பெண் எழுத்தாளர் சிறுகதைகள்
தொகுப்பு : அ.வெண்ணிலா
எழுத்தாளர்களைப் பெண் எழுத்தாளர்கள், ஆண் எழுத்தாளர்கள் என்று வகை பிரிப்பது அவசியமா?
நிச்சயம் அவசியம்!
ஒரு உதாரணம் சொல்கிறேன்... ‘கேரள நடிகைகளின் கவர்ச்சிக்குக் காரணம் என்ன?’’ இந்தக்கேள்வியை பெண் எழுத்தாளர்களிடம் கேட்டால் இதையெல்லாம் ஒரு கேள்வியாகவே பொருட்படுத்த மாட்டார்கள். அல்லது கவர்ச்சி என்ற பதம் எதைக்குறிக்கிறது என்று கோபப்பட்டு ஆணாதிக்க சமூகத்தின் மொழி உருவாக்கம் குறித்து அலச ஆரம்பிப்பார்கள். வேறு ஏதோ சொல்லுவார்கள். ஆனால் இதோ இப்படியரு பதிலைச் சொல்லவே முடியாது.
எபத்தாளர் சுஷாதா சொன்ன பதில் இது:
‘தேங்காய்!’
கேரள நடிகைகளின் கவர்ச்சிக்கு தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் ஒரு விளைபொருளின் மருத்துவ குணங்கள்தான் காரணம் என்று சொல்லுகிற ஆசாமி இல்லை அவர். நிஷமாகவே தேங்காய்க்கு அப்படியரு மருத்துவகுணம் இருந்து அதை ஒரு பெண் எழுத்தாளர் எழுதியிருந்தால் வாசகரும் அதே அர்த்தத்தில் பொருள் கொள்வார்.
எழுதியவர் சுஷாதா என்ற ஆண் எழுத்தாளராயிற்றே.
ஒரே ஒரு வார்த்தையை ஆண் சொல்வதற்கும், பெண் சொல்வதற்கும் இத்தனை ‘அரசியல்’ இருக்கிற சூழலில்,,, ஒரு சிறுகதை, ஒரு நாவல் என்று பார்க்கும்போது நிச்சயம் அது மிகுந்த வித்தியாசங்களைக் கொண்டு இருக்கிறது.
அதனால்தான் ஷி. நாகராஷனால் ‘நாளை மற்றுமொரு நாளே’வையும் ‘குறத்தி முடுக்கு’வையும் எழுத முடிகிறது. பாஸ§ அலியாவா ‘மண் சட்டியை காற்று அடித்துப் போகாது’ எழுதுகிறார்.
எல்லா உயிரினங்களிலும் ஆண் - பெண் பால்களில் உள்ள வித்தியாசம் மனித சமூகத்தில் உளவியல் சிக்கல்களோடு சேர்ந்து மேலும் கடினப்பட்டு இருக்கிறது.
பொதுவாக உயிரினங்களில் பால் பிரிவினை என்பது ஆண் யானைக்குத் தந்தம் உண்டு; பெண் யானைக்குத் தந்தம் இல்லை போலவோ, பெண் கொசு இரத்தம் உறிஞ்சும்; ஆண் கொசு இரத்தம் உறியாது போலவோ உடலியல் சார்ந்ததாகவே உள்ளது.
பெண் கரப்பான் பூச்சிகளுக்கு கற்பு நெறி வலியுறுத்தப்படவில்லை. பெண் குதிரைகள் பூமி பார்த்து நடக்க வேண்டும் என்று கட்டாயமில்லை; பெண் பல்லிகளுக்கு இரவு பதினோரு மணிக்கு மேல் வெளியே போய் வருவதால் ஆண் பல்லிகளில் ஆபத்தோ கட்டுப்பாடோ இல்லை.
ஆக, உடலியல், உளவியல் காரணங்களும் பெண் எழுத்துக்களில் உண்டு.
பெண் எழுத்தாளர் அ.வெண்ணிலா தொகுத்த இந்த தொகுப்பில் 45 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் உள்ளன. வை,மு.கோதை நாயகி அம்மாள் தொடங்கி அ.வெண்ணிலா வரை 1930 முதல் 2004 வரையான கால இடைவெளியில் உருவான கதைகள் இவை.
ஆண் எழுத்தாளர்கள் சிலர் பெண்கள் பெயரில் எழுதியதால் ஏற்பட்ட குழப்பம் முதல் ஒரே பெயரில் இரு எழுத்தாளர் என்பது வரை இவற்றைத் தொகுக்க மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகியிருக்கிறார்; சில தவறுகள் கடைசி நிமிடத்தில் களையப்பட்டிருக்கின்றன.
‘என் குழந்தைகளுக்கும்
தாயாய் இருக்கும்
அம்மா வசந்தாவுக்கு...’
என இந்த நூலைத் தாய்க்குக் காணிக்கையாக்கியிருக்கிறார் வெண்ணிலா.
தாய்க்கு சமர்ப்பணம் என்று ஆண்களும் எழுதுகிறார்கள். ‘என் குழந்தைகளுக்கும்’ என்பதில் இருக்கிறது பெண் எழுத்து.
இந்த 75 ஆண்டு கால கனவுகளையும் அவற்றை எழுதியவர்களைப் பற்றிய குறிப்புகளைக் கண்டெடுப்பதிலுமே எவ்வளவு அவதிப்பட்டிருக்கிறார்கள். ‘ஆவணப் பாதுகாப்பு உணர்வு’ அற்ற சூழல் இதற்குக் காரணம். எவ்வளவு பேர் கணக்கில் வராமல் போனார்களோ என்றும் கூட எண்ண வேண்டியிருக்கிறது. இந்தத் தருணத்திலாவது இவற்றைத் தொகுத்து வெளியிட்டது காலத்தின் அவசியமாக இருக்கிறது. இதில் தொகுக்கப்பட்ட கதைகள் அந்தப் பெய் எழுத்தாளர்களின் ஆகச் சிறந்த கதையா என்ற விவாதங்கள் ஏற்படலாம். அது அவ்வளவு முக்கியமல்ல. எது சிறந்த கதை என்பது தொகுப்பவர்களின் ரசனைபாற்பட்டது. அது மாறுபடும். கால வரிசைப்படி தொகுத்ததே சாதனைதான். அதற்காக வெண்ணிலாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.