வெள்ளி, பிப்ரவரி 10, 2012

Men are from Mars, Women are from Venus

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கவிதாமுரளிதரன் உயிர்மைக்காக எழுதிய விமர்சனம்

இரண்டு முற்றிலும் வெவ்வேறான அகவுலகங்கள் சந்திக்கும் திருமணம் என்கிற மையப்புள்ளி, அதில் ஏற்படும் உரசல்கள், முரண்கள், உளவியல் சிக்கல்கள் பற்றி ஆங்கிலத்தில் எக்கச்சக்கமாகவும் ஒப்பீட்டளவில் தமிழில் குறைவாகவும் அபுனைவு புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆண்-பெண் இடையிலான உறவுச் சிக்கலகள் பற்றி புனைவுகள் பல வந்திருந்தாலும் அவை ஒன்று ஆணின் பார்வையிலோ அல்லது பெண்ணின் பார்வையிலோ அமைந்தவையாகவே இருந்திருக்கின்றன.

எனக்கு தெரிந்த வரையில் ஆண், பெண் இருவரது பார்வைகளையும் பதிவு செய்யும் மிகச்சில புனைவு முயற்சிகளில் தமிழ்மகனின் ஆண்பால் பெண்பால் நாவல் முக்கியமான முயற்சி என்று சொல்லலாம்.

முதலில் பெண்பாலின் குரலாகவும் பிறகு ஆண்பாலின் குரலாகவும் விரியும் இந்த நாவலின் இரண்டு பகுதிகளிலும் இரண்டு குரல்களுக்கும் அப்பாற்பட்டு மெலிதாக, பூடகமாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு குரல் ஆணினுடையதா, பெண்ணினுடையதா என்று முதல் வாசிப்பில் சரியாக கணிக்க இயலவில்லை. ஆனால் அந்த குரல்தான் இரண்டு அகவுலகங்களும் எப்படி முற்றிலும் வெவ்வேறாக இயங்குகின்றன என்பதை அருணின், ப்ரியாவின் அகவுலகங்கள் மூலம் ஒரு மாயக்கண்ணாடியைப் போல காட்டிக்கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு, முதல் இரவு அன்று அருண் சட்டையை கழற்றுவதை அவன் புணர்ச்சிக்கு தயாராகிவிட்ட்து போல ப்ரியா புரிந்து கொள்வதற்கும் பின்னால் அருண் அவனுடைய நிலமையை வெளிக்காட்டாமல் இருப்பதற்காக அவ்வாறு செய்த்தாகச் சொன்னதற்குமிடையில் ஒலிக்கும் குரலில்தான் உண்மை ஒளிந்துக் கொண்டிருக்கிறது. இந்த நாவல் முழுக்க இது போன்ற அகவுலகங்களுக்கிடையிலான உளவியல் முரண்களால் நிரம்பியிருக்கிறது. மனோத்த்துவ நிபுணர் பீட்டர் செல்வராஜின் அறிவுரைப் படி அருண் பிரியாவிடம் ’கிளுகிளுப்பாக’ பேசுவதும், அவை ப்ரியாவால் மூர்க்கமாக நிராகரிக்கப்படுவதும் இன்னொரு உதாரணம். இருவருக்குமிடையிலான உடல் ரீதியான உறவு பற்றி இருவரும் வெளிப்படுத்தும் புரிதல்கள், எதிர்பார்ப்புகள் அவை அங்கீகரிக்கப்படும் அல்லது மறுக்கப்படும் தருணங்கள் இந்த முரண்களின் உச்சமாக நாவலில் வெளிப்படுவதாக தோன்றுகிறது.

கிட்ட்த்தட்ட நாவல் முழுவதும் ப்ரியா ஒரு சராசரி பெண்ணாகவும் அருண் ஒரு பெருந்தன்மையான ஆணாகவும் உலவுகிறார்கள். வெண்குஷ்டம் ஒரு பெரிய விஷயமில்லை என்று ப்ரியாவை சமாதானப்படுத்துவது, அவளது மனச்சிதைவைப் புரிந்து கொண்டு பரிதாப்ப்ப்படுவது என்று அருண் ஒவ்வொருமுறையும் அவனது பெருந்தன்மையை கடைவிரித்துக் காட்டும் ஒரு மனோநிலையுடனேயே இருக்கிறான். மாறாக ப்ரியா அவனை ச்சிரேகா, அருணா ஆகியோரோடு இணைத்து சந்தேகப்படுவது, அவளது தங்க செயின் பறிக்கப்பட்ட போது அதை பெரிது படுத்தாமல் இருக்கும் அருணை அப்போதும் எம்.ஜி.ஆரோடு ஒப்பிட்டு தோற்றுப் போனவனாக கருதுவது என்று சராசரி பெண்ணாகவே இருக்கிறாள். நாவலின் இறுதியில்தான் இந்த பிம்பங்கள் உடைகின்றன. பெருந்தன்மைகளால் நிறுவப்பட்ட பீட்த்திலிருந்து அருண் மெல்ல மெல்ல சரிவதும் தனது குரல் மூலம் தன்னை முழுமையாக வெளிப்படுத்த விரும்பாத ப்ரியாவை வாசகர் சரியாகவும், கிட்த்தட்ட முழுமையாகவும் அடையாளம் காண்பதும் நாவலின் இறுதியிலேயே நடக்கிறது.

அருண் சொல்வது போல கதையின் முழுத்தன்மையையும் நாவலின் இரண்டாவது பகுதியின் 19வது அத்தியாயத்தில் வரும் அவர்களுக்கு குழந்தை பிறக்காது, அதற்குக் காரணம் அருண்தான் என்கிற செய்தி மாற்றிவிடுகிறது. ஆனால் அதற்கு முன்னோட்டமாக அருணின் சராசரித் தனத்துக்கு சான்றாக சில விஷயங்களை நாவலாசிரியர், அல்லது நாவலில் ஒலிக்கும் மூன்றாவது குரல் வெளிப்படுத்திவிடுகின்றன. ச்சிரேகாவை அருணுடன் இணைத்து ப்ரியா சந்தேகப்படுவதை அவளது மனச்சிதைவின் ஒரு பகுதியாகவே வாசகர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ச்சிரேகாவுடன் சினிமா போனபோது நடந்த விஷயங்கள் வாசகருக்கு தேவையற்றவை என்று கடந்துவிடுகிறான் அருண். ப்ரியாவின் சந்தேகங்களுக்கு மனச்சிதைவு காரணமில்லை. ஆனால், ப்ரியா அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்த காரணத்தாலேயே அவளை டிடெக்டிவ் ஏஜென்சி வைத்து வேவு பார்க்கும் அளவுக்கு சந்தேக மனப்பான்மை கொண்ட அருணின் நடவடிக்கை அந்த சமயத்தில் இயல்பான ஒரு விஷயமாக அருணால் முன்னிறுத்தப்படுகிறது. ப்ரியாவின் வெண்குஷ்ட்த்தை பெரிதுபடுத்தாதன் மூலம் பெருந்தன்மையாக தெரியும் அருண், மகப்பேறு மருத்துவர் அவனை சோதனைகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்று சொல்லும் போது வெளிப்படுத்தும் அதிர்ச்சியின் மூலம் சராசரியான ஆணாகிறான்.

ப்ரியாவை குழந்தை பாக்கியம் வேண்டி குடும்பத்தோடு திருப்பதிக்கு அழைத்துச் செல்ல விழைகிறான் அருண். பேருந்து நிலையத்தில் ஒரு சின்ன பையனோடு எம்.ஜி.ஆர் குறித்து ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு தனக்கு மாதவிலக்கு வந்துவிட்ட்தாக சொல்லி திருப்பதி செல்லாமல் தவிர்த்துவிடுகிறாள். சம்பவம் நடக்கும் போது, அல்லது அந்த சம்பவத்தை வாசகர்கள் படிக்கும் போது ப்ரியாவின் இந்த நடவடிக்கை மனச்சிதைவு நோயின் வெளிப்பாடாகவே தோன்றும். ஆனால் திருமணமான எட்டாவது மாத்த்திலேயே அவர்களுக்கு குழந்தை பிறக்காது அதற்கு அருண் காரணம் என்கிற செய்தியோடு இந்த சம்பவத்தை பொருத்திப் பார்க்கும் போது ப்ரியாவின் நடவடிக்கைக்கு பின்னிருக்கும் உளவியல் காரணங்கள் புரியலாம். எனக்கு தெரிந்த ஒரு தம்பதிக்கு இறுதிவரை குழந்தை இல்லை. ஒரு முப்பது வயது ஆகும் போது அந்த பெண்ணின் மீது சாமி இறங்கியது. அந்த பெண் இறக்கும் வரை அவர் மீது சாமி இறங்கிக் கொண்டிருந்த்து. அந்த பெண்ணின் கணவர் சிறுமியரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி அடிக்கடி மாட்டிக்கொள்பவர் என்கிற செய்தியோடு அந்த பெண் மீது சாமி இறங்கும் செய்தியையும் பொருத்திப் பார்க்கும் போது பல உண்மைகள் புரிந்த்து.

ப்ரியாவிற்கு எம்.ஜி.ஆர் ஒரு அரண். சிறு வயதிலேயே வந்துவிட்ட வெண்குஷ்டம் பற்றிய பயத்தை விலக்க பாட்டி எம்.ஜி.ஆரை துணைக்கு அழைத்தார். பிறகு பல சமயங்களில், பல பிரச்னைகளிலிருந்து அவமான்ங்களிலிருந்து தப்பிக்க ப்ரியா எம்.ஜி.ஆரை துணைக்கு அழைத்திருக்கிறாள், அல்லது எம்.ஜி.ஆராகவே மாறியிருக்கிறாள். பீட்டர் செல்வராஜிடம் தனக்கு குழந்தை பிறக்காது என்கிற விஷயத்தை உளறிவிடகூடாது என்கிற காரணத்துக்காகவே எம்.ஜி.ஆராக அங்கு மாறியிருக்கிறாள். கணவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்கிற மாமனாரின் ஜோக்கினால் சீண்டப்பட்ட சுயத்தை மீட்டெடுக்க எம்.ஜி.ஆரின் உதவியை நாடியிருக்கிறாள். ஆனால் ப்ரியாவுக்கும் அருணுக்கும் மிடையில் நடக்கும் பிரிவுக்கு எம்.ஜி.ஆர் காரணமில்லை. அருண் சொல்வது போல குழந்தைப் பேறு இல்லாத்துதான் ஆரம்பம், அதன் பிறகு குழந்தை பேறு இல்லாத எம்.ஜி.ஆரின் ஆவி பாதிப்பு.

இரு வேறு அகவுலகங்களுக்கிடையிலான சிக்கல்களை இந்த நாவல் பல இடங்களில் மிகத்துல்லியமாக அடையாளம் காண்கிறது. தனது பெருந்தன்மைக்கான ஸ்கோரை எப்போதும் ப்ரியா குறைத்துப் போடுவதாக அருண் அடிக்கடிக் குறைப்பட்டுக் கொள்கிறான். ஒரே ஒரு இட்த்தில் தான் ப்ரியாவுக்கு எவ்வ்ளவு மார்க் போடுவது என்று குழம்புகிறான். ஒரு உறவில் இருக்கும் ஆணும் பெண்ணும் ஒருவொருக்கொருவர் மார்க் போட்டுக்கொள்ளும் விதம் கடுமையாக வேறுபடுவதாக சொல்கிறார் Men are from Mars, Women are from Venus என்கிற புத்தகத்தை எழுதிய ஜான் கிரே. ஒரு பெரிய விஷயத்தை செய்துவிட்டு வேறு எதுவும் செய்யாமலேயே கூட நிறைய மார்க்க் வாங்கிவிடலாம் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு குட்டி குட்டியாக நிறைய விஷயங்கள் தேவைப்படுகிறது, என்கிறார் கிரே. இது அருணின் விஷயத்திலும் நடக்கிறது. கிரே சொல்வது போல தீர்வு காணப்படும் வரை ஆண்கள் பிரச்னைகளிலிருந்து விலகிக்கொள்கிறார்கள் என்பதும் அருணுக்கு பொருந்தும். அவர்கள் நண்பர்களிடம் அடைக்கலமாகிறார்கள், அருண் ரகுவிடம் அடைக்கலமாவது போல. குழந்தையின்மையின் முழு வலியையும் பிரக்ஞைய்யும் ப்ரியா சுமக்கிறாள். அதனாலேயே அவளுக்கு பாதிப்பு அதிகம்.

இரண்டு குரல்களாக, இரண்டு பகுதிகளாக நாவல் விரிந்தாலும், ப்ரியாவின் குரல் முழுமையாக வெளிப்படவில்லை என்பதுதான் உண்மை. தன்னுடைய பிரச்னைகளுக்கு காரணமாக அருணை காட்டிவிட்டு ப்ரியா இயல்பாக இருந்திருக்கலாம். ஆனால் அது சராசரி ஆணின் குணம். அதை ப்ரியா செய்யவில்லை. மாறாக, பல குழப்பங்களில், உள்மனப்போராட்டங்களில் சிக்கி அதன் காரணமாக மனநல மருத்துவமனையில் சென்று முடிகிறாள். அறிவால் செலுத்தப்படுகிறோமா உணர்வால் செலுத்தப்படுகிறோமா என்கிற கேள்வி நிறைய பெண்களைப் போல ப்ரியாவையும் துரத்துகிறது. உணர்வால் செலுத்தப்படுகிற அறிவாளியாகவே அவள் இருக்கிறாள் – நிறைய பெண்களைப் போல. ப்ரியாவின் குரல்ல்லாத வேறொரு குரலின் மூலம் ப்ரியாவை முழுமையாக வெளிப்படுத்துவதுதான் இந்த நாவலின் வெற்றி. அது அருணின் குரல் என்றும் சொல்ல முடியாது. பல இடங்களில் அருண் தன்னை பெருந்தன்மையான கணவனாக காட்டிக்கொள்வதில் கவனமாக இருக்கிறான். குழந்தையின்மை பற்றிய ரகசியத்தை அவன் நாவலின் இறுதியில் போட்டு உடைப்பது கூட ப்ரியாவின் தியாகத்தை வெல்லும் நோக்கத்தில்தான்.

என்னைப் பொருத்தவரையில் இது அருணின் குரலை மிகுதியாக்க் கொண்ட ப்ரியாவின் நாவல்.

LinkWithin

Blog Widget by LinkWithin