சனி, செப்டம்பர் 22, 2007

ஒரு நாள் தரிசனம்!


பெண்ணால் முடியும் என்பது எல்லாத் துறைகளிலும் நிரூபிக்கப்பட்டு வருவதுபோலவே சினிமா துறையிலும் சமீபகாலமாகச் சாத்தியப்பட்டு வருகிறது. டி.பி.ராஜலட்சுமி முதல் "கண்ணாமூச்சி ஏனடா' ப்ரியா வரை சினிமாவில் இயக்குநர்களாகத் தங்களைப் பதிவு செய்தவர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள்.
சமீபத்திய பதிவாக டைரக்ஷனுக்கான தங்க மெடல் வாங்கி திரையில் தடம் பதிக்க வருகிறார் யூ. அபிலாஷா. பாரம்பர்யமிக்க பிரசாத் ஸ்டூடியோவின் ஃபிலிம் அண்ட் டி.வி. அகாதமியில் படித்து வெளியேறும் முதல் பேட்ச் மாணவர்களுக்கான புராஜக்டில் முதல் பரிசு வென்றிருக்கிறார் இவர்.
இன்றைய மாணவர்கள் சாஃப்ட்வேர் என்ஜினியர், எம்.பி.ஏ., டாக்டர் போன்ற துறைகளுக்காக போட்டி போட்டுக் கொண்டு இருக்கும்போது உங்களைச் சினிமா துறையை நோக்கி திருப்பிய அம்சம் எது?
சொல்லப் போனால் சினிமா ஆர்வம்தான் எல்லோருக்கும் இயல்பானதாக இருக்கிறது. ஏனென்றால் எல்லோருமே சினிமா பார்ப்பவர்களாக இருக்கிறோம். மற்ற என்ஜினியர், டாக்டர் கனவுகள் எல்லாம் சிலருடைய அறிவுரையின் பேரில் ஏற்படுவதாக இருக்கிறது. கதை கேட்பதும் பாடுவதும் ஆடுவதும் குழந்தையிலேயே ஏற்படும் ஆர்வங்கள். பின்னாளில் அது மாறிப் போய்விடும். ஆனால் சிறுவயதில் எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை நான் அணையாமல் வைத்திருந்தேன். அதுதான் என்னை இதைப் படிக்கவும் வைத்தது.
உங்கள் குடும்பப் பின்னணியைப் பற்றிச் சொல்லுங்கள்...?
நான் கோவையைச் சேர்ந்தவள். அப்பா, அம்மா, தம்பி எல்லாம் அங்குதான் இருக்கிறார்கள். நான் முதலில் பி.காம் படித்தேன். டைரக்ஷனுக்கான இந்த இரண்டாண்டு படிப்பை முடித்திருக்கிறேன்.
நீங்கள் விரும்பிப் பார்த்த படங்கள் மூலமாக பெற்ற அனுபவம் இங்கே படிப்புக்குப் பயனுள்ளதாக இருந்ததா?
நிச்சயமாக. மணிரத்னம், பாலா ஆகியோரின் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தன. இங்கே இரானிய படங்கள், ஆப்ரிக்க, பிரெஞ்சு படங்கள் போன்றவற்றைப் பார்க்கும் போது மனிதர்களின் ஆதாரமான பிரச்சினைகளை ஒவ்வொருவரும் எப்படிச் சொல்கிறார்கள் என்பதை ஒப்பிட முடிந்தது. நிறைய படங்கள் பார்ப்பது நிச்சயமாக ஒரு பயிற்சிதான். கமர்ஷியல் ஃபிலிம், ஆர்ட் ஃபிலிம் என்ற பேதம் இல்லாமல் எல்லாவற்றையுமே நான் பார்க்கிறேன்.
கமர்ஷியல் ஃபிலிம், ஆர்ட் ஃபிலிம் என்ற வகைகளில் உங்களின் ஆர்வம் எப்படி இருக்கிறது?
தமிழில் படம் இயக்க வேண்டுமானால் அது கமர்ஷியலாகத்தான் இருந்தாக வேண்டும். கமர்ஷியல் என்பதை எந்த அர்த்தத்தில் சொல்கிறேன் என்றால் உதாரணத்துக்கு என் படத்தில் பாடல் காட்சிகள் இருக்கும். பாடல் காட்சி இல்லாத படத்தை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. நம்முடைய கூத்து முறைகளிலேயே வசனக் காட்சிக்கு இணையாக பாடல்கள் இடம் பெற்றன. ஆகவே பாடல் காட்சி என்பது நம் கலாசாரத்தோடு வருகிற அம்சம். வித்தியாசமான முயற்சியாக பாடல் இல்லாத படங்களை ஒன்றிரண்டு தரலாம். பத்திய சாப்பாடாக ஏதோ இரண்டு நாள் உப்பில்லாமல் சாப்பிடுவது போலத்தான் அது.
இங்கே நிறைய வெளிநாட்டுப் படங்கள் பார்த்ததாகச் சொன்னீர்கள்... அவற்றுக்கும் நம்முடைய படங்களுக்குமான பெரிய வித்தியாசமாக எதைக் கருதுகிறீர்கள்?
பெரும்பாலும் எங்களுக்குத் திரையிட்டவை எல்லாம் ரியலிஸ்டிக் படங்கள்தான். மிகவும் இயல்பாக நகரும் காட்சிகள், மிகவும் உண்மையான பிரச்சினைகள், வாழ்வின் அடிநாதமான கேள்வியை எடுத்துச் சொல்பவையாக அவை இருந்தன. தமிழ் சினிமாவில் பெரும் பாலும் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள், அதிரடி மாற்றங்களும், ஹீரோயிஸத்தை வலியுறுத்துபவையாகவும் உள்ளன. ஆனால் இவை இரண்டுக்குமான இடைவெளியைக் குறைப்பதன் மூலம் இயல்பாகவும் விறுவிறுப்பாகவும் கதை சொல்ல முடியும் என்றே தோன்றுகிறது.
உங்களுக்கு வகுப்பெடுக்கத் திரைத்துறையில் இருந்து வந்தவர்களில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர்கள்?
நடிகர் ஓம்பூரி, எடிட்டர் சுரேஷ் அர்ஸ், லெனின், கேமிராமேன் கே.வி. ஆனந்த் ஆகியோர் வந்திருந்தனர்.
நீங்கள் தேர்வு செய்த கதை எத்தகையது?
தனிமையில் வாடும் ஒரு பணக்கார வீட்டுச் சிறுமிக்கு கிராமத்து எழிலைச் சுற்றிக் காட்டுகிறான்

ஒரு சிறுவன். அந்தச் சிறுவனின் தந்தை ஒரு நாடோடிக் கலைஞன். மறுநாளே அவர்கள் வேறு ஊருக்குப் போய் விடுகிறார்கள். அந்தச் சிறுமிக்கு அந்த ஒரு நாள் அனுபவம் மிகப் பெரிய தரிசனமாக இருக்கிறது. படத்தின் தலைப்பாக "ஒரே ஒருநாள்' என்று வைத்தேன். எனக்கும் ஒரு தம்பி இருப்பதால் இந்த உணர்வுகளைச் சொல்வது சுலபமாக இருந்தது. ஆனால் சினிமா ஒரு டீம் ஒர்க். நடிகர்கள், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைவருடைய பங்களிப்பும் சிறப்பாக இருந்தால்தான் வெற்றி சாத்தியம். என்னுடைய வெற்றியையும் என் டீமில் இருக்கும் அனைவருக்குமானதாகத்தான் நான் கருதுகிறேன்.
தமிழ்மகன்

LinkWithin

Blog Widget by LinkWithin