பழைய ஞாபகங்களும் புதிய ஞாபகங்களும்
எல்டாம்ஸ் சாலையில் உள்ள அன்னை இல்லத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களைச் சந்திக்கப் போனேன். இன்னமும் லட்சிய நடிகரின் கணீர் குரல் ‘பூம்புகாரை', ‘வானம்பாடி'யையோ நினைவு படுத்தியது. அவருக்குக் கலைஞரைப் பற்றி நிறைய விரோதமான கருத்துகள் இருந்தன. அவரைப் பற்றிக் கிண்டலாக சில விஷயங்களைச் சொன்னார். அண்ணாவுக்கும் அவருக்குமே கருத்துவேறுபாடுகள் இருந்ததாகவும் கலைஞர் மீது அண்ணா பல முறை கோபமுற்று இருந்ததாகவும் கூறினார். தி.மு.க.வில் இருந்து கலைஞரும் முரசொலி மாறனும் விலகிக் கொள்ள முடிவெடுத்த நேரத்தில் அதைத் தாம்தான் மறுத்து பிரச்சினையை சரி செய்ததாகவும் கூறினார்.
இதையெல்லாம் புத்தகமாகப் போடும் நோக்கத்தோடு அதை டைப் செட் செய்து வைத்திருந்தார். (இப்போது புத்தகமாக வந்திருக்கக் கூடும்.) அதில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பக்கம் பக்கமாக வாசித்துக் காட்டினார். நான்கு, ஐந்து மணி நேர சந்திப்புக்குப் பின் அந்தச் சந்திப்பு முடிந்தது. அவரிடம் எதைப்பற்றிk கேட்பதற்காகச் சென்றேனோ அது முடியவில்லை. அதைத் தவிர வேறு விஷயங்களையெல்லாம் பேசிவிட்டு வந்ததாகத் தோன்றவே மீண்டும் மறுநாள் சந்திப்புக்கு நேரம் கேட்டேன்.
மறுநாளும் சந்திப்பு தொடர்ந்தது. நேற்றைய சந்திப்பின் ஜெராக்ஸ் போல மீண்டும் பேசிக் கொண்டு போனார். மீண்டும் அதே பக்கங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். பழைய சம்பவங்களை அவர் அத்தனை ஞாபகமாக நேற்று நடந்தது போல சொன்னார். ஆனால் என்னிடம் நேற்று சொன்னதை முழுதுமே மறந்து விட்டார் என்று தெரிந்தது. நடுநடுவே எனக்கான தகவல்களை கிரகித்துக் கொண்டு விடைபெற்றேன்.
கிளம்பும்போது "நேற்று யாரோ ஒருத்தர் வந்து இதே மாதிரி கேட்டாரே'' என்றார் என்னிடமே.
ஒரு நடுநிசியில் ரஹ்மானுடன்!
"முட்டாள்கள்தான் இரவிலே தூங்குவார்கள்" என்று எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு சொன்னதாகச் சொல்வார்கள். கரிச்சான் குஞ்சுவின் கணிப்பின்படி ஏ.ஆர். ரஹ்மானும் அவரிடம் இசை கேட்டு வரும் திரைப்படத் துறையினரும் அதிமேதாவிகள். ஏனென்றால் ரஹ்மானின் உலகம் இரவு பத்துமணிக்கு மேல்தான் விடியும். இந்தியாவில் முக்காவாசிப்பேர் உறங்க ஆரம்பித்து மீதி இருப்பவரும் அதற்கான முயற்சியில் இருக்கும்போது அவர் விழிப்பார். அவர் விழித்திருக்கும் நேரத்தில் அவரைச் சந்திக்க வேண்டியவர்களும் விழித்திருக்க வேண்டியிருக்கிறது.
நான் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது இரவு பதினொன்று. இன்னும் எழுந்திருக்கவில்லை. "லேட்டாத்தான் தூங்கினார்'' என்றனர். அதாவது எல்லோரும் விழித்த பின்னர் தூங்கியிருப்பார் என்று புரிந்தது. அவரை எதிர்பார்த்து இந்திப் பட உலகினர் சிலரும் பாடகர் ஹரிகரனும் வசந்த் (ரிதம்), ராஜீவ் மேனன் (கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்) ஆகிய இயக்குநர்களும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தின (பாய்ஸ்)மும் காத்திருந்தனர். பத்திரிகையாளர்களில் நானும் தினத்தந்தி நிருபர் பழனிகுமாரும்.
ரஹ்மானின் அம்மா வந்து எல்லாரையும் சாப்பிடச் சொன்னார். அவருடைய வீட்டின் ஒரு பக்கத்தில் சிறிய தோட்டமும் பக்கத்தில் சமையல்கூடமும் உண்டு. அங்கு பொதுவாக எல்லா இரவிலும் பிரியாணி தயாராக இருக்கும் என்றார்கள். காத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் அங்கே சம பந்தி போஜனம்தான். சமயத்தில் தோட்டக்காரனுக்குப் பக்கத்தில் அமீர்கான் அமர வேண்டியிருக்கும் எனவும் சொன்னார்கள்.
சாப்பிட்டுவிட்டு வந்த சிறிது நேரத்தில் ரஹ்மான் வந்தார்.
வரவேற்பறையில் அவருக்காகக் காத்திருந்த பூங்கொத்துகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தார். அனுப்பியிருப்பவர்களின் பெயரைப் பார்த்து உதடுகளில் புன்னகை மலர்கிறது. காத்திருந்த மனிதர்களைப் பார்த்தபோது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு புன்னகைவீதம் வழங்கினார். எதிர்பார்க்காதவராகவோ, மிகவும் நெருக்கமானவராகவோ இருந்தால் கண்கள் விரிய சிறிய ஆச்சரியத்தைக் காட்டினார். அவருக்குப் பழனிகுமாரைத் தெரிந்திருந்தது. முதலில் அவரிடம் பேசினார். "இவருக்கு ஒரு பேட்டி வேணும், ரொம்ப நாளா கேட்டுகிட்டிருக்கார்" என்றார் என்னைக்காட்டி.
"என்னைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு? எல்லாம்தான் நீங்க எழுதிடறீங்களே.. என்னைப் பத்தி என்னைவிட உங்களுக்குத்தான் நல்லா தெரியுது'' என்றார். பொதுவாக பத்திரிகைகளைப் பற்றி அவர் அப்படிச் சொன்னார்.
அவருடைய குடும்பச் சூழல், அவருடைய அடுத்த திட்டங்கள், ஒப்பந்தமாகியிருக்கும் படங்கள் போன்றவற்றில் ரகசியம் எதுவும் இருப்பதில்லை. அது தானாகவே செய்தியாகிவிடுகிறது. இசையைப் பற்றியோ, சில நபர்களைப் பற்றியோ அவருடைய தனிப்பட்ட அபிப்ராயங்கள், அவருடைய பிரத்யேகக் கனவுகள், வதந்திகளுக்கான விளக்கங்கள் போன்றவற்றுக்குத்தான் அவருடைய நேரடியான பதில் தேவையாக இருந்தது.
"இவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள்... இன்னொரு நாள் பேசலாமா?'' என்றார்.
வந்தததற்கு ஒரே ஒரு கேள்வியைக் கேட்டு வைக்கலாம் போல, "எதற்கு இவ்வளவு முடி வளர்த்து வைத்திருக்கிறீர்கள்?'' என்றேன்.
சிரித்தார். "அதான் சொல்லிட்டேனே'' என்றார்.
எந்தப் பத்திரிகைக்காக எப்போது சொன்னார் என்று நினைவில்லாமல் "எப்போ?'' என்றேன்.
"கான்ட்ராக்ட் ஸைன் பண்ணியிருக்கேன். அது முடியறவரைக்கும் இப்படித்தான் இருக்கணும்''
பதிலைச் சொல்லிவிட்டு அடுத்து இருந்தவரைப் பார்த்தார். இந்தப் பார்வைக்காகக் காத்திருந்தவராக அடுத்து அவர் பேச ஆரம்பித்தார்.
புனைவும் நினைவும்!
குங்குமத்தில் ’நில்லுங்கள் ராஜாவே' ஆரம்பமானபோது எழுத்தாளர் சுஜாதா மீது ஆரம்பித்த பிரமிப்பு விகடனில் அவர் மறைவதற்கு முந்தின வாரம் எழுதிய கற்றதும் பெற்றதும் வரை குறையவே இல்லை. பாதி ராஜ்ஜியம், சொர்க்கத்தீவு, சிறுகதை எழுதுவது எப்படி, நடுப்பகல் மரணம், கொலையுதிர் காலம், தலைமைச் செயலகம், ஜீனோ, பிரிவோம் சந்திப்போம் என்று அவருடைய எழுத்துகள் ஒன்றுவிடாமல் படித்திருந்தாலும் அவரை நேரில் பார்க்கிற சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. அது நான் சினிமா நிருபராகி அவரும் அடிக்கடி சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிற, இருக்கிற தருணத்தில்தான் சாத்தியமானது.
பத்திரிகைக்காக ஒரு முறை வரும் ஆண்டு சினிமா எப்படி இருக்கும் என்று கட்டுரை கேட்டு போன் செய்த போது எத்தனை எழுத்துகள் இருக்க வேண்டும் என்று அவர் திருப்பிக் கேட்டபோது, அவர் எவ்வளவு புதுசாக இருக்கிறார் என்பதை மீண்டும் புரிந்து கொண்டேன்.
ஆனாலும் நேரில் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை.
’ஆளவந்தான்' பட விழா சென்னை ராஜ அண்ணாமலை புரத்தில் நடந்தது. காலையில் ஆரம்பித்து மதியம் முடிந்த விழா அது. சுஜாதா வந்திருந்தார். விழா முடிந்து அனைவரும் வெளியே வரும்போது நடிகர்கள் மீது ஆர்வம் கொண்டு மக்கள் சூழ்ந்து கொண்டிருந்தபோது, சுஜாதா கூட்டத்திலிருந்து விலகி நடந்தார். அவருக்குப் பின்னால் கூட்டம் அலைமோதாத வருத்தம் ஏற்பட்டு நான் அவருக்கு வழித்துணைபோல பின்னாலேயே சென்றேன். அவர் காரை அடைந்தார். ஆடம்பரமற்ற சிறிய மாருதி 800 கார். நீல நிறம். அவர் காரில் ஏறிய பின்பு திரும்ப நினைத்தவன் காரின் ஒரு டயர் காற்று இல்லாமல் இருப்பதை அறிந்து ஓடிப்போய் சொன்னேன். அவர் நான் சொன்ன விஷயத்தை டிரைவரிடம் சொல்லிவிட்டு டயர் மாட்டுகிற வரை வேர்க்க விறுவிறுக்க காரிலேயே அமர்ந்திருந்தார்.
இன்னொரு தரம் அவருடைய வீட்டுக்குப் போய் இயக்குநர் ஷங்கர் பற்றி நான் எழுதிய புத்தகத்துக்கு முன்னுரை கேட்டேன். இப்போதெல்லாம் யாருக்கும் எழுதுவதில்லை என்று கூறிவிட்டார். சுமார் கால் நூற்றாண்டுக்காலமாக அவருடைய எழுத்துகளை வேதம் போல படித்தவன் என்பதை சில நிமிடங்களில் எனக்கு எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியவில்லை. எனக்குப் பேச்சே வரவில்லை. அங்கே பத்திரிகையாளர் சந்திரன் இருந்தார். பரிதாபப்பட்டாவது இரண்டு வரி எழுதித் தரமாட்டாரா என்று தன்னிரக்கம் சூழ்ந்தது.
"நீங்கள் எழுதினா ரொம்ப பெருமைப்படுவேன் சார்'' என்றேன்.
"புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே'' என்றபோது "சாரி சார்'' என்று வாசல் நோக்கி நகர்ந்துவிட்டேன்.
அவர் இறந்த அன்று அவர் எனக்கு இமெயில் அனுப்பியதாக ஒரு சிறுகதை எழுதினேன். என்னுடைய ஆசையை இப்படி புனைவாகத்தான் தீர்த்துக் கொள்ள முடிந்தது. அவருடைய முதலாண்டு நினைவு நாளின் போது அவருடைய பெயரிலான அறக்கட்டளை சார்பில் நடந்த போட்டியில் அறிவியல் புனைகதைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. இதையெல்லாம் பார்க்க அவர் இல்லாமல் போய்விட்டாரே என்று பரிசளிப்பு நாளின் போது நினைத்தேன், வேதனையின் கிறுக்கில்.