திங்கள், அக்டோபர் 18, 2010

அமில தேவதைகள்






அறிவியல் குறுந்தொடர்

அத்தியாயம்-1

இரண்டுபுறமும் மரங்கள் நிறைந்த நீண்ட சாலை. மந்தாகினி பாலிகிளினிக் செல்வதற்கான பிரத்யேகப் பாதை அது. சாயங்காலம் ஆறுமணிக்கே அமானுஷ்யம் நிலவியது. சருகுகள் இங்குமங்கும் நகர்ந்து சரசரத்துக் கொண்டிருந்தது.

ஆஷா இடது தோளில் தொங்கிக் கொண்டிருந்த தோல் பையை வலதுக்கு மாற்றிக் கொண்டு நடந்தாள். தனிமை உணர்வைத் தவிர்க்கும் பொருட்டு ஏதாவது பாட்டுப்பாட நினைத்தாள். எந்தப் பாடலையும் பாடுவதற்கு அசுவாரஸ்யப்பட்டு மேலும் வேகமாக நடக்க முடிவெடுத்தாள்.

தூரத்தில் கண்ணாடிச் சுவர்களால் அலங்கரிக்கப்பட்ட மருத்துவமனை கண்களுக்குத் தெரிய ஆரம்பித்ததும் சற்றே தெம்பு பிறந்தது அவளுக்கு.

சே, இனி இந்த மாதிரி இடத்திற்கெல்லாம் தனியாக வரக்கூடாது என யோசித்தவள், தான் சிந்தித்த சொற்றொடரில் தனியாக என்ற வார்த்தையை அழித்தாள்.

கண்ணாடிக் கதவைத் திறந்தபோது காத்திருந்த மாதிரி ஹாஸ்பிடல் வாசனை உடம்பைத் தழுவிக் கொண்டது.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரவேற்பறை தோரணையில் இங்கும் அங்கும் ஒரு ஆணும் பெண்ணும் ஆழ்ந்த சிரிப்புடன் வரவேற்க காத்திருந்தார்கள். ஆஷா அவர்களை நிராகரித்து, லிஃப்டுக்குப் பக்கத்தில் இருந்த எந்த மாடியில் என்ன பிரிவு இயங்குகிறது என்ற பித்தளை பலகையைப் பார்வையிட்டாள்.

நான்காவது மாடியில் என்றிருந்த இடத்தின் அருகே கைனகாலஜி ஆர் அண்டி செக்க்ஷன் என்ற பதங்கள் இடம் பெற்றிருந்தன.

நான்காவது மாடிக்கு விரைந்தாள். அங்கு அம்புக்குறி காட்டிய திசையில் நடந்து இருபக்கமும் தனித்தனி படுக்கை அறைகளாகப் பகுக்கப்பட்டிருந்த இடங்களைக் கடந்தாள்.

பாதை இரண்டாகப் பிரிந்த இடத்தில் ஆய்வகம் என்ற பித்தளை பொறிப்பு.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும்தான் அதற்குள் ஏகப்பட்ட வெண் சட்டை மருத்துவர் மற்றும் இதர பணியாளர்கள் இருப்பது தெரிய வந்தது. இத்தனை பேர் இருக்கும் இடத்தில் இத்தனை அமைதி நிலவுவது இயற்கைக்கு விரோதம் போலவும் தவறு போலவும் இருந்தது.

"யெஸ்?'' விளித்த பழுத்த வெள்ளுடை மூதாட்டியை அணுகினாள். அவள் பார்வை வழி தவறி வந்தவளை எதிர்கொள்வது போல இருந்தது.

"ஆஷா... அபாயின்ட்மென்ட் வாங்கியிருந்தேன்... நேத்து.. போன்ல'' மிகுதியான பெயர்ச்சொற்களை அடுக்கியே வாக்கியத்தை முடித்தாள். மூதாட்டிக்கும் அதுவே போதுமானதாக இருந்தது.

கொஞ்சம் ரோபோ தன்மையோடு எதிரில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நோக்கிவிட்டு ""தி. நகரிலிருந்து?'' என்றாள். அந்த அம்மா உதடு பிரிக்காமல் பேசுவது ஆச்சர்யமாக இருந்தது.

உடனே அடையாளம் கண்டுகொண்டதற்காக ஆஷா நன்றியைப் புன்னகையாகத் தெரிவித்தாள்.

"24 வயசா?''

"...''

"படிக்கிறியா?''

"ஆமா?''

"ஏன்? தி.நகர்ல எந்த ஹாஸ்பிடலும் கிடைக்கலையா?''

"யாருக்கும் தெரிஞ்சிடக் கூடாதுன்னுதான்''

"கூட யாரும் வரலையா?''

"இல்லை.''

"மகேஸ்வரி சொன்னாளேன்னுதான் உன்னை அட்மிட் பண்றேன். ரூம் நெம்பர் 4 -பி ல போய் இரு. அப்புறம் கூப்பிட்டு அனுப்புறேன்.''

"சரி மேடம்'.'

ஆஷா குற்ற உணர்வுடன் விடைபெற்று 4-பி இலக்கமிட்ட அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்து, கதவு மூடிக் கொள்வதற்கு முன், வசமிழந்து அழுதாள். யாரும் வருவதற்குள் அழுது முடித்துவிட வேண்டும் என்ற அவசரமும் தொற்றிக் கொண்டது.

வீட்டுக்குத் தெரிந்தால் அவமானம் தாங்காமல் அனைவரும் செத்துப் போய்விடுவார்கள் என்பது பயத்தை ஏற்படுத்தியது. இரண்டு நாள் தங்கியிருந்து கலைத்துக் கொண்டு ஒரு தடயமும் இல்லாமல் ஹாஸ்டலுக்குப் போய்விடவேண்டும். ஹாஸ்டல் வார்டனிடம் அவசரமாகப் பெற்றோரைப் பார்த்துவிட்டு வரவேண்டியிருப்பதாக அனுமதி வாங்கியாயிற்று. யாருக்கும் தெரியாமல் மீண்டும் மிக இயல்பாக கல்லூரிக்குப் போகலாம். எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும். கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டாள்.

இவ்வளவையும் செய்துவிட்டு சுரேஷ் ""ஸ்டேட்ஸ்ல ஆஃபர் வந்திருக்கு. இந்த நேரத்தில் உன்னைக் கட்டிக்கப் போறேன்னு சொன்னா ஆத்துல யாரும் சம்மதிக்க மாட்டா'' என்று காரணம் சொன்னான். அபார்ஷனுக்கு ஆகும் செலவை அடுத்த மாசம் தருவதாகக் கடன் சொல்கிறான்.

கோழைத்தனமான செயலை எவ்வளவு துணிச்சலாகச் செய்கிறான், ராஸ்கல்.

இனி யாரிடமும் ஏமாறக்கூடாது என்று உறுதிப்படுத்திக் கொண்டாள். வாஷ்பேஸினில் முகத்தைக் கழுவிக் கொண்டு கொஞ்சம் தன்னைப் புதுசு பண்ணுகிற முயற்சியில் இறங்கினாள்.

சல்வார் கம்மீஸ் கழற்றிவிட்டு தயாராகக் கொண்டு வந்திருந்த நைட்டிக்கு மாறிய... அவன் கொடுத்த ப்ரா... திருட்டு நாய்... அவசரமாக ப்ராவைக் கழற்றி எறிய முற்பட்ட நேரத்தில் டொக்... டொக்.

"ஒன் செகண்ட்'.'

லேசாக கதவைத் திறந்து முகத்தை மட்டும் காட்டி, "நைட்டிதான போடணும்?'' என்றாள்.

பச்சை நிறத்துணியால் வாய்ப் பகுதியை மூடியிருந்த இரண்டு வெள்ளை அங்கி மனிதர்கள், "பரவாயில்லை. நாங்க உங்களுக்கு வேறு ஆடை கொடுப்போம், நீங்கள் எந்த ஆடையிலும் வரலாம்'' என்றது வடிகட்டி வந்தது.

"நான் நைட்டிக்கு மாறிட்டேனே?''

"எதுவாக இருந்தாலும் பரவாயில்லை'' கண்களில் குறும்பு தெரிந்தது. ஏன் பெண் நர்ஸ் யாரும் இல்லையா?

"சரியா போட்டுக்கிட்டு வந்திர்றேன்...''

"வந்துக்கிட்டே போட்டுக்கலாம்.. வாங்க.''

கிண்டலடிக்கிறார்களா, அவசரமாக அழைக்கிறார்களா.. யூகிக்க முடியாமல் அவர்கள் பேசுவதை வேடிக்கையாகத் தாம் எடுத்துக் கொண்டதாக மிரட்சியோடு சிரித்தாள்.

கண் இமைக்கும் நேரத்தில் சரேல் என இருவரும் உள்ளே நுழைந்தனர். பக்கத்தில் இருந்த ஏதோ துணியால் உடம்பைப் போர்த்திக்கொண்டு, "வாட் நான்சென்ஸ்.. நான் மகேஸ்வரி மேடம் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணுவேன்''- கத்தினாள்.

அதற்குள் ஒருவன் பாக்கெட்டில் மருந்து நிரம்பிய சிரிஞ்சை எடுத்து அவளது உடம்பில் அகப்பட்ட இடத்தில் குத்தினான்.

மற்றொருவன் வாயை அமுக்கி, மெல்ல அவளை ஸ்ட்ரெச்சரில் கிடத்த... அவளது நைட்டி முழுவதுமாக நழுவித் தரையில் விழுந்தது.

துரிதமாக அவள் கொண்டு வந்திருந்த பையை சுருட்டி அவளுக்கு அருகே ஒரு பக்கத்தில் போட்டான். ஒரு வெள்ளைத் துணியால் அவளை முழுதும் போர்த்தி தூக்கிக் கொண்டு வெளியேறும்போது ஆஷா முற்றிலும் மயங்கி கடைசி வார்த்தையாக "ராஸ்கல்ஸ்' என்று முணகினாள்.

சுமார் எட்டு மணி வாக்கில் 4-பி அறையைப் பார்த்துவிட்டு வந்த ஹாஸ்பிடல் பணியாள், " அந்த ரூம்ல யாருமே இல்ல மேடம்'' என்றான்.

பெரிய டாக்டர் எரிச்சலுற்று, "நல்லா பார்த்துட்டு வா.. பாத்ரூம்ல இருப்பா'' விரட்டினாள்.

"அரைமணி நேரம் தேடறேன் மேடம்.. அங்க யாருமே இல்ல. பாத்ரூம் திறந்துதான் கிடக்குது..''

"மனசு மாறி கிளம்பிப் போய்ட்டாளா?''

"தெரியல மேடம்''

"ரூம்ல அவ கொண்டு வந்த பை இருந்ததா?''

"இல்லையே.''

"ஒழியட்டும்'' சலித்துக்கொண்டு "இந்த மாதிரி லூஸ்ங்களுக்கெல்லாம் மகேஸ்வரி எதுக்கு சப்போர்ட் பண்றா...'' கர்சீப்பால் விசிறிக் கொண்டாள்.

"அந்த ரூம்ல இந்த சிரிஞ் கெடந்தது மேடம்'' சிப்பந்தி நீட்டிய ஊசியை ஏறெடுத்தும் பார்க்காமல், "சரியான போதை கேஸா இருப்பா.. எக்கேடாவது கெட்டுத் தொலையட்டும்.. அதை அந்த பேஸ்கட்ல போட்டுட்டுப் போய் ஒரு காபி கொண்டுவா... கையை அலம்பிடு.'' அவன் கிளம்புவதற்குள் கடைசி வரியை உரக்கச் சொல்லி ஞாபகப்படுத்தினாள்.


(தொடரும்)

நன்றி: உயிரோசை


LinkWithin

Blog Widget by LinkWithin