செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

களப்பிரர்கள் செய்த தவறு

களப்பிரர்கள் காலம் பற்றி ஆராய்வதற்கு மிகுந்த நேர்மையும் உணர்ச்சிவசப்படாத தன்மையும் தேவையாக இருக்கிறது. அறிவியல் ஆய்வுகளில் கிடைத்த தகவல்களும் இலக்கியங்கள் மூலம் பெற்ற தகவல்களும் அவற்றை நேர்மையோடு இணைக்கும் யூகங்களும் தேவைப்படுகின்றன.
களப்பிரர் என்பவர்கள் கருநாடக தேசத்தைச் சேர்ந்த மக்கள் குழுவினர் என்பதும் அவர்கள் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் பெரிதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு.திராவிட இனத்தில் தொடர்வளர்ச்சியில் தமிழ் மொழி உருவாகியதை உலக ஆய்வாளர்கள் யாரும் மறுப்பதில்லை. களப்பிரர் பற்றிய ஆய்வை மேற்கொள்ளுவதற்கு தமிழர்களின் சரித்திரத்தையும் ஓரிரு பத்திகளில் பார்ப்பது நலம் பயக்கும் என்று எண்ணுகிறேன்.மாந்த இனத்தின் வரலாறு ஏறத்தாழ ஒரு லட்சத்து எண்பது ஆயிரம் ஆண்டுக்கு மேலான தொன்மையுடையது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. உலக கண்டங்கள் யாவும் ஆரம்பத்தில் கோக்வாண்டா கண்டமாக இணைந்திருந்து, பல லட்சம் ஆண்டுகளாகப் பிரிந்து மிதக்கத் தொடங்கியிருப்பினும் ஆஸ்திரேலியா பிரிந்து சென்றது 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. காரணம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பழங்குடியினர். அவர்கள் திராவிட இனத்தவர்கள் என்பதற்கு அவர்களிடம் மிச்சமிருக்கும் சில ஒலிக்குறிப்புகளும் சில ஆதி நம்பிக்கைகளும் காரணமாக இருக்கின்றன. உதாரணமாக அவர்கள் நாக வழிபாட்டையும் லிங்க வழிபாட்டையும் எருது இலச்சினைகளையும் இன்னமும் பின்பற்றி வருகின்றனர். இன்னமும் அவர்கள் பயன்படுத்தும் ஓரசை, ஈரசைச் சொற்கள் தமிழ் மொழியை ஒத்திருக்கின்றன. தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதைத் தெளிவுபடுத்த இந்த சிறிய உதாரணத்தை முன் வைக்கிறேன்.
இந்தியாவில் பரவலாக வசித்து வந்த இந்த இனம் சிந்து சமவெளியிலும் தென்னிந்தியாவிலும் வசித்து வந்த தடயங்கள் கிடைத்துள்ளன. ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்ட இந்த இனக்குழு ஈரான், ஆப்கானிஸ்தான், மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் யூகம். தெற்கே கடல் கொண்டுவிட்ட குமரியில் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பனி உருகல் காலத்தில் சுமார் 300 மீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்தபோது இலங்கை பரப்பு தனித்துப் போனதோடு, குமரி கண்டத்தின் கடைசி நிலப்பரப்பும் மூழ்கிப் போனது தெரிகிறது.
அதற்கு முன்பு உலக கடல் மட்டத்தில் இரண்டு முறை கடல் மட்டம் உயர்ந்திருப்பதை அறிய முடிகிறது. பனி உருகல் காரணமாக ஏற்பட்ட அந்த இரண்டு கடல் ஊழியில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்த குமரிப்பரப்பு சுத்தமாகவே அழிந்து போனது. கடல் கொண்டுவிட்ட அந்த நிலப்பகுதியில்தான் முதல் இரண்டு தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டதாக அதன் பின்னர் வந்த புலவர்களின் பாக்களில் இருந்து அறிய முடிகிறது.
இப்போதும் மேற்குத் தொடர்ச்சி மலையின் முகடுகள் கடலில் மூழ்கியிருப்பதை செயற்கைக் கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன. கடற்கோள், பனி ஊழி, அயலவர் படையெடுப்பு என தமிழினம் ஏராளமான நசிவுகளை காலம்தோறும் சந்தித்தாலும் அது ஸ்பினிக்ஸ் பறவையை உதாரணம் காட்டுவதுபோல மீண்டும் மீண்டும் எழுந்துவந்திருப்பதைப் பார்க்கிறோம். ஐரோப்பிய மொழிகளோ, கிரேக்க, எகிப்து மொழிகளோ இத்தனைச் சிரமங்களை எதிர் கொள்ளாமலேயே மறைந்து போயிருப்பதைப் பார்க்கும்போது தமிழுக்கு இருக்கும் தொன்மையும் பலமும் விளங்கும்.
இவ்வளவு தொன்மையான மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அதனுடைய பலமாகவும் அமைந்திருக்கிறது. அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் தமிழர்களின் ரத்தத்தில் ஊறியிருப்பதாகவே சொல்லலாம்.
தமிழ்மொழி சுமார் பத்தாயிரம் ஆண்டுகளில் செழுமையடைந்து, தழைத்து தென்னிந்திய லப்பரப்பில் பிரதான தொடர்பு மொழியாகவும் இலக்கியத்தில் மிக உயர்ந்த லையிலும் செயல்படத் தொடங்கியது. மொழிக்கு இலக்கணம் வகுக்கப்பட வேண்டும் என்ற உந்துதல் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்-டதற்கான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. உலகில் வேறெந்த மொழியிலும் இதற்கான ஆதாரங்கள் இல்லை. இங்கு தொல்காப்பியம், சங்க இலக்கிய நூல்களான அகநானூறு, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவை இயம்பப்பட்டிருந்தது. இதற்குப் பிறகு தமிழகத்தில் நிலைபெற்றிருந்த ஆட்சியே களப்பிரர் காலம்.
கி.பி. 250க்குப் பிறகும் கி.பி. 550க்கு முன்புமான இக்காலகட்டத்தில் தமிழில் இலக்கியச் சூழலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. தமிழகத்தில் பிராகிருதம், பாலி மொழிகளே நிலைநாட்டப்பட்டன. அதே சமயம் அவர்கள் தமிழை வளர்த்தார்கள் என்று விவாதிப்போரும் உண்டு. நாலடியார், சீவகசிந்தாமணி, காரைக்காலம்மையார் நூல்கள், இறையனார் களவியல் ஆகிய நூல்கள் இக்காலத்தைச் சேர்ந்தவைதான் என்பது ம.சீ.வேங்கடாமி நாட்டாரின் கருத்து. முத்தொள்ளாயிரமும் திருமந்திரமும் இக்காலத்தைச் சேர்ந்தவை என்கிறார் பண்டாரத்தார். ஆனால் இந்த நூல்கள் பலவும் அறத்தை முன்னிறுத்திப் பாடியதாகவே இருந்தன. மு.ரா.நல்லபெருமாள் முதலியார் சொல்வது முற்றிலும் வேறொரு கோணத்திலிருந்து பார்க்க வைக்கிறது. "களப்பிரர்கள் என்பரோர் தமிழரே. அவர்கள் காலத்தில் பார்ப்பனர்கள் தம் ஆதிக்கத்தை இழந்திருந்தனர். அதனால்தான் அந்தக் காலத்தை இருண்ட காலம் என்று சொல்கின்றனர்.' என்கிறார். நாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் ஆதிசங்கரரும் ராமானுஜரும் தோன்றி சமணத்துக்கு எதிராக சைவத்தையும் வைணவத்தையும் முன்னெடுத்துச் சென்றனர். பதினாயிரம் சமணர்களை கூன்பாண்டியன் கழுவேற்றினான் என்ற குறிப்பின் மூலம் சமணர்கள் அழித்தொழிக்கப்பட்டதோடு அவர்களின் சமய நூல்களும் அழிக்கப்பட்டுவிட்டன என யூகிக்க முடிகிறது.
பார்ப்பனர்கள் ஆதிக்கம் மீண்டும் உருவானதால் அந்தத் தமிழர் ஆட்சிக்காலம் முற்றிலும் மறைக்கப்பட்டு இருண்டகாலம் என்று ஆகிப்போனது என்பாரும் உண்டு. மயிலை சீனி. வேங்கடசாமி, தேவநேயப் பாவாணர் போன்ற பலர் இந்தக் கருத்துக்கு உடன்பட்டவரே. களப்பிரர் காலத்துக்குப் பிறகு சைவமும் வைணவமும் தழைத்தது என்பது உண்மை. கி.பி. 600க்குப் பிறகு தமிழில் சைவமும், வைணவமும் பக்தி இலக்கியத்தை ஆவேசத்தோடு வளர்த்திருப்பதைப் பார்க்கலாம். வரலாற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை களப்பிரர்கள் பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளிலேயே இங்கு நூல்கள் இயற்ற முயன்றதையும் சமண மதத்தை வளர்க்க முற்பட்டதையும் ஆராய்கிறார்.
பாண்டி நாட்டில் சமண கிரந்தர்கள் எண்ணற்றவர்கள் இருந்ததாக சீன பயணி யுவான் சுவாங் எழுதியிருக்கிறார். இவர் கி.பி. 600 நூற்றாண்டு வாக்கில் அவர் தமிழகம் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. களப்பிரர்கள் காலத்துக்கு பின்னர் தோன்றிய திருநாவுக்கரசர் சமணர்களோடு வாதாடியதையும் அவரைச் சுண்ணாம்புக் காலவாயில் போட்டு சித்தரவதை செய்ததையும் தமிழிலக்கியங்கள் விவரிக்கின்றன. ஆக, களப்பிரர்கள் காலம் என்பது சமணர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலம் என்பதில் ஐயம் யாருக்கும் இல்லை. அவர்கள் தங்களின் சமய நூல்களையும் தங்களின் மொழியையும் இங்கே பரப்புவதில் பெரும் வேகம் காட்டினர். தமிழகத்தில் சித்தன்ன வாசல் குடைவரைக் கோவில்களும் சிலப்பதிகாரத்தைப் போலவே, சமண, பௌத்த சமயத்தை போதிக்கும் சீவக சிந்தாமணி, மணிமேகலை ஆகிய நூல்களில் அச் சமயத்தினர் இங்கே செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.மொழி ஆராய்ச்சியாளர் ப. சிவனடி இக் கருத்தை வலியுறுத்துகிறார். தமிழ் நாட்டில் இரண்டாம் நூற்றாண்டிலேயே செழிக்கத் தொடங்கிய சமணமும் பெüத்தமும் பிறகு ஏன் தமிழர்களுக்கு எதிராக மாறியது என்பது யூகிக்க உகந்தது. அவர்கள் சமண சமயத்தைப் புகுத்தினர் என்பது காரணமாகத் தெரியவில்லை. சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோ சமண சமயத்தைத் தழுவுகிறார். கவுந்தி அடிகள், மணிமேகலை போன்ற கதாபாத்திரங்கள் சமண சமயத்தைத் தழுவியதாக படிக்கிற நாம் எப்போது அதன் எதிரியாக மாறினோம் என்பது யோசித்தல் முக்கியம்.
அவர்கள் நம் மொழியின் மீது ஆதிக்கத்தைப் பிரயோகிக்கத் தொடங்கியதில் இருந்துதான் களப்பிரர்களுக்கும் தமிழருக்குமான முரண்பாடுகள் பெருகத் தொடங்கியிருக்க வேண்டும்.இதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது அன்று துவங்கப்பட்ட திராவிட சங்கம். பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிரநந்தி என்பார் மதுரையில் திராவிட சங்கம் ஒன்றை நிறுவினார் (கி.பி. 470). அவருடைய நோக்கமே சமண சமய நூல்களை தமிழில் இயற்ற வேண்டும் என்பதே. பதினென் கீழ் கணக்கு நூல்கள் பலவும் இச் சங்கத்தின் முயற்சியினால் தோன்றியிருக்கலாம் என்பது கே.கே. பிள்ளையவர்களின் வாதம். பாலி பிராகிருத மொழியில் நூல்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் தமிழில் நூல்கள் இயற்றப்பட வேண்டும் என்று தமிழகத்துக்குள் ஒரு சங்கம் ஏற்படுத்தப்பட்டதே தமிழுக்கு நேர்ந்த சோதனைக் காலத்தைக் காட்டுகிறது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சமய மறுமலர்ச்சி தமிழர்களை ஒருங்கிணைக்க முயன்றது. இதனால் தமிழர்கள் தமிழில் தமிழுக்கு நெருக்கமான இறைநூல்களைப் பாடுவதில் இயல்பாகவே ஈடுபட்டிருக்கலாம்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாக சொல்வது உலகில் வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு. அதே போல பக்தி இலக்கியத்தின் காலத்தையும் தமிழ் வளர்ச்சியின் பங்களிப்பாகக் கொள்ள முடியும். சமணத்துக்கு மாற்றாக மட்டுமின்றி பாலி மொழிக்கு மாற்றாகவும் தமிழ் செயல்பட்டது. தமிழர்களுக்கு மொழி மிகவும் முக்கியமானதாக இருந்ததை பல்வேறு கால கட்ட நிகழ்வுகள் மூலம் அறிய முடிகிறது. மொழிக்காக உயிரையும் இழக்கத் துணிந்தவர்களாக அவர்கள் இருந்தனர். சைவம், வைணவ பாடல்களில் தமிழைச் சிறப்பித்துப் பாடுவதை நாம் பார்க்கிறோம். "மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப்
பயன் அறிகிலா அந்தகர்'-என தேவாரத்தில் சமணரைப் பழிக்கிறார் ஞான சம்பந்தர்.
- இத் தகவல்களை தமிழ் மண் பதிப்பகம் வெளியிட்ட தமிழர் வரலாறு நூலில் பி. இராமநாதன் தெரிவிக்கிறார்.1938 இந்தித் திணிப்பின் போது தாளமுத்து, நடராசன் உயிர்த் தியாகமும், 1965 ஏற்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டமும் உயிரிழப்புகளும் தமிழீழத்துக்காக உயிர் நீத்தவர்களும் தமிழர்கள் மொழிமீது அதீத பாசம் கொண்டிருந்ததற்கு சமீபத்திய உதாரணங்கள். இதற்கு முன்னர் சைவர்களும் வைணவர்களும் போட்டி போட்டுக் கொண்டு சமயத்தை வளர்த்ததோடு தமிழையும் வளர்த்ததை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும். சுண்ணணாம்புக் காலவாயில் சுட்டெரித்தபோதும் சைவத்தை மட்டுமின்றி அவர்கள் தமிழையும் நேசித்ததை அறிய முடிகிறது. அதற்கும் முந்தைய காலங்களில் அவர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்ததும் இறைவனையே அதற்கு தலைவனாக்கியதும் இலக்கியம் தரும் தகவல்கள்.
புதிதாக வேறு ஒரு சமயத்தைப் புகுத்தியதோடு மட்டுமின்றி வேறொரு மொழியையும் புகுத்தியதே தமிழர்கள் முற்றாக அவர்களை அழிக்க முனைந்ததற்கு முக்கிய காரணம் என்று நான் கருதுகிறேன்.களப்பிரர்கள் ஏந்தப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் உள்ளன. களப்பிரர்கள் என்பார் கர்நாடகத்திலிருந்து தமிழர் மீது ஆக்ரமிப்பு செய்தவர்கள் என்று பரவலாக அறியப்படுகிறது.
இக்கருத்தில் ஆய்வாளர்கள் பலருக்கும் ஒத்த கருத்து உண்டு. மைசூர் ராச்சியத்தின் பேலூர் கல்வெட்டு ஒன்று அங்கு களப்போரா எனும் பெயரில் ஒரு வம்சத்தினர் வாழ்ந்ததாகத் தெரிவிக்கிறது. (கே.கே. பிள்ளையின் தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் ( பக்.185) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.) களப்பிரர்கள் தெற்கு ஆந்திரப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பார் சிலர். வேங்கடத்தை ஆண்டுவந்த களவர் என்னும் இனத்தவரே பல்லவரின் கை ஓங்கியதாலும் சமுத்திரகுப்தனின் படையெடுப்பினாலும் தென் தமிழகத்துக்கு பெயர்ந்து தமிழகத்தை ஆக்ரமித்ததாக அதே நூல் தகவல் தருகிறது. இது தவிர களப்பிரர் தமிழரே என்ற கருத்து ஒன்று உண்டு. பாவாணர், க.ப. அறவாணன் போன்றோர் இக் கருத்து உடையவர்கள். களப்பிரர் என்ற தமிழர் ஆட்சியில் பார்ப்பனர் செல்வாக்கு இழந்து இருந்ததால் அக் காலகட்டத்தை இருண்ட காலமாக வர்ணிக்கின்றனர் என்கின்றனர்.
வரலாற்றை யூகிப்பது ஒரு சுவையான அம்சம். எது உண்மையாக இருக்கும் என்று அலசுவதும் தேவை.

LinkWithin

Blog Widget by LinkWithin