செவ்வாய், அக்டோபர் 16, 2007
வனமும் இனமும்!
"ஆட்டோ சங்கர்' நெடுந்தொடருக்குப் பிறகு சந்தனக் கட்டை வீரப்பன் கதை(சந்தனக்காடு)யை ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கிறது மக்கள் தொலைக்காட்சி. இந்த இரண்டுத் தொடர்களையும் இயக்கியிருப்பவர் வ. கெüதமன். சர்ச்சைக்குரிய மனிதர்களை கதாநாயகர்களாக்கி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இவருக்கு வாடிக்கையாகியிருக்கிறது. வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, "இத் தொடர் வெளிவந்தால் தன் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்படும்' என்று கூறியிருக்கிறார். இத்தகைய சூழலில் இயக்குநர் கெüதமனைச் சந்தித்தோம்.
ஆட்டோ சங்கர், வீரப்பன் என்று நிஜ மனிதர்களின் கதையையே தொடர்களாக்கிக் கொண்டிருப்பதற்குப் பிரத்யேகக் காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா?
அது நிஜக் கதையாகவோ, புனைகதையாகவோ இருப்பதுபற்றி எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை. ஜெயகாந்தனின் "சினிமாவுக்குப் போன சித்தாளு' கதையை குறும்படமாகத் தயாரித்தேன். அது புனைகதைதான். ஆனால் நிஜமாகவே தமிழகத்தில் அப்படியொரு சூழல் இல்லையென்று சொல்ல முடியுமா? சொல்லுங்கள், அது ஒரு புனைகதை மட்டுமேதானா? படைப்பு நிஜ உலகை பிரதிபலிப்பதாக இருப்பதைப் போலவே நிஜக்கதையை படமாக்குவதையும் நான் அதே பார்வையில்தான் பார்க்கிறேன்.
இது சமூகத்தின் பார்வையில் குற்றவாளிகளாகப் பார்க்கப்பட்ட வர்களை ஹீரோக்களாக்குவதாக அமையாதா?
கதைக்கு ஹீரோ என்பது ஒரு வசதிக்காகச் சொல்கிற வார்த்தைதான். என்னைப் பொறுத்தவரை அவர்கள் நமக்கு அறிமுகமான அளவுக்கு வில்லன்கள் இல்லை என்பதுதான். ஆட்டோ சங்கரோ, வீரப்பனோ முதலில் சில அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளாலேயே ஊக்குவிக்கப்பட்டவர்கள்தான். பிரச்சினை என்று வந்தபோது கைவிடப்பட்டவர்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு அவர்களின் பிரச்சினைகளை அவர்களே எப்பாடு பட்டேனும் சமாளிக்க வேண்டியதாகவும் ஆனது. அவர்கள் தள்ளப்பட்ட சூழல்தான் முக்கியமே தவிர அதில் இடம் பெறும் ஹீரோக்கள் அல்ல.
சந்தனக்காடு தொடரில்....
"சந்தனக்காட்டை' எங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்தினீர்கள்?
ஏறத்தாழ சந்தனக் காட்டுப் பகுதியில்தான். வீரப்பன் படுத்த, நடந்த, ஓடிய இடங்களில்தான் முழுபடப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. ரத்தமும் சந்தனமும் மணந்த காட்டுப் பகுதிகளில் படம் பிடித்திருக்கிறோம். இதுவரை மேட்டூர், மாதேஸ்வரன் மலை, சத்தியமங்கலம், ஏமனூர் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். வீரப்பன் பிறந்த கிராமமான செங்கம்பாடி (இது கர்நாடகாவில் இருக்கும் தமிழ் கிராமம்)யிலும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.
படப்பிடிப்பு அனுபவங்கள் எப்படி?
காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு என்பதால் தினமும் அதிகாலை 4 மணிக்கு தங்கியிருக்கும் ஹோட்டல்களில் இருந்து புறப்பட்டால்தான்
விடியற்காலையில் படப்பிடிப்பைத் தொடங்க முடிகிறது. அடர்த்தியான காட்டுப்பகுதி. திக்கு திசை தெரியாமல் போய்விடும் ஆபத்துகள் அதிகம் இருக்கிறது. வனவிலங்குகள் அதிகம் கண்ணில்படுகின்றன. கரடிகள், குரங்குகள், மான்கள், பாம்புகள், விஷப் பூரான்கள், காட்டு எருதுகள் பல வற்றைப் பார்த்தோம். படமாக்கியிருக்கிறோம்.
வீரப்பனைப் பற்றிய தகவல்களை எங்கே சேகரித்தீர்கள்?
வீரப்பனைப் பற்றி மற்ற யார் சொல்வதையும்விட அவனை பார்த்த அவனுடன் பேசிய மக்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்பது என் கணிப்பு. நான் சந்தித்த சில பெண்கள் கர்நாடக, தமிழக காவல்துறையினரால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். "நாங்கள் தாயும் மகளுமாகக் கூட்டம் கூட்டமாகக் கற்பழிக்கப்பட்டோம். எங்களுக்கு நேர்ந்த வேதனையைக் கேட்டு நாங்கள் கற்பழிக்கப்பட்ட ராமாபுரம் போலீஸ் ஸ்டேஷனை தரைமட்டமாக்கிய எங்கள் அண்ணன் அவர்' என்கிறார்கள்.
படப்பிடிப்பில் சந்தனக்காடு...
அதே போல சுள்ளி பொறுக்க வந்து வழி தவறிவிட்ட பெண்ணை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டு கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து, "ஆடு வாங்கி ரெண்டை நாலாக்கிப் பொழைச்சுக்கோ' என்று அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான். இப்படி மனிதநேயம் பாராட்டும் விஷயங்கள் ஏராளம் வீரப்பன் வாழ்க்கையில் இருக்கின்றன. ஏற்கெனவே மீடியா மூலமும் காவல்துறை மூலமும் தெரிந்த விஷயங்களும் உண்டு.
வீரப்பனின் மனைவி இந்தத் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து?
நான் டேப்பில் பதிவு செய்துவிட்டேன் என்று கூறுவதெல்லாம் வீணான கற்பனை. அதுவும் மூன்று மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன் என்று கூறியிருக்கிறார். நான் ஒன்பது மாதங்களுக்கு முன்பு பேசினேன். அவர் பயப்படும் அளவுக்கு எதுவும் இத் தொடரில் இல்லை என்பதை பலமுறை தொலைபேசியில் விளக்கிவிட்டேன். டி.வி.டி. ஒன்றும் கொடுத்தனுப்பினேன். விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புகிறோம். வழக்கு முடிவும் எங்களுக்குச் சாதகமாகத்தான் வந்திருக்கிறது.
"சந்தனக்காடு' தொடர் மூலம் சொல்லவிரும்பும் செய்தி?
உண்மையை உடைத்துச் சொல்ல முடிந்த அளவுக்கு முயற்சி செய்திருக்கிறோம். வனமும் இனமும் சிதைந்த வரலாறு இது. மனித நேயம் நிறைந்த வீரப்பனுடைய பிற்காலத்தையும் இன்னொரு பக்கத்தையும் சொல்ல விரும்புகிறோம்.
தமிழ்மகன்
சர்ச்சை: கற்றது தமிழ்..! பெற்றது?
கற்றது தமிழ் என்றால் பெற்றது என்னவாக இருக்கும்?
இவனுக்கென்ன பைத்தியமா என்ற பட்டப் பெயரும் குறைந்த சம்பளமும் அவமானங்களும்தான் அவனுக்கு வாய்க்கும் விஷயங்களாக இருக்கும் என்கிறது "கற்றது தமிழ்' திரைப்படம்.
"தமிழ் எம்.ஏ.' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட இப்படம் இப்போது வரிச்சலுகை கிடைக்காதோ என்ற கவலையில் "கற்றது தமிழ்' என வெளியாகி, தமிழ் பேசும் நல்லுலகை உலுக்கியிருக்கிறது.
படத்தின் இயக்குநர் ராம், ""நான் எந்த ஊர் என்பது அத்தனை சரியாகச் சொல்ல முடியாது. வணிகவரித் துறையில் அப்பாவுக்கு வேலை. இரண்டு ஆண்டுகளுக்கு ஓர் ஊர் என்று நிறைய மாறிவிட்டேன். நான் ஊர்களில் இருந்ததைவிட ரயில் பெட்டிகளில்தான் அதிகம் வசித்திருப்பதாகச் சொல்வேன். மதுரையில் இளங்கலை தமிழும் சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் முதுகலை தமிழும் படித்தேன்.
பாலுமகேந்திரா, தங்கர்பச்சான், ராஜ்குமார் சந்தோஷி போன்றவர்களின் திரைப் படங்களுக்குப் பணியாற்றியிருக்கிறேன். தமிழ் படிப்பவர்கள் நிலை எப்படியிருக்கிறது என்பதைப் படத்தின் மையமாக வைத்து தமிழ் படித்தவனின் வாழ்க்கைத் தரம் சார்ந்த பார்வையைத்தான் நான் பதிவு செய்திருக்கிறேன். நான் சந்தித்த ஒருவனின் கதை அல்ல இது. பலரின் கதை... பலரின் அனுபவம்.
சொல்லப்போனால் இது தமிழ் படித்தவனின் கதை மட்டுமல்ல, இது கலைத்துறை படிப்பு படித்தவர்களின் கதையாகவும்தான் சொல்லியிருக்கிறேன்.
பிறதுறை மாணவர்களுக்கும் கலைத்துறை மாணவர்களுக்குமான மனவியல் சிக்கல் இது. கோவிந்த் நிகிலானி என் ஆதர்ஷ இயக்குநர். "ஒவ்வொரு செய்தியிலிருந்தும் ஒவ்வொரு வசனத்திலிருந்துமே ஒரு படத்தை உருவாக்கிவிடமுடியும்' என்பார் அவர். அப்படியான ஒரு படைப்புதான் "கற்றது தமிழ்'.
படத்தைப் பார்த்துவிட்டு பாலுமகேந்திரா பூரித்துப் போனார். ""ஆசியாவின் முதல் ஐந்து படங்களைச் சொல்ல வேண்டுமானால் அதில் "கற்றது தமிழ்' நிச்சயம் இடம் பிடிக்கும். டப்பிங் செய்திருக்கும் உத்தி, திரைக்கதை உத்தி எல்லாமே தமிழ் சினிமாவுக்குப் புதிது'' என்றார். பார்த்திபன் பார்த்துவிட்டு இந்தியாவின் சிறந்த இயக்குநர் என்ற இடம் இவருக்கு உண்டு என்றார். தனுஷ், ""இந்தப் படத்தில் நானும் ஒரு காட்சியில் நடிக்காமல் போய்விட்டேனே'' என்கிறார். பெயர் தெரியாத எத்தனையோ பேர் போன் செய்து பாராட்டுகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது'' என்றார் இயக்குநர் ராம்.
படத்தில் ஒரு காட்சி:
""நீ ஏன் தமிழ் படிக்க வந்தாய்? என்று கேட்கிறார் பேராசிரியர். ஏதாவது டிகிரி இருந்தா லோன் தருவாங்க''னு படிக்கிறேன்.
இன்னொரு மாணவனைக் கேட்கிறார்.
வேற கோர்ஸ் சேருவதற்கு மார்க் இல்லை என்கிறான்.
நாயகன் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துவிட்டு தமிழ் படிக்க வந்திருப்பது தெரிகிறது. ""ஏதாவது என்ஜீனியரிங் காலேஜில் சேராமல் இங்கு ஏண்டா வந்தாய்'' என்கிறார். தமிழ் படிக்கும் ஆசையில் வந்தேன் என்கிறான்.
-இப்படி ஆரம்பிக்கிறது கதை.
ஆனால் படித்து முடித்ததும் இரண்டாயிரம் வருஷமா இருக்கிற தமிழைப் படித்த படத்தின் நாயகனுக்கு இரண்டாயிரம் சம்பளம்தான் கிடைக்கிறது. பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்த கம்ப்யூட்டர் படிப்புக்கு 2 லட்சம் சம்பளம் கிடைக்கிறது. இந்த வித்தியாசம் அதிர்ச்சியூட்டுகிறது. கூடவே அவனுடைய வாழ்வின் சிக்கல். நேசித்த படிப்பும் அவனைக் காப்பாற்றவில்லை. காதலும் கை கூடவில்லை... மனநலம் பாதிக்கப்படுகிறது... மரணத்தை நோக்கிப் போகிறான் இப்படி முடிகிறது படம்.
படமாக்கியிருக்கும் நேர்த்தியும் திரைக்கதையின் வலிமையும் இழுத்துப் பிடித்து உட்கார வைத்தாலும் விமர்சனங்களும் படத்துக்கு உண்டு. பொழுது போக்குக்குக்கான படங்களுக்கு இல்லாத சிக்கலை இது போன்ற சீரியஸ் படங்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பது வாடிக்கைதான்.
""தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் வேலை கிடைக்கவில்லை. பெரிய சம்பளம் கிடைக்கவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம்'' என்கிறார் பேராசிரியர் பெரியார்தாசன். தமிழ் படித்தால் மூன்று விதங்களில் வேலை வாய்ப்பு உண்டு. தமிழாசிரியர் ஆகலாம். கல்லூரியில் பேராசிரியராகலாம். பண்பாடு- கலாசாரத் துறைகளில் பணியாற்றலாம். செம்மொழி அந்தஸ்து கிடைத்த பிறகு நிறைய நூல்கள் பதிக்கப்பட ஆரம்பித்திருக்கின்றன. எல்லாக் கல்விக்கும் போல இதிலும் மேற்படிப்புகளுக்கு ஏற்பதான் வேலை வாய்ப்பு. இது இல்லாமல் அரசு நடத்தும் வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகள் எழுதலாம். 40 ஆயிரம் இடங்களுக்கான சர்வீஸ் கமிஷன் தேர்வு நடைபெறுகிறது. இதில் தமிழ் படித்தவர்கள் எழுதக் கூடாது என்று சொல்லவில்லையே?
எழுத்தாளர்கள், வசனகர்த்தாக்கள் இருக்கிறார்கள். வைரமுத்து, மு.மேத்தா, கபிலன், முத்துக்குமார் தமிழில் பட்டம் வாங்கியவர்கள்தானே? மு.வ. எழுதி சம்பாதித்தவர்தானே? அகிலன் எழுதி சம்பாதித்தவர்தானே? கல்கி, ஜெயகாந்தன் என்று எத்தனை எழுத்தாளர்கள்... எத்தனை துணை வேந்தர்கள்? படத்தை எடுத்த டைரக்டரே தமிழ் எம்.ஏ. படித்தவர் என்கிறார்கள். இப்போது அவர் டைரக்டராக உயர்ந்திருக்கிறாரே... தெரியாத்தனமாக தமிழ்படித்தவர்கள் எல்லாம் உயர்ந்திருக்கிறார்கள். தமிழ்தான் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர் ஏன் உயர முடியவில்லை என்று தெரியவில்லை.
என்ஜீனியரிங் படித்துவிட்டு 2000 ரூபாய் சம்பளம்கூட கிடைக்காதவர்கள் இருக்கிறார்களே... பொதுவாக வேலை வாய்ப்பு இன்மையும் சம்பளம் குறைவாக இருப்பதும் வேறு சமூக பிரச்சினைகள்... அந்தப் பிரச்சினை தமிழுக்கும் இருக்கிறது, கெமிஸ்ட்ரிக்கும் இருக்கிறது'' என்கிறார் பெரியார்தாசன் உறுதியாக.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)