இரங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூன் 20, 2014

டாட்டா வாண்டுமாமா

பெரியவர்கள், சிறுவர்களுக்கான மன நிலையோடு சிந்திப்பது சவாலானது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, குழந்தைகளுக்காகவே எழுதியவர் வாண்டுமாமா. ஏறத்தாழ 90 ஆண்டுகள், ஒருவர் தன் குழந்தை மனதைத் தக்கவைத்துக்கொள்வது சாதாரணம் அல்ல. அந்தக் குழந்தை மனநிலையுடனேயே இயங்கி கடந்த வாரம், வயோதிகம் காரணமாக தன் மூச்சை நிறுத்திக்கொண்டார் 'வாண்டுமாமா’ என்பதே அடையாளமாகிப்போன திரு.கிருஷ்ணமூர்த்தி. தமிழில் சிறுவர் இலக்கியத்தின் மூலவர்!
குழந்தைகளை மாய உலகில் சஞ்சரிக்க வைப்பது ஓர் அரிய கலை. கொஞ்சம் தப்பினால் அது மூடநம்பிக்கையின் மூட்டையாகிவிடும். இவரின் 'மந்திரச் சிலை’, 'மந்திரக் குளம்’, 'மாய மோதிரம்’ உள்ளிட்ட பல கதைகள் நம்மை விசித்திர உலகுக்கு அழைத்துச் செல்பவை. ஆலீஸின் அதிசய உலகத்துக்கு நிகரான சாத்தியங்கள் அவற்றில் உண்டு. பல நூறு ஹாரிபாட்டர்களைப் படைத்தவர் வாண்டுமாமா. குழந்தைகளுக்குப் புரியும்படியான எளிய மொழியில், சுமார் 160 புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். அதில் சரிபாதி குழந்தைகளுக்கான மருத்துவ, விஞ்ஞானப் புத்தகங்கள். கௌசிகன், சாந்தா மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி எனப் பல பெயர்களில் எழுதியுள்ளார்.
'பூந்தளிர்’ இதழின் ஆசிரியராக இருந்த நேரத்தில், நான் அதே நிறுவனத்தின் இன்னோர் இதழுக்குப் பொறுப்பு ஏற்று இருந்தேன். சில ஆண்டுகள், அவருக்கு அருகே பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. குழந்தைகளுக்கான போட்டிகளுக்குப் பரிசு வழங்கு வதில், வாண்டுமாமாவுக்கும், அந்தப் பத்திரிகையின் நிர்வாகிக்கும் நடந்த வாக்குவாதம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
பரிசுத்தொகையாக 5,000, 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது நிர்வாகியின் எண்ணம். வாண்டுமாமா, '50, 100 ரூபாய் போதும்’ என்றார். 'குழந்தைகளின் மனதில் போட்டியை வளர்ப்பதுதான் நோக்கமே தவிர, பேராசையை வளர்ப்பது அல்ல. பெரிய பரிசுத் தொகையை அறிவித்தால், அது பெற்றோர்கள் கலந்துகொள்ளும் போட்டியாக மாறிவிடும்’ என உறுதியாகக் கூறிவிட்டார். இது நுணுக்கமான ஓர் உளவியல் அணுகுமுறை.
அப்போது (1991) அவருக்கு தொண்டையில் கேன்சர் ஏற்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அவர் பேசுவதைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்தது. அதனால், யாரும் அவரிடம் விளக்கம் கேட்பதற்கான சந்தர்ப்பமே தராமல், அந்த இதழுக்கான எல்லா வேலைகளையும் முடித்துவிடுவார். 'பூந்தளிர்’ இதழுக்கான அனைத்து பக்கங்களையும் அவரே எழுதுவார்; திருத்துவார். பேசுவதற்கான சந்தர்ப்பமே தராமல், அவர் பணியாற்றியது ஆச்சர்யமாக இருந்தது.
புதுக்கோட்டைக்கு அருகில் அரிமழம் கிராமத்தில் பிறந்த இவர், திருச்சியில் இருந்து வெளிவந்த 'சிவாஜி’ என்ற இதழில் தன் பத்திரிகைப் பணியைத் தொடங்கினார். பிறகு 'காதல்’, 'ஆனந்த விகடன்’, 'கல்கி’, 'கோகுலம்’, 'தினமணி’ என, இவர் பயணித்த இதழ்கள் ஏராளம். வறுமையின் துரத்தலும் கூடவே இருந்தது. அதனால்தான் அவருடைய வாழ்க்கை சரித்திரத்துக்கு அவர் 'எதிர்நீச்சல்’ என்று பெயரிட்டிருந்தார்.
சிறுவர்களுக்காக எழுதுபவர்களை சிறுவர்கள்தான் அங்கீகரிக்கவேண்டிய சூழல். அதனால் அவருக்குப் பெரிய அங்கீகாரங்கள் கிடைக்காமல் போயின.
அவர் இன்னொருவரின் வாழ்க்கை நூலையும் எழுதியிருக்கிறார். தனக் குச் சிலை வைப்பதையோ, தன்னைப் பற்றி புத்தகம் எழுதுவதையோ கடுமையாக எதிர்த்து வந்தவர் மூதறிஞர் ராஜாஜி. 'கல்கி’யில் பணியாற்றியபோது ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை மிக மிக ரகசியமாக எழுதி, ராஜாஜியிடம் அதைக் காட்டி அவருடைய அனுமதியைப் பெற்று நூலாக வெளியிட்டார். அப்போது ராஜாஜி அடித்த கமென்ட்: 'நான் சொல்வது எதையும் கேட்காதவர்கள்... என் வாழ்க்கையை மட்டும் படிப்பார்களா? உங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும்.’
'எதிர்நீச்சல்’ நூலில் இறுதியாக அவர் இப்படி முடிக்கிறார்:
'நான் நிறைய எழுதியிருப்பதாகப் பிறர் கூறினாலும் இன்னும் எழுத வேண்டியவை நிறைய இருக்கின்றன என்ற குறை எனக்கு உண்டு. அதற்கான வாய்ப்பையும் வயதையும் எனக்கு ஆண்டவன் அளித்தால், இந்த என் குறையை ஓரளவுக்குப் போக்கிக்கொள்வேன்’ என்று முடித்திருக்கிறார் வாண்டுமாமா.
'புத்தகங்களே...
குழந்தைகளைக்
கிழித்துவிடாதீர்கள்!’
- என்று ஒருமுறை கவிஞர் அப்துல் ரகுமான் எழுதினார். சில புத்தகங்களிடம் இருந்து சிறுவர்களைக் காப்பாற்றத்தான் வேண்டியிருக்கிறது. இந்த நிதர்சனம் உணர்ந்தே தன் இறுதி நாட்கள் வரை சிறுவர்களுக்காக எழுதிக்கொண்டே இருந்தார் அவர். உயிர் பிரியும் தருணம் வரை எழுதிக்கொண்டே இருப்பது ஓர் எழுத்தாளனுக்கு வரம். அந்த சாகாவரம், இவருக்கு இருந்தது. மழலை மனம் மாறாதவர் உள்ளங்களில் வாண்டுமாமா என்றும் வாழ்வார்!

வெள்ளி, மார்ச் 28, 2014

போய் வாருங்கள் சர்தார்ஜி!


தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருக்கிறார் குஷ்வந்த் சிங்!

இந்திய கிரிக்கெட் அணியில் பட்டோடி சொதப்பிக்கொண்டிருந்த காலம். அப்போது குஷ்வந்த் சிங் எழுதிய ஒரு பத்தி இது:
பம்பாய் மைதானத்தில் கிரிக்கெட் அணிகள் மோதிக்கொண்டிருந்தன. கிரிக்கெட் அணித் தலைவர் பட்டோடியின் மனைவி நடிகை சர்மிளா தாகூர், தன் கணவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போன் செய்தார்.
''அடடே... இப்போதுதான் பட்டோடி பேட் செய்யப் போனார். அவர் வந்ததும் பேசச் சொல்கிறேன்'' என்றார் உதவியாளர்.
சர்மிளா பொறுமையாகச் சொன்னார்: ''ம்... பரவாயில்லை.. லைனிலேயே இருக்கிறேன்... அவர் சீக்கிரமே வந்துவிடுவார்.'
- இதுதான் குஷ்வந்த் சிங்.
அதே நேரத்தில் அவருடைய 'ட்ரெய்ன் டு பாகிஸ்தான்’, 'ஐ ஷெல் நாட் ஹியர் த நைட்டிங்கேல்’ போன்ற நூல்கள் சீரியஸாக உலக நடப்புகளைப் பேசின. அவர் பிறந்த பஞ்சாப் பகுதி, இப்போது பாகிஸ்தானில் உள்ளது. அவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். இளம் வயதில் இருந்தே அவருக்குப் பத்திரிகைதான் கனவு. 'யோஜனா’ என்ற பத்திரிகையைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்த குஷ்வந்த் சிங், பிறகு இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, நேஷனல் ஹெரால்ட், இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பல பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். பல ஆங்கில பத்திரிகைகளில் பத்தி எழுத்தாளராக அவர் பங்காற்றியிருக்கிறார்.
1974-ல் பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 1984-ல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் நடந்த ராணுவத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை அவர் திருப்பித் தந்தார். அரசியல் காட்சிகள் மாறின. மீண்டும் 2007-ல் அவருக்கு பத்ம விபூஷண் விருது கொடுத்து அந்தக் குறையை அரசு போக்கிக்கொண்டது.
அவருடைய சுயசரிதை நூலான 'உண்மை, அன்பு மற்றும் கொஞ்சம் வன்மம்’ என்ற நூல், பத்திரிகைத் துறைக்கு வர நினைப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு சிறந்த கையேடு.
அவருடைய சர்தார்ஜி ஜோக்குகளைப் படித்துவிட்டு சொந்த இனத்தையே கேலிசெய்தவர் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. ஆனால், 'சீக்கியர்களின் சரித்திரம்’ என்ற சீக்கியர்களின் பெருமையைச் சொல்லும் சிறந்த நூலையும் அவர்தான் எழுதினார். சகிப்புத்தன்மையற்ற இந்திய அரசியல் தலைவர்கள் பற்றி அவர் ஒரு பத்தி எழுதினார். 90-களின் மத்தியில் அது வெளியானது. 'பால் தாக்கரேவுக்கு கிரிக்கெட் பிடிக்காது. இந்திய அணிகள் விளையாட இருக்கும் கிரிக்கெட் மைதானத்தைக் கொத்தி நாசப்படுத்தினார். மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு கலாசாரக் காவலர். சமந்தா ஃபாக்ஸ் நடனத்தையும் உஷா உதூப் பாடல்களையும் ஆபாசமாக இருப்பதாகத் தடைசெய்தார். உயர் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட கென்டகி சிக்கன் கடைகளை அனுமதிக்க முடியாது என்று கடைகளை அடித்து நொறுக்கினார், கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் நஞ்சுண்டசாமி. காங்கிரஸ் தலைவர் ஹெச்.கே.எல்.பகத் என்னை தூர்தர்ஷனிலும் ரேடியோவிலும் பேசுவதற்கு தடை போட்டிருக்கிறார்’ என வரிசையாகப் பட்டியலிட்டவர், தமிழகத்தின் நிலவரத்தையும் விட்டுவைக்கவில்லை.
'தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பத்திரிகைகளில் அவரைப் பற்றி வெளியாகிற விமர்சனங்கள் பிடிக்காது. அப்படி யாராவது எழுதினால், அந்தப் பத்திரிகை அடித்து நொறுக்கப்படும்’ என்று எழுதியிருக்கிறார்.
இந்திய அரசியல் போக்கு குறித்த துணிச்சலான விமர்சனங்களை முன்வைத்த கோபக்காரர் அவர். அதே நேரத்தில் வாழ்க்கையைப் படுகொண்டாட்டமாக வாழத் தெரிந்தவர். அவருடைய பெண் ரசிகர்களைப் பற்றி அவரே பலமுறை சிரிக்கச் சிரிக்க விவரித்திருக்கிறார்.
விருந்து ஒன்றில் போதையில் இரவெல்லாம் ஒரு பெண்ணை வர்ணித்துத் தள்ளிவிட்டு, விருந்தின் முடிவில் அந்தப் பெண்ணையே 'யார் நீ?’ என்று கேட்டு வாங்கிக்கட்டிக்கொண்ட சம்பவத்தையும் அவர் மறைக்கவில்லை. அவருடைய அரசியல் மற்றும் களியாட்ட பத்திகள் சில நேரங்களில் நம்முடைய கவிஞர் கண்ணதாசனை நினைவுப்படுத்தும். 1980 முதல் 86 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார்.
'கறார் பாதி... கிண்டல் பாதி கலந்து செய்த கலவை நான்’ என எழுத்துலகில் வாழ்ந்து காட்டியவர் குஷ்வந்த் சிங்.
'எ கம்பெனி ஆஃப் அ உமன்’, 'டெல்லி’ போன்ற நாவல்களும், பல நூறு சிறுகதைகளும் எழுதியவர். 95 வயதில் அவர் எழுதிய நாவலின் தலைப்பு, 'தி சன்செட் கிளப்’. 99-வது வயதில் அவர் தன் கிண்டல்களை மூட்டைகட்டிவிட்டு தன் டெல்லி இல்லத்தில் மரணத்தைத் தழுவினார். போய் வாருங்கள் சர்தார்ஜி!
- தமிழ்மகன்

வெள்ளி, டிசம்பர் 13, 2013

ஒரு ஊதாப்பூ கண் மூடியது


எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை பற்றிய நினைவுகள்...

புஷ்பா தங்கதுரை எழுதிய சிறுகதையில் ஒரு காட்சி.
கடையில் ஒருவர் சோடா குடித்துவிட்டுத் திரும்பிப் பார்த்தால் அவருடைய நீண்ட நாள் நண்பர் நின்றுகொண்டிருப்பார். அட என ஆச்சர்யம் அடைந்து இருவரும் பேச ஆரம்பிப்பார்கள். பாதி பேச்சின் நடுவே, ‘ஏவ்’ என்று எழுதியிருப்பார் புஷ்பா தங்கதுரை. கதை விவரிப்பில் இப்படிச் சின்னச் சின்ன கவனங்கள் இருக்கும். அது அவருடைய கடைசி எழுத்துவரை இருந்தது. ‘ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிறது’ போன்ற புதுமையான தலைப்புகள் பிரயோகங்கள் அன்றைய இளைஞருக்கு ஈர்ப்பாக இருந்தன.
அவருடைய சில கதைகள் சினிமாவாகின. பல கதைகளின் காட்சிகள் அனுமதியில்லாமலேயே சினிமாவில் பயன்படுத்தப்பட்டன. அவர் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பத்திரிகையில் எதைப் பற்றி எழுதச் சொன்னாலும் எழுதித் தர வேண்டியது தன் கடமை என்றே இருந்தார். சிவபெருமானா, சிவப்பு விளக்குச் சிங்காரியா என அவர் கவலைப்பட்டது இல்லை. நிறைய ஆலயங்களைப் பற்றி எழுதினார். திருவரங்கன் உலா என்ற சரித்திரப் புனைவு மிகச் சுவாரஸ்யமானது. 14&ம் நூற்றாண்டில் இஸ்லாமிய மன்னர்கள் கோவிலில் புகுந்து ஆபரணங்களைக் கொள்ளையடிக்க எத்தனித்தபோது, வைணவர்கள் திருவரங்கத்தின் உற்சவர் விக்ரகத்தைப் பாதுகாக்கப் போராடுகிறார்கள். பல்வேறு வைணவத் தலங்களுக்கு மதுரை, நெல்லை என ஊர் ஊராகத் தூக்கிக்கொண்டு சென்று பாதுகாக்கிறார்கள். திருப்பதியிலும் சிலகாலம் அந்த விக்ரகம் பாதுகாக்கப்படுகிறது. நெருக்கடி முடிந்து சிலை கோயிலுக்கு வந்து சேர்வதுதான் அந்தச் சரித்திர நாவலின் பின்னணி.
16& நூற்றாண்டில் வாழ்ந்த அனந்தரங்கம் பிள்ளை எழுதிய டைரிக் குறிப்பு அன்றைய புதுச்சேரியில் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அறிய உதவியது. அந்த டைரியின் சில பக்கங்கள் ப்ரெஞ்சு மொழியில் வெளியாகி இருப்பதை அறிந்து 40 ஆண்டுகளுக்கு முன் அதை தமிழில் மொழிபெயர்த்தவர் புஷ்பா தங்கதுரை. அதை சிறு புத்தகமாக ஆசிரியர் சாவி வெளியிட்டார். கணிதத்தின் மீது அவருக்குத் தீராத காதல் இருந்தது. பெருக்கல், கூட்டல்களை வேகமாக செய்வதற்காக அந்தக் காலத்து இந்திய கணித மேதைகளின் செய்முறைகளை அவர் ஆய்வு செய்துவந்தார்.
வீட்டில் பல லட்சம் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்த அவர், சிங்கப்பூரில் உள்ள பொது நூலகத்தை தன் 80&வது வயதில்கூட போய் பார்த்துவிட்டு வந்தார்.
புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் துப்பறியும் கதைகள், சிவப்பு விளக்குக் கதைகள், காமம் துரத்தும் காதல் கதைகள், விஞ்ஞான கதைகள் என எழுதியவருக்கு ஸ்ரீவேணுகோபாலன் என்ற இன்னொரு முகமும் இருந்தது பலருக்கும் தெரிந்திருக்கும். அதையும் கடந்து அவருக்கு இன்னும் சில முகங்கள் இருந்தன. அதை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தீவிர இலக்கிய இதழ்களில்தான் அவர் தன் எழுத்துப் பணியை ஆரம்பித்தார். சி.சு.செல்லப்பா நடத்திய எழுத்து இதழில்தான் புஷ்பா தங்கதுரையும் எழுத ஆரம்பித்தார். வேலையை உதறியதும் அவர் எழுதுவதன் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த ஆசைக்கு அவர் கொடுத்த விலைதான் ‘இலக்கியவாதி பட்டம்’.
நன்றி: ஆனந்த விகடன்

வியாழன், ஜூன் 18, 2009

ஒன்று முதல் பூஜ்ஜியம் வரை




தினமணிக்கு ஒரு சினிமா நிருபரின் தேவை இருந்தபோது சுகுமாரனை ராஜமார்த்தாண்டனும் என்னைப் புகழேந்தியும் சிபாரிசு செய்தனர். இறுதியில் நான் சேருவதாக முடிவானபோது, சுகுமாரனை சிபாரிசு செய்வர் என்ற காரணத்துக்காக அவரிடம் பேச சிறு தயக்கம் இருந்தது. ஆனால் தினமணியில் எனக்கு முதல் நண்பர் அவர்தான். வண்ணத்திரை போன்ற சினிமா பத்திரிகைகளை அவர் ஆர்வத்தோடு வாங்கிப் படிப்பதைப் பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நான் வண்ணத்திரையில் இருந்து வேலைக்கு வந்தவன் என்பதால் என் மீது அவருக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தது. அதற்காக என்னை அவர் கூடுதலாக மதித்தார். கேன்டீனிலும் அலுவலகத்தின் பின் பக்க மொட்டை மாடியிலும் பிரபு, சிவாஜிகணேசன் பற்றி பேச எங்களுக்கு நிறைய விஷயமிருந்தது. நான் அவரை உரிமையாகக் கிண்டல் செய்பவனாக இருந்தேன். சிவாஜியையும் பிரபுவையும் கிண்டல் செய்தால் அதை அவர் பொறுத்துக் கொள்வது எனக்குப் பிடிக்கும். சண்டைக்கு வராமல் அவர் நாகர்கோவிலில்தான் பிரபுவுக்கு அதிகமான ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன என்ற புள்ளிவிவரத்தைப் பதிலாகத் தருவார்.

அதே நேரத்தில் என் கதைகளைப் படித்துவிட்டு வெகுகாலமாக ஒரு அபிப்ராயமும் சொல்லாமல் இருந்தார். எட்டாயிரம் தலைமுறை சிறுகதை தொகுதிக்காக அவரிடம் முன்னுரைக்கு அணுகியபோது அவர் மிகவும் காலம் தாழ்த்தியபோது எனக்கு சந்தேகம் வந்தது அவருக்கு விருப்பமில்லையோ என. நான் அதை அவரிடம் கொண்டிருந்த உரிமையும் கிண்டலுமான நட்புடனே தெரிவித்தேன். ஏதாவது விளக்கம் தர முற்படும்போது சீரியஸôன குரலில் பேசுவார். "உங்க கதைகள் ஏதும் மோசமா இல்லை... உங்க கதைக்கு ஒரு இடம் இருக்கு... எனக்கு வேலை அப்படி...'' மீண்டும் தன் வழக்கமான குரலில் "இன்னும் ஒரு வாரம் டயம் கொடுங்க வோய்... முடிச்சுத் தந்திட்றேன். ஆபீஸ்ல ஜி.பி.எஃப். பணம் வராம இருக்கு சீக்கிரம் சொல்லி ஏற்பாடு செய்யுங்க வோய்'' என்று முடித்தார்.

"நீங்க முன்னுரை எழுதி அனுப்புங்க. ஜி.பி.எஃப். வேலையை முடிக்கிறேன்''

வெளிப்பார்வைக்கு பலவீனங்கள் நிறைந்தவராகவும் நெருங்கிப் பார்க்கும் போது விட்டுக் கொடுக்க விரும்பாத தீவிரமான இலக்கியக் கோட்பாடும் கொண்டவராக இருந்தார் ராஜமார்த்தாண்டன். முன்னுரை எழுதி அனுப்பி வைத்தார், அது என் ஜி.பி.எஃப். மிரட்டலுக்காக இல்லை. கடைசி கொஞ்ச நாளில் என்னிடம் அடிக்கடி பேசினார். பென்ஷன் பணம் இன்னும் கைக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக. அவருடைய மகன் கிருஷ்ண ப்ரதீப் திருமணத்துக்கு அலுவலக நண்பர் சூரிய நாராயணனுடன் சென்று அவர் வீட்டுக்கும் போய் வந்தேன். மாடியில் அவருக்கு மரத்தாலான அழகான அறை. அங்கே அமரச் செய்தார். எனக்குச் சரியான தலைவலி. தைலம் கொண்டு வரவும் மாத்திரை கொண்டு வரவும் ரசம் சாதம் கொண்டு வரவும் ஸ்பைரைட் கொண்டுவரவும் என ஐந்தாறு முறை மாடிக்கும் கீழுக்கும் ஓடியலைந்தார். விடைபெறும்போது எங்களைப் போலவே அவரும் அந்த வீட்டுக்கு வந்திருக்கும் ஒரு விருந்தாளிபோலவே ஒட்டமால் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவருடைய தம்பியும் ராஜமார்த்தாண்டனின் மனைவியும் அடுத்து குடும்பத்தோடு வர வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்துக் கொண்டிருந்தார்கள். ராஜ மார்த்தாண்டன் புன்னகையுடன் கண்கள் மின்ன விலகி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.

இறப்பதற்கு நான்கு நாள்களுக்கு முன்பு அவர் பென்ஷன் விஷயமாக சென்னை வந்திருந்தார். அலுவலகத்துக்கும் பென்ஷன் ஆஃபிஷுக்குமாக இரண்டு மூன்று முறை அலைந்தபோது "உன்னை ரொம்பத் தொல்லை பண்றேன்'' என்றார். விடைபெறும்போது "அடுத்த மாசம் ஒண்ணாந்தேதி உங்களுக்குப் பென்ஷன் கிடைத்துவிடும்'' என்று உறுதிகூறி அனுப்பி வைத்தேன். இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வேலை பார்க்கும் சாஜி என்பவரின் செல் நம்பரைக் கேட்டிருந்தார். நண்பர் அரவிந்தன் யாரையோ பிடித்து அவருடைய நம்பரைக் கொடுத்து அதை ராஜமார்த்தாண்டனிடம் சேர்த்துவிடும்படி சொல்லியிருந்தார். சனிக்கிழமை காலை அந்த நம்பரை அவருக்குக் கொடுக்க போன் செய்ய நினைத்தேன். வேறு வேலைகள் காரணமாக சற்றே தாமதமாகிவிட்டது. ராஜமார்த்தாண்டனின் மரணச் செய்தி முந்திக் கொண்டது.

ஒன்று முதல் பூஜ்ஜியம் வரையிலான எண்களுக்குள் அவருடைய செல்போன் எண் இருக்கிறது. இப்போது அவற்றை அழுத்தினால் யாரெடுத்துப் பேசுவார்கள் என்று தெரியவில்லை. நான் உரிமையோடு கிண்டல் செய்தால் அதைப் பொறுத்துக் கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் இருப்பார்களா என்பது எனக்குத் தெரியாது.

சனி, ஜூன் 06, 2009

கவிஞர் ராஜமார்த்தாண்டன்

கவிஞர் ராஜமார்த்தாண்டன் இன்று காலை நாகர் கோவிலில் காலச்சுவடு அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன் அவருடைய மகன் கிருஷ்ண ப்ரதீப் திருமணத்துக்குச் சென்றுவந்தேன். இரண்டு தினங்களுக்கு முன்பு அவர் சென்னை வந்தபோது தினமணி அலுவலகத்தில் என்னைச் சந்தித்துவிட்டுப் போனார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவசர அவசரமாக இரண்டு முறை சந்தித்துக் கொண்டது நிலையாமையை வலிக்க வலிக்க உணரவைக்கிறது.

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்போம்.

LinkWithin

Blog Widget by LinkWithin