| ||||
அறிவியல் குறுந்தொடர்கதை அத்தியாயம்-2 கருப்பசாமியின் காவல்துறை அனுபவத்தில் இத்தனை விஞ்ஞான பூர்வமான பணியை எதிர் கொண்டதே இல்லை. இன்னமும் வீச்சரிவாள், அம்மிக்கல், பிளேடு இவற்றால் நடத்தப் பெறும் கொலைகளைத்தான் கேள்விப்பட்டிருந்தார். தடய அறிவியல் துறையில் இருந்து அவருக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அறிக்கையைக் கொண்டு எங்கிருந்து விசாரணையைத் துவங்குவதென்றே குழப்பமாக இருந்தது. தலையைத் துண்டிப்பதற்கு சக்தி வாய்ந்த லேசர் ஒளிக்கற்றை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரத்தம் ஒரு சொட்டுகூட வெளியேறியிருக்க வாய்ப்பே இல்லை. கைரேகை தடயங்கள் இல்லை. கல்யாணம் ஆகாத ஆஷா கர்ப்பமாக இருந்தாள் என்ற செய்தி கொஞ்சம் கூடுதல் தகவலாக இருந்தது. ஆஷாவின் தோழி ஈஸ்வரி சொன்ன ரகசியங்களைக் கொண்டு சுரேஷைத் தேடுவதில் கவனம் செலுத்தினார். சுரேஷின் மீது தொண்ணூற்று ஐந்து சதவீத சந்தேகத்தைத் திருப்பினார். காதலித்தவன் இத்தனை கொடூரமாகக் கொலை செய்ததற்குக் காரணம் இருக்க வேண்டும். ரேடியேஷன் லேஸர் டெக்னாலஜி என்ற படிப்பெல்லாம் படித்தவன் என்று ஈஸ்வரி எந்தவித முன் திட்டமிடலும் இல்லாமல் சொன்னது அவருடைய சந்தேகத்தின் சதவீதத்தை உயர்த்தியது. தொலைபேசி காலிங் பெல் போல அடித்தது. முறுமுனையில் சப் இன்ஸ்பெக்டர் ராமசாமி. "சுரேஷைப் பிடிச்சுட்டோம்'' என்றார். "நல்லது. ரொம்ப பயமுறுத்தாம இங்க கூட்டிட்டு வந்துடுங்க'' தொலைபேசியை நிதானமாக வைத்துவிட்டு அந்த வினாடி முதலே சுரேஷுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார். "வீட்ல திட்டுவாங்க'' என்று காதலில் பின்வாங்கியவன் இவ்வளவு விஞ்ஞான பூர்வமாகக் கொலை செய்வதற்குத் தயாராவானா? தன் வெளிநாட்டு வேலைக்குப் பாதகமாக அமைந்துவிடுவாள் என்று ஆள் வைத்துத் தீர்த்துக் கட்டியிருப்பானா? தலையை மட்டும் துண்டித்துவிட்டால் அடையாளம் தெரியாது என்று நினைத்துவிட்டானா? மறுபடி போன். ராமசாமிதான் பேசினார். "சாரி சார். வர்ற வழியில... எதிர்பார்க்கவேயில்ல சார்... ஓடற ஜீப்ல இருந்து கீழ குதிச்சுட்டான்.'' "என்ன பேசறீங்க ராமசாமி? தப்பிச்சுட்டானா?'' "இல்ல சார்... எதிர்ல வந்த கார்ல மோதி...'' "உயிர் இருக்கா?'' "இருக்குது சார்.'' தன்னையும் அறியாமல் மகிழ்ச்சியாகத் தெரிவித்தார் ராமசாமி. "எந்த இடம்?'' "ராயப்பேட்டை.'' "ஹாஸ்பித்திரி இருக்கிற இடம்தான்... உடனே சேர்த்துட்டு கூடவே இருந்து பார்த்துக்கங்க.. நான் உடனே புறப்பட்டு வர்றேன்.'' கருப்பசாமி ஹாஸ்பிடலை அடைந்தபோது தலை, கை, கால் என்று சர்வ பாகங்களும் பாதிக்கப்பட்டு வாயில் ஆக்ஸிஜன் திணிக்கப்பட்டு ரத்தம், குளுகோஸ் ஏற்றங்கள் சகிதம் இருந்தான். "ஒரு வாரத்துக்குப் பேச முடியாது'' டாக்டர் தெளிவாகச் சொல்லிவிட்டார். இருந்த ஒரே தடயம் இப்படி ஒரு வாரத்துக்குப் பயனில்லாமல் போனது ஏமாற்றமாக இருந்தது. ராமசாமியை அழைத்து "பிடிச்சபோது ஏதாவது சொன்னானா?'' என்றார். "இல்லை சார்... ஆஷா கொலை விஷயமா உங்களை விசாரிக்க வேண்டியிருக்குனு சொன்னோம். ‘நா கொல்லல சார்... காட் பிராமிஸ் சார்' என்று தலையில் கைய வெச்சு அழுதான்... ஸ்டேஷன்ல வந்து சொல்லுனு ஜீப்ல ஏத்திக்கிட்டு வந்தேன்... வீசா கூட வந்துடுச்சி சார்’.னு புலம்பிக்கிட்டே இருந்தான். திடீர்னு எகிறி குதிச்சுட்டான்... ஐயர் வூட்டுப் பையன்.. அதான் யோசனையா இருக்குது'' "என்ன யோசனை?'' "ஐயர் பையன் கொல்லுவானான்னுதான்..'' "இதுக்குக்கூடவா ஜாதி?'' ராமசாமி பலமாக விவாதிக்க விருப்பமில்லாமல், ஸேம் சைட் கோல் அடித்தார்: "இந்தக் காலத்தில யாரை நம்ப முடியுது சார்?'' "நமக்குக் கிடைச்ச ஒரே ஆதாரம் இவன். இவன்தான் கொன்னானான்னு முடிவு பண்றதுக்கு இதுவரைக்கும் ஒரு ஆதாரமும் இல்லை.... விசாரிக்கணும்னா இன்னும் ஒரு வாரம் காத்திருக்கணும்.'' சூழ்நிலையை அடுக்கிக் கொண்டே போனார் கருப்பசாமி. "ஒருவிதத்தில பார்த்தா அமெரிக்காவுக்குப் போகணுங்கிறதுக்காக கருவைக் கலைக்கச் சொல்லியிருக்கான். அதுவே ஒரு கொலைதான சார்... ஆஷா பிடிவாதம் பிடிக்கவே கருவைச் சுமக்கறவளையும் சேர்த்தே கொன்னுட்டான்... பிஸிக்ஸ் படிக்கிறவன். லேசர் சம்பந்தமான படிப்பு. இதுவே எவிடென்ஸ்...'' "எலை சாயற பக்கம் குலை சாயற மாதிரி சாயக் கூடாதுய்யா... அவசரப்பட்டு முடிவுக்கு வந்துட்டா அப்புறம் அதிலயேதான் போவே... மொதலல எத்தனை பாஸிபிலிட்டி இருக்குனு பாரு. அப்புறம் முடிவுக்கு வா...'' "ஜஜூ.வி.ல கூட தலைகள் ஜாக்கிரதை.. தலைநகர் பயங்கரம்னு மாபியாவோட லிங்க் பண்ணி எழுதியிருந்தாங்க சார்... ‘நக்கீரன்’ல ஆயிரம் தலை வாங்கும் அக்கரகார தலைக்காரன்னு எழுதியிருக்காங்க...'' "எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிடுங்க.. ஏதாவது க்ளு கிடைக்கும்.'' "சரி சார்.'' கருப்பசாமி வேலையில் கடும் சிரத்தை உள்ளவர். காக்கி சட்டை வேலையில் சேர்ந்த பின்பும் உடற்பயிற்சி செய்து வரும் மிகச் சில காவல்துறை அதிகாரிகளில் ஒருவர். நிறத்தைப் பார்த்துதான் பெயர் வைத்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். கைக்கெட்டும் தூரத்தில் குற்றவாளிகள் கிடைத்துவிட வேண்டும் என்ற சோம்பேறித்தனம் இல்லாதவர். சுரேஷின் மீது ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை சற்றே தள்ளி வைத்துவிட்டு, கவனத்தை வேறுபக்கம் திருப்பினார். இருந்தாலும் யாரைச் சந்தேகிப்பது என்று பெரிய வெற்றிடமாக இருந்தது. ராமசாமியிடம் சொன்ன வேலை டேபிளின் மீது குவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் புலன் விசாரிக்கும் இதழ்கள் இத்தனை இருக்கிறதா என்று ஆச்சர்யமாக இருந்தது. ஆஷாவின் தலையில்லாத உடலைப் போட்டு எல்லா பேப்பர்களிலும் பரபரப்பாகச் செய்தி வெளியிட்டிருந்தார்கள். சொல்லி வைத்தாற்போல எல்லா செய்தித்தாள்களிலும் புதுப் புதுக் கோணங்கள் இருந்தன. ஆஷாவின் கொலை செய்தி தவிர கடந்த வாரங்களில் வெளியான வேறு சில செய்திகளில் இருந்த ஒற்றுமை அவரை வியப்பில் ஆழ்த்தியது. கமிஷனர் அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டு பி.ஆர்.ஓ.வுக்கு லைன் கேட்டார். "கடந்த வியாழக்கிழமை பிரஸ் மீட்ல இந்த ஒரு மாசத்தில மட்டும் பதினாறு இளம் பெண்கள் காணாமல் போனதாக வந்திருக்கிறதே மணி?''} விசாரித்தார். "ஆமா சார்.'' "அந்தப் பதினாறு பேரோட டீடெய்ல்ஸ் வேணும். போட்டோ, அட்ரஸ்...'' "ஒரு மணி நேரத்தில குடுத்தனுப்பறேன் சார்.'' "தேங்க்ஸ் மணி.'' நூல்கண்டில் சிக்கு ஏற்பட்டால் ஏதாவது முனையைப் பிடித்து இழுத்து முடிச்சை அவிழ்க்கிற வேலைதான் இது. சமயத்தில் மேலும் சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் இழுத்துப் பார்த்தார். வெள்ளைத்தாளில் ஆஷோவோடு பதினேழு என்று எழுதி வைத்தார். மாலை. சுரேஷ் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்றதும் அங்கு காவலுக்குப் போட்டிருந்த போலீஸ்காரன், அந்த மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் அவரைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினான். "சப் இன்ஸ்பெக்டர் எங்கே?'' "சுரேஷோட பேரன்ட்ஸைப் பார்க்கப் போனாரு'' "வந்ததும் என்னைக் கான்டாக்ட் பண்ணச் சொல்லு'' தலைமை மருத்துவரைப் பார்க்கக் கிளம்பினார். "என் பேர் மகேஸ்வரி'' என்ற அறிமுகத்தோடு ""ஆஷா இறந்து போனதா சொல்ற அதே நாள் இங்க வந்தா''அதிரடியாக ஈர்த்தார் அந்தப் பெண் மருத்துவர். "அப்படியா?'' சற்றும் எதிர்பார்க்காத தகவலால் ஆர்வமானார் கருப்பசாமி. "அபார்ஷன் பண்றதுக்காக'' தொடர்ந்தார். "சரி.'' "நா அபார்ஷன் கேஸையெல்லாம் ஒத்துக்கறதில்லை. வேற நர்ஸிங் ஹோமுக்கு அனுப்பி வெச்சேன்.'' "எந்த நர்ஸிங் ஹோம்?'' "மந்தாகினி மெடிக்கல் ரிஸர்ச் பவுண்டேஷன்'' "பாலவாக்கம் பக்கத்தில..?'' "அதேதான்..'' "அங்க யார்கிட்ட அபார்ஷன்..'' "யார்கிட்டயும் பண்ணலைனுதான் போஸ்ட்மார்ட்டம் சொல்லுதே...'' "அதில்ல.. அவ யாரைப் போய் பார்த்தான்னு தெரிஞ்சுக்க முடியுமா?'' "அங்க போயிருக்கா... ஆனா அபார்ஷன் பண்ணிக்காம திரும்பிட்டா.'' "வேற ஏதாவது தெரியுமா?'' "அவ எந்த காலேஜ்ல படிச்சாங்கிறதுகூட பேப்பர்ல பாத்துதான் தெரியும்'' கருப்பசாமி சிரித்தார். "தகவலுக்கு நன்றி.'' வெளியே வந்து ஜீப்பில் அமர்ந்தார். "பாலவாக்கம் போப்பா'' என்றார் டிரைவரை நோக்கி. (தொடரும்) |
செவ்வாய், அக்டோபர் 19, 2010
அமில தேவதைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)