கார்கில் நிதி எங்கே?
வேகத்தின் மறு பெயர் அஜீத்.
பல படங்கள் நடித்த பின்பும் ஹெல்மெட் போட்டபடி படு வேகமாக பைக் ஓட்டிக் கொண்டிருப்பார். அதே போல் கார் ரேஸில் கலந்து கொள்ள வேண்டும் என்பதிலும் அப்படியொரு வெறி. "அஜீத் போன்ற நடிகர்கள் இப்படியான ஆபத்தான விளையாட்டில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்" என்று அறிவுரை சொன்ன தயாரிப்பாளருக்கும் "எனக்கு அறிவுரை சொல்ல எந்த நாய்க்கும் உரிமையில்லை'' என்று அவசரமாக பதிலடி கொடுத்தவர். விமானம் ஓட்டுவதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். காலில் சக்கரம் கட்டியவர். அவர் ஓட்டாதது எனக்குத் தெரிந்து ரயில் மட்டும்தான். எந்திரப் படகு ஓட்டுவதிலும்கூட அவருக்குத் திறமையிருந்தது.
இதே வேகம் அவருடைய நட்பிலும் இருக்கும். பழகிவிட்டால் அப்படி பாசம் காட்டுவார். அவர் அலுவலகத்துக்குப் போனால் மற்றவர்களுக்கு முன்னால் அவர் நம் மீது ஏற்படுத்தும் முக்கியத்துவம் ஆச்சர்யப்படுத்தும். 'முகவரி' படப்பிடிப்பில் அவர் எனக்கு ஜோதிகாவை அறிமுகப்படுத்தியவிதம் எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. என் மீது மிக உயர்வான மரியாதை இருந்தது. அதே போல பத்திரிகையாளர்களில் என் மீது கோபப்பட்டது மாதிரி வேறு யாரிடமும் கோபப்பட்டிருப்பார் என்றும் சொல்ல முடியாது.
சினிமா தொழிலாளர்களும் தயாரிப்பாளர்களும் பெப்சி- படைப்பாளி என்று பிரிந்திருந்தபோது அஜீத் தொழிலாளர் பக்கம். அப்போதே நிறைய தயாரிப்பாளர்கள் இவர் மீது விரோதம் பாராட்ட ஆரம்பித்தார்கள். 'வாலி' மட்டும் தோல்வி அடைந்திருந்தால் அப்போதே அஜீத் வதமாகியிருப்பார். தொடர்ந்தது அஜீத்தின் பாய்ச்சல். சினிமாவில் எந்தவிதக் குடும்பப் பின்னணியும் இல்லாமல் வந்தவராக இருந்தும் அவருடைய வெற்றிகளினால் மட்டுமே எழுந்து நின்றார். 'ஜனா', 'ராஜா', 'ஆஞ்சநேயா', 'உன்னைக் கொடு என்னைத் தருவேன்' எனத் தொடர்ந்து அவருடைய படங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தன. "என்ன சார் தொடர்ந்து தோல்விப் படமா கொடுக்கிறீங்களே'' என்றேன். தன்னம்பிக்கையோடு பதில் சொன்னார். "இத்தனை தோல்விப் படங்கள் கொடுத்திருந்தால் தமிழ்ல ஒரு நடிகனாவது ஃபீல்ட்ல இருக்க முடியுமா? என் படம் இப்ப ரிலீஸ் ஆனாக்கூட ஓபனிங் இருக்கும்'' என்றார். ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பதைவிட துணிச்சலான பதிலில் சிறிது நேரம் சிலாகித்து நின்றுவிடுவேன்.
கார்கில் போரின் போது திரைப்பட நட்சத்திரங்கள் எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து நட்சத்திரக் கிரிக்கெட் நடத்தினார்கள். கலைநிகழச்சி நடத்தி பணம் சேகரித்தார்கள். அஜீத் மட்டும் எதிலுமே கலந்து கொள்ளவில்லை. ஏன் என்று கேட்டேன். "இத்தனை கோடி ரூபாயை கொட்டிக் கொடுப்பது எதற்காக... ராணுவ வீரன் செத்துப் போனால் அதற்கு ஈட்டுத் தொகை தருவதற்கு அரசாங்கம் இருக்கிறது. இவர்கள் தருகிற பணம் செத்துப் போன அந்தச் சகோதரர்களின் குடும்பத்துக்கா போகிறது? இங்கே தமிழ் நாட்டில் ஏழெட்டு ராணுவ வீரர்களை கார்கில் போரில் இழந்திருக்கிறோம். நாம் கார்கில் நிதி தந்ததால் அவர்கள் குடும்பத்துக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டதா? நாம் கொட்டிக் கொடுத்த பணம் எங்கே போனது'' என்றார்.
நானும் 'கார்கில் நிதி எங்கே, கணக்கு கேட்கிறார் அஜீத்' என்று எழுதினேன். மறுநாளில் இருந்து அஜீத்தை யாரும் தூங்கவிடவில்லை. தேசபக்திக்கு எதிரானவர் என்று சிலரும் தமிழ்த்திரையுலகுக்கே எதிரானவர் என்றும் தி.மு.க.வுக்கு எதிரானவர் என்றும் அவருடைய தலை உருண்டது.
"நான்தான் சொன்னேன் என்றாலும் நீங்களும் அப்படியே போட்டுவிடுவதா?'' என்று கோபித்துக் கொண்டார். இந்த மாதிரி ஒரு கோபத்துக்குப் பிறகு நானும் அவரிடம் வெகுநாட்களாகப் பேசாமல் இருந்தேன்.
குஷ்பு-சுந்தர்.சி. திருமணம். பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடந்தது. அஜீத் வந்தார். என்னைப் பார்த்துவிட்டு என் அருகில் வந்து அமர்ந்தார். "ரொம்ப சாரி'' என்றார். வேறு எதுவுமே பேசவில்லை. சுமார் பத்துமுறை அதை மட்டுமே திரும்பத் திரும்பச் சொன்னார். வருத்தம் தெரிவிப்பதிலும் அவ்வளவு வேகம்.
சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்!
எதெல்லாம் தமிழ் சினிமாவில் முடியாது என்று நினைக்கிறோமோ அதையெல்லாம் நடத்திக் காட்டுகிற ஆர்வம் இயக்குநர் ஷங்கருக்கு உண்டு. சாலையெல்லாம் பெயிண்ட் அடிப்பது, ஒரு லட்சம் பானைகளை வாங்கி அதன் நடுவே நடிகர்களைப் பாடி ஆட வைப்பது, உலக அதிசயங்களையெல்லாம் ஒரே பாட்டில் காட்டுவது, கமல்ஹாசனை 70 வயதுக் கிழவனாக நடிக்க வைப்பது என்று தொடர்ந்து அவர் படத்தில் சில அம்சங்கள் இருக்கும். எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினையைப் பிரமிப்பான விதத்தில் தீர்த்து வைப்பது அவருடைய பாணி. ஊழலை வர்மக் கலை தெரிந்த கிழவன் தீர்த்து வைப்பது, லஞ்சமும் ஜாதிய வெறியும் உள்ள அரசியல் வாதியை ஒரு நாள் முதல்வனாக இருந்து தீர்த்துக் கட்டுவது, அப்பளம் போடும் அப்பாவி (போன்ற?) பிராமணன் ஒருவன் தமிழ்நாட்டு போலீஸ் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவது என்று ஒருவிதமான சுவாரஸ்யத்தைக் கண்டுபிடிப்பார். அதற்கு கிராபிக்ஸ், பிரமாண்டம், பாம்பே நட்சத்திரங்கள், கங்காரு, ஒட்டகம், ஏ.ஆர்.ரஹ்மான், பானை, ஓட்டை உடைசல் பாட்டில்கள் எல்லாம் சேர்ப்பார். அவருடைய தனித் திறமையே எல்லாருடைய திறமைகளையும் (சில நேரங்களில் அவர்களுக்கே தெரியாமலும் இருக்கும்) மிக லாவகமாக ஒருங்கிணைப்பதுதான்.
குமுதம் இதழில் பணியாற்றியபோது அவருடைய வாழ்க்கைப் படிப்பினை மூலமாகப் புதிதாக வரும் இளம் இயக்குநர்களுக்கு நம்பிக்கை தருகிறமாதிரி ஒரு தொடர் எழுத உத்தேசித்தோம். நீண்ட யோசனைக்குப் பிறகு அந்தத் தொடருக்கு சம்மதித்தார். சங்கரூ... என்று அழைக்கப்பட்டவர் ஷங்கர் ஆன கதை அது. தலைப்பு 'சங்கர் முதல் ஷங்கர் வரை' என்று வைத்தோம். என்னென்னவெல்லாம் எழுதலாம், தன் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க வேண்டியவர் யார், யார்? திருப்பு முனை ஏற்படுத்தியவர் யார்? என்றெல்லாம் நிறைய சொன்னார். அதையெல்லாம் பட்டியில் இட்டுக் கொள்வதற்காகவே நான்கைந்து நாள்கள் பேசினோம். "நீங்கள் எழுதிக் காட்டுங்கள். எப்படி வந்திருக்கிறது என்று நான் ஒருமுறை பார்த்துக் கொள்கிறேன். அப்புறம் அச்சுக்குக் கொடுத்துவிடுங்கள்'' என்றார். எல்லாவற்றுக்கும் சம்மதம் சொல்லியாகிவிட்டது. கதை விவாதம் போல அவ்வளவு சிரத்தையாக அதில் ஈடுபட்டார். எங்கள் சந்திப்பின் போது வேறுயாரையும் சந்திக்க மாட்டார். போன்கூடப் பேச மாட்டார். எனக்கும் சேர்த்து அவர் வீட்டில் இருந்து சாப்பாடு வரும். அவ்வளவு கவனத்தோடு இருந்தார். பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அந்த நேரத்தில் அவரைச் சந்திக்க முடியாமல் திரும்பிப் போயிருக்கிறார்கள்.
அந்த வாரக் குமுதத்தில் அறிவிப்பும் வைத்தோம். அறிவிப்பைப் பார்த்துவிட்டு ஷங்கர் எனக்கு போன் செய்தார். "இந்தத் தொடரை எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை, நிறுத்திவிடுங்கள்'' என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. குமுதம் நிர்வாகத்துக்கு என்ன பதில் சொல்வதென்றும் புரியவில்லை. அலறி அடித்துக் கொண்டு அவருடைய அலுவலகத்துக்கு ஓடினேன்.
"ஏன் ஸார்?''
"வாரா வாரம் என்னிடம் பேசிவிட்டு நீங்களாகத் தொகுத்து எழுதுவதாகத்தானே பேசினோம்.. 'ஷங்கர் எழுதும்' என்று அறிவிப்பு வைத்தால் என்ன அர்த்தம்?''
"சினிமா துறையினர் வாழ்க்கைத் தொடர் எல்லாமே அப்படித்தான். அவர்கள் சொல்ல சொல்ல அதைப் பத்திரிகையாளர் எழுதுவார்கள்... அவர்கள் எழுதுவதாகப் போடுவார்கள்.''
"நீங்கள் எழுதுவதாக வந்தால்தான் இதற்கு நான் சம்மதிப்பேன். அல்லது நானே எழுதித் தரவேண்டும் என்றால் இப்போது எனக்கு அதற்கு நேரமில்லை.''
"நீங்கள் எழுதுகிறீர்கள் என்று போட்டால்தான் எங்கள் விற்பனைக்கு உதவும்'' என்றேன். கடைசி வரை சம்மதிக்கவே இல்லை.
ஆசிரியர் குழுவில் பேசினேன். ஒவ்வொரு வாரமும் தொடரின் இறுதியில் 'சந்திப்பு: தமிழ்மகன்' என்று வெளியிடுவதாகக் கூறினார்கள். அதன் பிறகே அந்தத் தொடர் வெளியானது.
அவருடைய பிடிவாதத்தில் ஒளிந்திருந்த மெல்லிய நேர்மையையும் எதிலும் எடுத்துக் கொள்ளும் கவனத்தையும் ரசித்தேன். அவருடைய முதல் படத்தின் டைட்டிலைப் போலவே அவர் இருந்தார்.
ஒரு சமையல் குறிப்பு:
டி.வி.யில் மைக்ரோவேவ் சமையல் குறிப்புகள் சொல்லிக் கொண்டிருந்தார் நடிகை வினோதினி.
எனக்குள் அவர் குறித்து வேறு சமையல் குறிப்புகள் ஓடின.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வடபழனி கமலா திரையரங்குக்குப் பின்புறம் ஒரு வாடகை வீட்டில் இருந்தார். குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் வண்ண வண்ணப் பூக்கள் மூலமாக கதாநாயகியாக ஆன நேரம். பத்திரிகையாளர்கள் யாராவது சென்றால் அவர் வீட்டில் சாப்பிடாமல் வெளியேறவே முடியாது. அவரே தோசை வார்த்துப் பரிமாறுவார். டீ போட்டுத் தருவார். அவருடைய அம்மாவும் அப்படிப் பரிமாறுவார்கள். வீட்டில் இருந்தால் மட்டும்தான் என்றில்லை. படப்பிடிப்பில் பார்க்கும்போதும் புரடக்ஷன் ஆள்களைக் கூப்பிட்டு "இவருக்குச் சாப்பிட ஏதாவது கொடுங்கள்'' என்பார். ஆச்சர்யமாக இருக்கும்.
ஒருமுறை "எதற்காக இப்படி வற்புறுத்துகிறீர்கள். எனக்குப் பசிக்கிறது என்றால் நானே கேட்கிறேன்'' என்றேன்.
அவர் ஒரு சம்பவம் சொன்னார். அப்போது தாய் பத்திரிகையில் (89- 92 வாக்கில் ) மனோஜ் என்றொரு பத்திரிகையாளர் இருந்ததாகவும் சிறிய வயதில் சரியான நேரத்தில் ஒழுங்காகச் சாப்பிடாததாலேயே அவர் சின்ன வயதில் இறந்து போனதாகவும் சொன்னார். "பத்திரிகையாளர்கள் செய்திக்காகச் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். பல பத்திரிகைகளில் ஒழுங்காகச் சம்பளமும் கொடுப்பதில்லை. என்னால் முடிந்தது அவர்களைச் சாப்பிட வைப்பதுதான்'' என்றார்.
இத்தகைய குறைந்தபட்ச கொள்கைகளில்தான் எவ்வளவு நியாயங்கள் பொதிந்து கிடக்கின்றன.
2 கருத்துகள்:
//"இத்தனை தோல்விப் படங்கள் கொடுத்திருந்தால் தமிழ்ல ஒரு நடிகனாவது ஃபீல்ட்ல இருக்க முடியுமா? என் படம் இப்ப ரிலீஸ் ஆனாக்கூட ஓபனிங் இருக்கும்''//
எனக்கு தெரிந்து இப்போது இருக்கும் இளைய தலைமுறை நடிகர்களில் அஜித்துக்குத்தான் தீவிரமான ரசிகர் கூட்டம் உண்டு. அதனால்தான் இத்தனை flop கொடுத்தும் opening வசூல் குறையாமல் இருக்கிறார்.
U are absolutly right. Thanks for comment.
கருத்துரையிடுக