முன் குறிப்பு: இதை நீங்கள் கதை என்று நினைத்துவிட்டால் என் இதயம் வெடித்துவிடும்.
- ஒரு பரிதாபத்துக்குரிய நிருபன்
நான் அப்போது தினமானியில் நிருபர் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். காலை ஒன்பது மணி. ஒரே ஒரு அட்டண்டர் மட்டும்தான் வந்திருந்தார். எனக்கு காலை எழு மணிக்கு அப்படியொரு அûஸன்மென்ட். உலக அழகி ஜெனிபர் தமிழ் சினிமாவில் நடிக்கும் படத்தின் பூஜை. "என்க்கு டமில் புட்கும்ட என்று அவர் திருவாய் மலர்ந்ததை முதல் பக்கத்தில் கட்டம் கட்டிப் போட வேண்டியிருக்கும் என்ற யோசனையில் அவர் சொன்ன வரியை அப்படியே நோட்ஸ் எடுத்துக் கொண்டு வந்திருந்தேன். (என்க்கு டமில் புட்கும்).
அலுவலகம் வந்த இரண்டாவது நிமிடத்தில் வேலை முடிந்துவிட்டது.
சென்னை ஏப்.18.
உலக அழகி ஜெனிபர் "என்க்கு டமில் புட்க்கும்' என்று கூறினார். அவர் நடிக்கும் "நானும் பெண்தான்' படத்தின் ஆரம்ப விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிரபல இயக்குநர் பரமேஷ்வர் இப் படத்தை இயக்குகிறார் இதில் ஜெனிபர் தமிழ்ல் சொந்தக் குரலில் பேசி நடிக்கப் போவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் "என்க்கு டமில் புட்க்கும்' என்று கூறினார்.
அவ்வளவுதான் செய்தி. ஏப்.18 தானே என்றும் செவ்வாய்க்கிழமை தானே என்றும் ஒருமுறை சரி பார்த்துக் கொண்டேன்.
டெலி பிரிண்டர் சத்தம் டக டக டக டர்ர் அட்டண்டர் பி.டி.ஐ. செய்திகளைச் சன்னமாகக் கிழித்து அடுக்கிக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் அந்த போன் வந்தது.
சோம்பலாக எடுத்து "ஹலோ''
"தமிழ்மகன்தானே?''
"ஆமா... நீங்க?''
"பெற்றோர் இட்ட பெயரா?''
"நானே சூட்டிக்... '' சே "நீங்க யாரு?''
"நான் யாருன்னு சொன்னால் நீங்க விளையாட்டா எடுத்துக்கக் கூடாது''
"நான் யாரா இருந்தாலும் விளையாட்டா எடுத்துக்க மாட்டேன். நீங்க யாரு?''
"என் பெயர் திருவள்ளுவன்''
"சரி''
அடுத்து அவர் சொன்ன வரிகளில்தான் நாம் விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் விஷயம் இருந்தது.
"திருக்குறள் எழுதினேனே, அந்தத் திருவள்ளுவன். தெய்வப்புலவர் செந்நாப் போதர், பொய்யா மொழிப் புலவர் என்றெல்லாம் சொல்கிறீர்களே அந்தத் திருவள்ளுவன்''
"காலங்கார்த்தால!''
"நீங்கள் நம்பவில்லையா?'' என்றது மறுமுனை குரல்.
"சாமி.. ஆளைவிடுங்க'' பக்கத்தில் படபடத்துக் கொண்டிருந்த காலண்டரில் திருவள்ளுவர் ஆண்டு 2060 என்று போட்டிருந்தது.
"வள்ளுவரா இருந்தா இரண்டாயிரத்து அறுபது வயசாயிருக்கணும், இப்ப உங்களுக்கு. ஏங்க இப்படிக் காலைல?''
"இரண்டாயிரத்து அறுபது இல்ல தம்பி. அதுக்கும் மேல. போனவாரம் புக் பாய்ண்ட்ல திருவள்ளுவர் இருந்திருந்தால்'னு ஒரு கட்டுரை வாசிச்சீங்களே... அதுக்கப்புறம்தான் உங்களை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன்''
புக்பாயிண்ட், ஃபாலோ போன்ற உச்சரிப்புகளைக் கவனித்தேன். திருவள்ளுவருக்கு ஆங்கிலம் தெரியுமா?
"புக் பாயிண்ட், ஃபாலோ எல்லாம் பேசிப் பழகிவிட்டது தம்பி'' என்றார் என் நினைவுகளுக்குச் சவுக்கடி போல.
"'நீங்க யார் ஸôர்? எங்கிருந்து பேசறீங்க?'
"உங்கள் முதல் கேள்விக்கு நான் ஏற்கெனவே பதில் சொல்லிவிட்டேன். இரண்டாவது கேள்விக்குப் பதில்: இப்பவும் (அழுத்தமாக) மயிலாப்பூர்ல இருந்துதான் பேசறேன்''
இந்தமாதிரி ஆசாமிகளை அவர்கள் வழியிலேயே போய் அடிப்பதுதான் சரி.
"சரி நான் என்ன பண்ணனும் திருவள்ளுவர்?''
"நான் பிறந்த ஆண்டைத் தவறாகச் சொல்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டும். என் குறளுக்குத் தப்புத் தப்பாக வியாக்யானம் சொல்கிறார்கள்; நடுவே "திரிக்குறள்', "திருக்குறள்'வில்லங்கம் வேறு. இதுவும் பரவாயில்லை. ஏதோ காலமாற்றத்துக்குப் பொருத்தமான உதாரணம் சொல்கிறார்கள் என்றுவிட்டுவிடலாம். இடைச் செறுகலாக நிறைய குறள்களைச்சேர்த்துவிட்டார்கள். என் வாழ்நாளில் இதைத் திருத்திவிட்டுப் போகணும். அதுதான் என் ஆசை. நீங்கள்தான் உதவ வேண்டும்.''
"யாருமே நம்ப மாட்டாங்களே.. நீங்கதான் திருவள்ளுவர் என்பதற்கு என்ன எவிடன்ஸ்... சாரி.. சே... ஆதாரம்?''
"எவிடன்ஸ்னாவே புரியும் தம்பி. நிறைய ஆதாரம் இருக்கிறது. நேரில் வந்தால் காட்டுவேன்.''
"எங்க தங்கி இருக்கீங்க?''
அட்டண்டர் செல்வராஜ் வந்து "சார் இன்னொர் லைன்ல போன் வந்திருக்கு. எடிட்டோரியல் பேஜ்ல பல்கலை மானியம் பயன்தருமா? கட்டுரை போட்டம்ல, அதபத்தி பேசணுமாம்'' என்றார்.
"அப்புறம் பேசச் சொல்லுங்கப்பா... நீங்க சொல்லுங்க. உங்க அட்ரஸ்?''
"என் நண்பன் பூங்குன்றன் சொன்னது மாதிரி "யாதும் ஊரே யாவரும் கேளிர்' நீங்கள் என் அறைக்கு வரவேண்டாம். பழைய புத்தகக் கடைபோல இருக்கும். ட்ரைவ் இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு வருகிறீர்களா? ஒரு கோப்பை தேநீர் பருகியது போலவும் இருக்கும். அடையாளம் கதர் வேட்டி, கதர் சட்டை''
நான் ஒரு மாதிரி குழப்பமாகக் கிளம்பினேன். போட்டோகிராபரை வரச் சொல்லலாமா... "திருவள்ளுவரா ஹ..ஹ.. ஹா '' என்று சிரிப்பானோ என்று தயக்கமாக இருந்தது. திருக்குறளிலும் வள்ளுவரிலும் எனக்கு இருக்கும் தாகம் அவனுக்கு இருக்குமா?
நான் கிளம்பும் போது பிரேமாவும் காயத்ரியும் எதிரில் வந்தார்கள். ஹாஸ்டல்வாசிகள். ஹாஸ்டலில் பொங்கல் சாப்பிட்டு முடித்ததும் தினமானி. "என்ன ஸôர் வந்ததும் கிளம்பிட்டீங்க?''
"போய்ட்டு வந்து சொல்றேன்''
ட்ரைவ்- இன் ஹோட்டலில் கதர்வேட்டி, சட்டையுடன் ஒரே ஒருவர்தான் தென்பட்டார். மா நிறம். ரப்பர் செருப்பு போட்டிருந்தார். கக்கத்தில் ஒரு மஞ்சள் பை. சிலைகளில் இருப்பது போல குடுமியோ, அந்த நீளத்துக்குத் தாடியோ, அகன்ற நந்தி முகமனைய மார்போ இல்லை. வயசு? கணிக்க முடியவில்லை. ஐம்பதில் இருந்து எண்பதுக்குள் ஒரு வயது.
என்னைப் பார்த்ததும் புன்முறுவல்.
"தேநீர்?'' என்றார்.
தயாராக டோக்கன் வாங்கி வைத்திருந்தார்.
"உங்க நேரத்தை அதிகம் எடுத்துக்க மாட்டேன்''
"பராவால்ல சொல்லுங்க''
"இடைச் செறுகல் திருக்குறள் பற்றியெல்லாம்கூட அப்புறம் பேசுவோம். வாசுகி போனப்புறம் "வீடு' (வீடு பேறு) என்ற அதிகாரத்தை எழுத ஆரம்பித்தேன். இங்கில்லை. இமயத்துக்குப் போய்ட்டேன். எழுதி முடித்து இறங்கி வருவதற்கு நாளாகிவிட்டது. அதற்குள் நான் இறந்துவிட்டதாக முடிவு செய்துவிட்டார்கள் ''
"அடடா...''
"திரும்பி வந்தபோது களப்பிரர் காலம். சொல்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை. கிழித்துக் கொளுத்திப் போட்டுவிடுவார்களோ என்ற பயம். அப்படியேவிட்டுட்டேன். நேரம் வரட்டும் என்று பிற்கால சோழர்கள் காலத்தில் ராஜராஜ சோழனைப் பார்த்து சொல்லலாம் என்று நினைத்தேன். அவர் சிவ பக்தர். என்னை சமணர் என்று ஒதுக்கும் வாய்ப்பு இருந்தது. அப்புறம் வந்தவர்களும் பொதுவாக சமணர் என்றால் கழுவேற்றுவது, சுண்ணாம்புக் காலவாயில் போடுவது என "சமய'ப் பிரச்னையில் தீவிரமாக இருந்தனர்.''
"நடுவில் யார் கிட்டயும் சொல்ல முடியலையா?''
"இன்னொரு காரணம். என்கிட்ட இருக்கும் ஓர் அபூர்வ மூலிகை. இமயத்தில் கண்டெடுத்தேன். அதைச் சாப்பிட்டால் நூறு ஆண்டுகள் வெறும் காற்றைப் புசித்து காற்றில் கரைந்து காற்றாகவே வாழலாம். மீண்டும் உருவம் வரும். தேவைப்பட்டால் வாழலாம். இல்லை காற்றோடு காற்றாக...''
"அப்படியா?''
"மீண்டும் வந்த போது விஜயநகர பேரரசு. தமிழகம் முழுவதும் தெலுங்கு ஆட்சி. அப்புறம் வந்தபோது நவாபுகள்! ஒன்றும் பலிக்கவில்லை. மீண்டும் வந்து பார்க்கிறேன். பிரிட்டீஷ் காரர்கள். இர்வின் பிரபு காலத்தில் வந்தேன். அதோடு இப்போதுதான் வருகிறேன். காந்தியைக்கூட சுட்டுவிட்டார்கள் என்று கூறுகிறார்கள்'' என்று வருத்தப்பட்டார்.
"எல்லாம் சரிங்க. இப்ப நீங்கதான் திருவள்ளுவர் என்பதற்கு...?''
"எவிடன்ஸ்..?''
"ஆமா!''
"இருக்கிறது தம்பி. நான் எழுதின வீடு அதிகாரம் அப்படியே இருக்கிறது. கார்பன் டெஸ்ட் எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் இரண்டாயிரம் வயசு தெரியும்.''
மஞ்சள் பையில் இருந்த ஓலைச் சுவடியை எடுத்துப் பிரித்தார். பழுத்துக் காய்ந்து போயிருந்தது சுவடி. பழைய தமிழ் எழுத்துக்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அக்கம் பக்கத்தில் இருக்கும் எல்லோரையும் கூவி அழைத்து 1331- வது குறளைப் படித்துக் காட்ட வேண்டும் என்று பரபரப்பாக இருந்தது.
எழுத்துக்களின் தலைக்கு மேல் புள்ளி வைக்கிற வழக்கம் அப்போது இல்லை.எழுத்துக்களின் வடிவங்களைப் பார்த்தபோதே இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சமாச்சாரம் என்று தெரிந்தது.
ஐயோ... என்ன ஒரு ஸ்கூப் செய்தி... கட்டம் கட்டிப் போட வேண்டியது ஜெனிபர் தமில் பேசும் செய்தி அல்ல.. திருவள்ளுவர் பற்றியது.
"சார்.. ஸôரி... ஐயா. வாங்க தினமானிக்குப் போகலாம்'' என்றேன். திருவள்ளுவரை ஸ்கூட்டரில் ஏற்றிச் சென்ற பெருமை எனக்குக் கிட்டட்டும்.
"இல்லை தம்பி. அவசரப் படாதே இந்த முதல் குறள் ஏட்டை உன்னிடம் தருகிறேன். இதைப் பரிசோதித்து, காலம் கண்டு உங்கள் பத்திரிகையில் பிரசுரியுங்கள். அதிகாரிகளும் மக்களும் ஏற்றுக் கொண்டால் நானே உங்கள் அலுவலகம் வருகிறேன்.''
ஒரே ஓர் ஓலையை மட்டும் தனியாக எடுத்தார்.
"இதில் என்ன எழுதியிருக்கிறீர்கள்?''
"இம்மையும் மறுமையும் வேண்டாவாம் யாக்கைக்குத்
தம்மையே உணர்வார் தலை''
"ஆஹா...''
குறித்துக் கொண்டேன்.
"நாளை தினமானியில் இதுகுறித்து செய்தி வெளியானால் உலகம் என்னை ஏற்றுக் கொண்டது என்று கொள்வேன். இல்லையேல் இந்த மூலிகை உண்டு. அடுத்த நூற்றாண்டில் என்னைப் புரிந்து கொள்வோரைத் தேடுவேன்.''
"அடுத்த நூற்றாண்டு அவசியமே இல்லை. இதோ இன்றே இந்த உலகத்துக்குப் புரிய வைக்கிறேன். "யாமறிந்த புலவரிலே வள்ளுவன் போல்...' நாளைக்கு நியூஸ் பார்த்ததும் வந்துடுங்க ஐயா""
"நியூஸ் வரவில்லை என்றால் காற்றிலே கரைந்து போவேன்.''
இதைவிட வேறு என்ன செய்தி வேண்டும். சுவடியைப் பத்திரமாக வைத்துக் கொண்டேன்.
ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு பறந்தேன். நாளை உலகமே என்னைக் கொண்டாடப் போகிறது. என்னைச் சுற்றி வெப்பம். இல்லை.. ஏதோ கதிர் வீசிக் கொண்டிருந்ததை உணர்ந்தேன்.
ஆசிரியர் அறையைத் திறந்து "ஸôர்'' என்றேன் ஆர்வம் பொங்க.
"என்னப்பா?''
எங்கிருந்து ஆரம்பிப்பது என்று புரியவில்லை.
மேல் பாக்கெட்... ஐயோ... சுவடியைக் காணவில்லை. வந்த வேகத்தில் வழியில் எங்கோ விழுந்திருக்க வேண்டும். என்ன கொடுமை!
"என்னப்பா பேயறைஞ்ச மாதிரி நிக்கிறே?''
"இல்ல ஸôர் ஒரு நியூஸ்...'' இப்படிச் சுவடியைத் தொலைத்ததைச் சொன்னால் கண்டபடி திட்டுவார்.
"என்ன நியூஸ்?''
"உலக அழகி ஜெனிபர் "என்க்கு டமில் புட்கும்னு...''
(ஆனந்த விகடன் - 2004)