சுஜாதாவின் சிருஷ்டி
"என்ன பாஸ்.. ஹெள ஈஸ் லைப்?''
வாழ்க்கை பற்றியெல்லாம் விசாரிக்கும் வசந்தை பெருந்தன்மையுடன் பேராசிரியர் போல பார்த்தான் கணேஷ்.
"வயசாயுடுச்சி வசந்த் உனக்கு..''
"யாருக்காவது ரேகை பார்க்கலாம் என்றால்... வேண்டாம் அங்கிள் என்று அலறுகிறார்கள்''
கணேஷ் சிரித்தான். "வேறு முயற்சிகள் தேவைப்படுகிறது..''
"சுஜாதா சார் இல்லாமல் போனதால் நாம் அப்டேட் ஆகாமல் போயிட்டோம். இருப்பதை வைத்து வண்டி ஓட்டினால் இப்படித்தான்.''
கணேஷ் ஆமோதிப்பதுபோல சிரித்தான்.
தம்முடைய நல்லது, கெட்டது, சவால், வெற்றி, சாதனை எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்தவரை சற்றே ஆகாயத்தைப் பார்த்து நினைத்துக் கொண்டான்.
"நாம் யார் யாருக்கோ வாதாடினோம். அவருக்காக வாதாட நமக்கு வழியில்லாமல் போய்விட்டது.. பச்''
"ஏன் பாஸ் அப்படி சொல்கிறீர்கள்?''
"ஜெயமோகன் என்ன எழுதியிருக்கிறார் பார்த்தியா?''
"இலக்கியத்தில் அவருடைய இடம் அவருடைய சயின்ஸ் பிக்ஸன் கதைகள், புறநானுறு.. அகநானுறு உரைகள் போன்ற பலவற்றையும் கறராக விமர்சனம் செய்திருக்கிறார். வாசகரை அதன் ஆழத்துக்குக்குக் கொண்டு செல்லாமல் திசை திருப்புபவை என்றும் வணிகரீதியான எழுத்துக்கு ஆட்பட்டவர் என்றும் எழுதியிருந்தாரே.''
கணேஷ் "ஏதாவது பதிலடியாக செய்ய வேண்டும் என்று துடிப்பாக இருக்கிறது. உனக்குத் தோன்றவில்லையா?''
"பாஸ் உங்களை இவ்வளவு வருத்தப்பட்டு நான் பார்த்ததே இல்லை.''
"பட்டிருக்கிறேன். வெளியில் காட்டிக் கொள்வதில்லை. லண்டனில் ப்ரியா இறந்து போனதாக நம்ப வைக்கப்பட்டபோது.. பிரிவோம் சந்திப்போம் மதுமிதா ஆக்ஸிடண்டில் இறந்தபோது.. இப்படி நிறைய ஆனால் இது வருத்தமில்லை.. ஆதங்கம்''
"என்ன செய்யலாம் சொல்லுங்கள் பாஸ்?''
"இலக்கிய சர்ச்சைகள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.... ஏற்கெனவே தலைவருக்கும் ஜெயமோகனுக்கும் சண்டையில்தான் நட்பே ஏற்பட்டது தெரியுமா? ரப்பர் நாவலுக்காக அவர் அகிலன் விருது பெற்ற போது தமிழில் நாவல்களே வரவில்லை என்பதாகப் பேசினார். நம்ம தலைவருக்கு கோபம். "விருது வாங்கும்போது நம் எழுத்தாளர்களுக்கு ஒரு மெஸ்ஸய்யா மனப்பான்மை வந்துவிடுகிறது. தமிழலக்கியம் பற்றி எதையாவது குறிப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டு எதையாவது சொல்கிறார்கள்.'. என்று ஆரம்பித்து ஒரு கட்டு கட்டினார். அதன் பிறகு ஜெயமோகனும் அந்த அர்த்தத்தில் நான் சொல்லவில்லை என்று மறுத்துக் கூறிவிட்டார். அதெல்லாம் பழைய கதை. அதற்கப்புறம் இரண்டு பேரும் ஆழ்வார்கள் பற்றியெல்லாம் மிகவும் சிலாகித்துப் பேச ஆரம்பித்து நன்றாகவே பழகிவிட்டார்கள்.''
"இப்போது?'' வசந்த் அலுப்புடன் கேட்டான்.
"சுஜாதா இறந்த அன்று இரவு முழுவதும் தூங்காமல் அவருடைய நினைவைப் போற்றியவர் ஜெயமோகன். இருக்கட்டும். ஜெயமோகன் சொன்னது இலக்கிய உலகம் சார்பான கேள்வி. அவர் பிரதிநிதி. எல்லோர் சார்பாகவும் அந்தக் கேள்விகளைப் பார்க்கிறேன். இன்னும் சிலரோ காமெடியாக எழுதுவாரே அவரா என்கிறார்கள். வேறு சிலரோ அவரை செக்ஸியாக எழுதுபவர் என்கிறார்கள். விவாதம் என்று வந்துவிட்டால் அதற்குப் பொருத்தமாக பதில் சொல்லியாகவேண்டும். இதுபோன்ற கேள்விக்கெல்லாம் தலைவர் எப்போதோ பதில் சொல்லிவிட்டார்.''
"75-ல் சொர்க்கத் தீவு எழுதியபோதே அவர் ஆங்கிலக் கதைகளைக் காப்பியடித்து எழுதுகிறார் என்று பிரச்சினை வந்தது.. அந்த நாவலுக்கான முன்னுரையில் அவர் யாரையெல்லாம் காப்பியடித்து அந்த நாவலை எழுதினார் என்று பட்டியலிட்டவர்களுக்கு மேற்கொண்டு அவரே வேறு சில எழுத்தாளர்களின் நூல்களையும் சொன்னார்.''
"வசந்த் நீ எனக்குக் கிடைத்தது வரம். இருக்கட்டும். அதில் அவர் ஜார்ஜ் ஆர்வெல்லின் "1984'-ஐயும் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் "பிரேவ் நியூ வேர்ல்டை'யும், ஐரா லெவினின் "திஸ் பர்பெக்ட் டே'வையும் காப்பியடித்து எழுதினார் என்று சொன்ன குற்றச்சாட்டுகளை சுஜாதாவே வழிமொழிவார்... ஆர்தர் கிளார்க், பே பிராட்பரி, ஹென்ரி ஸ்லெஸர், தியோடர் ஸ்டர்ஜென், ஆன்டனி பர்கெஸ் என அதைப் போல எழுதிய எல்லாரையும் சொல்லுவார். நான் காப்பியடிக்க வேண்டுமென்றால் ஒரு லைப்ரரியையே காப்பியடிக்க வேண்டும் என்பார்.''
"காப்பியடிப்பதற்கும் ஒரு ஐடியாவை நமது சிந்தனைக்கு ஏற்ப வளர்த்தெடுப்பது என்பது வேறு. சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்க அந்த அய்யங்கார் என்ஜினியர் படுகிறபாடு.. ரொம்ப காமெடி... அந்தத் தீவில் சிறுநீர் கழிப்பதை உடலில் இருந்து நீர் அகற்றுவது என்பார்கள்... செக்ஸ் உணர்வுகள் அற்ற பெண்கள்... பெண்களும் ஆண்களைப் போலவே பொது இடத்தில் பனியனைக் கழற்றுவார்கள்... அந்த அய்யங்கார் குறுகுறுவென குற்றம்புரிய தயாராகிற இடம்.. ''
"போதும் நிறுத்து''
"சாப்பிட பால் வேண்டுமா என்று கேட்கும்போது... "இங்கே பாலே இல்லை என்று நினைத்தேன் என்றேன், சிலேடையாக' என்பான்''
"போதும் வசந்த்... இப்போது சுஜாதாவை பாராட்டிக் கொண்டிருப்பதற்காகவா உன்னை வரச் சொன்னேன்?''
"இரண்டு பேரும் மாறி மாறி பாராட்டிக் கொண்டிருப்பதில் பொருளில்லை. விவாதிக்க வேண்டும்.''
"அவருடைய இலக்கிய பங்களிப்பு, சினிமா பங்களிப்பு.. அறிவியல் பங்களிப்பு எல்லாவற்றையும் அலச வேண்டும்''
வசந்த் தன் பாஸ் ஏதோ புதிதாக சொல்ல வருவதை உத்தேசித்து காத்திருந்தான்.
"இன்னையிலிருந்து ஒரு வாரத்துக்கு நீதான் சுஜாதாவின் பரம விரோதி... சுஜாதா பற்றி என்னென்ன புகார்கள் உண்டோ அத்தனையும் சொல். நான் பதில் சொல்கிறேன்.''
"ஐயோ பாஸ்... கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் எதிரில் இருக்கிற 17 மாடி கட்டிடத்தில் இருந்து கீழ குதிக்கச் சொல்லுங்க குதிக்கறேன். மெட்ராஸில் எல்.ஐ.சி.க்கு அப்புறம் உயரம் அதுதானே பாஸ்?''
"கடிக்காதடா.. சீக்கிரம் சுஜாதாவின் விரோதியாக மாறு...''
"எப்பிடி பாஸ் அவருக்கு பரமவிரோதியா...?''
"நெருப்புன்னா வாய் வெந்துடுமா என்ன?''
"என்ன ஆச்சு பாஸ்... இது "கௌரவம்' படத்தில் சிவாஜி பேசுகிற டயலாக்''
"தெரியும்.. இதுதான் சுஜாதா கோர்ட். நீதான் பப்ளிக் பிராஸிக்யூட்டர்.. சுஜாதாவின் பரமவிரோதி. ஆரம்பி.''
(அடுத்த வாரம்)