சனி, அக்டோபர் 18, 2008

திரைக்குப் பின்னே -4

முரட்டுக் கேள்வியும் மென்மையான பதிலும்!

பத்திரிகையுலகில் சங்கடப்படுத்தும் கேள்விகள் நிறைய கேட்க வேண்டியிருக்கும். அப்படிக் கேட்கும்போது கோபித்துக் கொண்டு பாதியில் பிரஸ் மீட்டை முடித்துக் கொண்டு போகிற சம்பவங்கள் நிறைய இருக்கும்.

பொறுமையாகப் பதில் சொல்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழ்ச் சினிமாவை மீண்டும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கியவர் என்று ஏவி.எம். மெய்யப்பச் செட்டியாரைச் சொல்வதுண்டு. பாரதிராஜாவின் "பதினாறு வயதினிலே', மகேந்திரனின் "உதிரிப் பூக்கள்', பாலு மகேந்திராவின் "அழியாத கோலங்கள்', ருத்ரய்யாவின் "அவள் அப்படித்தான்' எனப் பரபரப்பில்லாமல் நிதானமாகவும் எதார்த்தமாகவும் கதை சொல்லும் பாணியை "முரட்டுக் காளை'யை வைத்து முட்டித் தள்ளிவிட்டார் அவர் என்பார்கள்.

நியாயமான குற்றச்சாட்டுதான்




ஏவி.எம். சரவணனை ஒருமுறை சந்தித்து இந்தக் கேள்வியைக் கேட்டேன். அதாவது ஏன் இப்படிக் குட்டிச் சுவராக்கினீர்கள் என்பதுதான் என் கேள்வி. பேட்டியின் பொதுத் தலைப்பு ஏடாகூடமான எட்டுக் கேள்விகள்... எட்டு கேள்விகளுமே இப்படித்தான் இருந்தன.
""எங்கள் நிறுவனத்தைப் பற்றி பலரும் இப்படி எழுதி முடித்துவிட்டார்கள். நேரில் கேட்டதற்கு ரொம்ப சந்தோஷம்'' என்று பொறுமையாக பதில் சொன்னார்.

""ஏவி.எம். ஸ்டூடியோ ஆரம்பித்த நேரத்தில் உருவான சுமார் 14 ஸ்டூடியோக்கள் இப்போது மூடப்பட்டுவிட்டன. அதில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலையும் போய்விட்டன. எங்கள் நிறுவனமும் அந்த நேரத்தில் சுமார் பத்து ஆண்டுகளாகப் படங்கள் எதுவும் தயாரிக்காமல் இருந்தது. எங்கள் ஊழியர்களின் நிலையும் கேள்விக்குறியாக இருந்தது. அவர்கள் அத்தனை பேருக்கும் வேலை கொடுக்கக் கூடிய படங்கள் எடுக்க வேண்டுமானால் பிரம்மாண்டமான திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். "முரட்டுக் காளை', "சகலகலாவல்லவன்' போன்ற படங்கள் எடுத்தோம். நல்லவிதமான டிரண்டை ஒரேயொரு "முரட்டுக் காளை' வந்து மாற்றிவிடும் என்பது வீண்பழி. மக்கள் ஒரே மாதிரியான படங்களைத் திரும்பத் திரும்ப பார்ப்பதில்லை. அவர்களுக்கு அடிக்கடி விருப்பங்கள் மாறிவிடும். அது மாதிரி ஒரு சூழலும் அப்போது இருந்தது. படத்தை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள்; தொழிலாளர்களின் வாழ்வும் காப்பாற்றப்பட்டது. இதுதான் நடந்தது''' என்றார்.

அடுத்த கேள்வி. "பாரதியாரின் கவிதைகளை மெய்யப்பச் செட்டியார் முடக்கி வைத்திருந்தார். நாட்டுடமை ஆக்குவதற்குத் தடையாக இருந்தார் என்கிறார்களே?''

""பாரதியாரின் பாடல்களுக்கான ஆடியோ உரிமையை அப்பா வாங்கி வைத்திருந்தார். அதை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டதும் உடனடியாக அப்பா சம்மதித்து எழுதிக் கொடுத்தார். அதற்கான நஷ்ட ஈடாக ஒரு தொகையைக் கொடுக்க அரசு முன் வந்த போதும் அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பாரதியின் பாடல்களை நாட்டுடமையாக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தவர்கள், அவசரப்பட்டு ஏற்படுத்திய பழி அது''

எந்த ஆவேசமான கேள்விக்கும் மிக அமைதியாகப் பதில் சொல்ல முடியும்தான்.

காலம் செய்த கோல்மால்!

நான் பார்த்த நடிகர்கள் பலரும் ஆரம்பத்தில் பத்திரிகையாளரிடம் மிகுந்த தோழமை காட்டுவார்கள். "நமக்குள்ள என்ன தலைவா' எனப் பதறிப் பதறி பறிமாறுவார்கள். படம் வெளியாகி ஓடிவிட்டால் அவர்களின் மேனேஜர், பி.ஆர்.ஓ., செக்யூரிட்டி, ரசிகர் மன்றத்தலைவர் என ஏழுகடல் தாண்டி எட்டாவது கடலில் கிளி வயிற்றுக்குள் பதுங்கிக் கொண்டு சந்திக்க முடியாதவர்களாக அவர்களே தங்களைச் சிறைப்படுத்திக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.
நடிகர் செல்வா அப்படியோர் அபூர்வமனிதர். நல்ல திரைக்கதை ஞானம் உள்ளவர். அவருடைய அண்ணன் டாக்டர் ராஜசேகரின் எவனா இருந்தா எனக்கென்ன, மீசைக்காரன் போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர். அண்ணன் தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாராக இருந்த நேரத்தில் இவர் தமிழில் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். "தம்பி ஊருக்குப் புதுசு', "மதுரை மீனாட்சி,' "மாமியார் வீடு', "மைந்தன்' போன்ற படங்களில் நடித்தார். கோல் மால் என்றொரு படத்தை இயக்கியுமிருந்தார்.

ஒருநாள் அவர் வீட்டில் எல்லோரும் வெளியூருக்குப் போயிருப்பதாகவும் இரவு தன்னுடன் இருக்க முடியுமா என்றும் கேட்டார். நான் அவர் வீட்டுக்குச் சென்றேன். காரில் இரவு சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தோம். வீட்டில் லேஸர் டிஸ்க் போட்டு ஹோம் தியேட்டரில் படம் போட்டு காண்பித்தார். அப்போது (1991) லேஸர் டிஸ்க், புரெஜெக்டர், ஹோம் தியேட்டர் என்பதெல்லாம் இந்தியாவில் எத்தனை பேர் வீட்டில் இருக்கிறது என்று எண்ணிவிடலாம். அவர் கட்டிலில் என்னைப் படுத்துத் தூங்க வைத்தார். அவர் தரையில் படுத்துக் கொண்டு தூங்கினார். அவருடைய பல பிரத்யேக கனவுகளை, காதலை எல்லாம் என்னிடம் பகிர்ந்து கொள்வார். சினிமாவில் நிறைய சாதிக்க முடியும் என்று நம்பிக்கை அவருக்கு இருந்தது.




"அகிலன்' என்று ஒரு படம் அவரை வைத்து ஆரம்பிக்கப் பட்டது. அந்தக் கதையை என்னிடம் சொல்லி அந்தப் படம் வந்தால் தனக்கு மிகப் பெரிய பிரேக் கிடைக்கும் என்று சொன்னார். அந்தப் படத்துக்காக மொட்டை அடித்துக் கொள்ள இருப்பதாகவும் அதற்குள் வேறு சில கமிட்மென்டுகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார். ஆனால் என்ன காரணத்தினாலோ அந்தப் படம் தயாராகாமல் போனது. நடுவே நான் முன்னின்று அவரை "மைந்தன்' படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்தேன். என் நண்பர் புகழேந்தி இயக்கிய படம் அது. அந்தப் படத்தையும் அவர் மிகவும் நம்பினார். அதுவும் சரியாக ஓடவில்லை. ஆனால் அந்தப் படத்தின் தயாரிப்பில் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் மகளோடு அவருக்குத் திருமணம் ஆனது. அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை.

அவர் நடிக்க இருந்து நின்றுபோன படம் ஒருவேளை வெளியாகியிருந்தால் அவர் பெரிய நட்சத்திரமாக மாறியிருப்பார். "அகிலன்' படம் பின்பு "சேது' என்ற பெயரில் விக்ரம் நடித்து வெளியானது. "சேது' படத்தைத் தெலுங்கில் வாங்கி செல்வாவின் அண்ணன் ராஜசேகர் நடித்தார். செல்வா அந்தப் படத்தின் தயாரிப்புப் பணியில் ஒத்தாசையாக இருந்தார். காலம் செய்யும் கோல்மால்?

நினைத்துப் பார்க்கும்தோறும் வருத்தமாக இருக்கிறது.

கடவுளைத் தேடி...

மரணத்தைத் தொட்டுவிட்டு மீண்டு வந்த மாதிரி இருக்கிறது என்றார் கெüதமி. மார்பக புற்றுநோய் ஏற்பட்டு மீண்டு வந்த பிறகு அவரைச் சந்தித்தபோதுதான் அப்படிச் சொன்னார். பேட்டி மிகவும் தத்துவரீதியாக அமைந்தது. அவருடைய அப்பா பெரிய டாக்டர். ரமண மகரிஷியின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நேரத்தில் அவருக்கு வைத்தியம் பார்த்த நால்வரில் ஒருவர். நாத்திகவாதி. "யூ.ஆர். அனந்தமூர்த்தி, ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் பற்றியெல்லாம் சிறுவயதில் அப்பா தனக்கு நிறைய சொல்வார்' என்றார் கெüதமி. பெங்களூர் கான்வென்டில் கெüதமி படித்துக் கொண்டிருந்தபோது அவருடைய பள்ளியில் எதற்காகவோ மாணவிகளிடம் அவர்கள் வழிபடும் தெய்வம் பற்றி கேட்டிருக்கிறார்கள். கெüதமிக்கு எந்தத் தெய்வத்தை நம் வீட்டில் வணங்குகிறார்கள் என்பதே தெரியவில்லை.




அப்பாவிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று அப்பாவுக்கு போன் செய்திருக்கிறார்.

"உனக்கு ஏதாவது சாமி பிடிச்சா அதன் பெயரைச் சொல்லிவிடு'' என்று கூறிவிட்டாராம்.
பேட்டி முடிந்து கிளம்பும்போது அவருடைய மகள் அங்கே பூனையோடு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

"உங்கள் மகள் என்ன சாமியைக் கும்பிடுகிறார்?'' என்றேன்.

"அவளிடமே கேளுங்கள்'' என்றார்.

கேட்டேன். "உனக்குக் கடவுள் யார்?''

அந்தச் சிறுமி ஆள்காட்டி விரலால் தன் நெற்றியைக் காட்டினாள்.

LinkWithin

Blog Widget by LinkWithin