திங்கள், பிப்ரவரி 09, 2009

திரைக்குப் பின்னே-19

தோன்றி மறையும் வேடங்கள்

சில திரைப்படங்களில் நம் மனதில் பதித்துக் கொள்ள முடியாத சிறிய வேடத்தில் சில கதாபாத்திரங்கள் வந்து போகும். "அதோ அந்த சிவப்புச் சட்டை' என்று அடையாளம் காட்டுவதற்குள் அந்தக் காட்சி மறைந்துவிடும். நடிக்கும் துடிப்பில் கேமிராமேன் ரவிவர்மன், இயக்குநர் ஷங்கர் என பலர் அப்படி நடித்தவர்கள்தான். படிப்படியாக அப்படி நடித்து நாமும் ஒரு கதாநாயகனாகிவிடவேண்டும் என்றோ காமெடியனாகிவிட வேண்டும் என்றோ அந்தக் குறுகிய காட்சிக்குள் நடிப்புப் பிரயாசையை வெளிப்படுத்துவார்கள்.

விஜய் நடித்த "துள்ளாத மனமும் துள்ளும் ' படத்தில் டவுசர் பாண்டி என்ற படத்தில் நடித்தவரை எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும் என்று தெரியவில்லை. அப் படத்தில் ராயப்பேட்டை மணிகூண்டுக்கு வழி கேட்டவனுக்கு உட்கார்ந்த இடத்திலேயே மெட்ராஸ் பாஷையில் ஊரையெல்லாம் சுற்றிக்காட்டுவார். வேடிக்கை என்னவென்றால் மணிகூண்டுக்கு அருகில் இருந்துதான் வழி கேட்டிருப்பான் அவன். கடைசியில் "இம்மா நேரம் மெட்ராஸ சுத்திக் காட்டினதுக்கு அம்பது ரூபா எடு'' என்பார் டவுசர் பாண்டி.

இரண்டே நிமிடம் இடம்பெற்றாலும் இந்தக் காட்சியில் அவருடைய மெட்ராஸ் பாஷையில் வசீகரிக்கப்பட்டு விமர்சனத்தில் அதை ரசித்து எழுதியிருந்தேன்.

அவருக்கு சந்தோஷம் தாளவில்லை. வெளியூரில் அடுத்து ஏதோ படப்பிடிப்பில் இருந்ததால் அவருடைய நண்பர் பாவை என்பவர் மூலம் நன்றி சொன்னார். சில மாதம் கழித்து பாவை என்ற அந்த நண்பர் வந்தார். ""டவுசர் பாண்டி இறந்துட்டார் ஸர்'' என்றார்.

"அடடா எப்படி?'' என சாதாரணமாகத்தான் விசாரித்தேன்.

"திருநெல்வேலியில் ஏதோ படப்பிடிப்பு. பஸ் நடுவழியில் பிரேக் டவுன். பழுது பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் எப்படியும் காலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேறு பஸ்ஸுக்காக சாலைக்கு வந்திருக்கிறார். ஏதோ லாரியோ,

பஸ்ஸோ அடித்துவிட்டுப் போய்விட்டது சார்'' "அடக்கொடுமையே.. என்றைக்கு நடந்தது? யாருக்குமே தெரியவில்லையே?'' "என்னைக்கு நடந்ததுனு யாருக்குமே தெரியாது சார்'' என்று கூறிவிட்டு அடுத்த தகவலைச் சொன்னார். அவர் பாக்கெட்ல நடிகர் சங்க அடையாள அட்டை இருந்தது. ஆனால் அதில் அவருடைய பழைய வீட்டு முகவரிதான் இருந்தது. அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு இவர் சினிமாவுக்காக டவுசர் பாண்டி ஆன பெயர்தான் தெரியும். அடையாள அட்டையிலோ அவருடைய சொந்த பெயரில்தான் (பட்டாபி என்று நினைக்கிறேன்) தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் போலீஸôர் அங்கு விசாரித்தபோது அப்படி யாரும் அங்கு

இல்லை என்று கூறிவிட்டார்கள். அனாதைப் பிணம் என்று அடக்கம் செய்துவிட்டார்கள். அவருடைய வீட்டிலோ கணவர் படப்பிடிப்பில் இருக்கிறார் என்று இருந்துவிட்டார்கள்.''




இப்படியும் நடக்குமா என்று இருந்தது. "மேற்கு மாம்பலம் பகுதியில் வாடகை தரவே சிரமப்படும் குடும்பம்' என்றார். அடுத்து நான் எஸ்.ஏ. சந்திரசேகரனைச் சந்தித்த போது இந்தத் தகவலைச் சொன்னேன். அவருடைய மகன் படத்தில் நடித்தவர் என்ற முறையில் "ஏதாவது உதவி செய்ய முடியுமா பாருங்கள்' என்றேன். அப்போதுதான் விவரம் தெரிந்து வருத்தப்பட்டார். உடனடியாக ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவினார். மணிகூண்டுக்கு வழிகாட்டியவரின் குடும்பத்துக்கு வழிகாட்டினார் எஸ்.ஏ.சி. என நன்றியால் நெகிழ்ந்தேன்.


ராதிகா அடித்த கமெண்ட்!

பளீர், பளீரென பதில் அளிப்பதில் ராதிகா "அரசி'. துணிச்சலும் நகைச்சுவையும் தொனிக்கும் அதில். அவருடைய சொந்த வாழ்க்கை, பொது பிரச்சினைகள் அனைத்திலும் அவருக்கென திடமான பார்வை உண்டு. தேவாவின் மகள் திருமணத்தின் போது திரையுலகினர் பலரும் நம்ம வீட்டுக் கல்யாணம்போல குழுமியிருந்தனர். பொதுவாக திருமணங்களின் போது உறவினர் சூழ பெண்கள் சந்தோஷமாக கதைத்துக் கொண்டிருக்கும் சந்தோஷத்தை நட்சத்திரங்கள் மத்தியிலும்

பார்த்தேன். ராதிகாவைச் சுற்றி அப்படியொரு கூட்டம். பொதுவாக "ஹேராம்' படம் எப்படியிருக்கிறது என்று ராதிகாவை யாரோ விசாரித்தார்கள். அவரும் "நல்ல படம்தான். ஆனால் தமிழில் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்'' என்று கமெண்ட் அடித்தார்.




எல்லோரும் சிரித்தனர்.

படத்தில் ஆங்கிலம், வங்காளம், உருது, மராட்டி, தெலுங்கு, பஞ்சாபி, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளும் இடம்பெற்றிருக்கும். ஒரு தேசிய படம் அதற்கான லட்சணத்தோடு இருந்தது. அதை கமல் தவிர்த்திருக்க முடியாது. அதை ராதிகா கமெண்ட் அடித்ததிலும் தவறு இல்லை. அதற்கு மற்றவர் சிரித்ததிலும் தவறு இல்லை. அதை நான் குமுதத்தில் எழுதியதுதான் தவறு. இதழ் வெளியான அன்று ராதிகா போன் செய்தார். முதலில் "நான் அப்படிச் சொல்லவே இல்லை' என்றார். "அருகிருந்து நான் அதைக் கேட்டேன்' என்று உறுதியாகச் சொன்னேன். "அது நான் அளித்த பேட்டியா? எங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்ததை இப்படி எழுதினால் அது வீணாக சங்கடத்தை ஏற்படுத்துவதாகாதா?' என்றார். அதன் பிறகு அந்தச் செய்திக்கு மறுப்பு வெளியிட்டோம்.



மத்தள இடி!

ஒரு பேட்டிக்கு இரண்டுவிதமான பொல்லாப்புகளைச் சந்திக்க நேரும் என்பதற்கு உதாரணம் இது. யாரைப் பேட்டி கண்டேனோ அவராலும் சபிக்கப்பட்டு, யாரை குறை சொன்னோமோ அவராலும் சபிக்கப்பட்ட சம்பவம் அது. சன் டி.வி.யில் ஒளிபரப்பான

பாலுமகேந்திராவின் "கதை நேரம்' தீவிர பாராட்டுதலுக்கு ஆளாகியிருந்த நேரம். முழுக்க முழுக்க அத் தொடரைப் பாராட்டி பாலுமகேந்திராவிடம் கேள்விகள் கேட்டிருந்தேன். பேட்டி மிகச் சிறப்பாக வெளியாகியிருந்தது.




பத்திரிகை வெளியான அன்று அலுவலகத்தில் பாலுமகேந்திராவிடம் இருந்து போன் என்றதும் பாராட்டு மழையில் நனையப் போகும் ஆயத்தத்தோடு ரிஸீவரை எடுத்தேன். "அதனால்தான் பேட்டிக்குத் தயங்கினேன். இப்படிச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவே

இல்லை. என்னதான் இலக்கியம் பேசினாலும் உங்கள் பத்திரிகை புத்தியைக்காட்டி விட்டீர்கள்'' என்று அடுக்கடுக்காகத் தாக்க ஆரம்பித்தார். "என்ன சார் பேட்டி நன்றாகத்தானே வந்திருக்கிறது எதற்காகக் கோபப்படுகிறீர்கள்?'' என்றேன்.




"எதற்காக அந்தப் போட்டோவை பிரசுரித்தீர்கள். இதனால் என் வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் தெரியுமா?'' என்று போனை வைத்துவிட்டார். அந்த நிமிஷம் வரை நான் இதழைப் பார்க்கவில்லை. நான் எழுதியதைப் பிழைத்திருத்தம் பார்த்து தந்ததோடு சரி. குமுதத்தில் நிருபர்களை டிசைனிங் செக்ஷனுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். நாம் கொடுத்தது என்னவாக வெளிவரப்போகிறது என்கிற தவிப்பு, பிரசவ வார்டில் கையைப் பிசைந்து கொண்டிருக்கும் கணவனுக்கு ஒப்பானது. அவசரமாகப் புத்தகத்தைப் புரட்டினேன்.

பாலுமகேந்திராவும் மவுனிகாவும் சேர்ந்திருக்கிற படத்தைப் பிரசுரித்திருந்தார்கள். அதுதான் அவருடைய கோபத்துக்குக் காரணம். ஏற்கெனவே அவர்களைப் பற்றிய கிசு கிசுக்கள் "போதும்' என்கிற அளவுக்கு எழுதி ஓய்ந்துவிட்ட நிலையில் இது அவருக்குப் பெரிய வேதனையான விஷயம்தான்.போனை வைத்துவிட்டு சோர்வோடு இருக்கையில் அமர்ந்தேன். உடனே அடுத்த போன். செவன்த் சேனல் நாராயணன் பேசினார்.

"ஒரு டி.வி. தொடரும் உருப்படியாக இல்லை என்று எப்படி எழுதலாம். எங்கள் நிறுவனம் தயாரித்த தொடர்களைப் பார்த்திருக்கிறீர்களா?... தமிழ் நாட்டிலேயே முதன் முதலில் வித்தியாசமாகத் தொடர்கள் தயாரித்தவர்கள் நாங்கள்தான்... கதை நேரம் மட்டும்தான் சிறப்பான தொடர் என்றால் மீதி பேரெல்லாம் இளிச்சவாயன்களா?'' என்று போடு போடு என போட்டார். பாலுமகேந்திராவின் கோபத்தில் பக்குவப்பட்டுப் போயிருந்ததால் தொடர்ந்து ஏழெட்டு சாரிகளை உதிர்த்துவிட்டு உட்கார்ந்தேன். சில நேரங்களில் ஆபிஸிலிருந்தும் திட்டுகள் விழும். மூன்று பக்கமும் அடிவாங்கும் மத்தளம்போல.

LinkWithin

Blog Widget by LinkWithin