திங்கள், மே 19, 2008

மீன் மலர் சிறுகதை

தமிழ்மகன்





"இசையின் இயற்பியல் கூறுகள்'' என்றான் அவன்.

கல்லூரி முதல்வருக்கு அவன் சொல்வதின் அர்த்தம் புரியவில்லை. ""இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?'' என்றார்.

"72 மேள கர்த்தா ராகங்கள் இருப்பதை அறிவீர்கள். அது பற்றித் தெரியவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை. அவற்றின் பெர்முடேஷன் காம்பினேஷனில் }நிகழ்தகவு அடிப்படையில்} எத்தனையோ லட்சம் இசைக் கோர்வைகள் உருவாக்க முடியும், ஜன்ய ராகத்தில் எவற்றையெல்லாம் பூர்வாங்க ராக மேளகர்த்தாக்களாகவும் எவற்றையெல்லாம் உத்தராங்கமாகவும் பாவிக்கலாம் என்பதை அறிவியல் ரீதியாக கணக்குகளாக ஆய்வு செய்தேன். ஒவ்வொரு ராகத்துக்கும் ஒரு எண். எத்தனையாவது லட்சத்து ராகம் என்பதைச் சொன்னால்போதும் அந்த ராகத்துக்கான லட்சணங்கள் என்ன என்பதை...''

"அது இல்லை, மிஸ்டர் ரவி... இந்த ஆய்வினால் என்ன பயன் என்று இன்னும் நேரடியாகச் சொல்ல முடியுமா?''

"மிகச் சிறந்த இசை மேதைகள் எல்லாம்கூட எல்லா மேளகர்த்தா ராகங்களிலும் சிரத்தை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதாவது நன்றாக கைவரும் ராகங்களில் மட்டுமே தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புவார்கள். மனிதர்களுக்குச் சில எல்லைகள் உண்டு.சிலருக்கு சில ராகம் மிகவும் ரம்மியமாக இருக்கும். வேறு சிலருக்கு வேறு ராகங்கள் அப்படி அமைந்துவிடும். பாடுபவர்களுக்கு மட்டுமல்ல, கேட்பவர்களுக்கும் இப்படியான எல்லைகள் உண்டு. ஆனால் நம்முடைய விருப்பு வெறுப்புகளை மீறி உலகில் இத்தனை இசைமுடிச்சுகள் இறைந்து கிடக்கின்றன. நதியின் சலசலப்பில், பறவைகளின் குரலோசையில், கோவில் மணியின் ரீங்காரத்தில்... இதையெல்லாம் ஒரு ஃபார்முலாவில் அடக்க முடிந்தால் கணினி மூலமாகவே அத்தனை ராகங்களையும் பெற முடியும். உதாரணத்துக்கு 75 ஆயிரமாவது ஜன்ய ராகம் கேட்க வேண்டுமா... ஜஸ்ட் 75 ஆயிரம் என்பதற்கான எண்ணை அழுத்திவிட்டு "எண்டர்' தட்டினால் போதும். அதைக் கேட்க முடியும். இது இந்த ஆய்வின் நேரடிப் பயன். இதைத் தொடர்ந்து பலருக்கு இசை ஆய்வு செய்வதற்கு இதைப் பயன்படுத்த முடிவது அடுத்த பயன்கள்''

முதல்வர் கோட்டை சற்றே இழுத்துவிட்டுக் கொண்டு அடுத்த கேள்விக்குத் தயாரானார். ரவியும் தயாராகத்தான் இருந்தான்.

சற்றும் எதிர்பாராத கேள்வியாக "நீங்கள் எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?'' என்றார்.

"இண்டர்வியூ முடிந்துவிட்டதா? எனக்கு வேலை கொடுப்பதென்று முடிவு செய்துவிட்டீர்களா?'' என்றான் ரவி.
அவன் முகத்தில் மிகுந்த ஆர்வம் தெரிந்தது.

"வேலை தருவதில் சிக்கல் இல்லை, நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளம்தான் இப்போது தடையாக இருக்குமோ என்று நினைக்கிறேன்.''

"அடுத்த ஆண்டில் கனடாவில் எனக்கு வேலை கிடைத்துவிடும்.அது இசை ஆய்வுப் பணி. இந்தியாவில் கற்பனை செய்ய முடியாத சம்பளம். அதுவரை டயாபடீஸ் அம்மாவைப் பாதுகாக்கிற சம்பளம் தேவை. அவ்வளவுதான்.''

"சரி. நான் பார்த்துக் கொள்கிறேன். இன்னும் சில கேள்விகள்.''

"இன்னுமா?''

"உங்களுக்குத் தெரிகிறதா என்று பார்ப்பதற்காக அல்ல, எனக்குத் தெரிந்து கொள்வதற்காக''
சிரித்தான்.

"சொல்லப்போனால் இங்கிருந்துதான் பேச ஆரம்பித்திருக்க வேண்டும். இசை என்றால் என்ன?''
ரவி உண்மையிலே அதிர்ச்சி அடைந்தான்.

முதல்வர் மறுபடி தொடர்ந்தார். "பேரதிர்ச்சி ஏற்படுத்தும் கேள்வியைக் கேட்டுவிட்டேன்.""

"எதற்காக இப்படி கேட்கிறீர்கள்?'' என்றான் நிதானமாக.

"உண்மையாகத்தான் கேட்கிறேன். என்னால் இசையை ரசிக்க முடியவில்லை. அதைப் புரிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த சந்தேகங்கள் இருக்கின்றன. எல்லோரும் இசையை ஏன் ரசிக்கிறார்கள் என்பதே எனக்குப் புரியவில்லை. இசையை ரசிப்பதற்கு காது நன்றாகக் கேட்டால் மட்டும் போதாது என்று தோன்றுகிறது. சொல்லப் போனால் காது சரியாகக் கேட்டாக இசை மேதைகள் எல்லாம் இருந்தார்கள் என்கிறார்கள். இசையை அறியும் புலன் காது இல்லை. அது காதும் கலந்த ஒன்று அது எனக்கு வாய்க்கவில்லையோ என்று கவலையாக இருக்கிறது. மியூசிக் அகாதமி, நாரதகான சபா போன்றவற்றில் மிக முக்கியமானவர்கள் கச்சேரிக்கெல்லாம் போய் வந்தேன். என்னால் மெய் மறந்து கரைந்து போக முடியவில்லை. அப்படி என் முன் இருப்பவர்களைப் பார்த்தால் நடிக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. ஆனால் நான் உண்மையாகவே ரசிக்க முயற்சி செய்தேன். நிறைய கேசட்டுகள் வாங்கிக் கேட்டேன். இதோ என் டேபிளின் மீது பார்... இதோ இந்த டேப் ரிக்கார்டரில் இப்போதுகூட லால்குடி இருக்கிறார். என்ன பிரயோஜனம்? இசையை ரசிப்பது எனக்கு சவாலான விஷயமாகிவிட்டது.''

ரவி, "படித்தவர் பாமரர் அனைவரையும் இசை மயங்க வக்கிறது என்கிறார்கள். ஆடு மாடுகள்கூட வேணு கானத்தில் மயங்குவதாகச் சொல்கிறார்கள். சேக்ஸ்பியர் "மெர்செண்ட் ஆஃப் வெனிஸி'ல் இசை இல்லாத மனிதனை ராஜ துரோகி என்கிறார்'' என்றான்.

"அப்படியானால் இது என் ரசிப்புக்கு ஏற்பட்ட சவால் இல்லை; இசைக்கு ஏற்பட்ட சவால் என்பதுதான் சரியாக இருக்கும். ஏனென்றால் நான் இவ்வளவு முயற்சி செய்தும் ரசிக்க முடியவில்லையே. இப்போது சொல்லுங்கள், இசை என்றால் என்ன?'' முதல்வர்.

"உங்கள் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டே வாருங்கள். ஏதாவது ஒரு இடத்தில் தெளிவு கிடைக்கலாம். இசை என்றால்... கேட்ட மாத்திரத்தில் மனதில் சந்தோஷத்தைப் பரவச் செய்யும் இனிய த்வனிகளின் சேர்க்கை''

"இனிய த்வனிகள் என்றால்...?''

"ம்ம்.. ட்ராஃபிக் ஜாம் இரைச்சலை ரசிக்க முடிகிறதா உங்களால்...?''

"எரிச்சலாக இருக்கிறது.''

"குயிலோசை?''

"அது அவ்வளவு எரிச்சலாக இல்லை...''

சிரித்தான். "ரசித்தேன் என்று சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். .... சரி. கோயில் மணி?''

"சகித்துக் கொள்ள முடிகிறது''

ரவி அமைதியாக முதல்வரைப் பார்த்தான். "சரி. சினிமா பாடல்கள் கேட்பீர்களா?''

"சில பாடல்களைப் பாடுகிறேன். அதுகூட ரேடியோவிலும் டி.வி.யிலும் திரும்பப் திரும்பக் கேட்டு பாடல்வரிகள் பிடித்துப் போய் அதை உச்சரிக்கிறேன், அவ்வளவுதான். பின்னணி இசை இல்லாமலும் அந்தப் பாடல்வரி பிடித்திருக்கிறது. ஆனால் பாடல் வரிகள் இல்லாமல் அதை இசைக்கும்போது அப்படி ரசிக்கிறேனா என்று தெரியவில்லை. இசையிலும் எனக்குப் பாடல் வரிகள்தான் ஓடுகின்றன. ஏதோ ஒரு கட்டத்தில் இசையின் சூட்சமம் பற்றிக் கொள்ளும் என்ற என் ஆசை நிறைவேறவே இல்லை. பாட்டு என்றால் அந்த வரிகளைத் திரும்பச் சொல்கிறேன் அவ்வளவுதான்.''

"குறிப்பாக எந்தப் பாடல்..?''

"நிறைய இருக்கிறது. எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடல்கள், சிவாஜியின் தத்துவப் பாடல்கள் என.. சிரிக்க வேண்டாம். உங்களுக்குச் சட்டென பிடிபட வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்கிறேன். ஏட்டில் எழுதி வைத்தேன். எழுதியதைச் சொல்லி வைத்தேன்... அல்லது சின்ன சின்ன ஆசை... தென்பாண்டிச் சீமையிலே தேனோடும் வீதியிலே''

"இது போதும். உங்கள் மனதில் இசை இருக்கிறது. பாட்டரி வீக்...ஷெல்ப் எடுக்கவில்லை. தள்ளிவிட்டுதான் ஸ்டார்ட் செய்ய வேண்டும்'' }சிரித்தான்.

"நீங்களே சொன்னீர்கள். சிலருக்கு சில ராகம் மிகவும் பிடிக்கும் என்று. இசை என்பது கேட்பவரைப் பொறுத்ததுதானா?''

"அதிலென்ன சந்தேகம்...? யாரும் அற்ற சபையில் நாற்காலிகள் மட்டும் இசையை ரசிக்குமா? கேட்பதற்கு மனிதர்கள் இருந்தால்தான் நாதத்துக்குப் பெருமை. ரசிப்பவர்கள் இருந்தால்தான் இசை என்று ஒன்று இருக்க முடியும்''

"அதுசரி. என்னைப் போன்ற நூறுபேர் ஒரு சபையில் உட்கார்ந்திருந்தால் அந்தக் கச்சேரி நடந்தென்ன பயன்?''
ரவி சிரித்தான். இப்படி ஒரு ஆசாமியிடம் மாட்டிக் கொண்டோமே என்ற சிரிப்பு.

"சிரித்தாலும் பரவாயில்லை. நான் என் சந்தேகங்களைக் கேட்டுவிடுகிறேன். இசையைக் கேட்டதால் பசுக்கள் நன்றாகப் பால்கறந்ததாகவும் பயிர் நன்றாக வளர்ந்ததாகவும் அம்ஷவர்த்தினி பாடியதால் மழை பெய்ததாகவும் அக்பர் அரசவையில் ராகம் பாடி தான்சேன் தீபம் ஏற்றியதாகவும் தியாகய்யர் பிலஹரியில்பாடி இறந்த பிராமணனை உயிர்ப்பித்ததாகவும் கூறுவதெல்லாம்? இறந்தவனுக்கும் மேகங்களுக்கும் ரசிக்கும் மனது இருக்கிறதா?''

"சப்த ஸ்வரங்கள் என்பதை சிரநாஸி முனிவரின் ஏழு குழந்தைகள்தான் என்கிறார்கள். இசைக்கு ஒரு தெய்வீகத் தன்மை இருப்பதை சொல்லும் நம்பிக்கைகள். இப்போது இறைத்தன்மை குறித்த நம்பிக்கைகளை விட்டுவிடுவோம்.''

முதல்வர் சிரித்தார். ""பயிர் செழித்து வளர்ந்ததும் பசு பால் கறந்ததும்?''

"அது விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ரம்மியமான ஒலிகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. மகிழ்ச்சி ஆரோக்கியம் தருகிறது...''

"ரம்மியமான ஒலி என்பதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உதாரணத்துக்கு எனக்கு லட்டு மிகவும் பிடிக்கிறது. என் மகனுக்கு லட்டு பிடிக்கவேயில்லை. பிட்ஸô என்றால் உயிர்.. ஒன்று பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்பது பழக்கத்தால் ஏற்படுகிறது. அமெரிக்காவில் இருந்து வருகிறவனுக்கு நம்மைப் போல் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை வளைத்துக் காட்டி சாப்பிட முடியுமா? அல்லது நாம்தான் பெர்கர் சாப்பிட்டு உயிர் வாழ்ந்துவிட முடியுமா?''

"மேலை நாட்டிலிருந்து நம்மைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறவர்கள் அதிகரித்துவருகிறார்கள். இப்படி ஒன்று இருப்பது தெரிந்ததும் அவர்களை அவர்களே மறு பரிசீலனை செய்கிறார்கள். எல்லோரும் உயர்ந்த கலையைத்தான் தேடுகிறார்கள். நம்முடைய இசையும் கலையும் தத்துவமும் இப்போது மேலை நாட்டை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. எண்ணெய் கத்திரிக்காய் இல்லாததால் பீட்ஸô சாப்பிடுகிறார்கள். கிடைக்குமிடம் தெரிந்ததும் தேடி வருகிறார்கள்.''

"அமெரிக்கன் எம்பஸி வாசலில் விசா கேட்டு காத்திருப்பவர்கள் அதைவிட அதிகரித்திருக்கிறார்கள். பழகினால் சில பிடித்துப் போகிறது. ராமகிருஷ்ணர் கதை ஒன்றில் மீன்காரிகள் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பூக்காரியின் வீட்டில் தங்க வேண்டியிருக்கும். இரவெல்லாம் பூ வாசத்தால் அவர்களால் தூங்கவே முடியாமல் போகும். கடைசியில் மீன் கூடையை முகத்தில் மூடிக் கொண்டு தூங்குவார்கள். சீனப் படம் பார்த்தால் எல்லா நடிகையும் வித்தியாசமில்லாமல் ஒரே மாதிரி இருப்பதுபோல தோன்றுகிறது. ஆனால் அந்த ஊரில் கேட்டால் இவளைவிட இவள்தான் அழகி ஒருத்தியை அடையாளம் காட்டுகிறார்கள். சிநேகா அழகியா, சாண்ட்ரா புல்லக் அழகியா என்றால் நமக்கு சிநேகா, அமெரிக்கனுக்கு சாண்ட்ரா புல்லக். ''

"இங்கே கர்னாடிக்... அங்கே வெஸ்டர்ன் மியூசிக் என்று இருப்பது போல... அதனால் என்ன சொல்ல வருகிறீர்கள்?''

"ரூசி, அழகு, வாசனை, இசை எல்லாமே நாமே கற்பித்துக் கொண்டவை, சமீப காலங்களாக. அதாவது சில ஆயிரம் ஆண்டுகளாக. அதற்கு முன் அப்படியில்லை.எல்லா கண்டத்திலும் பச்சையாக மாமிசம் சாப்பிட்டார்கள். எல்லோரும் இனப் பெருக்கம் செய்தார்கள். இதுதான் பொது குணமாக இருந்தது. குளிரில் இருந்தவன் கம்பளி ஆடை செய்தான். இங்கே பருத்தி ஆடை செய்தான். அங்கே ட்ரம்ஸ்.. இங்கே மிருதங்கம். அங்கே கிடார்... இங்கே தம்புரா.''

"சரி. அதற்கும் இசையை ரசிக்க முடியவில்லை என்பதற்கும் என்ன சம்பந்தம்?''

"சமூக வளர்ச்சியில் இசைக் கருவியைக் கண்டுபிடித்தது ஒரு கட்டம். அவனுக்குக் கையில் கிடைத்ததை வைத்துதானே கருவிகள் உருவாக்கியிருக்க முடியும்? அதில் உருவாக்கப்பட்ட இசையைத்தானே ரசிக்கத் துவங்கியிருப்பான்? எது கிடைத்ததோ அதை ரசிக்க ஆரம்பித்தான். அவன் மனதில் ரம்மியமான இசையை நினைத்து, அதைப் பெறுவதற்காக கருவிகளைக் கண்டுபிடிக்கவில்லை. அதனால்தான் ஒருவனுக்கு கானா பாட்டு பிடிக்கிறது. ஒருவனுக்கு கர்னாடிக் பிடிக்கிறது. ஒருவன் ஓஸிபிஸô கேட்கிறான். ஒருவன் மாண்டலின் சீனிவாசன் கேட்கிறான். எல்லாம் பழக்கம். ரசனை என்பது பழக்கம். சிவப்பு தோல் உள்ள ஐரோப்பியன் மென்மையும் அழகும் அறிவும் பொருந்தியவனாகவும் கருப்பு தோல் உள்ள ஆப்ரிக்கன் முரட்டுத்தனமும் குரூரமும் அறிவற்றவனாகவும் நாம் பழகிக் கொண்டோம். அது உண்மையில்லை அல்லவா? ரொம்பவும் குழப்பிவிட்டேன் என்று நினைக்கிறேன்''

"புரிகிறது. நாம் ரசித்துக் கொண்டிருப்பதெல்லாம் புவியியல், சமூக காரணங்களால் எற்பட்ட பழக்கங்கள்தான். நாம் அமெரிக்காவில் பிறந்திருந்தால் இப்போதிருக்கிற ரசனையோடு இருந்திருக்க மாட்டோம் என்கிறீர்கள். இப்போது ரம்மியமாக இருக்கிற ஒன்று ரம்மியமில்லாமல் போயிருக்கலாம் என்கிறீர்கள்.''

முதல்வருக்கு ரவியின் விளக்கம் ஓரளவுக்குச் சரிதான் போல இருந்தது.

"இதுதான் இசையை ரசிக்க முடியாமல் நான் தவிப்பதற்கான சிக்கல். நாளை இசையில் வேறு வடிவங்களும் வேறு கருவிகளும் ஏற்பட்டு ரசனை மாறிப்போகுமா?''

"உங்கள் சிக்கலை தீர்க்க முடியுமா பார்க்கிறேன். இசையை விட்டுவிடுங்கள். உங்களுக்குத் திருக்குறள் பிடிக்குமா?''
"பிடிக்கும்.''

"ஆனால் இப்போது போஸ்ட் மார்டனிஸம், மேஜிகல் ரியலிஸம் எல்லாம் எழுதுகிறார்கள். ஒருவேளை இவை பிடிக்கிறது என்பதற்காகத் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் தூக்கி எறிந்து விடுவீர்களா? இசை, ஓவியம் எல்லாவற்றிலும் இதுதான் நடக்கும்.''

"ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இசைக்குச் சொல்லப்படுகிற புனிதத் தன்மை. நீங்கள் இயற்பியல் பேராசிரியர். விஞ்ஞான பூர்வமாகச் சொல்லுங்கள். சூத்திரங்களை உள் வாங்கிக் கொண்டால் கம்ப்யூட்டரும் ஒரு இசை மேதையாக முடியும், அல்லவா?''

"அப்படி சொல்ல முடியாது. ஒன்றைப் போல தத்ரூபமாகப் பிரதியெடுக்க புகைப்படம் போதும். ஆனால் ஓவியத்தின் தேவையும் இருக்கிறதல்லவா? படைப்பின் சூத்திரம் அங்குதான் இருக்கிறது. கலையும் இலக்கியமும்தான் மனிதனை மனிதனாக்கியிருக்கிறது.மனிதனைத் தொடர்ந்து மனிதனாக இருக்க வைப்பதற்குத்தான் கலைகளுக்கு இந்த இறைத்தன்மை தேவைப்படுகிறது. எல்லா படைப்புத் திறன்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அவை அமரத்தன்மையுடன் இருந்தால்தான் மனிதர்கள். இறைத்தன்மை என்பது படைப்புக்கு ஒரு கவசம் அவ்வளவுதான். உங்களுக்குத் தேவையில்லை இல்லை என்றால்...''
முதல்வர் "என்ன என்றார்'' உள்ளே நுழைந்த ப்யூனிடம். ஏதோ விசிட்டிங் கார்டை காட்டினான். முதல்வர் அலுப்புடன் அதை நோக்கிவிட்டு, "நீங்கள் சற்று வெளியே இருக்கிறீர்களா? பேசி அனுப்பிவிட்டு அழைக்கிறேன்.'' மிக முக்கியமான கட்டத்தில் ப்யூன் உள்ளே நுழைந்தது அவருக்கு கோபத்தைகூட ஏற்படுத்தியது. வந்த ஆசாமியை இரண்டே வினாடியில் வெளியே அனுப்பினார்.

"புதன்கிழமை வந்து பார்'' அவ்வளவுதான் பேசினார்.
அனுப்பிவிட்டு, தன்னை ஆயாசப்படுத்திக் கொள்ளும் விதமாக எதிரில் இருந்த லால்குடியின் வயலின் கேசட்டைத் தட்டிவிட்டு கண் மூடி கேட்டார். கம்பியின் முதல் இழைப்பு சட்டென உயிரைத் தொட்டது. இதில் ஏதும் இறைத்தன்மை இல்லை என மனது சொல்லிக் கொண்டிருக்கும்போதே அடுத்த அலை. சிந்தனைகளைப் புரட்டித் தள்ளிவிட்டு அடுத்த அலை. எங்கோ புரண்டு விழுந்த பிரமிப்பு. அதிலேயே திளைக்க வேண்டும் என உந்துதல். ஏதோ தடை நீங்கியது போல உணர்வு. படைப்பின் சூத்திரம் புரிபட்டது போல தகிப்பு. ரம்மியம், ரசனை கைகூடிவிட்டது.... வண்ணங்களின் கலவை. நிறங்களின் ஜாலம். நட்சத்திர பெருவெளியில் ஊர்வலம். மனதில் குளுமை. ஆனந்த சாரல். கண்ணைத் திறந்துவிடாமல் அதை அப்படியே பருகிக் கொண்டிருக்க வேண்டும் என்று தவித்தார் முதல்வர். தென்றல் தவழும் இயற்கை வனத்தில் பிரயாணிக்கிற தரிசனம். எங்கிருக்கிறோம் எனும் நிலை மறந்த மயக்கம். ஆஹா... சூட்சமம் பற்றிக் கொண்டது. டக் என்ற சப்தத்துடன் டேப் ரிகார்டர் நின்றது. முக்கால் மணிநேரம் போனதே தெரியவில்லை. அட இசையை ரசிக்க முடிகிறது. கண்ணைத் திறந்துவிட்ட ரவியைப் பற்றி அப்போதுதான் நினைவு வந்தது.

பியூனை அழைத்து ரவியை வரச் சொன்னார்.

"அவர் அப்போதே போய்விட்டார். இந்தச் சீட்டை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்.''
முதல்வர் வாங்கிப் பார்த்தார்.

"உங்களுக்குச் சொன்ன விளக்கங்கள் பயனளித்தால் மகிழ்வேன். வருகிறேன்."

அவன் கொடுத்திருந்த செல் நம்பரை அழுத்தினார். "அப்படி ஒரு எண் உபயோகத்தில் இல்லை'' என்றது மறுமுனை. "இறைவன்'' என்றார் முதல்வர்.

LinkWithin

Blog Widget by LinkWithin