புதன், அக்டோபர் 03, 2007
காமிராவும் நானும்..!
கையில் காமிராவைப் பிடித்ததும் மனசுக்குள் ஏற்பட்ட அந்த உணர்வு... கூட்டுப் புழு, பட்டாம்பூச்சியானது போன்ற மாற்றம் அது.
சினிமாவின் சகலத் துறைகளிலும் பெண்கள் வெற்றிக் கோப்பைகள் அள்ளிவரும் காலம் இது. ப்ரியா இயக்கும் "கண்ணா மூச்சி ஏனடா' படத்தின் ஒளிப்பதிவாளரும் ஒரு பெண்தான். பெயர் ப்ரீத்தா.
"மொழி' படத்துக்குப் பிறகு பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்க இருக்கும் படமான "அபியும் நானும்' படத்துக்கான லொகேஷன் தேர்வுக்காக மூணாறு சென்று திரும்பிய ஓய்வான உற்சாகத்தில் இருந்தார் அவர்.
அவரிடம்...
ஆண்கள் சினிமாவுக்கு வருவதற்கும் பெண்கள் சினிமாவுக்கு வருவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சினிமா ஆண்கள் சூழ் உலகமாக இருப்பதுதான் காரணம். நீங்கள் எப்படிச் சினிமாவுக்கு வந்தீர்கள்..?
சொல்லப் போனால் நான் கணக்குப் பாடத்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய தந்தையார் ஐ.ஐ.டி. மாணவராக இருந்தும்கூட எனக்குக் கணக்கு எட்டிக் காயாகத்தான் இருந்தது. சி.பி.எஸ்.சி. சிலபûஸத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஸ்டேட் போர்டுக்கு மாறினேன். அதிலும் கணக்குப் பாடத்தைத் தவிர்த்தேன். சயின்ஸ் குரூப். மேற்கொண்டு படிப்பதற்கு எது விருப்பம் என்பது எனக்குத் தோராயமாகத்தான் தெரிந்தது. ஆனால் அப்போது அதைச் சொன்னால் எவ்வளவுபேர் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள் என்பது தெரியவில்லை. ஏனென்றால் எனக்குச் சினிமாதான் பிடித்திருந்தது.
சினிமாவைப் பிடிப்பதற்கு ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமே?
ஆமாம். என் மாமா பி.சி. ஸ்ரீராம் அவர்களுக்கு நிறைய சினிமா காட்சிகளுக்கு அழைப்பு வரும். சிறுவயதிலிருந்தே சினிமா ப்ரிவியூ பார்க்கும் வாய்ப்பு எனக்கு இருந்தது. எல்லாப் படங்களையும் பார்ப்பேன். வழக்கமான சினிமா பார்க்கும் ஆசைதான் அது. ஆனால் "நாயகன்' படம் பார்த்தபோது அது தமிழிலும் இப்படிப் படங்கள் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது. அதன் பிறகுதான் எமக்குத் தொழில் சினிமா என்ற எண்ணம் வலுக்க ஆரம்பித்தது. தரமணி ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சினிமா படிப்புகளுக்கான அறிவிப்பு வந்தது. அங்கு போய் சேர்ந்ததும்தான். சினிமா பயணத்திற்கான சரியான பாதையைக் கண்டேன். கையில் காமிராவைப் பிடித்ததும் மனசுக்குள் ஏற்பட்ட அந்த உணர்வு... கூட்டுப் புழு, பட்டாம்பூச்சியானது போன்ற மாற்றம் அது. நம்மை வெளிப்படுத்துவதற்கான கருவி இதுதான் என்ற சுதாரிப்பு...
அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் காமிராவுக்கான மேற்படிப்பைப் படித்தேன். அங்கு சென்ற போதுதான் இங்கு எவ்வளவு வசதிகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
உதாரணத்துக்கு அங்கு இன்னமும் பீட்டா காமிராவில்தான் படப்படிப்பு நடத்த வேண்டும். இங்கோ வெகுகாலமாக செல்லுலாய்டில் படம்பிடிக்கிற அனுமதி இருந்தது. சொல்லித் தருவதிலும் இங்கு பலரைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அப்போது எனக்கு இங்கே ஜி.பி. கிருஷ்ணா, ஸ்ரீனிவாசன் போன்ற சிறந்த பேராசிரியர்கள் பாடம் எடுத்தார்கள்... நம் இன்ஸ்டிடியூட்டை கோயில் கட்டிக் கும்பிட வேண்டும்.
படிப்பு முடிந்ததும்...?
பி.சி.சார் கிட்டதான் வேலைக்குச் சேர்ந்தேன். "குருதிப் புனல்' தொடங்கி "மே மாதம்' வரை 5 படங்கள் அவருடன் பணியாற்றினேன். எல்லாவிதமான படங்களும் அதில் இடம்பெற்றன. எனக்கு அது சரியான பயிற்சிக் களமாக இருந்தது.
நீங்கள் சொந்தமாக ஒளிப்பதிவு செய்ய ஆரம்பித்த அனுபவங்கள்?
முதலில் விளம்பரப் படங்களில் பணியாற்ற ஆரம்பித்தேன். ஐசிஐசிஐ பாங்க் விளம்பரங்கள் செய்தேன். "என்னை மறந்ததேன்' என்று டீ கோப்பை ஒன்று கண்ணீர் மல்கும் விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். அது நான் படமாக்கியதுதான். இப்படி 10- 15 விளம்பரப் படங்களில் பணியாற்றினேன். அதன் பிறகு பென்டபோர் சார்பாக அனிதா சந்திரசேகர் இயக்கிய 'ஓய்ர்ஸ்ரீந் ஓய்ர்ஸ்ரீந் ஐ ஹம் ப்ர்ர்ந்ண்ய்ஞ் ற்ர் ம்ஹழ்ழ்ஹ்' ஆங்கிலப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தேன். நல்ல படம். "பகீர் ஆஃப் வெனீஸ்' என்ற இந்தி படத்துக்குப் பணியாற்றினேன். அதைத் தொடர்ந்து "கண்ணா மூச்சி ஏனடா' இவை இரண்டுமே விரைவில் ரிலீஸ் ஆக இருக்கின்றன. அதைத் தொடர்ந்து இப்போது ராதாமோகனின் "அபியும் நானும்'.
இதுவரை இரண்டு பெண் இயக்குநர்களிடம் பணியாற்றி இருக்கிறீர்கள். இப்போது தமிழில் அபியும் நானும் படத்துக்காக ஆண் இயக்குநருடன் பணியாற்ற இருக்கிறீர்கள்.... இதில் ஏதாவது சிக்கல்...?
எல்லாத் துறைகளிலுமே இதுபோன்ற சிக்கல்கள் இருக்கின்றன. இது சினிமாவுக்கு மட்டுமானது இல்லை. சினிமா டென்ஷனான துறை. அதற்கான ஏச்சும் பேச்சும் இருக்கத்தான் செய்கிறது. அதில் ஆண் பெண் பேதமில்லை. அதிகம் திட்டிய பெண் இயக்குநர்களும் இருக்கிறார்கள். மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொண்ட ஆண் இயக்குநர்களும் இருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ், ராதாமோகன் யூனிட் சொல்லவே வேண்டாம். ப்ரியாவுடன் "கண்ணா மூச்சி..'யில் பணியாற்றியதைவிட மகிழ்ச்சியாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.
டைரக்ஷன் செய்யும் ஆசை இருக்கிறதா?
நான் உண்டு, என் காமிரா உண்டு என்று இருக்கிறேன். எனக்குத் தெரியாத வேலையை எல்லாம் நான் செய்ய மாட்டேன்.
தமிழ்மகன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)