உலக மனிதர்களின் வீடியோ ஆல்பம்
மிக சுவாரஸ்யமான நாற்பத்தியாறு சிறுகதைகளை படிக்கிறீர்கள். ஒவ்வொரு சிறுகதையும் மலைக்க வைக்கின்றன. அதில் இடம் பெறும் சம்பவங்களும் அதை விவரித்திருக்கும் முறையும் இப்படியெல்லாம் நாம் வாக்கியங்கள் அமைக்கவில்லையே என்று ஏங்க வைக்கின்றன. படைப்பின் பிரமிப்பே இதுபோல் நாம் ஏன் உருவாக்கவில்லை என்ற ஏக்கத்தை உருவாக்க வைப்பதுதானே? இந்த நூல் அதைச் செய்கிறது.
ஆனால் இந்த நூல் அவருடைய சிறுகதைத் தொகுதி அல்ல. எல்லா அத்தியாயங்களுக்குள்ளும் இழையாக ஒரு தொடர்பு இருக்கிற போதும் இது நாவலும் அல்ல. இது சுயசரிதை. எல்லோருக்குமே பிறந்து, வளர்ந்து, சாதித்து, தவறி வீழ்ந்து, எழுந்து என்று எத்தனையோ அனுபவங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
நாற்பத்தியாறு அத்தியாயங்கள் கொண்ட சுயசரிதை என்று தெரிந்துதான் வாசிக்க ஆரம்பித்தேன். அது ஒருபோதும் ஞாபகத்தில் தங்கவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு சுவாரஸ்யமான ஆரம்பமும் அதன் பிறகு திருப்பங்களும் ஒரு எதிர்பார்க்காத முடிவும் இருந்ததுதான் அதற்குக் காரணம்.
சூடானில் ஒரு இரவு விருந்துக்குப் போய் வந்ததை எழுதியிருக்கிறார்.
ஒரு சோறு பதம்போல அதை இங்கே பார்ப்போம்.
"இடம் சூடான். வருடம் 1989. மாதம் ஞாபகமில்லை. ஒரு சனிக்கிழமை இரவு. நேரம் 7.58." முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது.
சம்பவம் நடந்த இடம் எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். அதிலும் ஒரு நாட்டில் வேலை பார்த்தபோது நடந்த சம்பவமென்பதால் அதில் பிசகு இருக்காது. ஆண்டும் அப்படித்தான். இவர் அங்கு பதவி ஏற்ற ஆண்டு அது. மாதம் ஞாபகமில்லை ஆனால் கிழமை ஞாபகமிருக்கிறது. ஏனென்றால் ஒரு வார இறுதி நாளின்போதுதான் அந்த விருந்து நடைபெற்றது. இரவு என்பதும் ஓ.கே. நேரம் 7.58..? அவருக்கு முன்னால் கடிகாரம் ஒளிந்து கொண்டிருந்திருக்க வேண்டும். எவ்வளவு நம்பகத்தன்மையோடும் நுட்பமாகவும் இருக்கிறது பாருங்கள்.
புதிதாக குடிவந்த நாட்டில் வழக்கம் போல அவருடைய மனைவிதான் இந்தப் புதிய நட்பை உருவாக்கக் காரணமாக இருக்கிறார்.
ஒரு பெரிய பிளேட்டில் உணவு அவருக்கு வைக்கப்பட்டிருந்தது. அவர் சாப்பிடப் போவதை மூன்று ஜோடிக் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன என்கிறார். ஒன்று அவருடன் வந்த அவருடைய மனைவியினுடையது. இரண்டாவது விருந்துக்கு அழைத்த எலேனாவின் கண்கள். மூன்றாவது கண்களுக்குச் சொந்தக்காரர் யாரென்று அவர் சொல்லவில்லை.
எலேனா சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் அவர் ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் என்பதையும் சொல்லிச் செல்கிறார். நடந்து வருவதைப் பார்த்தாலே அவர் ஒரு உடற்பயிற்சி நிபுணர் என்பது தெரிந்துவிடும் என்கிறார். சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீராங்கனை அவருக்கு ஞாபகம் வருகிறார். அவர் மார்ட்டினா ஹிங்கிஸ் என்ற டென்னிஸ் வீராங்கனை. "209 வாரங்களுக்கு டென்னிஸ் உலகத்தில் பெண்களுக்கான முதலாம் இடத்தைக் கைப்பற்றியவர் அவர். அவரைப் போலவே தோற்றம் எலேனாவுக்கும்' என்கிறார்.
எலேனாவின் கணவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டியுள்ள ஒரு என்ஜினியர். இவர்கள் விருந்துக்குப் போன போதும் அவர் ஏதோ நாட்டுக்குப் போயிருக்கிறார்.
இரண்டு முறை எலேனா இவர்கள் வீட்டிக்கு விருந்துக்கு வந்திருக்கிறார். இது இவர்கள் முறை. மரக்கறிக்குப் பழகியிருந்த முத்துலிங்கம் புதுப்புதுவிதமான கற்பனைகளை ஜோடித்து விருந்துகளில் இருந்து தப்பித்து வருகிறார். ஆனால் எலேனா பிடிவாதக்காரியாக இருக்கிறார். இவருடைய வீட்டுக்குத் தொலைபேசி வருகிறது. இவருக்கு என்னென்ன காய்கறிகள் பிடிக்கும், என்னென்ன பிடிக்காது என்று இவருடைய மனைவியிடம் புள்ளி விவரங்கள் சேகரிக்க ஆரம்பிக்கிறார். இவர் பியர் குடிப்பாரா என்பது அதில் ஒரு கேள்வி. பதில் ஆம் என்று தெரிவிக்கப்படுகிறது.
விருந்துக்குக் கிளம்புகிறார்கள். ஒம்டுர்மான் நகரத்தில் நைல்நதிக் காற்றி வீசும் தூரத்தில் எலேனாவின் வீடு இருக்கிறது. எலேனா வாசல் வரை வந்து வரவேற்கிறார். அவருடைய புஜங்கள் வசீகரமானவை. ஆனால் அன்று அவர் அணிந்திருந்த பட்டு ஆடை, புஜங்களை மறைத்ததோடு அல்லாமல் அவருடைய அழகிய பாதங்களையும் மறைத்து தரையில் தவழ்ந்து கிடக்கிறது. அவர் கடந்து போன சில வினாடிகள் கழித்து அவர் அணிந்திருந்த ஆடையின் கடைசி நுனி கடந்து போகிறது.
முகமன் கூறும் முன்னரே பாதையில் அவர்கள் பார்த்த வயலட் பூ கன்றுகள் பற்றி பேச்சு ஆரம்பமாகிவிடுகிறது. உலகத்தில் காணப்படும் அத்தனை வண்ணங்களிலும் அவரிடம் பூச்செடிகள் இருப்பதாகக் கூறுகிறார் எலேனா.
இப்போது மூன்றாவது ஜோடி கண்ணுக்குச் சொந்தக்காரர் அறிமுகமாகிறார். அவர் பீட்டர். அந்த வீட்டின் வேலைக்காரன். கென்யா நாட்டைச் சேர்ந்தவன். யாரோ பொருத்திவிட்டது போல தலையை ஒரு பக்கம் சாய்த்தபடி எல்லா வேலைகளையும் செய்கிறான். பூப்பபோட்ட சட்டையும் கண்களைக் கூச வைக்கும் நீலநிற பேண்டும் சாலையோரத்தில் வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும். வசதி குறைந்தவர்களுக்கு அங்குதான் வியாபாரம். எத்தனையோ விருந்தினருக்குப் பணிவிடை செய்த அனுபவம் அவனிடமிருக்கிறது. எலேனாவின் உபசாரம் சற்றே சுணங்கும் இடங்களில் அதை நிவர்த்தி செய்பவனாக இருக்கிறான்.
தான் உணவு தயாரிக்க எடுத்த முயற்சியை விவரிக்கிறார் எலேனா. சுவிஸ் உணவில் பியர், முட்டை, தக்காளி, காளான் போன்ற கூட்டுப் பொருள்கள் கலக்கப்பட்டு இருந்தன. ஆனால் அதன் இறுதி வடிவம், பதம் தப்பிப் போன உளுத்தம் களி போல தென்படுகிறது.
அப்போது அங்கு சாதிக் அல் மாஹ்டியின் ஆட்சி நடக்கிறது. மது வாங்க, விற்க, குடிக்க தடை. சுவிஸ் உணவைப் பரிமாற வேண்டும் என்ற ஆசையில் எங்கிருந்தோ இருபது மடங்கு விலை கொடுத்து பியர் வாங்கி அதைத் தயாரித்திருக்கிறார். முதல் துண்டை வாயில் போட்டதும் அம்மா மூக்கைப் பிடித்துக் கொண்டு வாயில் ஊற்றிய ஆமணக்கு எண்ணெய்யின் மணம் ஞாபகம் வருகிறது. உணவை உண்ணும் கஷ்டத்தோடு வாயில் புன்னகையைத் தவழவிடுவது பெரிய கஷ்டமாக இருக்கிறது அவருக்கு. மனைவியைக் கடைக்கண்ணால் பார்க்கிறார். அவர் வழக்கமாகச் சாப்பிடும் உணவைப் போலவே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
வயிற்றுக்குள் செலுத்தப்பட்ட உணவு திரும்பி வருவதற்கு விருப்பம் காட்டுகிறது. நல்ல சிந்தனைகளையும் நல்ல வாசனைகளையும் நினைத்து அதைக் கட்டுப்படுத்துகிறார். தக்காளி கிச்சப்பையும் கோக்கையும் குடித்து சமாளிக்கப் பார்க்கிறார். முடியவில்லை. குமட்டல் அபாயகரமான கட்டத்தைத் தாண்டுகிறது. தன்னுடைய நாட்டவர், மூதாதையர், வேலை செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், மனைவி, பிள்ளைகள் எல்லோருடைய கௌரவமும் வாயின் நுனியில் அந்தக் கணம் நிற்கிறது. இனி எழுந்து கொள்ளலாம் என்று நினைத்த நேரத்தில் பீட்டர் தோன்றுகிறான். சொர்க்கத்தின் கதவின் சாவியை யேசுவிடம் பெறுவதற்கு ஓடியவரின் வேகத்தோடு ஓடிவந்து மீதி உணவையும் முத்துலிங்கத்தின் தட்டில் பிரியத்தோடு பரிமாறுகிறான். எலேனாவின் உபசாரம் சுணங்கிய தருணங்களில் பீட்டர் அதை இட்டு நிரப்புவான் என்றாரே, அதுதான் இது.
தாம் ஆசையாகச் சாப்பிட்ட உணவை பார்சலும் செய்து தருகிறார் எலேனா. பியர் ஊற்றி தயாரிக்கப்பட்ட அந்த உணவு புளிக்கப் புளிக்க சுவை கூடும் என்கிறார். அதை ஒரு கையிலும் ஆப்ரிக்க வயலட் செடிக் கன்று மறுகையிலுமாக காரை நோக்கி நடக்கிறார். கார் சாவி அவருடைய வாயிலே தொங்கிக் கொண்டிருக்கிறது.
அன்றைய விருந்தில் அவருடைய வாயின் உச்சபட்ச பயன்பாடு அதுதான்.... இப்படி முடிகிறது அந்த அத்தியாயம்.
இதிலே நாம் கவனிக்க வேண்டியது அவருடைய நகைச்சுவை உணர்வு. அதை அவர் பிரத்யேகமான ஒரு நடையில் சொல்வது அடுத்தது. மூன்றாவது நைல் நதிக்காற்று வீசும் வீடு போன்ற நுணுக்கமான கவனிப்பு.
இது மூன்றும் இவருடைய மிகப் பெரிய பலம். அவருடைய நண்பர் ஒருவரை டொராண்டோவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வைத்தியம் பார்க்கக் கொண்டு செல்கிறார்கள். அற்பக் காரியத்துக்காகவும் வேறு ஒருவருடைய உதவியை எதிர்பார்க்கும் நிலைமை. கண்கள் மட்டுமே இப்படியும் அப்படியும் அசைகின்றன. அங்கே சென்று வைத்தியம் பார்த்த பிறகும் இறந்து போகிறார். டொரான்டோவுக்கும் கலிபோர்னியாவுக்கும் மூன்று மணி நேர வித்தியாசம். அன்றைக்கு அவர் சாதித்ததெல்லாம் ஒரே நாளில் மூன்று மணிநேரம் அதிகமாக வாழ்ந்ததுதான் என்கிறார்.
ஆப்ரிக்காவில் இவர் தலைமையில் நடந்த பஞ்சாயத்து வேடிக்கையானது. ஆழ்ந்து யோசித்தால் அது நம் கற்பு பற்றிய கற்பிதங்களைத் தூள் தூள் ஆக்குகிறது.
முயலைப் பார்க்க வரும் பெண்ணை ஒரு ஆப்ரிக்கன் விரட்டி அடிக்கிறான். கொஞ்ச நாளில் அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது. அவள் தாய்மை அடைந்ததற்கு விரட்டி அடித்த ஆப்ரிக்கன்தான் காரணம்.
எப்போது அவளை நீ கர்ப்பமாக்கினாய் என்று விசாரிக்கிறார் முத்துலிங்கம். அவனோ அவளை விரட்டும் போது அவள் சிக்கிக் கொண்ட போதெல்லாம் அப்படிச் செய்தேன் என்கிறான். போததற்கு அவளாகவே சில நேரம் சிக்கிக் கொண்டதாகவும் சொல்கிறான்.
எங்கே உறவு வைத்துக் கொண்டாய்? என்று கேட்கிறார். ஆனால் இது அவசியமற்ற கேள்வி என்பது அ.மு.வுக்குத் தெரிகிறது. அங்கேதான் நிற்கிறார் முத்துலிங்கம். அவருடைய ஆப்ரிக்க அனுபவங்கள் வேறெங்கும் படித்திருக்க முடியாதவை. ஏரோப்ளேனில் துண்டு போட்டு சீட்டு பிடிக்க முடியுமா? நடக்கிறது. பாஸ் போர்ட்டை ஒருத்தனிடம் கொடுத்துவிட்டு அதற்கான ரசீதாக ஏதோ தினசரியின் ஒரு துண்டு மூலையில் பெற்றுக் கொண்டு திண்டாடுவது, மலேரியா காய்ச்சல் என்று ஆப்ரிக்கா அனுபவங்கள் அனைத்தும் படிக்கத் திகட்டாதவை.
தஸ்தயேவஸ்கியின் சூதாடி நாவலில் வரும் கதாநாயகன் பற்றிய குறிப்பு, சினுவா ஆச்சுபியின் சிதைவுகள் நாவலில் வரும் கதாபாத்திரம் பற்றிய குறிப்பு என அனைத்து விதத்திலும் ஆச்சர்யம் தருகிறார். இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்ரிக்கா, கனடா என அவருடைய அனுபவப் பரப்பு விரிந்து கொண்டே போயிருப்பது அனைவருக்கும் கிடைக்க முடியாத சிறப்பம்சம்.
மனிதர்களையும் சம்பவங்களையும் ஒரு விடியோ ஆல்பம் போல மனக்கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிற இவர், தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம்.
நூல்: உண்மை கலந்த நாட்குறிப்புகள்
ஆசிரியர்: அ. முத்துலிங்கம்
உயிர்மை வெளியீடு,
11/29 சுப்ரமணியம் தெரு, அபிராம புரம்,
சென்னை- 18.
விலை: 170
www.thamizhstudio.com இல் இந்தப் பகுதி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்பிக்கப்படும்.