மரபுரீதியான செயல்தானே?'' சாதுர்யமாக அவருக்குப் பதிலளித்து பதில் சிரிப்பும் செய்தார்.

"தலைவர் இதை இவ்வளவு பெரிய விஷயமாகப் பாவிப்பதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? எப்போதோ வழக்கொழிந்து போன இந்தப் பாராட்டு வார்த்தைகள் குறித்த கருத்தரங்கு எந்தவிதத்தில் பயனளிக்கும் என்று நினைக்கிறீர்கள்?''

குப்தா மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார். "இடைவேளைக்குப் பிறகு இது குறித்துப் பேசலாம் என்று இருக்கிறேன். உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.. மற்றபடி ஆப்ரிக்க -இந்திய இனவரலாறு ஆய்வு எப்படி இருக்கிறது?''

"நியூஸிலாந்திலும் இந்தியாவிலும் ஆப்ரிக்காவிலும் பாம்புகள் குறித்தும் லிங்க வழிபாடுகுறித்தும் போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த மூன்று பகுதி பழங்குடிகளிடம் இருக்கும் பெயர் ஒற்றுமைகள் ஆச்சர்யமானவை. கிளியோ பாத்ரா} துங்கபாத்ரா, கங்கா}காங்கோ என... மனிதர்கள் எல்லோரும் ஒரே இடத்தில்தான் இருந்திருக்கிறார்கள், இப்போது நாம் இருப்பது போல..'' அரங்க நுழைவாயில் விளக்குகள் ஒளிரவே அனைவரும் உள்ளே செல்ல ஆரம்பித்தனர்.

திரையில் தலைவர் "ஆரம்பிக்கலாம்'' என்றார்.
குப்தா ஆரம்பித்தார். "அபிப்ராயங்கள் சொல்வதில் இரண்டு விதங்கள் இருப்பதை அறிகிறேன். ஒருவரைப் பற்றி இன்னொருவர் அவர் இல்லாத நேரங்களில் அபிப்ராயம் சொல்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஆரம்ப அமர்வில் சொல்லப்பட்ட அபிப்ராயங்கள் அனைத்தும் ஒருவர் மற்றவரை மிகைவூக்கப்படுத்துவது சம்பந்தமானதாக இருந்தது. இதில் நான் இன்னொரு கருத்தையும் முன் வைக்க விரும்புகிறேன்... அதாவது ஒருவகையில் அதற்கு முரண்படுவதாகவும் இது இருக்கும். அப்படி அபிப்ராயம் தெரிவிப்பதில் குறைவூக்கம் செய்யும் தன்மைகளும் இருந்தன என்பதுதான்.''

"புதிதாக இருக்கிறதே... குறைவூக்கமா? சக மனிதர் ஒருவரை இன்னொருவர் எதற்காக குறைவுபடுத்த வேண்டும்?'' தலைவர் ஆச்சர்யத்தோடு கேள்வியை முன் வைத்தார்.

குப்தாவின் முகம் சலனமற்று இருந்தது. லேசான வருத்தமும் அதில் தென்படுவதை அவருடைய மனவோட்டமானியின் ஊசலாட்டத்தை வைத்து அனைவருமே அறிந்தனர். ஒருவருடைய மனவோட்டத்தைப் புண்படுத்தும்விதமாக யாரும் செயல்படும் சமயத்தில் அதை அறிந்து அந்தச் செயலை மாற்றிக் கொள்ளும் பொருட்டுதான் அக் கருவியே அனைவரின் இருக்கையிலும் இணைக்கப்பட்டிருந்தது. தலைவர் நெகிழ்வோடு, "தாங்கள் வருத்தமுருவதாக அறிகிறோம்'' என்றார்.

"வருத்தம் இந்த ஆய்வின் பொருட்டுதான். குறைவூக்கம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டாம். ஒரு மனிதனை எதற்காக அவருடைய நிஜமான தன்மையைவிட குறைத்து மதிப்பிட வேண்டும் என்று கேட்டீர்கள்.. அது அந்தக் காலத்தில் இருந்த போலி குணத்தின் விளைவு..''

தலைவர் தீர்மானமான குரலில் "குப்தா அது தெரிந்து கொள்ளகூட தகுதியற்ற விஷயம் என்று சொல்கிறார். அத்தகைய மோசமான விஷயத்தைத் தெரிந்து கொள்வதில் எனக்கும் உடன்பாடில்லை. உங்கள் வாக்குகளை அளிக்கலாம்.''

அப்படியான போலியான குணம் பற்றித் தெரிந்து கொள்வதில் உண்மையிலேயே உறுப்பினர்களுக்கு ஆர்வம் இருக்கத்தான் செய்தது. 97 விழுக்காடு தெரிந்து கொள்ள விரும்புவதாக பட்டனை அழுத்தினர்.

"நீங்கள் கூறலாம்'' என்றார் தலைவர் குப்தாவை நோக்கி.

"என் கடமையை முடிந்த அளவு தெளிவாகச் செய்ய விரும்புகிறேன்'' என்று குப்தா ஆரம்பித்ததிலிருந்தே அது சிரமமானதொரு விஷயமென்று அனைவரும் அதைப் புரிந்து கொள்ள ஆயத்தமாயினர்.

"குறைவூக்கம் என்ற வார்த்தை இன்றைய நாகரீக உலகத்தில் உருவாக்கப்பட்ட வார்த்தை.. அக் காலங்களில் ஒருவரை ஒருவர் மறைவாக குறைத்து மதிப்பிட்டனர். அப்படிச் செய்து கொள்வதில் அவர்களுக்கு ஒருவித ஆனந்தம் இருந்தது. அதை அக் காலங்களில் அவதூறு சொல்லுதல் என்பார்கள்...'' அமைதியாக அரங்கைப் பார்த்தார் குப்தா. எல்லோர் முகத்திலும் "அதில் ஆனந்தம் இருக்க முடியுமா?' கேள்விக்குறி.
குப்தா தொடர்ந்தார்.. "புறம்கூறல், இல்லாததும் பொல்லாததும் சொல்லுதல், போட்டுக் கொடுத்தல், வதந்தி பரப்புதல், வத்தி வைத்தல்...''

"என்ன பட்டியல் இது?'' தலைவர் இடைமறித்தார்.

"இப்படியெல்லாம் அதைச் சொல்லுவார்கள். நான் சிறுவயதாக இருக்கும்போது என் தாத்தா இந்த வார்த்தைகளைப் பிரயோகித்ததைக் கேட்டிருக்கிறேன்.என் மனதில் இன்றும் அவை பசுமையாக இருக்கின்றன. ஆனால் இப்படிச் சொல்வதால் என்ன நன்மை என்று என்னாலும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அக் காலத்தில் கிறிஸ்து என்பவரை முன்னிறுத்தியும் திருவள்ளுவர் என்பவரை முன்னிறுத்தியும் இன்னும் சிலருடைய பெயரிலும் ஆண்டுகள் கணக்கிடப்பட்டன. அவர்கள் கணக்குப்படி ஏறத்தாழ கி.பி. 2200 வரை இது புழக்கத்தில் இருந்திருக்கிறது. என் தாத்தாவுக்கே அவை சொல்லக் கேள்விதான். அவர் அவற்றைப் பிரயோகித்தவராகத் தெரியவில்லை. அப்படி ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டு அதனால் ஏற்பட்ட விரோதத்தால் அவதியுற்றுவந்தனர்.''

"முதலில் அதில் ஆனந்தம் இருந்ததாகக் கூறினீர்கள் குப்தா'' என்று ஞாபகப்படுத்தினார் ஒரு சீன அறிஞர்.

"அதைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறது. இப்படிப் புறம்கூறுவதால் ஆரம்பத்தில் காரணற்ற மகிழ்ச்சியும் பிறகு அதனால் இருவருக்குள்ளும் மன வருத்தமும் தொடர்ச்சியாக விரோதமும் ஏற்பட்டிருக்கிறது..''

"புறங்கூறுவதால் ஏதேனும் சம்பந்தபட்ட நபருக்கு ஆதாயம் இருந்ததா?'' என்றார் சிலி நாட்டு தொல்லியலாளர்.

"ஆதாயம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆதாயம் கிடைத்தால் கூடுதல் உற்சாகத்தோடு செயல்படுவார்கள்.''

"நம்பவே முடியவில்லை. ஆதாயம் இல்லாமலும் இதைச் செய்வார்களா? ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?''

"உதாரணம் சொல்லுகிற அளவுக்கு எனக்கு விவரம் போதாதாது.. யூகத்தின் அடிப்படையில் சொல்வதென்றால்... ஒருவர் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு லாயக்கானவரா என்று இன்னொருவரிடம் அபிப்ராயம் கேட்டால் "அவனுக்கு என்ன தெரியும்.. மண்ணாங்கட்டியும் அவனும் ஒன்றுதான். பல சந்தர்ப்பங்களில் அவன் மேலதிகாரியிடம் அவமானப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்' என்று தீர்மானமாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால் அவன் அந்த வேலைக்கு மிகவும் பொருத்தமானவனாக இருப்பான். மேலதிகாரிகளும் அவன்மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பார்கள். ஆனால் மாற்றிச் சொல்லிவிடுவார்கள். அந்தப் பதவியைத் தான் அடைய வேண்டும் என்ற எண்ணமோ, அதற்கான தகுதியோ இல்லாதவரும் அப்படி அபிப்ராயம் சொல்லும் நடைமுறை இருந்தது.''

"உண்மைக்கு மாறானதைச் சொல்வார்கள். அப்படித்தானே? அதாவது அந்தக் காலத்தில் பொய் என்று ஒரு வார்த்தை உண்டே...''

"சரியாகச் சொன்னால் பொய்தான். ஆனால் பொய் என்பது பயத்தின் காரணமாக ஏற்பட்டது... அதிகாரியின் திட்டுகளில் இருந்து, கணவரின் திட்டுகளில் இருந்து தப்பிப்பதற்காகச் சொல்லப்படுவது... ஆனால் இந்தப் பொய்யில் மன மகிழ்ச்சி ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒருவரைப் பற்றி மிகையாகவோ, முற்றிலும் மாறாகவோ சம்பந்தபட்ட நபர் இல்லாத நேரத்தில் அவரைப்பற்றி அப்படிச் சொல்லியிருக்கிறார்கள்''} இரண்டுக்குமான வித்தியாசத்தை ஓரளவுக்கு விளக்கினார் குப்தா.

அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. "சம்பந்தபட்ட நபர் இருக்கும் நேரத்தில் எப்படி நடந்து கொள்வாராம்?'' சிரிப்பினிடையே கேள்வியைப் போட்டார் தலைவர்.

"குறைகூறிய அதே நபர், யாரை குறையாகக் கூறினாரோ அவரை வலிய அழைத்து "என்னிடம் இப்படி உங்களைப் பற்றி அபிப்பராயம் கேட்டார்கள். நானும் நீங்கள்தான் உலகிலேயே திறமைசாலி என்று சொன்னேன். அந்தப் பதவி நிச்சயம் உங்களுக்குத்தான்' என்று ரகசியமாகவும் பெருமையாகவும் சொல்லுவார்கள்''

"குப்தா இத்துடன் உங்கள் கற்பனையை நிறுத்திக் கொள்ளுங்கள். எங்களுக்கெல்லாம் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. புறம்கூறும் மனிதன் இப்படி இரண்டுவிதமான மனநிலையில் எவ்வளவு சிரமப்பட்டிருப்பான்?.. புறம் பேசப்பட்டதால் பாதிக்கப்பட்டவனைவிட புறம்கூறியவனை நினைத்தால்தான் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. எதற்காக வன்மமும் போரும் ஏற்பட்டது என்ற நம் ஆராய்ச்சி இவ்வளவு கேலிக்கூத்தாக முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவேயில்லை'' என்றார் தலைவர். அவர் சொல்வது போல் எல்லோர் மனவோட்ட மானிகளும் ஆயிரம் மகிழ்ச்சிப் புள்ளிகளைத் தாண்டியிருந்தது. மிகவும் வேடிக்கையான ஆராய்ச்சியாக இருப்பதால் இதை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்ற கருத்துக்கு 100 சதவீத வாக்கு விழுந்ததால் கூட்டத்தை அத்துடன் கலைத்துவிட்டு எழுந்தனர்.

தூரத்தில் இருக்கும் ஒருவரை உபயோகமற்றவர், மண்ணாங்கட்டி என்று அபிப்ராயம் சொல்வதும் கிட்டே வந்ததும் திறமைசாலி என்பதுமான விளையாட்டை தன் பேரக் குழந்தைகளுக்குக் கற்றுத் தந்து மன மகிழ்ச்சி ஏற்படுத்தப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார் முப்பாட்டோ.
குப்தாவுக்கு அது விளையாட்டான விஷயமாகத் தெரியவில்லை. குழந்தைகள் நெஞ்சில் நஞ்சை விதைப்பதாகத் தெரிந்தது.

LinkWithin

Blog Widget by LinkWithin